குழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]

முந்தைய பகுதிகள்: 1, 2, 3, 4

தொடர்ச்சி..

முத்தப் பருவம்

மகாகவி பாரதியார், ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி’ என்று பாடினார். குழந்தையின் பட்டுக்கன்னத்தில் நாம் நம் இதழ் பதிக்கும்போதே கள்வெறிகொள்ளும் மயக்கம் தோன்றுமெனில், குழந்தை தானே வந்து தன் அனிச்சத்தினும் மெல்லிய இதழை நம் கன்னத்தின் மீது பதித்தால் அதற்கு இணையான இன்பம் எதுவுமே இல்லை எனலாம். ‘உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ வுளபடியை யுணருமவர் அநுபூதி’யான பேரின்பம் அந்த முத்தத்தால் விளையும்.

அத்தகைய பேரின்பத்தை விரும்பும் தாயின் மனநிலையிலிருந்து பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ்களில் முத்தப் பருவம். பாட்டுடைத் தலைவி/தலைவனின் முத்தத்துக்கு ஈடு இணையே கிடையாது எனப் பிள்ளைத்தமிழ்க் கவிஞர்கள் பாடுவர்.

உலகில் காணப்படும் பிற முத்தங்கள் (pearls முத்து+அம் = முத்தம். அம் சாரியை) ஏதோ ஒரு விலைமதிப்புடையவை. அவற்றை அணியாக அணிவதால் அணிபவருக்குப் பெருமையையும் அழகையும் அவை அளிக்கின்றன. ஆனால், குழந்தை பூவிதழால் அளிக்கும் முத்தத்தினால் பெறும் பேரின்ப சுகானுபவத்தை அந்த மணிகளாகிய முத்தங்கள் தரவியலா.

குழந்தையின் வாய்முத்தம் உலகில் நாம் அடையும் வேதனைகள், வருத்தங்கள் அத்தனையையும் துடைத்து நீக்கிவிடும் தூய்மையுடையது. அதனால் அது விலையற்றது; மதிப்பரியது. இத்தகைய விலைமதிப்பரிய முத்தத்தைப் பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியிடம் வேண்டுவது, பிள்ளைத்தமிழின் முத்தப் பருவப் பாடல்கள்.

பிள்ளைத்தமிழ்க் கவிஞர்களிடையே முத்துக்களின் வகைகளைப் பற்றியும் அவை தோன்றும் இடங்கள் குறித்தும் ஒரு கவிசம்பிரதாயம் (poetic convention) உண்டு. அதன்படி முத்துக்கள் பதின்மூன்று இடங்களில் தோன்றுவதாகக் கூறுவர். அந்த இடங்களைப் பரஞ்சோதி முனிவர் தம்முடைய திருவிளையாடற்புராணச் செய்யுள் ஒன்றில் தொகுத்துக் கூறுகின்றார். (மாணிக்கம் விற்ற படலம், பாடல் 52-53.)

மருதமலையாண்டவர் பிள்ளைத்தமிழ் ஆசிரியர், முத்துப் பிறக்கும் இடங்களாக இருபது இடங்களைக் கூறுகின்றார். அவைகளாவன: வலம்புரிச் சங்கு, மூங்கில், கரும்பு, செந்நெல், இப்பி (சிப்பி), மீன், வயல், மலை, யானை மருப்பு (தந்தம்), தாமரை மலர், உழும் கலப்பையின் கொழு நுனி, மேகம், வாழை, கமுகு, கற்புடை மாதர் கழுத்து, குருகு, சங்கு, நிலவு, பாம்பு, கடல்.

பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்விடங்களில் முத்துக்கள் பிறக்கும் என்று கூறியதால், உடனே இங்கு பிறக்கும் முத்துக்கள், சிப்பியில் பிறக்கும் முத்துக்களைப் போல-, கொற்கையிலும் தூத்துக்குடியிலும் கடலில் மூழ்கி எடுத்துவரும் முத்துக்களைப் போலத் தங்கக்கம்பியிலும் வெள்ளிக் கம்பியிலும் கோத்து அணியும் மணிகள்/முத்துக்கள் என நினைத்துவிடக் கூடாது.

சிப்பியில் தோன்றும் முத்து வெண்மையானது; பிரகாசமுடையது. இந்தக் குணமுடைய வேறு சிலவற்றையும் உவமையாக முத்து என்றே உலகியலில் வழங்குவர். உதாரணமாக, வலம்புரிச் சங்கின் முட்டைகள் முத்துக்களைப் போல உருண்டையாகவும் வெண்மையாகவும் ஒளியுடையனவாகவும் இருப்பதால் முத்தென்பர். நெல்மணிகளையும் மூங்கில் விதைகளையும் தாமரை விதைகளையும் முத்தென்று கூறுவது உலக வழக்கு. பன்றி, புலி, பசு முதலிய விலங்குகளின் பற்களைக் கோத்து முத்து மாலைபோல அணியும் பழக்கம் பழங்குடியினரிடை உண்டு. இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்ள வேண்டும்.

எந்தவொரு இலக்கியத்தைப் பயிலும்போதும், குறிப்பாகத் தமிழிலக்கியம் பயிலும்போது, கவிச்சுவைக்காகக் கவிஞர்கள் தமக்குள் நியமித்துக் கொண்ட ‘கவிசம்பிரதாயங்களை’ அறிந்து பயில வேண்டும். மரபுவழித் தமிழ் செவ்விலக்கியங்களில் பயிற்சி குறைந்து வரும் இந்நாளில், இந்தக் கவிசம்பிரதாயங்களை அறியாமையால் தமிழ்க் கவிஞர்களைப் பழிப்புக்குரியவராக்கி விடுகின்றனர்.

திருச்செந்தூரில் சண்முகநாதனை வழிபடும் அடியார்கள் பாடும் பாடல்

கத்துந் தரங்கம் எடுத்தெறியக்  
           கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்  
     கரையில் தவழ்ந்து வாலுகத்திற்  
           கான்ற மணிக்கு விலையுண்டு

தத்துங் கரட விகடதட  
          தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை  
     தரளந்தனக்கு விலையுண்டு  
          தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்  
          குளிர்முத் தினுக்கு விலையுண்டு  
     கொண்டல் தருநித் திலந்தனக்குக்  
          கூறுந் தரமுண் டுன்கனிவாய்

முத்தந் தனக்கு விலையில்லை  
          முருகா முத்தந் தருகவே  
     முத்தஞ் சொரியுங் கடலலைவாய்  
          முதல்வா முத்தந் தருகவே”

கத்தும் – ஒலிக்கின்ற
தரங்கம் – அலை
கடுஞ்சூல் – முதிர்ந்த கர்ப்பம்
உளைந்து – வருந்தி
வாலுகம் – கடற்கரை மணல்
கான்ற – வெளியிட்ட
தந்தி – தந்தத்தை யுடையது, களிறு
பிறைக் கூன் மருப்பு – பிறை போல வளைந்த தந்தம்
தரளம் – முத்து
சாலி – உயர்ந்த வகை நெல்
கொண்டல்- கார்மேகம்
நித்திலம் – முத்து.

“முருகா! அலைவாய் முதல்வா!! ஒலிக்கின்ற கடல் தன் அலைகளால் எடுத்துக் கரையில் வீசிய முதுசூல் கொண்ட வலம்புரிச் சங்குகள் கடற்கரை மணலில் ஊர்ந்து சென்று ஈன்ற மணிக்கு விலையுண்டு. மதம் பொழியும் அழகிய யானையின் பிறைபோன்ற மருப்பில் விளைந்த தரளம் (முத்து) தனக்கு விலையுண்டு. வளர்ந்து முற்றித் தலைசாய்த்து நிற்கும் வளமான சாலிநெல்லின் குளிர்ச்சியான முத்தினுக்கு விலையுண்டு. மேகம் பொழியும் முத்தினுக்கு விலைத்தரம் உண்டு. ஆனால், உன்னுடைய முத்தந்தனக்கு விலை மதிப்பிட அரிது. கடல் முத்தம் சொரிவதைப் போல் அலைவாய் முதல்வா! நீ எனக்கு வாய் முத்தம் சொரிவாய்!” என கவிஞர் பகழிக் கூத்தர் வேண்டுகின்றார்.

“இந்திரன் குபேரன் திருமால் முதலியோர் பொருட்செல்வர்கள். செல்வர்கள் விலைமதிப்பு அதிகமுடைய முத்துமாலைகளைத் தங்கள் செல்வப் பெருமைக்குத் தக்கபடி அணிந்திருப்பார்கள். சிந்தாமணி எனும் அரியமணி. களிப்புடன் மதம்பொழிகின்ற கவுள்களையும் நான்கு மருப்புக்களையும் உடைய ஐராவதம் எனும் யானையின்மேல் வரும் வானத்தரசன் இந்திரனின் அரண்மனையில் உள்ளது. மேலும் மேலும் செல்வம் வளர்கின்ற அளகாபுரிக்குத் தலைவன் குபேரன். அவனிடத்திலிருப்பது ‘வான்மணி’. செந்தாமரைப் பொகுட்டில் வீற்றிருப்பவள் திருமகள். அவளுடைய திருமனை திருமால் மார்பு. (வத்சன்) திருமாலின் மார்பாகிய வீட்டிற்கு ஒளிகொடுக்கும் விளக்கமாக விளங்குவது சூரியனைப் போலப் பிரகாசிக்கின்ற கெளஸ்துபமணி. இந்த மணிகள் எவற்றையும் எனக்கு நீ வழங்கிவிடாதே. இவற்றுள் எதுவும் உன் வாய் முத்தத்திற்கு ஈடாகாது. வேய்முத்தர் (சிவபெருமான்) முகந்த நின்கனிவாய் முத்தம் மட்டுமே எமக்கு வேண்டும். அதனைத் தருவாய்” எனக் குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் வேண்டுகின்றார்.

மத்த மதமாக் கவுட்டொருநான்
          மருப்புப் பொருப்பு மிசைப்பொலிந்த  
     வானத் தரசு கோயில்வலர்  
          சிந்தா மணியும் வடபுலத்தார்

நத்தம் வளர அலகையர்கோன்
          நகரில் வலரும் வான்மணியும்
     நளினப் பொகுட்டில் வீற்ரிருக்கும் 
         நங்கை மனைக்கோர் விளக்கமெனப்

பைத்த சுடிகைப் படப்பாயற்
          பதும நாபன் மார்பில்வளர்
     பருதி மணியும் எமக்கம்மை
          பணியல் வாழி வேயீன்ற

முத்த முகந்த நின்கனிவாய்
          முத்தந் தருக முத்தமே
     முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
          முலையாய் முத்தந் தருகவே.

சிந்தாமணியுடைய இந்திர பதவி, வான்மணிக்குரிய குபேர பதவி, கவுத்துவ மணிக்குரிய திருமால் பதவி இவற்றுள் எவையும் வேண்டாம். இவை தரும் இன்பங்கள் உன் முத்தம் தரும் களிப்புக்கு ஈடாகா என்பது கருத்து.

மத்தம் – களிப்பு
கவுட்டு – கவுள்களை உடையதாகிய
நான் மருப்புப் பொருப்பு – ஐராவதம், இந்திரனின் யானை, நான்கு தந்தங்களை உடையது, மலை போன்றது
நத்தம் – ஊர்
அளகையர்கோன் – குபேரன், அளகாபுரித் தலைவன்
பருதிமணி – சூரியனைப் போன்ற கெளத்துவமணி
அம்மை – தாயாகிய நீ
பணியல் – தந்துவிடாதே

முத்தத்திற்கு வாயிதழ்கள் கருவிகள். எனவே, குழந்தையின் வாயிதழ்கள் முத்தப் பருவத்தில் பெருமைப்படுத்தப்படும்.

குழந்தையின் வாய் ஆம்பல் பூவின் மணம் கமழும் என்பர். கண்ணனின் திருவாய், ‘கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ” என்று ஆண்டாளம்மையார் கண்ணன் இதழ் வைத்தூதிய சங்கிடம் உசாவுகின்றார். அவ்வாறே, முருகப் பெருமானின் வாயிதழ்களும் மணக்கின்றன. அந்த மணங்களால் அவனுடைய பெருமைகள் விளங்குகின்றன.

திருக்குமரனை நோக்குந்தோறும் உமையம்மையின் உள்ளம் அன்பினால் கசிந்து உருகுகின்றது. அவ்வாறு உருகும் உளத்தோடு உமை முருகனை உச்சிமோந்து, முகத்திலும் உச்சியிலும் இதழிலும் முத்தமிட்டு மகிழ்ந்து , விளையாடித் தன் இருமார்பகங்களிலிருந்தும் பொழியும் தீம்பாலமுதத்தை ஊட்டுகின்றாள். அவளுடைய இருமார்பகங்களும் அபர பரஞானங்களாகும்

சீர்காழி குளக்கரையில் திருஞானசம்பந்தக் குழந்தை அழுதபொழுது அம்மை வள்ளத்தில் கறந்து அளித்த திருவமுதத்தினால், தவமுதல்வர் சம்பந்தர், இவ்விருவகை ஞானத்தையும் பெற்றதைத் தெய்வச் சேக்கிழார்,

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும் பாங்கினிலோன் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உனர்வறிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்

எனப் பாடினார்.

உவமையிலாக் கலைஞானம் என்றது, அபரஞானம்; சிவனடியே சிந்திக்கும் சிவஞானம், பவமதனை அற மாற்றும் பாங்கினிலோங்கிய ஞானம் என்றது, பரஞானம். இவ்விரண்டும் அபரோட்ச ஞானம். பரோட்சஞானம், அபரவித்தை பரவித்தை என்றெல்லாம் வழங்கப்பெறும்

எந்த வித்தையால் பிரமமாகிய சிவம் அறியப் படுகின்றதோ, அது பரவித்தை, அல்லது பரஞானம். பிற எல்லாக் கலைகளும் அபரோட்ச ஞானமாகும்.

ஆதிசங்கரரும் அம்மையின் ஸ்தனத்தின் பெருமையைச் செளந்தரியலஹரியில் கூறித் துதிக்கின்றார். விநாயகப் பெருமானும் குமரனும் அம்மையின் பாலினைத் துய்த்த காரணத்தினால்தான் தலைமை பெற்றுத் திகழ்ந்தனர் என்று சங்கரர் போற்றினார்.

முருகப்பெருமான் அம்மையின் திருமுலைப் பாலை பருகிய காரணத்தால் அவருடைய திருவாயில் “அபரபர வோதி மயமாந் தீம்பால்” மணம் வீசுகின்றது. (ஓதி – ஞானம்)

உமையம்மை கொடுத்த தீம்பாலுடன் தாய்மார் அறுவர் கொடுத்த கொங்கைத் தீம்பாலும் மணக்கின்றது.

முருகன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் ஆறுதீப்பொறிகளாகப் பிறக்க, வாயு ஈசனின் ஆணைப்படி அதனைக் கங்கையில் விடுகின்றான். தன்னில் முழுகுவாரின் பிறவித் துயருக்குக் காரணமாகும் வினையைத் தீர்த்துப் பெருகும் கங்கை தன்னுடைய அளவற்ற குமுதமலர்களாகிய வாயால் காங்கேயனைக் கொஞ்சி மகிழ்ந்தாள். அதனால் குமுதமலர்வாயிற் தேனமுதும் முருகன் வாயில் மணக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாகச் சிவபரம்பொருள் அருளிய வேதத்தின் பொருள் பரமகுருவாகிய முருகனின் வாயில் மணக்கின்றது. இத்தகைய முருகு நாறும் செங்கனிவாய் முத்தந் தர வேண்டுகின்றார், எட்டிகுடி முருகன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர்.

உருகு முளத்தோ டுமையா ளுச்சி மோந்து முத்தாடி 
     ஊட்ட உண்ட வபரபர வோதி மயமாந் தீம்பாலும்
குருகு பரவு சரவணத்தில் குலவி யறுவர் தாய்மார்கள் 
     கொடுத்த கொங்கைத் தீம்பாலும் குடைவார் பிறவி வினைதீர்த்துப்

பெருகுங் கங்கை யாயிரமாம் பிரசக் குமுத மலர்வாயிற் 
     பிறங்கு மமுதுஞ் சிவபெருமான் பிறழா மறைசொல் வாய்மலரின்
முருகு நாறுஞ் செங்கனிவாய் முத்தந் தருக முத்தமே 
     முத்தர் பரவு மெட்டிகுடி முருகா தருக முத்தமே.

குமாகுருபரர் முருகப்பெருமானின் கனிவாயில் தெய்வமறையும் முதற்சங்கப் பாவலர் தமிழும் உமையம்மையின் முலைப்பாலும் மணக்கின்றன என்று முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழில் போற்றுகின்றார்.

வேதம் கலையின் பகுதிகள் அனைத்தும் நிறைந்தது. வேதம் கேட்டுப் பயில்வது. அதனால் வேதம் வல்லவரைக் கேள்விநலம் உடையோர் என முன்னையோர் போற்றினர். கேள்வியால் கற்ற மறைப் பொருளை மனதிலிருத்தினால் அது நினையுந்தோறும் இன்பம் சுரக்கும்; பரமானந்த சுகம் விளைக்கும்.. அதனால், குமரகுருபரர் வேதத்தை, “கலைப்பால் நிறைந்த முதுக்குறைவில் கல்விச்செல்வர் கேள்விநலம் கனியக் கனிய அமுதூறும் கடவுண்மறை” என்று போற்றினார்.

கடவுண்மறையாகிய வடமொழி வேதங்களுக்கு இணையாக அறிவானந்தமும் முத்திப்பயனும் அளிப்பது முதற்சங்கத் தலைப்பாவலர் ஆராய்ந்த தமிழ். முருகக் கடவுள் முதற்சங்கத்தில் தலைப்பாவலராக இருந்து தமிழாய்ந்தார். தமிழின்பம், குளிர்ந்த தேனின் தெளிவும் நறுங்கனியின் சாறும் கலந்த இனிமைக்கு நிகரானது. அதனால், “முதற்சங்கத் தலைப்பாவலர் தீஞ்சுவைக் கனியும் தண்தேன்நறையும் வடித்தெடுத்த சாரங் கனிந்து ஊற்றிருந்த பசுந்தமிழ்” என்று குமரகுருபரர் தமிழ் தரும் இன்பத்தைப் பாராட்டினார்.

உமையம்மை கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தையும் இவ்வுலகம் போலப் பலவுலகங்கள் கொண்ட அகிலாண்டங்களையும் அவற்றில் வாழும் பல்லுயிர்களையும் பலமுறை ஈன்றும் அவள் அழகு குறையவில்லை; அவள் அழகு மேலும் மேலும் கூடி முதிர்கின்றது.; அவள் என்றும் கன்னியாக இளமையுடையளாய் இருக்கின்றாள். அவ்வாறு அம்மையின் அழகு கூடுவதைக் குமரகுருபரர், “தடங்கரை கொல் அலைப்பாய் புனற்றெண் கடல்வைப்பும், அகிலாண்டமும் பன்முறையீன்றும் அழகு முதிர முதிரா என் அம்மை” எனத் துதித்தார்.

“கந்தபுரி முருகா! கேள்விச் செல்வர் கேள்விநலம் கனியக் கனிய அமுதூறும் கடவுண் மறையும், தீஞ்சுவைக் கனியும் தண்டேன் நறையும் வடித்து எடுத்த சாரங் கனிந்து ஊற்றிருந்த பசுந்தமிழும், அகிலாண்டகோடியின்றும் அழகு முதிர முதிரா அம்மையின் முலைப் பாலும் நாறும் உன்னுடைய செங்கனிவாயின் முத்தம் அருளே”

எனத் துதிக்கின்றார்.

குழந்தை முருகனின் முத்தத்தைப் பெற்றால், வேதம் உணர்த்தும் மெய்ப்பொருளையும் தமிழின்பத்தையும் இவ்விரண்டும் அளிக்கும் அபர பரஞானங்களையும் பெற்றுப் பேரானந்தம் அடையலாம் என்பது கருத்து.

முருகப் பெருமான் குருபரனாக, சிவபிரானால் மறையோதிவிக்கப்பட்ட முநி (பிரமன்) வெட்கமடைய, ஓரெழுத்தாகிய பிரணவத்தில் ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்தும் அடங்கியுள்ள தென்று விளங்கக்காட்டி, அந்தச் சிவனுக்கும் ஒருமொழி பகர்ந்தவன். அந்த ஒருமொழியை தனக்கும் கூற வேண்டும் என்ற வேண்டுகோளை ஒரு பிள்ளைத்தமிழ்க் கவிஞர் முருகனிடம் வைத்து, அதற்கு மேலும் சுவையான மற்றொரு வேண்டுதலையும் சமர்ப்பிக்கின்றார்.

“திருவேரகத்தின் முருகா! நீ என்னை நோக்கி, ‘நீ, கரு தங்கும் புலால் பையை அடைந்து உதராக்கினி வெப்பத்தால் அடையும் பெரிய வேதனை இனி உனக்கு இல்லை; வேதனாம் பிரமன் எழுதிய கட்டளை எழுத்தும் உன்னை விட்டு அகன்று விட்டது. இனி நீ துன்பத்தூடு பிணிக்கும் நோய்க்கும் வறுமையாம் மிடிக்கும் ஆளாக மாட்டாய்.’

“இனி, நீ, பெரியோர்களுக்கு உறவு பூண்பாய்; மணம் நிறைந்த மலரும் புனலும் இட்டு நாள்தோறும் என்னை வழிபாடு செய்து மகிழ்ந்திரு; எக்குற்றமும் அற்ற இனிய பாடல்களால் எம்மைப் பாடும் பணியே பணியாகக் கொள்; முத்தியை மறவாது அளிப்பம்’ என்ற ஒரு மொழி உரைக்க வேண்டும்.

அந்த ஒருமொழி உன்னுடைய அதிகாரம் பெற்றது என்பதற்கு அடையாளமாக என் கன்னத்தில் ஒரு முத்தமும் வைத்து அருள வேண்டும்.”

என்ற அருமையான வேண்டுகோளை அக்கவிஞர் முருகனிடத்தில் வைக்கின்றார்.

சில முக்கிய ஆவணங்கள் அதிகாரியின் கையெழுத்தும் அலுவலக முத்திரையும் இருந்தால்தான் ஐயத்துக்கு இடமின்றிப் பிறவிடங்களில் செல்லுபடியாகும். அதனால், முருகன் அருளிய ஒருமொழி (ஒப்பற்றமொழி) அவனுடையதுதான் என்று உலகறியச் செய்ய, முத்திரையாக அவனுடைய வாய் முத்தமும் வேண்டும் என்கின்றார், கவிஞர்.

கருவேய் தசைப்பையெனு மொருபேர் படைத்தபல
           கசுமால முற்றசிறைமேய்
      கடிவாய் படைத்தபுழு நிரைமேய வெப்பமெழு
           கனல்போ லனற்ற அயர்வாய்ப்

பெருவே தனைப்படுவ தினிமே லிலைப்புவியில்
            பிணிநோய் மிடித்துயர்படாய்
      பெருவேத னெற்றியெழு தவனாணை விட்டதுபல்
           பெரியோர் தமக்கு ளுறவாய்

மருவே செறித்தமலர் புனல்தூய் எமைத்தினமும்
           வழிபா டுஞற்றி மகிழ்வாய்
      வழுவேது மற்றினிய கவிபாடு முத்தியையு
           மறவா தளிப்ப மெனவே

திருவே மிகுத்தவொரு மொழிகூறி முத்திரைசெய்
           திறமாக முத்த மருளே
      திருவே ரகக்குமர குருசாமி நாதகுளிர்
           திருவாயின் முத்த மருளே.

தம்முடைய அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தாய்தந்தையரோ அல்லது தாத்தா பாட்டியோ தமக்கு மகவாய் வந்து பிறந்துள்ளனர் என்று மகிழ்வுடன் நினைந்து குழந்தைகள் மீது காதல் கொள்வது மக்கள் இயல்பு. குழந்தைகள் மீது காட்டும் அன்பும் மரியாதையும் தம்முடைய பெற்றோர் அல்லது மூத்தோருக்குக் காட்டும் நன்றியாகவும் சிலர் கொள்வர்.

ஞானகுரு ஒருவருக்குத் தந்தையும் ஆவர். சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனல்லவா? சிரவணபுரம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளை ஞான குருவாகப் பெற்ற கவிஞர் ஒருவர், தம் குருவைக் குழந்தையாகப் பாட்டுடைத் தலைவராக்கிப் பிள்ளைத்தமிழ் பாடினார். ஞானகுரு தமக்கு வாழ்க்கைநெறியாக அருளியவற்றை நினைவு கூர்ந்தார்.

அச்சீலங்களாவன:

  1. ஆணவம் மிக்க கொடிய வஞ்சக உலோபரிடம் உள்ள பொருளை ஒரு பொருட்டாக மதியாத மதியாகிய நல்லறிவு. 
  2. மேனிக்குப் பொலிவூட்டும் சுந்தரத் திருநீறு, உருத்திராக்கம் புனையும் மாதவர்கள் சேவடிக்கே ஓவாது பணிபுரியும் ஆசை. 
  3. உள மாசுக்களான பொய், வஞ்சம் முதலியவற்றை நீக்கித் தூய்மையாக்கி நன்னெறியில் ஒழுகும் ஆர்வம். 
  4. தேவாரம், திருப்புகழ் முதலியவற்றை நல்லிசையோடு பயிலும் செல்வச் சிறப்பு. 
  5. சிவபூசை ஆற்றுகின்ற நற்பேறு. 
  6. சைவசித்தாந்த நூலின் நுழை சிந்தனை.

இச்செல்வங்களுக்கு எல்லாம் உரியவனாக்கி, இவற்றைத் தந்து உதவியதோடு மட்டுமல்லாமல், பாவாணனாகவும் (கவியரசாக) என்னை வாழ்த்தியருளினாய்.

இவ்வாறு வாழ்த்தியருளி என்னை உய்யச் செய்த நின் பவளவாய் முத்தம் அருளே எனக் கவியரசு கு.நடேசகவுண்டர், தம் ஞானகுரு அருளியவற்றை முத்தப் பருவத்தில் நினைவுகொள்ளுகின்றார்.

 மாவாண வக்கொடிய வஞ்சகவு லோபர்பொருள்
          மதியாத மதியை யருளி
     வடிவேறு திருநீறு ருத்திராக் கம்புனையு
          மாதவர்கள் சேவடிக்கே

ஓவாது பணிபுரியு மாசைதந் துளமாசை
          ஒழிவிக்கு மாசை யுதவி
     உளமார வஞ்சனைபொய் பயிலாது நன்னெறியி
          லொழுகுமா றார்வமீந்து

தேவார மாதிதிரு முறைகளிசை யோடுபயில்
          செல்வச் சிறப்பளித்துச்
     சிவபூசை பயில்பேறு சித்தாந்த நூலினுழை
          சிந்தையு முவந்து தந்து

பாவாண னாகவு மிரங்கியெனை வாழ்த்துநின்
          பவளவாய் முத்தமருளே
     பரமகுரு பரசிரவை வாழ்கந்த சாமியுன்
           பவளவாய் முத்தமருளே.

இவ்வாறு, பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் திருவாயினுடைய பெருமையைப் பேசுவது பிள்ளைத்தமிழின் முத்தப் பருவம்.

சிவபெருமான் யாரும் உண்ணற்கரிய ஆலகால நஞ்சுண்டும் சாவானாயினான். (இறவாதவன் ஆயினான்.) தேவர்கள் அமுதமுண்டும் சாவாராயினர். (இறப்பவர் ஆயினர்) சிவன் நஞ்சுண்டும் சாவானாயினமைக்கு அபிராமியே காரணம் என்பதை, ‘நஞ்சு அமுதாக்கிய அம்பிகை’ என அபிராம பட்டர் கூறினார். அபிராமி நஞ்சுண்ட கண்டத்தைத் தன் கையால் தடவியதால் நஞ்சு அமுதாயிற்று என்றும் கண்டம் திருநீலகண்டம் ஆயிற்று என்றும் அன்பர்கள் மகிழ்ந்தனர். சங்கராச்சாரியார், அது அம்பிகையின் மங்கல நாண் உறும் திறம் என்றும் காதோலையின் மாண்பு என்றும் சவுந்தரியலகரியில் போற்றினார். காமாட்சியின் கருணைப் பார்வை நஞ்சை அமுதாக்கியது எனக் காஞ்சிப் புராணம் கூறும்.

திருநிலைநாயகிப் பிள்ளைத்தமிழ் வேறு சுவையான காரணத்தைக் கூறுகின்றது. “பாற்கடல் கத்தக் கத்த, அதன் வயிறு குழம்பக் கடைந்தெடுத்துத்து, அசுரர்களுக்கு உரிய பங்கை அளிக்காமல், தேவர்கள் சுவைமிக்க அமுதத்தை உண்டும் சாவார் ஆனார் (இறப்பவர்). சுத்தப் பித்தனாகிய அம்பிகையின் கணவன் சுடுநஞ்சுண்டும் சாவானாம் (இறவாதவனாயினான்). இந்த அதிசயத்தை ஆராய்ந்தால், “பசுமணி! (இறைவி பச்சை நிறம் உடையவள்) இறைவன், நின் பவளச் செவ்வாய்ப்படும் அமுதம் பருகும் விரகே” என முத்தர் பரவுகின்றனராம். அந்தக் கனிவாயால் திருநிலைநாயகி என்னும் என் குழந்தையே முத்தந்தருக என அப்பிள்ளைத்தமிழ்த் தாய் வேண்டுகின்றாள்.

ஆபிரகாமிய மதங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு நம் வைதிக மதம் குணம் குறி கடந்த பரம்பொருளுக்கு மானுடக் குழந்தைகளின் இயல்புகளைக் கற்பித்துக் குழந்தைகளைப் பாராட்டிச் சீராட்டிக் கொஞ்சி வளர்க்கும் தாயன்பையே பத்திநெறியாக தெய்வானுபவமாக மாற்றிக் கொள்ளும் விரகினைப் பிள்ளைத்தமிழ் இலக்கியம் நமக்கு அளித்துள்ளது.

அம்பிகைக்குப் பிள்ளைகள் இருவர். இருவரிடத்திலும் அவள் சமமான அன்புடையவள். பிள்ளைகள் இருவரும் சேர்ந்து விளையாடும்போது விளையாட்டுச் சண்டையும் வரும். ஒருவர்க்மேல் ஒருவர் அன்னையிடம் புகார் கூறுவர். “அம்மா! முருகன் என்னுடைய துதிக்கையை இழுத்துப் பிடித்து முழம் போட்டு, இவன் பெரிய மூக்கன் என சிரிக்கின்றான்” என அண்ணன் ஆனைமுகன் புகார் கூறினான். உடனே, தம்பி, ஆறுமுகன், “அம்மா! என்னுடைய ஆறு முகத்தையும் கண்கள் அறுமூன்றையும் அண்ணன் எண்ணி, உனக்கு மூக்குச் சளி பிடித்தால் பெரிய துன்பம்” எனக் கேலி செய்கின்றான் என்றான். இவ்வாறு இருவரும் கலகமிட்டு வந்து இவனைப்பார் என்று அன்னையிடம் புகார் கூறவே, அவள் கோபப்படாமல், இருவரையும், “என் ஆனை, என் சிங்கம்” என்று கொஞ்சி மகிழ்ந்து முத்தமிட்டு இருவருடைய முனிவையும் அகற்றினாள். இவ்வாறு விநாயகனையும் முருகனையும் முத்தமிட்டு மகிழ்ந்த திருவாயால் முத்தந் தருக முத்தமே என் அப்பிள்ளைத்தமிழ் ஆசிரியர் பாடுகின்றார்.

திருநிலைநாயகி பெற்ற அனுபவம் நம் அனுபவமாகவும் இருக்கக் கூடும்.

 (இன்னும் வரும்)

dr-muthukumara-swamyமுனைவர் கோ.ந.முத்துக்குமார சுவாமி அவர்கள் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

சைவசமயத்திலும், மரபிலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை வாய்ந்தவர்.

திருமுறைகள், சைவசித்தாந்தம், தல புராணங்கள் ஆகியவை குறித்த விரிவான, ஆழமான கட்டுரைகளைத் தொடர்ந்து தமிழ்ஹிந்து தளத்தில் எழுதி வருகிறார்.

5 Replies to “குழவி மருங்கினும் கிழவதாகும் – 5 [முத்தப் பருவம்]”

  1. அழகான கட்டுரை. படிக்கப் படிக்க இன்பமாக உள்ளது.

  2. முனைவர் முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் முத்தப்பருவத்தினை ப்பற்றி எழுதியுள்ள இக்கட்டுரை வாசிப்பதற்கு மிக இனிமையாக உள்ளது. இறைவனை குழந்த்யாக்கருதி உபாசிக்கும் வாத்சல்ய பாவனையில் முத்த அனுபவத்தின் சிறப்பு அதனை நம் தமிழ் கவிஞர்கள் அனுபவித்த பாங்கை முனைவர் ஐயா இனிமையாக வருணித்துள்ளார். ஐயா அவர்களின் கட்டுரையை வெகு நாட்களாக தமிழ் ஹிந்துவில் காணவில்லையே என்று ஒரு மாதத்திற்கு முன்னர் நினைதேன். ஐயா அவர்கள் தொடர்ந்து நம் தமிழ் ஹிந்துவில் எழுதவேண்டுகிறேன்.
    நமது வைதீக சமயங்கள் ஆபிராகாமிய மதங்களுக்கு மாறுபட்டு இறைவனை பக்தனுக்கு மிக அருகில் கொண்டுவரும் பாங்கை சொல்லும் பின்வரும் முனைவரின் வரிகள் குறிப்பிடத்தக்கவை.
    “ஆபிரகாமிய மதங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு நம் வைதிக மதம் குணம் குறி கடந்த பரம்பொருளுக்கு மானுடக் குழந்தைகளின் இயல்புகளைக் கற்பித்துக் குழந்தைகளைப் பாராட்டிச் சீராட்டிக் கொஞ்சி வளர்க்கும் தாயன்பையே பத்திநெறியாக தெய்வானுபவமாக மாற்றிக் கொள்ளும் விரகினைப் பிள்ளைத்தமிழ் இலக்கியம் நமக்கு அளித்துள்ளது”.
    சிவஸ்ரீ

  3. மிக நீண்ட விராமத்திற்குப் பின் தொடரும் வ்யாசம். அருமை.

    கண்ணனுக்கும் கந்தனுக்கும் பிள்ளைத்தமிழ்ப் பாமாலைகள் நிறையவே இருக்கும்.

    ஸ்தனபானம் செய்யும் வினாயகப்பெருமான் சித்ரம். அருமை.

    தொடரும் அடுத்த பாகத்தில் கண்ணனின் முத்தப்பருவம் பற்றி பிள்ளைத்தமிழ்ப் பாமாலைகள் பகிரப்படும் என ஆவலாக உள்ளேன்.

    உத்தர பாரதத்தில் ச்ராவண மாதத்தில் கொண்டாடப்படும் காவடி உத்ஸவத்தில் சிவபெருமான் உருவம் தாங்கிய பதாகைகள் ஆங்காங்கு வைக்கப்படும். தாடி மீசைகளுடன் ஜடாபாரத்துடன் யோகி கோலத்தில் சிவபெருமானின் உருவப்படங்கள் வைக்கப்படுவதோடு குழந்தையாய் படுத்துகொண்டிருக்கும் கோலத்தில் டமருகம் மற்றும் த்ரிசூலத்துடனான சிவபெருமானின் உருவப்படங்களும் காணப்படும். இது பக்தர்களின் மனோபாவப்படி மட்டும் தானா. அல்லது சைவ பக்ஷமான புராணாதிகளிலோ அல்லது த்ரவிட வேதம் என போற்றப்படும் பன்னிரு திருமுறைகளிலோ சிவபெருமானை குழந்தையாய் பாவித்ததுண்டா?

    முக்யமாக சிவபெருமானை பிள்ளைத்தமிழ்ப் பாமாலைகளில் அருளாளர்கள் யாரும் பாடியதுண்டா?

    இன்னொரு விஷயம். வைதிக சமயத்து பிள்ளைத்தமிழ்ப் பாமாலைகள் மட்டும் வ்யாசத்தின் கருப்பொருளா அல்லது புறசமயங்களும் வ்யாசத்தில் எதிர்பார்க்கலாமா?

    ஜைன தீர்த்தங்கரர்களுக்கு ( பார்ஷ்வநாதர், சந்த்ரப்ரபா ) பஞ்ச கல்யாண மஹோத்ஸவம் கொண்டாடப்படுவதுண்டு. அதில் இரண்டாவது கல்யாண மஹோத்ஸவம் ஜன்மாபிஷேகமும் பாலலீலையும். தமிழிலான சமணக்காப்பியங்களில் இது சம்பந்தமான விவரணங்கள் உண்டா என அறிய ஆவலாய் உள்ளேன். மேலும் இப்படி ஒரு சம்ப்ரதாயமிருக்கையில் ஜின தீர்தங்கரர்கள் மீது ஏதும் பிள்ளைத்தமிழ்ப் பாமாலைகள் உண்டா என அறியவும் ஆவலாய் உள்ளேன்.

    இவ்யாசத்தில் காணப்படும் பழங்குடி என்ற பதப்ரயோகத்தில் எனக்குள்ள அபிப்ராய பேதத்தை உரித்தான பிறிதொரு வ்யாசத்தில் பகிருகிறேன்.

  4. கட்டுரைப் பொருளுடன் அதற்கு ஏற்ற படங்கள் இணைந்திருக்கிற போது மிகவுமு; அற்புதமாக இருக்கிறது… நாளை தொடங்கி நடக்க இருக்கிற ஸ்கந்தஷஷ்டி விழாவினை நினைவூட்டி நம்மை செந்திலாண்டவனின் திருவடிநிலைகளுக்கு அழைத்துச் செல்கிறது.. இந்தப் பாடல்…

    கத்துந் தரங்கம் எடுத்தெறியக்
    கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்
    கரையில் தவழ்ந்து வாலுகத்திற்
    கான்ற மணிக்கு விலையுண்டு

    தத்துங் கரட விகடதட
    தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
    தரளந்தனக்கு விலையுண்டு
    தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்

    கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
    குளிர்முத் தினுக்கு விலையுண்டு
    கொண்டல் தருநித் திலந்தனக்குக்
    கூறுந் தரமுண் டுன்கனிவாய்

    முத்தந் தனக்கு விலையில்லை
    முருகா முத்தந் தருகவே
    முத்தஞ் சொரியுங் கடலலைவாய்
    முதல்வா முத்தந் தருகவே”

  5. //கட்டுரைப் பொருளுடன் அதற்கு ஏற்ற படங்கள் இணைந்திருக்கிற போது மிகவும் அற்புதமாக இருக்கிறது//

    உண்மை. மிக அருமையான கட்டுரை. தொடருங்கள் ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *