அயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்

அண்மையில், எல்லையில்  நமது வீரர்கள் எவ்வாறு  காவல் பணி  புரிகிறார்கள் என்பதைக் காண ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் சென்றுவரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உத்தரப் பிரதேசத்தின் நேபாள எல்லையில் ஆறு நாட்கள் தங்கி அப்பகுதியில் உள்ள நிலவரம், அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, நமது பாதுகாப்புப் படை  வீரர்களின் அரும்பணி ஆகியவற்றைக் காணும் பேறு எனக்கு கிடைத்தது (அது குறித்து  முழு தகவல்களுடன்  விரைவில்  எழுதுகிறேன்). அதைவிட, திரும்பும் வழியில் ஸ்ரீராமன் அவதரித்த அயோத்யா செல்லக் கிடைத்த வாய்ப்பு,   என்னை பரவசத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. அந்த அனுபவத்தின் சிறு துளியே இந்தக் கட்டுரை….

 *******

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை ராமன் தவழ்ந்த மண்ணில் என் கால் படுகிறது என்பதே என் பிறவிப் பெரும் பயனாகவும், முன் ஜென்மங்களில் செய்த நற்கர்மங்களால் ஈசன் அருளிய வரமாகவும் கருதி மகிழ்கிறேன். புண்ணிய பூமியாம் ராம ஜென்ம பூமியில் என் கால்கள் பட்ட போது சிலிர்த்தே போனேன். இந்த அகண்ட பாரத தேசம் முழுக்க ராமனும், பரதனும், ராம பக்த அனுமனும்,  சீதா தேவி தாயாரும், லட்சுமணனும் ஒவ்வொருவரின் நரம்பிலும்,  ரத்தத்திலும், சதையிலும், மூச்சுக் காற்றிலும் கலந்து,  ஊனோடும் உயிரோடும் கலந்து இருக்கிறார்கள் என்ற உண்மையை எப்போதும் உணர்ந்தே தான் இருக்கிறேன்.

ayodhya_hanumangarhiஅந்த மிகச் சிறிய ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்து சாலை முழுக்க வேடிக்கை பார்த்து கொண்டே சென்றேன். சாலை முழுக்க விரவி நிறைந்து நின்றது ராமரின் பக்தி தான். முதலில் சிறிது தூரத்தில் உள்ள சுக்ரீவ மட வளாகத்திற்குள் நுழைந்து வழிபட்டேன். இறங்கி வந்து ஒய்வு எடுத்து விட்டு,  அயோத்தி நகரின் மக்களின் மனங்கள் வழியாகவும், அவர்களின் நினைவுகள் வழியாக, அந்த நகரத்திற்குள்ளும்  அதன் விசித்திரமான மன உலகத்திற்குள்ளும் செல்லலாம் என்ற முடிவோடு மெல்ல நடக்கத் துவங்கினேன்.

சிறிய கடைகள் நிரம்பிய எளிய கடை வீதிகள். கிராமப்புறங்களுக்கும்,  நகர்ப்புறங்களுக்கும் இடைப்பட்ட அளவிலான மூன்றாம் நிலை தமிழகக்  கிராமம் போன்ற அமைப்புள்ள நகர வீதிகள்,  குறுகலான சாலைகள்,  வரலாற்றுப்  புழுதி போர்த்திய இடங்கள். ஒவ்வொரு இடமும் ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவூட்டி, ஆன்மீகவயமான பெருமிதத்தையும்,  சிலிர்ப்பையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.

குழந்தை ராமனின் பிறப்பு, அவர் தளிர் நடை பயின்ற இடம்,  வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற எண்ணற்ற புண்ணியர்களின் பாதம் பட்ட பூமி. தாய் சீதை பார்த்து மகிழ்ந்த இடம், வசித்த அரண்மனை.  ராம பக்த ஆஞ்சனேயன்  பாதம் பட்ட இடம். தர்மத்தின் சொரூபமான ராம பிரானின் பாதக்குறடுகளை ஆட்சிக்கட்டிலில் வைத்து மகத்தான ஆட்சி புரிந்த பரதனும், சத்ருக்கனனும் நின்ற இடங்கள்;  நடந்த இடங்கள்,

ராம சகோதரர்கள் விளையாடிய இடங்களில் நான் நடக்கிறேன் என்ற  எண்ணம்  அளிக்கும்  உச்சபட்ச சிலிர்ப்பில், என் பாதங்களால் வணங்கியபடியே நடை பயில்கிறேன். காலம் எனும் பிரபஞ்சம் பின்னோக்கிச்  சுழன்று, நானும் ஒரு அரூபமாகப்  பயணித்து, ராமாயண கால நிகழ்வுகளை என் ஸ்தூல உணர்வுகளால் உணரும் மன நிலையில் இருந்தேன்.

எங்கோ தென் பிராந்திய மூலையில் ஒரு சிற்றூரில் இருக்கும் எனக்கு, அறத்தின் வடிவமான ராமபிரான் ஊனோடும், உயிரோடும் கலந்த ஒருவராகவே இருக்கிறார். சீதா பிராட்டியார் என் தாயாகவும், சகோதரியாகவும், என் மகளாகவும் எனக்கு ஒரே நேரத்தில் தோன்றுகிறார். எனக்கு மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்தின் மகத்தான மானுட வடிவமான அனைத்து பாரத சகோதரர்களும் இந்த உணர்வால் தான் ஒன்றுபட்டுள்ளார்கள் .

நகர வீதிகளில் பயணிக்கும் போது திசைவெளியெங்கும் ராம நாமம் விரவி, மென்வருடலாக இருந்துகொண்டே இருக்கிறது. சில பதின் பருவச்  சிறுவர்கள் நெற்றியில் நாமம் இட்டுக்கொண்டு வெள்ளை வஸ்திரத்தோடு, பாலக முகங்களோடு, ராமனின் பக்திப்  பாடல்களை மெல்லிய குரலில் இசைத்துக்கொண்டு சிறிய வீதிகளில் நகர்கிறார்கள்;  இந்தப்  புற உலக இருப்பு பற்றிய எந்த விதமான பிரக்ஞையும் இன்றி ராம லயத்தில் திளைத்து அந்த நிறைவிலேயே தங்களின் பயணத்தை தொடர்கிறார்கள்.

உறவினர்களும் , நண்பர்களும் எதிரே பார்த்துக்கொள்ளும் கணம் தோறும் “ஜெய் ஸ்ரீ ராம் “ என்று சொல்லி தங்களை புனிதப்படுத்திக் கொள்வதோடு பிறரையும் ஆசிர்வதித்து அங்கீகரிக்கிறார்கள். அயோத்யா நகர் முழுக்க தன்  ராம பக்தியால் நிரப்பியிருப்பதாகவே இருக்கிறது.

நகரத்தின் பிரதான வீதிகள் அனைத்துமே  மிகவும் குறுகலாகத்தான் இருக்கின்றன. பெரிய தொழிற்கூடங்களோ,  வணிக ஸ்தலங்களோ, பெரிய மருத்துவமனைகளோ,  நவ நாகரீக கடைகளோ ஒன்றும் இல்லை. இதுபற்றி அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டேன்.

“நீங்கள் இது போன்ற வசதிகள் இல்லாத ஒரு வாழ்க்கை முறையை ஏன் வாழ்கிறீர்கள்? அருகிலுள்ள பெரு நகரங்களுக்குச்  சென்று உங்கள் வாழ்க்கையை ஆடம்பரமாக வாழலாமே? நன்றாக உடை உடுத்தி கொண்டும்,  நாகரீகமாகத்  தோன்றும் வணிக வளாகங்களில் உலவியபடியும்  வாழ்க்கையை அனுபவிக்கலாமே?” என்றதற்கு அந்த பெரியவர் கூறிய பதில் நெஞ்சை உருக்கிவிட்டது.

“‘லக்னெளவிலோ, டெல்லியிலோ எங்கள் ராமன் கால் பட்ட இடம் சில, பல இடம் தான் இருக்கும். ஆனால் அயோத்யாவிலோ அனைத்து இடத்திலும் குழந்தை ராமனின் பாதம் பட்டிருக்கும். அவன் மூச்சுக்  காற்று இங்கு இருக்கிறது. அந்த புண்ணிய இடத்தில் இருப்பதை விட மேலான இன்பம் எதுவுமில்லை என்றார் அவர்.

ராம தரிசனம் என்பதற்காக எதையும் தியாகம் செய்யும் கோடிக் கணக்கான இந்துக்களின் பெருமைமிகு தேசம் இது என்ற பெருமிதம் அவர் பேச்சில். ”நாங்கள் எப்போதும் ராமனின் ராஜ்ஜியத்தில், அவரின் இதயத்திற்கு அருகிலேயே வசிக்கிறோம் என்பதை விட வேறு என்ன வசதி வேண்டும்?” என்கிறார் 21 வயதான சுதிர் மேஷராம்.

india-ayodhya-verdict-2010-9-23-14-10-0

பலர் தம்பூராவுடனும், ராம நாமத்துடனும் என்னைக்  கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். பெரும் திலகமிட்ட பால் பசுக்களும், கறவை மாடுகளும் கூட்டம் கூட்டமாகக்  கடந்து செல்கின்றன; எதிர்சாரியில் வருகின்றன. பசுக்கள் அனைத்தும் மிக உரிமையோடு சாலை எங்கும் ஜதி போட்டு நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை தொட்டுத்  தடவினால் ஆதுரத்தோடு சில பசுக்கள் பார்க்கின்றன. சில பசுக்கள் மெளனமாக அங்கீகரித்து விட்டு தன் வழியில் பயணம் செய்து கொண்டே இருக்கின்றன.

வழியெங்கும் சிறு, சிறு கோயில்கள்;  எண்ணற்ற தொன்மக்கதைகள். புராணங்கள் வகுத்தளித்த புதிர்மயமான பாதைகளின் ஊடாக,  நடு நடுவே நான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். கம்பனின் காட்சிகள், சித்திரிப்புகள் காற்றுக்குமிழி போல என்னைச்  சுற்றி வண்ணமயமான அக உலகத்தை எனக்கு விரிக்கிறது. எனக்கு வழி காட்டவும், துணை செய்யவும் வந்த அயோத்தியாவின் ஆர்.எஸ்.எஸ் தலைவர் அனிலுடன் ராம ஜென்ம பூமியை அடைந்தேன்.

வழி நெடுக, காவல்துறையினர், துணை ராணுவப் படையினர். அனைவரும் துப்பாக்கியுடன் காவல் காக்கிறார்கள். மிகப் பெரிய சோதனை வளையத்திற்குள் சென்று வெளிவர வேண்டி இருக்கிறது. நீண்ட வரிசையில் இணைந்துகொண்டு மெதுவாக நகர்ந்தது கூட்டம். எதற்காக இவ்வளவு பாதுகாப்பு?

“அந்நிய பயங்கர வாதிகள் ஊடுருவி, இங்குள்ள சில புல்லுருவிகளைக் கொண்டு மிகப் பெரிய நாசத்தை செய்ய தயாராக இருக்கிறார்கள். அதனால் தான் இந்த பாதுகாப்பு வளையம்” என்றார் அங்கிருந்த  காவலர் ஒருவர்.

மெதுவாக, மிக மெதுவாக குழந்தை ராமன் பிறந்த இடத்துக்கு அருகில் சென்றேன். பரந்த வெட்ட வெளியில், வெறும் கூரைக்குக்  கீழ், எளிமையின் நாயகனான  ‘ராம் லாலா’  சிலையை பார்த்தேன். பரவசத்தோடு பார்க்கத்  துவங்குகையிலேயே, காவல் துறை அதிகாரிகள் நகரச் சொல்லி விட்டார்கள். எனக்குப் பின்னால் நிற்கிறது  பெரும் பக்தர்கள் வரிசை.

ayodhya_makeshift_templeசுற்றிலும் வெறும் துணி கட்டப்பட்ட நிலையில், எந்தப்  பாதுகாப்பும் இன்றி ராமர் இருக்கிறார். அவரது  நாமத்தை தொடர்ந்து உச்சரித்தபடி எண்ணற்ற அனும சைன்யங்கள் இருக்கின்றன. வரும் வழி எங்கும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற மங்கள கோஷம் முழங்கிக்கொண்டே இருந்தார்கள்.

தமிழக சகோதரர்கள் ‘பாரத் மாதாகீ ஜெய்’ என்று உற்சாக மிகுதியால் கோஷமிட்டார்கள். காவல் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர்கள் நெருங்கி வந்து விசாரித்தார்கள். தமிழகத்தில் இருந்து வருகிறோம் என்றவுடன்,  மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொண்டார்கள்;  மழை, பருவ நிலை பற்றி விசாரித்தார்கள். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லி விடை பெற்றேன்.

வெளியில் வரும் போது தான் கேட்டேன்,   நண்பரிடம் மிகுந்த மன வருத்ததோடு.  இந்த தேசத்தின் ஆன்ம வாக்கியமாகவும், மனசாட்சியாகவும் உறையும்- ஏகோபித்த பாரத மக்களின் அன்பை சுமந்திருக்கும் – இந்தக் குழந்தை ராமனுக்கு ஒரு பாதுகாப்பான ஆலயம் கூடவா இல்லை?  இதைச்  செய்வதற்கும்  கூடவா நமக்கு திண்மை இல்லை? ”காலம் மாறும்” என்றார் அவர்.

இருப்பினும் ‘மதச்சார்பின்மை’ என்ற பெயரில் இந்து மத வெறுப்பைக் கொண்டிருக்கும் அறுவருப்பானவர்களின் செய்கைகளுக்கு கடவுளா பலியாக வேண்டும்? என்பது போன்று பல கேள்விகளுடன் வெளியே வந்தேன்.

சிதறிக்கிடந்த  சிற்பக்கலை நயம் மிக்க தூண்களைத்  தாண்டி நடக்கும் போது கேட்டேன், “இது என்ன இடிபாடு?” என்று. மிகுந்த கலை நயத்தோடு கற்களில் கலை மொழி பேசுகின்ற தூண்களின் சிதைவை வலியோடு கடந்து சென்றபோது அதிர்ந்தேன். “இவை எல்லாம் அவமான ச்சின்னமான பாப்ரி கும்மட்டத்தின் எச்சம்” என்றார் அனில். ”கும்மட்டத்தின் புறச்சுவர்கள், அடித்தளம் அனைத்தும் இடிக்கப்பட்ட குழந்தை ராமனின் கோவிலின் உறுப்புகளைக்கொண்டே கட்டப்பட்டிருக்கலாம்” என்றார் அவர். மனதிற்குள் ஆலயத்தை குரூரமாகச்  சிதைத்த மீர் பாகியையும், அதற்கு ஆணையிட்ட பாபரையும் சபிப்பதைத்  தவிர என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

என் இயலாமைக்கு வரலாற்றை காரணியாக்கிக்கொண்டு எரிச்சலோடு வெளியேறினேன். கனத்த மனதோடும், மெளனத்தோடும் வெளியே வந்து அமர்ந்திருந்தேன். மெளனத்தின் கனத்த திரையை விலக்கவே முடியவில்லை. அவமானத்தாலும், இயலாமையாலும் இந்த தேசத்தின் சாமானிய இந்துவாக கண்ணீரோடு அமர்ந்திருந்தேன். வரலாற்றின் ஆபாசங்கள் சுதந்திரம் பெற்ற பிறகும் நீங்காத கறையாக படிந்தே கிடக்கிறது.

பின்னர் இயல்பு  நிலைக்குத்  திரும்பும் முகமாக, கடைத்தெருவிற்குள் நுழைந்து வெளியே வந்து சிறிது நடந்து புண்ணிய தீரமான சரயூ நதிக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அப்போது ஒரு விசித்திரமான காட்சியைக்  கண்டேன்.

15 முதல் 20 பேர் உள்ள கூட்டம் உயர் ரக ஆடையுடன், அதே சமயம்  வெறுங்காலில் நல்ல வெயிலில் நடப்பதைக்  கண்டேன். அவர்களையே உற்று பார்ப்பதைக் கண்ட எனக்கு துணையாக வந்த அனில், ”அவர்கள் நேர்ச்சை செய்துள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள்” என்றார்.

புரியாமல் “என்ன நேர்ச்சை?” என்றேன். சீதாராம் சாஹி என்ற 45 மதிக்கத் தக்க நபரை எனக்கு அறிமுகம் செய்து, அவர் மூலமாகவே அது என்ன விதமான நேர்ச்சை என்பதை விளக்கச்  சொன்னார்.

”எங்கள் குடும்பத்தார்கள் ராம் லாலாவிற்கு கோயில் எழுப்பும் வரை காலில் செருப்பு அணிவதில்லை என்று சங்கல்பம் செய்து, அப்படியே தொடர்கிறோம்” என்றார் சீதாராம் சாஹி. ‘எத்தனை ஆண்டுகளாக என்றால், ”நூறாண்டுகளுக்கு மேலாக” என்கிறார்.

ram_darshan_temple_at_ayodhya”இப்படி எத்தனை பேர் இருக்கிறீர்கள்?” என்றேன். ”சுமாராக 130 குடும்பங்கள் இப்படியான நேர்ச்சையோடு நூற்றாண்டுகளாக இருக்கிறார்கள்” என்றார். அவர்கள் ராமன் மீது கொண்டிருக்கும் பாசம் அளவிட முடியாதது; ஈடு, இணையில்லாதது. இந்த தியாகத்திற்கு முன்பு  நம் மொத்த வாழ்க்கையுமே ஈடாக வைத்தாலும், இந்த மக்களின் தியாகமே போற்றத்தக்கதாக இருக்கும். கண்ணீருடன் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு நடையைத்  தொடர்ந்தோம்.

இவர்கள் மட்டுமல்ல, ஒரு வேளை மட்டுமே உணவை உட்கொண்டு ராமருக்காக விரதம் இருப்பவர்கள்,  பயணத்தைத்  துறந்தவர்கள்,  இனிப்பைத்  துறந்தவர்கள், தங்களுக்குப்  பிடித்த உணவை விட்டவர்கள்…. என்று வரிசையாக பல்வேறு எளிய மனிதர்களின் அர்ப்பணத்தை சொல்லிக்கொண்டே சென்றார் அனில்.

இந்த தேசத்தை ஒருங்கிணைப்பது ராமனும் கிருஷ்ணனும் தானே, தவிர மொழிகள், வாகனங்கள், இருப்பு பாதைகள், சட்டங்கள் – இவையெல்லாம் அல்ல என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

பேசிக்கொண்டே நகரை ஆசிர்வதிக்கும் சரயூவின் நதிக்கரையோரம் நடந்து கொண்டிருந்தோம். கண்ணீ ரில் இந்த மக்களின் பாதங்களைக்  கழுவினாலே புண்ணியம் வாய்க்கும் என்று தோன்றியது.

சரயூவின் நதிக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஏகாளிகள் (சலவைத்  தொழிலாளர்கள்) துணி துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு, திடீரென உத்தர ராமாயணம் நினைவுக்கு வந்தது. ஒரு சலவைத் தொழிலாளியின் அவச்சொல்லுக்காகத் தானே தன உயிரினும்  உயிரான சீதையை காட்டிற்கு அனுப்பினான் ஸ்ரீராமன்? நண்பர் அனிலிடம் பேச்சுவாக்கில் உத்தர ராமாயணம் குறித்து   கேட்டு விட்டேன்.

அனில் ஜி கண்ணீரோடு கைகூப்பி “ஏகாளிகளைக் குறை சொல்லாதீர்கள் சகோதரா, இவர்கள் இல்லாவிட்டால் நாம் இன்று பாவியாய் மாறி பெரும் பாவத்தோடும், பழியோடும் நின்றிருப்போம்” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளங்காமல் விழித்தேன்.

என்ன சொல்கிறீர்கள் என்றேன் ,அவர் வரலாற்றின் மறக்க முடியாத துயர பக்கங்களை மனத்திற்குள் திருப்பி 1990 ஆம் ஆண்டின் அந்த குரூரமான தினங்களை  நினைவு கூர்ந்தார். அக்டோபர் 30 ஆம் நாள் 1990 ஆம் ஆண்டின் கறுப்பு தினத்தை நனவில் கொண்டு வந்து அசை போட்டார்……….

”சுமார் ஒரு  லட்சம் அப்பாவி ராம பக்தர்கள், குழந்தை ராமனின் மேல் மாறாத காதலும் பக்தியும் கொண்ட குடும்பஸ்தர்கள், வீட்டில் தன் குழந்தையிடம் விடைபெற்று வந்த இளம் தகப்பன்மார்கள்,  சகோதரிகளின் பாசத்தில் கட்டுண்ட சாமானிய மனிதர்கள்,  முதிய தாய் தகப்பன்களை காப்பாற்றும் கடமையுள்ள மகன்கள்,  சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்து  தியாக வாழ்க்கை வாழும் ஸ்வயம்சேவகர்கள், இந்த தேசத்தின் மீதும்,  மக்களின் மீதும் உயிரை வைத்திருக்கக்கூடிய எண்ணற்ற கர சேவகர்கள் அமைதியான முறையில் அங்கு கூடினார்கள். தங்களுக்குப்  பிரியமான,  அற வடிவமான குழந்தை ராமனுக்கு ஒரு நிழல் ஏற்படுத்தித்  தாருங்கள் என்ற கோரிக்கையோடு அவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்தார்கள்.

அற்ப மனமும், அப்பாவி இந்து சகோதரர்கள் மீது மாறாத வன்மமும், கொலை வெறியும்,  பகை உள்ளமும் கொண்ட கீழ்த்தரமான அரசியல்வியாதிகளின் சதிக்கு, மதச்சார்பின்மை என்ற பெயரில் சகிப்பு தன்மையும்  நேயமும் மிகுந்த இந்து சகோதரர்களின் பால் வெறுப்பை வளர்த்து கொண்டு விட்ட அந்நிய கைக்கூலிகள், மாற்று மத அடிப்படை வாதிகள் சேர்ந்து சதி செயலில் ஈடுபட்டு இந்த அப்பாவி மக்களை கொன்று அழித்து தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொள்ள திட்டம் போட்டு காரியம் செய்தார்கள். முலாயம்சிங் என்ற இந்து வெறுப்பாளனும்,  தீவிர வெறியனுமான முதல்வன் முல்லா முலாயம் சிங் தலைமையில்.

‘அயோத்தியில்  அங்கு ஈ, காக்காய் கூட பறக்க அனுமதிக்க மாட்டேன்’ என்று ஆணவ முழக்கமிட்ட முலாயம், அயோத்தி முழுக்க 2,65,000 காவல் துறை துணை ராணுவப்படையை கொண்டு முற்றுகையிட ஏற்பாடு செய்தார். வீரர்களைத் தாண்டி வருபவர்கள் மீது  கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தவும்  அவர்  உத்தரவிட்டார். ஆனால், ராமபக்தி கட்டுக்காவலை மீறச் செய்தது. அயோத்தி  எங்கும்  கரசேவகர்கள் தடையை மீறிக் குவிந்தனர். ஆக்ரோஷமானார் ‘முல்லா’ முலாயம் சிங்.

காவல் துறை தன் குண்டாந்தடியால் ஆயுதம் எதுவும் இல்லாத அப்பாவி இந்து சகோதரர்கள் மீது கொடும் தாக்குதலை தொடுத்தது . மண்டை உடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட சரயு நதியில் குதித்து உயிர் பிழைத்து கொள்ளலாம் என்ற நப்பாசையில் உயிர்விட்டவர்கள் ஏராளம். கை , கால், முதுகு எலும்புகள் நொறுங்கி, தாடை எலும்புகள் உடைந்து நடை பிணமாய் வாழ்பவர்கள் பல ஆயிரம்.

அதை விடக்  கொடுமை,  தாக்குதலின்  உச்சமாக கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு. இதில் பலியானவர்களின்   600க்கும் அதிகம். ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான நிகழ்வு திட்டமிட்டு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டு விட்டது. கொடுரமாகத் கொல்லப்பட்ட அந்த ராம பக்தர்களின் உடல்கள் இறுதி காரியம் செய்வதற்கும்  கூட கிடைக்கவில்லை.

ayodhya_sarayu_ghat

புண்ணிய பூமியெங்கும் கர சேவை செய்ய வந்த சகோதரர்களின் வலி மிகுந்த ஓலமூம், குருதியும் போட்டி போட்டுக்கொண்டு வழிந்தது.  சரயூ நதிக்கு இரு புறமும் இருந்து காவல் துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் இரும்பு பூண் போட்ட பெரிய குண்டாந்தடியால் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.

என்ன நிகழ்கிறது, ஏன் நம்மை நம் சொந்த காவல் துறையே கொல்கிறது, கொலை வெறி கொண்டு தாக்குகிறது என்பது கூட அவர்களுக்கு புரியவில்லை. இவர்களின் மீதான கொலைவெறி தாக்குதலும் உயிர் பறிப்பும், அப்படியே இஸ்லாமிய, மதச்சார்பற்ற வாக்குகளாக மாற கனவு கண்டு, திட்டமிட்டு இந்த படுகொலைகளை, கடும் தாக்குதலை முன்னெடுக்க முலாயமின் அரசு உத்தரவிட்டது.

செத்த உடல்களைக்  கொண்டு எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளக் கூடாது என்ற கயமை நோக்கத்தோடு, சடலங்களை சாக்குகளில் கட்டி அப்படியே சரயூ  நதியில் தூக்கி வீசி விட்டார்கள். அயோத்தி எங்கும் ரத்த ஆறு;  சரயூ நதி அன்று செந்நிறமாக ஓடியது.

police-attack-on-kar-sevaks

கொலை முடிந்த பிறகு சுமாராக ஒரு வாரம் கழித்து சரயு நதி ஓரத்தில் துணி துவைத்துக்கொண்டிருந்த ஏகாளிகள், பெருவாரியாக ஊதி பெருத்து போன உயிரற்ற ராம பக்தர்களின் உடலை எடுத்து கொண்டே இருந்தனர் .

கண்ணீர் வற்றிப்போன அவர்கள் அந்த பலிதானிகளின் சிதைந்த, தண்ணீரில் ஊதி பருத்தும், மீன்கள்,  நீர் விலங்குகளின் கடிப்புகளாலும் உருக்குலைந்த அச்சமூட்டக்கூடிய ஸ்தூலங்களை எடுத்து தன் சொந்த சகோதரனுக்கு செய்வது போன்று  அவற்றிற்கு முறையாக கர்ம காரியங்களை செய்வித்து அடக்கம் செய்தார்கள்.

ஏகாளிகள் கூட்டம் கூட்டமாக பிண்டம் வைத்தார்கள் . பல நாள்கள் அவர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்தும், துக்கத்திலும் இருந்து வெளி வரவே இல்லை. அந்த ஏகாளி சகோதரர்களுக்கு  ஒட்டுமொத்த பாரத சமுதாயமும் கடன் பட்டிருக்கிறது”

-என்று கண்ணீருடன் முடித்தார் அனில்.

இந்த சகோதரர்களின் பாதம் பணிகிறேன். என் கண்ணீரால் அவர்களுக்கு பாத பூஜை செய்வதும் என் ராமனுக்கான சேவையாகவே நான் கருதுகிறேன்.

பல்லாயிரக் கணக்கான ராம பக்தர்கள் தன் தமக்கையிடன் விடை பெற்று வந்த சகோதரனும், தாயிடம் விடை பெற்று வந்த தனயனும், மனைவியிடம் விடை பெற்றும், குழந்தைக்கு அன்பை கொடுத்து வந்த தகப்பனும் இன்று இல்லாமல் போய் விட்டனர். அவர்கள் பலிதானியாகி நம் சமூகத்தின் ஏதோ ஒரு மூலையில் நின்று தங்கள் ஆன்மா சாந்தியுறாமல் நிற்கிறார்கள். அவர்களுக்காக நாம் குழந்தை ராமனுக்கு ஒரு கூரையையாவது அமைத்து கொடுக்க வேண்டும்.

Shilanyas-of-Shri-Ramjanmabhumi--300x180குழந்தை ராமன் பிறந்த புண்ணிய இடத்தில் ஒரு சிறிய கூரையாவது வேண்டும் என முதல் செங்கலை எடுத்து கொடுத்த அந்த பீகார் ஹரிஜன சகோதரரின் ஆன்ம பக்திக்கு அப்படியான வலு நிச்சயம் இருக்கும் என உளமாற நம்புகிறேன்.

இந்த தேசத்தின் நகரம், கிராமம், அரசியல் ஏற்றதாழ்வுகள் , ஜாதி ,பொருளாதார வசதிகள் இவற்றை தாண்டி அனைவரும் இந்த புனித பணிக்காக தாங்கள் ஆத்மார்த்தமாக கொடுத்த கோடிக்கணக்கான செங்கல்களுக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ராமருக்கான இந்த ஆலயப்பணி என்பது இந்திய ஆன்மாவில் ஊடும் பாவுமாக இருக்கிறது என்று நிதர்சனமாக உணர்ந்தேன். குழந்தை ராமனுக்கு கோவில் எழும்பும் நாள் தான் பாரத மக்களுக்கு உண்மையான தீபாவளியாகவும் , பண்டிகை தினமாகவும் இருக்கப்போகிறது என்ற முடிவோடு எழுந்தேன்.  சகோதரர் அனிலிடம் நன்றியுடன்  விடைபெற்றேன். “ஜெய் ஸ்ரீராம்” என்று வழியனுப்பினார்.

சரயூ நதி சலசலத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு என்னவோ, சரயூ  நதிக் கரையில் துவைத்துக் கொண்டிருந்த ஏகாளிகள் கல்லில் அடித்துத் துவைத்த சத்தம் ”ஸ்ரீராம்” என்று ஒலிப்பது போலவே  இருந்தது.

  *******

மேலதிக விபரங்களுக்கு:

http://samparkvhp.org/OldLook/Ebooks/Evidence%20For%20The%20Ram%20Janmabhoomi%20Mandir.pdf

http://www.oocities.org/hindoo_humanist/ayodhya.html

http://indiaforumarchives.blogspot.in/2006/03/terrorists-attack-ramjanmabhoomi.html

Tags: , , , , , , , , , , , , , , , ,

 

9 மறுமொழிகள் அயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்

 1. Rama on January 5, 2013 at 6:59 am

  Thank you sir for a great article. My eyes were filling with tears. I had to stop reading halfway before I could continue.
  Jai Shri Ram

 2. sidharan on January 5, 2013 at 9:26 am

  படித்தவுடன் புருஷோத்தமனாக இந்த மண்ணில் வந்து அவதரித்த ஸ்ரீமன் நாராயணனின் பொற்பாத கமலங்களை நினைத்தேன் .
  நெஞ்சு உருகுகிறது .

  முலாயம் சிங்க், மாயாவதி , மன்மோகன் சிங்க் , கருணாநிதி போன்ற துரோகிகள் எவ்வாறு இந்த நாட்டில் பிறந்திருக்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது.
  ஆனால் கம்சனும், தாடகையும் கூட இங்குப் பிறந்தார்களே .
  ஆனால் அவர்கள் அழிக்கப் பட்டார்கள்.
  விரைவில் இந்தக் கம்சர்களும் ,தாடகைகளும் அழிக்கப் படுவர்.
  ஒரு வீர ஹிந்து, தேசப் பற்று மிக்க ஹிந்து தலைவனாவான்.
  ராமனுக்கும், சீதா பிராட்டிக்கும் , ஹனுமனுக்கும் அங்கு மா பெரும் ஆலயம் எழும்.

 3. க்ருஷ்ணகுமார் on January 5, 2013 at 1:16 pm

  ஐந்து வருஷங்களுக்கு முன் 2008ல் அயோத்தி மாநகரம் செல்லும் பாக்யம் பெற்றேன். ராம் லலாவின் ஆலயம் நாற்புறமும் ஆயுதபாணி ராணுவ வீரர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது. இன்றும் மாறாதிருக்கும் விஷயம் துணியினால் ஆன கூடாரத்தில் ராம பிரானின் ஆலயம். மனதை மிகவும் வருத்தும் விஷயம்.

  மழை, காற்று, புழுதி இதிலிருந்து ஆலயத்தின் தூய்மையைக் காக்க வெறும் துணியினால் கூடாரம் அமைப்பதற்குப் பதில் குறைந்த பக்ஷம் உறுதியான பொருட்களால் கூடாரம் அமைத்தால் மதசார்பின்மைக்கு ஏதும் பங்கம் வந்து விடாதே.

  \\\\\மிகுந்த கலை நயத்தோடு கற்களில் கலை மொழி பேசுகின்ற தூண்களின் சிதைவை வலியோடு கடந்து சென்றபோது அதிர்ந்தேன். “இவை எல்லாம் அவமான ச்சின்னமான பாப்ரி கும்மட்டத்தின் எச்சம்” என்றார் அனில்.\\\\

  காசி மாநகரில் இன்றைய விச்வநாதப் பெருமானின் ஆலயத்தின் பின்புறம் சென்று தலை நிமிர்த்தாது பார்த்தால் அங்கும் ஒரு ஆலயத்தைக் காணலாம். தலை நிமிர்ந்தால் உளத்தைக் குமுறச்செய்யும் ஔரங்கசீப்பினால் சிதைக்கப்பட்ட ஆலயத்தின் மேலே எழுப்பப்பட்ட ஞானவாபி மஸ்ஜிதைக் காணலாம். இது போன்ற அவலங்கள் உத்தர பாரதமெங்கும் காணக்கிட்டும்.

  \\\\\\\\ “ஏகாளிகளைக் குறை சொல்லாதீர்கள் சகோதரா, இவர்கள் இல்லாவிட்டால் நாம் இன்று பாவியாய் மாறி பெரும் பாவத்தோடும், பழியோடும் நின்றிருப்போம்” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளங்காமல் விழித்தேன்.\\\\\

  ஏகாளி சஹோதரர்களின் சேவை மனதை நெகிழ்விக்கிறது. முகமறியா பற்பல சஹோதரர்களுக்குப் பரிந்து அந்திம க்ரியை செய்த இவர்களுக்கு உலகெங்குமேகிய ஒட்டு மொத்த ஹிந்து சமூஹமும் கடமைப்பட்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

  உத்தர ராமாயணத்துடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு சமூஹத்தையும் இந்த இடத்தில் நினைவு கூறுதல் மிக அவசியம்.

  பூர்ண கர்ப்பிணியான சீதை வனமேகிய பின் அவளை தந்தையாயும் தாயாயும் காத்து ரக்ஷித்து சீதாராம தம்பதிகளின் பிள்ளைச்செல்வங்களான லவகுசர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு ராமாயணத்தை போதித்து அதை அந்தக் குழந்தைகள் அயோத்தி மாநகரிலே ராமரின் அரசவையில் அரங்கேற்றுமாறு பணிப்பித்த வால்மீகி மகரிஷியை மறக்க முடியுமா. ஆதிகாவ்யத்தை உலகுக்கு முதன் முதல் அளித்தவராயிற்றே.

  அவரது வம்சத்தில் வந்த சமூஹத்தினர் இன்று துப்புறவுத்தொழிலாளிகளாக தலித்துகளாக உள்ளனர். ஆயினும் விலை மதிப்பிலா தங்களது பிதுரார்ஜிதமான சொத்தான ராமயணத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து அளித்து வருகின்றனர்.

  துப்புறவாக வேண்டியது இவர்களை இந்த நிலைக்காக்கிய சமூஹம் தான் என்பதையும் மறக்கலாகாது.

  ராமகாவ்யத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு காத்து அளித்த வால்மீகி சஹோதரர்களின் வாழ்வு முன்னேறவும் நாம் முனைவோமாக.

 4. kargil on January 5, 2013 at 7:48 pm

  A sorrowful, eye opening article. thank you.

 5. சரவணன் சிதம்பரம் on January 5, 2013 at 11:44 pm

  என் சகபாரதியனான ஏகாளி சகோதரர்களை எண்ணி நெகிழ்கிறேன்.தாள்பணிந்து வணங்குகிறேன்..வெல்க பாரதம்

 6. g ranganaathan on January 6, 2013 at 4:18 pm

  மிக நல்ல கட்டுரை . அதுவும் ஏகாளிகளின் சேவை போற்றுதற்குரியது. இதே போன்றுதான் திருவரங்கன் இஸ்லாமிய படையெடுப்பின்போது ஸ்ரீரங்கந்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஏறத்தாழ 60 வருடங்கள் சென்றபின் அரங்கன் தன் கோயிலுக்கு எழுந்தருளினான். அரங்கனின் பின் சென்ற பலர் இறைவனடியடைந்த நிலையில் அரங்கனின் திவ்ய மங்கள விக்ரஹம் இதுதானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. திருவரங்க வாசிகளும் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் அங்கிருந்த பெரியோர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அரங்கனின் திருவாடைகளை தோய்த்து தரும் பணி செய்துவந்த ஒரு ஈரங் கொல்லி (ஏகாலிகள்/வண்ணார்) (வைணவ சொல் வழக்கு) வயது முதிர்ந்த நிலையில் கண் பார்வையின்றி இருந்து வந்தார். அவரிடம் கேட்டல் நம் ஐயம் தெளியும் என்றனர். அவரோ கண் பார்வையற்றவர், அவர் எவ்வாறு நம் சந்தேகத்தை தெளிய வைப்பார் என்றனர் சிலர். அந்த ஈரங் கொல்லி பெருமானின் விக்ரஹத்துக்கு திருமஞ்சனம் செய்யச்சொல்லி அரங்கன் உடுத்த ஆடையின் நீரை பிழிந்து உட்கொண்டார். உடனே அவர் சந்தேகமில்லை. இவர் நம்பெருமாள் தான் என்றார்.( ஏனெனில் அரங்கன் திருமஞ்சனம் கண்டருளும் போது காவிரி நீரில் கஸ்தூரியும் குங்குமப்பூவும் சேர்க்கப்படும். அதன் மணம் அவன் உடுத்துக் களைந்த திருவாடைகளிலும் மணக்கும். அந்த மணம் இன்னும் இருக்கிறபடியால் அரங்கனை அறிய முடிந்தது) அதுமுதல் திருவரங்கனின் உத்சவர் நம்பெருமாள் என்று அனைவராலும் கொண்டாடப்படுகிறார் என்பது வரலாறு. நம் ஹிந்து தருமம் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் இறைத்தொண்டில் ஈடு படுத்தியது என்பதே உண்மை . இடையில் ஏற்பட்ட வன்மங்கள் மெக்காலேயின் சூழ்ச்சி. அதனை கைக்கொண்டனர் நமது அரசியல் வா(வி)யாதிகள். போலி மதச் சார்பின்மை இருள் நீங்கி கிருத யுகம் தோன்றிட புருஷோத்தமன் ராமனும் அன்னை சீதாப் பிராட்டியும் அருளட்டும்.

 7. ஈஸ்வரன் on January 13, 2013 at 1:04 am

  ஓம் ஸ்ரீ ராம பிரானே எங்களது ஹிந்து தேச மக்களுக்கு ஹிந்து உணர்வை ஊட்டுவாயாக , 2014 அல்லது அதற்கு முன்பே வரும் நாடாளும் தேர்தலுக்கு தேசபக்த உணர்வுடன் ஓட்டளிக்கச் செய்வாயாக. அதுபோதுமையா இந்த நாட்டுக்கு.
  ஈஸ்வரன்,பழனி.

 8. R NAGARAJAN on January 25, 2013 at 9:58 pm

  1989-90 ஆண்டுகளில் வி ஹைச் பி அயோத்தியில் கோவில் கட்டுவதற்காக, நாடு முழுவதும் பணம் திரட்டினார்களே, அவை என்ன ஆயின?

  நாடு முழுவதும் இருந்து அனுப்பப்பட்ட ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட செங்கற்கள் என்ன ஆயின?

 9. sathees on January 28, 2013 at 10:05 am

  Thank you sir,
  This article, accelarate my mide to vist to Ayathiya..
  .. Jai sri ram,
  Jeya hanuman

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*