கன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்

மூலம்: ரவி ஷங்கர் ( இந்தியன் எக்ஸ்பிரஸ் 27/1/2013 )

தமிழில்: எஸ். ராமன்

confusious

“மதம் என்பது மக்களால் கைவிட முடியாத ஒரு போதைப்பொருள்; மக்களோ மதத்தையும் மயங்க வைக்கும் (தூண்டில் மீன் போல) ஒரு பொருள்.” மதம் என்பது இப்படியான ஒரு தீய சக்தி என்று பறை சாற்றிய சீனாவின் முன்னாள் தலைவர் மாசே துங் அவர்கள் காலமாகி பல ஆண்டுகளுக்குப் பின், இப்போது சீனாவிலேயே மதத்தைப் பற்றிய எண்ணங்களில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் வாழ வேண்டிய ஒரு கட்டாயம் சில சமயம் மாற்றங்களுக்குச் செவி சாய்க்கும் போலிருக்கிறது. கம்யூனிசம் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருப்பதைத் தடுப்பதற்காக, சீனாவின் ஏகாதிபத்திய அரசு மதத்தின் வலிமையைப் பயன்படுத்தி அதை தேச பக்தியாக உருமாற்றிக் காட்டிகொண்டிருக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள்.

16 வயதிற்கும் மேலே உள்ள, சுமார் 31 விழுக்காடு விகிதத்தில் உள்ள, 30 கோடி மக்கள் மதச் சார்புடையவர்கள் என்று ஷாங்காய் பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது. அதனால் கடந்த 40 வருடங்களாக சீன அரசு கடைப்பிடித்து வந்த கடவுள் நம்பிக்கைத் தவிர்ப்புக் கொள்கையைக் கைகழுவி விட்டு, பல நூற்றாண்டுகளாக மக்கள் மதித்து வந்த வழிகளுக்கு அரசு நிர்வாகமே திரும்பிக் கொண்டிருக்கிறது. அவைகள்தான் பழம்பெரும் கன்பூஷியசின் தத்துவ அடிப்படையிலான வழிகாட்டுதல், மற்றும் மக்களுக்கு பெரிதும் அறிமுகமான புத்தர் மற்றும் டோ (Tao) அவர்களைப் பின்பற்றிய வழிபாடுகள். நம் நாட்டில் காங்கிரஸ் மறுபடியும் தனது பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால், ராகுல் காந்தி கன்பூஷியஸ் தத்துவத்தைப் பற்றிக் கொஞ்சமாவது அறிந்துகொண்டு தன் கட்சியை அதனுடைய 1947-க்கு முந்தைய நிலைப்பாடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். புத்த மதப் போதனைகளில் மனம் ஊறியுள்ள அவரது சகோதரி பிரியங்கா ஒருவேளை அவரை அந்த இரண்டு வழிகளிலும் சரியாக நடத்திச் செல்ல முடியும் என்று சொல்லலாம்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கே ஹிந்து சமயத் தத்துவம் தான் உயிர்நாடியாக விளங்கிற்று. “ஹே ராம்” என்பதுதான் அதன் தொடக்கமும் முடிவும் ஆகும். இந்தியப் பாரம்பரிய மதக் கருத்துக்களைத்தான் காந்தி தயங்காமல் உபயோகித்து இந்தியர்களை ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைத்தார். இந்து சமயத்திற்கே உரித்தான அனைத்தையும் துறக்கும் மனப்பான்மையைக் காட்டும் ஒரு கோவண ஆண்டியின் கோலத்தையே கிட்டத்தட்ட தானும் தழுவிக் கொண்டு, நாற்பதுகளில் பாரத தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாக தளராது அலைந்து கொண்டு, அவர் இந்தியக் குடிமக்களின் மத உணர்வை அதற்குப் பயன்படுத்தினார். அவருக்கும் வெகுகாலம் முன்பாக அப்படி உலவிய ஆதி சங்கரரின் உருவகத்தை அப்படி வரவழைத்த அவர், எப்போதுமே புருஷோத்தமன் ஸ்ரீ ராமன் நாமத்தை ஜெபித்துக்கொண்டும், வேளை தவறாது பஜனை செய்துகொண்டும், அவ்வப்போது உபவாசம் இருந்துகொண்டும், தனது பழக்க வழக்கங்களில் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் எப்போதுமே ஒரு சந்நியாசி போலவே தனது கடமைகளை ஆற்றிக்கொண்டும் வாழ்ந்த அவர் ஆங்கிலேய சாம்ராஜ்யத்திற்கு ஒரு பெரிய சவாலாக விளங்கினார். Mahatma Gandhi

அவரைப் பொருத்தவரை இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பது என்பது இந்தியாவின் ஆன்மாவையே அதன் தளைகளிலிருந்து விடுவிப்பது என்பதுதான். அதற்கு அவர் அப்போது இருந்த காங்கிரசை அந்த வேட்கையில் ஒரு கருவியாக்கிக் கொண்டார். நாட்டில் பல கிராமங்களில் இருந்த ஏழைத் தொழிலாளிகளைப் போலவே தானும் ஒரு தக்ளியிலோ, ராட்டையிலோ நூல் நூற்பதிலும், ராட்டையைச் சுற்றிக்கொண்டு கதர் நெய்ய உதவுவதிலும், அவர் ஓர் தூய சந்நியாசி வழி முறைகளைப் பின்பற்றியது எல்லாமே அரசியல் வாழ்வில் ஆன்மீகத்தையும் தேச பக்தியையும் அவர் இணைத்துக் காட்டிய பாதைதான். அப்படித் தானே வாழ்ந்து காட்டிய அவர் பாதையையே தேசத்திற்கு அவர் கொடுத்த செய்தி போன்று, வேதங்களை எல்லோரும் ஒப்புக்கொள்வதுபோல, காங்கிரஸ் கட்சியும் தனது தேசிய எண்ண ஓட்டமாகத் தழுவிக்கொண்டது.

இன்று அந்தக் கட்சிக்கு அதனுடைய கர்ம வினை மறுபடியும் துரத்துகிறது. ஆனால் அக்கட்சியோ தான் கடந்து வந்த பாதையை விட்டுவிட்டு ஆங்கிலேய அரசு அன்று கடைபிடித்த வழியை தேர்ந்தெடுத்திருக்கிறது. அதாவது எப்படியும் ஆட்சிக் கட்டிலில் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அது இந்திய சமூகத்தில் இருப்பவர்களை அவரவர்களின் மதச் சார்பு வழியில் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு அது காவி நிறம் பூசி அன்னாரை “இந்துத் தீவிரவாதிகள்” என்று குற்றம்சாட்டி, அது தனது எதிர்காலத்தையே சூன்யமாக்கிக் கொண்டு, தனது பாரம்பரியப் புகழையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.

அதனுடைய இன்றைய தலைவர்கள் பயங்கரவாதத்தையும், அதற்கு இந்து சமயத்தினர் தெரிவிக்கும் எதிர்ப்பையும் போட்டுக் குழப்பிக்கொண்டு, சிமி (SIMI) மற்றும் இந்திய முஜைஹிதீன் இயக்கம் இந்திய இறையாண்மைக்கே எதிராக போருக்குப் பதிலான வன்முறைகளில் ஈடுபடுவதையும், அதனால் ஹேட்லி போன்ற வன்முறையாளர்கள் மூலம் ஆயிரக்கணக்கில் இந்தியர்களைக் கொலை செய்வதையும், எதிர்ப்பதற்கும் மற்றும் தற்காப்புக்காகவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் அரசு காலத்தை வீணாக்கிக்கொண்டு இருக்கிறது. இந்தியப் பாராளுமன்றத்தையே தாக்கும் சதியில் ஈடுபட்ட அப்சல் குரு போன்ற குற்றவாளிகளை, தூக்குமேடைக்கு அனுப்பினால் மைனாரிட்டி வாக்குகளை இழந்துவிடுவோமே என்ற பயத்தில், பொதுமக்கள் பணத்தில் உயிர் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

மக்களின் பாதுகாப்புக்காக தான் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காத அரசு, தனது தொடைநடுங்கித்தனத்தை மறைக்கவும், மற்றும் தனது கோணங்கி அரசியல் வழிகளினாலும் கிளம்பியிருப்பதே ஷிண்டே மற்றும் அவர் போன்ற துதிபாடிகள் கூறும் “இந்துத் தீவிரவாதம்” என்னும் பேத்தல் கூச்சல்கள். “காவி பயங்கரவாதம்” என்று குற்றம் சாட்டப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சதியிலும் இப்போதைய நிலவரப்படி ஹேட்லிக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் அந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருந்ததை 2010-ல் ஒத்துக்கொண்டார்.

இதேபோல உய்கூர் தீவிரவாதிகள் மற்றும் தீக்குளிக்கும் திபேத்தியர்கள் இவர்களிடமிருந்து சீனாவும் தேசிய ஒற்றுமை விஷயத்தில் கவலை கொள்கிறது. அதனால் தனது பழைய கால வழக்கங்களை மீண்டும் நினைவு கூர்ந்து அன்று புழங்கி வந்த ஆன்மிகத்துடன் தேச பக்தியையும் இணைத்து என்ன செய்ய முடியும் என்று சீன கம்யூனிசக் கட்சியும் அதன் அரசும் திட்டங்கள் போடுகின்றன. கன்பூஷியஸ் தத்துவங்கள் சுமார் 25 நூற்றாண்டுகளாக சீனக் கலாசாரத்தை பெரிதும் பாதித்து, உருவாக்கி வந்த பெருமை கொண்டது. “உனது உள்ளத்தில் நீ எப்படி உன்னை உணர்கிறாயோ, அப்படியே நீ இருக்கவேண்டும் என்று நான் கூறுகிறேன்” என்பதும் கன்பூஷியஸ் தத்துவங்களில் ஒன்று. சீனாவில் பல மதம் தொடர்பான இயக்கங்களான டோயிசம் (Taoism), ஷெனிசம், புத்த மதம், மற்றும் இஸ்லாம், கிருத்துவம் என்று பலவும் வளர்ந்திருக்கின்றன.

ஆனாலும் அவைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருந்தது சீனாவின் பண்டைய தத்துவங்கள்தான். அதே போல இந்தியாவை ஆள நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை செய்தியாக இருக்கட்டும்: இந்தியர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் சரி, அவர்கள் இந்தியர்கள் என்பதால் அவர்களின் சிந்தனையும், செயலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெருமையுடன் விளங்கும் தத்துவங்கள் வளர்த்த இந்தியப் பண்பாட்டில் ஊறித் திளைத்தவைகள். எந்த அந்நியனோ, அல்லது புதிய கலாச்சாரமோ வந்தாலும், போனாலும் அதன் கரு என்றுமே அழிவதில்லை. அதைப் பொருட்படுத்தாது இருக்கும் எந்த ஆட்சியாளர்களும் இங்கு நிலைத்தும் நிற்க முடியாது.

இது தொடர்பாக நம் அரசியல் தலைவர்களுக்கு கன்பூஷியஸின் அறிவுரையை நினைவூட்டினால் நல்லது: “எதையும் கற்றுத் தேர்ந்து அறிஞனாகி விட முடியாது என்ற மனப்பான்மையுடன் கற்றுக்கொள்; கற்றதை எவரேனும் அபகரித்து விடுவார்களோ என்ற பயத்துடன் அதைக் காப்பாற்றி தக்க வைத்துக் கொள்.” எவர் இந்த அறிவுரையைக் கேட்காது நடப்பார்களோ அவர்கள் இந்தியாவை மட்டும் அல்லாது, தன் ஆன்மாவையும் இழக்க நேரிடும்.

1 comment for “கன்புஷியஸ் தத்துவம் தரும் பாடங்கள்

    /* commented this */
  1. இந்திய திருநாட்டின் தேசத்தந்தை என்று போற்றக்கூடிய காந்தி அவர்கள் விரும்பிய இஸ்லாத்தின் இரண்டாம் கலிபாவான உமர் அவர்களின் ஆட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *