2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

மூலம்: T.S.R. சுப்ரமணியன் (தி நீயூ சண்டே எக்ஸ்பிரஸ், 31/3/13)
தமிழாக்கம்: எஸ். ராமன்

2G-அலைக்கற்றைப் பங்கீட்டில் நடந்த ஊழலை விசாரிக்க அமைத்த பாராளுமன்றக் கூட்டுக் குழு (JPC)
தனது இகழத்தக்கத் தன்மையைத் தொடர்ந்துகொண்டு இன்னமும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது இருக்கும் பாராளுமன்றம் அதற்குள் கலைக்கப்படவில்லை என்றால் இரண்டாகப் பிளவு கண்ட, உப்புச் சப்பில்லாத, எதற்கும் உதவாத ஓர் அறிக்கை அந்தக் குழுவிடமிருந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

upa-spectrum-2gஅண்மையில் நடந்த இரண்டு சம்பவங்களை நாம் கவனிக்கவேண்டும். அந்த JPC முன்பாகத் தான் நேரில் வந்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா எழுத்து மூலம் தெரிவித்துக்கொண்டார். ஆனால், தானே போட்டுள்ள கணக்குப் படி, அந்தக் குழு அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டு, அவர் விரும்பினால், அவர் நேரே வந்து சொல்ல எண்ணியதை, எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று குழுத் தலைவர் அறிவுறுத்தியிருக்கிறார். தற்போது கிடைத்த தகவலின் படி, ராஜா ஒரு 15-பக்க அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வெளியே சொல்லப்படுகின்ற காரணப்படி, ராஜா குற்றாளியாகக் கருதப்படுவதால் அவர் சாட்சியம் சொல்ல முடியாது என்றும், JPC குழுவினால் விசாரிக்கப்படுவது பொருத்தமானது இல்லை என்றும் தெரிய வருகிறது. ராஜாவிற்கு அந்த அனுமதி கொடுத்தால் மற்ற தொலைதொடர்பு அமைச்சர்களையும் அழைக்கவேண்டி வரலாம் என்றும் அனுமதி மறுப்புக்குக் “காரணமாக”, வேறு சில சமயம் சொல்லப்படுகிறது.

அப்படிச் சொல்லப்படும் இரண்டு காரணங்களுமே வெறும் கண்துடைப்புகளாகத்தான் அறியப்படுகின்றன. முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர், ஒரு குற்றவாளியாகக் கருதப்பட்டாலும், பாராளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமை அவருக்கு நிச்சயமாக இருக்கிறது. பாராளுமன்றமும், நீதிமன்றங்களும் தனித்தன்மையுடன் இயங்கும் அமைப்புகள். ஒருவர் ஒன்றில் ஈடுபடுவதோ, அல்லது ஈடுபடுத்தப்படுவதோ மற்றொன்றில் அவர் இயங்குவதைக் கட்டுப்படுத்தாது. மேலும் முன்னாள் அமைச்சர் இந்நாள் வரை குற்றம் சாட்டப்பட்டுள்ளவரே அன்றி, இன்னும் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில், அவை நடவடிக்கையில் குற்றவாளிகளே பங்கு பெற்றுள்ள நிகழ்ச்சிகள் இந்தப் பாராளுமன்றச் சரித்திரத்தில் உண்டு. JPC விசாரணைகளையும் தாண்டி, இந்தியக் குற்றவாளிகள் சட்டம் (IPC) பிரிவு 313-ன் படி ராஜாவை நீதிமன்றம் விசாரணை செய்யலாம். 2-G ஊழலில் ராஜாவின் பங்கு பற்றிய சந்தேகம் தெள்ளத்தெளிவாக இருப்பதால், மற்ற தொலைத்தொடர்பு அமைச்சர்களும் விசாரணைக்கு உட்படுவார்கள் என்றால் அவர்களும் விசாரிக்கப்படட்டுமே.

பிரதமர், அமைச்சர் ப. சிதம்பரம் இருவர் மேலும் குற்றம் சாட்டப்படவில்லை; அவர்கள் பெயர்கள் குற்றப் பத்திரிக்கையிலும் சேர்க்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இருவருமே பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மட்டும் அல்லாது இந்த 2-G விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் அறிந்தவர்கள். ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை. IPC-பிரிவு 311-ன் படி எவருக்கெல்லாம் விவரங்கள் தெரியுமோ அவர்கள் அனைவரையும் சாட்சி சொல்லக் கூப்பிடவேண்டும். ஆக மொத்தம் இந்த மூவரும் கூப்பிடப்படவில்லை என்றால் JPC-ன் நடவடிக்கைகள் வெறும் வெளிவேஷம், கண்துடைப்பு என்று நம்புவதற்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

ஏன் இப்படியான இமாலயத் தவறு ஒன்று அரசால் இழைக்கப்பட்டது என்பது பற்றி பாராளுமன்றம் கண்டு பிடிக்க வேண்டாமா? JPC அமைப்பு தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கி, சட்டத்தின் மாட்சிமையை நிலைநிறுத்தும் நீதி மன்றம் அல்ல; ஆனால் அதற்கு அதையும்விட ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. அந்த மாதிரி ஒரு தவறு இழைக்கப்பட்டதற்கு இருந்த சூழ்நிலை என்ன, அதைச் செய்ய முடிந்ததற்கு என்ன மாதிரியான ஓட்டைகள் நிர்வாக அமைப்பில் இருந்தன, இது போலத் தவறுகள் இனியும் நடக்கா வண்ணம் இருப்பதற்குச் செய்யவேண்டிய நிவாரணங்கள் என்ன என்பதையெல்லாம் அலசி, ஆய்ந்து, அறிவுறுத்தும் பொறுப்பு JPC-யிடம் தானே இருக்கிறது. எந்த நபர்களுக்கு நடந்தது எல்லாம் தெரியுமோ, அவர்களை அழைத்து அடிப்படையில் நடந்த தில்லுமுல்லுகளை அலசி ஆராயாமல் இருந்தால் எப்படி இந்தப் பொறுப்பை அவர்கள் செவ்வனே ஏற்றுச் செயல் புரிந்ததாகக் கொள்ள முடியும்? மாறாக, முழு உண்மையையும் அவர்கள் பார்ப்பதற்கு மறுப்பது எந்தக் காரணத்திற்காக JPC அமைக்கப்பட்டதோ அதை அவர்களே நிராகரித்து, பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

2g_spectrum-03புதிதாகக் கிடைத்துள்ள தகவலின்படி, அலைக்கற்றுப் பங்கீடு பற்றிய கொள்கை மற்றும் நடைமுறைகள் எல்லாமே பிரதமரின் அலுவலகத்திற்கு நன்றாகவே தெரியும் என்றும், அங்கு எல்லாமே அலசி ஆராயப்பட்டது என்றும், அதில் தொடர்புடையவர்கள் அனைவருமே அதற்குப் பொறுப்பானவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதே போல, சந்தை நிலவரப்படி ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், இந்த ஊழல் நடப்பதற்கு முன் எடுத்த நடவடிக்கைகளைக் கூறும்போது, ஊழலால் விளைந்த இழப்பை அன்றைய நிதி அமைச்சர் தவிர்த்திருக்க முடியும் என்றும் பட்டவர்த்தனமாகக் கூறும் நிதியமைச்சகத்தின் காரசாரமான குறிப்பு உள்ளிட்ட அரசின் விவரமான உள்ளறிக்கை ஒன்றும் இருந்திருக்கிறது. இந்தக் குறிப்பே ஊழல் விசாரணையில் எல்லா அமைச்சகங்களின் பிரிவுகளும் எடுக்க வேண்டிய பொதுவான நிலையைப் பற்றி அறிவுறுத்துவதற்குத்தான் உருவாகியது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் சாட்சிகளைக் கலைப்பதற்கும், சாட்சி சொல்ல வந்தவர்களை நிர்பந்தம் செய்வதாகவும் இது அமைவதால், இதைத் தயாரித்ததே இன்னுமொரு குற்றச் செயலாகக் கருதப்படலாம் அல்லவா? நிதி அமைச்சகத்தில் இருந்த ஒரு முதுநிலை மேலாளர் விவரமாக ஆய்ந்து தயாரித்த இந்த அறிக்கையை பாராமல் ஒதுக்கிவிட்டு, அவரும் அந்தப் பொறுப்பிலிருந்து கழற்றி விடப்பட்டு, பின்பு அவருக்கு வெளிநாட்டில் வகிக்க இருந்த வாய்ப்பு அதனால் தவறியும் போயிற்று.

பிரதமர், அன்றைய நிதியமைச்சர், ராஜா மூவருக்குமே இந்தப் பயங்கர ஊழலுக்கு முன் நடந்த விவரங்களை நன்கு விவரிக்கமுடியும். JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? இறுதியில் பார்த்தால் மேலே சொல்லப்பட்ட மூவருமே அலைக்கற்றுப் பங்கீட்டு நடவடிக்கைகளை முன்னின்று இயக்கியிருக்கிறார்கள். அண்மையில் ஒரு நீதிமன்ற அழைப்புப்படி தொலைத் தொடர்பு நுட்ப நிறுவனங்களின் அதிபர்கள்தான் தங்கள் தங்கள் நிறுவனத்தின் நடவடிக்கைகளை இயக்கியவர்கள் என்று குறிப்பிடப்பட்டு, அதனால் அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்று சொல்லப்பட்டார்கள்.

முழுச் சோற்றுப் பூசணிக்காயாக நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதனால் என்ன நடந்தாலும் உண்மைகள் வெளியே வரப்போவதில்லை. நமது அரசின் நாடியாகவும், இறையாண்மையின் உச்சத்திலும் இருக்கும் பாராளுமன்றம் கூடவா இதே போலப் பொறுப்பு மறுப்பு வழிகளைப் பின்பற்றும்? நமது ஜனநாயகம் ஆட்டம் கண்டுவிட்டது, இன்னும் அதற்கு எத்தனை நாளோ என்று நாம் சொல்லலாமோ?

Tags: , , , , , , , , , , ,

 

9 மறுமொழிகள் 2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

 1. அத்விகா on April 4, 2013 at 2:54 pm

  ஊழலை யார் செய்தனர் என்பது எவ்வளவு முக்கியமோ , அவ்வளவு முக்கியம் ஊழல் பணத்தை கைப்பற்றி அரசின் கஜானாவில் சேர்ப்பதும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்களை மற்றும் குற்றம் சுமத்தப்பட வேண்டியவர்களை , உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு ( நார்கோ அனலிசிஸ் அண்ட் பிரைன் மேப்பிங் டெஸ்ட் ) உட்படுத்துவது மிக அவசியம்.இதன் மூலம் பணம் எங்கு போனது என்பதை கண்டறிந்து , அதை கைப்பற்றலாம். கடந்த மூன்று ஆண்டுகளாக சி பி ஐ ஏனுங்க இதனை செய்யவில்லை ? மாண்புமிகு உச்சநீதி மன்றம், உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு உத்தரவிட்டால் தான் இதில் முழு உண்மையும் வெளிவரும். இல்லை என்றால், முக்கிய பிரமுகர்கள் தப்புவதற்கு , யாராவது ஒருவரை வாக்கிங் போகும்போதோ, அல்லது நீதிமன்றத்துக்கு நான்கு சக்கர வண்டியில் செல்லும்போதோ, போட்டுத்தள்ளிவிட்டு , கேசை ஊற்றி மூடிவிடுவார்கள். யார் அந்த பலிகடா என்று எல்லோரும் கேட்கும் காலம் வரும் முன்னரே, விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் பின்னால் வருந்தி பயன் இல்லை.

 2. SANGAR RAM.B on April 19, 2013 at 6:35 pm

  2G-அலைக்கற்றைப் பங்கீட்டில் நடந்த ஊழலின் தற்போதைய நிலை என்ன ?

 3. S Raman on April 19, 2013 at 7:59 pm

  2G-அலைக்கற்றைப் பங்கீட்டில் நடந்த ஊழலின் தற்போதைய நிலை என்ன ?

  JPC முன்னறிக்கை கொடுத்திருக்கிறது: பிரதமரும், நிதி அமைச்சரும் குற்றமற்றவர்கள் என்று. வரும் பாராளுமன்றத்தில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்.

 4. வெள்ளைவாரணன் on April 20, 2013 at 7:59 am

  ஜெபீசீ எனப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு பெயரளவுக்கு ஒரு தேவை இல்லாத விசாரணை நடத்தி ஆ இராசாவை மட்டும் பலிகிடா ஆக்கி உள்ளது. மன்மோகன் சிங்க் அவர்களையும், ப சி அவர்களையும் நன் முத்திரை அளித்து, ஞான ஸ்நானம் செய்வித்துள்ளது. காங்கிரஸ் காரர்கள் எப்படியும் தப்பி , இராசா மற்றும் கனி ஆகியோரை மட்டும் மாட்டி விடுவார்கள் என்பது , சிறு குழந்தை கூட அறிந்த ஒன்றே ஆகும். இனியாவது இராசா அவர்கள் தப்பிக்க வேண்டும் என்றால், டூ ஜி முடிவுகள் எல்லாமே பிரதமராய் இருப்பவரின் சந்நிதானத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அப்போதைய நிதி அமைச்சரை இருந்த திரு பசி அவர்களுக்கும் தகவல் கொடுத்த பின்னரே, செய்யப்பட்டுள்ளன என்பது உண்மையானால், சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் போர்வையில் உள்ளவர்களை , உண்மை கண்டறியும் பரிசோதனை செய்வித்து , நீதி மன்றம் மூலமே உண்மையை கண்டறிய இராசாவோ, அவர் தரப்பில் வேறு யாருமோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் , காலையில் நடைப்பயணம் போகும்போது , ஒரு அக்யூஸ்டை மட்டும் போட்டுத்தள்ளிவிட்டு, மற்ற எல்லோரும் தப்பிவிடுவார்கள். இராசா போன்றவர்கள் இனியாவது யோசித்து, பிரதமர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரை , உண்மை கண்டறியும் பரிசோதனைக்கு, உட்படுத்த வேண்டும் என்று கேட்டு, டூ ஜி நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுக்கவேண்டும். இல்லையென்றால், வீணாக இவரும் , கனியும் பலிகடா ஆக நேரிடும். இனியும் காங்கிரஸ் உறவுக்கு அலையாதீர்கள். உங்கள் எதிர்காலம் சூன்யமாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

 5. கதிரவன் on May 21, 2013 at 9:48 am

  நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் ஒருங்கிணைத்து பார்க்க வேண்டும்.

  1. ஐ பி எல் கிரிக்கெட்டு சூதாட்டத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த தத் என்ற காவல் துறை அதிகாரியும், அவர் மனைவியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர் என்று பத்திரிகை செய்தி கூறுகிறது.

  2. மனித வெடிகுண்டாக மாறி போயஸ் கார்டன் கட்டிடத்தில் நுழைந்து , தானும் உயிர்த்தியாகம் செய்து, ஜெயலலிதாவை கொல்லப்போவதாக, திமுக கூட்டத்தில் மாரல் மார்க்சு என்ற பெண்மணி பேசியதாகவும், அதனை கலைஞர் உடனடியாக கண்டித்து, மன்னிப்பு கேட்க வைத்ததாகவும் பத்திரிகை செய்தி கூறுகிறது. முதல் அமைச்சரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஏனெனில் திமுகவினர் பத்மநாபா கொலை வழக்கில் , கொலைகாரர்களை தப்பிக்க விட்டு வேடிக்கை பார்த்தவர்கள். மேலும் தற்கொலை படைக்கு வேறு யாராவது ஒருவரை கூட தயார் செய்யக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுக்கு தற்சமயம் புத்தி பேதலித்து உள்ளது.

  3. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன வென்றால், மத்திய அமைச்சர்கள் நிலக்கரி ஊழல் பற்றிய சி பி ஐ அறிக்கையை திருத்துகின்றனர். டூ ஜீயிலும் , ஏற்கனவே இருவர் இறந்துவிட்டனர். விசாரணை அதிகாரிகளை மிரட்டும் வேலையை ஸ்ரீ சாந்த் என்ற கிரிக்கெட்டு மோசடிக்காரன் செய்துள்ளான். விசாரணை அதிகாரியிடம் எனக்கு மகாராஷ்டிர முதல்வரையும், கேரளா முதல்வரையும் தெரியும் என்று சொல்லி, நீ யாரிடம் வேண்டுமானாலும் பேசு என்று, கைப்பேசியை , விசாரணை அதிகாரியிடம் கொடுத்திருக்கிறான். அதையும் மீறி , விசாரணை அதிகாரி அவனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்துவிட்டார். ஆனால், எப் ஐ ஆர் தாக்கல் செய்த மறுநாளே, அவரும், அவர் மனைவியும் சந்தேகத்துக்கு இடமான சூழலில் இறந்துள்ளனர். எனவே, காங்கிரஸ் முதல்வர்களான கேரளா, மற்றும் மகாராஷ்டிர முதல்வர்களுக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது என்று அறிய, அவ்விருவரையும் உண்மை கண்டறியும் சோதனை ( நார்கோ அனலிசிஸ் – பிரெயின் மேப்பிங் டெஸ்ட் ) செய்ய நீதி மன்றத்தில் மனு கொடுக்க வேண்டும்.

  4. ஊழல் வழக்குகளை விசாரணை செய்யும் அதிகாரிகளை அச்சுறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. காங்கிரசின் கொள்ளையர் ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? டூ ஜி வழக்கிலும் யாராவது ஒருவரை போட்டு தள்ளிவிடுவார்களோ என்று டீக்கடை முதல் சலூன் வரை எல்லா இடத்திலும் பொது மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.

 6. கதிரவன் on May 21, 2013 at 1:52 pm

  ” மாரல் மார்க்சு “- என்பது தட்டச்சு பிழை. அதனை காரல் மார்க்சு என்று திருத்தி படிக்க வேண்டுகிறேன். பிழைக்கு வருந்துகிறேன்.

 7. வெள்ளைவாரணன் on May 22, 2013 at 6:55 pm

  போபர்ஸில் ஆரம்பித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக புதிய பரிமாணங்களில் இந்திய அதிகார வர்க்கத்தின் ஊழல் தொடர் வளர்ச்சி வெற்றி நடை போட்டு வருகிறது. அதில் டூ ஜீயும், நிலக்கரியும் புதிய சகாப்தம் படைத்தன. மேலும் புதிய வரலாறுகள் படைக்க கடும் முயற்சியை நம் உடன்பிறப்புக்கள் எடுத்து வரும் வேளையில், இழிமதி படைத்தோர் நம் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டு, நம் ஊழல்களை சமயம் பார்த்து கசிய விட்டு, நம்மை பணி துறக்க செய்து விட்டனர். பிரதமருக்கே பிறந்த தேதி தெரியவில்லை. வேட்புமனுவில் தவறாக குறிப்பிட்டு விட்டு, பிறகு திருத்தம் செய்ய அதிகார பூர்வமாக மனு செய்துள்ளார். அவரே இந்த கதி என்னும்போது, நிலக்கரி விசாரணை அறிக்கையை , மத்திய அமைச்சர் பார்த்து, படித்து , திருத்தியதில் என்ன குடி முழுகிப்போகிறது ? ஒன்றுமில்லை.

  1. இதுவரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியேனும் நாட்டில் நல்லது நடக்கட்டும். யாரும் பத்தினி வேடம் போடவேண்டாம். அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்த ஊழல் சொத்தில், ஐம்பது வருடம் விசாரணை நடத்தினாலும் , விஞ்ஞான பூர்வ ஊழல் செய்து பயிற்சி பெற்ற வல்லவர்களிடம், ஒன்றையும் கண்டு பிடித்து ஒன்றும் செய்ய முடியாது. வீணாக வழக்கு செலவாக மேலும் பல கோடிகள் அரசின் பணம் விரயம் தான் ஆகும்.எனவே எல்லா ஊழல்களையும் பட்டியல் இட்டு, மொத்த ஊழல் வருமானத்தில் ஒரு இருபது விழுக்காட்டை ( சதவீதத்தை) அரசுக்கு வரியாக வசூலித்து, அனைவர் மீதும் ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று பார்லிமென்ட்டிலும் , மற்றும் மீடியா முன்னரும் நிதி அமைச்சரும், பிரதமரும் , பால் மீது சத்தியம் செய்ய வேண்டும். அப்போது ஊழல் வாதிகள் மனம் இறங்கி , அரசுக்கு சிறிது வரி ஒழிந்து போகிறது என்று சொல்லி கட்டி விடுவார்கள்.

  2. ஒரு பத்து வருடத்துக்கு ஒரு முறை , தானே முன் வந்து கணக்கில் வராத வெள்ளை ( கருப்பு என்பது அமங்கல சொல் என்பதால் வெள்ளை என்ற சொல்லை பயன்படுத்தப்பட்டுள்ளது.) பணத்தை அறிவிக்கும் வி டி எஸ் ( voluntary disclosure of income Ischeme- VDIS ) திட்டத்தை அறிவிப்பது மத்திய அரசின் கடமை. 1997- க்கு பிறகு கடந்த பதினாறு வருடக்காலமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட வில்லை. அதை உடனே அறிவித்து , அரசுக்கு வரியையாவது வசூலியுங்கள்.

  3. இனிமேல் நம் நாட்டில் காது கேட்காத, கண் பார்வை மங்கிப்போன , சுய சிந்தனை இல்லாத, குறைந்தது இரண்டு முறையாவது பை பாஸ் சர்ஜரி செய்து கொண்ட, மற்றும் பிறந்த தேதி மறந்து போன, மற்றும் மறதி அதிகம் உள்ள அரசியல் வாதி யார் என்று பார்த்து , அந்த சிகாமணியே பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியும் என்று அரசியல் சட்டத்தினை திருத்த வேண்டும்.

  4. வாழ்க, பாரத மணித்திரு நாடு.

 8. வெள்ளை வாரணன் on May 31, 2013 at 10:46 am

  இன்று காலை வெளிவந்துள்ள ( வெள்ளி 31.5.2013 ) ஒரு தமிழ் வாரம் இருமுறை ஏட்டில், கலைஞர் குடும்பத்துக்கு மிரட்டல் இமெயில் தீவிரவாத இயக்கத்திடம் இருந்து வந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. மேலும் இரண்டு நினைவூட்டுக்களும் வந்துள்ளதாகவும், காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது. டூ ஜி ஊழல் பணத்தில் பங்கு கேட்டு, அந்த பணத்தை வைத்து கிழக்காசிய நாடுகளில் தங்கள் இயக்கத்தை வளர்க்க விரும்புவதாக அந்த செய்தியில் தெரிவித்திருப்பதாகவும் அறியவருகிறது.

  2. இன்று அரசியல்வாதிகளை மட்டுமல்ல, பெரிய வியாபாரிகள், செல்வந்தர்கள் ஆகியோரை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் பொறுக்கி வேலையை இந்த இயக்கங்கள் செய்கின்றன. இந்த மாதிரி தீய இயக்கங்களுக்கு எதிராக , இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ? செய்யுமா ? பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு படகில் சாவகாசமாக வந்து, சுமார் இருநூறு பேரை கொன்று , பல ஆயிரம் பேரை காயப்படுத்தியும், பலருக்கு உடல் உறுப்புக்களை இழக்க செய்தும் , கோரத்தாண்டவம் ஆடிய , பாகிஸ்தானிய நாய்களுக்கு எதிராக இன்றுவரை ஒன்றும் செய்யாத மன்மோகன் அரசில் , 2012- முடியவும், பிறகு 2013- மார்ச் வரையும் , பதவி சுகம் அனுபவித்த தேசவிரோத செயல் செய்த கலைஞருக்கு இப்பவாவது , தான் செய்த தவறு புரியுமா என்பது, அந்த கடவுளுக்கே வெளிச்சம். 200- உயிர்கள் போனதற்கே நடவடிக்கை எடுக்காத மன்மோஹனா , கலைஞரின் ஒரு குடும்பத்துக்கு வந்துள்ள இமெயில் மிரட்டலை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க போகிறார் ? கலைஞருக்கு குருப்பெயர்ச்சி நன்றாக இல்லை அய்யா.

 9. பேராயிரம் பரவி on June 16, 2013 at 6:06 pm

  ராஜ்ய சபை தேர்தலில் டூ ஜி புகழ் 214 கனி அம்மையாருக்கு திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக பத்திரிகை செய்தி கூறுகிறது. திமுக எம் எல் ஏக்கள் சொரணை உள்ளவர்களாக இருந்தால் , குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குடும்ப அரசியலுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும். செய்வார்களா ? குடும்ப அரசியல் இருக்கும்வரை, திமுக தமிழகத்தில் இனி தலை தூக்க முடியாது.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*