மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1

ஸ்ரீ ஜடாயு அவர்கள் தனது “ஹிந்துத்வம் – ஒரு கண்ணோட்டம்” என்ற வ்யாசத்தில் “கலாசார தேசியம்” பற்றி கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தது என் கவனத்தை மிகவும் ஈர்த்தது.

ஒரு பறவைப் பார்வையில் ஹிந்துத்துவ கண்ணோட்டம் என்பதை சுருக்கமாக இவ்வாறு பட்டியலிடலாம்.

>>> கலாசார தேசியவாதம்: இந்தியாவின் சமூக, பிரதேச, மொழி சார்ந்த பன்முகத் தன்மைகளுக்கு மத்தியிலும் இந்தியாவை ஒரே தேசமாகப் பிணைக்கும் கலாசார பண்பாட்டுச் சரடு உள்ளது. அதை வலுப்படுத்துவதே இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் நன்மை பயக்கக் கூடியது. ஹிந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் இயல்பாகவே எல்லாவிதங்களிலும் இந்தச் சரடில் பொருந்துபவை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அன்னியமானவை. வழிபாட்டு ரீதியாக அன்னிய மதங்களைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக இந்தியாவையே தாய்நாடாகக் கொண்ட இந்திய கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்ற வேண்டும். அதனை மறுதலிக்கவோ, அதற்கு எதிராகச் செயல்படவோ கூடாது.

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கச்சான்றோர்கள் பலர் Cultural Nationalism என்ற மேற்கண்ட கருத்தை பல விழாக்களில் பேசியுள்ளதை பன்முறை கேட்டுள்ளேன்.

சங்க ப்ரார்த்தனை நம் தேசத்தை ஹிந்து பூமி,மாத்ரு பூமி, புண்ய பூமி என்றெல்லாம் விளிக்கிறது.

இத்தேசத்தை கர்மபூமியாகக் கொண்டு இங்கு உழைத்து இத்தேசத்திற்கும் தேச மக்களுக்கும் பெருமை சேர்க்கும் அன்பர்கள் ஹிந்து( வைதிக, சைவ, வைஷ்ணவ, சாக்த, பௌத்த, ஜைன, சீக்கிய மற்றும் பற்பல சமயங்களை தன்னகத்தே கொண்ட), இஸ்லாமியர், க்றைஸ்தவர், பார்ஸி என எல்லா சமூஹத்திலும் உள்ளார்கள்.

அதே சமயம் இத்தேசத்து உப்பைத்தின்று பின்னும் இத்தேசத்தை கூறுபோட விழையும் மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடும் சக்திகளும் அனைத்து தேசமக்களுக்கும் உரிய இத்தேசத்து வளங்களை சுரண்டி தானும் தன் குடும்பங்களும் வயிறு வளர்க்க வேண்டும் என விழையும் சுயநல சக்திகளும் இத்தேசத்து உப்பைத் தின்று ஆனால் அன்னிய தேசங்களுக்கும் அன்னிய கோட்பாடுகளுக்கும் இத்தேசத்து மக்களையும் இத்தேசத்து நிலப்பரப்பையும் தாரை வார்க்க விழையும் சக்திகளும் உள்ளன.

பின்னர் சொன்னப்பட்ட தேச விரோத சக்திகளுக்குப் பலமுகங்கள்.

இது போன்ற சக்திகளை, அச்சக்திகளை முன்னின்று நடத்துபவர்கள் ஹிந்துக்களோ, முஸல்மான்களோ க்றைஸ்தவர்களோ யாராக இருப்பினும் அவர்களை தேசத்திற்கு கேடுவிளைவிப்பவர்கள் என அடையாளம் கண்டு, இச்சக்திகளின் பித்தலாட்டங்களை அவ்வப்போது அம்பலப்படுத்தி வருகின்றன ஹிந்துத்வ சக்திகள். இச்சக்திகளின் பித்தலாட்டங்கள் இத்தளத்திலும் மேலும் பற்பல ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம், வழிபாட்டு ரீதியாக அன்னிய மதத்தைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக ஹிந்துஸ்தானத்தை தாய்நாடாகக் கொண்ட பற்பல இஸ்லாமியச் சஹோதரர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்றுவதைக் கண்டிருக்கிறேன். அவ்வாறு போற்றும் அன்பர்களை நினைவு கூர்வதன் மூலம் ஹிந்துத்வம் என்ற ஒரு கருத்தாக்கம் வெறும் கருத்தாக்கம் அல்லது கற்பனை அல்ல மாறாக நடைமுறை சாத்யம் என்பதை சித்தப்படுத்த இயலும். நமது தேசத்திய பெரும்பாலான இஸ்லாமிய க்றைஸ்தவ பார்ஸி மற்றும் யஹூதிய சஹோதரர்கள் இவ்வாறானவர் தான் எனினும் சில அன்பர்கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் தெரிவிக்கும் பரிச்சயம் தேசபக்த சக்திகளுக்கு மிகுந்த உத்சாஹம் அளிக்க வல்லது.

அப்படிப்பட்ட இஸ்லாமியப் பெருந்தகை ஒருவர் பாரதப் பண்பாட்டுப் பெருமையை போற்றுவதும் தமது (நமதும் கூட. நமதும் கூட என்று சொல்லவும் வேண்டுமோ!) முன்னோர்களின் பெருமையைக் கொண்டாடுவதையும் இதனூடே என்னுடைய ஆன்மீகத் தேடல்களுக்கு விடை கிடைத்ததையும் பகிர்வது இந்த வ்யாசம்.

இது ஒரு துவக்கமே. தீய சக்திகள் எப்படி அடையாளம் காண்பிக்கப் படவேண்டுமோ அவ்வாறே பண்பாட்டைப் போற்றும் தூய சக்திகளை அடையாளம் காண்பித்தலும் அச்சக்திகளைப் போற்றுதலும் தேச பக்தி என்ற பயிருக்கு நாம் அளிக்கும் நீர் மற்றும் உரம் போன்றாகும்.

******

जम्बूद्वीपं शस्यतेऽस्यां पृथिव्यां तत्राप्येतन्मण्डलं भारताख्यं ।
काश्मीराख्यं मण्डलं तत्र शस्तं यत्राऽस्तेऽसौ शारदा वागधीशा ॥

ஜம்பூ3த்3வீபம் சஸ்யதே(ऽ)ஸ்யாம் ப்ருதி2வ்யாம் தத்ராப்யேதன்மண்ட3லம் பா4ரதாக்2யம்
காச்மீராக்2யம் மண்ட3லம் தத்ர சஸ்தம் யத்ரா(ऽ)ஸ்தே(ऽ)ஸௌ சாரதா3 வாக3தீ4சா

– மாதவீய சங்கர திக்விஜயம் (16-55)

வையகத்தில் ஜம்பூத்வீபம் உயர்ந்தது. அதில் பரதகண்டம் சிறந்தது. அதில் வாக்தேவியாகிய சாரதை சன்னிதி கொண்டுள்ள காஷ்மீர தேசம் சிறந்தது.

(மாதவீய சங்கர திக்விஜயம் எழுதியவர் காஷ்மீரத்துக் காரர் அல்ல, கர்நாடக ப்ரதேசத்தைச் சார்ந்தவர். பாரத தேசத்தின் ஒவ்வொரு அங்குலமும் புனிதமானவை என்பதால், கவிபுனையும் வழிமுறையில் பேசப்படும் இடமான காஷ்மீரம் பற்றி மிக உயர்வாக இங்கு குறிப்பிட்டுள்ளார்.

சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி க்ராமமனைத்தும் தவபூமி
சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம் சிறுவனைவரும் ராமனே

என்று ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் ஒரு தேச பக்திப் பாட்டு பாடப்படுவதுண்டு. அதன் படி நம் தேசத்து க்ராமங்களனைத்தும் தவபூமியாகக் கொண்டாடப்படுகிறது என்பது நோக்கத்தக்கது)

முதன் முதலாக நான் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஒரு டிஸம்பர் மாதத்தின் நடுவே காலடி எடுத்து வைத்த போது எனக்கு மேற்கண்ட மாதவீய சங்கர திக்விஜய ச்லோகம் நினைவுக்கு வந்தது. ஆதிசங்கரர் வந்து சென்ற பூமியாயிற்றே என மனதாற சாரதையையும் சங்கரரையும் வழிபட்டு பூமியில் கால் பதித்தேன்.

காஷ்மீரம்*** என்றவுடன் பல விஷயங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் இவ்யாசம் பெரும்பாலும் ஆன்மீக அனுபவங்களை பகிரும் படிக்கானது. சம்பந்தப்பட்ட இடங்களின் சிறிதளவு சரித்ரம் சிறிதளவு பூகோளம் சிறிதளவு அவற்றின் இன்றைய நிலை போன்ற பயணக்குறிப்புகள் மாதிரியான விஷயங்கள் சொல்லப்பட்டிருப்பினும் அவையெல்லாம் கருதுகோளுடன் சம்பந்தப்பட்டவை என்றபடிக்கு மட்டிலும்.

sankaracharyasவேலை நிமித்தமாக வந்திருந்தாலும் ஸ்ரீ நகரில் உள்ள சங்கராசார்ய மந்திர் பற்றி எனது நண்பர்கள் சொல்லியிருந்ததால் தரிசனம் செய்ய வேண்டும் என மிகவும் ஆசை இருந்தது. மறுநாள் தரிசனத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம்.

சென்ற அன்று மாலைப்பொழுதில் பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் பனிப்பொழிவு பஞ்சுப்பொதிபோல் தான் இருக்கும். தொட்டால் நீர் ஒட்டாது. கால் வைத்தால் பஞ்சுப்பொதியில் கால் வைத்தது போலவே ம்ருதுவாக இருக்கும். மறுநாள் காலை வரை பனிப்பொழிவு கடுமையாகத் தொடரவில்லையென்றால் மலைமேல் உள்ள கோவிலுக்குப் போக இயலும் என நண்பர்கள் சொல்லியிருந்தனர். ஆசை நிராசையாகி விடக்கூடாதே கடவுளே எனத்தொழுது உறங்கினேன்.

sankaracharya-temple-srinagarபகவத் சங்கல்பம் முன்னிரவிலேயே பனிப்பொழிவு நின்றிருக்க வேண்டும் போலும். மறுநாள் காலை சூர்யோதயம் சற்று தாமதமாக இருப்பினும் குளிருடன் பளிச்சென வெயில்.

எனவே திட்டமிட்ட படி கோவிலுக்குப் பயணித்தோம். ஆங்காங்கு முந்தைய இரவில் விழுந்த பனித்துளிகள். கோபாத்ரி பர்வதம் என்ற ஒரு சிறு குன்றின் மீது ஆலயம். எழுந்தருளியுள்ள பெருமான் ஜ்யேஷ்டேச்வரர். ஆதிசங்கரரின் காஷ்மீர விஜயத்தின் போது இக்கோவிலில் தர்சனம் செய்ததாக ஐதிஹ்யம். ஆதலால் கோவிலை சங்கராசார்ய மந்திர் என்றே இன்று அழைக்கின்றனர். மனது நிறைய ஆதிசங்கரரையும் சங்கராசார்ய ஸ்வாமிகளையும் த்யானித்துக்கொண்டு விநாயகர் அகவல் சொல்லிக்கொண்டே குன்றின் மீது ஏறினேன். காஷ்மீர சைவத்தின் முன்னோடி அபிநவ குப்தர் என்ற சைவாசார்யர். அவரையும் மனதால் வணங்கினேன்.

மலையுச்சியில் கோவில். லிங்கத் திருமேனி. வழிபாடு செய்தபின் திருப்புகழமுதத்தை ஸ்வாமி சன்னதியில் ஸ்மரித்தேன். கயிலையம்பதிக்கருகேயுள்ள ஆலயமல்லவா.

புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித்தகர் போல

அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக்கருள்வாயே

சமரிலெதிர்த்தசுர்மாளத்
தனியயில்விட்டருள்வோனே

நமசிவயப் பொருளானே
ரஜதகிரிப்பெருமாளே.

உலகமே ப்ரளயத்தில் அழியும் சமயத்திலும் அழியாப் புகலியெனும் சீகாழிப்பதியில் அவதரித்த புவியிற் பெரும் ப்ரபுவான திருஞான சம்பந்தப் பெருமானைப் போல மரணமிலாப் பெருவாழ்வைத்தரவல்ல தேவாரப் பாடல்களைப் போல பாடுவதற்கு இந்த அடிமைக்குத் திருவருள் புரிவாயாக என வள்ளல் அருணகிரிப்பெருமான் கயிலைமலைப் பெருமானை இறைஞ்சுகிறார்.

சமர்புரிந்த சூரன் மாள வேலாயுதத்தை ஏவி அருளியவனே; “நம: சிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரப்பொருளானவனே ரஜதகிரியெனும் வெள்ளியங்கிரியிலேகிய பெருமாளே என ஸ்துதி செய்கிறார்.

மாதவீய சங்கர திக்விஜயத்தின் கடைசீ சர்க்கமான பதினாறாவது சர்க்கத்தில் ஆதிசங்கரரின் காஷ்மீர விஜயம் விவரிக்கப்படுவதால் சுருக்கமாக அச்சர்க்கத்தை மட்டும் வாசித்தேன். காஷ்மீரத்தில் சங்கரரின் ஸர்வக்ஞ பீடாரோஹணம் (ஸர்வக்ஞ பீடமேகியது) பற்றி இச்சர்க்கம் விவரிக்கிறது. (காஞ்சீபுரத்தில் சங்கரர் ஸர்வக்ஞ பீடமேகியதாய் பிறிதான வேறு சங்கர விஜயத்தில் குறிப்புள்ளது.) ஸர்வவக்ஞ பீடம் :- பலகலைகளை கசடறக் கற்றவர் அமரத்தக்க பீடம்.

ஸர்வக்ஞ பீடம் மற்றும் ஸர்வக்ஞ பீடமேகியது போன்ற ச்லோகங்கள் ச்லோக சாரத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

द्वारैर्युक्तम् माण्डपैः तच्चतुर्भिः देव्या गेहं यत्र सर्वज्ञपीठम् ।
यत्राऽऽरोहे सर्ववित्सज्जनानां नान्ये सर्वे यत्प्रवेष्टुं क्षमन्ते ॥

த்3வாரைர்யுக்தம் மாண்ட3பை: தச்சதுர்பி:4 தே3வ்யா கே3ஹம் யத்ர ஸர்வக்ஞபீட2ம்
யத்ரா(ऽऽ)ரோஹே ஸர்வவித் ஸஜ்ஜனானாம் நான்யே ஸர்வே யத்ப்ரவேஷ்டும் க்ஷமந்தே. (16-56)

அங்கு நான்கு வாயில்களுள்ள மண்டபம் அமைந்த “ஸர்வக்ஞ பீடம்” தேவியின் ஸ்தானமாக விளங்குகின்றது. அதன்மீது அமருவதற்கு சான்றோர்களில் ஸர்வக்ஞராக உள்ளவரைத்தவிர மற்றவருக்கு வாய்ப்பில்லை.

इत्थं निरुत्तरपदां स विधाय देवीं सर्वज्ञपीठमधिरुह्य ननन्द सभ्यः ।
सम्मानितोऽभवदसौ विबुधैश्च वाण्या गार्ग्या कहोलमुखरैरिव याज्ञवल्क्यः ॥

இத்த2ம் நிருத்தரபதாம் ஸ விதா4ய தே3வீம் ஸர்வக்ஞ பீட2மதி4ருஹ்ய நநந்த ஸப்4ய:
ஸம்மானிதோ(s)ப4வதஸௌ விபு3தை4ஸ்ச வாண்யா கா3ர்க்3யா கஹோலமுக2ரை: இவ யாக்ஞவல்க்ய: (16-87)

Shankaracharya_Temple_srinagar(ந்யாய, வைசேஷிக, பௌத்த, ஜைன, பூர்வமீமாம்சா சமயங்களைச் சார்ந்த பெரியோர்கள் ஆதிசங்கரரை பரீக்ஷை செய்த பின்பு) ஸரஸ்வதி தேவியும் அவரை பரீக்ஷை செய்ததில் கேழ்விகளுக்கு சரியான பதிலுறைத்தமையால் ஆதிசங்கரர் ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தார். யாக்ஞவல்க்ய முனிவர் ஆத்மஞானத்தின் மாண்பை எடுத்துறைத்தமைக்காக கஹோலர் முதலிய முனிவர்களாலும் கார்கியினாலும் புகழப்பட்டதுபோல் ஸர்வக்ஞபீடத்தில் அமர்ந்த ஆதிசங்கரர் வித்வான் களாலும் தேவர்களாலும் பூஜிக்கப்பட்டார்.

*****

ஒரு க்ஷணம் இக்கோவில் தான் ஸர்வக்ஞ பீட ஸ்தலமோ எனத் தோன்றியது. அக்கம் பக்கத்தில் உள்ள ASI (archaeological survey of india) பலகைகளை வாசிக்கையில் அம்மாதிரிக்குறிப்பேதும் காணக்கிட்டவில்லை. ஆனால் ஆதிசங்கரர் இக்கோவிலுக்கு வருகை தந்தமை பதியப்பட்டிருந்தது. அப்படியானால் அந்த ஸர்வக்ஞ பீட ஸ்தலம் எங்கிருக்க வேண்டும்? அருகாமையில் எங்கும் இருக்குமா என வினா எழுந்தது. நண்பர்களில் பஞ்சாபியர், உ.பி மற்றும் வங்காள ப்ரதேசங்களைச் சார்ந்தவர் யாருக்கும் ஏதும் தெரிந்திருக்கவில்லை. உள்ளூர் கஷ்மீரிகளும் எனது சம்சயத்திற்குச் சரியான சமாதானம் அளிக்கவில்லை.

Pattan Temple
Pattan Temple

அங்கிருந்து பின்னர் பட்டன் (Pattan), பாராமுல்லா (Baramulla) வழியே ஸலாமாபாதுக்கு செல்வது பயணத்திட்டம்.

தேசிய நெடுஞ்சாலை 1A வில் (ஸ்ரீ நகர் – பாராமுல்லா மார்க்கத்தில்) பட்டன் நகரத்தில் ASI யால் புனரமைக்கப்பட்டு கம்பிவேலியிடப்பட்ட ஆலயச்சிதைவுகளைக் காணலாம்.

அதே போல் ஸலாமாபாதிற்குச் சற்றே பின்னால் ஊரி (Uri) யில் தாதா மந்திர் (Data mandir) என்றழைக்கப்படும் ஆலயம். இதுவும் ASI யால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சாலையின் இடப்புறத்தில் ஆலயம். வலப்புறத்தில் ஜீலம் நதி (விதஸ்த நதி – ராஜதரங்கிணி). தாதா ஆலயம் ராணுவ வீரர்களின் கண்காணிப்பில் உள்ளது.

சாலையின் இடப்புறத்தில் நுழைவாயில். வாயிலிலிருந்து கீழிறங்கினால் சுற்றிலும் புல்வெளி. சீராகச்செதுக்கப்பட்ட புல்வெளி. வலப்புறத்தில் ஓரிரண்டு பீடங்கள். அதன்மேல் சிவலிங்கங்கள். இயன்ற போது அங்குள்ள ராணுவ வீரர்கள் அவற்றுக்கு அபிஷேகம் செய்வதாய் கூறினர். வாயிலிலிருந்து செல்லும் நடைபாதை முடிகையில் படிகளேறிச்சென்றால் கர்ப்ப க்ருஹம். கர்ப்ப க்ருஹத்தில் மூர்த்தி இல்லை. சிவன், துர்க்கை, ராமர், அனுமன் போன்று கடவுளர்களின் படங்கள் உள்ளது. சிவாலயம் என்று மேற்கொண்டு விசாரிக்கையில் தெரிந்தது.

Data Mandir, Uri
Data Mandir, Uri

ராணுவ வீரர்களே அவ்வப்போது ஹனுமான் சாலிஸா போன்று ஸ்தோத்ரங்கள் சொல்லி தங்களுக்குத் தெரிந்தபடி வழிபாடு செய்கிறார்கள். அவர்களே கற்கண்டு ப்ரசாதம் கொடுத்தார்கள். கோவிலின் இடப்புறத்தில் பெரும் பானை ஒன்று புதைக்கப்பட்டுள்ளது. பெருமளவிற்கு நீரால் நிரப்பப்பட்டுள்ளது. அருகில் ஒரு இரும்பு சட்டமுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் சட்டத்தை நீரில் துளைத்து ஆழத்தைக் காண்பித்தார். கிட்டத்தட்ட நாலு நாலரை அடி ஆழம். பாண்டவர் வனவாசத்தில் பீமசேனன் அருகில் இருந்த நதியிலிருந்து இப்பானையில் நீரெடுத்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்ததாய் செவி வழிச்செய்தி என்று சொன்னார். பீமசேனனால் தூக்க முடிந்த பானை தான் என நினைத்தேன். பாண்டவ வனவாசத்துடன் சம்பந்தப்பட்ட சிவாலயம் என்பது புரிந்தது. த்ராவிட ப்ரதேசங்களில் உள்ள ஆலயங்கள் போல் முற்றும் கற்றளி. ஆனால் குறைவான சிற்ப வேலைப்பாடுகள்.

மேற்கொண்டு பயணித்து ஸலாமாபாத் எல்லைப்பகுதி.

எப்படி பஞ்சாப் மாகாணத்தில் வாகா எல்லை உள்ளதோ அது போலவே இங்கும் (ஸலாமாபாதில்) கமான் போஸ்ட் (Kamaan Border Post ) என்றழைக்கப்படும் எல்லைப்பகுதி உள்ளது. எல்லையில் அமன்சேது (கமான் சேது) என்ற பாலம். பாலத்தின் ஒருபுறம் ஹிந்துஸ்தானம். மறுபுறத்திற்கு அப்பால் முஸஃப்பராபாத் (Muzaffarabad) நகரம். இன்று பாக்கிஸ்தானத்து ஆளுமையில் உள்ளது.

AMAN SETHU 3வாகா எல்லைப்பகுதியில் தினமும் மாலையில் நிகழும் ராணுவ / துணைராணுவ வீரர்களின் அணிவகுப்பு போன்ற சம்ப்ரதாயங்கள் இங்கு கிடையாது. அமைதிக் காலங்களில் வ்யாபாரத்திற்கு ஏதுவாக லாரிகளில் போக்கு வரத்து அனுமதிக்கப்படுகிறது. விசா அனுமதியுடன் கஷ்மீரிகள் எல்லைக்கு இருபுறமும் சென்று வர இருநாடுகளிடையே ஒப்பந்தம் உள்ளது. தினப்படி ஹிந்துஸ்தானத்திலிருந்து ஒரு நாற்பது ஐம்பது லாரிகளில் சாமான் கள் அப்பால் செல்லுகின்றன. அது போல் அப்பாலிருந்து ஒரு பத்துப் பதினைந்து லாரிகளில் சாமான் கள் வருகின்றன. இந்த போக்கு வரத்திற்கு முன் நம் பகுதியிலிருந்து ராணுவ வீரர்கள் பாலத்தின் மத்திக்கு செல்கின்றனர். அது போல் அப்பாலிருந்து ராணுவ வீரர்கள் பாலத்தின் மத்திக்கு வருகின்றனர். இருவரும் கைகுலுக்கி ஒருவரை ஒருவர் வந்தனம் செய்த பிறகு பாலம் திறக்கிறது. முதலில் நம் லாரிகள் அப்பால் செல்கின்றன. பின்னர் அப்பாலிருந்து லாரிகள் இங்கு வருகின்றன.

PAKISTANI TRUCK 1

நமது லாரிகளின் வடிவமைப்பிலிருந்து அப்பாலிருந்து வரும் லாரிகளின் வடிவமைப்பின் அழகு சொல்லத்தகுந்தது. அப்பப்பா. என்ன அழகாக லாரிகளை வடிவமைக்கின்றனர். லாரியின் மேற்கூரை கிட்டத்தட்ட ஒரு படகு போல் காட்சியளிக்கும். லாரியின் நாற்புறமும் மயில் குயில் அன்னபக்ஷி போன்றுபல வேலைப்பாடுகள். ஓட்டுனருக்கு இருபுறமும் இருக்கும் கதவுகள் வீட்டுக்கதவுகளை விட மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

PAKISTANI TRUCK 3

அடிப்படை வாத இஸ்லாத்தில் சித்திரம், இசை போன்ற நுண்கலைகள் ஏற்கத்தகுந்தவையா அல்லவாஎன்பது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் எல்லைக்கு அப்பால் மக்களின் வாழ்க்கையில் கலையுணர்வின் தாக்கம் மிக ஆழமாகப் பதிந்துள்ளமை நன்கு தெரிய வருகிறது. மதவெறியால் விளைந்த தேசப்பிரிவினை என்ற செயற்கைப்பிளவிற்குப் பின்னும் தகர்க்க இயலாத பண்பாட்டுக்கூறோ கலையுணர்வு எனத்தோன்றியது. பெரும்பாலும் ஆப்பிள், பேரிச்சம்பழம், த்ராக்ஷை மற்றும் நம் பக்கத்து சாத்துக்குடி போன்று இருக்கும் ‘கின்னு’ என்ற ஆரஞ்சுப்பழம் போன்ற பற்பல பொருட்கள் அப்பாலிருந்து வருகிறது.

சியாச்சின் (Siachin) பகுதியில் நம் ராணுவ வீரர்கள் மலையின் மேற்பகுதியில். ஆனால் இங்கு எல்லைக்கு அப்பால் உள்ள பர்வதத்தில் மலை மேலே அவர்களது ராணுவ வீரர்கள். தூரத்தில் மேலே மிகவும் சிறிதாக பங்கர்கள் (Bunkers) தெரிகின்றன. கீழே நமது ராணுவ வீரர்கள். ஜீலம் (விதஸ்த) நதி எல்லையைப் பிரிக்கிறது. கூப்பிடு தூரத்தில் எதிர்ப்புறத்து க்ராமங்கள். அங்கு தெரியும் சஹோதர முகங்கள். எல்லைப்புறமாதலால் முன் அனுமதியுடன் மட்டும் எல்லை வரை (பாலத்தின் விளிம்பு வரை) செல்ல இயலும்.

கமான் சேது பாலம் செல்லும் வழியில் வலது புறம் Immigration checking Center (மாற்று நாட்டவர் ஆவண சரிபார்ப்பு மையம்).. முஸஃப்பராபாதிலிருந்து வரும் சஹோதர சஹோதரிகளின் ப்ரயாண, விசா ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் நாட்டு ரூபாய்க்குப் பதிலாக ஹிந்துஸ்தானிய ரூபாய் மாற்றிக் கொடுக்கப்பட்டு இவர்கள் ஹிந்துஸ்தான எல்லையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதே போன்று ஹிந்துஸ்தானத்திலிருந்து அப்பால் செல்லும் பயணிகளுக்கும். இவையெல்லாம் அமைதிக்காலங்களில். எதிரி ராணுவம் எப்போது Firing (துப்பாக்கி கொண்டு தாக்குதல்) அல்லது shelling (பீரங்கி மூலம் குண்டு வீச்சு) செய்யும் என சொல்ல இயலாது. அவ்வாறு Firing / shelling செய்ததில் சேதமான இடங்களைக் காண முடிகிறது.

இடதுபுறத்தே ஒரு இஸ்லாமிய ஸூஃபி மஹானின் மஸார் (mazaar) (சமாதி – தர்க்காஹ்).

ஜ்யேஷ்டேச்வரர், ஆதிசங்கரர், சாரதை, ஸர்வக்ஞபீடம் – இவற்றிலிருந்து எங்கோ சென்று விட்டேன். க்ஷமிக்கவும்.

இப்பகுதிகளை வ்யாசத்தில் பின்னர் நினைவு கூர வேண்டும். அதன் படிக்கு சில விபரங்கள் பகிரப்பட்டன. பல இடங்களின் பெயர்களும் பகிரப்பட்டுள்ளன அல்லவா? அவற்றை பூகோள ரீதியாக அறிந்துகொள்ள வரைபடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பார்க்கையில் இடங்கள் பற்றி மேலதிகத் தெளிவு கிட்டும்.

ஸலாமாபாதிலிருந்து பின்னர் மீண்டும் பாராமுல்லா (Baramulla), சோபோர் (Sopore), வட்லப் (Wutlub) , பாண்டிபோரா (Bandipora) வந்து அங்கிருந்து ஸ்ரீ நகர் வந்து சேரும் படி பயணத்திட்டம். கிட்டத்தட்ட ஸ்ரீ நகரத்தில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக காஷ்மீரத்தை வலம் வந்தது போன்று ஒரு பயணம். இப்பயணங்களினூடே ஆதிசங்கரர் ஏகிய ஸர்வக்ஞ பீடம் எங்கிருக்கும் என்ற வினாவும் கூட நினைவில் ஒரு பகுதியில் அகலகில்லேன் என தங்கியிருந்தது.

இந்த முதல் தரிசனத்திற்குப் பின் பலப்பலமுறை இங்கெல்லாம் ஆலய தரிசனம் செய்துள்ளேன். பல கஷ்மீரி நண்பர்களிடம் என் சம்சயத்தை பகிர்ந்துள்ளேன். ஆனால் சரியான சமாதானம் மட்டும் கிட்டவில்லை. என் தேடல் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.

******

விடை கிட்டியதென்னவோ இணையத் தேடலின் மூலம் தான், இந்த சுட்டியின் வாயிலாக.

ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி (Ayaz Rasool Naski) என்ற இஸ்லாமியப்பெருந்தகை சாரதா பீடத்திற்குச் சென்று வர வேண்டும் எனத் தணியாத ஆசை கொண்டிருந்தார். அது நிறைவேறியதை, “In search of Roots” என ஒரு வ்யாசமாக எழுதியுள்ளார். அந்த வ்யாசம் காஷ்மீர பண்டிதர்களின் “PRAZNATH” – ப்ரஸ்நத் (Identity) என்ற காலாண்டுக்கு ஒருமுறை வெளிவரும் பத்திரிகையில் july – sep 2010 இதழில் வெளி வந்துள்ளது. ஸ்ரீ ஆர்.நடராஜன் என்ற அன்பர் இந்த வ்யாசத்தை “வேர்களைத் தேடி” என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார். மிகவும் சுவையான மற்றும் தெளிவான தமிழாக்கம். இந்த தமிழாக்கம் காமகோடி இணைய தளத்தில் மேற்கண்ட சுட்டியில் காணக்கிட்டும்.

ஏழு பக்கங்களில் உள்ள இந்த வ்யாசத்தில் மூன்று பகுதிகள்.

முதன்மையாக ஸ்ரீ அயாஸ் ரஸூல் நஸ்கி அவர்கள் தன் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்கிறார்.
பின்னர் தனக்குத் தங்கள் மூதாதையரின் முக்யமான ஸ்தலமான சாரதா பீடம் செல்ல வேண்டும் என்ற தாகமெழுந்ததையும் அதற்கு அவர் எடுத்த முயற்சிகளும் – அம்முயற்சிகளில் முதலில் அவருக்குக் கிட்டிய தோல்விகளும் பின்னர் அந்த ஸ்தலத்தை அவர் அடைந்ததும் அதைப் பார்க்க நேர்ந்த அனுபவமும்.
கடைசியாக சாரதா பீடத்தின் கட்டுமான அமைப்பு பற்றிய தகவல்கள்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பயணத்தடத்தில் இருக்கும் நகரங்களில் உள்ள பண்பாட்டுச்சுவடுகளின் இன்றைய நிலை மற்றும் பூகோளத் தகவல்களை வாசித்த பின் அம்மொழியாக்கத்தை வாசிக்கையில் நிச்சயமாக மனதளவில் ஸ்ரீ நஸ்கி சாஹேப் அவர்களுடன் சாரதா பீடம் சென்று வரும் ஒரு மன நிறைவு கிட்டும்.

ஸ்ரீ நஸ்கி சாஹேப் அவர்களது வ்யாசத்தின் சுருக்கமும் முக்யமாக நமது கருப்பொருள் சார்ந்த பகுதிகளும் இங்கு பகிரப்படுகிறது. அதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்)

** நகரங்கள் மற்றும் சொல்லப்படும் இடங்களின் பெயர்களை அதனுடைய சரியான உச்சரிப்புப் படி கொடுக்க முனைந்துள்ளேன். மாகாணத்தின் பெயர் ஜம்மு & கஷ்மீர். தக்ஷிண பாரதத்தில் cash meer என்று உச்சரிக்கிறோம். காஷ்மீரம் என்று சம்ஸ்க்ருதத்தில் வழங்கப்படுகிறது. கொஷூர் மற்றும் கஷீர் என்றும் கஷ்மீரி மொழியில் உண்டு. காஷ்மீரம் என்பதும் அங்கு வழக்கத்தில் உள்ளது. தூர்தர்ஷனின் கஷ்மீரி நிகழ்ச்சிகள் DD கஷீர் என்ற தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிறது. கொஷூர் சமாசார் பத்ரிகா என்று கஷ்மீரிகளின் செய்திப்பத்திரிக்கை புழங்குகிறது.

5 Replies to “மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 1”

  1. இந்து மதம் இயற்கையோடு இசைந்து கொண்டாட வேண்டிய மதம் .ஏதோ சில காரணங்கள் நம் கண்ணை கட்டி வைத்து விட்டார்கள் இடையில் .மெல்ல அந்த திரை விலகும் அதர்க்கு இந்த கட்டுரைகள் உதவும், நம்பிக்கை அளிக்கும் .

  2. நல்ல பதிவு. தொடரவும். நல்வாழ்த்துக்கள்.

  3. “இது ஒரு துவக்கமே. தீய சக்திகள் எப்படி அடையாளம் காண்பிக்கப் படவேண்டுமோ அவ்வாறே பண்பாட்டைப் போற்றும் தூய சக்திகளை அடையாளம் காண்பித்தலும் அச்சக்திகளைப் போற்றுதலும் தேச பக்தி என்ற பயிருக்கு நாம் அளிக்கும் நீர் மற்றும் உரம் போன்றாகும்.”

    தங்கள் நேர்மறை சிந்தனையும் , பணியும் வாழ்க.நாங்களும் கூடவே வந்து பார்ப்பது போல் உள்ளது தங்கள் வர்ணனை .

    data கோயில் என்பது தத்தாத்ரேயர் கோயிலா?

    நமது ராணுவ வீரர்களை பாராட்ட வேண்டும். அவர்கள் பணி ,அதுவும் அங்கு மிக கடினமானது. அதோடு பூஜை செய்வது போன்ற பணிகள் செய்து பண்பாட்டை காப்பது என்றால்? ஒவ்வொரு இந்தியரும் அவர்களுக்கு கடன்பட்டு இருக்கிறோம் .

    ஸ்ரீ நஸ்கி போன்றோர் பற்றி மீடியாக்கள் அவ்வளவாக கண்டு கொள்ளது. இணையம் தான் இதற்கெல்லாம் உதவுகிறது. .

    சாய்

  4. கருத்துப் பகிர்ந்த அன்பர்களுக்கு நன்றி.

    அவசியமான இடமாற்றத்தில் இருந்ததால் முழுமையாகத் தகவல் சேகரம் செய்ய இயலவில்லை.

    ஸ்ரீமான் சாய் அவர்களுக்கு, தாமதமான உத்தரத்திற்கு க்ஷமிக்கவும்.

    அது தத்தாத்ரேயர் கோவில் என்பதற்குத் தரவுகள் இல்லை.

    கோவில் பெயர் दाता मन्दिर. சிவன் கோவில் என்பது செவி வழிச்செய்தி.

    கோவிலுக்கு வெளியே உள்ள ASI பலகையிலும் பாதுகாப்பு அம்சங்கள் தவிர்த்து கோவில் பற்றிய செய்தி ஏதும் இல்லை.

  5. Time and again I have been requesting the owners of this site to endeavour to start(if not already done ) identical site in all other important and main languages of India( I know it is easily said than done) as it will go a very long way in achieving the great and noble aim/goal/purpose for which Tamil Hindu was started. I find such a wealth of important knowledge and ancient wisdom that are being dispensed with by scholars and men of letters in this site. Let other Bharatiyas be benefitted by reading ,going through their own tongue. That will be the real foundation on which the super structure of Hindu national integrity can be strongly and firmly built.
    Regards and thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *