ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி…

கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங்கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்.

மேலே உள்ள அர்த்தத்தைக் கொடுக்கும் ஸ்லோகத்தைப் பற்றிப் பேசும்போது, சென்ற தொடரில் நான்கு வகையான மகா வாக்கியங்களின் அடிப்படையில் ஏதோ ஒன்றின் அடிப்படையில் சொல்லப்படும் ஒரு மந்திரத்தை குரு சொல்லக்கேட்டு சாதகன் தன் முயற்சியை ஆரம்பிக்கிறான் என்று பார்த்தோம்.

aham-brahmasmi

பிரம்மத்தைப் பற்றிச் சொல்லப்படும் இந்த நான்கு முறைகளிலிருந்தே நாம் மனிதர்களின் வகைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். சிலருக்கு வேத வாக்கு என்று சொன்னால் போதும், அவர்கள் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறுவார்கள். “ப்ரக்ஞாநாம் ப்ரஹ்ம” : அவர்களுக்கு இதுதான் இலக்கணம் என்று சொன்னால் போதும். வேறு சிலருக்கு இதுதான் எங்களது அனுபவம்: “அஹம் ப்ரஹ்மாஸ்மி”. முடிந்தால் நீங்களும் அதைச் செய்து பார்த்து அனுபவிக்கலாம் என்கிற மாதிரி சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் அனுபவத்தில் சொல்லப்படுவதை நம்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்த மாதிரி சொல்லப்படுகிறது. மற்றொரு வகையினருக்கு தன்னுடைய முன்னோர்களும், பெரியோர்களும் அவர்கள் வாயால் ஒன்றைச் சொன்னால் போதும், அதை பின்பற்றலாம் என்ற அளவு நம்பிக்கை இருக்கும்: “தத் த்வமஸி”. அத்தகையவர்களுக்கு உபதேசம் மாதிரி சொன்னால் போதும். வேறு சிலருக்கோ எதையும் ஏன், எப்படி என்று ஆராய்ந்து கேட்ட பின்பும், அதைக் கடைப்பிடித்தவர்களின் அனுபவமும் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் அறிவினால் முதலில் தெளிந்து, பின் அதன் செய்முறையின் விளைவுகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்கள்: “அயம் ஆத்மா ப்ரஹ்ம”. அத்தகையவருக்கு அவர்கள் புத்திக்கு ஏற்றவாறும் சொல்லி, அதுவே செய்தும் காட்டப்பட்டு இருக்கிறது என்ற விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

இருக்கும் ஒன்றே ஒன்றான ஆத்மாவைப் பற்றி இவ்வாறாக நால்வகை மனிதர்களுக்கு என்று, நான்கு விதமாகச் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இல்லையென்றால் அதற்குத் தேவைதான் என்ன? இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் ஒன்று இருக்கிறது. மனிதர்களாலேயே, அதாவது அவர்களின் எண்ணங்களாலும் செயல்களினாலுமே, எல்லாம் வெவ்வேறாகத் தெரிகின்றன. அப்படி வெவ்வேறு விதமான மனத்திறன் கொண்டவர்களால் ஏற்பட்டிருக்கும் திரைகளை நீக்குவதற்குத்தான், விதவிதமான பயிற்சிகளும் அவரவர் வழிகளில் செய்வதற்கு என்று சொல்லப்பட்டிருக்கின்றன.

அதே போல மக்களில் பலரும் பலப்பல கண்ணோட்டங்களுடனும் இருந்து, தங்களது முதிர்ச்சியில் வெவ்வேறு நிலைகளிலும் இருப்பதால், இந்து சமயத்தில் விதவிதமான கடவுளர்களும் சொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தீர்மானமாகச் சொல்லலாம். ரமணரிடம் வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வழிபடும் முறைகளையும், தங்கள் அனுபவங்களையும், சந்தேகங்களையும் கேட்கும்போது அவரவர்க்கு அவர்கள் செல்லும் வழியிலேயே சென்று அவர்களுக்கு ஏற்ப பதில் சொன்னாலும், குறிப்பாக எதையும் சொல்லாமல் உபதேசம் கேட்பவர்களுக்கு ரமணர் “நான் யார்?” என்று அவரவரும் தன்னுள் ஆழ்ந்து தானே காண வேண்டிய முறையைப் பற்றி மட்டும்தான் சொல்வார். அதாவது ஒருவர் செல்லும் பாதையைப் பற்றி அவருக்குக் குழப்பம் எதுவும் வராதவாறு நமது சொல்லும், செயலும் அமையவேண்டும். எல்லாப் பாதைகளும் கடைசியில் ஆத்மாவைப் பற்றிய அறிவுக்குத்தான் இட்டுச் செல்லும். செய்யும் முயற்சியில் சாதகனது தீவிரம்தான் முக்கியமே தவிர மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

சாதகனுக்கு முதலில் கலக்கம் வரும், பின்பு அவனுக்கு வரும் குழப்பத்திலும் ஒரு முதிர்ச்சி தென்பட்டு தன்னைப் பற்றிய உண்மை நிலையை அறிந்துகொள்ள ஓர் ஆவலும் வரும். அப்போதுதான் அவனது தீவிரத்தைப் பொருத்து மேலும் அவனுக்கு வேண்டியன எல்லாம் அமையும். தீவிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இங்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லும் கதை ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. இறைவனைப் பார்க்க நாரதர் செல்லும் வழியில் தவம் செய்துகொண்டு இருக்கும் இரண்டு முனிவர்களைப் பார்க்க நேரிட்டது. தங்களுக்கு எப்போது முக்தி கிட்டும் என்பதை அறிய ஆவலாய் இருந்ததால், அதனை இறைவனிடம் கேட்டுச் சொல்லுமாறு அவர்கள் நாரதரை வேண்டிக் கொண்டார்கள். நாரதர் திரும்பி வரும்போது, அவர்களில் ஒருவரைப் பார்த்து அவருக்கு இன்னும் மூன்று பிறவிகள்தான் இருக்கின்றன என்றார். அதைக் கேட்ட அவர் திகைத்து, “இன்னும் மூன்று இருக்கிறதா?” என்று சொல்லி வருத்தப்பட்டார். நாரதர் இரண்டாம் முனிவரிடம் ஒரு மரத்தைக் காட்டி அதில் இருக்கும் இலைகளின் எண்ணிக்கை அளவு அவருக்குப் பிறவிகள் இருக்கின்றன என்றார். அதைக் கேட்ட அவர் “பரவாயில்லையே! அதற்கப்புறம் நிச்சயமாக எனக்கு முக்தி இருக்கிறதே” என்று மகிழ்ந்தார். அதைக் கேட்ட நாரதர் உங்களுக்குத்தான் மனம் நல்ல பக்குவ நிலையில் இருக்கிறது; இக்கணமே உங்களுக்கு முக்தி என்று அருளினார். அதுதான் தீவிரமும், அது தரும் நம்பிக்கையும், எல்லாவற்றையும் இறைவனிடம் விட்டுவிடும் மனப்பான்மையும்.

சீவனுடைய கலக்கம் எதனால் வந்திருக்கிறது? அவன் தன்னுடைய உண்மை நிலையை அறியாது, பிறப்பு-இறப்பு, சுகம்-துக்கம் போன்ற இரட்டைகளை உடலுடனும், மனத்துடனும் மட்டுமே சம்பந்தப்படுத்தாது தன்னுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். அந்த அறியாமையோடு இருப்பவனை நிர்மலம் ஆக்குவதுதான் ஞானம் பெறுவதன் குறிக்கோள். அதற்குத்தான் ஆத்ம சாதனையாக அவன் மந்திரோபாசனை பெறுதல், அந்த ஒன்றிலேயே மனத்தை இருத்தல், தியானம் செய்தல் போன்ற எல்லாவற்றையும் முறையாகக் கடைப்பிடிக்கிறான். வேறு எந்த வழியைப் பின்பற்றி வந்தாலும் இறுதியில் அவன் ஆன்மாவைப் பற்றி அறிந்து இவ்வாறு சாதனை செய்யும்போது, அவனது விருத்தி ஞானம் (perceivable power) அவனுக்கு அவனது உண்மை நிலையான சொரூப ஞானம் (existential knowledge) பற்றி அறிவிக்கின்றது. கேள்வி கேட்டு, முயற்சி செய்யும் ஞானம் வேறு, தான் இருக்கும் இருப்பை தானாய் இருந்து தன்னை அறியும் சொரூப ஞானம் வேறு. பின்னதுதான் ஆன்ம ஞானம். அந்த நிலையில் சதா சர்வ காலமும் இருக்கும் சொரூப ஞானம் அவனுக்கு வந்ததும், அவனது விருத்தி ஞானம் அழிந்து போகிறது. இதைத்தான் தேத்தாங்கொட்டைப் பொடி எப்படி நீரை சுத்தமாக்கி, அத்துடன் தானும் அழிகிறதோ அதைப் போல விருத்தி ஞானம் அழிகிறது என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.

ramana1112தான் யார் என்பதைத் தான்தான் அறிய வேண்டும். இன்னொருவர் நமக்குச் சொல்வது என்பது நம் அறிவு வரைதான் செல்லும். ஆனால் தான் என்ற இருப்போ அதையும் கடந்தது, அதற்கும் ஆதாரமானது. அதனால் ஒருவன் எல்லாவற்றையும் அறிந்தபின் கேட்டதைத் தன்னில் உணர வேண்டும். அங்குதான் பயிற்சிகள் வருகின்றன. அதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே சாதனம் நமது மனம்தான். மனம் என்பதோ விதவிதமான எண்ணங்களின் தொகுப்பு. மனத்தின் இயற்கையே குரங்குபோல் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவிக்கொண்டு இருப்பது. அதனால் அந்த மனத்தை ஒரே ஒரு எண்ணத்தில் ஈடுபடுத்தி அதைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்குத்தான் மந்திரங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு அது ஒன்றையே சிந்தித்துக்கொண்டு இருப்பது. ஏதோ ஒரு மந்திரம் என்பதைவிட மகா வாக்கியங்களில் ஒன்றாகவோ, அல்லது அவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவோ, இருப்பது ஆன்மாவைப் பற்றி அறிய விரும்பும் முமுக்ஷூவிற்கு நல்லதுதானே.

அப்படிப் பல எண்ணங்களாக இருந்த மனம் மந்திரத் தியானப் பயிற்சியினால் குவிந்து, எடுத்துக்கொண்ட ஒரே எண்ணத்தில் லயிக்கிறது. இதை மனோ லயம் என்பார்கள். எண்ணம் பலவோ அல்லது ஒன்றோ, மனம் மனம்தானே. அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அது எப்படி என்று விளக்குவதற்கு வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் ‘பிணம் சுடு தடி போல்’ என்ற அந்த உவமையை “உள்ளது நாற்பது” நூலில் சேர்த்திருக்கிறார். கட்டைகள் போட்டு நெருப்பில் இடப்பட்ட பிணம் ஒன்றை எரிப்பதற்கு கழி ஒன்றை உபயோகப்படுத்துவார்கள். அதை வைத்துக்கொண்டு அவ்வப்போது சிதையை கிண்டிக் கிளறிக்கொண்டு இருப்பார்கள். அப்படிச் செய்வதன் மூலம் சாம்பல் கீழே இறங்கி, கட்டைகள் நன்கு எரிந்து, உயிரற்ற உடலும் சீராக வேகும். கடைசியில் பிணம் நன்கு சுடுவதற்கு இருந்த கழியையும் அந்த சிதை மேலேயே போட்டுவிடுவார்கள். இப்படியாக மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள். இருக்கும் ஒன்றைப் பலப்பலவாகக் காட்டிய மனம் நாசமடைவதால், எப்போதும் உள்ள ஆன்மா ஒன்று மட்டுமே அங்கு இருப்பதை உணரலாம். அங்கு உணர்வு மட்டுமே உள்ளதால், அந்த உணர்வே நமது இருப்பு என்றாகிறது. அது இப்போதும் இருப்பதை நாம் உணராததுதான் அறியாமை என்று சொல்லப்படுகிறது.

(6)

ஸம்ʼஸார​: ஸ்வப்னதுல்யோ ஹி ராக³த்³வேஷாதி³ ஸங்குல​: |
ஸ்வகாலே ஸத்யவத்³பா⁴தி ப்ரபோ³தே⁴ ஸத்யஸத்³ப⁴வேத ||

விருப்பு வெறுப்பு ஆதி விகார சம்சாரத்து
இருப்பும் கனாவுக்கு இணை அஹ்து – உருப்படும்
போது மெய் போலப் பொலியுமே போதம் உதி
போது அதுவும் பொய்யாகிப் போம்.

நமது விருப்பு வெறுப்பு முதலான குணங்களால் மாறுபட்டுக் காண்கின்ற இந்த சம்சாரத்தில் நாம் காணுவதெல்லாம் நம் கனவுக்கு நிகரானது. கனவு காணும்போது அவை எல்லாமே மெய்போலத் தோன்றினாலும் அவை எல்லாமே பொய் என்பதை நாம் பின்பு உணர்கிற மாதிரி, அறியாமை அகன்று ஆன்மாவைப் பற்றி நாம் அறிந்ததும் சம்சாரத்தில் காணுவதைப் பொய் என்பதையும் உணர்வோம்.

உலகம் எப்போதும் அதனுடைய தன்மையில் தானாக இயற்கையாக இருக்கிறது. அதைப் பார்க்கும் நாம்தான் நமது கண்ணோட்டத்தினால் அதை வெவ்வேறு மாதிரியாகப் பார்க்கிறோம். நமது விருப்பங்களுக்கும், வெறுப்புகளுக்கும் தகுந்தாற்போல் அதை மாறுபட்டதாகக் காண்கிறோம். அதனாலேயே ஒவ்வொருவருக்கும் உலகம் வெவ்வேறாகத் தெரிகிறது. உலகில் இருப்பதை அது இருக்கிறபடியே பார்ப்பவனுக்கு எந்த வித விகாரமும் தெரியாது. அப்போது அவன் மிகவும் அமைதியோடு இருப்பான்.

cartesian_theaterஉலகில் பல பொருட்கள் இருக்கின்றன, பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றி நாம் நினைப்பதுதான் நமது எண்ணங்கள். நமக்கு அவை பிடித்திருந்தால் அவை நல்லதாகவும், பிடிக்காதிருந்தால் அவை கெட்டதாகவும் நாம் நினைப்பதும் நமது எண்ணங்களே. உலகத்தில் இருப்பதை நம் விருப்பும், வெறுப்பும் எப்படி மாற்றுகின்றன என்று இப்போது புரிகிறதா? நாம் இன்னும் என்னவென்ன செய்கிறோம் என்று பாருங்கள். நமக்குப் பிடித்த பொருள் என்றால் அவைகளை அடையவும், பின்பு அனுபவிக்கவும் எண்ணுகிறோம். உலகில் நம் ஈடுபாடு இப்படித்தான் ஆரம்பிக்கின்றன.

அடைவது என்பதால் முதலில் அதன் மேல் ஆசையும், அடைந்த பின் அதன் மேல் நமக்கு ஆளுமையும் தோன்றுகிறது. இங்குதான் அகங்காரம் வேர் விட்டு வளர்கிறது. ஆக நம் ஈடுபாடு உலகை இப்படி படுத்தினாலும், ஒரு கட்டத்தில் அந்தப் பொருளால் நமக்கு வெறுப்பு வந்தால், உலகம் நம்மை படாதபாடு படுத்துவதாக நாம் சொல்வோம். அதாவது உண்மை நிலையையும் நாம் புரிந்துகொள்ளவில்லை என்பதோடு, நம் அகங்காரமும் நுண்ணியதாக மாறிவிட்டது என்றாகிறது. நமது பார்வைகளையும், எண்ணங்களையும் சரிசெய்ய வேண்டியது நமது முதல் கடமை என்று நமக்கு இதிலிருந்து தெரிகிறது.

ஒருமுறை ரமணாஸ்ரமத்தில் சில நாட்கள் தங்குவதற்குச் சென்றவரால் இரவில் நன்கு தூங்கவே முடியவில்லை. அவரைச் சுற்றியிருந்த அனைவரும் நன்கு தூங்கிக் கொண்டிருக்க, அவரைச் சுற்றிலும் ஒரே சத்தமாகவும், யாரோ வருவதும் போவதுமான சலசலப்பும் இருந்தது. மறுநாள் அவரைப் பார்க்கும் போது அவர் நன்கு தூங்கினாரா என்று ரமணர் விசாரிக்க, தான் தூங்கமுடியாது இரவில் அவர் கேட்ட சத்தங்களைப் பற்றிச் சொன்னாராம். இரவில் எந்த வேலையும் அங்கு நடைபெறாததால், உடனே ரமணர் மற்றவர்களிடம் அது பற்றி விசாரிக்க எல்லோருமே தாங்கள் நன்கு தூங்கியதாகச் சொல்ல, ரமணரும் அவரைப் பார்த்து அந்த சத்தமெல்லாம் உங்களுக்குள் இருந்து வந்திருக்க வேண்டும் என்றாராம்.

அவர் மாதிரி இன்னுமொரு அன்பர் மூன்று நாட்கள் ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டுத் தன்னுடைய ஊருக்குப் புறப்படும் முன் ரமணரிடம் ஆஸ்ரமத்தில் என்ன என்ன நடக்கிறது, எப்படி அதெல்லாம் மாறவேண்டும் என்று சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, ரமணர் அவர் எதற்காக ஆஸ்ரமத்திற்கு வந்தார் எனக் கேட்க, அவரும் தன்னைத் திருத்திக்கொள்ள என்று சொன்னாராம். அதற்கு ரமணர் “அதைச் செய்யாமல், தங்களைச் சுற்றியுள்ளதைத் திருத்தப் பார்க்கிறீர்களே” என்றாராம்.

மேலே சொன்ன இரு நிகழ்ச்சிகள் மாதிரித்தான் உலகில் நடக்கின்றன. எவருமே நடப்பதைத் தங்கள் தங்கள் விருப்பு, வெறுப்புகளை வைத்துக்கொண்டு பார்க்கின்றனர். உலகத்தைத் திருத்துவதைவிடத் தன்னைத் திருத்திக்கொள்வதே மேலானது. அது ஒருவனுக்கு அமைதியைக் கொடுக்கும். உலகம் அப்படித்தான் இருக்கும் என்ற தெளிவு ஒருவனுக்கு அவசியம். சமூக வேலைகளில் மூழ்கியுள்ளவனுக்கும் இந்த வார்த்தைகள் நிச்சயமாகப் பொருந்தும். தினப்படி பலரிடம் தொடர்புகொள்ள வேண்டியவனுக்கு அது எப்படி முடியும் என்றால், ஒருவன் அந்த மாதிரி வேலையையோ, சேவையையோ தேர்ந்தெடுத்துச் செய்கிறான் என்றால் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்துச் செய்வதை அவன் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அர்த்தம். வேறு மாதிரி அவை இருந்திருக்கவேண்டும் என்று அவன் எதிர்பார்ப்பதுதான் தவறு. அதை இயல்பு என எடுத்துக்கொண்டால்தான், அவன் உண்மையில் அமைதியாக இருக்க முடியும்.

அதற்காக இயற்கை எப்படி இருக்கிறதோ அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று சொல்வதாக அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. இயற்கையில் ஒன்று எப்படி இருக்கிறதோ அது நம் எண்ணத்திலும் அப்படியே இல்லாமல் வேறு விளைவுகளைத் தோற்றுவித்தால், அப்போது நமக்கு வரும் எண்ணங்கள்தான் நம்மை ஏதேனும் செய்யவைக்கின்றன. அப்போது நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது, உள்ளத்தில் ஒன்றும் வெளியே வேறொன்றுமான நமது சோம்பேறித்தனமான அல்லது கோழைத்தனமான நிலை என்று ஆகிவிடும். மாற்றம் செய்ய விரும்புபவன் அதற்கேற்ப ஏதும் செய்யும் போது, அதன் விளைவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற மனநிலையோடு, வருவதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். விளைவு நாம் விரும்புவது போல்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.

ஒன்றைச் செய்ததற்கும், செய்ததால் வரும் விளைவுகளுக்கும் பொறுப்பு ஏற்பவனாய் ஒருவன் இருக்கும்போது, அவன் மேலும் செல்ல வேண்டிய வழி அவனுக்கு நன்கு தெளிவாகத் தெரியவரும். மனத்தில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக இருப்பவனுக்குக் காலம் முழுவதும் வாழ்க்கை ஒரு பிரச்சினை ஆகிவிடும். ஒன்றை நாம் ஏன் செய்தோம் என்றால், அதைச் செய்வதற்குரிய எண்ணங்கள் நமக்கு வந்தன என்பதை ஏற்பவனே பொறுப்பானவன் ஆகிறான். ஒன்றைச் செய்துவிட்டு, புகழ் வந்தால் நமக்கு பழி வந்தால் பிறருக்கு என்று இருப்பவன் சமுதாயத்தில் பொறுப்பற்றவன் என்பது மட்டுமல்ல, அவன் வாழ்க்கையே முதலில் சொகுசாக இருப்பது போலத் தோன்றினாலும் நாளடைவில் தினந்தோறும் அனுபவிக்கும் நரகமாக ஆகிவிடும்.

adi-sankara1பரிணாம வளர்ச்சியில் மற்ற சீவராசிகளைவிட மனிதன் முன்னேறி, தன் சுற்றுச்சூழலை மேம்படுத்துபவன் என்பது உண்மையானால் அவன் எப்படி விலங்குகள் போலவே இருக்கலாம்? பிரம்ம சூத்திரத்தின் உரையில் ஆதி சங்கரர் சொல்வதுபோல மனிதர்களுக்கும் மற்ற விலங்குகள் போலவே விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையிலேயே அவர்கள் வாழ்க்கை பொதுவாக அமைகின்றது. தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித் தானே ஓடி வருகிறது? இப்படித்தான் மனிதர்களும் தான் விரும்புவதை நோக்கி ஓடிக்கொண்டும், வெறுப்பதை விட்டு விலகியும் இருக்கிறார்கள். விலங்குகளின் இந்தக் குணத்திலிருந்தும் மனிதன் மீள வேண்டாமா என்று கேட்கிறார். அப்படி விலங்குகளின் தன்மையிலிருந்து மீண்டு மனிதத் தன்மைகளை வளர்த்தால்தானே, எல்லாவற்றையும் சமமாகக் காணும் உயர்ந்த தெய்வீகத் தன்மையை அடைய முடியும்?

வாழ்க்கை என்பதை அனுபவிக்கத்தானே பிறந்திருக்கோம், அதில் இன்பம்-துன்பம் இல்லாதிருந்தால் எப்படி சுவாரசியமாக இருக்கும் என்பதே பலரது கேள்வி. அவர்களுக்கு ஒரே பதில்தான் இருக்கிறது. இன்பம் அடைந்தால் மகிழ்வதும், துன்பம் நீங்கினால் மகிழ்வதும் தானே நமது இயல்பு என்றால் எப்போதும் மகிழ்வுடன் இருப்பதே நமது குறிக்கோள் என்றாகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சியை உலகில் நமக்கு விரும்பிய பொருட்களை அடைவதற்கும், வெறுக்கும் பொருட்களைத் தவிர்ப்பதற்கும் உண்டான செயல்களின் விளைவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால் நாம் விருப்பு-வெறுப்பு அற்ற நிலையைத் தேடி அதனை அடைந்தால் நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இது உங்களுக்குச் சரி என்று தோன்றினால் நீங்களும் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கலாம், இல்லையென்றால் உங்கள் வழியிலேயே போய்ப் பாருங்கள் என்பதுதான் அவர்களுக்கான பதில்.

(தொடரும்)

5 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5”

  1. நல்ல கருத்துக்களின் சுருக்கமான தொகுப்பு. இந்தப்பணி தொடரட்டும். அனைவர்க்கும் உபயோகமானது இந்த தொடர். படித்து முடித்தவுடன் ஒரு இரண்டு மணிநேரம் கட்டுரை தலைப்பினை சுற்றியே வாசகர்கள் மனத்தினை சிந்திக்க வைப்பதில் கட்டுரையாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிகள் தொடரட்டும்.

  2. வாசகர் அத்விகாவின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. எனது மொழிபெயர்ப்பான வால்மீகி ராமாயணத் தொடரிலும் தங்கள் மறுமொழிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களைப் போல வேறு வாசகர்களின் மறுமொழிகளுக்கும் மிக்க நன்றி. அதில் இன்னமும் 7 பகுதிகள் வரவிருக்கின்றன. அவை எல்லாவற்றையுமே சென்ற வருடம் மே மாதத்தில் முடித்தாகி, இணையதளத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டன. “ஆன்ம போத”த்தின் இந்தப் பகுதியை நான் சென்ற வருடம் ஜூன் மாதத்தில் எழுதினேன். இன்று நான் எழுதிக்கொண்டிருப்பது இத்தொடரின் 16-ம் பகுதியை. இவை எல்லாமே கூடிய சீக்கிரம் பதிக்கப்படும்போது அவை தங்கள் போன்ற வாசகர்களுக்கு ஓர் ஆன்ம விருந்தாக அமையும் என எதிர்பார்க்கிறேன். அதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியட்டும்.
    – ராமன்

  3. பலமுறை படித்து விட்டேன். மனம் நெகிழ்கின்றது.

    ‘பிணம் சுடு தடி போல்’ என்ற அந்த உவமை மிகவும் அருமையாக உள்ளது.

    திரு ராமன் அவர்களுக்கு நன்றி.

  4. கட்டுரை ஆசிரியருக்கு மிக்க நன்றி! மனதை கொண்டே மனதை விசாரணை செய்வதை திருமூலரும் திருமந்திரத்தில் ” என்னை அறிந்திலன் இதனை காலமும், என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலன், என்னை அறியும் அறிவை அறிந்தபின், என்னை விட்டு என்னை உசாவுகின்றேனே” – உசாவுதல், விசாரணை செய்தல் அல்லது ஆன்மாவில் லயித்தல். ஆசிரியர் இது போல் இன்னும் பல கட்டுரை தொடர்ந்து வெளியிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *