ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1

மீண்டும் கிளர்ந்தெழும் ஜாதிக் கலவரங்கள்…

தமிழகத்தில் அவ்வப்போது ஜாதிக் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.  பகுத்தறிவை வளர்ப்பதாக முழங்கிக்கொண்டு,  ஜாதி வேற்றுமையை ஒழிப்பதாக முழங்கிக்கொண்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திவரும் திராவிடக் கட்சிகளின் காலத்தில் தான் ஜாதி மிகவும் வெறுப்பூட்டும் கருவியாக மாறி இருக்கிறது. . இதன் காரணங்களை சமூக வளர்சசிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்குப் பதிலாக, வாக்குவங்கி அரசியலில் கட்சிகள் ஈடுபடுவதன் காரணமாகவே, ஏற்கனவே சமூகத்தில் புரையோடி இருக்கும் ஜாதிக் காழ்ப்புணர்வு மேலும் வேகமடைந்து வன்முறைகளை உருவாக்கி வருகிறது.  இதற்கு என்ன தீர்வு?

ஒரு நோய்க்கு மருந்து அளிக்க வேண்டுமானால், அந்த நோயை முதலில் கண்டறிந்தாக வேண்டும். அந்த நோய் தாக்கி இருப்பதை நோயாளி முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பிறகு நோய்க்கான மருந்தை நோயாளி உட்கொண்டாக வேண்டும்.  கண்ணை மூடிக்கொண்டு,  நோய் எதுவும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் நோயாளியால் அந்த நோய் பிறரையும் தொற்றலாம். அதற்கு முன்,  தடுப்பு நடவடிக்கைகளை பலவந்தமாகவேனும் செய்தாக வேண்டும். இப்போது தமிழகத்தில் நிலவும் எரிமலை நிலை, உடனடியாக மருந்து கொடுக்கப்பட வேண்டிய, அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தமாக வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி இருக்கிறது.

caste02  இதற்கு முக்கியமான ஆதாரம், கடந்த 60 நாட்களுக்குள் தமிழகத்தின் மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்  சம்பவங்கள். இந்தத் தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த மூன்று நிகழ்வுகளிலும் ஆதிக்க ஜாதியினரும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் மோதிக்கொண்டு ஒற்றுமை வேரில் அமிலத்தைப் பாய்ச்சி இருக்கின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய மதுரை, எஸ்.புளியகுளத்தைச் சேர்ந்த தேவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வந்த வாகனம் மீது கடந்த அக். 30ம் தேதி மதுரை சுற்றுச்சாலையில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 20க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்;  அதில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.  இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  கைதாகியுள்ள பலரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

தேவர் ஜெயந்தி (அக். 30) வந்தாலே தென் மாவட்டங்கள் கலவர பீதிக்குள் சிக்கிக் கொள்வது வழக்கமாகி இருக்கிறது. தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லும் தேவர் சமூக மக்கள் செல்லும் வழிகளில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். குறிப்பாக தேவர் சமூகத்தின் எதிரிகளாக தங்களை கூறிக்கொள்ளும் தேவேந்திர  குல வேளாளர் சமூகத்தினர். தேவர் ஜெயந்திக்குப் போட்டியாக, தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்ந்த அமைப்புகள் சார்பில், இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் (செப். 11) சமீப காலமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்திலும், காவல்துறையினர்  நெருப்பின் மீது நின்றுகொண்டு பணியாற்றுவது போலத்தான்  காணப்படுகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக ஜாதிய கட்டுமானத்தில், அடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது  தாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை என்பதை உணர்ந்து வருகிறார்கள்.  இது நல்ல விஷயம். ஆனால், அந்த சமுதாயத்திற்கு தலைமை தாங்கும் பலர், இதுநாள் வரை தாங்கள் அடைந்த அவமானங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்று தங்கள் மக்களைத் தூண்டி விடுகிறார்கள். இதற்கு, இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் காரணமாகிறார்கள். பசும்பொன் செல்லும் வழியில் தேவர் இன இளைஞர்கள் இடும் கோஷங்கள் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களைக் கொந்தளிக்கச் செய்கிறது. இருதரப்பும் உரசிக் கொள்ள பசும்பொன் குருபூஜை வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால் தான், தேவர் குருபூஜை என்றாலே தென் மாவட்டங்களில் காவல் துறையை குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ”தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்று சொன்ன முத்துராமலிங்கரை அவமானப்படுத்தும் விஷயம் இது.

தேவர் ஜெயந்திக்கு சென்றுவந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் அதில் 7 பேர் உயிரிழப்பதும், நாம் எந்தக் காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்றன. ஜாதிவெறி எந்த அளவுக்கு மக்களை சிறுமைப்படுத்தி இருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வு மிக மோசமான உதாரணம்.  இதை அடுத்து தென் மாவட்டங்களில் பதிலடி கலவரம் நடக்காமல் தடுக்க காவல்துறையினர் இன்னமும் பல இடங்களில் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதையும் மீறி சில இடங்களில் தாக்குதல்களும் நடந்துள்ளன. தேவர் சமூக மக்களிடையே வன்முறையைத் தூண்டிவிட்டதாக தேவர் இனக் கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதேபோல, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தருமபுரி மாவட்டத்தில் நடந்துள்ள தாக்குதலும்  நாம் அனைவரும் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம். தருமபுரி மாவட்டத்தில் நாயக்கன் கொட்டாய்  என்ற இடத்தில் நடந்த காதல் திருமணம் இரு சமூகங்களிடையே பெரும் மோதலை உருவாக்கி 288 வீடுகள் எரிக்கப்பட காரணமாகி இருக்கிறது.

caste04

நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் வன்னிய சமுகத்தைச் சேர்ந்த ஒருவரது மகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவரை கடந்த அக். 14 ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டார். இதை எதிர்த்து காவல்துறையில் புகார் செய்த பெண் வீட்டாரின் கவலை கண்டுகொள்ளப்படவில்லை. திருமணம் செய்துகொண்ட ஆண் திருமண வயதை எட்டாதவர் எனபது பெண் வீட்டாரின் குற்றச்சாட்டு. இந்நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் தந்தை மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள, வெறுப்பு ஆவேசம் பரவிக் கிடந்த நிலத்தில் குபீரென தீ பற்றிக்கொண்டது.

காதல் திருமணம் செய்த இளைஞரின் சொந்த ஊரான நத்தம் காலனியிலும், அதை அடுத்த அண்ணாநகர், கொண்டம்பட்டி பகுதிகளிலும், 2,000க்கு மேற்பட்ட ஆதிக்க ஜாதியினர் திரண்டு சென்று  நவ. 7 ம் தேதி காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அந்த நேரத்தில்  அங்கிருந்த ஆடவர் அனைவரும் தப்பி ஓடிவிட, தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் நிர்கதியாக சிக்கி கொண்டார்கள். கும்பலின் கோபம் வீடுகள் மீது திரும்பியதில் அப்பகுதிகளில் இருந்த 288 வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கின்றன; பல வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரமே குலைந்துபோகும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பல வீடுகளில் நகைகள், பணம் கொள்ளை போயிருக்கிறது. டிவி, பிரிட்ஜ், கட்டில் உள்பட அனைத்து உடைமைகளும் சாம்பலாக்கப்பட்டுள்ளன.  பல வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளன.

