மதமாற்றம் எனும் கானல் நீர்

மதமாற்றம் என்பது தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் வெறும் கானல் நீரே என்கிறார் பிரபல ஈழ இலக்கிய நாவலாசிரியர் கே.டானியல்

wolfsheepபிரதாப முதலியார் சரித்திரத்தோடு (1879) தொடங்கிய தமிழ்நாவல்களின் வளர்ச்சி கடந்த ஒன்றே கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சீரிய பல நாவல்களைத் தந்து வருகின்றது. அந்த வகையில், நாவல் இலக்கியங்களை அடுத்து அந்த நாவல்களை ஒட்டிய திறனாய்வு முயற்சிகளும், ஆங்காங்கு நடைபெற்றிருக்கின்றன.இந்நிலையில், ஒரு திறனாய்வு எண்ணப்பாங்குடனும், யாழ்ப்பாணத்துக் கிறிஸ்துவச்சூழல், சமூகவியல், ஜாதீயப்பிரச்சினைகளை ஒழிவு மறைவின்றி எடுத்துக் காட்டும் ஒரு நாவல் என்கிற வகையிலும் நோக்குவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

பேராசிரியர் கலாநிதி.க. கைலாசபதி அவர்கள் (தமிழ் நாவல் இலக்கியம், 1984) தமிழ் நாவல் தொடங்கி முதல் எழுபத்தைந்து ஆண்டுகளாக அது சமூக மெய்மைக்குப் புறம்பான, சமூகப்பிரச்சினைகளுக்குப் பங்கெடுக்காத ஒரு கற்பனா உலகில் பெரும்பாலும் காணப்பட்டது என்று குறிப்பிடுவதோடு, அது 1953ல் வெளியான தொ.மு.சி.ரகுநாதனின் ‘பசியும் பஞ்சும்’ என்ற நாவலுடன் மாற்றம் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

ஆனால், இப்புலப்பாடு நாவலின் கருப்பொருளாக வரும் போது, சமுதாயத்தின் இயங்கு நிலையை மறுதலிக்கும், அல்லது, சமூகத்தின் நிலவுடமைச் சமூகமாக இயங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தின் வெறுப்பையும், பகைமையையும் படைப்பாளி சம்பாதித்துக் கொள்ள வேண்டி ஏற்படும். இந்த நிலையில் தான் பேராசிரியர், கா.சிவத்தம்பி அவர்கள் “ஈழத்தின் தமிழ்ப்புனை கதை வரலாற்றில் சமூக மெய்மையை அதன் இரத்தமும் சதையும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்திய படைப்பாளிகளுள் முதன்மைக் கணிப்பிற்குரியவர் தான் டானியல்”  என்று குறிப்பிடுவதிலிருந்து டானியலின் முதன்மை வெளிப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியில் கிறிஸ்துவப்பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் தான் டானியல். அவர் 1940களின் பிற்கூற்றிலே படைப்பாளியாக உருவெடுத்தார். இந்தக்காலத்தில் தான் இலங்கையில், ‘முற்போக்கு இலக்கிய இயக்கம்’ ஆரம்பமாகத் தொடங்கியது எனலாம்.

கே.டானியல்
கே.டானியல்

இலக்கியம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற மரபை உடைத்தெறிந்து, இழிசனர் வழக்கு என்று ஒதுக்கப்பட்ட பேச்சு வழக்கை கதைகளில் கையாண்டு, டானியல் தமது எழுத்தை நடத்திச் சென்றிருக்கிறார். அவர் தமது அறிவறிந்த பருவம் முதலாக தாம் பஞ்சமர் (யாழ்ப்பாணத்தின் தாழ்த்தப்பட்ட பள்ளர், நளவர், முடி திருத்துனர், பறையர், வண்ணார் என்ற ஐந்து சாதிகளைச் சேர்ந்தவர்கள்) பக்கமே நின்றதாகச் சொல்கிறார். இவ்வகையில், யாழ்ப்பாணத்தையே கதைக்களனாகக் கொண்டு, நாவல் படைக்க டானியல் புறப்பட்டார். இதற்கு முன்னரே இலங்கையில் நலிந்தவர்கள் மீதான கொடுமைகளைச் சுட்டும் குறிப்பிடத்தக்க சில நாவல்கள் வெளிவந்தன  எனினும், அவற்றில் கற்பனை வளமே மிகுந்திருந்தது. அதனால்,  நலிந்தவர்களின் பிரச்சினை பற்றி நலிந்தவர்களே எழுத வேண்டிய நிலை உண்டானதாக கருதலாம்.

இது பற்றி தனது இன்னொரு நாவலான ‘பஞ்சமர்’ நாவலின் முன்னுரையில்,. ‘இதில் நடமாடும் பாத்திரங்களும் நான் கற்பனையில் சிருஷ்டித்தவையல்ல.. வாழ்வின் கடைசிப்படியிலிருந்து முன்னே செல்ல மக்கள் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளே கருவாகவும், நான் உட்பட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே  பாத்திரங்களாகவும் நிற்கின்றன…’  என்று எழுதிச் செல்வது டானியலினைப் பிற எழுத்தாளர்களினின்று முன்னுரிமைப் படுத்துவதற்குச் சாட்சியமாகின்றது. ஒதுக்கப்பட்டோர் குறித்த தமிழ் இலக்கியப்பதிவுகளைப் பிள்வருமாறு வகைப்படுத்தலாம் எனப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் (பூரணச்சந்திரன், 2004) குறிப்பிடுகின்றார்.

1. ஒதுக்கப்பட்டோர் குறித்து எதுவும் கூறாமல் அவர்களைப் புறக்கணித்தல்

2. இரக்கத்திற்குரியோராயும், மேட்டிமையோரின் கருணையால் முன்னேற வேண்டியவர்களாயும் சித்திரித்தல்

3. அவர்களது இயல்பான வாழ்வியலையும், வாழ்வியற் சிக்கல்களையும் வெறும் விவரணமாகப் பதிவு செய்தல்

4. தங்களை ஒடுக்குபவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுதல், எதிர்ப்பண்பாட்டை உருவாக்குதல், பண்பாட்டு வேர்களைத் தேடுதல் என விழிப்புணர்வைப் பதிவு செய்தல்

இந்த வகையில், கிளர்ந்தெழும் நான்காம் வகையினராகவே டானியலைக் கருதலாம். அவரது ‘கானல்’ நாவலையும் இந்த வகையிலேயே நோக்க வேண்டியுள்ளது.

1940களின் பிற்பகுதியிலிருந்து பல சிறுகதைகளையும் எழுதி வந்த டானியல் ‘பஞ்சமர்’ என்ற நாவலை எழுதியதிலிருந்து, நாவல் உலகில் பிரவேசித்தார். ‘பஞ்சமர்’ நாவலில் உயர்சாதிக்காரர்களான வேளாளர்களின் சாதிததிமிரும் அட்டூழியங்களும், ‘கோவிந்தன்’, ‘அடிமைகள்’ நாவல்களில் வேளாளக் குடும்பங்களின் அழிவையும் சிதைவையும், காட்டிய டானியல் அவற்றினின்று மாறு பட்டு, ஒரு சீரான நடையில், அழகான வடிவமைப்பில் ‘கானல்’ நாவலைப்படைத்துள்ளார் என்பது விமர்சகர்களின் பொதுவான கருத்து.

கானல் நாவலின் கதைப்புனைவு மிகவும் நேர்த்தியானது. தாழ்த்தப்பட்ட குடிமகனான நன்னியனின் மகன் இளையவனை மையமாகக் கொண்டு, புனையப்பட்டுள்ள இக்கதையின் சுருக்கம் வருமாறு –

நன்னியன், மனைவி செல்லி, பிள்ளைகளான மூத்தவன், இளையவன், சின்னி (மகள்) போன்றோர் தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகள். கொடுமைக்கார உயர்சாதியரின் பிரதிநிதி தம்பாப்பிள்ளை என்பவர். வயதுக்கு வந்த சின்னியை போகப்பொருளாக முற்படும் தம்பாப்பிள்ளையின் மருமகனின் கொடுமைக்கு எதிராக நன்னியன் குடும்பம் கிளர்ந்தெழுகின்றது. இதனால், தம்பாப்பிள்ளை நன்னியன் குடும்பத்தில் கோபங்கொண்டு விதானையாரிடம் முறையிடுகிறார். (விதானையார் என்பவர் அக்காலத்திலிருந்த கிராமத்தலைவர், அனேகமாக அவரும் உயர்சாதிக்காரராகவே இருப்பார்)

images12விதானையார் நன்னியனைச் சித்திரவதை செய்கிறார். இதனைத் தாங்க முடியாத இளையவனும் மூத்தவனும் விதானையாரைக் கொலை செய்கின்றனர். இதனால், தாழ்த்தப்பட்டவர்களாக அந்த ஊரில் இருந்த பதினைந்து குடும்பங்களின்  குடிசைகள் உயர்சாதிக் காரர்களால் கொளுத்தப் படுகின்றன. சாதி ஒடுக்குமுறையினின்று விடுபட மதமாற்றமே நல்ல வழி என்று தீர்மானிக்கப் படுகின்றது. ஞானமுத்துக் குருவானவரின் (இவர் ஞானபிரகாசர் என்ற அக்கால பிரபல மதமாற்றியாக விளங்கிய கத்தோலிக்க குருவானவரையே கருதும் என்று முன்னுரையில் டானியல் குறிப்பிட்டிருக்கிறார்) கருணை பெற்று ஞானஸ்நானம் பெற்று, கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறுகின்றனர்.

ஞானமுத்துக் குருவானவர், பொலிஸாருடன் தக்க வகையில் தொடர்பு கொண்டு,  தாழ்த்தப் பட்டவர்களுடனும் அனுசரணையாகப் பேசி, குற்றவாளிகளான மூத்தவனையும், இளையவனையும் பொலிஸில் ஒப்படைக்கிறார். உயர் சாதி வேளாளராக இருந்த போதிலும், பூக்கண்டர் என்பவர் பஞ்சமர்களின் தோழர். அவர் தமது நிலத்தில் குடிசை போட அனுமதித்து, வேண்டிய போதெல்லாம் உதவி செய்கிறார்.

இப்பூக்கண்டரும் கடைசியில் ஞானமுத்தரின் ஒரு வகைத்தூண்டுதலால் கிறிஸ்தவர் ஆகிறார். அங்கே புதிதாக கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதன் உருவாக்கத்திற்குப் புதிதாக மதம் மாறிய தாழ்த்தப் பட்டவர்களும் மிகவும் உற்சாகமாக பொருள், பண, சரீர உதவிகள் செய்கிறார்கள். ஆனால், அந்த சர்ச் கட்டப் பெற்று நடக்கிற உற்சவத்தின் போது, அந்த சர்ச்சிலேயே உயர்சாதியாருக்கு ஓரிடம், தாழ்த்தப் பட்டவருக்கு தனிப்பட்ட ஓரிடம் என்று இட ஒதுக்கீடு ஞானமுத்தரின் நல்லாசியுடன் நடக்கிறது. இப்படி பாரபட்சங்கள் அங்கு கூடத் தொடர்கிறது. இதே வேளை, தாழ்த்தப்பட்ட சாதியினர், தங்கள் வீட்டுப்பெண்களை இனி வேளாள வீடுகளுக்கு குடிமை வேலைக்காரிகளாக அனுப்புவதில்லை என்று முடிவெடுக்கின்றனர். இதனை அடுத்து, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உயர் சாதி வேளாளர்களின் நிலத்தில் வேலை தரப்படாது மறுக்கப் படுகின்றது.

christian_serviceபட்டினியால் வாடும் தாழ்த்தப்பட்ட புதிய கிறிஸ்தவர்கள் உயர் சாதிக் கிறிஸ்தவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். மத மாற்றத்தின் ஊடாக அவர்கள் எதிர்பார்த்த உயரிய, உன்னத வாழ்வு வெறும் கானல் நீராக மாறிப்போகிறது. கானல் நாவலை வெளியிட்டு வைத்த ‘தோழமை’ வெளியீட்டகத்தைச் சேர்ந்த வே.மு.பொதிய வெற்பன் தனது பதிப்புரையில் இவ்வாறு கூறுகிறார் (டானியல்.கே.,1986, கானல், கும்பகோணம், தோழமை)

“ஞான ஸ்நானங்களுக்குப் பின்னாலும் மார்க்கக் கல்யாணங்களுக்குப் பின்னாலும் தீட்சை நாமங்களுக்குப் பின்னாலும் எம்மவர்களின் நாமாவளிகள் மாறியதல்லாமல் நடைமுறையில் இன இழிவுப்பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. சமய மாற்றங்களுக்குப் பின்னாலும் சாதி வாலாடுகின்ற சங்கடங்கள் தொடர்கதை தான் இன்றளவும் யதார்த்தத்தில்…”.

டானியல் ஒரு கத்தோலிக்கராக இருந்ததால்,  அவரால் தாம் சார்ந்து கொண்டுள்ள சமயத்தின் குறைகளைச் சுட்டிக் காட்டுவது மிகவும் கடினமாகவே இருந்திருக்கும். அதுவும், குறித்த 1960களின் காலத்தில், அவ்வாறு செய்வது திருச்சபை விரோதமாகவும் கருதப்படலாம். என்றாலும், இயன்றளவு துணிவுடன் கானலை டானியல்  படைத்திருப்பதாகக் கருதலாம்.

8 Replies to “மதமாற்றம் எனும் கானல் நீர்”

  1. Christian religion was created by emperor Constantine as a mixture of Judaism,Paganism and Animism.The religion has taken different combinations all over the world by suitably manipulating and polluting local religious ideas and has grown through propagation of lies and by manipulating local caste and clan problems through Europeon financial and political support.This religion cannot be a solution for any social problem anywhere.Hence the same has been rejected totally by Judaism as well as the Abrahhamic religions of later ages which grew by converting the Christians primarily.The 200 or so different versions of the Christian religion(Catholic sects under the command of the pope as well as protestant sects opposing the pope) can only aggravate the existing social and clan problems and cannot solve them at all.This book only confirms this opinion.

  2. மதம் மாற்றம் என்னும் கானல் நீர் அருகில் சென்றால் கண்ணை திறந்துவிடும் உண்மை விளங்கும். அது கானல் நீர் அல்ல அழுக்கடைந்து சாக்கடை நீர் என்று தெரிந்தே அதில் முழுகுகிறார்கள். புலம்புவதால் ஒரு பலனும் இல்லை. தாய் மதம் திரும்புவதே அவர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும்.

  3. All the converted Christians should abandon their alien faith and religion and must return to their mother religion and their village and caste roots and start praying to their “Kula devatas” and their grama devathas to whom their forefathers prayed.Hinduism is undergoing oceanic changes and the democratic society and the modern communications and metropolitan living are removing the caste inequalities and attrocities and are paving the way for a modern egalitarian living for all castes with honour ,respect and brotherhood.Enjoy living as a Hindu once again free from all dogmas and blessed with free religious thinking and experience.There is absolutely no compulsion whatsoever only in Hindu religion.

  4. ::இயேசு உங்களை ரட்சிப்பார். உங்களுக்கு நல வழி காட்டுவார். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். என்றெல்லாம் பசப்பு வார்த்தைகளை கூறி அப்போதைக்கு சில சில்லறை பொருட்களை கொடுத்து மயக்கி ஏழை தலித் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிவிடுகின்றனர். அப்படி மாறியபின்னர் அவர்கள் கஷ்டமும் தீருவதில்லை.அவர்கள் நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை. இயேசு நம்மை காப்பாற்றுவார் என்று நம்பி மோசம் போனபிறகு நம்மை அரசுதான் காப்பாற்றவேண்டும் என்று அரசிடம் reservation உட்பட அணைத்து உதவிகளையும் கோருகின்றனர். church இல் மற்றவர்களுக்கு இணையாக மதிகிறர்களா என்றால் அதுவும் இல்லை. . reservation ம் போச்சு ஏசுவும் கை விட்ட்விட்டார். ஆகவே மதம் மாறுவதால் எந்த பயனும் இல்லை. இந்துக்களும் இந்துகளாக உள்ள அனைவரயும் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று வித்தியாசம் பாராமல் எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்றும் அவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களை வணங்கும் இந்து சகோதரர்கள் என்று எண்ணி அவர்களுடன் பழகினால் வேறு மதம் தேடி போகமாட்டார்கள் என்பது உறுதி. The last but not The least : நாம் மனம் மாறினால் அவர்கள் நிச்சயம் மதம் மாறமாட்டார்கள். இந்துக்கள் கண்டிப்பாக இதை செய்துதான் ஆகவேண்டும். அது காலத்தின் கட்டாயம். A விஸ்வநாதன்

  5. //இந்துக்களும் இந்துகளாக உள்ள அனைவரயும் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று வித்தியாசம் பாராமல் எல்லோரும் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் என்றும் அவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களை வணங்கும் இந்து சகோதரர்கள் என்று எண்ணி அவர்களுடன் பழகினால் வேறு மதம் தேடி போகமாட்டார்கள் என்பது உறுதி. The last but not The least : நாம் மனம் மாறினால் அவர்கள் நிச்சயம் மதம் மாறமாட்டார்கள். இந்துக்கள் கண்டிப்பாக இதை செய்துதான் ஆகவேண்டும்.//

    Very good call.

  6. பாவிகளே என்று அவர்கள் அழைப்பது கிருஸ்துவர்கள் அல்லாத நம்மை. அவர்களின் நம்பிக்கை உலகெங்கினும் அனைவரும் கிருஸ்துவர்களாக இருந்தால்,இயேசு மறுபடியும் வருவார் . யார் இயேசு மறுபடியும் வரவேண்டும் என்று காலில் வெந்நீர் கொட்டிக்கொண்டு துடிக்கிறார்கள்? இவ்வாறு ஏமாற்றப்பட்ட தலித்துக்கள் பணமும் சிறு வீடும் பெற்றுக்கொண்டு சர்ச் தரும் மாதாந்திர தொகையை பெற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். மதம் மாறிய தலித் கிருஸ்துவர்களை பிற்பட்ட வகுப்பினராக அறிவிக்குமாறு கேட்கிறார்கள் . அது ஏற்கப்பட்டால் தென் தமிழ் நாடு முழுமையும் உள்ளவர்களை கிருஸ்துவர்களாக மட்காம் மாற்றிவிடுவார்கள் .கூடன் குளம் வெற்றி பெற்றால் அங்குள்ள தலித் கிருஸ்துவர்கள் முன்னேறி விடுவார்கள் அவர்கள் தங்களையே சார்ந்திருக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன், அங்குள்ள பாதிரிகளின் தூண்டுதல்களினால் தான் அங்கு உதய குமார் தலைமையில் மின் நிலையத்திற்கு எதிராக போராடினார்கள். உண்மையில் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அல்ல ..

  7. சமய மாற்ற நடப்பைத் தெள்ளனக் காட்டும் கதை. ஔவை சொன்னபடி, ‘சாதி இரண்டொழி வேறில்லை, இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தார்’ என்று இரண்டு சாதிகள்தான் உள்ளன. இடு என்றால் பிச்சை இடு என்று பொருளில்லை. அறிவை இடு என்றே கொள்ள வேண்டும். கல்வி அறிவு உயர உயர, உயர்வு தாழ்வு தானாகவே கதிரவனைக்கண்ட பனிநீராக ஓடிவிடும். இலட்சக்கணக்கில் ஆடம்பரச் செலவு செய்து பணத்தை வீணடிக்காமல் ஏழை எளியருக்கு ஒளியூட்டும் கல்விக்குச் செலவிடுங்கள். கல்வியையே வணிகமாக்காமல், அனைவருக்கும் ஒளியூட்டும் அறிவுச் செல்வமாக அளியுங்கள். அதுவே, இந்து சமயத்திற்குச் செய்யும் சிறந்த தொண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *