திருவையாறு ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா

Aiyarappar Templeமுழுமுதற் கடவுளான சிவபெருமான் சிறப்பாக எழுந்தருளியுள்ள இடமாக திருக்கயிலாய மலை கருதப்படுகிறது. இந்தத் திருக்கையிலாயம் சென்று இறைவனை தரிசிப்பது இயலாய காரியமானதால் அவன் நாட்டின் பல பகுதிகளிலும் ஆலயங்களில் குடிகொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட சிவாலயங்களில் தென்னாட்டில் தேவாரத் திருத்தலங்களாக அமைந்தவை 276, அவற்றில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களில் 51ஆவது தலமாக அமைந்ததுதான் திருவையாறு.

இத்தலம் திரு ஐயாறு எனப் பெயர் பெறக் காரணம் என்ன?

சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கையாறு, பாலாறு, நந்திவாய்நுரை இவை ஐந்தும் இங்கே கலப்பதால் இத்தலம் “பஞ்சநதம்” எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இங்கு கோயில் கொண்டுள்ள ஐயாறப்பருக்கு செம்பொற்ஜோதி, செப்பேசர், கயிலைநாதர், பிராணதார்த்திஹரர் எனும் பெயர்களும் உண்டு. இவை தவிர திருவையாறுடைய மகாதேவர் என்றும் இறைவியை உலகுடைய நாச்சியார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஐயாறப்பர் லிங்கத் திருமேனி சுயம்புவானதால் இங்கு புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படும், இவருக்குத் தீண்டாத்திருமேனி நாதர் என்னும் பெயரும் உண்டு.

இங்கு ஐயாறப்பருக்கு பூஜை செய்து வந்த ஒரு ஆதிசைவர் காசி சென்று திரும்பிவர காலதாமதம் ஆனதால், சிவபெருமானே அந்த சிவாச்சாரியார் உருவில் வந்து தன்னைத்தானே பூசித்த வரலாறு சிற்ப்பு வாய்ந்தது. சப்தஸ்தான திருவிழாவின் போது இங்கு ‘தன்னைத் தானே பூஜித்த’ வரலாறு ஐந்தாம் நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.

 

Live in websiteதிருக்கடவூரில் மார்க்கண்டனின் உயிரைக் காக்க சிவபெருமான் காலனை உதைத்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். அதுபோலவே இந்தத் தலத்தில் சுசரிதன் எனும் அந்தணச் சிறுவனின் உயிரைக் காக்க சிவபெருமான் தன் தென்வாயில் காப்போனான ஆட்கொண்டாரைக் கொண்டு எமனை தண்டித்த வரலாறும் இங்கு உண்டு. எனவே இவ்வாலயத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை இறைவன் சந்நிதியில் செய்து கொள்வது சிறப்பு. இங்கு ஆட்கொண்டாருக்குத் தெற்கு வாயிலில் ஒரு சந்நிதி உண்டு. இங்கு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் குங்கிலியக் குண்டம் இருக்கிறது. மக்கள் இங்கு குங்கிலியம் வாங்கி இடுகிறார்கள்.

தேவார மூவரில் திருநாவுக்கரசருக்கு ஒரு முறை கைலாய மலைக்குச் சென்று சிவனை தரிசிக்கும் ஆவல் ஏற்பட்டது. திருநாவுக்கரசர் மேலும் பல காலம் தமிழ் பேசும் நல்லுலகில் இருந்து பல பாடல்களைப் பாடவேண்டும் எனக் கருதினாரோ என்னவோ, அவரை வழியிலேயே தடுத்து நிறுத்தி, இந்தப் பூதவுடலுடன் கயிலை செய்வது சாத்தியமில்லை என்று சொன்னர். அதற்கு அப்பர் “ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என மறுத்தார். அதற்கு ஒரு முனிவர் வடிவம் தாங்கி வந்திருந்த சிவபெருமான் அப்பரிடம் ஆங்கிருந்த ஒரு பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் காண்பாயாக!” எனப் பணித்தார். அவ்வண்ணமே பொய்கையில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் ஒரு நீர்நிலையில் எழுந்திருக்க அங்கே சிவன் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி கயிலை காட்சி அருளினார். ஆடி அமாவாசை தினத்தில் இங்கு நடைபெறும் கயிலைக் காட்சித் திருவிழா மிகவும் புகழுடையதாகும். அதனால்தான் திருவையாற்றைத் தென் கயிலாயம் என அழைக்கின்றனர்.

396866_308579272520448_100001051325299_1005150_2098750652_n

சப்தஸ்தானத் தலங்கள் என வழங்கப்படும் ஏழூர்களாவன;

திருவையாறு,
திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை,
திருவேதியகுடி,
திருக்கண்டியூர்,
திருப்பூந்துறுத்தி,
திருநெய்த்தானம்

ஆகியவை அவை. இவற்றில் முதல் தலமான இவ்வூரில் சித்திரை மாதம் பெளர்ணமி விசாகத்தில் “ஸப்த ஸ்தானப் பெருவிழா” நடைபெறுகிறது. இவ்வேழூர் இறைவனும் அம்மையப்பராகக் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி அருள்புரியும் காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் கண்டு களிக்கின்றனர். இவ்வூருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது, “அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்கிற திருமுறை வாக்கின்படி இங்கு அம்பிகை தர்மசம்வர்த்தினி அரியின் அம்சமாகக் கருதப்படுதலால் இங்கு திருமாலுக்கென்று தனி ஆலயம் எதுவும் இல்லை.

தக்ஷிணாமூர்த்தி தனது பதினெண் பேதவுருவங்களில் இங்கு ஸ்ரீஹரிகுரு சிவயோக தக்ஷிணாமூர்த்தி வடிவில் காட்சியளிக்கிறார். எப்போதும் வேலேந்திய கரத்தோடு காணப்படும் முருகன் இங்கு வில்லேந்திய முருகனாகக் காட்சி தருகிறார். இவ்வாலயத்திலுள்ள செபேச மண்டபம் காசிக்கு நிகராகக் கருதப்படுகிறது. இங்கு அமர்ந்து பஞ்சாக்ஷரம் ஜெபம் செய்வோருக்கு நல்வினைப் பயன்கள் கிடைக்குமென்பது உறுதி.

555423

இவ்வாலயத்தின் மூலத்தானம் அமைந்திருக்கும் ஐயாறப்பர் சந்நிதி அகப்பேய்சித்தர் சித்தம் கொண்டு ஸ்தாபித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. மூலத்தான விமானத்தின் மேல் பகுதியில் காணப்படும் பல்வகைச் சித்தர்களின் திருவுருவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றனர். இது தவிர ராஜராஜ சோழனின் பத்தினியான ஓலோக மாதேவியாலும், ராஜேந்திர சோழனின் பத்தினியான பஞ்சவன்மா தேவியாலும் இங்கு வட கைலாயம், தென் கைலாயம் என இரு ஆலயங்களை நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன.

சுமார் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயம் 70க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்டிருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் காலங்களில் இவை வெட்டப்பட்டவை. மூலத்தானம் பல்லவர்களாலும், மூன்றாம் திருச்சுற்று விக்கிரம சோழனாலும் எழுப்பபெற்றமை தெரிகிறது. மேலை கோபுரம், முதல் சுற்று, நடை, திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தென்கோபுரம் ஆகியவை பின்னாளில் அறம் காக்கும் மரபுடையோரால் கட்டப்பட்டவை.

முதல் இராஜராஜ சோழன் காலத்தில் இத்தலத்துக்கு “பொய்கை நாட்டுத் திருவையாறு” எனப் பெயர் வழங்கியது. இப்போது நினைத்தால் அதிசயிக்க வகையில் அந்நாளில் நிர்வாகத் துறையில் இவ்வாலய நிர்வாகப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரியை “அதிகாரிச்சி” எனும் சொல்லால் அழைத்திருக்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட நீரை அகற்றும் பணி செய்வோரை “நிர்மால்ய நீர் போக்குவான்” என அழைத்தனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் கோவிந்த தீக்ஷதர் வழிகாட்டுதலில் இங்கு காவிரிக் கரையில் பல படித்துறைகள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட படித்துறைகளில் புஷ்யமண்டபப் படித்துறை சிறப்பு வாய்ந்தது.

Aiyarappar Temple, Thiruvaiyaru, Tamil Nadu34534திருநாவுக்கரசர் ஐயாறப்பரைப் பாடும்போது “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” எனக் குறிப்பிடுகிறார். அப்பரின் இந்த வாக்கியத்தை மெய்ப்பிப்பது போல இவ்வாலயத்தின் மேலைப் பிரகாரத்தில் நின்று குரல் கொடுத்தால் அவ்வொலி ஏழு முறை எதிரொலிக்கும் அதிசயமும் இங்கே இருக்கிறது. கரிகால் சோழனின் தேர் இங்கு அழுந்த அங்கு தவத்திலிருந்த அகப்பேய்சித்தர் உணர்த்தியபடி இவ்வாலயம் எழுப்பப் பட்டதாகத் தல வரலாறு சொல்கிறது. 1937இல் ஒரு முறை இவ்வாலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. அதன்பின் 31-3-1971இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 41ஆண்டுகள் கழிந்து இப்போது அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நாளது பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இங்கு கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சந்நிதிக்கு 1937 தொடங்கி இன்றுவரை கும்பாபிஷேகம் செய்யும் பொறுப்பை தேவகோட்டை உ.ராம.மெ.சுப.சின்ன சேவுகங் செட்டியார் குடும்ப்த்தினர் பொறுப்பேற்றுக்கொண்டு சிறப்பாக செய்து வருகின்றனர்.

11FRPANCHANADEESWAR_407685g

இவ்வரிய கும்பாபிஷேக நிகழ்ச்சி நந்தன வருஷம் தை மாதம் 25ஆம் நாளுக்குச் சரியான 2013ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வியாழன் மூல நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் காலை 8.40க்கு மேல் 10-40க்குள் மீன லக்னத்தில் நடைபெறவிருக்கிறது. அன்பர்கள் எல்லோருக்கும் ஐயாறப்பர், அறம்வளர்த்த நாயகி அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.

thanjai_ve_gopalanகட்டுரை ஆசிரியர் தஞ்சை வெ.கோபாலன் அவர்கள் ஆயுள் காப்பீட்டுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரதி இலக்கியப் பயிலகம் என்ற அமைப்பின் இயக்குனராகவும் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவராகவும் சிறந்த அளவில் கலை, இலக்கியப் பணிகளை செயலாற்றி வருகிறார்.

Tags: , ,

 

16 மறுமொழிகள் திருவையாறு ஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா

 1. வெள்ளை வாரணன் on February 7, 2013 at 7:20 am

  திருவையாறு பற்றிய அரிய தகவல்களை தொகுத்து வெளியிட்ட தஞ்சை திரு வெ. கோபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி.

 2. சோமசுந்தரம் on February 7, 2013 at 3:18 pm

  இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் வலைபதிவில் நேரடியாக கண்டு மகிழ்தேன். http://dharmapurammutt.com/
  “வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்…”
  என்பதற்கு ஏற்ப மிக சிறப்பாக இருந்தது.

 3. C.N.Muthukumaraswamy on February 8, 2013 at 12:14 pm

  திருவையாறு தலபுராணத்தில் நந்தியம்பெருமான் வேண்டிப் பெற்ற பதினாறு பேறுகள்.”திருக்கயிலாய மலையில் செம்பொற் றிருக்கோயிலில் குடிலையாகிய சிம்மாசனத்தில் சர்வலோக நாயகராகிய சிவபெருமான் உமையம்மையுடன் வீற்றிருக்கின்றார். திருநந்திதேவர், ஆன்மாக்கள் அனைத்தின் நலத்தையும் உள்ளத்திற்கொண்டு பரமேசுவரிடம் பதினாறு வரங்கள் வேண்டிப் பெற்றார். அவை பதினாற் பேறுகள் எனப்பட்டன. சைவற்கள் போற்றும் பதினாறு பேறுகள் இவையே. “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!” எனச் சிவஞானியர் வாழ்த்துவது இப்பேறுகள் குறித்தேயாகும். அப்பேறுகளாவன: (1) மறைகள்நிந்தனை சைவநிந் தனைபொறா மனமும் (2) தறுகண்ஐம் புலன்களுக் கேவல் செய்யுறாச் சதுரும். (3) பிறவி தீதெனாப் பேதையர் தம்மொடு பிணக்கும்.(4) உறுதி நல்லறம் செய்பவர் தங்களோ டுறவும். (5) யாதுநல் லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்.(6) மாதவத் தினோர் ஒறுப்பினும் வணங்கிடும் மகிழ்வும். ((7) ஓது நல்லுப தேசமெய் யுறுதியும் (8) அன்பர் தீது செய்யினும் சிவச்செய லெனக்கொளுந் தெளிவும்.(9) மனமும் வாக்கும்நி அன்பர்கள்பால் ஒருப்படு செயலும். (10) கனவி லும்முனது அடியருக்கு அன்பராங் கருத்தும். (11) நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்.(12) புனித நின்புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொலிவும்.( 13) தீமை யாம்புறச் சமயங்கள் ஒழித்திடு திறனும். (14) வாய்மை யாகவே பிறர்பொருள் விழைவுறா வளனும். (15) ஏமு றும்பர தாரம்நச் சிடாதநன் னோன்பும்.(16) தூய்மை நெஞ்சில்யான் எனதெனும் செருக்க்குறாத் துறவும்.துறக்கமீ துறைகினும் நரகில் தோய்கினும்இறக்கினும் பிறக்கினும் இன்பம் துய்க்கினும் பிறைக்கொழுந் தணிசடைப் பெரும இவ்வரம். மறுத்திடா தெனக்குநீ வழங்கல் வேண்டுமால் ஐயாறப்பன் திருக்குடமுழுக்கின்போது சைவ அன்பர்கள் இவ்வரம் வேட்டுப் பெறுக்.

 4. Ramesh Srinivasan on February 8, 2013 at 3:36 pm

  sand ப்லச்டிங் முறையில் சிற்பங்களை சிதைத்து, ( அழகாக chemical வாஷ் முறையில் சுத்தம் செய்திருக்கலாம்) ஓவியங்கள் மேல் வெள்ளை அடித்து, கல்வெட்டுகள் மீது சிமெண்ட் பூசி மிக சிறப்பாக செய்து உள்ளார்கள். பலமுறை நேரில் சொல்லியும் எல்லாம் எனக்கு தெரியும் என்று 1000 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்தவற்றை, மிக சிறப்பாக ஒழித்து கட்டி உள்ளார்கள்.

 5. தி.மயூரகிரி சர்மா on February 8, 2013 at 5:12 pm

  //இவ்வரிய கும்பாபிஷேக நிகழ்ச்சி நந்தன வருஷம் தை மாதம் 25ஆம் நாளுக்குச் சரியான 2013ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வியாழன் மூல நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் காலை 8.40க்கு மேல் 10-40க்குள் மீன லக்னத்தில் நடைபெறவிருக்கிறது//

  இந்தக் கும்பாபிஷேக முகூர்த்த நிர்ணயம் தொடர்பில் ஒரு சிறிய சந்தேகம்.. (இத்திருத்தலம் தருமையாதீனத்தின் கீழ் சிறப்பாக செயற்பட்டு வருவதால் முகூர்த்த நிர்ணயத்தில் தவறு இருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன்.. விஷயம் அறிவதே என் நோக்கம்)

  அதாவது அமாவாசைக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் முழுமையான கிருஷ்ண பக்ஷத்தில் இவ்வளவு மிகப்பெரிய ஜீர்ணோத்தார பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் செய்யலாமா..? (கிருஷ்ண பக்ஷம் என்றாலே பிரதிஷ்டை முதலானவற்றை இயலுமானவரையில் விலக்குவதே பலரின் வழக்கம்)

  கேட்பதன் நோக்கம் நம் அறிவை விருத்தி செய்து கொள்வதற்காக மட்டுமேயாம்.. இது தொடர்பில் ஜோதிட அறிவுடையவர்கள் விளக்கமளிப்பின் மகிழ்வேன்…

 6. வெள்ளைவாரணன் on February 9, 2013 at 5:31 am

  வளர்பிறையில் மட்டுமே எல்லா சுப காரியங்களையும் செய்தல் தமிழர் மரபு. சோதிடம் ஒரு அரிய விஞ்ஞானக் கலை .இவ்வளவு சிறப்பு பெற்ற கோயிலுக்கு தேய்பிறையில் கும்பாபிஷேக முகூர்த்தம் நிச்சயம் செய்தவர் யாரோ ? அந்த ஐயாரப்பனுக்கே வெளிச்சம்.

  தேய்பிறையிலும் கூட , பவுர்ணமிக்கு பிறகு வரும் முதல் ஐந்து திதிகளில் (தேய்பிறை பிரதமை முதல் தேய்பிறை பஞ்சமி முடிய உள்ள ) வேறுமுகூர்த்தம் இல்லாத சூழ்நிலையில் சுப காரியங்களை செய்யலாம். அப்படி என்ன நிர்ப்பந்தம் ?

 7. VGopalan on February 9, 2013 at 12:41 pm

  சிற்பங்கள் உள்ள எந்த இடத்திலும் சாண்ட் பிளாஸ்டிங் நடைபெறவில்லை. சிற்பங்கள் இல்லாத எண்ணை பிசுக்கு நிறந்த தூண்கள் அமைந்துள்ள திருவோலக்க மண்டபத் தூண்கள் மட்டுமே சாண்ட் பிளாஸ்ட் செய்யப்பட்டது. இது குறித்து செய்தி நிருபர்களை அழைத்துப் பலமுறை விளக்கம் கொடுத்தும், சிலர் குறை சொல்வதையே தொழிலாகக் கொண்டு செய்து வருகின்றனர். உள் பிரகாரத்தின் தென்புற சுவற்றில் 1958 நவம்பர் 19ஆம் தேதி என்று எழுதப்பட்டு வரையப்பட்ட சித்திரங்கள் அழிந்து பாழடைந்து போன நிலையில் புதிதாக அந்த இடத்தில் சித்திரங்கள் தீட்டப்பட்டன. (இது குறித்த புகைப் படங்களை தமிழ் இந்துவுக்கு அனுப்பியிருக்கிறேன்) அப்போது சிலர் புகார்களைப் பத்திரிகைகள் வாயிலாக எழுப்பினர். பத்திரிகை நிருபர்களை அழைத்து அவற்றைக் காட்டியபின் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இது குறித்து ஆய்வறிஞர்கள் ஆய்ந்து முடிவு தெரிவிக்க வேண்டுமென எழுதியதையடுத்து, கல்வெட்டு அறிஞர் நாகசாமி தலைமையில் அறுவர் குழு வந்து அந்த சித்திரங்களைப் பார்த்து கையால் தொட்டதும் கையோடு வரும் 1958ஆம் வருட சித்திரங்களை அழித்துவிட்டு புதிதாக வரைய அனுமதி கொடுத்தபின் நடைபெற்ற நிகழ்ச்சிகளை, அரைகுறை செய்தியோடு விமர்சனம் செய்வது எதிலும் குறை சொல்ல வேண்டுமென்று நினைப்பவர்களின் செயல். தேவையானால் இவர்கள் நீதிமன்றத்தில் மனுச் செய்யலாமே! கட்டிய வீட்டுக்கு குறை சொல்பவர்களை யாராலும் திருப்தி படுத்த முடியாது.

 8. VGopalan on February 9, 2013 at 12:52 pm

  கல்வெட்டு ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இந்த ஆலயத்தோடு அதிக தொடர்புடையவர். இங்குள்ள அத்தனை கல்வெட்டுகளையும் படியெடுத்து காப்பாற்றி வைத்திருப்பவர். அவருக்குத் தெரியும் இங்கு எங்கெல்லாம் கல்வெட்டுகள் இருக்கின்றன, அவை எதை குறித்து என்பதெல்லாம். கல்வெட்டுகளின் அருமை தெரிந்தவர்கள், குடவாயில் போன்ற சிறந்த அறிஞர்களின் வழிகாட்டுதல்களோடு நடந்த திருப்பணியில் கல்வெட்டுகள் மீது வெள்ளை அடித்ததாக, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்கள், தாங்கள் எடுத்த முயற்சிகளையும், யாரை எப்போது சந்தித்து இது குறித்துப் பேசினார்கள் என்பதையும் எடுத்துச் சொல்லி, சட்ட பூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் முறையானதாக இருக்குமே தவிர, போகிற போக்கில் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவிட்டுப் போகும் போக்கைக் கைவிட வேண்டும்.

 9. Ramesh Srinivasan on February 10, 2013 at 2:50 pm

  2002 ஆம் ஆண்டு அரசின் சட்டப்படி கோவில்களில் சண்ட ப்லச்டிங் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. Dr நாகசாமி, dr குடவாயில் பாலு போன்றவர்களின் பெயரைக் குறிப்பிடும் நீங்கள் அவர்களின் அனுமதியை எழுத்து பூர்வமாக வெளியிட முடியுமா? அவர்களின் பெயரை இதுபோன்று அவதூறாக எழுதும் உங்களை என்ன சொல்வது? பாலு சார் அவர்கள் மைசூர் சென்று அவர்களை அழைத்து வந்து இதைப் பாதுகாக்குமாருதான் எழுதிக் கொடுத்து உள்ளனர். எங்களால் நீதி மன்றம் சென்று போராட வழக்கறிஞர் உதவி வீண்டும் என்று இந்த தளத்திலேயே சிலர் கேட்டு உள்ளார்கள். எங்களால் நீதி மன்றம் செல்ல வசதி இல்லை என்பதால்தான் இப்படி உங்களால் அறிஞர்கள் பெயரை எல்லாம் இழுக்க முடிகிறது.

 10. தஞ்சை வெ.கோபாலன் on February 11, 2013 at 7:36 am

  ஒரு சிறு துரும்பையும் எடுத்துப் போடாமல், கட்டிய வீட்டுக்குக் கோணல் சொல்லும் மனிதர்களுக்கு, எத்தனை சொன்னாலும் உண்மை புரியாது. குடவாயில் பாலு அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர் என்பது இந்த மனிதருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

 11. சாய் on February 11, 2013 at 9:55 am

  மேலே குறிப்பிட்ட முகூர்த்த தேதி யோசிக்க வைக்கிறது. தேய் பிறையிலும் திரு வெள்ளை வாரணன் சொல்வது போல தனிப்பட்ட மனிதர்கள் சம்பந்த ப்பட்ட சுப காரியங்களுக்கு பஞ்சமி வரை செய்யலாம்-அது கூட வேறு வழியில்லா விட்டால் தான் -என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  கோயில் என்பது கால காலத்திற்கும் எல்லா மனிதர்களின் ஆன்மிகதேவையைபூர்த்தி செய்ய வேண்டிய இடம். ஏன் இப்படி தெரியவில்லை .

  சாய்

 12. K.Muthuramakrishnan on February 11, 2013 at 4:40 pm

  கோவில் சீரமைப்பில் எந்த வித மீறலும் இல்லாமல் எதையும் அழிக்காமல்தான் செய்யப்பட்டுள்ளது.சந்தேகம் இருப்பவர்கள் நேரில் வந்து பொறுப்பானவர்களுடன் ஆக்கபூர்வமாக கள ஆய்வு மேற்கொள்வதே சரியானதாகும்.போகிற போக்கில் கல் எறிதல் சரியல்ல.கேள்வி கேட்பவருக்கு
  அதற்கான விடை முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

  எண்ணெய் விளக்கு அளவுக்கு அதிகமாக அதற்குரிய இடங்களில் அல்லாமல் எல்லா இடத்திலும் ஏற்றும் பொதுமக்கள், தங்கள் பெயர்கள், தேர்வு எண் ஆகியவற்றைப் பொறித்து வைக்கும் மாணவ மாணவிகள் இவர்களுக்கெல்லாம் யார் அறிவுரை கூறுவது? இது போன்ற செயல்களுக்கு
  ஒரு கட்டுப்பாடு கொண்டு வர கோவில் ஆர்வலர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?

 13. Suresh on February 12, 2013 at 8:14 pm

  Thiru ramesh ஸ்ரீனிவாசன் இந்த கோயில் குடமுழுக்கிற்கு ஏதேனும் பணி செய்திர்களா?
  சும்மா குறை சொல்வதை விட்டு ஆண்டவனை கும்பிட்டு இறை அருள் பெருக.திண்ணையில் கிடக்கும் பெருசு போல் பெனாதாமல் செய்தியில் உள்ள பொருளினை புரிந்து எழ்துமாறு கேட்டுகொள்கிறேன். நன்றி.சுரேஷ்.

 14. rameshsrinivasan on February 12, 2013 at 10:12 pm

  பொதுமக்கள் என்னை விளக்கு ஏற்றக் கூடாது, யாருமே கோவிலுக்கு வரக்கூடாது என்றெல்லாம் கோவில் ஆர்வலர்கள் கூறவில்லை. கூறவும் முடியாது. அது கோவில் நிர்வாகத்தின் வேலை. எண்ணைப் பிசுக்கை அகற்ற வாட்டர் ப்லச்டிங், கெமிகல் வாஷ் எல்லாம் இருக்க, அரசாங்கத்தால் தடை செயப்பட்ட sand ப்லச்டிங் ஏன் செய்யவேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். திருப்பணி செய்பவர்கள்தானே ஒழுங்காகச் செய்ய வேண்டும். Dr நாகசாமியும், குடவாயில் பாலு சாரும் sand ப்லச்டிங் செய்யச் சொன்னார்களா?

 15. SURESH on February 13, 2013 at 9:36 am

  ஆசிரியர் அவர்களுக்கு, இந்த ரமேஷ் ஸ்ரீனிவாசன் போன்ற நொட்டை சொல்லிகள் உலகெங்கும் இருகிறார்கள்,எனவே இதை பொருட்படுத்தாமல் தங்கள் எழுது பணியை தொடர வேண்டுகிறேன்.அந்த ஐயாறப்பர் இவருக்கு நல்ல சிந்தனையை கொடுக்கட்டும்.நன்றி,சுரேஷ்.

 16. rameshsrinivasan on February 15, 2013 at 7:29 pm

  ஆலயங்கள் மற்றும் நம் வரலாறு இரண்டிமே நம் சொத்து. ஒரு கார் சாலையில் தாறு மாறாகப் போகையில், சரியாக செல்லுங்கள் என்றால் நீ வண்டி ஒட்டாமல் ஏன் குற்றம் சொல்கிறாய் என்பது போல் உள்ளது உங்கள் பதில்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*