எழுமின் விழிமின் – 31

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)

தமிழில்: ஆர்.கோபாலன்

வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

.
 சரியான நோக்கு:

….. நீ செய்கிற நற்பணியெல்லாம் உனக்காக, உனது சொந்த நலனுக்காகத் தான்.  நீயும் நானும் போய்த் தூக்கி விடுவோம் என்று எதிர்பார்த்து கடவுள் சாக்கடையில் ஒன்றும் விழுந்து கிடக்கவில்லை.  மருத்துவமனையையோ அல்லது வேறு ஒன்றையோ கட்டிவிட்டு அவருக்கு நாம் உபகாரம் செய்துவிட்டதாக எதுவும் எண்ண வேண்டாம்.  வேலை செய்ய அவர் உன்னை அனுமதிக்கிறார்.

Excerciseஉலகமாகிற இந்தப் பெரிய உடற்பயிற்சிக்கூடத்தில் உன் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்துக்கொள்ள அவர் அனுமதியளித்திருக்கிறார்.  தனக்கு உபகாரமாக இருப்பதற்கு அல்ல,  நீயே உனக்கு உதவி பண்ணிக் கொள்ளலாம் என்பதற்காக கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார்.  நீ உதவி பண்ணாவிட்டால் அதற்காக ஓர் எறும்பாவது செத்துப் போகும் என்று நீ நினைக்கிறாயா? நினைத்தால் அது மகா மோசமான தெய்வ நிந்தனையாகும்….

….இறைவனுக்காக வேலை செய்கிற வாய்ப்பான பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது.  நாம் அவருக்கு உதவி எதுவும் செய்யவில்லை.  உங்களுடைய மனத்திலிருந்து ‘உதவி’ என்ற சொல்லை அகற்றிவிடுங்கள்.  உங்களால் உதவி பண்ணவே முடியாது.  உதவி பண்ணுவது என்பது தெய்வ நிந்தனையாகும்.

அவரை வழிபட நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.  உலகத்துக்கு முன்னே அத்தகைய பக்தி வணக்கத்துடன் நில்.  அப்பொழுது பூரணமான பற்றின்மைக் குணம் உனக்குக் கிடைக்கும்.  இதுவே உனது கடமை.  வேலை செய்யும்போது கொள்ள வேண்டிய சரியான நோக்கு இது.  கர்ம யோகம் கற்பிக்கிற ரகசியம் இதுதான்.

***

சுயநலமின்றி வேலை செய்பவனே மிக உயர்ந்த மகிழ்வடைவான்:

Beggerபிச்சைக்காரனுக்கு ஒருபோதும் மகிழ்வே இல்லை.  பிச்சைக்காரனுக்குக் கிடைக்கிற பிச்சையில் பரிதாப உணர்ச்சியும்,  ஏளனமும் கலந்திருக்கும்; அல்லது குறைந்தபட்சமாக ‘இந்தப் பிச்சைக்காரன் மட்டமானவன்’ என்ற எண்ணமாவது அதில் தொக்கி நிற்கும்.  தனக்குக் கிடைப்பதை  அவன் ஒருக்காலும் உண்மையான மகிழ்வுடன் அனுபவிக்க முடியாது.

நாமெல்லாம் பிச்சைக்காரர்கள்; நாம் எதைச் செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாமெல்லாம் வியாபாரிகள்; வாழ்க்கையை, நல்ல குணங்களை, சமயத்தை நாம் விலை பேசுகிறோம். அந்தோ! அன்பைக்கூட நாம் வியாபாரம் பண்ணுகிறோமே!

வியாபாரத்துக்காக நீ வந்தால், கொடுக்கல் வாங்கல் பேரம் பண்ணுவதானால், வாங்கி விற்கிற காரியம் செய்வதானால், வாங்குதல்- விற்பனை இவற்றுக்கான சட்டங்களுக்கு உட்பட வேண்டும்.  வியாபாரத்தில் நல்ல காலமும் பொல்லாத காலமும் உண்டு; விலையில் ஏற்றமும் சரிவும் உண்டு. லாபமே கிடைக்குமென்று எப்பொழுதும் எதிர்பார்க்கிறாய்! இது கண்ணாடியில் உன் முகத்தைப் பார்த்துக் கொள்வது போன்றது.  அதில் உன் முகம்  பிரதிபலிக்கிறது.  நீ அழகுக்கோர் அணி செய்; கண்ணாடியிலும் அதுவே தெரியும். நீ சிரித்தால் கண்ணாடியும் சிரிக்கும்.  இதுதான் வாங்குவதும் விற்பதும், கொடுக்கலும் வாங்கலும்.

நாம் சிக்கிப் பிடிபடுகிறோம்.  எப்படி? நாம் கொடுப்பதனால் பிடிபடுவதில்லை.  திரும்பப் பலனை எதிர்ப்பார்ப்பதனால் தான் பிடிபடுகிறோம்.  நாம் அன்பு காட்டிவிட்டு அதற்குப் பதிலாகத் துன்பத்தை அடைகிறோம்.  அது நாம் அன்பு காட்டுகிற காரணத்தால் அல்ல.  நாம் திரும்ப அன்பைப் பெற எதிர்பார்ப்பதால் தான்.

எங்கே தேவை, விருப்பம் இல்லையோ அங்கே துன்பமில்லை. தேவை- இது தான் எல்லாத் துன்பங்களுக்கும் தந்தையாகும்.  விருப்பங்களெல்லாம் வெற்றி- தோல்விச் சட்டங்களால் கட்டுண்டு கிடப்பவையாகும்.  விருப்பம் துன்பத்தை உடன் கொண்டு வந்தே தீரும்.

…துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றென்பது பேர் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்ட பிறகும் கூட,  பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப்படுகிறார்கள்.  ‘மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் ஆசையாகும்!‘ என்று நீ படித்ததில்லையா?….

‘….நான் பணிக்காகப் பணி புரிகிறேன்‘ என்று கூறுவதைவிட எளிய காரியம் ஒன்றுமில்லை.  ஆனால் அந்த நிலையை அடைவதை விடக் கடினமானது வேறொன்றுமில்லை.  வேலைக்காகவே வேலை செய்கிற ஒரு மனிதனின் திருமுகத்தைக் காண, நான் கை கால்களை மண்டி போட்டுத் தவழ்ந்து இருபது மைல் தூரம் போக ஆயத்தமாக இருக்கிறேன்.  எங்கேயோ ஒரு உந்து சக்தி அவருக்கிருக்கிறது.  அவருக்குப் பண ஆசையில்லையென்றால் அதிகார ஆசை இருக்கும்.  அதிகார ஆசையென்றால் லாப நோக்கமிருக்கும்.  எப்படியோ, எங்கேயோ உந்து சக்தி மறைந்திருக்கிறது.

….இவ்வாறாக ஓர் உள்காரணத்தை மனத்திற் கொண்டு செய்கிற வேலை துன்பத்தைக் கொண்டு வருகிறது.  எந்த வேலையை நமது மனத்துக்கு நாமே அதிபதியாக நாம் செய்கிறேமோ அந்த வேலை மட்டுமே பற்றின்மையையும் ஆனந்தத்தையும் கொடுக்கும்.

சுயநலமின்றி வேலை செய்கிறவனே மிகச் சிறப்பாக வேலை செய்கிறான்:

buddha_with_ananda….ஏதாவது ஓர் உள்நோக்கம் இன்றி வேலை செய்ய முடியாது என்று பலர் கூறியுள்ளார்கள்.  மூர்க்கமான வெறிக் குணத்தினால் ஆட்கொள்ளப்பட்டு மனிதர்கள் வேலை செய்வதை அவர்கள் கண்டிக்கிறார்கள்.  அதைத் தவிர சுயநல எண்ணமின்றி வேலை செய்வதை அவர்கள் பார்த்ததே இல்லை.  ஆகவே தான் இவ்வாறு பேசுகிறார்கள்.

….பண ஆசையோ, புகழ் ஆசையோ வேறேந்த ஆசையோ இன்றி,  எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் வேலை செய்கிறவன் தான் மிகச் சிறப்பாக வேலை செய்ய முடியும்,  அவ்வாறு ஒரு மனிதனால் செய்ய முடியும்பொழுது அவன் ஒரு புத்தனாக ஆகி விடுவான்.  அத்தகைய மனிதனிடமிருந்து உலகத்தையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை தோன்றும்.  இந்த மனிதன் கர்ம யோகத்தினுடைய மகோன்னதமான லட்சியத்தைப் பிரதிபலிக்கிறான்.

….”கடவுளைப் பற்றி நீ கொண்டிருக்கிற பல்வேறு விதமான கருத்துக்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை.  ஆத்மாவைப் பற்றி நுணுக்கமான கோட்பாடுகளை எல்லாம் விவாதிப்பதால் என்ன பயன்? நல்லது செய்; நல்லவனாக இரு.  இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்” என்று கூறிய தேவபுருஷர் புத்தர் ஒருவர் தான்.

அவர் தமது வாழ்க்கையில் தினையளவும் சுயலாப நோக்கமின்றி வாழ்ந்தார்.  அவரை விட யார் தான் அதிகமாக வேலை செய்தார்கள்?  எல்லோரையும் விட மிக உயர்ந்த நிலைக்கு புத்தரைப் போல மேலே சென்றுள்ள ஒரு மனிதனையேனும் சரித்திரத்தில் காட்டுங்கள் பார்க்கலாம்…

….அவர் தான் லட்சிய நிலையை எய்தின உதாரண புருஷரான கர்மயோகி.  சிறிதும் உள்நோக்கமின்றி வேலை செய்தவர் அவர்.  உலகில் பிறந்த மாந்தருள் தலையாயவர் அவர் என்பதை மனிதகுல வரலாறு காட்டுகிறது.  உணர்ச்சிமயமான உள்ளமும் கூர்மையான புத்தியும் அவரிடம் இணைந்து கலந்து திகழ்ந்தன.  அதற்கு ஒப்புவமையே கிடையாது.  உலகில் வெளிப்பட்ட ஆத்ம சக்தி அவருடையதாக இருந்தது.

Sun and sea….கடலிலிருந்து சூரியன் நீரை உறிஞ்சி எடுக்கிறான் – திருப்பித் தருவதற்காக.  பெறுவதற்கும் தருவதற்குமாக அமைந்த இயந்திரம் நீ.  கொடுப்பதற்காக நீ வாங்குகிறாய்.  ஆகவே பிரதிபலனாக எதனையும் கேட்காதே.  ஆனால் நீ எவ்வளவுக்கு அதிகமாகக் கொடுக்கிறாயோ, அவ்வளவு அதிகம் உனக்கும் கிடைக்கும்.  இந்த அறைக்குள்ளிருக்கும் காற்றை நீ எவ்வளவு விரைவாகக் காலி பண்ணுகிறாயோ, அதே வேகத்துடன் வெளிக்காற்றால் இந்த அறை நிரம்பிப் போகும்.

ஆனால் நீ எல்லாக் கதவுகளையும் மூடி, சந்துகளையெல்லாம் அடைத்து வைப்பாயானால், உள்ளே இருப்பது அப்படியே இருக்கும்.  ஆயின் வெளியிலிருப்பது ஒருபோதும் உள்ளே வராது,  அத்துடன் உள்ளேயிருப்பது தேங்கிப் போய்,  இழிந்து விஷமயம் ஆகிவிடும்.  நதியானது தொடர்ந்தாற் போலக் கடலுக்குள் சென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து அது நிறைவு பெற்றுக் கொண்டேயிருக்கிறது. கடலுக்குள்ளே நுழைவதைத் தடுக்காதே; தடுத்தால் அக்கணமே மடிந்து போவாய்.

***

சுயநலமின்றி வேலை செய்கிறவனே மிக உயர்ந்த வெற்றியைப் பெறுகிறான்:

பற்றுணர்ச்சி தான் மனிதனுக்குத் தளை ஆகிறது.  மனித குலத்துக்கும், இயற்கைக்கும் பற்றற்ற நிலையில் சமர்ப்பணம் செய்யப்படுகிற வேலை மட்டுமே எந்தவிதமான தளையையும் உடன்கொண்டு வருவதில்லை.

சுதந்திரமாகவும், அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை.  அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது.  வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை.  அதுபோலத் தான் வாழ்க்கையெல்லாம்.  பொது வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.  மேடைப் பேச்சாளனுக்குக் கொஞ்சம் கைதட்டலும் ஆரவாரக் கூச்சலும் எதிர்ப்பும் தேவைப்படுகிறது.  அதெல்லாம் இன்றி அவனை ஒரு மூலையில் இருத்தினால் அவனைக் கொன்று விடுவீர்கள்.  ஏனெனில் அது அவனுக்குத் தேவையாகும்.  இதுதான் அடிமைத்தனத்தின் மூலம் வேலை செய்வதாகும்.  இத்தகைய சூழ்நிலையில் எதையாவது பிரதிபலனாக எதிர்பார்ப்பது சுபாவமாக ஆகிவிடுகிறது.

Help 2வெற்றிமுகமாக உள்ள ஒரு மனிதனுக்குப் பின்னணியில் எங்கேயோ ஓர் இடத்தில் அபாரமான நேர்மைக் குணமும் அபாரமான நாணயமும், இருந்திருக்க வேண்டும்.  வாழ்க்கையில் அவன் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு அதுவே காரணம். பூரணமாக அவன் சுயநலமற்றவனாக இல்லாமற் போகலாம். இருப்பினும் அந்நிலையை நோக்கி அவன் சென்று கொண்டிருக்கிறான்.  பரிபூரணமாகவே அவன் சுயநலமற்றிருந்தால் புத்தரைப் போலவோ, கிறிஸ்துவைப் போலவோ அவனும் மகா புருஷனாகியிருக்க முடியும்; எங்கு நோக்கினாலும் சுயநலமின்மையின் தரத்தைப் பொறுத்து தான் வெற்றியின் தரமும் அமைகிறது.

உண்மையான வெற்றிக்கு, உண்மையான  மகிழ்வுக்கு மகத்தான ரகசியம் இது தான். பிரதிபலனாக எதையும் கோராத மனிதன் தான்,   பூரணமாகச் சுயநலமற்ற மனிதன் தான் மாபெரும் வெற்றியை அடைகிறான்.  ஆனால் அத்துடன், அதுவும் பொருத்தமற்றதொரு புதிராகவும் தோன்றுகிறது.  வாழ்க்கையில் சுயநலமில்லாத மனிதன் ஏமாற்றப்படுவதையும் நாம் பார்க்கிறோமே!

மேம்போக்காகப் பார்த்தால் அது உண்மை தான், ‘கிறிஸ்து சுயநலமற்றவராயிருந்தார், ஆயினும் அவர் சிலுவையில் அறையப்பட்டார்‘ இது உண்மையே தான்.  ஆனால் அவரது சுயநலமின்மை தான் மகத்தானதொரு வெற்றிக்குக் காரணமாக, மூலமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.  தமது உண்மையான வெற்றியின் அருளாசியால் கோடிக் கணக்கான மக்களுக்கு அவர் உயர்வளித்தார்.

***

குறுகிய  நோக்கமான நான்என்ற உணர்ச்சியைக் கைவிடுக:

ஒரு மனிதன் யோகத்தின் மூலமாக வேலை செய்யும்போது ’நான் இதைச் செய்கிறேன். அதைச் செய்கிறேன்’ என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றாது.  மேல்நாட்டு மக்கள்  இதை ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை.  ‘நான்‘ என்ற தன்மையுணர்ச்சி  போய்விட்டால், அகங்காரம்- மமகாரம் போனால், ஒரு மனிதன் எப்படித் தான்  வேலை செய்ய முடியும்? என்று கேட்கிறார்கள்.  தன்னைப் பற்றிய நினைப்பையே இழந்து, ஒரு மனிதன் கவனமும் கருத்தும் குவிந்து, வேலை செய்வானாயின் அவன் செய்கிற வேலை எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும்.  இந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் காணலாம்.

நமக்குத் தெரியாமலே நாம் பல காரியங்களைச் செய்கிறோம்.  உதாரணமாக  உணவைத் தெரியாமலே  ஜீரணிக்கிறோம்.  இன்னும் பலவற்றை நினைவோடு செய்கிறோம்.  மற்றவற்றைச் சமாதி நிலையில் மூழ்கினாற்போல் செய்கிறோம்.  அந்நிலையில் நமது சிறிய அகங்காரதுக்கு இடமில்லை.

Gitaஓவியம் தீட்டுகிறவன்,  தான் என்ற அகங்காரத்தை இழந்துவிட்டுத் தனது ஓவியத்தில் முற்றிலும் மூழ்கி விடுவானாயின், அவனால் மிக உத்தமமான ஓவியங்களைத் தீட்டமுடியும்….. யோகத்தின் மூலம் இறைவனுடன் ஒன்றிவிட்ட மனிதன்,  எல்லாச் செயல்களையும் மனங்குவிந்து தியானத்தில்  மூழ்கிச் செய்வான்.  தன்னலம் எதனையும் கருத மாட்டான். அத்தகைய வேலை நடப்பதன் மூலம் உலகத்துக்கு நன்மை தான் ஏற்படுமே தவிர,  தீமை எதுவும் தோன்றாது….. எல்லாக் காரியங்களையும் இப்படித் தான் செய்ய வேண்டுமென்று கீதை உபதேசிக்கிறது.

நம்மை உள்ளே போட்டு அடைத்து வைக்கிற உடையாத நெடுஞ்சுவா ’அகங்காரம்’ தான்.  ‘நான் இதைச் செய்கிறேன். அதைச் செய்கிறேன். எல்லாவற்றையும் செய்கிறேன்‘ என்று எல்லாவற்றுக்கும் நம்மையே சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம். சோனியாக இருக்கிற இந்த ’நான்’ என்ற தன்மையை ஒழித்து விடுக.  நம்முள் இருக்கிற இநத் பேயைச் சாகடித்துவிட வேண்டும்,  ‘’நான் அல்ல. நீங்கள் தான்” –  இதனை எப்பொழுதும் கூறுக;  உணருக; வாழ்ந்து காட்டுக. ‘நான்‘ என்னும்  அகங்காரம் உள்ள உலகத்தை நாம் துறந்து கைவிட்டாலன்றி சுவர்க்க சாம்ராஜ்யத்தினுள் ஒருபோதும் நுழைய முடியாது.

….மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது.  அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்திப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விடுவார்கள்.  ‘நான்‘ ‘எனது‘ என்று அவர்கள் ஒருபோதும் சொல்லுவதில்லை; கருவியாக இருப்பதே பெரும் பாக்கியம் என்று வாழ்வார்கள்.  புத்தர்களையும் கிறிஸ்துக்களையும் நிர்மாணிக்கிறவர்கள் இத்தகையவர்களே….

…..அவர்களெல்லாம் முழுவதும் கொள்கையின் வடிவங்கள் தாம்; மனிதர்களல்ல,

…..கடவுள் தம்மை முற்றிலும் மறைத்துக் கொண்டுள்ளார்.  அவரது வேலையும் இணையற்று உள்ளது.  ஆகவே, யாரால் தன்னை முற்றிலும் மறைத்துக் கொள்ள முடியுமோ அவரது சாதனை அபாரமானதாக ஆகிறது.  உனது அகங்காரத்தை ஜயித்து விடு;  பிறகு உலகமெல்லாம் உன்னுடையதாகிவிடும்.

அதிர்ஷ்டத்தின் ரகசியம்:

……எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாதவனுக்கு எல்லாம் வந்து சேருகிறது.  அதிர்ஷ்டம் ஒரு மாய சரசக்காரியைப் போல.  அவளை யார் விரும்புகிறார்களோ, அவர்களை அவள் லட்சியம் பண்ண மாட்டாள்…. யாருக்குப் பணத்தைப் பற்றிக் கவலையே இல்லையோ, அவன் மீது பணம் மழை போலப் பொழிகிறது.  அதுபோலத் தான் புகழம், ஒரு தொல்லையாக, பளுவாக ஆகிவிடும் அளவுக்கு வந்து சேருகிறது.  அவற்றை வென்றவனிடம் தான் அவை வருகின்றன.

அடிமைக்கு ஒருபோதும் எதுவுமே கிடைக்காது.  உலகத்திலிருக்கிற  அற்பத்தனமான, முட்டாள்தனமான வஸ்துக்களை நம்பி எதிர்பார்த்து எவர் வாழவில்லையோ, அவை இன்றியே எவரால் வாழ முடியுமோ, அவர்தான் எஜமானராக இருப்பார்.  ஒரு லட்சியத்துக்காக அந்த ஒரே லட்சியத்துக்காக வாழ வேண்டும். அந்த லட்சியம் மிகப் பெரியதாக,  மிக்க பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்; மனத்தில் அதைத் தவிர வேறு எதற்கும் இடமிராத அளவுக்கு அது வியாபித்து இருக்க வேண்டும்.  வேறு எதற்கும் நேரமிருக்கக் கூடாது, வேறெதற்கும் இடமிருக்கக் கூடாது.

கருவிக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்:

Budha2ஒரு வேலையின் குறிக்கோளைப் பற்றி எவ்வளவு கவனம் செலுத்துவோமோ, அதே அளவு கவனம் அதை அடையும் வழிமுறை பற்றியும் செலுத்த வேண்டும்.  எனது வாழ்க்கையில் நான் கற்ற மிகப் பெரிய படிப்பினைகளில் இது ஒன்று ஆகும்… முடிவைப் பற்றிக் கவலைப்படுவது போல, வழிமுறையைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்.  வெற்றி வெறுவதற்கான ரகசியம் இது தான்.

நமது வாழ்க்கையிலுள்ள ஒரு பெரும் கேடு என்னவெனில், நாம் லட்சியத்தினால் மிகத் தீவிரமாகக் கவரப்படுகிறோம்;  குறிக்கோள் நமக்கு மயக்க வெறியூட்டுகிறது; நமக்கு போதையளிக்கிறது.  நமது மனம் முழுவதையும் சூழ்ந்துகொண்டு விடுகிறது;  அதன் காரணமாக அந்த லட்சியத்தை எய்துவதற்கான நுண்ணிய விவரங்கள் நமது பார்வையில் அடியோடு தென்படுவதேயில்லை,

ஆனால் தோல்வி ஏற்படும் போதெல்லாம் அதற்கான காரணத்தை நாம் நுட்பமாக அலசி ஆராய்ந்தால் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சந்தர்ப்பங்களில், நாம் அவ்வேலையைச் செய்ய வேண்டிய வழிமுறை பற்றிக் கவனம் செலுத்தாமற் போனதே காரணம் என்பது தெரியவரும்.

கடைபிடிக்க வேண்டிய பாதையை, பயன்படுத்த வேண்டிய கருவியை, நன்கு செவ்வனே தயாரிப்பதிலும் அதனைப் பலப்படுத்துவதிலும் தக்க கவனத்தை நாம் செலுத்துவது தான் தேவையாகும். வழி சரியானதாக இருந்தால் முடிவு தானே தேடி வரும்.

காரணம் தான் காரியத்தை உண்டாக்குகிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.  பலன் தானே ஏற்படாது.  காரணங்கள் திட்டவட்டமானதாக, பொருத்தமானதாக, ஆற்றல் வாய்ந்ததாக இருந்தால் ஒழியப் பலன் ஏற்படாது.

ஒரு தடவை லட்சியத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு, வழிமுறைகளைத் தீரிமானித்து விட்டால், லட்சியத்தை அநேகமாக நாம் மறந்தே விடலாம்;  ஏனெனில் வழிமுறையானது அப்பழுக்கற்றிருக்குமாயின் லட்சியத்தைக் கடைசியில் நிச்சயமாக அடைந்தே தீருவோம்.  காரணம் சரியாக இருக்குமாயின் காரியத்தைப் பற்றி எவ்விதக் கஷ்டமுமில்லை, பலன் வந்தே தீரும்.  காரணத்தை நாம் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டால் காரியம் தானே சரிப்பட்டுவிடும்.

லட்சியத்தை அடைவது என்பது காரியம்.  அதற்காகக் கருவிகள், வழிமுறைகள் என்பவை காரணம். ஆகையால் கருவியைப் பற்றி, வழிமுறையைப் பற்றிக் கவனம் செலுத்துவது தான் வாழ்க்கையிலுள்ள மாபெரும் ரகசியம்….

(தொடரும்)

அடுத்த பகுதி >>

2 Replies to “எழுமின் விழிமின் – 31”

  1. மொரார்ஜி தேசாய் அவர்கள் பிரதமராக ஆனபோது மேலே ரானடே அவர்களின் புத்தகத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு ஸ்தித பிரக்ஞராக இருந்தார். ஆனால் அவரை போன்ற நல்லவரை நம் நாடு உயர்ந்த பதவியில் 27 மாதங்களுக்கு மேல் நீடிக்க விடாமல், சரண்சிங் என்ற பெயரில் நம் நாட்டை பிடித்த ஏழரை நாட்டு சனியனாக வந்து தாக்கியது.

    எதையுமே நாடாமல் இருப்போருக்கு எல்லாமே வந்து சேரும் என்பது சில நேரங்களில் தான் உண்மை ஆகிறது.. அது எப்போதும் உண்மை அல்ல. இயற்கையின் விளையாட்டில் நாம் எல்லாம் சிறு கருவிகளே ஆவோம்.

  2. //‘கிறிஸ்து சுயநலமற்றவராயிருந்தார், ஆயினும் அவர் சிலுவையில் அறையப்பட்டார்‘ இது உண்மையே தான். ஆனால் அவரது சுயநலமின்மை தான் மகத்தானதொரு வெற்றிக்குக் காரணமாக, மூலமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்//
    I do not understand this. Jesus claimed himself to be the son of God which did not go well with the Romans, hence the crucification.. Nothing to do with Jesus being unselfish.

    //தமது உண்மையான வெற்றியின் அருளாசியால் கோடிக் கணக்கான மக்களுக்கு அவர் உயர்வளித்தார்//
    How?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *