புதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்

ஜோதிஜி அவர்களின் கீழ்க்கண்ட கடிதம் திருப்பூர் நண்பர்கள் வழியாக நமக்குக் கிடைத்தது. அதனை அப்படியே வெளியிடுகிறோம் –

இந்த முறை எந்த வித அவசரமும் இல்லாமல் புதுக்கோட்டையில் மூன்று நாட்கள் தங்க முடிந்தது. ஒரு நாள் பயணமாக புதுக்கோட்டையில் திருகோகர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா என்ற தனிநபர் நிர்வகிக்கும் நூலகத்திற்கு சென்றேன். ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏறக்குறைய சமகாலத்தில் அதிகம் புழக்கம் இல்லாத, மறுபதிப்பு வராத புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆராய்ச்சி இதழ்கள், பெரியார், அண்ணா காலத்தில் வந்த பத்திரிக்கைகள் என்று அத்தனை பத்திரிக்கைகளும் அழகாகப் பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்குத் தன் சொந்தக் காசில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாதுகாத்து வருகின்றார்.

இதற்காகத் தனியாக ஒரு வீடு கட்டி அதை நூலகமாக மாற்றி வைத்துள்ளார். இது போகத் தான் இருக்கும் வீட்டின் மாடிப்பகுதியைக்கூட நூலகமாக மாற்றி உள்ளார். பலரும் பாதுகாக்க முடியாத புத்தகங்களை இவரிடம் கொடுத்த காரணத்தினால் இடப்பற்றாக்குறையின் காரணமாக இப்போது நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டின் மாடியில் தேவைப்படும் அளவிற்குப் புதிதாகக் கட்டிடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி ஏறக்குறைய 70 வயதைத் தாண்டிய போதிலும் இன்னமும் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் மனைவி ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். இருவரின் ஓய்வு பெற்ற நிதியில் இருந்தும், தாங்கள் சம்பாதித்த சம்பாத்தியத்திலும் இருந்துதான் இந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். இவரின் இரு மகள்கள் நல்ல நிலைமையில் வெளிநாட்டில் குடும்பத்துடன் இருந்தாலும் இரு மகள்களும் அப்பாவுக்குத் தேவைப்படும் நிதியைத் தங்களால் முடிந்தவரைக்கும் கொடுத்து இந்த நூலகத்தைப் பாதுகாப்பதிலும், புதிய கட்டிடக் கட்டுமானத்திலும் உதவுகிறார்கள்.

கலைஞர், ஜெயலலிதா தவிர அத்தனை அரசியல் பிரபலங்களும் இந்த நூலகத்திற்கு வந்து நீண்ட நேரம் இருந்து, தங்களுக்குத் தேவைப்படும் புத்தகத்தின் நகல்களை (இங்கு நகல் எடுத்துக் கொடுக்கிறார்கள்) வாங்கித் சென்று இருக்கிறார்கள். இன்னமும் பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும், மாணவர்களும், இது தவிர தமிழ்நாட்டில் முனைவர் பட்டம் பெறும் பலரும் இங்கே வந்து தான் தங்களுடைய ஆராய்ச்சிப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கிறார்கள். இதுவரையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிஹெச்டி படிப்பை படித்து வெற்றி பெற்றுள்ளார்கள்.

இந்த நூலகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போகும் பட்சத்தில் நிச்சயம் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு மொழிக்கென்று ஒதுக்கும் நிதி கூட இது போன்ற நூலகத்திற்கு வந்து சேர்வதில்லை. இந்த நூலகப் பராமரிப்பு என்கிற வகையில் மாதம் 2 லட்சம் ரூபாய் தன்து கைக்காசு போட்டுக் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். இது தவிர ஆதரவற்ற பெண்களுக்குப் பயிற்சி அளித்து இந்த நூலகத்தில் மாத சம்பளத்தில் வைத்துள்ளார். பலருக்கும் அவர்கள் கேட்கும் தகவல்களை நகல் எடுத்து அனுப்பி வைக்கின்றார்.

இது குறித்து மேலும் அறிய இந்த வலைத்தளங்கள் உதவும்.

https://www.gnanalaya-tamil.com/

https://www.thehindu.com/life-and-style/metroplus/article819772.ece

https://www.youtube.com/watch?v=ABG7LpwUCRM&feature=relmfu

மூன்று விதங்களில் நம்மால் உதவி செய்ய முடியும்.

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அலைபேசி வாயிலாக உரையாட முடியும். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் தனது வயதின் காரணமாக இந்த நூலகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசிய அவசர தேவையின் பொருட்டு நிதி உதவியை எதிர்பார்க்கின்றார். இதுவரைக்கும் எவரிடமும் எதுவும் கேட்காமல் தன் அளவில் முடிந்தவரை செய்துள்ளார். அவருடன் உரையாடும் போது மேலும் விபரங்கள் கிடைக்கும். அவருக்கும் ஒரு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். ஒருவரின் அயராத சேவைகளை அழைத்துப் பாராட்டும் போது அதன் வலிமை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

முக்கிய புத்தகங்களை மென்பொருளாக மாற்ற தெரிந்த நண்பர்களிடம் (தமிழிலில் ஓசிஆர் மென்பொருள் இல்லை. இதைக் கண்டுபிடிக்க இதுவரையிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்பது வருத்தமான செய்தி) சொல்லி ஓசிஆர் மென்பொருள் குறித்து இனம் கண்டு கொள்ள முடிந்தால் இந்த நூலகத்திற்கு உதவியாக இருக்கும்.

இப்படி ஒரு நூலகம் புதுக்கோட்டையில் இருக்கிறது என்பதைப் பரவலாக்கம் செய்யும் போது அங்கங்கே இருக்கும் மாணவர்களுக்கும், நூலக ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும். இன்னும் பாதிப்பேர்களுக்கு இப்படி ஒரு நூலகம் இருக்கிறது என்பதே தெரியவில்லை.

இங்கு செல்லாத அரசியல்வாதிகளே இல்லை. ஆனால் எவருக்கும் எந்தவிதமான அக்கறையும் இல்லை.

ஞானாலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அலைபேசி எண் 99656-33140

நட்புடன்
ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்.

https://deviyar-illam.blogspot.in/

3 Replies to “புதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்”

  1. சக்தி கோவிந்தனைப்பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் உரையிலிருந்து , மனதை உருக்கும் தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு காரணமான தமிழ் இந்துவுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு இறைஅருள் பெருகட்டும் என்று மாசி பெரியசாமியை வேண்டுகிறேன்.

  2. ஞானாலய பற்றி தகவல்கள் அருமை .தமிழ் ஹிந்துவை எப்படித்தான் வாழ்த்துவதோ தெரியவில்லை .
    வ.சோமு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *