Payday loans
முகப்பு » இந்து மத விளக்கங்கள், புத்தகம்

இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்

January 19, 2013
-  
அச்சிட அச்சிட

ந்து மதம் குறித்து மேலும் சில அறிமுக நூல்களா? அது தான் ஏற்கனவே நிறைய இருக்கிறதே என்று சிலர் எண்ணக் கூடும்.  ஆனால், இந்துமதம் போன்ற பன்முகத் தன்மை கொண்ட ஒரு மாபெரும் விஷயத்தைக் குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும்  உருவாகி வரும் புதிய வாசகர்களுக்காக புதுப்புது  நூல்கள் எழுந்தபடியே இருப்பது ஆச்சரியமல்ல. ஆங்கிலத்தில்  வரும் அளவுக்கு தமிழில் இவை வெளிவருவதில்லை என்பது மட்டுமே ஒரு குறை.

தமிழில் 1960களில் கவியரசு கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூல் தொகுதி வெளிவந்தது. இன்று வரை  இந்துமதம் என்றால் உடனடியாக தமிழ் வாசகர்களுக்கு  நினைவில் எழும் நூலாக அது இருக்கிறது.  அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் திராவிட இயக்க பிரசாரர்கள் இந்து மதம் குறித்து  பரப்பிய கீழ்த்தரமான, மோசமான அவதூறுகளுக்கும், திரிபுவாதங்களுக்கும் எதிர்வினையாகவே அந்த நூல் எழுந்தது.  அத்தகைய பிரசாரங்களால் குழம்பிப்  போயிருந்த ஒரு தலைமுறையினருக்கு, தங்களது பண்பாடு மீதே சுயவெறுப்பு கொள்ளத் தொடங்கியிருந்த இளைய சமுதாயத்திற்கு, இந்துமதம் குறித்த ஒரு அடிப்படையான புரிதலை அளிப்பதில்  அந்த நூல்  பெரும் வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.. இன்று வரை தமிழ் மனதில் அது நீடிப்பதற்குக் காரணமும் அதுவே. அதன் பிறகு, சமீப காலங்களில் சோ ராமசாமி எழுதிய “ஹிந்து மகா சமுத்திரம்” போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் அறிவுத் தேடல் கொண்ட இன்றைய  நவீனத் தமிழ் வாசகர்கள் பலருக்கு அத்தகைய நூல்கள் ஆர்வமூட்டுவதாக இருக்குமா என்றால் பெரும்பாலும் இருக்காது என்றே  சொல்ல வேண்டும்.  இந்துமதத்தின் நம்பிக்கைகள், ஐதீகங்கள், சடங்குகள், மகான்களின் வாழ்க்கைச் சரிதங்களிலிருந்து  சில சம்பவங்கள் ஆகியவற்றை கவித்துவமான நடையில் கோர்த்து எழுதப் பட்டவை இந்த நூல்கள்.  அறிவியல் பூர்வமான,  விமர்சனக் கண்ணோட்டம் கொண்ட பார்வைகள் அதில் இல்லை.  முற்றிலும்  மரபு சார்ந்த விளக்கங்களே உள்ளன.  வேதங்கள், உபநிஷதங்கள், ஆறு தரிசனங்கள் போன்றவை குறித்த முறையான அறிமுகம் கூட அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற ஒரு நூலில் இல்லை.

இன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக, ஞானத் தேடல்களின் வழியாக, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில்  தான் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர்.  இத்தகைய வாசகர்களின் தேடலைப்  பூர்த்தி செய்யும் நூல்கள் அத்தியாவசியமானவை. சென்ற வருடம் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் இந்த வகையிலான தொடர் கட்டுரைகளைத் தன் வலைப்பதிவில் எழுதினார். பிறகு “ஹிந்து மதம்: ஓர் அறிமுகத் தெளிவு” என்ற பெயரில் அது புத்தகமாக வெளிவந்தது (சந்தியா பதிப்பகம்).

இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும்  மூன்று  நூல்கள்  இந்த வகையில் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

hindu-books-1முதலாவதாக,  க்ஷிதி மோகன் சென் எழுதிய “இந்து  ஞானம்: ஓர் எளிய அறிமுகம்”.   எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாபெரும் சம்ஸ்கிருத அறிஞரும் காந்தியருமான சென் எழுதிய சிறிய புத்தகத்தின் மொழியாக்கம் இது.   மேற்கத்தியர்களையும், அதே  மோஸ்தரில் உருவாகி வந்து தங்கள் கலாசாரம் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இல்லாத அப்போதைய படித்த இளைஞர்களையும் மனதில் கொண்டு  எழுதப் பட்ட புத்தகம் இது. எனவே, இன்றைக்கும்  அதற்கான வாசகர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலகட்டத்திய ஆங்கில மொழி நடையில் எழுதப் பட்ட இந்த நூலை சுனில் கிருஷ்ணன் மிக அருமையாக சரளமான நவீனத் தமிழிலக்கிய நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பல ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு மிகச் சரியான தமிழ்ப் பதங்களை எடுத்தாண்டிருக்கிறார் (mysticism = “மறைஞானம்” என்பது போல). இதனால், தமிழ் மொழியாக்கம் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக உள்ளது.

மூன்று பகுதிகளாக அமைந்துள்ள நூல் இது.  முதலிரண்டு பகுதிகளீல் இந்து மதத்தின் வரலாறு மற்றும் பல்வேறு சமயப் பிரிவுகள், தத்துவ மரபுகள், பக்தி இயக்கம் ஆகியவை குறித்து பேசப் படுகிறது. மூன்றாவது பகுதி ஆசிரியரால் எழுதப் படவில்லை. அதற்குப் பதிலாக, வேதங்கள், உபநிஷதங்கள், கீதை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தடுத்த பகுதிகள் நேரடியாக அப்படியே வாசகனுக்கு அளிக்கப் படுகின்றன.  ஆங்கிலப் பதிப்பில் கிரிஃபித், மேக்ஸ் முல்லர் ஆகியோரது புகழ்பெற்ற மொழியாக்கங்கள் இதற்காகப் பயன்படுத்தப் பட்டன.  தமிழில்,  நான் செய்திருக்கும்  வேத, உபநிஷத  கவிதை வடிவ மொழியாக்கங்கள்  இணைக்கப் பட்டுள்ளன. இந்தப் பணியில் சுனிலையும் என்னையும் ஊக்குவித்த ஜெயமோகனுக்கு  எனது  பணிவன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயமோகன் எழுதியிருக்கும் முன்னுரையில் இந்த நூலின் சாதக, பாதக அம்சங்களை மிகத் தெளிவாக  எடுத்துரைக்கிறார்.  அதனை முதலிலேயே படித்து விட்டு நூலுக்குள் நுழைவது நல்லது. உதாரணமாக, இன்றைக்கு காலாவதியாகி விட்ட ஆரியப் படையெடுப்பு வரலாற்றை, அன்றைக்கு இருந்த பல இந்திய அறிஞர்கள், கல்வியாளர்கள் போன்று க்ஷிதி மோகனும் அப்படியே ஏற்கிறார். நூலின் பல அத்தியாயங்களில் இந்த சட்டகத்தை அவ்வப்போது அவர் கொண்டு வருவது  இன்றைக்கு படிக்கையில் சங்கடமாகவும், எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது. ஆயினும் ஒட்டுமொத்தமாக  அவர் கூறும் கருத்தாக்கம் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக இல்லை என்பதால் இதைச் சகித்துக் கொண்டு நூல் கூறும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.  க்ஷிதிமோகன் சென் மட்டுமல்ல,  டாக்டர் ராதாகிருஷ்ணன், தத்துவ அறிஞர் ஹிரியண்ணா, வீர சாவர்க்கர் போன்றோரது நூல்களிலும் இதே அனுபவம் நமக்கு ஏற்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்து மதத்தில்  ஆதிகாலம் தொட்டே கேள்வி கேட்கும், விவாதிக்கும் மரபு உண்டு என்பதை ஆசிரியர் விளக்கும் பகுதி நன்றாக உள்ளது. நான்கு வர்ணங்கள் பற்றிய அத்தியாயம் சமநிலையுடன் எழுதப் பட்ட ஒன்று. தமிழகத்து சித்தர்கள் போல வங்கத்தில் நாடோடிகளாகத் திரிந்த பால்கள் என்ற ஆன்ம சாதகர்கள் பற்றிய அத்தியாயம் மிகுந்த உணர்வெழுச்சியைத் தருவதாக உள்ளது.  இஸ்லாமிய சூபி மரபு இந்து ஞான மரபில் ஏற்படுத்திய தாக்கம் என்பதாக ஆசிரியர் கூறிச் செல்லும் விஷயங்கள் விவாதத்திற்குரியவை.  அதே போல “வேதமல்லாத பிற போக்குகள்” என்ற அத்தியாயத்தில் அவர் குறிப்பிடும் விஷயங்கள் உண்மையில் வேத இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெறுவதையும்,  இந்த பிரிவினையே அர்த்தமற்றது என்பதையும்  பிற்காலத்தில் வந்த பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.  அரவிந்தன் நீலகண்டன் சமீபத்தில் எழுதிய “ஆழி பெரிது” தொடரிலும் இதைக் குறிப்பிட்டுள்ளார். சில அத்தியாயங்களில் சில அடிப்படையான தகவல் பிழைகளும் (ஆழ்வார்கள் வேதகாலத்திற்கு முற்பட்டவர்கள்,  ஆண்டாள் தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்த பெண் – இத்யாதி),  சில குறைத்தல் வாதங்களும்  பொதுமைப் படுத்தல்களும்  உள்ளன என்பதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இந்த சிறிய, எளிய நூல் இந்து ஞானத்தின் பூரண ஒளியின் கீற்றுகளை செம்மையாகத் தொகுத்தளிக்கிறது என்றே கூற வேண்டும். அதுவே இந்த நூலை இன்றைக்கும் முக்கியமானதாக்குகிறது.

*****
இரண்டாவதாக உள்ள  நூல் “இந்து மதம் – ஒரு விவேகிக்கான வழிகாட்டி”.  ஸ்ரீ நாராயண குரு மரபில் வந்த  குரு நித்ய சைதன்ய யதி எழுதியுள்ள சிறிய கையேடு இது.

hindu-books-2“கோயில் செல்லும் பக்தர்களுக்கு, குறிப்பாக சிலைகளை அலட்சியமாகப் பார்த்து செல்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தை பெருவாரியாக வினியோகிக்க வேண்டும் என்பது எனது ஆவல்” என்று முன்னுரையில் குருவின் சீடரான ஜான் ஸ்பியர்ஸ் குறிப்பிடுகிறார்.

இந்த நூல் இந்து மதம் பற்றிய  ஒட்டுமொத்தமான அறிமுகம் அல்ல, இதன் பேசுபொருள் குறுகியது. கோயில்கள் மற்றும் தெய்வத் திருவுருவங்களின் பின்னுள்ள தத்துவக் குறியீடுகளை விளக்குவது என்பதே நூலின் நோக்கம்.

“கோயில்கள் கல்லால் ஆன புத்தகங்கள்” என்பதில் தொடங்கும் அத்தியாயம் எப்படி பஞ்ச பூதங்களின் குறியீடுகள் ஆலய அமைப்பில் உள்ளன என்பதை அழகுற விளக்குகிறது.  பின்னர், கடவுளரின் வாகனங்கள் குறிப்பது  எதை என்பதை ஆழ்மன உளவியல், யோகம் ஆகியவற்றின் அடிப்படையில் குரு எடுத்துரைக்கிறார்.   கணபதி, சரஸ்வதி, சுப்பிரமணியர், மகாவிஷ்ணு, சிவன் ஆகிய தெய்வத் திருவுருவங்கள் குறித்து அடுத்தடுத்த அத்தியாயங்கள் பேசுகின்றன.

தெய்வ வடிவங்கள் பற்றி குறியீட்டு ரீதியிலான விளக்கங்கள் இப்போது நாம் அடிக்கடி கேள்வியுறுபவை. ஆனால் நித்யா இந்த நூலை 1960களில் எழுதியபோது  இந்த புரிதல் வெகுஜன அளவில் மிகக் குறைவாகவே இருந்தது என்று எண்ண இடமிருக்கிறது. மேலும், குருவின் விளக்கங்கள்  பாடப் புத்தக தன்மையிலானவை அல்ல,  அவரது நேரடியான ஆன்மீக அனுபவங்களில் முகிழ்த்தவை என்பதால்  அவை தனித் தன்மை கொண்டவை. அவற்றின் மதிப்பும் அதிகம்.  குரு அவற்றை விளக்கும் முறையும் மிகுந்த கவித்துவம் நிரம்பியது..

 ”கணபதி கொழுக்கட்டையால் நமது வயிற்றையும் ஞானத்தின் குறியீட்டால் (வேத புத்தகம், ஞானமுத்திரை, தாமரை, முறிந்த தந்தம்..)  நமது ஆன்மாவையும் நிரப்ப விரும்புகிறார். உலகின் அனைத்து நன்மைகளையும் “பிரியங்கள்” (ப்ரேயஸ்) என்னும் பிரிவில் தொகுக்கலாம். கொழுக்கட்டை பிரியங்களின் குறியீடாகிறது.  வேதங்கள், தாமரை மற்றும் ஞான முத்திரை இவை ஆன்மீக மதிப்பீடுகளின் தொகுப்பைக் குறிக்கின்றன. இது ‘ஸ்ரேயஸ்’ எனப் படுகிறது. அறிவார்ந்த மனம் படைத்த ஒருவர் ஒன்றிற்காக மற்றொன்றைத் துறக்க மாட்டார். அவர் இரண்டையும் ஏற்றுக் கொள்வார்.  சுவையான உணவை உண்டு மகிழ்வது, கீதை போன்று ஞானம் தரும் புத்தகங்களைப் புரிந்து கொள்ள ஒரு போதும் தடையாக இருப்பதில்லை. இவை இரண்டிற்கும் நம் வாழ்வில் தனித் தனி இடங்கள் உள்ளன….  ஆன்மீகத்தின் பெயரால் உணவை மறுப்பது, உண்ணா நோன்பு இருப்பது போன்ற மிகைகள் தேவையற்றவை. அனைத்து குருக்களும் இந்த எளீய உண்மையை உணர்ந்தவர்களே”.

கணபதி குறித்த இத்தகைய விளக்கம்  நாம் பொதுவாகக் கேள்விப் படாத ஒன்று.

இந்த நூலிலும், குரு நித்யா ஆரியர் – ஆரியல்லார் கோட்பாட்டு சட்டகத்தைப் பொருத்தும் பல இடங்களைப்  பார்க்கலாம்  (வள்ளி – தெய்வயானை இருவரும் சுப்பிரமணியரை மணம் புரிந்ததைக் குறிப்பிடும் இடம் ஒரு உதாரணம்).   இந்த விஷயத்தில் அவர் தனது ஆசிரியரான நடராஜ குருவைப் பின்பற்றுகிறார்.   நடராஜ குரு  ஆன்ம சாதகர் மட்டுமல்ல,  மேற்குலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் தத்துவப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

எனது வாசிப்பில், பொதுவாக கல்விப் புல பின்னணி கொண்ட இந்திய அறிஞர்கள் அனைவருமே அனேகமாக ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை முற்றாகவே ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதைக் காண்கிறேன்.  வரலாறு என்ற துறையில், அது சார்ந்த நிபுணர்களின்  ஆய்வுகளுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை அளிக்கப் பட வேண்டும்  என்ற கல்விப் புல நெறிமுறையே கூட இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக மறுதலித்தவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்களே.   ஆரியக் கோட்பாடு வாதம் தொடர்ந்து இவ்வாறூ ஒரு தரப்பினரால் கேள்விக்கு உட்படுத்தப் பட்டதால் தான்,  பின்னர்,  நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவி கொண்டு  தொல்வரலாறு குறித்த பல புதிர்களை நாம் விடுவிப்பதற்கு ஒரு முகாந்திரம் ஏற்பட்டது  என்பதையும் கவனிக்க வேண்டும்.  அறிவு வளர்ச்சியும், தேடலும் கல்விப் புலங்களுக்கு  வெளியேயும் தீவிரமாக நடைபெற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இந்தப் புத்தகத்தை  கே.பி.வினோத்  சீரான நடையில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிக்கலான தத்துவக் கலைச் சொற்களும் தமிழில் பொருள் புரியுமாறு எடுத்தாளப் பட்டுள்ளன. சில இடங்களில் மொழியாக்கம் நெருடுகிறது. உதாரணமாக, சரஸ்வதி குறித்த அத்தியாயத்தில்  “அவர் நான்கு கைகளுடன் காட்சி தருபவர்… வீணையை ஏந்தியிருப்பார்…” போன்ற வாக்கிய அமைப்புகள் அன்னியமாகத் தெரிகின்றன. கடைசி சில பத்திகளில் மட்டும் ”அவள்” என்ற சரியான பிரயோகம் வந்திருக்கிறது.

*****

மூன்றாவதாக உள்ளது, “இந்துமதம் – சில விவாதங்கள்”. ஜெயமோகன் தனது வலைப்பதிவில் இந்து மதம் & தத்துவம் குறித்து நிகழ்த்திய சில உரையாடல்களும், கேள்வி பதில்களும் இப்புத்தகத்தில் தொகுக்கப் பட்டுள்ளன.   கேள்வி-பதில் என்றவுடன்   இவை வழக்கமான ஒன்றிரண்டு பத்திகளில் சொல்லப் படும் பதில்கள் என்று  நினைத்து விடவேண்டாம்.  ஒவ்வொரு பதிலும் ஒரு முழு நீளக் கட்டுரையாக உள்ளது.  சிலவற்றில்  கேள்விகளே பல பத்திகளில் விரிவாக முன்வைக்கப் படுகின்றன.

hindu-books-3இதற்கு முன்பு ஜெ.யின் வலைப்பதிவில் வந்த கட்டுரைகள் “இந்து ஞானம்” என்ற பெயரில் வெளிவந்திருக்கின்றன (தமிழினி வெளியீடு).  இப்புத்தகத்தை ஒரு வகையில் அதன் தொடர்ச்சியாகவே காண முடியும்.   இந்து மதம், இந்து தத்துவம் என்று இரு பிரிவுகளில் கட்டுரைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப் பட்டுள்ளன.

மேற்கூறிய இரண்டு புத்தகங்களுடன் ஒப்பிடுகையில், இந்தப் புத்தகத்தின் சமகாலத் தன்மையே இதை முக்கியமான ஒன்றாக்குகிறது.  “நான் இந்துவா?” என்ற முதல் கட்டுரையே  ”இந்து அடையாளம்” என்கிற அடிப்படையான விஷயம் குறித்து தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பதாக உள்ளது.   இந்துமதத்தின்  ஒருமை – பன்முகத் தன்மை, முரண்கள் – இசைவுகள் ஆகியவற்றை  அதன் முழுமையான வீச்சுடனும்,  நடைமுறையில் காணும்  உதாரணங்களூடனும் எடுத்துச் சொல்லிப் புரியவைக்கும்  ஒரு கட்டுரை இது.   “கலாசார இந்து” என்ற கட்டுரையும் இதே வகையிலானது தான்.  என்னைப் பொறுத்த வரையில், இந்தியாவின் எல்லா வரலாறு, சமூகவியல் பாடப் புத்தகங்களிலும் பாடமாக இடம் பெற வேண்டிய  இரு கட்டுரைகள்  என்று இவற்றைச் சொல்வேன்.

தமிழ்ச் சூழலில் சம்ஸ்கிருதம் பற்றிய முற்றிலும் எதிர்மறையான கண்ணோட்டம் திராவிட இயக்க அரசியலால் விதைக்கப் பட்டது.   இத்தொகுப்பில் சம்ஸ்கிருதம், நாட்டார் தெய்வங்கள், கோயில்கள் குறித்து எழுப்பப் பட்ட கேள்விகள் அது உருவாக்கியவையே.  அவற்றுக்கு மிகவும் தர்க்கபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும்  ஜெயமோகன் விடையளித்திருக்கிறார். இவை பொதுவான தமிழ் வாசகர்களுக்கு பல்வேறு வகையில் திறப்புகளை அளிப்பவையாக இருக்கும்.

“மானுட ஞானம் தேங்குகிறதா?”, “அறிதல் – அறிதலுக்கு அப்பால்” ஆகிய கட்டுரைகள்  மானுட பிரக்ஞையின் விளிம்பில்  நின்று  இந்து தத்துவ சிந்தனைகளை மதிப்பீடு செய்து விவாதிப்பவை.

”பரிணாமவாதமும் இந்திய மதங்களும்” என்ற கட்டுரை  இந்து சிந்தனை மரபு எவ்வாறு நவீன அறிவியல் கோட்பாடுகளை, குறிப்பாக பரிணாமவாதத்தை தத்துவ ரீதியாக எதிர்கொள்கிறது என்பதைப் பேசுகிறது.   ஏதோ ஒரு ஊரில்  நடக்கும் சிறூ சம்பவங்களைப் பிடித்துக் கொண்டு  “இந்து பிற்போக்குத் தனத்தை” பொதுப்படையாக விளாசித் தள்ளும் நமது ஊடகத்தினரும்,  அறிவுஜீவு  வர்க்கத்தினரும்  வசதியாக மறந்து விடும், அல்லது புறந்தள்ளி விடும்  விஷயம் இது.  மேற்கத்திய நாடுகளில் கிறீஸ்தவ சூழலில்  இது எவ்வளவு பெரிய கருத்துலக/தத்துவ பிரசினை என்பதை தங்கள் ஊடக சகபாடிகள்  மூலம் இவர்களில் சிலர் அறிந்திருக்கக் கூடும். ஆனால்,  இந்து சூழலில் எப்படி எப்படி அறிவியல் நோக்கு மிக இயல்பாக கைகூடுகிறது என்பதை நாட்டு  மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. இக்கட்டுரை அதை அழகாக செய்கிறது.  நாத்திகம், ஆத்திகம் குறித்த கட்டுரையும் சிறப்பாக உள்ளது.

உபநிஷத காலம் தொடங்கி இன்று வரை இந்து ஞான மரபு விவாதங்களினூடாகவே வளர்ந்து வந்துள்ளது. அதன்  நீட்சியாக, தொடர்ச்சியாக இத்தகைய புத்தகங்கள் வெளிவருவது, அந்த மரபு உயிர்த்துடிப்புடன் உள்ளது என்பதை விளக்கும் பிரத்யட்ச உதாரணமாகவே அமைகிறது.

தனது பதிப்பக செயல்பாட்டின் ஆரம்பத்திலேயே இந்துமதம் குறித்த சிறப்பான நூல்களை வெளியிடும்  சொல்புதிது பதிப்பகத்திற்கு  வாழ்த்துக்கள்!

****

சொல்புதிது பதிப்பகத்தின் அனைத்து புத்தகங்களும் 2013 சென்னை புத்தகக் கண்காட்சியில்  எழுத்து  பதிப்பக அரங்கில் (ஸ்டால் எண்: 504) கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு:

சொல்புதிது

எண்: 23/9, முதல் தளம்
சங்கரன் தெரு, கடலூர் O.T – 07
607003.

தொலைபேசி: 9442110123
http://www.solputhithu.net

 

தொடர்புடைய பதிவுகள்
prev next

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

 

8 மறுமொழிகள் இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்

 1. இருங்கோவேள் அ போ on January 19, 2013 at 11:28 am

  நன்றி.
  என்னைப் போன்ற புத்தக ஆர்வலர்களுக்கு ஒரு உபயோகமான கட்டுரை.
  நன்றி.

  இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நந்தனத்தில் இறங்கி கண்காட்சி வளாகத்தை அடைந்தவுடனேயே களைப்படைய வைத்து விட்டது.

  நாளை மீண்டும் விஜயம் செல்வேன். வாய்ப்புக் கிடைக்குமேயானால், மேற்குறித்த மூன்று நூல்களையும் வாங்கி விடுவேன்.

  மீண்டும் நன்றியுடன்,
  அ போ இருங்கோவேள்

 2. vedamgopal on January 21, 2013 at 7:20 am

  புத்தக கண்காட்சியில் மிகுந்த ஆவலுடன் வாங்கிய புத்கங்களில் ஒன்று ”குமரிக்கண்டமா சுமேரியமா”? (தமிழரின் தோற்றமும் பரவலும்) ஆசிரியர் பா.பிராபாகரன். படித்து முடித்தபின் புரிந்துகொண்டது ஏன் இப்படி பல தமிழன் திராவிடன் என்ற பட்ட பெயருடன் தன் மூதாதயரை தேடி பேயாய் அலைகிறார்கள் என்ற சொதப்பல்தான் அதன் தொகுப்பு என்று. முதலில் தமிழனின் மூலத்தை சிந்துசமவெளியில் தேடினார்கள் பின்பு குமரிகண்டம் லெமூரியா என்றார்கள் இப்பொழுது சுமேரியாவில் தேட புறப்பட்டுவிட்டார்கள். இந்த தேடல்களில் திராவிடன் ஆரியன் என் இல்லாத இனபிரிவை நிலை நிறுத்துவதில் எப்பொழுதுமே குறிப்பாவே செயல்படுகிறார்கள்.
  தென் இந்தியாவின் பெரும் பகுதி ஒரு காலத்தில் ”தண்டகாரண்யம்” என அழைக்கப்பட்ட அடர்ந்த காடுகள் நிறைந்த இடம். அதனால்தானோ இங்கே பிறந்த சிலருக்க நிலையான சுயபுத்தி இல்லாமல் தாவிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடர்கள் கடல் மார்கமாக சுமேரியாவிலிருந்து அலேகாக தங்கள் நாகரிகம் சிதையாமல் கேரள கடற்கரையில் வந்து இறங்கிய புலம் பெயர்ந்தவர்களாம் சுமேரியாவில் வாழ்ந்த மற்றொறு ஆரியர் என்ற ஒரு கலப்பினம் தரைமார்கமாக தங்கள் நாகரிகத்தில் பல தாக்கங்களை ஏற்றுக்கொண்டு வட இந்தியாவில் புலம் பெயர்ந்தவர்களாம். இந்த சரடுகளின் சிகரம் முதல் தமிழ் சங்கம் இடை தமிழ் சங்கம் நடந்த இடம் சுமேரியாவாம்.

 3. dr suneel on January 24, 2013 at 8:55 am

  அன்புள்ள ஜடாயு அவர்களுக்கு,

  மொழிபெயர்ப்பாளனாக நூலில் உள்ள கருத்துக்களை திருத்துவது மூல படைப்பின் ஆசிரியருக்கு செய்யும் இழுக்கு என கருதியதால், அவருடைய கருத்துக்களை எவ்வித மாற்றமும் இன்றி அதே தொனியில் பதிவு செய்ய முனைந்துள்ளேன். நூலின் சாதக பாதகங்களை அழகாகவும் ஆழமாகவும் அலசி இருக்கிறீர்கள், அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 4. R Balaji on January 24, 2013 at 8:09 pm

  திரு.ஜடாயு,
  ஆரிய-திராவிட கோட்பாட்டிற்கான உங்கள் வரலாற்று ரீதியான விளக்கம், சமகால
  அறிவியலை ஒப்புக் கொள்ளாதவர்கள் பக்கம் சாய்கிறது. அதற்கான
  காரணத்தையும் நீங்களே கட்டுரையில் விளக்கமும் அளித்து விட்டீர்கள். அதாவது,
  அன்றைய நிபுணர்களின் விளக்கத்தை அன்றைய எழுத்தாளர்கள் ஏற்றுக்
  கொண்டார்கள் என்பதையும் கூறிவிட்டு, இன்று அவ்வெழுத்துகள் சங்கடமாகவும்,
  எரிச்சலூட்டும்படியும் உள்ளதாக கூறுகிறீர்கள். என்னைப் பொறுத்தவரை,
  ஆரிய-திராவிட கோட்பாட்டின் பண்டைய விளக்கத்தை அனுசரித்து எழுதியவர்களை ஆதரிக்கவே செய்கிறேன்.

  அந்த காலகட்டத்தில், ஆராய்ச்சியாளர்களின் முடிவுக்கு விரோதமாக
  எழுதியிருந்தால், நீங்கள் கூறுவதுபோல எரிச்சலைத்தான் பெற்றிருப்பார்கள்.
  அறிவியலைப் பொறுத்தவரை அந்தந்த காலகட்டத்தில், நிரூபணமான
  விளக்கங்களை ஏற்றுக் கொண்டு எழுதுவதுதான் சரி என்பதே என் கருத்து.
  இன்னொரு வகையில் கூறுவதானால், ஆரிய-திராவிட கோட்பாட்டு விளக்கத்தை
  எதிர்த்து எழுதிய ஸ்ரீ.அரவிந்தர், விவேகானந்தர் போன்றோர்தான் எதிர்ப்பை
  பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களின் Focus, எழுத்தின் நோக்கம் ஹிந்து
  ஆன்மீகம் பக்கமாக இருந்ததினால், இந்த விளக்கங்கள் குறித்த எதிர்ப்பு பெரிதாக
  ஏற்பட்டிருக்காது.

  இதே போன்று, 18ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, பிரபஞ்சத்தின் ஆயுள்
  குறித்த முரண்பட்ட விளக்கங்கள் வந்து கொண்டிருந்தன. ஒரு நிலையில்
  4.5 பில்லியன் வருடங்களாக இருக்கலாம் என்ற பல விளக்கங்களில் ஒரு
  விளக்கமாக வெளிவந்தது. அதை இந்தியாவில் இருந்த சிலர் ஒரு “கல்ப யுகம்”
  என்பதாக coating அடித்துக் கொண்டு ஊரைக் குழப்பினார்கள். ஆனால் பிறகு
  தெளிவாக 13.7 பில்லியன் வருடங்கள் என்று விஞ்ஞானிகள் குழாமினால்
  ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. தற்போது, இந்த எழுத்துகளை படித்தால் எரிச்சலே
  மிஞ்சும்.

  என்னைப் பொறுத்தவரை, சமகால அறிவியலை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்
  மட்டுமே, தெளிவான எதிர்தரப்பு விளக்கத்துடன் மறுதலித்து எழுத முடியும்.
  மற்றவர்கள் ஊரோடு கூடி எழுதுவதுதான் சரி. இல்லையேல் குழப்பமே மிஞ்சும்.

 5. ஜடாயு on January 24, 2013 at 11:13 pm

  அன்புள்ள சுனில், ஆம். மொழிபெயர்ப்பாளராக நீங்கள் செய்ததே மிகவும் சரியானது.

  அன்புள்ள பாலாஜி, ஆரிய கோட்பாட்டை ஏற்ற அந்த நூலாசிரியர்கள் யாரையும் அதை மட்டும் வைத்து நான் நிராகரிக்கவில்லை என்பதைக் கவனிக்கவும். அப்படி நிராகரித்தால் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கியமான அறிஞர்களைத் தள்ளி விட வேண்டியிருக்கும். நான் சொல்ல வந்ததெல்லாம், கல்விப் புல பின்னணி கொண்ட அறிஞர்கள், ஒரு கட்டத்தில் established notion என்பதை முழுமையாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.. அதற்கு வெளியே உள்ள சிந்தனையாளர்கள் தான் அதைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள் என்பதையே… இன்றைக்கும் இது பொருந்தும் – அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் கூட பல்கலைக் கழக ஆய்வுகளை யாரும் அப்படியே ஏற்பதில்லை, எதிர்வினை புரிகிறார்கள். அப்படி இருக்கும்போது வரலாறு, சமூகவியல், கலாசார ஆய்வு போன்ற துறைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம் – இத்துறைகளில் பெரும்பாலான கல்விப் புல ஆய்வுக் கருத்துக்கள் முற்றிலும் உள்நோக்கத்துடன் உருவாக்கப் படுபவையே. ”உடையும் இந்தியா” புத்தகத்தில் இது குறித்து பல ஆதாரங்கள் அளிக்கப் படுவதைப் பார்த்திருப்பீர்கள்.

 6. அத்விகா on February 25, 2013 at 7:02 pm

  சொல்புதிது பதிப்பகத்தின் மூன்று புதிய நூல்களையும் வாங்கிவிட்டேன். ( மீனம்பாக்கம் கண்காட்சி அரங்கில் ஐ-11) ஜெயமோகனின் இந்துமதம் -சில விவாதங்கள் உடனே படித்து முடித்துவிட்டேன். மிக நன்றாக இருந்தது. இவ்வளவு தெளிவாக அதுவும் தமிழில் எழுதியிருப்பது ஒரு அதிசயம். வருங்காலத் தமிழ் இளைஞர்கள் எல்லோரும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வரும், இந்த நாளில் தமிழில் நூல் எழுதவும், வெளியிடவும் ஒரு துணிச்சல் வேண்டும். பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள். எஞ்சிய இரண்டு நூல்களையும் வரும் ஞாயிறுக்குள் படித்து முடித்து விடுவேன்.

  தம்பி ஜெயமோகன் அவர்களுக்கு யானைமுகன் அருளாலும், யானைமுகன் சகோதரன் அருளாலும் நீண்ட ஆரோக்கியமான ஆயுளும், நிறை செல்வமும், இதே போல மேலும் பல சிறந்த நூல்களை எழுதும் வாய்ப்பும் கிட்டவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

 7. அன்புக்குரிய ஸ்ரீ ஜடாயு அறிமுகம் செய்த நூல்களை உடனே வாசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இணையத்தில் எப்படி வாங்குவது என்ற தகவலையும் இங்கேயே அளிக்கவேண்டுகிறேன். என்னைப்போல் தமிழகத்திற்கு வெகுதொலைவில் வாழ்கின்றவர்களுக்குப் பயன்படும்.
  சிவஸ்ரீ.

 8. பொதுவாக நமது சமயம், ஆன்மிகம், தத்துவம் தொடர்பான நூல்கள் ஆரிய-திராவிட இனவாதம் என்பதைப்பின்புலமாகக் கொண்டே எழுதப்படுகின்றன. இது மாறுவதற்கான முயற்சிகள் இன்னும் வலுப்பெறவேண்டும்.
  திரு கேபி வினோத் அவர்களின் மொழியாக்கம்பற்றி ஸ்ரீ ஜடாயு
  “சில இடங்களில் மொழியாக்கம் நெருடுகிறது. உதாரணமாக, சரஸ்வதி குறித்த அத்தியாயத்தில் “அவர் நான்கு கைகளுடன் காட்சி தருபவர்… வீணையை ஏந்தியிருப்பார்…” போன்ற வாக்கிய அமைப்புகள் அன்னியமாகத் தெரிகின்றன. கடைசி சில பத்திகளில் மட்டும் ”அவள்” என்ற சரியான பிரயோகம் வந்திருக்கிறது”.
  ஸ்ரீ ஜடாயு அவர்களே அவர் என்பது பெண்ணுக்கும் பொருந்தும் மரியாதைப்பன்மை.இதில் என்ன நெருடல்.
  இன்னும் ஒன்று ஸ்ரீ ஜெயமோகன் அவர்களின் இந்து தத்துவம் பற்றிய இரு நூல்களையும் வாசித்தேன். அவரது கருத்துக்கள். அவரது தர்க்கவியல் நோக்கு அவர் அளிக்கும் ஆதாரங்கள் யாவையும் அருமை. ஆனால் ஹிந்து என்பதில் வைதீக தரிசனங்களைமட்டுமே உள்ளடக்கும் கருத்து ஏற்புடையதன்று. ஹிந்துத்துவத்தினை கம்யூனிஸ்டுகளின் கருத்தின் அடிப்படையில் நிராகரிக்கும் போக்கும் ஏற்புடையதன்று. ஆகவே ஸ்ரீ ஜெயமோகன் அவர்களைக்கொண்டாடுவதில் கொஞ்சம் நம்க்கு நிதானம் தேவை. என்றேக்கருதுகிறேன்.
  சிவஸ்ரீ.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.