ஆண்கள் இல்லாத சமயத்தில், ஆதரவற்ற சூழலில் பெண்கள் அனைவரும் ஓடி ஒளிந்த நிலையில்,  ஆதிக்க ஜாதியினரின் ஆவேசம் எவ்வளவு கேவலமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தால் நமது முதுகெலும்பே சில்லிடுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண உதவி தற்போது அரசால் வழங்கப்பட்டுள்ளது. இரு குடும்பங்களிடையிலான மோதல் இரு சமூகங்களிடையிலான மோதலாக மாற்றம் பெற்றது எப்படி?  இப்போது இக்கலவரம் தொடர்பாக சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தண்டிக்கப்படலாம். ஆனால், இழந்த பொருள்களும் இழந்த நம்பிக்கையும் மீண்டும் திரும்புமா?

கேரளத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்தும் ‘லவ் ஜிகாத்’ போலவே தர்மபுரி பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள சிலர் வன்னிய சமூக பெண்களை திட்டமிட்டு காதலித்து ஏமாற்றுவதாக, தாக்கியவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பாமக தலைவர் ராமதாஸ் இதை வெளிப்படையாகவே கூறி இருக்கிறார். இதற்கு தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காக என்று இயங்கும்  சில இயக்கங்களும் காரணமாக உள்ளதை மறுக்க முடியாது. வன்னிய ஜாதியைச் சார்ந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே அவர்கள் தரப்பில்  அறைகூவல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பில் ‘இந்தக் கலவரத்துக்கே பாமக தான் காரணம்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். ராமதாசுடன் இணைந்து  பல அரசியல் நிகழ்வுகளை நடத்தியுள்ள திருமாவளவனே பாமக மீது (குறிப்பாக காடுவெட்டி  குரு மீது)தான் குற்றம் சாட்டுகிறார். மக்களிடையே பரப்பப்படும் வதந்திகள், அவர்களிடையே ஏற்கனவே சுமுக சூழல் இல்லாத நிலையில் பூதாகரமாக்கப்படுகின்றன. பரஸ்பர அவநம்பிக்கையும் வெறுப்பூட்டும் பிரசாரமும்  இணைந்து மக்களை காவு வாங்குகின்றன.  இங்கும்,  முந்தைய பல்லாண்டுகால ஆதிக்கத்தால்  பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உசுப்பேற்றும் கும்பலும், ஆதிக்கம் தளர்ந்துபோன வன்னியர்களை உசுப்பேற்றும் கும்பலும் தான் இதற்குக் காரணமாகின்றன.

ramdoss01

கடலூர் மாவட்டம், வடலூர் அருகே குறிஞ்சிப்பாடியில், பாச்சரம்பாளையத்தில்  நடந்துள்ள மற்றொரு மோதல், கலவரத்தின் வித்து எங்கிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆதிக்க ஜாதியைச் சார்ந்த ஒருவரது மகளிடம்  கையைப் பிடித்து வம்பு செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு இளைஞனால், அங்கு கலவரம்  பற்றிக் கொண்டிருக்கிறது. கடந்த நவ. 27ம் தேதி, குறிஞ்சிப்பாடியில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆறு வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. இந்தக் கலவரத்தில் ஏழு பேர் காயம் அடைந்திருக்கின்றனர். இச்சம்பவம்  இரு தரப்பிலும் சிலர் கைதாகி இருக்கின்றனர்.

இதே ஊரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பெரும் ஜாதிக் கலவரம் நடந்திருக்கிறது. அங்கு ஜாதிகளிடையே நிலவும்  வெறுப்புணர்வும் காழ்ப்புணர்வும் தான், ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதில் கொண்டுசென்று சேர்த்திருக்கிறது. இதை பெண்கள் மீதான வன்கொடுமையாகக்  கருதாமல் ஜாதீய தாக்குதலாக கருதியதால் தான், கலவரம் நடந்திருக்கிறது. ஆக ஒரு கலவரத்தை ஆரம்பிக்க எதிர்த்தரப்பு பெண்ணை கேவலப்படுத்தினால் போதும் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் கருதும் தமிழ்ப் பண்பாடு எந்த கீழ்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறது என்பது வெறும் துன்பியல் நிகழ்வல்ல. நமது பாரம்பரிய மதிப்பீடுகளை வெட்டிச் சாய்த்த திராவிட இயக்கக் கண்மணிகளுக்கு இதில் பெரும் பங்குண்டு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஜாதிய ஒற்றுமைக்கு அற்புத உதாரணங்களை உருவாக்கிய நாயன்மாரும் ஆழ்வாரும் ஜாதி வேறுபாடுகளை வென்று பக்திப்பயிர் வளர்த்த தமிழகத்தில், இன்று நிலவும் ஜாதி மோதல்கள், நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற கவலையை ஏற்படுத்துகின்றன. இதற்கு அடிப்படை, ஜாதியை மூலதனமாகக் கொண்டு வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகள்  தான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த சமூக வேற்றுமை உணர்வை அதிகரித்து சமூகத்தைப் பிளக்கும் சதிகளில் பிற சமயம் சார்ந்த கும்பல்கள் ஈடுபடுவதாகக்  கூறப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் அதற்கு வித்திடும் நம்மிடையே உள்ள ஜாதிய கொடுமைகளைப்  புறக்கணிக்க முடியாது. நம்மிடையே உள்ள வேற்றுமையைக் கொண்டுதான் நம்மிடையே சண்டை மூட்ட முடிகிறது. எனவே, நம்மிடையே உள்ள வேற்றுமையைக் களைவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். அதை விடுத்து புற சமயத்தவரின் சதிகள் புலப்படுவது கண்டு ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.

 

ஏனெனில் நோயை அறிந்தால் தான் அதனை குணமாக்க மருந்தளிக்க முடியும். இது வள்ளுவன் சொன்ன அமுதமொழி. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் அதே வள்ளுவர் தான் மருந்தையும் சொல்லிச் சென்றிருக்கிறார். நாட்டுநலனுக்காகப் பாடுபடும் சங்க குடும்ப இயக்கங்களுக்கு இவ்விஷயத்தில் அதிமுக்கியமான கடமைகள்  காத்திருக்கின்றன. ஏனெனில், வெறுப்பூட்டும் பிரசாரத்தை வெல்ல அன்பு ஒன்றே மருந்து. அதை வழங்குவதற்கான தகுதி எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. இதற்கு அற்புதமான உத்தப்புர உதாரணம் நம் முன் ஏற்கனவே உள்ளது.

 anticaste01

காதல் திருமணத்தால் ஜாதி வேற்றுமை ஒழியுமா?

திருமணம் என்பது இரு மனம் இணைவது. காதல் திருமணமோ, பெற்றோர் ஏற்பாட்டில் நடக்கும் திருமணமோ எதுவாயினும், அது அவ்விருவர் மட்டுமே தொடர்புடைய ஒரு புனிதமான விஷயம். இதை தங்கள் ஜாதீய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான கருவியாக ஒருவர் நினைக்கும்போதே தரம் தாழ்ந்துவிடுகிறார். அதேபோலத் தான்  காதல் திருமணத்தால் ஜாதி ஒழியும் என்ற சிந்தனையும். ஏனெனில் காதலர்கள் எவரும் சமூக மாற்றத்துக்காக காதலித்து ஏங்குவதில்லை.

காதல் திருமணங்கள் பல தோல்வியில் முடிவதையும் நாம் கண்டுவருகிறோம் (பெற்றோர் செய்துவைக்கும் திருமணங்களிலும் மணமுறிவு இல்லாமல் இல்லை. ஆனால், அங்கு ஒரு சமூகப் பாதுகாப்பும் குடும்பப் பாதுகாப்பும் இருக்கிறது என்பது உண்மை). காதலர்களில்  யாராவது ஒருவர் குடும்பத்தில் அனுசரித்துச் செல்வதால் தான் காதல் திருமணங்கள் நிலைக்கின்றன. அங்கு சென்று சமூகத்தைக் காக்கும் போராளிகளாக அவர்களை சித்தரிப்பது குடும்பத்தில் குறுக்குசால் ஓட்டும் வேலை.

காதல் திருமணங்களால் ஜாதி வேறுபாடுகள் ஒழியும் என்று சில சமூக சிந்தனையாளர்கள் கருதலாம். ஆனால், அது தானாகக் கனிந்த கனியாக அமைய வேண்டுமே அல்லாது, தடியால் அடிக்க வைத்து கனியவைப்பது இனிய சுவையைத் தராது. தவிர நமது சமூகம் குடும்பத்தை மையமாகக் கொண்டது. எனவே காதல் திருமணமே ஆயினும், குடும்ப நலம் கருதி செயல்படுவதும் அவசியம். இங்கு தான் நாயக்கன் கோட்டை ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவு என்று கூறிக்கொண்டு, இந்த விஷயத்தை மூடி மறைக்க்க கூடாது. எந்த சமூகமாயினும், காதலுக்காக பெற்றோரையே துறக்கும் ஆணோ, பெண்ணோ, நாளை நாட்டுக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது என்ன முடிவு எடுப்பார்கள்?

காதல் திருமணம் மட்டுமே ஜாதி வெறியைப் போக்கும் என்பதற்காக, அதை வலிந்து திணிப்பதோ, பெற்றோர் சம்மதமின்றி உடன்போக்கில் ஓடுவதோ பல சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தும். இதற்கு பல நேரடி உதாரணங்கள் உள்ளன. இப்போது விஷயம் அதுவல்ல. இருவரது காதல் திருமணம் இரு சமூகத்தையும் மேலும் பிளவு படுத்தி இருக்கிறது என்பது தான். இதற்கு அப்பகுதியில் நிலவும் பல சமூகக் காரணங்கள் இருக்கலாம். பல்லாண்டுகால ஆதிக்க மனப்பான்மையையும், அடிமைத்தனத்தையும் ஒரு திருமணத்தால் மாற்றிவிட முடியாது. அதற்கு நாம் இன்னமும் பல படிகள் முன்னேற வேண்டி இருக்கிறது.

(தொடரும்)

ஆதார செய்திகள்:

தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை (தமிழ் ஹிந்து கட்டுரை- 11.11.2012)
காதல் திருமணம் செய்த வாலிபருக்கு 19 வயதா? (தினத்தந்தி செய்தி- 23.11.2012)
கலப்புத் திருமணத்தால் கலவரம் (தினகரன் செய்தி – 08.11.2012)
மதுரையில் பெட்ரோல் குண்டுவீச்சு (தினமணி செய்தி- 05.11.2012)
மதுரை: பெட்ரோல் குடுவீசில் சாவு எண்ணிக்கை ஆறாக உயர்வு (தினமணி செய்தி – 06.11.2012)
இம்மானுவேல் சேகரன் நினைவுநாள்- போலீஸ் குவிப்பு (மாலை மலர் செய்தி- 09.09.2012)
குறிஞ்சிப்பாடியில் 8 வீடுகளுக்கு தீவைப்பு (தினத்தந்தி செய்தி – 28.11.2012)

21 Replies to “ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1”

  1. நல்லதொரு கட்டுரை. சேக்கிழான் ஐயாவுக்கு நன்றி.

    என் சொந்த அனுபவத்தினை இங்கு பகிர்கிறேன். நான் பிறந்ததுமுதலே ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதால் சாதி வேற்றுமை பாராட்டாமல் இருக்கப் பழகிக்கொண்ட ஒரு குடும்பச் சூழலில் வளர்ந்தேன்.நானும் நான் வாழ்ந்த பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் , சுவாமி விவேகானந்தர் கருத்துக்களைப் பரப்புவதில் ஆர்வம் செலுத்திவந்தேன். அதனால் பல கல்லூரி மாணவர்களின் தொடர்பு ஏற்பட்டது.அதில் ஒரு மாணவர் கல்லூரி செல்லாமல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை அவருடைய நண்பர் என்னிடம் அழைத்து வந்து ஆலோசனைகள் கூறச் சொன்னார். பல நாட்க‌ள் அந்த மாணவ‌ருடன் அமர்ந்து பேசி அவரை ஒரு சம நிலைக்குக் கொண்டு வந்தேன்.அவரிடம் ஒரு முறைகூட அவருடைய சாதியைக் கேட்கவில்லை.

    ஓர் அமர்வின் போது அவராகவே தான் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்று கூறினார்.நான் அதற்காக எந்த ஒரு உணர்ச்சியையும் காண்பிக்கவில்லை.
    மீண்டும் ஒரு நாள் தான் ஒரு சுகாதாரப் பணியாளர் சமூகத்தைச்சேர்ந்தவன் என்று கூறினார்.”விவாசாயத்திற்கு அடுத்தப் படியாக மக்கள் சேவை செய்யும் பணிகளில் முதன்மையானது சுகாதாரப்பணியே! அதனைச் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பெருமைப் படுங்கள்!” என்று கூறினேன்.

    “உங்களுக்கு சாதிய எண்ணம் ஒன்றும் இல்லையா?”என்று கேட்டார்.

    “உங்களைப் போலவே நான் எந்த சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற உள்ளுணர்வு எனக்கும் இருக்கிறது.ஆனால் என் சமூகம் உயர்ந்தது என்ற எண்ணமோ, அல்லது பிற சமூகம் தாழ்ந்தது என்ற எண்ணமோ என்னிடம் இல்லை”என்றேன்

    “சாதிக் கலப்புத் திருமணங்களால் சாதிய உணர்வுகளை ஒழித்துவிடலாம் அல்லவா?”என்று வினவினார்.

    “ஓரளவு அது சரியாக இருக்கலாம். ஆனால் சாதியை ஒழிக்க அதுவே முழுமையான தீர்வு ஆகாது”என்றேன்.

    “சாதி ஒழிய வேண்டுமா இல்லையா?”

    “சாதி ஒழியுமோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. சாதி வேற்றுமை பாராட்டுவதை ஒழிப்பது சாத்தியம் என்றே நினைக்கிறேன்.குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதே என் நிலைப்பாடு”என்றேன்.

    “நேரடியாகவே கேட்கிறேன். உங்கள் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுங்களேன் பார்க்கலாம்”

    நான் அதிர்ச்சி அடைந்து கூப்பாடு போடுவேன் என்பது அவருடைய எதிர்பார்ப்பு போலும். மாறாக நான் அமைதியாகக் கூறினேன்.

    “இதில் என் பெண்ணின் விருப்பம் முக்கியமில்லையா? உங்களை அவளுக்குப் பிடிக்க வேண்டாமா?சாதி ஒழிப்பு என்ற என் லட்சியக் கிறுக்குக்காக அவளை ஒரு விருப்பமில்லாத செயலை நான் செய்யச் சொல்ல முடியுமா? மேலும் நீங்கள் இன்னும் படிப்பை முடித்து பொருள் சம்பாதிக்கும் நிலைக்கே வரவில்லை. அதற்குள் இந்த‌ எண்ணம் எப்படித் தோன்றியது? சாதிக்குள்ளாகவே நீங்கள் திருமணம் செய்தாலும் ஒரு பெண்ணை வைத்துக் காப்பாற்றுவதற்கான பொருளாதாரப் பின்னணி இல்லாமல் திருமணம் பேசுவது எப்படி முறையாகும்?”

    பின்னர் நான் விசாரித்து அறிந்தது என்ன வென்றால் அவ‌ருடைய அந்தக் கேள்வி அவராகக் கேட்கவில்லை. சாதியை வைத்து சமூகத்தில் வயிற்றுப் பிழைப்புப் பிழைப்போரின் குரலாக அவர் ஒலித்து இருக்கிறார்.

  2. இரண்டு வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து, பிறக்கும் குழந்தைக்கு இருவர் ஜாதியில் எது தாழ்ந்த சாதியோ , அதையே குறிப்பிடுகிறார்கள் [ இட ஒதுக்கீடு சலுகைக்காக ] பிறகெப்படி அது சாதிமறுப்பு திருமணமாகும்?

    இன்று ராமதாஸ் மீது பாயும் திராவிட மற்றும் கம்யூனிச குப்பைகள் அவரவர் மகள்களை தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு திருமணம் செய்து தர தயாரா?

    கலப்பு திருமணங்களால் நிச்சயம் ஜாதி ஒழியாது…..புதிதாக பல குழப்பங்கள் தான் உருவாகும்….இறுதியில் அது மதமாற்ற கும்பல்களுக்கு சாதகமாகத்தான் முடியும்……

    பருவ வயது சலனங்களை , காதல் என்ற பெயரால் நியாயப்படுத்தும் , ஊக்குவிக்கும் சினிமாவும் தற்போது நடைபெறும் குழப்பங்களுக்கு ஒரு முக்கிய காரணம்……

    தருமபுரி சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்……சொந்த ஜாதியிலேயே கூட வருமானம் இல்லாதவனுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை…..இந்நிலையில் இருபத்தொரு வயது கூட ஆகாத , சுயமாக சம்பாதிக்காத அந்த தலித் இளைஞன் அந்த பெண்ணை காதலித்து விட்டால் உடனே அவனுக்கு அந்தப்பெண்ணை திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமா?அந்த பெண்ணை வைத்து அவன் எப்படி குடும்பம் நடத்துவான்?இதை கேட்டால் அவன் சாதி வெறியனா?இதில் சாதியை மட்டும் என் குறிப்பிட வேண்டும்?

    ஒரு பெண் வீட்டை விட்டு ஓடிப்போய் பிடித்தவனை திருமணம் செய்து கொள்கிறாள்……அது இவர்கள் பார்வையில் புரட்சி …சரி….அவளது இளைய சகோதர , சகோதரிகள் நிலைமை என்ன ? அவர்களுக்கு யார் பெண் கொடுப்பார்கள் அல்லது கட்டுவார்கள்? அவர்களும் யாரயாவது இழுத்துக்கொண்டு ஓட வேண்டுமா?

    அவரவர் வீட்டு பெண்களை பத்திரமாக வீட்டுக்குள் வைத்துக்கொண்டு , ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் அரைகுறை ஆடையில், நேரம் கேட்ட நேரத்தில் ரோட்டில் அலையவேண்டும் ,அதுதான் பெண்ணுரிமை என்று கோஷமிடும் [அரைகுறை ] பெண்ணுரிமை வாதிகளுக்கும் , இந்த சாதி ஒழிப்பு போராளிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை…..எல்லாம் போலிகள்…..சான்றோன்

  3. “காதல் திருமணம் செய்த வாலிபருக்கு 19 வயதா? (தினத்தந்தி செய்தி- 23.11.2012)”- மேலே உள்ள இந்த லிங்கை க்ளிக் செய்தால் தினத்தந்தி செய்திக்கு பதிலாக தினகரன் செய்தி – அதுவும் அடுத்த வரியில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஓபன் ஆகிறது. தயவு செய்து சரி செய்யுங்கள்.

  4. இன்று தமிழகத்தில் நடக்கும் 50 சதவிகித ஜாதிகலவரங்கள் மதம்மாறிய ஹிந்துக்களை குறிப்பாக தாழ்தப்பட்ட ஜாதியினரை கிருஸ்துவம் தூண்டிவிட்டு நடப்பதாகவே தோன்றுகிறது. தமிழகத்தில் மீண்டு மதமாற்றத்தை கட்டுபடுத்தும் சட்டம் அவசியம் தேவை

  5. பத்திரிகைகளில் வரும் சாதி சண்டை பற்றிய செய்திகள் அனைவருக்கும் கவலைகள் உருவாக்குவதாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று , சேக்கிழான் அவர்கள் தெளிவாக ஆராய்ந்துள்ளார். அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    ” உன் குழந்தை அந்த சாதிப்பெண் வயிற்றில் தான் பிறக்கவேண்டும். நம் சாதியை சேர்ந்த ஒவ்வொரு ஆண்மகன் மீதும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வழக்குகளாவது பதிவாகியிருக்கவேண்டும் என்று ஒரு சாதி கட்சி தலைவர் பேசிய பேச்சினை , பத்திரிகை ஆதாரத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் முன் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அதற்கு மதுரை மாவட்ட தற்போதைய ஆட்சியர் , நான் அப்போது இங்கு கலெக்டராக இல்லை. வேறு யாரோ இருந்தனர் என்று சொன்னதாகவும் தமிழ் வாரமிருமுறை பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

    ஜாதிகளால் சண்டை இல்லை. ஜாதிகளைவைத்து அரசியல் செய்யும் பொறுப்பற்ற சாதிக்கட்சி அரசியல் தலைவர்களின் வக்கிரப்பேச்சாலும், அறிவற்ற அறிக்கைகளாலும் தான் தமிழகத்தில் தேவையற்ற அமைதிக்குலைவு ஏற்படுகிறது.

    சாதி அடிப்படையில் அரசு வேலைகளில் இடம் ஒதுக்கீடு செய்து தராமல், கலப்பு திருமணம் செய்து கொண்டோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அரசு வேலை என்று சட்டம் கொண்டு வந்தால், சாதிகளும், சாதிக்கட்சிகளும் பத்து வருடத்துக்குள் மண்டையை போட்டுவிடும். திராவிட திருட்டு கழகங்கள் தமிழக அரசியலில் தலை தூக்கி இருக்கும் வரை, தமிழகம் முன்னேறுவது சிரமம். சொர்க்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் கடவுளோ அல்லது எங்கும் நிறைந்தவர் என்று சொல்லப்படும் கடவுளோ, நம் தமிழகத்தை மோசடி திராவிட இயக்கங்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

  6. நன்றி. அரசு சரியான முயற்சி எடுத்து தவறு செய்தவர்களை தண்டித்து சட்டம் சரியான படி செயல் படும் என்று காட்டினாலே அனைவரும் சரியாக நடக்க முயல்வார்கள்.
    எதற்க்கெடுத்தாலும் போராட்டம் ஆர்பாட்டம் செய்து அரசின் கவனத்தை கவரலாம் என்று நினைப்பவர்கள் எண்ணத்தை பொய்யாக்கி அந்தந்தப் பகுதி அரசு அதிகாரிகளை சரியாக செயல்படச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் முதல்வர் அந்தப் பகுதிகளுக்கு சென்று ,மக்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்.
    அதிகாரிகளின் மெத்தனத்திற்கு இடம் கொடுத்து விட்டு பின்பு யோசனை செய்வதில் அர்த்தமில்லை.
    கீழ்மட்டத்தில் ஊழல் செய்து பணம் சம்பாத்திப்பதில் மட்டும் கவனமாக இருக்கும் அலுவலர்களை தக்க சமயத்தில் கண்டிக்க வேண்டும்.
    அப்போது தான் தமிழகம் சரியாக முடியும்.
    ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது குஜராத்தைப் பற்றி பல வெளி உலகத்திற்குத் தெரியாத அல்லது தெரிந்தும் பத்திரிகைகளில் வராத செய்தி போல சொன்னார், மக்களை நல்வழிப் படுத்த அனைவருக்கும் சரியான கல்வி கிடைக்க வேண்டும்.
    இனியும் இப்போதாவது தமிழக அரசு செயல் படாவிட்டால் பெரிய அளவில் கலவரங்களைத் தூண்டி விட்டு அரசுக்குக் கேட்ட பெயர் ஏற்படுத்தி தாங்கள் அரசியலில் குளிர் காய பல பேர்கள் காத்திருக்கிறார்கள்.
    நன்றி.வாழ்க பாரதம்!

  7. காதல் திருமணங்களால் ஜாதி ஒழியாது. ஏனெனில் பிறந்த குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் ஜாதியை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கவேண்டும் என்று திராவிட இயக்கங்கள் மோசடி வேலை செய்து ஜாதிகள் மேலும் வளர வழி வகுத்தன. இன்றைக்கு ஜாதி சங்கங்கள் மக்களை மிரட்டுவது கண்கூடு. என்ன காரணம் ? ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு கொள்கை தான். இதனை எப்படி ஜாதி ஒழிப்புக்கான கருவியாக இந்த அரசியல்வாதிகள் பார்த்தார்கள் என்று புரியவில்லை .

    ஒரு சாதியை சேர்ந்தவர் வேற்று சாதி பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் புரிந்தால் பிறக்கும் குழந்தைக்கு சாதியற்றவர் என்றுதான் சான்றிதழ் வழங்கவேண்டும். அரசு வேலைகளில் சாதியற்றவர்களுக்கே நூறு சதவீத இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டுவந்துவிட்டால் , இந்தியா முழுவதும் ஜாதிகள் நூறு சதவீதம் ஒழிந்து, ஜாதிச்சங்கங்களும் அழிந்துவிடும். திக, திமுக, மற்றும் ஜாதி அரசியல் செய்து பிழைக்கும் சில மோசடி அரசியல் கட்சிகள் சூரியனை கண்ட பனி போல காணாமல் போய்விடும். நமது அரசியல் சட்டத்திலிருந்து இடஒதுக்கீடு விடை பெறும்
    நாளில், ஜாதிகள் அனைத்தும் தலைமறைவு ஆகிவிடும்.

    நமது அரசியல் அமைப்புத்தான் ஜாதிகளையும், ஜாதி சங்கங்களையும் வளர்க்கும் ஒரு ஆவணமாக உள்ளது.

  8. //காதலுக்காக பெற்றோரையே துறக்கும் ஆணோ, பெண்ணோ, நாளை நாட்டுக்கு ஒரு ஆபத்து என்று வரும்போது என்ன முடிவு எடுப்பார்கள்?//

    சிறிதும் பொருத்தமற்ற ஒரு ஒப்பீடு.நாட்டிற்கு எதிரிகளால் ஆபத்து வருவது உண்மை. ஆணோ பெண்ணோ தனக்கு பிடித்தவர் ஒருவரை விரும்புவதால் பெற்றோருக்கு என்ன ஆபத்து வந்தது?
    ஹிந்துஸ்தானி தமிழ் பிரதேசங்களில் ஜாதி வெறி இருக்கிறதே ,தமிழ் பிரிவினை பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவு நிலவுகிறதே என்று கவலைபட்டால் காதலை நாட்டிற்க்கு வரும் ஆபத்தோடு ஒப்பிட்டு எதிர்க்கும் மனநிலையும் நிலவுகிறதே! ஜாதி வேறுபாடுகள் இலங்கை தமிழர்களிடமும் உண்டு. ஆனால் ஹிந்துஸ்தானில் தமிழர்களிடம் உள்ளது போல் ஜாதி வெறியாக, கொலைவெறியாக, வீடுகளை கொள்ளை அடித்து தீவைக்கும் அளவிற்கும், ஜாதி பெயர்களை தங்கள் பெயரில் பின்னால் சூட்டி பெருமைபடும் அளவிற்க்கும் இல்லை. பெரியார் என்றால் யார் என்றே பெரும்பான்மையோருக்கு இலங்கையில் தெரியாது.திராவிட வாடை இல்லாததினாலேயே இலங்கையில் ஜாதி வேறுபாடுகள் குறைவாக உள்ளன.

  9. அத்விகா அவர்களுக்கு நன்றி.

    ஆதாரச் செய்திகளின் இணைப்புகளை அளித்தபோது பிழை நேர்ந்திருக்கிறது. இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. எனினும், அதில் குறிப்பிட்ட செய்தியின் இணைப்பு, நிரல்படி கிடைப்பதில்லை. அநேகமாக, தினத்தந்தி, தினமணி செய்திகளின் தொகுப்புகள் காலாவதி ஆகி இருக்கக் கூடும்.

    அன்பர் சிறிலங்கா ஹிந்து,
    //சிறிதும் பொருத்தமற்ற ஒரு ஒப்பீடு. நாட்டிற்கு எதிரிகளால் ஆபத்து வருவது உண்மை. ஆணோ பெண்ணோ தனக்கு பிடித்தவர் ஒருவரை விரும்புவதால் பெற்றோருக்கு என்ன ஆபத்து வந்தது?//
    இக்கருத்தை மறுக்கிறேன்.
    பல்லாண்டு காலம் பாடுபட்டு பாசம் காட்டி வளர்த்த பெற்றோரை, அவர்களது கண்ணீரைப் பொருட்படுத்தாமல் உதறிச் செல்லும் இளைஞனோ, இளைஞியோ, நாளை சொந்தநலன் பெரிதா நாட்டுநலன் பெரிதா என்று வரும்போது எதைத் தேர்வு செய்வார் என்பது விடை தெரியாத கேள்வி அல்ல. மடியில் இட்டு வளர்த்த தாய் தந்தையரையே புறக்கணிக்கும் இவர்களின் பிள்ளைகள் நாளை என்ன ஆவார்கள்? தாய்நாடு, தந்தையர் நாடு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாகவே எஞ்சுமா? இதுவே என் கேள்வி. மற்றபடி, ஸ்ரீ லங்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேறுபாடு குறித்த உங்கள் அவதானிப்பை நானும் ஏற்கிறேன்.

    -சேக்கிழான்

  10. ஜாதிப் பூசல்கள் பல ஆண்டுகளாக இருந்துவரும் ஒன்றுதான். ஓரிரு சம்பவங்கள் பெரிதானதற்குக் காரணம் அவ்விரு சமூகமுமே பலம் பொருந்தியதாகவும், தங்களுக்கென்று ஒரு ஆதரவு சக்தியைப் பெருக்கி வைத்திருந்ததுமே காரணம். சமூகத்தில் ஜாதிப் பிரிவுகள் அவரவர் செய்துவந்த தொழிலை அடிப்படையாக வைத்துத் தோன்றின. பின்னர் அவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் அந்தந்த தொழில் புரிவோர் தமக்குள் கொண்டும், கொடுத்தும், தங்களையொரு தனி அடையாளமாக ஆக்கிக் கொண்டார்கள். எப்படி தொழிலில் ஏற்றத் தாழ்வி இல்லையோ அதுபோலவே தொழில் அடிப்படையில் பிரிந்து ஜாதிகளிலும் ஏற்றத் தாழ்வு கிடையாது. ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் இங்கு நுழைந்து நமது சமூக அமைப்பில் தலையிட்டுச் சிலரைத் தங்கள் வசம் ஆக்கிக்கொள்ள அவர்களது ஆங்கில பழக்க வழக்கங்கள், மெக்காலே கல்வி, அரசில் பதவிகள் என்று கொடுக்க முன்வந்தபோது அவற்றை அனுபவித்தவர்கள் மீது காழ்ப்பு கொண்டு மற்றவர்கள் பேசியதுதான் ஜாதிய பிரிவினை வாதம். இது 1916இல் தொடங்கி நடந்தபோது பெரும்பாலான தாக்குதல்களுக்கு ஆளான பிரிவினர் அடிப்படையில் பலவீனமானர்கள்; எதிர் தாக்குதலுக்குத் துணியாதவர்கள். ஆகவே அந்த சமூகத்தைத் தாக்கினால் நல்ல பலன் கிடைப்பதை ஒரு சாரார் தங்களது அரசியல், சமூக ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு வந்தனர். பலவீனப் பிரிவினரின் பெண்களை மற்றவர்கள் அபகரித்துச் செல்லும் வரை அது புரட்சியாகவும் ஜாதி ஒழிப்பாகவும் பேசப்பட்டது. நிலைமை மாறி இப்போது பலம் பொருந்திய இரு சாராருக்கிடையே இந்த பிரச்சினை தலையெடுக்கும்போது, விளைவுகளும் மாறிவிட்டது. ஆதாயம் தேடி வசதியுள்ள குடும்பத்துப் பெண்களை காதல் திருமணம் என்ற பெயரில் உறவுகொண்டு, பின்னர் அந்தப் பெண்களின் சொத்துக்களையோ, பிணைத் தொகையையோ கேட்டு ஆதாயம் பெருவதை பலம் பொருந்திய மறு பிரிவினர் இப்போது கடுமையாக ஆட்சேபிக்கின்றனர். கொங்கு நாட்டுப் பகுதிகளிலிருந்தும் வேறு சில பிரிவுகளிலிருந்தும் இதுபோன்ற செய்திகள் வருகின்றன. ஜாதி ஒழிப்பு என்பது மனமாற்றத்தால் ஏற்படக்கூடியதொன்று, அதனை தடிகொண்டு தாக்கியோ, குறுக்கு வழியிலோ கொண்டுவருவதாகச் சொல்வது பேதமை. இந்த சிக்கலான பிரச்சினையை அறிவு பூர்வமாகச் சிந்தித்து முடிவெடுப்பதே விவேகமானது. யாரும் யாரையும் குற்றம் சொல்லிக் கொண்டேயிருப்பதால் உரிய முடிவு கிடைக்காது. கல்வி அறிவும், எல்லா சமூகத்தவரையும் அன்போடும், நேர்மையோடும் நேசித்து நடப்பதால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும். கசப்புணர்வும், காழ்ப்புணர்ச்சியும், ஏச்சும் பேச்சும் இதற்கு தீர்வாகாது. அது அரசியல் ஆதாயத்துக்கு வேண்டுமானால் பயன்படும், அமைதியான சகஜ வாழ்வுக்குப் பயன்படாது.

  11. கல்வி அறிவு வளர்ந்தால் ஜாதி ஒழியும் என்றனர். ஆனால் ஜாதிக் கட்சி தலைவர்களோ மருத்துவராகவோ வழக்கறிஞர் ஆகவோ அல்லது பட்டப் படிப்பு பெற்றவராகவோ உள்ளனர். மன மாற்றம் மட்டும் ஜாதி வேற்றுமையை பாராட்டாது .பொருளாதார வளர்ச்சி சாதிவேற்றுமையை ஓரளவுக்கு கட்டுபடுத்தும். எனக்குத் தெரிந்த பல பிராமணர்கள் தலித்துகளை மனம் புரிந்துள்ளனர்.(தங்கள் குடும்ப எதிர்ப்பினை மீறி). காரணம் கணவன் மனைவி இருவரும் மத்திய மாநில அரசு அதிகாரிகள். அவர்களுக்குள் பொருளாதார பதவி மற்றும் சமூக அந்தஸ்து இவற்றில் சமத்துவம் வந்தவிட்டதால் ஜாதி பின்னுக்கு போய்விட்டது. இதே நபர்கள் கிராமத்தில் இருக்கும் தலித் பெண்ணையோ அல்லது சாதாரண வேலையில் இருக்கும் பிராமணரையோ மணம் புரிவார்களா என்பது சந்தேகமே. ஒருமுறை ஒரு கட்சித் தலைவர் (தலித்துக்களின் பாதுகாவலன் என்று முழக்கமிடுபவர்) நம் இன ஆண்கள் தங்கள் வாரிசுகளை பார்ப்பனப் பெண்களின் மூலம் பெற்று எடுக்கவேண்டும் என்று பேசினார். அதை கேட்டு பார்ப்பனர் யாரும் தலித்துக்களின் வீட்டைக் கொளுத்தவில்லை. உயிர் பலி வாங்கவில்லை. இதனை வேறு ஒரு ஜாதி அமைப்பைகுறிப்பிட்டு வீர உரை ஆற்றியிருந்தால் நடந்திருப்பதே வேறு. பகுத்தறிவுப் பகலவனின் வழிவந்தவர்கள் பொருளாதாரத்தின் வளத்தோடு இருக்கும் குடும்பத்தில்தான் பெண் எடுக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.ஆனால் வீரமணியோ பார்ப்பன ஆதிக்கத்தை மட்டும் எதிர்த்து முழக்கமிடுவார். தேவர் மற்றும் வன்னியர் அமைப்புகளிடம் வாயை திறக்கமாட்டார். அவ்வாறு திறந்தால் திக மற்றும் பெதிக போன்ற திராவிட மாயை யில் தோன்றிய லெட்டெர் பேட் கட்சிகள் வியாபாரம் நடத்த முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. உலகம் உள்ளவரை ஜாதிகள் இருக்கும். அதைவைத்து பிழைப்பு நடத்தும் கட்சிகள் ஒழிந்தால் தான் கலவரம் ஏதும் உண்டாகாது.

  12. அன்பார்ந்த ஸ்ரீ சேக்கிழான், பச்சை நிறத்தில் வெளிப்படையான உண்மைகளை நறுக்கென்று சொல்லியதற்கு நன்றி.

    முற்போக்கு என்று கூப்பாடு போட்டு கேலிக்கூத்தடிப்பவர்களுக்கும் ஹிந்து சமூஹ நலனில் அக்கரை கொண்டவருக்கும் உள்ள முக்யமான வேறுபாடு சமூஹத்தின் கடைசீ அடித்தளம் எது என்பது. (போலி) முற்போக்காளருக்கு சமூஹத்தின் கடைசீ அடித்தளம் ஒரு தனிநபர் ஆண் அல்லது தனிநபர் பெண். ஹிந்து சமூஹ நலனில் அக்கரை கொண்ட உண்மையான முற்போக்காளருக்கு சமூஹத்தின் கடைசீ அடித்தளம் ஒரு குடும்பம்.

    சமூஹமும் ஒட்டு மொத்த தேசமும் செழிப்பாகவும் உறுதியாகவும் விளங்க உறுதியான கட்டுக்கோப்பான குடும்பங்களைப் பேணுவது மிக அவசியம்.

    பேசும் விஷயம் சார்ந்த ஒரு மாற்று சிந்தனை. மாறி வரும் உலகில் ஜாதிகளிடையே உறவு முறைகள் சாத்தியம் தான். அது இணக்கத்தின் அடிப்படையில் இரு தனி நபர்களுக்கு இடையில் இரு குடும்பங்களுக்கு இடையில் குடும்ப உறவுகளை பலப்படுத்தும் படி அமைகையில் அது ஜாதி இணக்கத்திருமணம். இது போன்ற திருமணங்களில் வாழ்க ஒழிக கோஷங்களுக்கு இடமில்லை. இரு வெவ்வேறு குடும்பங்களின் அன்பு பிணைப்பு மட்டும் தான் விஞ்சி நிற்கும். வெறுப்பு அல்லது சம்சயங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும் இணக்கமான திருமணங்களில் திருமணம் என்ற முடிவான பேச்சினை உறவுகள் எட்டும்போது பொறுப்புணர்வும் பந்தங்களும் முடிவில் வெல்கின்றன.

    ஜாதி ஒழிப்புத் திருமணம் என்ற கோஷம் சார்ந்த திருமணத்தில் ஜாதி ஒழிகிறதா இல்லையா என்ற வினாவிற்கு பதில் அளிக்குமுன் இரு குடும்பங்களில் அப்படிப்பட்ட திருமணத்திற்குப் பின் அமைதி என்பது ஒழிந்ததா இல்லையா என்ற வினாவிற்கு பதில் அளிக்க வேண்டும். அமைதி ஒழிந்தது என்றால் ஜாதி ஒழிப்பு என்பது வெறும் கோஷம் தான். திருமணத்தால் குடும்ப அமைதி ஒழிந்தால் முழக்கமிடப்பட்ட ஜாதி ஒழிப்புத் திருமணம் ஜாதியை ஒழிப்பதற்கு மாறாக ஜாதிவெறி என்ற நெருப்பில் எண்ணையை வார்ப்பதாகத் தான் அமையும்.

    மிக அதிகமாகத் தகிக்கும் உண்மை. தானாகக் கனிய வேண்டிய கனியைத் தடியால் அடித்துக் கனிய வைக்கும் விஷயமான முழக்கமிடப்படும் ஜாதி ஒழிப்புத் திருமணம்.

  13. //ஒரு நோய்க்கு மருந்து அளிக்க வேண்டுமானால், அந்த நோயை முதலில் கண்டறிந்தாக வேண்டும். அந்த நோய் தாக்கி இருப்பதை நோயாளி முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பிறகு நோய்க்கான மருந்தை நோயாளி உட்கொண்டாக வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு, நோய் எதுவும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் நோயாளியால் அந்த நோய் பிறரையும் தொற்றலாம்.//

    சரியான வார்த்தை. நீ நெற்றியில் பிறந்தாய், நீ வயிற்றில் பிறந்தாய், நீ காலில் பிறந்தாய் என்று மனிதர்களை கூறு போட்டு அந்த நூல்களுக்கு இன்று வரை மதிப்பும் கொடுத்து வந்தால் என்று சாதி ஒழியும்? எனவே இது போன்று கடவுளின் பெயரால் மனிதர்களை பிரித்த ஸ்மிருதிகளை ஒழித்தாலே சாதி ஒழியும். இல்லை என்றால் இன்னும் 100 வருடம் ஆனாலும் இதே வெட்டு குத்துதான்.

  14. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.

  15. //சரியான வார்த்தை. நீ நெற்றியில் பிறந்தாய், நீ வயிற்றில் பிறந்தாய், நீ காலில் பிறந்தாய் என்று மனிதர்களை கூறு போட்டு அந்த நூல்களுக்கு இன்று வரை மதிப்பும் கொடுத்து வந்தால் என்று சாதி ஒழியும்? எனவே இது போன்று கடவுளின் பெயரால் மனிதர்களை பிரித்த ஸ்மிருதிகளை ஒழித்தாலே சாதி ஒழியும். இல்லை என்றால் இன்னும் 100 வருடம் ஆனாலும் இதே வெட்டு குத்துதான்.//

    சுவனப்ரியன் அவர்கள் கவனத்துக்கு,

    ஸ்மிருதிகளை ஒழித்தால் சாதி ஒழியும் என்றால் ஸ்மிருதிகளே இல்லாத ஆப்ரஹாமிய மதங்கள் பின்பற்றப்படும் நாடுகளில் தினம் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்கிறதே? நூற்றுக் கணக்கானவர் கொல்லப்படுகின்றனரே! சாதிவெறி என்பது ஸ்மிருதிகளை வைத்து வரவில்லை. ஸ்மிருதிகளை படித்தவர் யாரும் வெறியாட்டம் ஆடவில்லை. முகத்தில்,வயிற்றில், காலில் பிறந்தாய் என்பதெல்லாம் ஒரு கற்பனை என்று கூச்சல் போடும் கும்பல்தான் இதுவே உண்மை என்று நாடகமாடுகிறது.

    தனிமனித விருப்பு வெறுப்புகளே அறிவற்ற தலைவர்களால் தூண்டப்பட்டு சாதி மோதல்களுக்கு வழி வகுக்கிறது. அன்பு வழி தான் எங்கள் மதம் என்று சொல்லிக்கொண்டு ஃபத்வா வெளியிடும் பிற்போக்கு மதகுருக்களினால் எவ்வாறு சமூக நல்லிணக்கம் கெடுகிறதோ, அதேபோல்தான் இதுவும்.

    எனவே, இந்து மதம் எல்லாவற்றுக்கும் ‘ஸ்மிருதி’யைக் கட்டிக்கொண்டு அழவில்லை. ஆனால் நவீன வசதிகளை அனுபவித்துக்கொண்டு பெண்கள் சுதந்திரம், வேலைவாய்ப்பு என்று இன்ன பிற வரும்போது எங்கள் மார்க்கத்தில் இது அனுமதிக்கப்படவில்லை என்று பின்னோக்கிச் செல்லும் போக்கை மாற்றிக்கொள்வதை விடுங்கள் என்று ஆப்ரஹாமியருக்கு அறிவுரை சொல்லுங்கள். (அறிவுரை சொன்னால் அதற்கு ஒரு ஃபத்வா வரும் என்பது நண்பர் சுவனபிரியனுக்கு நன்றாகவே தெரியும்)

  16. சிறந்த கட்டுரையை வழங்கிய சேக்கிழார் அவர்களுக்கு நன்றி.

    யார் எண்ணிக்கையில் அதிகம் இருக்கிறார்களோ அவர்கள் ஆதிக்க சாதியாக மாறிவிடுகிறார்கள். ஆதலால் இந்த வார்த்தை தலித்துகள் என்று சொல்லப்படும் சமூகத்திற்கும் பொருந்தும்.

  17. ” முகத்தில்,வயிற்றில், காலில் பிறந்தாய் என்பதெல்லாம் ஒரு கற்பனை என்று கூச்சல் போடும் கும்பல்தான் இதுவே உண்மை என்று நாடகமாடுகிறது.-”

    ” எனவே, இந்து மதம் எல்லாவற்றுக்கும் ‘ஸ்மிருதி’யைக் கட்டிக்கொண்டு அழவில்லை.”-

    ” ஸ்மிருதிகளை ஒழித்தால் சாதி ஒழியும் என்றால் ஸ்மிருதிகளே இல்லாத ஆப்ரஹாமிய மதங்கள் பின்பற்றப்படும் நாடுகளில் தினம் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்கிறதே? “-

    திரு ஜி ரங்கநாதன் அவர்கள் நெத்தியடியாக உண்மையை சொல்லியுள்ளார். உரைக்க வேண்டியவர்களுக்கு உரைத்தால் நல்லது. சுரணை கெட்ட ஜென்மங்களை என்ன செய்வது?

    நேற்று கூட அன்பு மதத்துக்காரர்கள் பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்களில் பலரை சுவனத்துக்கு அனுப்பியுள்ள செய்தி இன்று 31-12-2012- செய்தி தாள்களில் வந்துள்ளது. அங்கே என்ன ஸ்ம்ருதி இருக்கிறது? ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல் என்று சொல்வது போல இருக்கிறது.

  18. Dear Survarna priyan,
    please read below link URL: https://www.newageislam.com/islamic-society/arshad-alalm-for-new-age-islam/allahpur–why-the-silence?/d/9829
    https://www.chakranews.com/is-caste-only-a-hindu-problem-part-1/2908

    already you known pretty well al-aktham arb tribe problem. Asraf, Ajlaf are terminology using in Arabs society. In Tamilnadu, muslim population is just 7% there.So,you not known many things. Just go to utterpradesh or Bihar, you come to know many things.

  19. very good article and also it has to be remembered by every Hindus that due to a micromajority selfish caste leaders and thoughtless followers who are indulging in this kind of exploitation. So the foreign fraud religious agents will get the ultimate benefits. Of late it is to make our people aware and teach our traditional values to our younger generation. It is possible through education but present education system motto is make money at any cost and teaches all is well that ends well. But the means to achieve is also important in our tradition. To achieve harmony among various communities is possible through value based education not in the modern lord macholey system. Let us do our effort rest will be taken care of almighty.

  20. யாவருக்கும் வணக்கம்,
    உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி. என் குருதி இல் கலந்த ஜாதி யை நான் எப்படி அளிக்க முடியும். நாம் மொழியால் பிரிக்கப்பட்ட போதும், கலர் ஆல் பிரிக்கப்பட்ட போதும் வருத்தம் காட்டாமல் ஜாதியை மட்டும் தாழ்வாக பேசுவது நியாயம் இல்லை என்பது என் வாதம்.

    தமிழன் என்ற திமிர் கொண்ட மதுரை அழகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *