ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

லகின் எல்லா தொல்மதங்களிலும் பண்பாடுகளிலும் சிருஷ்டி அல்லது படைப்பு ஆதிகாலத்திலிருந்தே ஒரு புதிராகவும் மையமான பாடுபொருளாகவும் இருந்து வந்திருக்கிறது. எல்லா மதப் புனித நூல்களிலும் சிருஷ்டி குறித்த நம்பிக்கைகள், தொன்மங்கள், கதைகள் உள்ளன. நவீன அறிவியல் வளர்ச்சியின் ஊடாக பிரபஞ்சவியல், பரிணாமவியல் ஆகிய துறைகளின் சிந்தனை ஒளியில் இவை முன்வைக்கும் பல கருதுகோள்கள் மறுபரிசீலனை செய்யப் படுவதையும் நாம் பார்க்கிறோம்.

இந்துமதத்தைப் பொறுத்த வரையில் வேதங்களே நமது ஆதாரமான புராதன நூல்கள். அடிப்படையில் வேதங்கள் அற்புதமான ஆதித்தொல் கவிதைகளும் கூட. அவை சிருஷ்டி குறித்து என்ன கூறுகின்றன என்பதை சில ரிக்வேத சூக்தங்களின் வழியே பார்க்கலாம்.

hiranyagarbha

ஹிரண்யகர்ப்ப சூக்தம்

(ரிக்: பத்தாவது மண்டலம், 121வது சூக்தம்)

ஆதியில் பொன்கருவாம் ஹிரண்யகர்ப்பன் உதித்தான்
உயிரனைத்தி்ன் ஒரே தலைவனானான்
இப்புவியையும் விண்ணையும் நிறுவியோன் அவனே
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

சுய உயிர்ப்பு தருகிறான் பலமளிக்கிறான் அவன்
தேவரனைவரும் போற்றுவது அவன் ஆணையே
அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

உயிர்ப்பதும் இமைப்பதுமான உலகின் ஒருதனியரசனாக
தன் மகிமையால் அவன் ஆனான்
இருகால் உயிர்க்கும் நாற்கால் உயிர்க்கும் ஈசன் அவன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

இப் பனிமலைகள் அவன் பெருமையின் முகடுகள்
கடலும் அதன் ரசமும் அவனதே என்பார்
இத்திசைகள் அவன் கரங்கள்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

புவியின் திடமும் விண்ணின் ஆற்றலும் அவனால்
ஒளியுலகும் சுவர்க்கமும் நிற்பது அவனிடம்
விசும்பை வளியால் அளந்தவன் அவன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

நடுக்கமும் நன்றியும் கூடிய மனதுடன் வேண்டி நிற்கின்றன
அவன் சக்தியில் நிலைத்திருக்கும் விண்ணும் மண்ணும்
அவற்றி்ன் மீது பேரொளியுடன் எழுகிறான் கதிரோன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

பாரெங்கும் நீர்கள் படர்ந்து மூடி
கருச்சுமந்து பெற்றன அக்னியை
பிறகு ஆங்கே பிறந்தது தேவர்களின் சுவாசம்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

உணர்வைச் சுமந்து வேள்வியைப் பெற்றன நீர்கள்
அவற்றையும் தன் மகிமையால் ஆள்வோன் அவன்
தேவர்கட்கெல்லாம் மேலான தேவன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

தொல்புவியைப் பிறப்பித்தோன்
நம்மைத் துன்புறுத்தாதிருக்கட்டும்
விண்ணைப் படைத்தவன்
இருப்பே தன் இயல்பானவன்
தண்புனல் நீர்களைப் படைத்தவன் அவன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?

பிரஜாபதியே வேறு யாருமல்ல நீயே
இங்கு உதித்தவற்றுக்கெல்லாம் இருப்பை அருளியவன்
யாம் விருப்புற்று வேள்வியில் வேண்டுவதனைத்தும்
எமதாகுக
செல்வங்கள் எம்மை வந்தடைக.

சிருஷ்டிக் கடவுளான பிரஜாபதி ஹிரண்யகர்ப்பன் என்று இப்பாடலில் தொடக்கத்தில் அழைக்கப் படுகிறார். அதன் நேரடிப் பொருள் “பொன் கரு” என்பதாம். இங்கு பொன் (ஹிரண்யம்) என்பதை சிருஷ்டியின் அனைத்து உயிர்ச்சக்திகளையும் அழகுகளையும் செழுமைகளையும் புலப்படுத்தும் குறியீடாகக் கொள்ளலாம். அந்தச் சொல்லை ஹி+ரண்யம் எனப் பகுத்தால், ”மறைத்து வைக்கப் பட்ட ஆனந்தத்தின் கரு” என்ற இன்னும் நுட்பமான பொருள் தருகிறது. சிருஷ்டியின் விகசிப்பு முழுவதும் ”ஆனந்தம்” என்ற இறுதி உயர்நிலையை ஒவ்வொரு உயிரும் அடைவதற்காகவே என்ற கருத்தை இந்தச் சொல்லே தேக்கி வைத்துள்ளது என்ற விளக்கம் கிடைக்கிறது.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள்
இறைவா இறைவா இறைவா

சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்
ஆகப் பல நல்லழகுகள் சமைத்தாய்

என்று பாரதியார் பாடுவதை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.

யஸ்யேமே ஹிமவந்தோ மஹித்வா – இப் பனிமலைகள் அவன் பெருமையின் முகடுகள்
யஸ்ய ஸமுத்³ரம் ரஸயா ஸஹாஹு:– கடலும் அதன் ரசமும் அவனதே என்பார்

தன் முன் சிருஷ்டியின் அழகுகளாக விரிந்து கிடக்கும் பேரியற்கையைப் பாடும் வேத ரிஷி, ஹிமாலயம் முதல் சமுத்திரம் வரை அவன் புகழே என்று பரவசப் படுகிறார். வரலாற்றின் புலரியில், கதிரொளியின் இளஞ்சூடு பரவி வரும் பனிபடர்ந்த ஓர் வைகறைப் பொழுதில், சரஸ்வதி நதி தீரத்திலோ அல்லது இமயச் சாரலிலோ நின்று கொண்டு, பாரத புண்ணிய பூமி என்னும் மாபெரும் சத்தியத்தை, அதன் முழு தரிசனத்தையே தனது ஞான திருஷ்டியில் அந்தக் கவிமனம் கண்டு விட்டது போலும்!

இப்பாடலில் இயற்கைச் சக்திகள் அனைத்தையும் உருவாக்கியவராக பிரஜாபதி சித்தரிக்கப் படுகிறார். கடைசிப் பாடல் தெளிவாக பிரஜாபதியைக் குறிப்பிட்டுப் போற்றுகிறது. ஆனால் அதற்கு முந்தைய ஒவ்வொரு பாடலிலும் இறுதி அடியாக வரும் தொடர் ”கஸ்மை தே³வாய ஹவிஷா க்⁴ருதேம” (எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்) என்பதாகும். கவிதை ஒருமை கருதி, இதனை ஒரு கேள்வி வடிவில் நான் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் வேத சம்ஸ்கிருத இலக்கணத்தின் படி இந்த வரியை கேள்வியாகவும், உடன்பாட்டு வாசகமாகவும் இரண்டு வகையிலும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் சொல்வதானால்,

Who is the God to whom we offer our sacrifices?
“Who” is the God to whom we offer our sacrifices.

இப்படி இரு வகைகளிலும் பொருள் கொள்வது ஒருவகையான நவீன வாசிப்பு அல்ல. புராதன வேத விளக்கவுரையாளரான யாஸ்கரும் ”க: ப்ராஜபதி” (”யார்” என்கிற பிரஜாபதி) என்றே குறிப்பிடுகிறார். சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். இந்திய சிந்தனை மரபில் ஐயவாதம் (skepticism) என்பதன் தொடக்கப் புள்ளியாக இதனை அவர்கள் காண்கின்றனர், ஜாபாலி மதம் (ராமாயணம், அயோத்யா காண்டம்) சார்வாகம் (மகாபாரதம் சாந்தி பர்வம்), லோகாயதம், ஆஜீவகம் போன்ற நாத்திக தரிசனங்களின் ஊற்றுமுகமாகவும் இத்தகைய வேத சூக்தங்களை அவர்கள் அடையாளம் காட்டுகின்றனர்.

மாறாக, சடங்குகளை மையப் படுத்திய பூர்வ மீமாம்சகர்கள், இறுதி மறைமொழியான வேதம் ஒருபோதும் ஐயங்களை வெளிப்படுத்துவதில்லை என்ற கருத்துக் கொண்டவர்கள். மாபெரும் மொழியியல் அறிஞர்களாகவும் விளங்கியவர்கள் மீமாம்சகர்கள். எனவே க: என்பதற்கு இலக்கணத்தை ஒடித்து வளைத்து வேறு ஒரு பொருள் அளித்து ”க: பிரஜாபதி” தெளிவாக வரையறை செய்யப் பட்ட ஒரு தேவதை என்று பொருள் கொண்டு அவருக்கான வேள்விகள், சடங்குகள், பலிகள் என்று அமைத்துக் கொண்டு சென்றார்கள். பிற்காலத்திய பிராமணங்களில் இதற்கான சான்றுகளைக் காண்கிறோம்.

எப்படியாயினும் இது ஒரு மகத்தான பாடல். “அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல்” என்ற வரி மெய்யுணர்வில் திளைத்த ஒரு மகா ஞானியின் வாய்மொழி அன்றி வேறு என்ன?

அடுத்த பாடலையும் பார்த்து விட்டு ஐயவாதம் பற்றிய கருத்துக்கு வருவோம்.

creation_scattered_stars

நாஸதீய சூக்தம்

(ரிக்: பத்தாவது மண்டலம் 129வது சூக்தம்)

அப்போது அசத் இருக்கவில்லை
சத் இருக்கவில்லை
உலகமிருக்கவில்லை
அப்பாலான வானும் இருக்கவில்லை
எது மூடியிருந்தது? எங்கு?
யாருடைய ஆணையில்?
அடியற்ற ஆழமுடைய நீர்வெளி இருந்ததோ? (1)

அப்போது மரணம் இருக்கவில்லை
அமுதம் இருக்கவில்லை
இரவு பகல்களின் அடையாளங்கள்
இருக்கவில்லை
ஒன்றேயான அது
தன் அகச்சத்தியால்
காற்றின்றி மூச்சுவிட்டது
அப்பால்
அதுவன்றி வேறேதும்
இருக்கவில்லை. (2)

இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில்
பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்
நீராக இருந்தது
வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது
அதிலிருந்து
மகத்தான தவத்தால்
அந்த ஒன்று பிறந்தது. (3)

ஆதியில் அதில் காமம் எழுந்தது
மனத்தின் முதல் பீஜம் அது தான்
இதயங்களில் தேடுகின்ற ரிஷிகள்
தங்கள் மேதமையால்
அசத்தில் சத்தைக் கண்டனர். (4)

அவற்றின் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் சென்றன
மேலிருந்தது என்ன? கீழிருந்தது என்ன?
பிறப்பிப்பவை இருந்தன
மகத்தான சக்திகள் இருந்தன
ஆற்றல் கீழிருந்தது
வேகம் மேலிருந்தது. (5)

உண்மையில் யாரறிவார்?
யார் அதைச் சொல்ல முடியும்?
எங்கிருந்து தோன்றியது சிருஷ்டி?
எங்கிருந்து?
தேவர்களோ படைப்பிற்குப்
பின்வந்தவர்கள்
அப்படியானால் அது எப்படி உருவாயிற்று?
யாரறிவார்? (6)

இந்த சிருஷ்டியின் தோற்றம்
யார் அதை உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
அப்பாலான ஆகாயமாக
இதைக் கண்காணிக்கும்
அவனே அறிவான்
அல்லது அவனும் அறியான். (7)

ஞானத் தேடல் கொண்டு வேத இலக்கியத்தை அணுகும் ஒவ்வொரு வாசகனையும் வசீகரிக்கும், சிலிர்க்க வைக்கும் மகத்தான கவிதை இது. பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகள் அனைத்தும் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளின் ஆரம்பப் புள்ளி இந்தக் கவிதையே என்றால் அது மிகையாது. இந்த அடிப்படைக் கருத்தாக்கங்களே பின்னர் உபநிஷதங்களிலும், சாங்கியம் முதல் வேதாந்தம் வரையிலான ஆறு தரிசனங்களிலும் மிக விரிவாக வளர்த்தெடுக்கப் படுகின்றன. உபநிஷதங்கள் வேத சம்ஹிதைகளின் நீட்சியே அன்றி அவற்றிலிருந்து துண்டிக்கப் பட்டவை அல்ல என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த திறவுகோலாக இந்த சூக்தம் அமைகிறது.

ஏழு மந்திரங்கள் கொண்ட இந்த சூக்தத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டால் இதன் பொருளை உணர்வது எளிதாகும். முதல் இரண்டு மந்திரங்கள் சிருஷ்டி குறித்த வியப்பையும் கேள்விகளையும் எழுப்பி சில ஊகங்களை வைக்கின்றன. 3,4,5 வது மந்திரங்கள் ”அதுவன்றி வேறேதும் இல்லாத ஒன்று” சிருஷ்டியாக வெளிப்பட்டதை விளக்குகின்றன. கடைசி இரண்டு மந்திரங்கள் அந்த ஒன்றைப் பற்றிய கேள்விகளையும் வியப்புகளையும் வைத்து முடிகின்றன.

non-existence

அசத் = இன்மை. சத் = உண்மை.

”அசதோ மா ஸத்³ க³மய, தமஸோ மா ஜ்யோதிர் க³மய, ம்ருத்யோர் மா அம்ருதம் க³மய”

இன்மையிலிருந்து உண்மைக்கு, இருளிலிருந்து ஒளிக்கு, மரணத்திலிருந்து அமுதத்திற்கு எம்மை இட்டுச் செல்க.

இந்த உபநிஷத மந்திரம் கோடிக்கணக்கான இந்துக்கள் அன்றாடம் கூறும் பொது பிரார்த்தனையாக உள்ளது. இதில் உள்ள இன்மை/உண்மை, இருள்/ஒளி, மரணம்/அமுதம் ஆகியவை மேற்கண்ட சிருஷ்டி கீதத்திலும் உள்ளன என்பதைக் கவனியுங்கள். இந்தப் பிரார்த்தனை லௌகீகமானது அல்ல, முற்றிலும் ஆன்மீக மயமானது. பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சிருஷ்டி தத்துவத்தின் தியானமாக உள்ள இந்தப் பிரார்த்தனை, ஒவ்வொரு கணமும் மனிதன் தன்னைப் புதிதாக சிருஷ்டித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

“ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்… ” (திருவாசகம்)

“காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்…” (திருவாய்மொழி)

போன்ற பக்தி இலக்கியப் பனுவல்களிலும் சிருஷ்டி கீதத்தின் இந்த சுருதி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

இருளிலும் (தமஸ்) அடியற்ற ஆழமுள்ள நீர்வெளியிலும் (அப்ரகேதம் ஸலிலம்) மறைந்து கிடந்த சிருஷ்டி பின்னர் வெளிப்பட்டது என்பது தத்துவார்த்த ரீதியாக மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் ஆழமான பொருளை அளிக்கக் கூடியது. தபஸஸ் தன்மஹினா ஜாயதைகம் – ”மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது” என்பதில், தபஸ் என்ற சொல்லுக்கு சூடு என்றும் நேரடிப் பொருள் கொள்ளலாம். (”சுடச் சுடரும் பொன்போல் ஒளிரும், துன்பம் சுடச் சுட நோற்கிற்பவற்கு” என்று தவம் குறித்து எழுதிய வள்ளுவர் சம்ஸ்கிருத சொற்பொருளில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்றே நாம் கருதவேண்டியிருக்கிறது). காரிருள், நீர்வெளி, அதைத் தொடர்ந்த பெரும் வெப்பம் என்பதை இணைத்துப் பார்த்தால், நவீன அறிவியலாளர்கள் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்பது பற்றி இன்று கூறும் கோட்பாடுகளுடன் முற்றிலும் ஒத்திசைவு கொண்டதாக இது உள்ளது.

தம ஆஸீத் தமஸா கூ³ட⁴மக்ரே – ’இருளை இருள் மறைத்திருந்தது’ என்ற வரியின் நுட்பம் கவனிக்கத் தக்கது. ஒரு உரையில் சுவாமி விவேகானந்தர் மிக அழகாக இது பற்றிப் பேசுகிறார் –

“வேதத்தின் சம்ஹிதைப் பகுதியை நீங்கள் படிப்பீர்களானால், அழகு கொஞ்சித் ததும்பும் வியக்கத் தக்க பகுதிகளைக் காண்பீர்கள்… ஐரோப்பாவில் முற்காலத்தில் தோன்றிய மில்டன், தாந்தே போன்ற கவிஞர்களும் சரி, தற்காலக் கவிஞர்களும் சரி, எல்லையற்ற அழகை எவ்வாறு வர்ணிக்கின்றனர்? மனிதனின் தசை நார்கள் மூலமே. எல்லையற்ற ஒன்றை எல்லைக்கு உட்படுத்தி தசைகளிலும் நரம்புகளிலும் வடித்துக் காட்டுவதில் மட்டுமே. சம்ஹிதைகளிலும் அந்த வர்ணனைகளைக் காணலாம். ஆனால் அங்கு அவை உலகில் வேறு எங்கும் காண முடியாத வகையில் வடிக்கப் பட்டிருப்பதை நீங்கள் காணலாம்…

darknessஅந்த ஒரு வரியைக் கவனியுங்கள் – ’இருளை இருள் மூடியிருந்தது’. மூன்று கவிகள் இருளை எவ்வாறு வர்ணிக்கின்றனர் என்று பாருங்கள். நமது காளிதாசனை எடுத்துக் கொள்வோம் – ’ஊசி நுனி நுழைந்து ஊடுருவும் இருள்’ என்கிறார். மில்டன் ’ஒளியில்லை இருளே காட்சி தந்தது’ என்கிறார். இப்போது வேத சம்ஹிதையைப் பாருங்கள் – ‘இருளை இருள் மூடியிருந்தது’. வெப்ப நாட்டில் வாழும் நாமே இதை நன்றாக அறிய முடியும். பருவ காலத்தில் வானில் திடீரென்று கூட்டம் கூட்டமாக மேகங்கள் தோன்றுவதும் கருமேகங்கள் சுருண்டு சுருண்டு ஒன்றையொன்று மூடுவதும் இங்கே தான் காணக் கூடிய ஒன்று. எனவே சம்ஹிதை இவ்வாறு வர்ணிக்கிறது. ஆனாலும் இவையனைத்தும் புற அழகு தான்…

… அவர்கள் அவ்வளவில் நிற்கவில்லை. மனிதனின் அக இயல்பை ஆராய்ந்தார்கள்; தங்கள் ஆன்மாவிடமே விடைகாண விரும்பினார்கள். அகக் கண்கண்டு தேடினார்கள்… ஒளிபடைத்த மனித ஆன்மாவை நோக்கினார்கள்; விடை கண்டார்கள்.“

–  வேதாந்தமும் அதன் சகல அம்சங்களும் (விவேகானந்தரின் ஞானதீபம், சுடர் 5)

இந்த சூக்தம் இறுதியாக ”அவனே அறிவான் அல்லது அவனும் அறியான்” (He knows indeed or He knows not) என்று முடிகிறது . சிருஷ்டியை ஒரு பிரபஞ்சப் பெரு வியப்பாக, பிரம்மம் அல்லது கடவுள் என்ற கருத்தாக்கத்தால் கூட முழுமையாக விடைசொல்ல முடியாத மாபெரும் கேள்வியாக, ஐயமாக முன்வைத்து நின்று விடுகிறது; அதுவே இதனை ஒரு மகத்தான கவிதையாக ஆக்குகிறது என்பது பல நவீன அறிஞர்களின் பொதுக் கருத்தாகும். இதன் மூலம் ஐயவாதமும், நாத்திகமும் கூட வேத ஞானத்தின் ஒரு பகுதியாக, இந்துமதத்தின் உட்பிரிவாகக் கருதத் தக்கது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இதை அப்படியே ஏற்க வேண்டும் என்பதில்லை. இந்து ஞான மரபு குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்த டாக்டர் ஆனந்த குமார சுவாமி இந்த சூக்தம் எந்த வகையிலும் ஐயத்தை வெளிப்படுத்தவில்லை என்று கருதுகிறார். விதிவிலக்காக, அவர் இந்த வரியை வேறு விதமாக மொழிபெயர்க்கிறார் – “அவன் அறிவான், அறியாமலுமிருப்பான்” (He knows and He knows not). இந்தப் பாடலின் முதல் வரியான “அசத் இருக்கவில்லை; சத் இருக்கவில்லை” என்பதன் தொடர்ச்சியாகவே இந்தக் கடைசி வரியும் உள்ளது; இது சிருஷ்டியின் வெளிப்பாட்டைக் குறித்த ஐயத்தை அல்ல, எல்லா இருமைகளையும் தன்னுள் அடக்கிய அதன் ஒட்டுமொத்த முழுமையை, பூரணத்துவத்தையே வெளிப்படுத்துகிறது என்று அவர் விளக்கமளிக்கிறார்.

சிருஷ்டியின் விஸ்தாரங்களை மேலும் விரிவாக விவரிக்கும் புருஷ சூக்தம், விஸ்வகர்ம சூக்தம் ஆகியவற்றை அடுத்துப் பார்க்கலாம்.

(தொடரும்)

17 Replies to “ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1”

  1. திரு. ஜடாயுக்கு நல்ல தொடரைத் துவங்கியதற்கு வாழ்த்துக்கள். “ம்ருத்யோமா அம்ருதம் கமய” என்பதில், அம்ருதம் என்பது அமுதமா அல்லது பிறவாமையா?

  2. A great and useful presentation.Would it be too much if a request is made to incorporate the relevant originals (Moolam) in Sanskrit alongside which will be useful for those who know the

  3. May I request the author of this useful article which is to be continued to incorporate the relevant orignals(moolam )in Sankrit alongside which will be useful and be appreciated by those who know Devanagari script. Many thanks for this greatcontribution.

  4. இத்தொடாஇத் தொடங்கியமைக்க் திரு Jஅடாயு அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

  5. வாழ்த்தும் பெரியோர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. இது நீண்ட தொடர் எல்லாம் அல்ல. இன்னும் 2-3 சூக்தங்கள், அவ்வளவே.

    srkuppuwamy அவர்களே, வேத மந்திரங்களை நேரடியாக கவிதைகளாக அளிப்பதே எனது நோக்கம்.. மந்திரங்களின் மூலத்தை இங்கேயே அளிப்பவது வாசக கவனத்திற்குப் பெரும் இடைஞ்சலாக இருக்கும். விரும்புபவர்கள் இணையத்தில் எளிதாகத் தேடி அவற்றைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். Rigveda in Sanskrit என்று கூகிளிட்டால் கிடைத்து விடும்.

  6. // “ம்ருத்யோமா அம்ருதம் கமய” என்பதில், அம்ருதம் என்பது அமுதமா அல்லது பிறவாமையா? //

    அம்ருதம் = அ + ம்ருதம். மிருத்யு இன்மை, அதாவது மரணமின்மை. இங்கு “அமுதம்” என்பதை மரணமின்மை என்ற பொருளில் பயன்படுத்துறேன் (புராணங்களில் வரும் அமுத கலசத்தில் உள்ள அமுதம் என்ற பொருளில் அல்ல).

    வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்
    வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்

    என்று பாரதி பாடிய பொருளில்.

    பிறந்ததெல்லாம் மரணித்தே ஆக வேண்டும் (ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: – கீதை) என்பதால், மரணமின்மை என்பது அதன் தொடராக பிறவாமையையும் குறித்ததாகும். அதனால் தான்,

    சாதல் பிறப்பென்னும் தடஞ்சுழியில் தடுமாறி…
    இறவாமல் பிறவால் எனையாள் சத்குருவாகி..

    என்றெல்லாம் அடியார்கள் பாடுகிறார்கள்.

  7. கவிதை நடையில் ரிக்வேதம் ;படிக்க,படிக்க,பரவசம்;ஆஹா !என்னே ஜடாயு அவர்களின் திறமை?எளிய வேதமளித்த ஏந்தல் ஜடாயு அவர்களுக்கு கோடானுகோடி நன்றி;நன்றி;நன்றி.
    சோமுசார்.

  8. அன்புள்ள ஜடாயு,

    புராணங்களில் வரும் அம்ருதமும் , மரணமில்லா பெருவாழ்வு அளிக்கும் தன்மையது என்பதால் தான் அந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  9. //எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?//

  10. //எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?//
    கவிதை நன்றே .
    அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுக்காத உயர் பண்பினை நீங்கள் ஏற்றிப் போற்றும் வேதங்கள் ஒரு போதும் உரைக்க வில்லையா?
    நாம் தேவனுக்கு ஏன் அவி தர வேண்டும்?
    வெகுளாமல் விளக்கம் தந்தால் நலம்.

  11. anbudhanasekaran,

    // அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுக்காத உயர் பண்பினை நீங்கள் ஏற்றிப் போற்றும் வேதங்கள் ஒரு போதும் உரைக்க வில்லையா?
    நாம் தேவனுக்கு ஏன் அவி தர வேண்டும்?
    வெகுளாமல் விளக்கம் தந்தால் நலம். //

    இங்கு நீங்கள் காணும் ரிக்வேதக் கவிதைகள் மிகமிகப் பழமையானவை – குறைந்தது 3500 வருடங்களுக்கு முன்பு பாடப்பட்டவை.. உலக[ பண்பாட்டில் மொழி, மதம், கலாசாரம் ஆகியவை முதன்முதாலக தோன்றிக் கொண்டிருந்த காலகட்டத்தை சேர்ந்தவை. இயற்கைச் சக்திகளை வணங்கிய அக்காலத்திய எந்தப் பழைய சமூகமும் வேத ரிஷிகள் அடைந்த கவித்துவத்திற்கு மெய்ஞானத்திற்கு அருகில் கூட வரவில்லை – ஏன் பல நூற்றாண்டுகள் கழித்தும் அவை வரவில்லை.

    வேள்வி என்ற உன்னதமான சடங்கை வேத ரிஷிகள் கண்டடைந்ததே ஒரு மாபெரும் மானுட சாதனை அல்லவா? அந்த சடங்குகள் பரவலாக நடந்து கொண்டிருந்த போதே இன்னொரு ரிஷி “எந்த தேவனுக்கு அவி தருகிறோம்?” என்று கேள்வி கேட்கிறார். அதையல்லவா நாம் பார்க்க வேண்டும்? அதற்கு அடுத்து உள்ள கவிதையிலேயே வேள்விச் சடங்கியிருந்து நகர்ந்து எத்தகைய தத்துவ உச்சத்தை ரிஷி அடைகிறார் என்றூ பாருங்கள். பிறகு இதெ வேத ரிஷிகளின் சந்ததியினரான ரிஷிகள் தான் உபநிஷதங்களில் வேள்விகளையும் கர்ம மார்க்கத்தையும் கண்டனம் செய்கிறார்கள் – வேதாந்த தத்துவம் உருவாகிறது.. அதன் பிறகு பௌத்தம், ஜைனம் எல்லாம்…

    ஆனாலும், வேத வேள்விகள் இன்றும் தொடர்கின்றனவே என்று நீங்கள் கேட்கலாம்.. ஏனென்றால் எல்லா பண்பாடுகளிலும் சடங்குகளுக்கான தேவை என்றென்றும் உள்ளது. உயிர்கள் மீதான கருணை என்ற விழுமியம் ஏற்றம் பெற்றபோது அதே வேள்விகள் மிருக பலியை தவிர்த்து நடைபெறத் தொடங்கின. சடங்குகள் என்றூம் மறைவதில்லை, உருமாறிக் கொண்டே இருக்கின்றன,. நவீன வாழ்க்கையில், அலுவலங்களில் பிறந்த நாள் விழா, திற்ப்பு விழா போன்று எத்தனை எத்தனை சடங்குகள்!

    யக்ஞத்தில், வேத வேள்வியில் அவி சொரிதல் என்பது தியாகத்தின் குறியீடு. “இதம் ந மம” (இது என்னுடையதல்ல) என்ற மந்திரத்துடன் தான் அவி சொரியப் படுகிறது. சுயநல மறூப்பின் குறியீடு அது.. அதனால் தான் பிற்கால இந்துப் பண்பாட்டில் எல்லாவற்றையும் வேள்வி என்று அழைக்கிறோம் – ஞான வேள்வி, ஜப வேள்வி, தப வேள்வி… கீதை யக்ஞம் என்ற கருத்தாக்கத்தை எவ்வளவு விசாலமாக வியாக்கியானம் செய்கிறது என்றூ பார்க்க வேண்டும். இறைவனுக்கு இலை, பூ, கனிகள் சமர்ப்பித்தல் என்ற பக்திச் செயல்பாடு கூட அவி சொரிதல் என்பதிலிருந்தே பரிணமித்துள்ளது.

    ”ஹிந்து பொய்யிலிருந்து உண்மைக்குச் செல்வதில்லை. எப்போதுமே ஒரு உண்மையிலிருந்து இன்னொரு உண்மைக்குச் செல்கிறான்” என்று விவேகானந்தர் கூறியதை எண்ணீப் பார்க்க வேண்டும். நீங்கள் கூறும் கருத்தாக்கங்களுக்கெல்லாம் மூலமும் இதே வேதங்கள் தான். அதனால் தான் ஆதார நூல்களாக வேதங்களைப் போற்றுகிறோம்.

  12. திருமிகு ஜடாயு அவர்கட்கு,
    விளக்கத்துக்கு நன்றி. ஆயினும், மாறிவரும் காலத்திற்கேற்ப நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளல் முறை அன்றோ? பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல்லவே?உள்ளம் பெருங்கோயில் ஊன்உடம்பு ஆலயம் என்ற நிலைக்கு நம்மை உயர்த்த முயலாமல், வெற்றான உயிர் பலியினை, என்றோ வேதம் சொன்னது என்று இன்றும் போற்றுவதேன் ? மடங்கள் மடத்தின் வழி செல்ல ஆரம்பித்தப் பின் மனிதம் மாண்டு மரித்துப் போகத் தொடங்கியது . பின் , ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி என்று நம்மை நாமே நொந்து கொள்வதில் மெய்ப் பொருளுண்டோ? எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவப்பதன்றோ உயர் நெறி? வேதத்தின் பெயரால் பேதம் வளர்த்தல் நெறி அன்று.
    தங்கள் அன்பிற்கும் அருமைத் தமிழுக்கும் நன்றி.

  13. anbudhanasekaran on February 24, 2013 at 9:18 pm
    நாம் தேவனுக்கு ஏன் அவி தர வேண்டும்?
    வெகுளாமல் விளக்கம் தந்தால் நலம்.// நீங்கள் அவி என்றால் மிருக பலி என்று பொருள் தவறாக கொள்ளுகிறீர்கள் என்று கருதுகிறேன்.

  14. ஸ்ரீ ஜடாயு அவர்களின் ரிக்வேதத்தின் ஸ்ருஷ்டி கீதம் கட்டுரை இனிமையாகவும் எளிமையாகவும் உள்ளது.ஹிரண்ய கர்ப்ப சூக்தம் மற்றும் நாஸதீய சுக்த்தம் ஆகியவற்றின் தமிழாக்கக்கவிதைகள் மிக சுவையாக உள்ளன. அந்த சூக்தங்களை அறிவார்ந்த முறையில் மிகச்சிறப்பாகவே விளக்கியுள்ளார் ஸ்ரீ ஜடாயு. வேத ஞானம் அனைவருக்கும் சென்று சேர்வதற்கு பெருமுயற்சி செய்யும் ஸ்ரீ ஜாடாயு அவர்களுக்கு பாராட்டுக்கள். அவர்தம் நற்பணித்தொடரவேண்டுகிறேன்.
    1. பொன் நிறத்தில் இறைவன் என்னும் கருத்து பொன்னார் மேனியனே என்னும் தேவாராத்திலும் ஒலிப்பதனை உணர்ந்து மகிழ்கின்றேன்.
    ஹ்ரண்ய பதயே ஹ்ரண்ய ரூபாய என்றும் சிவபிரான் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தகுந்தது.
    2.ஸ்ரீ ஜடாயு அவர்களின் “உபநிஷதங்கள் வேத சம்ஹிதைகளின் நீட்சியே அன்றி அவற்றிலிருந்து துண்டிக்கப் பட்டவை அல்ல என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த திறவுகோலாக இந்த சூக்தம் அமைகிறது” என்ற கருத்து இன்றைக்குத்தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. வேதம் வேறு உப நிஷதம் வேறு என்ற அன்னியர் கருத்தை தமிழகத்தில் ஒரு சில ஆன்மீகவாதிகள் சொல்லும் இந்தக்காலத்தில் வேத இலக்கியம் ஒன்றே என்னும் கருத்தினை ஆதாரப்பூர்வமாக்கியிருக்கிறார் ஸ்ரீ ஜடாயு.
    3. இந்திய ஞானப்பரம்பரையில் கிளைத்த அவைதீக நாஸ்திக தர்ஸனங்களுக்கும் வேதத்தில் மூலம் காட்டும் ஸ்ரீ ஜடாயு இறுதியாக ஆனந்தக்குமாரசுவாமி அவர்களின் ஸ்ருஷ்டியின் வெளிப்படுத்தும் பூரணத்துவத்தினை வெளிப்படுத்தும் சூக்தம் என்றோடு முடிவு கூறுவது மிகவும் நன்று.
    சிவஸ்ரீ விபூதிபூஷன்

  15. ஸ்ரீ ஜடாயு
    “பிறந்ததெல்லாம் மரணித்தே ஆக வேண்டும் (ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: – கீதை) என்பதால், மரணமின்மை என்பது அதன் தொடராக பிறவாமையையும் குறித்ததாகும்”
    அம்ருதம் என்பது நிச்சய்ம் வள்ளலார் போன்றப்பெரியோர்கள் சொல்லும் மரணமில்லாப்பெருவாழ்வு ஆகும். சாகாக்கலை என்பதுவும் அதுவே ஸ்ரீ வள்ளலார் மரணமில்லாப்பெருவாழ்வு என்றக்கருத்து வேதத்தில் மட்டுமே காணப்படுகிறது என்று தெளிவாக கூறியுள்ளார். ஜீவசமாதியில் இன்னும் வாழ்கின்ற சித்தர்கள் இன்னும் ராமனாமம் ஒலிக்க சமாதியாகியிருக்கின்ற பகவன்நாம போதேந்திரர் ஆகியோர் அதற்கு எடுத்துக்காட்டுகள். மரணமடைந்த ஒவ்வொருவரும் மீண்டும் பிறப்பார்கள் எனவே பிறப்பை அறுக்க மரணத்தினையும் வெல்லவேண்டும் என்பது ஸ்ரீ வள்ளலார் போன்ற சித்தர் நெறி. இலிங்காயதரான வீரசைவப் பெரியோர்களும் மரணத்தினை வெல்லும் மார்கம் தமதென்று கூறுவர். அம்ருதமயமான சிவனே போற்றி.

  16. அன்புதனசேகரன்
    “வேதத்தின் பெயரால் பேதம் வளர்த்தல் நெறி அன்று”.
    வேதம் பேதம் வளர்க்கிறது என்பதனைவிட பொய் எதுவும் இல்லை. உயிர்பலிதரும் வேள்விகள் வேதத்தில் காணப்படுவது உண்மையே.ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் போன்ற மகான்களும் கூட அதனை ஏற்றுள்ளார்கள்.உலகாயத இன்பளுக்கான யாகங்களிலே பலியிடும் பழ்க்கம் இருந்திருக்கிறது. நம்முடைய கிராமங்களில் காளியம்மனுக்கும் மாரியம்மனுக்கும் பலிகொடுக்கப்படுவது போன்று. புலால் உண்கிறவர் அதனையே இறைவனுக்கும் படைத்தல் இயல்புதான். சைவ உணவு உண்கிறவர்கள். ஜீவகாருண்யத்தினை ஆன்ம வளர்ச்சிக்கு அடிப்படையாகக்கருதுகிறவர்கள் பலியிடல் வேண்டாம். அவர்கள் இறைவனிடத்தில் எந்த வேண்டுதலையும் வைத்தல் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நீங்கள் சைவ உணவுக்கொள்கையில் நம்பிக்கையாளரானால் பலியானவேள்வியை பயன்படுத்தாதீர்கள். இன்றைக்கு பலியில்லாமலே அஸ்வமேதம் சோமயாகம் போன்றவை நடத்தப்படுவதை இணையத்தில் காணலாம்.

  17. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259

    மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.

    இந்தக் குறள் வேள்வியை சிறப்பிக்கச் சொன்னதே- விரிவான கட்டுரை இங்கே
    https://chennaipluz.in/txtpat/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *