நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?

தமிழகத்தை வாட்டும் நதிநீர் பிரச்னைகள் :

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை பரபரப்பாக இருந்தது காவிரி விவகாரம்- ஒருவார மழையில் தற்போது மறக்கடிக்கப்பட்டு விட்டது. வருடாந்திர திவசம் போல ஆண்டுதோறும் ஜூன்மாதம் காவிரி பிரச்னை கிளம்புகிறது. அடுத்து சம்பாவோ .அல்லது குறுவையோ துவங்கும்போது மீண்டும் காவிரி பிரச்சினை முன்னிலை பெறும்.

அதேபோல, கேரள சட்டமன்றத்தில் இயற்றப்படும் தீர்மானமோ அல்லது அங்கு இடைத்தேர்தல் ஏதும் நடைபெறவிருந்தாலோ முல்லைப் பெரியாறு பிரச்சினை முன்னிலைக்கு வரும் (கழக ஊடகங்கள் முல்லை ‘பெரியார்’ என்று உச்சரிப்பதில் நுண் அரசியல் உள்ளது. சின்னாறு. பாம்பாறு போல அது பெரியாறு. அவ்வளவுதான்- சந்தடிசாக்கில் ஈ.வெ.ரா பெயரை சூட்டும் சூழ்ச்சி நடக்கிறது).

பாலாற்றில் ஆந்திரம் அணை கட்டும் பிரச்சினை அவ்வப்போது தோன்றி மறைகிறது. அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியிலும் கேரளம் ஈடுபட்டு வருகிறது.

தாமிரபரணி தவிர்த்து தமிழகத்தில் உற்பத்தியாகும் பெரிய நதிகள் எதுவும் இல்லாததால், தமிழகம் என்றுமே தண்ணீருக்கு பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலையிலேயே உள்ளது. மரபு சார்ந்த விவசாய முறைகளை மட்டுமே கையாளும் நம் தேசத்தில், நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் மாநிலங்களுக்கிடையே பிரச்னை எழுவது இயல்பு. தெளிவான தேசிய சிந்தனை கொண்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற பிரச்னைகளை எளிதாகத் தீர்க்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேச நலன் என்பது பின்னுக்கு தள்ளப்பட்டு, கட்சி அரசியல் முன்னிலை வகிக்கும் இந்தக் காலத்தில், நல்லது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

காவிரி பிரச்னை :

தமிழகத்தை வாட்டும் நீண்டகாலப் பிரச்னை காவிரி நதிநீர்ப் பங்கீடு. சோழர்கள் காலத்திலேயே சாளுக்கிய மன்னர்கள் காவிரியை மறித்து அணை கட்ட முயற்சித்துள்ளனர். எனினும் 1932ம் ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்படும் வரை தமிழகத்துக்கான நீரை கர்நாடகாவில் தடுக்க முடியாத நிலை இருந்து வந்தது. எழுபதுகளில் கர்நாடகத்தில் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி என பல அணைகள் தொடர்ந்து கட்டப்பட்ட பின், கர்நாடகத்தின் வெள்ள நீர் வடிகாலாக தமிழகம் மாறிவிட்டது.

தமிழகத்தின் தீராத பிரச்னை எதுவாக இருந்தாலும் அதில் திராவிட இயக்கங்களின் பங்கு நிச்சயம் இருக்கும். மேற்சொன்ன மூன்று அணைகளும் கட்டப்பட்டபோது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் கருணாநிதி. அணைகள் கட்டப்படும்போதே தமிழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் நமக்கு நியாயம் கிடைத்திருக்கும். 1924ம் ஆண்டு போடப்பட்டு, 1974ல் காலாவதியான நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை முறையாக புதுப்பித்திருந்தால், தமிழகத்துக்கு நியாயம் கிடைத்திருக்கும்.
குறைந்தபட்சம், கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை இந்திரா காந்தி பேச்சைக் (மிரட்டலை?) கேட்டு வாபஸ் பெறாமல் இருந்திருந்தாலாவது நல்லது நடந்திருக்கும். இப்படி மூன்று வகையிலும் தமிழகத்தை வஞ்சித்து, தமிழக விவசாயிகளை தீராத துன்பத்தில் தள்ளியவர் ‘ தமிழினத் தலைவர்’ கருணாநிதி. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் இது தொடர்பாக எழுப்பிய பல எச்சரிக்கைகளை புறக்கணித்து எள்ளி நகையாடிய புண்ணியவான் கருணாநிதி.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, இப்போது நடுவர் மன்றம், காவிரி நதிநீர் ஆணையம் என பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புகளை கர்நாடகம் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது.

சமீபத்தில் சம்பா பயிரைக் காக்கும் வகையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு 2 டிஎம்சி நீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து ஆரம்பத்தில் பிரதமர் கமுக்கமாக இருந்தார். பின்னர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அப்போது பிரதமர் அலுவலகத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்.

இதையடுத்து பிரதமர் தலைமையில் காவிரி நீர் ஆணையம் கூடியது. அக்கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கையை முழுமையாக ஏற்காத பிரதமர், விநாடிக்கு 9000 கன அடி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார். இதைக் கூட கர்நாடகம் ஏற்காமல், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் வெளிநடப்புச் செய்தது.

செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை நீர் விட பிரதமர் உத்தரவிட்டிருந்தார். பிரதமரின் உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடகா செப்டம்பர் 20ம் தேதியே காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதை நிறுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடியது தமிழக அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகததிற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. பிரதமரின் உத்தரவை மதிக்காத செயலையும் அது கண்டித்தது. மேலும் தொடர்ந்து தண்ணீரைத் திறந்து விடுமாறும் அது உத்தரவிட்டது.

இதையடுத்து மீண்டும் தண்ணீரைத் திறந்தது கர்நாடக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவின் படி அக்டோபர் 24ம் தேதி வரை, கர்நாடகம் நீர் தர வேண்டும். ஆனால் அக்டோபர் 8ம் தேதியே கர்நாடகம் நீர் தருவதை நிறுத்திவிட்டது. இதையடுத்து தமிழக அரசு கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தீர்ப்பு வரலாம்….தண்ணீர் வருமா?

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்:

இந்த அணை, ஆங்கிலேய அரசுக்கும், திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய சுதந்திரத்துக்குப் பின்பு தமிழ்நாடு அரசுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையிலான ஒப்பந்தமாக உள்ளது. இந்த அணை நில அதிர்வால் பாதிப்படைந்துள்ளதாக ‘மலையாள மனோரமா’ எனும் இதழ் 1979ம் ஆண்டு வெளியிட்ட செய்தியால் அணையின் முழு நீர்த்தேக்க அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்னர்தான் 152 அடிக்கு நீர்த்தேக்க அளவை உயர்த்த வேண்டும் என்று தெரிவித்தது.

நியாயமற்ற முறையில் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட இந்த பராமரிப்புப் பணியை ஏற்று வரலாற்றுத் தவறை இழைத்தவர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் வசம் இருந்த இந்த அணையின் பாதுகாப்புப் பணியை 1980ல் கேரள காவல்துறைக்கு மாற்ற அனுமதித்தவர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து அணையை பலப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு கட்டுமான ஊழியர்களை தாக்குவது, பொறியாளர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்வது, வாகனங்களைக் கைப்பற்றுவது என்று ஆண்டுக் கணக்கில் கேரள அரசுகள் செய்து வந்த இடையூறுகளுக்கு எதிராக தமிழகத்தில் எம்.ஜி.ஆர். அரசு சிறு முணுமுணுப்பைக் கூட காட்டியதில்லை.

தமிழகம் பெரியாறு அணையை வலுப்படுத்திய பின்னரும், கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஒப்புக்கொள்ளவில்லை. இந்தச் சிக்கல் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. உச்ச நீதிமன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த உத்தரவையும் ஏற்க மறுக்கிறது.

கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு இடுக்கியில் புதிய அணை கட்டப்போவதாக அறிவித்துள்ளது கேரளா அரசு. அந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரப்படுமாம்.கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்டுத் தான் ஆக வேண்டும்!

இந்த பிரச்னையில் இந்திய தேசியம் பேசும் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் நிலையை விடுங்கள். ‘சர்வதேசியம்’ பேசும் கம்யூனிஸ்ட்களின் யோக்கியதை வெளிச்சத்துக்கு வந்தது. அணையை ‘ஆய்வு’ செய்ய வந்த காம்ரேட் அச்சுதானந்தன் குடையைக் கொண்டு குத்திப் பார்த்து அணையின் பலவீனத்தை உறுதி செய்தார்! .தமிழக மார்க்சிய தோழர்கள் தொண்டையில் நெல் சிக்கிய கோழி போல் விழிக்கிறார்கள்.

இந்தப் பிரச்னையில் நீதிமன்றங்களும் நியாயமாக நடந்துகொண்டதில்லை. உச்ச நீதிமன்றம் தான் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்து, கேரளா செய்த மேல்முறையீட்டு மனுவை தானே விசாரித்தது எந்த சட்ட அடிப்படையில்?

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சில நாட்களில் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து தீர்ப்பை செல்லாக் காசாக்கியது கேரளா. இதை எதிர்த்து தமிழ்நாடு அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கையும், அதாவது கேரள சட்டமன்றத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தை ஏற்கலாமா, கூடாதா? என்று தீர்ப்பளிக்க வேண்டிய இந்த வழக்கையும், ஏற்கனவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்ப்பை எதிர்த்து கேரளா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவையும் ஒன்றாக இணைத்து, ஐந்து நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வுக்கு மாற்றியது எந்த சட்ட அடிப்படையில்? இரண்டு வேறு வேறு வழக்குகளை ஒன்றாக இணைத்ததன் மூலம், உச்ச நீதிமன்றம் தான் வழங்கிய தீர்ப்பை தானே மதிக்கத் தவறியது ஆகாதா?

மத்தியில் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வரும் மலையாளிகளின் ‘லாபி’ நன்றாகவே வேலை செய்கிறது. (காமராஜர் காலத்தில் தில்லியில் தமிழக அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கழகங்களின் ‘ஹிந்தி எதிர்ப்பு’ புண்ணியத்தால்- இன்று முக்கிய துறைகளில் தமிழ் அதிகாரிகளே இல்லை).

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் கட்டும் அணை:

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், சென்ன கேசவ மலைத்தொகுப்பில் உள்ள நந்தி துர்கம் பாலாற்றின் நதிமூலம் ஆகும். அம்மாநிலத்தில் 90 கி.மீ. தூரம் ஓடி ஆந்திர மாநிலத்தின் வழியாக 45 கி.மீ. கடந்து தமிழ்நாட்டில் 225 கி.மீ. தூரம் பாய்ந்தோடி, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் ஊராட்சியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது பாலாறு.

தமிழ்நாட்டில் லட்சக் கணக்கான நிலப்பரப்பின் பாசனமும், ஒன்றரை கோடி மக்களின் குடிநீரும் அழிப்பது பாலாறு. தெற்கு ரெயில்வே பயணிகளுக்கும், கால்நடைகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்குவது பாலாறு தான். 1892-ம் ஆண்டு நீர்ப் பங்கீட்டில் கர்நாடக மாநிலத்திற்கு 25 சதவிகிதமும், ஆந்திர மாநிலத்திற்கு 15 சதவிகிதமும், தமிழ்நாட்டிற்கு 60 சதவீதமும், பாலாற்று நீரை பங்கீட்டுக் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதுநாள் வரை முழு பங்கீட்டு நீரை ஒருமுறை கூட நாம் பெற்றதில்லை. காரணம் தலைமடை மாநிலங்கள், கடைமடை மாநிலத்தின் ஒப்புதல் பெறாமலேயே பாலாற்று நீர்வரத்தைத் தடுத்து நிறுத்தி, பல தடுப்பணைகளையும், அணைக்கட்டுகளையும் கட்டி, ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்களை மீறி தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு அம்மாநிலத்தில் சாந்திபுரம் மண்மலம், சிவராமபுரத்தில் பாலாற்றின் குறுக்கே 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் 60 கோடி ரூபாயில் புதிய அணை கட்ட திட்டமிட்டு, முதல் தவணையாக 35 கோடி ரூபாய் சித்தூர் நீர்வளத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப் போவதாக தகவல். தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் அணை கட்டும் இடத்தை பார்வையிட அழைக்கப்பட்டுள்ளனர். விரைவில் இதற்காகவும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று எதிர்பார்க்கலாம் .

அமராவதி அணைக்கும் அபாயம்:

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ளது அமராவதி அணை. இந்த அணைக்கு கேரள மாநில எல்லைக்குள் உள்ள பாலாறு, தேனாறு, பாம்பாறு, காந்தலாறு, சின்னாறு, மூணாறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் வரும். அமராவதி அணை தண்ணீரை நம்பி கோவை, திருப்பூர், கரூரில் 56 ஆயிரம் ஏக்கரில் இருபோக சாகுபடி நடந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு போக சாகுபடியாக சுருங்கியது.

கேரளாவில் இருந்து அமராவதி அணைக்கு மொத்தம் 8 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து வந்தது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்ட பகுதிகளில் பாசனநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் ஒப்பந்தப்படியான 8 டி.எம்.சி. தண்ணீரில் 3 டி.எம்.சி. தண்ணீரைக் குறைக்கத் திட்டமிட்டு கேரள அரசு பல்வேறு மறைமுக வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தமிழக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநில பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து அவற்றை விவசாய நிலங்களாக மாற்றும் முயற்சியில் கேரள அரசு ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அமராவதி அணைக்கு தண்ணீர் தரும் பாலாறு, கல்லாறு, பாம்பாறு நீர்வழி பாதைகளில் தற்காலிக மண் அணைகளையும், மரப்பட்டைகளைக் கொண்ட பல தடுப்பணைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

விளைநிலங்களாக மாற்றப்பட்ட வனப்பகுதிகளுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டுசெல்லும் ஒத்திகை நிகழ்ச்சியில் கடந்த பல மாதங்களாக கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை நேரில் பார்வையிட்ட தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், பாசன சங்கத் தலைவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர் .

கேரள அரசின் துணையுடன் விவசாயிகள், வனத்துறையினர் இணைந்து செயல்படுத்திவரும் இத் தடுப்பணைத் திட்டத்தை நிரந்தரத் தடுப்பணை கட்டி நிறைவேற்றுவதற்கான கருத்துருக்களை நீர்வளத் துறை கேரள அரசுக்கு அனுப்பியுள்ளது.

கேரளாவின் தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கை தற்போது 5 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்றும். திட்டமிட்டபடி தடுப்பணைகள் கட்டப்பட்டால், திருப்பூர், கரூர் மாவட்ட பகுதிகளில் 56 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், நூற்றுக் கணக்கான கிராமங்களும் குடிநீர், உணவு உற்பத்தியின்றி அழிந்து பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது…..

ஜீவாதாரப் பிரச்னைகளிலும் திராவிட இயக்கங்களின் அரசியல்:

என்று திராவிட கட்சிகள் ஆட்சியைப் பிடித்தனவோ, அன்றே தமிழக விவசாயிகளுக்கு போதாத காலம் ஆரம்பித்துவிட்டது. 1967 முதல் 1972 (எம்.ஜிஆர். அதிமுக தொடங்கிய வருடம்) வரை தமிழகத்தில் காங்கிரசே எதிர்க்கட்சி. இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் தமிழகத்தில் நல்லாட்சி (காமராஜர் இருந்த வரை) ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது. இந்திராகாந்தி புண்ணியத்தால் அந்த நம்பிக்கையும் தகர்ந்தது. 1977- ல் அதிமுக ஆட்சியைப் பிடித்த பின், தமிழக அரசியல் என்பது மக்கள்நலன் சார்ந்து அமையாமல், இரண்டு கட்சிகளுக்கு [இன்னும் சொல்லப் போனால் இரண்டு தலைவர்களுக்கு] இடையிலான போட்டி என்றாகி விட்டது.

தமிழக அரசு நிர்வாகத்தைப் பொருத்த வரை பெயரைத் தவிர இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. எவ்வளவு முக்கியமான பிரச்னையாக இருந்தாலும் சரி, இரண்டு கட்சிகளும் சேர்ந்து எந்த பொது நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை. இது தமிழகத்தின் மிகப் பெரிய சாபக்கேடு. எம்.ஜி.ஆரின் வாரிசாகப் பதவியேற்ற ஜெயலலிதா அந்த ‘பாரம்பர்யத்தை’ விடாமல் தொடர்கிறார்.

சமீபத்தில் கருணாநிதியை ‘தன்மானமற்றவர்’ என்று ஜெ . சாடியிருந்தார்….அதற்கு பதிலளித்த கருணாநிதி, ‘என்றாவது ஒருநாள் உன்னை நான் நேரில் சந்திக்கும் நிலை ஏற்பட்டால், அன்றுதான் நான் தன்மானம் அற்றவனாவேன்’ என்று தெரிவித்திருந்தார். அதாவது மக்களின் நலனுக்காக என்றாலும்கூட இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதை வெறுக்கிறார்கள். தமிழனின் ஒற்றுமை எப்படி வெளிப்படுகிறது பார்த்தீர்களா?

கர்நாடகாவில் பா.ஜ.க. முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவும் இணைந்து பிரதமரை சந்திக்கிறார்கள். கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டியும், மார்க்சிஸ்ட் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் இணைந்து தில்லி செல்கிறார்கள். தமிழர்களோ திமுக ஒரு நாள், அதிமுக ஒரு நாள் என தனித்தனியாக செல்கிறார்கள். மக்கள் பிரச்னை முக்கியமல்ல. இவர்களின் தனிப்பட்ட பகையே முன்னிலை வகிக்கிறது.

1989 முதல் இன்று வரை இரண்டு கட்சிகளும் மாறி மாறி மத்திய அரசில் அங்கம் வகிக்கின்றன. இவர்களின் ஆதரவோடு தான் மத்தியில் அரசுகள் அமைகின்றன. இருப்பினும் தவறிப்போய் கூட தங்கள் பலத்தை மாநிலத்தின் நலனுக்காக பிரயோகித்ததில்லை. ஜெ. வெற்று ஆகாத்தியம் செய்து தனது ஆதரவை வீணடிப்பார். கருணாநிதி தன் குடும்பம் சம்பாதிக்க மட்டுமே தன் கட்சியின் ஆதரவை பயன்படுத்துவார்.

வீணாய்ப் போன சேது சமுத்திரத் திட்டத்தில் கோடிகளைக் கொட்டி வீணடிக்கத் துடிக்கும் கருணாநிதி, நதிநீர்ப் பங்கீடுகளில் நமக்குரிய நியாயமான பங்கைப் பெற தனது பலத்தை மறந்தும் உபயோகப்படுத்தியதில்லை. கர்நாடக மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் கருணாநிதி (இது நடக்காது என்று அவருக்கே தெரியும்), கேரளாவின் உம்மன் சாண்டி அரசைக் கலைக்க வேண்டும் என்று கேட்டதேயில்லை.

காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளுக்கு அதிக பலம் இல்லாத நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்துக்கு வெளியே தமிழர்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றனர். .தனிப்பட்ட விரோதத்துக்காக இரண்டு கட்சிகளும் பகைமை பாராட்டுவதால் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகள் கவனம் பெறுவதில்லை.

நமக்குரிய நீரை பெற்றுத் தருவது ஒருபக்கம் இருக்கட்டும். கிடைக்கும் நீரை முறையாக உபயோகிக்கவும் வழியில்லை. டெல்டா பாசனத்துக்குப் போக எஞ்சும் காவிரிநீர் வீணே கடலில் சென்று கலக்கிறது. போதிய தடுப்பணைகள் கட்டப்படவில்லை. உள்ள அணைகளும் ஏரிகளும் தூர் வாரப்படுவதில்லை. எதிர்காலத்தைப் பற்றி கவலையில்லாமல் மணல் கொள்ளையடிக்கப்படுவதால், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுக்கிறது. மணல் இல்லாத ஆற்றில் வரும் நீர் எங்கும் மண்ணில் உறிஞ்சப்படாமல் கடலில் கலந்து வீணாகிறது.

தேசியக் கட்சிகளின் இரட்டைவேடம்:

மாநிலக் கட்சிகள் பிராந்திய நலனை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் செய்வதில் ஆச்சரியமில்லை. அவர்களின் அரசியல் ஒரு குறுகிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் காங்கிரசும், பா.ஜ.க.வும் (ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் மார்க்சிஸ்டுகளை தேசிய கட்சியாகவே மதிக்க முடியாது) தமிழகத்தின் நலனைப் புறக்கணிப்பது அநியாயம்.

திமுக அல்லது அதிமுக உடன் சேர்ந்து சில எம்பிக்களைப் பெற்று விடுவதாலும், கழகங்களின் சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் முழு ஆதரவைப் பெற்று விடுவதாலும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் நலனை எண்ணிப் பார்ப்பதாக இல்லை.
உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அதை காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆளும் கேரள, கர்நாடக மாநில அரசுகள் மதிப்பதில்லை. .நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாத மாநிலங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. சம்பந்தப்பட்ட மாநில அரசை அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவை அமல்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டசபையை முடக்கிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம். மத்தியில் இந்த இரண்டு கட்சிகள் ஆளும் அரசுகளே அமைவதால், தங்கள் கட்சி ஆளும் மாநிலங்கள் மீது இவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.

கர்நாடகத்தைப் பொருத்த மட்டிலும் காவிரி அங்கு ஓர் அரசியல் பிரச்னையாகவே மாற்றப்பட்டுவிட்டதால் (இதைச் செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியும் தேவே கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளமும் தான்) அதை மீறி உறுதியான அரசியல் நடவைத்க்கை எடுக்க பாஜக தயங்குகிறது அக்கட்சியும் கடைசியில் காங்கிரஸ் வழிக்கே செல்கிறது எனினும், எடியூரப்பா முதல்வராக இருந்தபோது தமிழகத்துக்கு காவிரி நீர் விவகாரமில்லாமல் வந்து சேர்ந்ததை நினைவு கூர்வது அவசியம்.

காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களுக்கு இடையேயும் நதிநீர் தாவாக்கள் உண்டு. ஆனால் அந்த மாநிலங்கள் தமிழகம் போல ஒரேயடியாக வஞ்சிக்கப்படுவதில்லை. கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக ஆந்திரத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே பிரச்னை உண்டு. ஆனால் இரு மாநில விவசாயமும் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை.
தீர்வுதான் என்ன ?

ஜனநாயகத்தில் எண்ணிக்கை மட்டுமே பலம். எந்த ஒரு பிரச்னைக்குமே தனித்தனியாகப் போராடுவது தமிழனின் தலையெழுத்து. காவிரிப் பிரச்னை தென்மாவட்ட மக்களை பெரிதாகப் பாதிப்பதில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னையின்போது காவிரி டெல்டா விவசாயிகள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

அமராவதி அணை விவகாரம் இன்னும் கொங்குப்பகுதியைத் தாண்டி கொண்டு செல்லப்படவில்லை. பாலாறு விவகாரம் இன்னும் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக பாதிக்கப்படுகின்றன. இதற்கு ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்வினை என்னவென்று பார்த்தால் எதுவுமில்லை.

தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் இன்றும் விவசாயத்தையே பிரதானத் தொழிலாகக் கொண்டுள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை ஒரு தேர்தல் பிரச்சினையாக இருந்ததில்லை. தேர்தல் நேரத்தில் வேறு பிரச்னைகளை எழுப்புவதன் மூலமோ, இலவசங்களை அள்ளித் தெளிப்பதன் மூலமோ, ஜீவாதாரமான இந்தப் பிரச்சினையை கழகங்கள மழுப்பி வருகின்றன. கழகங்களின் இயலாமை, முயலாமை, கயமைத்தனம் பூசி மெழுகப்படுகிறது. இதர கட்சிகள் இந்த இரண்டு கட்சிகளின் ஏதாவதொரு கூட்டணியில் சேர வேண்டி இருப்பதால், அவர்களும் மூச்சு விடுவதில்லை. முன்பு ஓரளவு வலுவாக இருந்த விவசாய சங்கம் கிட்டத்தட்ட ஒரு ஜாதிக்கட்சி போல மாறிவிட்டது.

நாம் ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். அதற்காக தமிழ்த் தேசியவாதிகள் கூறுவது போல கர்நாடகத்தை இந்திய யூனியனில் இருந்து விலக்க வேண்டும் அல்லது தமிழகம் இந்திய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று கொந்தளிப்பதெல்லாம் வேலைக்காகாது.

அரசியல்வாதிகளுக்குப் புரியக் கூடிய ஒரேமொழி ஓட்டு மட்டுமே. தமிழகம் விரைவில் பாலைவனமாவதைத் தவிர்க்க மக்கள் இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டும். தங்கள் தனிப்பட்ட மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் பிரச்னைகளுக்கு ஒன்றுபட்டுப் போராடாவிட்டால், தமிழர்கள் திராவிட இயக்கங்களை புறக்கணிக்க வேண்டும். அவர்கள் மாறாவிட்டால் நாம் மாறுவோம். கழகங்களைப் புறந்தள்ளிவிட்டு தேசியக்கட்சிகளுக்கு வாய்ப்பளிப்போம்!

17 Replies to “நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?”

  1. மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியம். தமிழக மக்கள் அதை உணர்ந்து செயல் பட வேண்டும்.
    வாழ்க பாரதம்.

  2. தீர்வு என்ன என்பது தெளிவாகச் சொல்லப் படவில்லையே. தேசீய கட்சிக்கு வாக்களித்தால் பிரச்சினை எப்படித் தீரும்? அப்பொழுதும் கர்நாடக பிஜேபி/காங்கிரஸ் தமிழ் நாடு பிஜேபி/காங்கிரஸ் என்றுதானே செயல் படுவார்கள்? இனி தமிழ் நாடு தண்ணீருக்காகவும் மின்சாரத்திற்காகவும் பிற மாநிலங்களை நம்பிப் புண்ணியமில்லை என்ற நிதர்சனத்தை முதலில் உணர வேண்டும். அதற்கான மாற்று ஏற்பாடுகளையும், மாற்று விவசாய முறைகளையும், கிடைக்கும் நீரை சேமிக்கும் முறைகளிலும், தற்சார்பு மின்சார உற்பத்தியிலும் கவனம் செலுத்த வேண்டும். மேட்டூர் அணை முதல் சாதாரணக் கிராமக் குளம் வரை எதுவும் தூர்வாரப் படுவதில்லை. வெள்ளம் வரும் காலங்களில் வெள்ள நீரைச் சேமிக்க வழியில்லை. இந்திய அரசின் சட்டத்திற்குள் முடியும் அத்தனை வழிகளிலும் ஒரு புறம் முயற்சி செய்து கொண்டே மறுபுறம் போர்க்கால அடிப்படையில் தற்சார்பு நிலை அடையை முயற்சி செய்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு இருக்கும் ஒரே தீர்வு. கர்நாடகத்திலும், கேரளத்திலும் நதிகளும், நீர்நிலைகளும் தமிழ் நாடு அளவுக்கு மோசமாகப் பராமரிக்கப் படுவதோ துர்ப்பிரயோகம் செய்யப் படுவதோ அசிங்கப் படுத்தப் படுவதோ கிடையாது. அவர்கள் அளிக்கும் குறைந்த பட்ச நீரைக் கூட ஒழுங்காகப் பராமரிக்க வக்கில்லாத தமிழ் நாட்டுக்கு எவன் மரியாதை தருவான்? தமிழ் நாட்டில் பா ஜ க ஆட்சிக்கு வந்து சண்டை செய்யாமல் ஆட்சி செய்யுமேயானால் இதற்கு முன்னுரிமை கொடுக்க வாய்ப்பிருக்கிறது அதற்காகவேனும் அதற்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும். மற்றபடி தேசீயக் கட்சி ஆட்சிக்கு வருவதினால் மட்டுமே அண்டை மாநிலங்கள் நீரை தந்து விடப் போவதில்லை.

  3. விஸ்வாமித்ரா அவர்களுக்கு……

    //தேசீய கட்சிக்கு வாக்களித்தால் பிரச்சினை எப்படித் தீரும்? அப்பொழுதும் கர்நாடக பிஜேபி/காங்கிரஸ் தமிழ் நாடு பிஜேபி/காங்கிரஸ் என்றுதானே செயல் படுவார்கள்? //

    உண்மை……ஆனால் இப்போதைய நிலைமை போல் ஒரேயடியாக வஞ்சிக்கப்படமாட்டோம்…….நேற்று உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சினையில் இருமாநில முதலவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது……இது கர்நாடகாவுக்கு மிக சாதகமான உத்தரவாகும்….ஏற்கனவே பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்து , அதில் கர்நாடகம் எந்த உடன்பாட்டுக்கும் ஒத்துக்கொள்ளாததால்தான் நீதி மன்றம் செல்ல நேரிட்டது……மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கச்சொன்னால் எப்படி?

    இரு தேசிய கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கிடையே ஏற்படும் நதி நீர் தாவாக்களில் எந்த மாநிலமும் தமிழகம் போல் ஒரேயடியாக வஞ்சிக்கப்படுவதில்லை…..அலமாட்டி மற்றும் கிருஷ்ணா நதி நீர் விவகாரம் ஒரு உதாரணம்…….

    மற்றபடி திரு.விஸ்வாமித்ரா அவர்கள் சொன்ன எந்த யோசனையையும் திராவிடகட்சிகள் கடந்த காலத்திலும் செய்ததில்லை…இனியும் செய்யப்போவதில்லை………நம் அண்டை மாநிலங்களில் உள்ள தேசியகட்சிகள் நீர் மேலாண்மையில் காட்டும் ஆர்வத்தை நாம் எளிதாக அறிய முடிகிறது……அதன் பொருட்டே நான் தேசியக்கட்சிகளை வரவேற்கிறேன்…..

  4. நதிகளை தேசிய மய மாக்க வேண்டும். மத்தியில் ஒரு கட்சியின் ஆட்சி இருக்க வேண்டும். அந்த கட்சி தேசிய சிந்தனையுடன் பரபட்சம் இன்றி நதி நீரை பங்கிட்டு அளிக்க வேண்டும். இது போன்ற ஒரு சூழல் உருவாகுமானால் இப்பிரட்சனை தீறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நதி நீரை வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகள் பொறுப்புணர்வுடன் கையாள தவறி விட்டன என்பதையும் மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல்தான் இதற்கு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

    பால. மோகன் தாஸ்

  5. This article gives good amount of information, but inconclusive.
    The author blames the national parties for their double stand, but at the end appeals to vote to the national parties.
    This issue has no end in a democratic India. With regionalism and factionalism in a rise, we have to live with the issue for eternity.

  6. சான்றோன்
    இந்த கட்டுரை உங்களுக்கே அபத்தமாகப்படவில்லை. தமிழகம் பாஜகவை ஆட்சியிளிருத்தினால் காவிரியும் பெரியாறும் கரைபுரண்டோடுமா? அசிங்கமான மாநில அரசியலில் பாஜகவிற்கு பெரும்பங்குண்டு. இந்த தளத்திலேயே விவாதித்துவிட்டோம்.
    https://tamilhindu.com/2011/12/mulla-periyar-bridge-and-bjp/

    தண்ணீர் மட்டுமில்லை இழந்தது எவ்வளவோ!!

  7. அந்தந்த மாநிலத்துக்கும் தண்ணீர் தேவை அதிகரித்துதான் இருக்கிறது. கர்நாடகாவைப் பொறுத்த வரை அது விவசாய நிலங்களை விரிவு படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் விவசாய நிலம் பெரும்பகுதி வீட்டு மனைகளாக மாறிய பிறகு எஞ்சிய பகுதிக்கும் தண்ணீர் போதவில்லை. மாநிலக் கட்சிகள் சுய நலப் போக்கை விட வேண்டும். மத்தியில் ஆளும் தேசிய கட்சிகள் எவரானாலும் மக்கள் நலனில்தான் அக்கறை காட்ட வேண்டுமே தவிர, தனக்கு ஆதரவு அழிப்பது யார், எதிர்ப்பது யார் என்று பாரபட்சம் காட்டுவதால் எந்த பலனும் விளையாது. இப்போதைய மத்திய அரசு தமிழகத்துக்கு பாரபட்சம் காட்டுகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது.

  8. கேரளா மற்றும் ஆந்திராவுடனான நீர்பிரச்சினையின் தீவிரம் குறைவுதான்.
    கர்நாடகாவுடனான காவிரி பிரச்சினை தீர எனக்கு புரிந்தவரை ஒரு தீர்வு உள்ளது.

    கதம் கதம். முடிந்தது முடிஞ்சு போச்சு. பழைய கதைகளை பேசுவது ஒரு வகையில்
    அவசியம் என்றாலும், எதிர்கால நல்வாழ்விற்கு புதிய உத்திகள் தேவை.
    என் கற்பனைதான். ஜெயலலிதாவினால்தான் இதை செய்ய முடியும்.
    கருணாநிதியினால் முடியாது.

    Preconditions
    – ஜெயலலிதா 3ல் 2 பங்கு சட்டசபை ஆதரவை கொண்டிருப்பது போல, ஏதாவது
    ஒரு கட்சி, கர்நாடகாவில் பெரும் ஆதரவுடன் இருக்க வேண்டும்.
    – பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு, ஒப்பந்தம் முடியும் வரை, ஒரு
    தகவலையும் அளிக்கக்கூடாது.
    – நமக்குதான் தண்ணீர் வேண்டும். நாம்தான் அதிகமாக விட்டுக் கொடுக்க
    வேண்டும்.

    (1) ஜெயலலிதா, கர்நாடக முதல்வரை தொலைபேசியில் அழைத்து, ரகசிய
    பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும். ஜெயலலிதா, தன்
    நம்பிக்கைக்குரிய 5 உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் கொண்ட
    குழுவை அமைத்து, அதே போல் கர்நாடக முதல்வரை அமைக்க செய்ய வேண்டும்.

    (2) 3 மாதங்களுக்குள் அந்த குழுவினர் ரகசியமாக ஒரு முடிவுக்கு வந்து விட
    வேண்டும். 425 டி.எம்.சி காலம் முடிந்து விட்டது. காவிரி நதிநீர் ஆணையத்தின்
    முதல்கட்ட அறிக்கை 205 டி.எம்.சிக்கு வந்தது. இறுதி தீர்ப்பின் படி 195 டி.எம்.சியாக
    குறைக்கப்பட்டது. இதை சுமார் 125 முதல் 150 டி.எம்.சி அளவுக்கு குறைத்துக்
    கொள்ள தமிழகம் முன்வர வேண்டும்.

    (3)முடிவு ஏற்பட்டவுடன், ரகசியமாக ஜெயலலிதா பெங்களூருவுக்கு சென்று,
    கர்நாடக முதல்வருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவேண்டும். அந்த
    நிலையில்தான் தொலைக்காட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    (4)தமிழகத்தின் நலனை அடகு வைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டை சந்திக்க
    வேண்டியிருக்கும். ஆனால் அடுத்த 50 வருடங்களுக்கு 150 டி.எம்.சி தண்ணீர்
    கண்டிப்பாக கிடைக்கும் என்ற ஒப்பந்தத்தை ஜெயலலிதா சாதனையாக
    பறைசாற்றிக் கொள்ளலாம்.

    (5)கர்நாடகத்தின் நலனை அடகு வைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டை கர்நாடக
    முதல்வர் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் 150 டி.எம்.சியாக குறைத்து கர்நாடக
    மக்களின் நலனை காப்பாற்றி விட்டதாகவும். நீதிமன்றங்களுக்கு இனி
    செல்லாமல் இரு மாநில மக்களும் நிம்மதியாக வாழலாம் என்றும் சாதனையாக
    பறைசாற்றிக் கொள்ளலாம்.

  9. வரைமுறையற்ற வகையில் விளைநிலங்கள் அதிகாரிகள்/ஆட்சியாளர்கள் துணையோடு வீட்டுமனைகளாகின்றன. விவசாயியை மதிக்காத நாடு நமது நாடு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இன்னொரு கசப்பான உண்மை நீர் நிலைகள் கழிப்பிடங்களாக மாற்றிய பெருமை தமிழருக்கு உண்டு. கர்நாடகத்தில் பொதுப்பணித்துறை நல்ல முறையில் வாய்க்கால்களையும் ஆறுகளையும் பராமரிக்கிறது. ஆனால் தமிழகப் பொது (பி)பணித்துறையின் லக்ஷணம் தெரிய வேண்டுமெனில் காவிரி மற்றும் தாமிர பரணி படுகைகளை பார்த்தால் தெரியும். நதியின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் கருவேல மரங்களும் களைகளும் செழித்து வளர்ந்துள்ளன. ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. இலவசங்களை வழங்குவதற்கு பதில் நீர்பாசனத் திட்டங்களை சரியானபடி கையாண்டால்(கையாடல் அல்ல) மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து வைத்து விவசாயம் செய்ய முடியும். சோழர்காலத்தில் வெட்டப்பட்டது வீராணம் எனும் வீரநாராயண ஏரி. அதன் உண்மையான கொள்ளளவு 100 அடிக்கு மேல் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் தற்போது 40 அடிக்குத்தான் சேமிக்க முடிகிறது. கரைகளை பலப்படுத்தி குறைந்த பட்சம் 80 அடிக்கு நீரை சேமிக்க முடிந்தால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது வீராணத்தை நிறைத்து கடைமடை விவசாயத்தை நன்முறையில் நடத்தலாம். அரசு மட்டும் இதனை செய்ய முடியாது. விவசாயிகளும் தங்கள் பங்களிப்பை உடலுழைப்பு மூலமாகவோ /சிரமதானமாகவோ அளித்து நீர்வளத்தை பெருக்கிகொள்ளலாம். கர்நாடகம் எந்த அளவுக்கு விவசாய நிலங்களை அதிகரித்துக் கொண்டு செல்கிறதோ அதைவிட பன்மடங்கு வேகமாக தமிழகம் விளைநிலங்களை வீடு மனைகள் ஆக்கி வருகிறது. எனவே நீர்பாசனத்துக்கு தண்ணீர் தரவேண்டாம் என்பது கர்நாடகத்தின் அபிப்ராயம். தமிழகத்தின் நீராதாரங்களை செம்மைப்படுத்தி,ஆக்ரமிப்புகளிலிருந்து ஏரி குளங்கள், ஆறுகளை மீட்டாலே போதும் கர்நாடகத்திடம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை.

  10. கட்டுரை ரொம்ப சுமார்… பிஜேபிக்கு பரிந்து பேச வேண்டிய நிர்பந்தமும்,நிதர்சனமும் நடுவெ தவிக்கிறது.

  11. //கர்நாடகம் எந்த அளவுக்கு விவசாய நிலங்களை அதிகரித்துக் கொண்டு செல்கிறதோ அதைவிட பன்மடங்கு வேகமாக தமிழகம் விளைநிலங்களை வீடு மனைகள் ஆக்கி வருகிறது. எனவே நீர்பாசனத்துக்கு தண்ணீர் தரவேண்டாம் என்பது கர்நாடகத்தின் அபிப்ராயம். தமிழகத்தின் நீராதாரங்களை செம்மைப்படுத்தி,ஆக்ரமிப்புகளிலிருந்து ஏரி குளங்கள், ஆறுகளை மீட்டாலே போதும் கர்நாடகத்திடம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை//
    கர்நாடகம் நீர் மேலாண்மை குறைபாடுகளுக்காக தமிழகத்தை தண்டிக்கும் உரிமை பெற்றுள்ளதா? மழையளவு போதுமானதில்லை.

  12. திரு ராம்கி எனது கருத்தை தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். கர்நாடகம் தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன் படுத்துகிறது. ஆனால் அதை கர்நாடகம் ஒத்துக்கொள்வதில்லை. காவிரியில் கர்நாடகத்தின் தேவைக்கு அதிகமாக நீர் வரத்து இருக்கும் போது பலமுறை கிருஷ்ண ராஜ சாகரை திறந்துவிட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு மூன்று முறை மேட்டுர் நிரம்பியது. மேட்டூருக்குப் பின் நீரை சேமிக்க பல தடுப்பணைகளை கட்டி இருக்கலாம், ஆனால் கழக அரசுகள் அதில் கவனம் செலுத்தவில்லை. , இந்த நிலையில் விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆவது ஒன்றும் உலகறியாத ரகசியம் இல்லை. எனவே கர்நாடகம் அடிப்படை மனிதபிமனமில்லாமல் நடந்துகொள்கிறது. மேலும் தமிழகத்துக்கு ஒருகாலத்தில் இந்தி பிரச்சனை, இலங்கைத்தமிழர் பிரச்சனை கர்நாடக அரசியல் வா(வி)யாதிகளுக்கு காவிரி எப்போதும் கைகொடுக்கும் விவகாரமாகவே இருக்கிறது. நம்மிடம் உள்ள குறைபாடுகளை சரிசெய்வது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும் . மேலும் கர்நாடக விவசாயிகள் அரசியல் சாராமல் தங்கள் தமிழக சகோதர விவசாயிகளும் வாழ வேண்டும் என்று நினைத்து இருக்கும் நீரை பகிர்ந்து வாழ்வோம் என எண்ணினால் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம். இதற்கு மேல் ஒருவர் உண்டு அவர்தான் ஸ்ரீமான் வருண பகவான். அவர் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தனது அபரிமிதமான கருணையை பொழிந்து கே ஆர் சாகர் ஆணை நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டால் காவிரிப்ரச்சனை தற்காலிகமாக மறக்கப்பட வழி உண்டு.

  13. // ஜனநாயகத்தில் எண்ணிக்கை மட்டுமே பலம். எந்த ஒரு பிரச்னைக்குமே தனித்தனியாகப் போராடுவது தமிழனின் தலையெழுத்து. காவிரிப் பிரச்னை தென்மாவட்ட மக்களை பெரிதாகப் பாதிப்பதில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னையின்போது காவிரி டெல்டா விவசாயிகள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

    அமராவதி அணை விவகாரம் இன்னும் கொங்குப்பகுதியைத் தாண்டி கொண்டு செல்லப்படவில்லை. பாலாறு விவகாரம் இன்னும் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரியாது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக பாதிக்கப்படுகின்றன. இதற்கு ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்வினை என்னவென்று பார்த்தால் எதுவுமில்லை. //

    தமிழகத்தில் ஒரு பிராந்திய மக்களின் பிரச்சினையை பற்றிய அறிவோ அடிப்படை பிரக்ஞையோ இன்னொரு பிராந்திய மக்களுக்கு கொஞ்சமும் இருக்காது. விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல மற்ற எந்த பகுதி மக்களின் பிரச்சினையும் சென்னை போன்ற மாநகரத்து வாசிகள் பெரும்பாலானோருக்குப் புரியாது. தென்மண்டலவாசிகளின் பிரச்சினைகள் மற்றவாசிகளுக்கு ஒரு பொருட்டல்ல. அவ்வளவு ஏன், நம்மில் எத்தனை பேரால் ஒரு நடுத்தர நகரத்தை தமிழகத்தின் வரைபடத்தில் தோராயமாகவாவது சுட்டிக்காட்ட இயலும் ?

    ஆக, நம்மை தாக்காதவரை அது நமது பிரச்சினை அல்ல என்ற நமது தோல் தடித்த போக்கே இதற்கு முழு முதல் காரணம்.

  14. நதிநீர் பிரச்சனையில் கர்நாடகத்தில் எல்லா கட்சியினரும், தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர். அவர்கள் உணர்வுகளுக்கு எதிராக எந்த கட்சி ஆட்சியையும் முடிவெடுக்க முடிவதில்லை. இந்த விஷயத்தில் யாரும் விதி விளக்கு அல்ல. வாக்கு வங்கி அரசியல் நடக்கும் வரை இதுபோல, சாய்கிற பக்கம் சாயும் செம்மறி ஆடுகளாகத்தான் எல்லா கட்சிகளும் இருக்கின்றன. பா.ஜ.க.வும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பிராந்திய கட்சிகள் இப்படி நடந்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம், காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா கட்சி போன்ற தேசிய கட்சிகளும் இதுபோன்ற குறுகிய நோக்கில் நடந்து கொண்டால், இந்திய சிதறுண்டு போகும் வாய்ப்பு அதிகம்.

  15. அன்பார்ந்த ஸ்ரீமான் சான்றோன்,

    தமிழகத்தின் நதி நீர் ப்ரச்சினைகளைப்பற்றி தொகுக்கப்பட்ட தெளிவான வ்யாசம். சிண்டுபிடி சண்டையில் பொழுது கழிக்கும் அரசியல் வாதிகள் ஏதேனும் தீர்வுக்கு முனைவார்களா என்பதைக் காலம் தான் சொல்லும்.

    நதிநீரை அண்டைய மாகாணங்களில் எப்படிப் பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்பதை தீர்வு செய்ய மாகாண கட்சிகளும் தேசிய கட்சிகளும் முனைந்தாக வேண்டும். ஆனால் துரத்ருஷ்ட வசமாக “கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை” என்ற படிக்கு தமிழகத்தின் மின்சாரத் தேவை, தமிழகத்தின் நீர்த்தேவை இவை பற்றியெல்லாம் எந்த அரசியல் கட்சியும் யோஜனை கூட செய்வதாகத் தெரியவில்லையே. டெஸோ மாநாடு, த்ராவிட மாநாடு, சினிமா காரர்களுக்கு பட்டம் கொடுத்தல் என முக்யமான விஷயங்கள் பல உள்ளனவே.

    நதி நீர் மட்டுமல்ல. எப்போது நதி நீர்ப் பங்கீடு என்பது தீர்வு செய்வதில் மிகவும் கஷ்டமான ஒரு ப்ரச்னை என்று ஆகிப்போனதோ, உண்மையில் தமிழகத்தில் கிட்டத்தட்ட போர்க்கால அடிப்படையில் இயற்கையாகக் கிடைக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் எப்படி சேமிப்பது அதை எப்படிப் பாதுகாப்பது என்பதை விக்ஞான பூர்வமாக யோஜித்து அதை செயல் படுத்த முனைய வேண்டும்.

    கோவில் தெப்பக்குளத்திலிருந்து, ஒவ்வொரு இடங்களிலும் உள்ள குளம், குட்டை, ஏரி (கண்மாய் / கம்மாய்) என்ற தமிழகத்தின் ஒவ்வொரு நீராதாரமும் தூர் எடுக்கப்பட்டு நீர் சேமிப்பு ஆதாரங்களாக ஆக்கப்பட வேண்டும்.

    தொண்டை மண்டலத்தைப் பற்றிச் சொல்லும் போது பாலாறு தவிர்த்து வேறு பல நதி நீர் ஆதாரங்கள் இல்லாத போதிலும் இதில் கருத்தும் கவனமும் உள்ள நம் முன்னோர்கள் ஆங்காங்கு கணக்கு வழக்கில்லாது குளம் குட்டைகளைக் கட்டியதாகவும் நாரை அறியும் நானூறு குளம் என்று ஒரு வசனம் அப்பகுதியில் புழங்கியதாகக் கேட்டிருக்கிறேன்.

    தமிழகத்தில் எத்தனை எத்தனை கண்மாய்களை தூர்த்து குடியிருப்பு காலனிகளாக மாற்றியுள்ளார்கள். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தையே கூட விட்டால் வணிக வளாகமாக மாற்றி விடுவார்களே.

    ஒரு பக்கம் நதி நீர்ப்பங்கீட்டுக்காக முயற்சிக்கையில் மறுபக்கம் தமிழகத்தின் அனைத்து நீராதாரங்களும் வேறு காரியத்திற்காக உபயோகப்படுத்தப்படாது நீருக்கு மட்டும் பயன் படுவதற்காக தமிழர் அனைவரும் போராடாவிட்டால் நமது அடுத்த சந்ததிகள் ஒரொரு சொட்டு தண்ணீருக்கும் பாடு பட வேண்டிய நிலை வரலாம்.

    ப்ருந்தாவனத்தில் தூர்ந்து போயுள்ள பலப்பல குளங்களை மீட்டெடுக்கும் கார்யத்தை அங்குள்ள ப்ரஜ்ஃப்வுண்டேஷன் என்ற ஸ்தாபனம் முன்னெடுத்து நடத்தி மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற கார்யத்தில் ஈடுபாடு உள்ள அன்பர்கள் Brajfoundation இணைய தளத்திற்குச் சென்று அவசியம் பார்வையிடுமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன். தமிழகத்திலும் இக்கார்யம் செய்யப்படவேண்டும். எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ அவ்வளவு நல்லது.

  16. // வரைமுறையற்ற வகையில் விளைநிலங்கள் அதிகாரிகள்/ஆட்சியாளர்கள் துணையோடு வீட்டுமனைகளாகின்றன. ……… தமிழகத்தின் நீராதாரங்களை செம்மைப்படுத்தி,ஆக்ரமிப்புகளிலிருந்து ஏரி குளங்கள், ஆறுகளை மீட்டாலே போதும் கர்நாடகத்திடம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. //

    திரு.ரங்கநாதன் அவர்களே, சிறப்பாக கூறியுள்ளீர்கள். முழுதும் ஒத்துப்போகிறேன்.

  17. 1 ) காவிரி நதி நீர் தாவாவில் திமுக ஆட்சிக்காலத்தில் 1970-71 ஆம் ஆண்டுகளில் கர்நாடகம் ஹேமாவதி அணைக்கட்டை கட்ட அனுமதி கேட்டபோது , சட்டசபையில் தீர்மானம் இயற்றி அனுமதி கொடுத்தவர்கள் திமுகவினர். அப்போது மறுத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது.அப்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் திரு கருத்திருமன் ( ஸ்தாபன காங்கிரஸ் ) சொன்ன கருத்துக்களை கேளாமல் தமிழகத்துக்கு துரோகம் செய்தார் திமுக முதல்வர்.

    2) சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கையும் இந்திராவின் பேச்சைக்கேட்டு வாபஸ் வாங்கிய துரோகிகள் திமுகவினர். அந்த வழக்கினை வாபஸ் வாங்க மறுத்திருந்தால் , உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அவசர நிலை காலத்துக்கு முன்பே கிடைத்திருக்கும்.

    3 ) காவிரி நதி நீர் பிரச்சினைக்கு முடிவு கட்ட , தீர்ப்பாயம் ( tribunal ) அமைப்பது ஒன்றே சிறந்த வழி என்று அந்நாளைய முதல்வர் திரு எம் ஜி ஆர் அவர்கள் கருத்து தெரிவித்த போது, திமுகவினர் அதை ஏற்காமல் காரசாரமாக விமர்சித்தனர். ஆனால் அந்த தீர்ப்பாயம் தான் இன்று ஓரளவு நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

    4) காவிரி நதி நீர் தீர்ப்பாயம் வழங்கிய இறுதி தீர்ப்பினை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட , 2007- ஆம் ஆண்டு முதல் மத்திய அரசில் இருக்கும் திமுகவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளால் தான் , தக்க பதில் கொடுக்க முடியாமல் , மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு அரசிதழில் தீர்ப்பினை வெளியிட நேர்ந்தது. மற்றபடி திமுகவின் சொம்புகள் ஆன காங்கிரஸ் காரர்களுக்கும் தமிழகத்திற்கு நியாயம் வழங்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை.

    காவிரி நதிநீர் பிரச்சினையில் திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டு குடும்ப கட்சிகளும் , தமிழகத்துக்கு துரோகம் மட்டுமே செய்துள்ளன. இவர்கள் இனிமேல் திருந்த வாய்ப்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *