இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்

தமிழாக்கம்      : எஸ். ராமன்

26.1 பெரிதினும் சிறிதே தடை

rama1அந்தக் கடைசி எச்சரிக்கையும் எந்தப் பயனும் அளிக்காது போகவே, இராமர் வானரர்களுக்குத் தாக்குதலைத் தொடங்க சமிக்ஞை கொடுத்தார். அரக்கர்களும் படை படையாக தங்களின் நூதன ஆயுதங்களுடன் கோட்டைக்கு வெளியே வந்து வானரர் தாக்குதலுக்கு ஈடு கொடுத்தனர். வானரர்களுக்கோ கற்களும், மரங்களுமே ஆயுதங்களாக இருந்தன. நேரம் செல்லச் செல்ல சண்டை வலுத்துக்கொண்டு வந்து, இரண்டு பக்கத்திலும் இழப்புகள் நிறைய இருந்ததால் களத்தில் ரத்த ஆறு ஓடியது. மாலை நேரம் போய் இருட்டிக்கொண்டு வந்ததால், எதிரில் இருப்பது நண்பனா பகைவனா என்று சரியாகப் பார்க்க முடியாதபோதும் சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. அரக்கர்களுக்கு திருட்டுத்தனத்திலும், மாய வித்தைகளிலும் பழக்கம் உள்ளதால் இரவு நேரத்தில் இன்னும் நன்றாகவே சண்டைபோட முடிந்தது.

அப்போது இராமரும், லக்ஷ்மணனும் போரில் கலந்து கொள்ள களத்தில் இறங்கியதால், அரக்கர்களுக்கு உதவியாக இந்திரஜித்தும் போர்க்களத்தில் குதித்தான். அங்கதன் இந்திரஜித்துடன் மோதி, ஒரே அடியில் அவனது தேரை ஒட்டிய சாரதியையும், குதிரைகளையும் வீழ்த்தினான். அதனால் இந்திரஜித் தேரிலிருந்து குதித்து வானில் எழும்பி மாயமாகி மறைந்து போனான். அவன் மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் உலவி வரும் மந்திர சக்தியைப் பெற்றிருந்ததால் இராமர், லக்ஷ்மணன், வானரர் அனைவருக்கும் தெரியாமலேயே அம்பெய்தி வானரர்கள் பலரைக் கொன்றான். அவன் இராம-லக்ஷ்மணர்களைத் தாக்குவதற்காக அவர்கள் அருகில் வந்து, விஷம் தோய்ந்த ஆயுதம் ஒன்றை அவர்கள் மீது வீசினான். அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டவனை, அது பாம்பு போல் சுற்றிக்கொண்டு அவன் மேல் விஷத்தையும் செலுத்தும் வன்மை கொண்டது. எங்கிருந்து வருகிறது, அது எந்த ஆயுதம் என்று எதுவும் தெரியாது தாக்கப்பட்ட அவ்விருவரும் மயங்கிக் கீழே சாய்ந்தனர்.

அதைப் பார்த்த அவன் வெற்றிக் களிப்பில் ஆகாயத்தில் இருந்து குதித்து நேரே ராவணனிடம், தான் ராமன், லக்ஷ்மணன் இருவரையும் தாக்கியதில் அவர்கள் இருவரும் போர்க்களத்தில் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார்கள் என்றும், கூடிய சீக்கிரமே இறந்துவிடுவார்கள் என்றும், எதிரிகள் மேல் நமக்கே முதல் வெற்றி என்றும்  குதூகலத்தில் சொன்னான். ராவணனும் தன் மகனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அருகில் இருக்கும் அரக்கர் பெண்களிடம் சீதையை விமானத்தில் அழைத்துப் போய் ராம-லக்ஷ்மணனின் சடலங்களைக் காட்டச் சொன்னான். மற்றவர் துன்பங்களில் இன்பம் காணும் மனப்பான்மை கொண்ட சில அரக்கிகள் மிகுந்த விருப்பத்துடனேயே சீதையை விமானத்தில் அழைத்துக்கொண்டு போர்க்களத்தில் உயிரற்றதுபோல விழுந்துகிடக்கும் ராம-லக்ஷ்மணர்களை காட்டினார்கள். அவர்களைப் பார்த்த சீதைக்குத் தாங்கமுடியாத துக்கம் பீறிட்டது.  அடக்கமுடியாத அழுகையிலும் அவள், அலை கடலையும் எளிதாகத் தாண்டி வந்த இராமர் இந்திரஜித்திடம் நடந்த சண்டையில் இப்படி துரதிருஷ்டமாக ஒரு ஓடையில் விழுந்து கிடக்கிறாரே என்றாள்.

 

…. तीर्त्वा सागरमक्षोभ्यं भ्रातरौ गोष्पदे हतौ ।। 6.48.15 ।।

अक्षोभ्यम, ஆழமான         सागरं, கடலைக்          तीर्त्वा, கடந்து          भ्रातरौ, இரு சஹோதரர்களும்       गोष्पदे, ஒரு பசு(வே) தாண்டிவிடக்கூடிய நீரில்         हतौ,மரித்தனர்.

ஆழ் கடலை அநாயாசமாகத் தாண்டிய சகோதரர்கள் இருவரும், இப்படி ஒரு பசு கூட ஒரே தாவில் தாண்டக்கூடிய ஓர் ஓடையில் இறந்து கிடக்கிறார்களே!

இதையே நாம் ஒரு ஆற்றைக் கடந்தவனுக்கு இந்த சாக்கடையைத் தாண்ட முடியவில்லையே என்றும் சொல்வதுண்டு. மிகவும் கடினமானதாவும், அபாயகரமானதாகவும் நினைக்கப்படும் வேலைகளை வெற்றிகரமாக முடிக்கும் சிலர், எளிய வேலைகளில் கோட்டை விடுவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இங்கு வால்மீகி இப்படிச் சொல்லி, விதியின் பரமபத சோபன விளையாட்டின் போக்கை கவிநயத்துடன் விவரித்திருக்கிறார்.

26.2 தாக்கு! தாக்கப்படாதே!!

இந்திரஜித்தின் பாணத்தால் கட்டுண்ட இராமர் கூடிய சீக்கிரம் மயக்கத்திலிருந்து தெளிந்ததும் அல்லாமல், அந்தப் பாணத்தின் கட்டிலிருந்தும் தன்னைத் தானே விடுவித்துக் கொண்டார். ஆனால் அதனால் தாக்கப்பட்ட லக்ஷ்மணனுக்கும் , சில வானரர்களுக்கும் அந்த அறிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இராமர் கூப்பிட்டு அனுப்பிய வைனதேயா என்ற கை தேர்ந்த நிபுணர் அங்கு வந்து, அவர்களைச் சுற்றியிருந்த பாணச் சுருள்களிலிருந்த விஷத்தை முறித்த பின்னரே அவர்கள்  மயக்கம் தெளிந்தனர். அப்படித் தெளிந்த அனைவருமே அந்த பாணத்தின் விளைவாக முன்பிருந்த வீரியத்தைவிட தங்களுக்கு வீரியம் இரட்டிப்பு மடங்கு ஆகிவிட்டது என்பதையும் உணர்ந்தனர். அதனால் குதூகலித்த வானரர்கள் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் பலமாகச் செய்யவே அது, அவர்களிடமிருந்து அழுகைச் சத்தமும், ஓலக் குரலும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, ராவணன் காதில் இடியாக விழுந்தது. அதைக் கேட்ட அவன் என்ன நடக்கிறது என்று முதலில் முழித்தாலும், இந்திரஜித்தின் பாணம் அதன் வேலையை முழுதாகச் செய்யாமல் போயிற்று என்று சீக்கிரமே புரிந்துகொண்டான். அதன் பின் அவன் இராம-லக்ஷ்மணர்களைக் கொல்வதற்கென்றே தும்ரக்ஷாவை அனுப்பி வைத்தான். ஆனால் அவன் கொல்வதற்குப் பதில், அவனே அனுமன் கையால் கொலையுண்டான். அவனுக்குப் பின் அனுப்பப்பட்ட வஜ்ரதம்ஷ்ட்ராவை அங்கதன் தலையைச் சீவிக் கொன்றான்.

அப்படி ராவணனால் அனுப்பப்பட்டவர்கள் ஒவ்வொருவராகக் கொலையுண்டதால், ஆகம்பனா என்பவன் அரக்கர்களின் படைத் தலைவன் ஆனான். அனுமான் ஒரு பெரிய மரத்தை வேரோடு பிடுங்கி அதனால் அவன் மண்டையைப் பிளக்க, மற்றவர்கள் போலவே அவனும் நொடிப் பொழுதில் இறந்து போனான். கடைசியாக இருந்த ஒரே சேனாதிபதியான பிரஹச்தா போர்க்களத்துக்கு வந்ததும் அவனை வானரர் படையின் முதன்மைத் தலைவனான நீலா என்பவன் சண்டையில் கொன்று போட்டான். இப்படியாக ராவணனின் படைத் தலைவர்கள் எல்லோரும் கொல்லப்படவே, ராவணன் மனமொடிந்து போனான். இறுதியில் தானே முன்னின்று படைக்குத் தலைமை தாங்கி இயக்குவது என்று முடிவெடுத்து ராவணனே போர்க்களத்தில் குதித்தான். அப்படி அவன் அரக்கர் படையை மறுபடியும் தாக்குதலுக்குக் கூட்டிக்கொண்டு இருக்கும்போது, இந்தப் பக்கத்தில் விபீஷணன் எந்தெந்த அரக்கர் தளபதிகள் எந்தெந்த படை வகுப்பில் முதலில் நிற்கிறார்கள் என்று இராமரிடம் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தான்.

rama2 ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ தன்னைக் காட்டிக்கொள்ளாதபடி இருக்கவும் சொன்னார்.

… चक्षुषा धनुषा यत्नाद्रक्षात्मानं समाहितः ।। 6.59.50 ।।

चक्षुषा, கண்ணால் (கண்ணை நன்கு விழித்து இருந்து)      धनुषा, வில்லினால்       यत्नेन, முயற்்சியால்   समाहित:  பொறுமையுடன் கவனமாக      आत्मानं, தன்னைக்       रक्ष, காத்துக்கொள்

விழிப்புடன் இரு! கூர்மையாகக் கவனித்துக்கொண்டு, வில்லில் நாணேற்றும் போது வேகமாகச் செய்து எதிரி மேல் அம்பைச் செலுத்துவதில் முந்திக் கொள். எதிரியின் ஆயுதங்களிலிருந்து எட்டி இருந்து அவை உன்னை அடையாதபடி காத்துக்கொள்.

போர்க்களத்தில் யார் வேகமாகத் தன் தாக்குதலைச் செய்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். ஒரு இமைப்பொழுது என்றாலும், அது ஒருவருக்கு வாழ்வா சாவா என்பதை நிச்சயிக்கும். கவனிப்பதிலோ, எய்வதிலோ, தாக்குவதிலோ எதையும் எவரால் வேகமாகச் செய்ய முடியாதோ அவருக்குப் போர்க்களத்தில் எந்த உத்திரவாதமும் இல்லை; அதனால் அவர்க்குப் போர்க்களம் ஒரு கொடுப்பினையே அல்ல.

போர்க்களத்தில் ஒருவனுக்கு இருக்கவேண்டிய திறமை என்று மட்டுமல்லாமல், எந்தத் துறையிலுமே அன்றிருந்த மாதிரியே இன்றும், என்றும் சில அடிப்படை உண்மைகள் மாறாது. காலத்திற்கேற்ப சில செய்முறைகளோ, தொழில் நுட்ப மாற்றங்களுக்கேற்ப சில கால அளவுகளோ மாறலாம்; ஆனால் அடிப்படைத் தத்துவங்கள் எப்போதும் அப்படியே இருக்கும். இதை எவன் புரிந்துகொள்கிறானோ அவன் அந்தத் துறையில் கைதேர்ந்தவன் ஆகமுடியும்.

26.3 பகைவனுக்கு அருள்வாய்!

நிராயுதபாணிகளாக நிற்பவர்களைத் தாக்குவது என்பது நம் வழக்கத்தில் இல்லை. இராம-ராவண நேரடி யுத்தத்தில் இந்தத் தத்துவம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ராவணனின் மூர்க்கமான தாக்குதலை அனுமனாலேயும் வெகு நேரம் சமாளிக்க முடியவில்லை. அதனால் அவனுக்குப் பதிலாக லக்ஷ்மணன் இடையே புகுந்து போராடியும், ஒரு கட்டத்தில் அவன் ஒரு சக்தி மிக்க ஈட்டியால் தாக்கப்பட்டு மூர்ச்சை அடைந்தான். அதனால் அனுமன் திரும்பி தாக்க வந்தபோது, ராவணனின் தேரின் மேல் ஒரே தாவாகத் தாவி தனது கதையால் அவன் மார்பில் போட்ட ஒரே போடில், ராவணனும் சிறிது நேரம் மயங்கிச் சாய்ந்தான். மயக்கம் தெளிந்தவுடன் முன்னையும் விட தாக்குதலில் அவன் மும்முரம் காட்டினான்.

rama3இதைக் கவனித்துக் கொண்டிருந்த இராமர் தானே ராவணனுடன் நேருக்கு நேர் மோதுவதை இனிமேலும் தள்ளிப்போட முடியாது என்று உணர்ந்து, அவனுக்குச் சவால் விட்டுவிட்டு களத்தில் தானே இறங்கினார். ராவணனை விட இராமர் அம்பெய்துவதில் மிக மிக வேகமாகவும் வல்லவராகவும் இருந்ததால், தனது அம்புகளால் ராவணனது தேரின் சாரதியையும், குதிரைகளையும் மின்னல் வேகத்தில் துளைத்துக் கொன்றார். அதன்பின் தேரின் மேல் பறந்துகொண்டிருந்த கொடியையும் அம்பெய்தியே அறுத்து, அந்தத் தேரையும் இரண்டாகப் பிளந்து விட்டார். அடுத்து எய்திய அம்பால் குறி பார்த்து அவனது வில்லின் நாணை அறுத்தவர், எல்லாவற்றையும் இழந்த ராவணன் தேரினின்று கீழே குதிக்கும்போதே அவன் தலையில் இருந்த கிரீடத்தையும் ஒரு அம்பால் தட்டிவிட்டுப் பறக்க வைத்து மண்ணைக் கவ்வச் செய்தார்.

இப்போது ராவணன் கிரீடமும் இல்லாது, எந்தவித ஆயுதமோ, கருவிகளும் இல்லாமல் போர்க்களத்தின் நடுவே கட்டாந் தரை மேல் நின்று கொண்டிருந்தான். இராமரின் நேர் பார்வையில் நின்றுகொண்டிருந்த அவனை இன்னுமொரு அம்பு செலுத்தி உடனே அவர் கொன்றிருக்க முடியும். ஆனால் நமது வழக்கப்படி நிராயுதபாணியான அவனைக் கொல்லாது, அவனைக் கோட்டைக்குத் திரும்பிப் போய் ஓய்வெடுத்துக்கொண்டு தேருடனும், ஆயுதங்களுடனும் இன்னொரு நாள் வருவதற்காக அப்போது உயிர் தப்பிப் போகச் சொன்னார்.

… आश्वास्य निर्याहि रथी च धन्वी तदा बलं द्रक्ष्यसि मे रथस्थः ।। 6.59.144 ।।

आश्वास्य, (தன்னை) ஆச்வாசப்படுத்திக்கொண்டு        रथी, (மற்றுமோர்) ரதத்தில் ஏறியவனாய்

धन्वी च, (மற்றுமோர்) வில் பிடித்தவனாயும்        निर्याहि,  திரும்பி வா        तदा, அப்போது

रथस्थ:  ரதத்தில் அமர்ந்தவனானவனான     मे, என்      बलं, பலத்தைக்      द्रक्ष्यसि, காண்பாய்.

போய் ஓய்வெடுத்துக்கொண்டு, உன்னுடைய வீரத்தைக் காட்ட ஒரு தேருடனும் புதிய வில்லொன்றுடனும் திரும்பி வா.

வாழ்வா சாவா என்றதொரு நெருக்கமான கட்டத்திலும், நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை இராமர் தனது செய்கை மூலம் காட்டுவதை வால்மீகி மிக அழகாக நமக்கு எடுத்துரைக்கிறார். அந்த மாதிரி இக்கட்டான சமயத்தை எவரும் நழுவ விடாது இன்னும் ஒரு போடு போட்டு எதிரியின் கதையை முடித்து விட வேண்டும் என்றுதான் எவர்க்குமே தோன்றும். ஆனால் இராமருடைய நீதியோ, நேர்மையோ அதற்கு இடம் கொடுக்காது. நம் காலத்தைய பாகிஸ்தான் போரிலும், வேண்டுமென்றால் பாரதம் மேற்குப் பக்கம் இன்னும் முன்னேறி சில முக்கிய நகரங்களைப் பிடித்திருக்கலாம். ஆனால் நாம் அதைச் செய்யவில்லை. அது சரியா தவறா என்று வாதிப்பதை விட, அதுவும் இராமர் காட்டிய வழி என்பதில் நாம் என்றும் பெருமைப்படலாம்.

26.4 திண்ணைப் பேச்சு

போர்க் களத்தில் தனக்குக் கிடைத்த தோல்வியால் ராவணன் தைரியமிழந்து மிகவும் குறுகிப் போனான். அரண்மனைக்குத் திரும்பிப்போய் ஓய்வெடுத்தபின் அனைத்தையும் பெற்றுக்கொண்டு திரும்பிப் போரிட வா என்று மனமிளகி இராமர் அவனைப் போர்க்களத்தில் இருந்து திருப்பி அனுப்பியது, அவனுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருந்தது. இதற்குமுன் எந்தப் போரிலும் அவன் கையே ஓங்கி இருந்ததால், இந்த மாதிரி ஒரு கீழ் நிலையை அவன் அனுபவித்ததே இல்லை. ஊருக்குள் திரும்பி வந்ததும் அவன் வாய்மூடி மௌனமாகி, எந்த வழிகளைப் பின்பற்றி நிலைமையைச் சீர் செய்து தூக்கி நிறுத்துவது  என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்தான். அந்த நிலையிலும் அவனுக்கு நல்ல வழிகள் தோன்றவில்லை என்பதை அவனது விதி என்பதா அல்லது மதி என்பதா?

rama4பராக்கிரமம் மிகுந்த பலசாலியான அவனது தம்பி கும்பகர்ணன்தான் அப்போது அவனுடைய ஞாபகத்திற்கு வந்தான். கும்பகர்ணனோ தொடர்ந்து ஆறு மாதங்கள் தூங்கவும், அது முடிந்ததும் சில காலம் மட்டுமே விழித்திருப்பதுமான சாபத்துக்கு ஆளாகியவன். தற்சமயம் அவன் தூங்கிக்கொண்டிருப்பதும் , அதனால் அவனை எழுப்புவதும் சிரமம். ஆனாலும், அவனது உதவி உடனேயே தேவைப்படுவதால் பல அரக்கர்களை வைத்து தாரை, தம்பட்டை, எக்காளம், சங்கு முதலிய இசைக் கருவிகளை ஊதியும், அடித்தும் பெரிய ஒலி எழுப்பியும், மல்யுத்த வீரர்களைக் கொண்டு அவனது விலா, கை, கால் என்று எல்லா அங்கங்களிலும் குத்தியும், உதைத்தும் அவனை எழுப்ப ஏற்பாடு செய்தான்.

ஒரு வழியாக எழுந்த கும்பகர்ணன் அகால நேரத்தில் தான் மீளா தூக்கத்தில் இருந்து நிர்பந்தமாக ஏன் எழுப்பி விடப்பட்டிருக்கிறோம் என்ற காரணத்தை யூகித்து அறிந்து கொண்டான். ராவணன் ஒரு வேளை இக்கட்டில் மாட்டிக் கொண்டுவிட்டு, அதிலிருந்து மீள்வதற்குத் தன் உதவியைத் தேடுகிறான் போலிருக்கிறது என்று அவன் மூளையில் உதித்தது. அவன் ராவணனைச் சந்தித்து இராமர் மற்றும் வானர சேனைகளிடம் அவர்கள் பெற்ற தோல்விகளை அறிந்ததும், தானும் விபீஷணனும் முன்பு சொன்னதை ஞாபகப்படுத்தி சீதையை விடுவிக்காவிட்டால் வரும் பிரச்சனைகளைப் பற்றித்தான் விவரமாகச் சொன்னோமே என்றான். அப்படி அவன் முன்பு சொன்னதையெல்லாம் வரிசையாக அடுக்கிக்கொண்டு போனதை ராவணன் விரும்பவில்லை. தற்சமயம் அவனைக் கஷ்டப்பட்டு எழுப்பியது பழங்கதைகளைக் கேட்பதற்காக அல்ல என்றும், இந்த நிலையில் அவன் செய்யக்கூடியது என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே என்றான்.

… गतं तु नानुशोचन्ति गतं तु गतमेव हि ।। 6.63.25 ।।

गतं तु, சென்றதை  न अनुशोचन्ति, (நினைத்து) வருந்துவதில்லை;  गतं तु, நடந்தது   गतमेव हि, நடந்ததுவே

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; அவை நடந்து முடிந்துவிட்டன.

நடந்து போன நிகழ்ச்சிகளைப் பேசிப் பயன் என்ன? அவை போய் விட்டன, இனி வரப் போவதைப் பற்றிப் பேசுவோம் என்பது நல்ல முயற்சிதான். உண்மைதான். எதிரி நம் வீடு வரை வந்தபின் பழையதைப் பற்றிப் பயன் இல்லைதான். காலம் இல்லாதபோது, அவைகளைப் பற்றிப் பேசி நேரத்தை வீணடிப்பதை விட, உடனே நாம் நடக்கவேண்டியது பற்றி யோசிப்பது என்பது ராவணன் மூலம் வந்தாலும் அது ஒரு நல்ல அறிவுரைதான்.

ஆனால் அதில் என்ன விடப்பட்டிருக்கிறது என்றால் நடந்தவைகளை அலசினால்தான், யார் எதற்குப் பொறுப்பு என்பதும் அவர் இன்னும் அந்தப் பொறுப்பில் இருக்கலாமா என்பதும் தெளிவாகும். அது நடந்திருந்தால் ராவணன் அரியணையிலிருந்து இறங்கி, வேறொருவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று அதன் பின் நடப்பது வேறு விதமாக இருந்திருக்கலாம். ஆக நடந்தவைகளை அலசுவது நடக்கப்போவது நல்லதாக அமைவதற்கு நிச்சயம் கைகொடுக்கும். அதேபோல் ஒரு வேளை நடக்காமலே போய்விட்டாலும் நடக்கப் போவதைப் பற்றிப் பேசுவது அவைகளைப் பற்றித் திட்டமிடுவதற்காக நல்லதே.

பழையது போய்விட்டது, அது இல்லை; இனி வரப் போவது இன்னும் வரவே இல்லை; ஆதலால் இப்போது இன்றே இங்கேயே இருப்பது ஒன்றே உண்மை என்பது சத்தியமான வார்த்தைகள் என்றாலும், அது உலகியலுக்கு இல்லை. அது நிச்சயமாக அரசியலுக்கு இல்லவே இல்லை. வந்ததை அளந்து, அதற்கேற்ப இப்போதே திட்டமிட்டு, வரப்போவதை எதிர்பார்ப்பதே உலகியலில் அறிவார்த்தமான வழி. மற்றதெல்லாம் திண்ணைப் பேச்சு, காலத்தை வீணடிக்கும் வெண்ணைப் பேச்சு.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *