எழுமின் விழிமின் – 29

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

 ***

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

தலைமை தாங்கும் திறமை

ஒழுக்கத்தின் தூய்மை:

ஒரு தலைவனிடம் ஒழுக்கமில்லாவிட்டால் அவனிடம் மக்களுக்கு பக்தி ஏற்பட முடியாது.  அவனிடம்  மாசுமறுவற்ற தூய்மை  இருக்குமாயின் மக்களுக்கு அவனிடம் நிரந்தரமான பக்தியும் நம்பிக்கையும் நிச்சயமாக இருக்கும்.

மக்களை இணைத்து வழி நடத்துகிற பிறவிக் குணம்:

Vivekanandaஒரு வாழ்வில் ஒருவன் தலைவனாக ஆக்கப்படுவதில்லை.  அதற்காகவே அவன் பிறவியெடுக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு தலைவனுக்குத் தோன்றக் கூடிய பிரச்னை இயக்கத்தை அமைப்பதோ, திட்டங்கள் போடுவதோ அல்ல.  பலவாறாகப் பிரிந்து வேறுபட்ட தன்மைகளுள்ள மக்களை, அவர்களனைவருக்கும் பொதுவான அநுதாப உணர்ச்சிகளை ஒட்டிய பாதையில் ஒன்றாக இணைத்து இட்டுச் செல்வது தான், ஒரு தலைவனுக்கு வரக் கூடிய பரீட்சை; உண்மையான சோதனையாகும்.

இந்தக் காரியத்தை அவன் தன்னையறியாமலேயே, சகஜமாகவே செய்ய வேண்டும்.  முயற்சி செய்து ஒருக்காலும் செய்ய முடியாது.

தொண்டும், அன்பும் தலைமை தாங்குவதற்கு முதற் தேவைகள்:

தலைமை தாங்குகிற பாத்திரத்தை, பொறுப்பை, ஏற்றுக் கொள்வது மிக மிகக் கஷ்டமான காரியமாகும்.  தலைமை தாங்குகிறவன் அடியார்க்கடியானாக (தாஸஸ்ய தாஸ:) இருக்க வேண்டும்.  ஆயிரக் கணக்கான உள்ளங்களுக்குத் தன் உள்ளத்தில் அவன் இடந்தர வேண்டும்.  தினையளவேனும் பொறாமையோ, சுயநலமோ அவனுக்கு இருக்கக் கூடாது. அப்பொழுது தான் அவனால் தலைவனாக ஆக முடியும்.  முதலாவதாகப் பிறவியின் மூலமும், பின் சுயநலமற்றிருப்பதன் மூலமாகவும், தலைவன் தோன்றுகிறான்.

படைத் தலைவனின் தீரம் என்றால் அது ஆணவ அகம்பாவமல்ல; ஆத்மத் தியாகமாகும்:

ஒருவன் எவ்வாறு தொண்டாற்ற வேண்டும்?  எப்படிப் புலன்களை அடக்க வேண்டும்?  இவற்றை ஒரு மனிதன் ஆரம்ப நிலையிலே தெரிந்து கொள்ள வேண்டும்.  அவனை அப்படித் தெரிந்துகொள்வதற்குத் தூண்டுவது படைவீரனின் அஞ்சா நெஞ்சம்தான்.  அது எங்கே இருக்கிறது?  இந்த அஞ்சா நெஞ்சமென்பது ஆணவ அகம்பாவ உணர்ச்சியல்ல,  அது ஆத்மத் தியாக உணர்ச்சியாகும்.

ஒரு மனிதன் மற்றவர்களது உள்ளங்களையும் வாழ்க்கையையும் கட்டியாண்டு, அவர்களுக்குக் கட்டளையிட்டு வழிகாட்டுவதற்கு முன்னால், அவன் தனக்கு வரக்கூடிய கட்டளைச் சொல்லைக் கேட்ட வினாடியே முன்னேறிச் செல்லவும்,  தன் உயிரை அர்ப்பணிக்கவும் ஆயத்தமாக இருந்து தீர வேண்டும்.  முதன் முதலில் ஒருவன் தன்னைத் தானே அர்ப்பணித்துத் தியாகம் செய்ய வேண்டும்.

எதிர்ப்பின் கடுமைத் தாக்குதலைத் தலைவன் தான் தாங்க வேண்டும்:

Indian Rebelionபாரதப் படைவீரன் போர்க்களத்தில் கோழைத்தனத்தை வெளிக்காட்டுகிற ரீதியிலா நடந்து கொள்கிறான்?  கிடையாது.  ஆனால் அவர்களுக்குத் தக்க தலைவர்கள் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டும்.  ஜெனரல் ஸ்ட்ராங் என்ற என் ஆங்கில நண்பர் ‘சிப்பாய்க் கலகம்’ என்ற  சுதந்திரப் போரின்போது பாரதத்திலிருந்தார்.  அந்நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல கதைகளை எனக்குக் கூறுவார்.

ஒருநாள் பேச்சுவாக்கில் அவரிடம் ” சிப்பாய்களிடம் போதுமான அளவில் துப்பாக்கிகளும் ரவைகளும் உணவுப் பொருள்களும் கைவசமிருந்தும், யுத்த அநுபவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்கள் இருந்தும் கூட ஏன் தோற்றுப் போனார்கள்?”  என்று வினவினேன்.

அவர் அதற்கு பதிலளிக்கையில் ” சிப்பாய்களின் தலைவர்கள் முதலில் தாங்கள் முன்னேறிச் சென்று போரிடுவதற்குப் பதிலாகப் பின்னணியில் பத்திரமான இடத்தில் இருந்து கொண்டு “வீரச் சிறுவர்களே! போரிடுங்கள்.  போரிடுங்கள் ” என்று கூச்சல் மட்டும் போட்டு வந்தார்கள்” என்று கூறினார்.

GuruGobindhஎனவே தலைவன் முதலில் முன் சென்று மரணத்தை எதிர் கொண்டழைத்தாலன்றி கீழதிகாரிகளும் படைவீரர்களும் முழு மனதுடன் போரிட மாட்டார்கள்.  எல்லாத் . துறைகளிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது.  ” தலைவனாக இருப்பவன் தனது தலையை அர்ப்பணம் செய்ய வேண்டும்”.

ஒரு லட்சியத்திற்கு உனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்ய உன்னால் முடிந்தால் அப்பொழுது தான் நீ தலைவனாக ஆக முடியும்.  தேவைப்படுகிற தியாகத்தைச் செய்யாமலே நாமெல்லோரும் தலைவராக ஆக விரும்புகிறோம்.  அதனால் நாம் செய்கிற காரியங்களெல்லாம் பலனளிக்காமல் சுழியாகின்றன.  நம்முடைய சொல்லுக்கு எவருமே செவி சாய்ப்பதில்லை.

தலைவன் பாரபட்சமற்றவனாகவும் தனிச் சார்பு அற்றவனாகவும் இருக்க வேண்டும்:

தீமைகளுக்கு முக்கியமான காரணம் ஓரவஞ்சனை காட்டுவதேயாகும்.  எல்லோரிடமும் காட்டுகிற அன்பை விட ஒருவரிடம் அதிகமாக அன்பு காட்டினால், வருங்காலத்தில் தொல்லைகளுக்கான விதைகளை விதைத்து விட்டீர்கள் என்பதை நிச்சயமாக நம்புங்கள்.

Shivajiஉயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரித்து வைத்து அதற்கு ஏற்றபடி அன்பு காட்டுகிறவன்  ஒரு நாளும் தலைவனாக  ஆக முடியாது.  எவருடைய அன்புக்கு முடிவில்லையோ, உயர்வு தாழ்வுகளைப் பற்றிச் சிந்திக்க எவர் ஒரு போதும் முனைவதில்லையோ, அவரது கால்களின் கீழ் உலகம் முழுவதும் வீழ்ந்து கிடக்கும்.

பல பேர் அநேகமாகத் தமது அன்பு முழுவதையும் என்மீது சொரிவதை நான் காண்கிறேன்.  ஆனால் அதற்குப் பதிலாக நான் எனது முழு அன்பையும் ஒரு தனி மனிதனுக்கும் அளித்துவிடக் கூடாது.  ஏனெனில் அப்படிச் செய்யும் அதே நாளில் எனது பணி முழுவதும் படுநாசமாகிவிடும்.  தனிமனிதச் சார்பில்லாத  எனது நோக்கை, எனது பார்வையைப் புரிந்து கொள்ளாத சிலர், அவர்கள் தமது முழு அன்பையும் அளித்ததற்குப் பதிலாக நானும் அளிப்பேன் என்று எதிர்பார்க்கலாம்.

முடிகிற அளவுக்கு அதிகமான பேர்களுடைய உற்சாகம் நிறைந்த அன்பு எனக்குக் கிடைக்க வேண்டும்.  இந்த வேலையைச் செய்வதற்கு அது அத்தியாவசியமாகும்.  அதே நேரத்தில் நான் முற்றிலும் தனிச்சார்பு அற்று வாழ வேண்டும்.  இல்லையேல் பொறாமையும்,  பூசலும்,  வேலை எல்லாவற்றையும் குலைத்து அழித்துவிடும்.  ஒரு தலைவன் எப்பொழுதுதும் தனிச் சார்பு அற்றவனாகவே இருந்து தீர வேண்டும்.

அநுதாபத்தாலும் சகிப்புத்தன்மையாலும் தலைவன் மக்களைக் கூட்டி இணைத்து மாற்றி உருவாக்க வேண்டும்:

netajiதனது மற்ற சகோதரர்களைப்பற்றி அவதூறு பேச யாராவது உன்னிடம் வந்தால் அந்தப் பேச்சைக் கேட்க அடியோடு மறுத்துவிடு.  அதைக் கேட்பது கூட பாபம்.  வருங்காலத் தொல்லைகளுக்கான கிருமி அதில் அடங்கியுள்ளது.

அத்துடன் எல்லோருடைய குற்றங் குறைகளையும் சகித்துக் கொள்.  லட்சக் கணக்கில் ஒருவன் குற்றம் புரிந்தாலும் அவற்றை மன்னித்துவிடு.  சுயநலமின்றி நீ எல்லோரையும் நேசிப்பாயானால்,  மெல்ல மெல்ல அவர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் நேசித்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள்:  பிறருடைய நலனை ஒட்டிச் சார்ந்து தான் தம்முடைய நலனும் உள்ளது என்று அவர்களுக்குப் பூரணமாகப் புரியும்பொழுது, அவர்களில் ஒவ்வொருவரும் பொறாமையைக் கைவிட்டு விடுவார்கள்.

ஏதாவதொரு காரியத்தை ஒருமிக்க, ஏகமனதாகச் செய்வது என்பது நமது தேசியப் பண்பிலேயே இன்று கிடையாது.  ஆகவே அந்த உணர்ச்சியை மிகுந்த ஜாக்கிரதையுடன் நீங்கள் துவங்கி வைத்துவிட்டு, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

‘குழந்தையைப் போல்’  வழி நடத்துபவனே தலைசிறந்த தலைவனாவான்:

Gandhijiபிறருடைய தலைமையில் வேலை செய்யும்போது சிலர்  மிகச் சிறப்பாக வேலை செய்கிறார்கள்.  ஒவ்வொருவருமே தலைமை தாங்குவதற்காகப்பிறக்கவில்லை.  இருப்பினும் குழந்தையைப் போலத் தலைமை தாங்கிச் செல்லுகிறவன் தான் உயர்ந்த  தலைவனாவான்.  குழந்தை வெளிப்பார்வைக்கு ஒவ்வொருவரையும் சார்ந்து, நம்பி வாழ்ந்தாலும் அது குடும்பத்தில் ராஜாவாக விளங்குகிறது.  குறைந்த பட்சம், என்னுடைய சிந்தனைப்படி அதுவே தான் தலைமையின் ரகசியம்.

தான் தலைமை தாங்குவதாக ஒருவன் சற்றேனும் விளம்பரப்படுத்திக் கொண்டால், அது பிறர் மனதில் பொறாமையை மூட்டி எல்லாவற்றையும் நாசமாக்கிவிடுகிறது.

***

உண்மையான ஆசிரியரின் பண்பு

ஆசிரியர் ஒளி பரப்புகிறவர்:

ஊழியர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களைவிட  பகவானிடம் தம்மை ஒப்படைத்து விட்ட மனிதர்கள் அதிகமான காரியங்களைச் செய்கிறார்கள்.  பிறருக்கு உபதேசம் பண்ணுகிறவர்களின் ஒருபெரும் படையைவிடத் தன்னை தானே பரிபூரணமாகத் தூய்மைப்படுத்திக் கொண்ட ஒரு மனிதன் அதிகமான சாதனைகளைச் சாதிக்கிறான்.  தூய்மை, மௌனம் இவற்றிலிருந்தே ஆற்றல் பிறக்கிறது,

ஆசிரியரின் தனிச் சிறப்பு :

ஒரு நண்பர் இங்கிலாந்திGuruSishyaல் ஒரு தடவை என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.  ” நாம் ஆசிரியருடைய தனிப்பட்ட வாழ்வின் தகுதியை எதற்காக நோக்க வேண்டும்?  அவர் கூறுவதைச் சீர்தூக்கிப் பார்த்து, அதை ஏற்க வேண்டியது தானே நம் வேலை?  என்று வினவினார்.  அது அப்படியல்ல.

ஒருவர் எனக்குச் சிறிது கதி சாஸ்திரத்தையோ (டைனமிக்ஸ்) ரசாயன சாஸ்திரத்தையோ அல்லது பௌதிக விஞ்ஞானத்தில் ஏதாவதொரு பகுதியையோ கற்பிக்க விரும்பினால், அவருடைய ஒழுக்கப் பண்பு எப்படியாவது இருக்கலாம்.  எப்படி இருந்தாலும் அந்நிலையில் கூட கதி சாஸ்திரத்தை  அல்லது வேறொரு விஞ்ஞானக் கலையை எனக்குக் கற்பிக்க அவரால் முடியும்.  ஏனெனில் பௌதிக விஞ்ஞான சாஸ்திரங்களுக்குத் தேவையான அறிவு வெறும் புத்தியையே சார்ந்ததாகும்.  அது மனிதனுடைய  புத்தி சக்தியைப் பொறுத்ததாகும்.  அந்தக் கலையில் மனிதனுக்கு அபாரமான அறிவு ஆற்றல் இருந்தும், அவனது ஆத்மா சிறிதளவு கூட வளர்ச்சியடையாமல் இருக்க முடியும்.

ஆனால் ஆத்மீக சாஸ்திரங்களைப் பொறுத்தவரை எந்தக் கட்டத்திலாயினும் சரி, ஆரம்ப நிலை முதல் முடிவு நிலை வரை, தூய்மையற்ற ஓர் ஆத்மாவிடம் எந்த விதமான ஆத்மிக ஒளியும் இருக்க முடியாது,  அப்படிப்பட்ட ஆத்மாவினால் என்ன கற்பிக்க முடியும்?  அதற்கு ஒன்றுமே தெரியாது.  ஆத்மிக சக்தி என்பது தூய்மை தான்.

சமயத்தைப் போதிக்கிற ஆசிரியர் எப்படிப்பட்டவர் என்பதை முதன்முதலாக நாம் கவனிக்க வேண்டும்.  பிறகு தான் அவருடைய சொல்லுக்கு மதிப்பு ஏற்படுகிறது.  ஏனெனில் அவர் சக்தியைப் பரப்புகிறவர் ஆவார்.  அவரிடம் ஆத்மீக சக்தி இராவிட்டால் அவர் எதைத் தான் பரப்ப முடியும்?

Hedgewarஓர் உதாரணம் :  வெப்பம் தருகிற வெப்பத் தகடு (ஹீட்டர்) சூடுள்ளதாக இருந்தால், உஷ்ண அலைகளை அதனால் பரப்ப முடியும்.  அப்படிச் சூடாக இல்லாவிட்டால், அதனால் சூடு பரப்ப முடியவே முடியாது.  சமய போதகர் நிலையும் அப்படியே தான்.  சமய போதகர் தனது மன அலைகளை மாணவனின் மனத்துக்கு அனுப்புகிறார்.  வெறுமனே மூளைச் சக்திகளை தூண்டிவிடுவதல்ல அவர் வேலை.  தம்மிடமிருக்கும் சக்தியைப் பாய்ச்சி மாற்றிக் கொடுப்பதுதான் ஆசிரியர் வேலை.  உண்மையான புலனுக்குத் தெரிகிற ஒரு சக்தி ஆசிரியரிடமிருந்து வெளிப்பட்டு மாணவனை அடைந்து, அங்கே அவனது மனத்தில் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது.  ஆகவே ஆசிரியர் உண்மையானவராக இருக்க வேண்டும் என்பது அவசியமான நிபந்தனையாகும்.

சில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்டிருக்கிறோம்.  மிக அற்புதமான தர்க்க  வாதங்களுடன் உபந்யாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம்.  எல்லாம் மறந்து போகிறது.  வேறு  சில சமயங்களில்  நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம்.  அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன.  நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகிவிடுகின்றன.  நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன.

தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது.  ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லா போதனைகளிலும் கொடுக்கல்,  வாங்கல் பொதிந்துள்ளது.  ஆசிரியர் கொடுக்கிறார்; மாணவன் வாங்குகிறான்.  ஆனால் ஒருவரிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும்; வாங்கிக் கொள்கிறவனும் பெறுவதற்கு ஆயத்தமாகத் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும்.

ஆசிரியருடைய வேலைப் பொறுப்பு:

(1)   மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி எனப்படும்.

(2)   மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதே சமயம் எனப்படும்.

ஆகவே இந்த இரண்டு விஷயங்களிலும் ஆசிரியர் செய்ய வேண்டிய ஒரே கடமை,  மாணவனின் பாதையிலுள்ள எல்லாத் தடைக் குறுக்கீடுகளையும் அகற்றுவதேயாகும்.  நான் எப்பொழுதும் கூறுவது போல, தடைகளை அகற்றிய பின்னர் மனிதனின் மீது கைவைக்க வேண்டாம்.  எல்லாம் சரியாகப் போய்விடும்.  பாதையைத் தங்கு தடையில்லாததாக்குவதே நமது கடமை.  இறைவன் மீதியிருப்பதைச் செய்து கொள்வான்.

எதிர்மறை எண்ணங்கள் மனிதனைப் பலவீனப்படுத்துகின்றன:

எதிர்மறை எண்ணங்கள் மனிதனைப் பலவீனப்படுததுகின்றன.  சில பெற்றோர் எப்பொழுது பார்த்தாலும் தமது பிள்ளைகளைப் படிக்கும்படியும், எழுதும்படியும் வற்புறுத்துவார்கள்: ” உனக்குப் படிப்பே வராது, நீ முட்டாள் ” என்று பலவாறாகத் திட்டுவார்கள்.  அதேபோல் எத்தனையோ பையன்கள் முட்டாள்களாகவே மாறிவிடுகிறதை நீங்கள் கண்டதில்லையா?

பையன்களிடம் அன்பாகப் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினால், நாளடைவில் அவர்கள் முன்னேறுவது திண்ணம்.  சிறுவர்களுக்கு எது நல்லதாகப் பொருந்துகிறதோ அதுவே உயர்ந்த தத்துவச் சிந்தனைத் துறையில் சிறுவர்களாக இருப்பவாகளுக்கும் பொருத்தமாகும்.  அவர்களுக்கு ஆக்கக் கருத்துக்களை அளித்து வந்தால் ஆண்மையுள்ளவர்களாக அவர்கள் வளர்ந்து, தம்மையே நம்பி வாழக் கற்றுக் கொள்வார்கள்.

மொழி,  இலக்கியம்,  கவிதை,ramakrishnar  கலை ஆகிய எல்லாவற்றிலுமே ஈடுபட்டுள்ள மனிதர்களின் சிந்தனையிலும் செயலிலும் உள்ள தவற்றை நாம் சுட்டிக்காட்டக் கூடாது.  அந்தந்தக் காரியங்களை எவ்வழியில் செய்தால் இப்பொழுதுள்ளதைவிட நல்ல முறையில் செய்து முடிக்க முடியும் என்பதையே சுட்டிக் காட்ட வேண்டும்.

குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஒரு மனிதனுடைய உணாச்சிகளைப் புண்படுத்துகிறது.  நாங்கள் உபயோகமற்ற உதவாக்கரையென்று கருதியவர்களைக் கூட, ஸ்ரீ ராமகிருஷ்ணர்  உற்சாகப்படுத்தி அதன் மூலம் அவர்களது வாழ்வின் பாதையையே திருப்பிவிட்ட முறையைக் கண்டிருக்கிறோம்.  அவர் போதனை செய்கிற முறையே அலாதியானது, அற்புதமானது.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

One Reply to “எழுமின் விழிமின் – 29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *