நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்

நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள மத்திய அரசு, அதுபற்றி அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. நீதிமன்றங்களில் குட்டு வாங்கி வாங்கி மண்டை மரத்துவிட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்த அரசு, வெட்கம் மானம் பற்றி கவலைப்பட்டால் தான் ஆச்சரியம்.

ஏற்கனவே ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் நீதிமன்றங்களில் சந்தி சிரித்தது. அதற்கு பலிகடாவாக ஆ.ராசா கிடைத்தார். நம்பகமுள்ள ‘கூட்டாளி’யான திமுக-வை பணயம் வைத்து அந்த ஊழல் சேற்றிலிருந்து அபோதைக்கு தப்பினார்கள் பிரதமரும், ப.சி.யும். இப்போதும் அது ஒரு கொடுங்கனவாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

நன்றி: மதி/  தினமணி / 08.05.2013
நன்றி: மதி/ தினமணி / 08.05.2013

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற ஒன்று நடக்கவே இல்லை என்றுதான் காங்கிரஸ் கட்சியின் பொய்யர்கள் முழங்கினார்கள். பிறகு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் எந்த நஷ்டமும் அரசுக்கு ஏற்படவில்லை என்றார்கள். அடுத்து ஊழல் நடந்ததற்கு திமுக-வின் ராசா தான் காரணம் என்றார்கள். அவரும் தமிழினத் தலைவரின் தவப்புதல்வியும் சிறை சென்று ஏகியது தான் மிச்சம். இன்னமும் பல ஆண்டுகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடந்து தீர்ப்பு வரும்பொழுது அதை யார் ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்?

எப்படியும், ஸ்பெக்ட்ரம் ஊழலை தூக்கிச் சாப்பிடும் ஊழலை காங்கிரஸ் கட்சி அரங்கேற்றாமலா இருக்கப் போகிறது? இப்போதே நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலின் மதிப்பு ரூ. 1.86 லட்சம் கோடி என்கிறார்கள். சரியாக மதிப்பிட்டால், இதன் அளவு இன்னமும் பல மடங்கு அதிகரிக்கலாம் (தலைமை தணிக்கை ஆணையர் ஆரம்பத்தில் கூறிய இழப்பு உத்தேச மதிப்பு: ரூ. 4.79 லட்சம் கோடி!)   பெட்ரோலிய இறக்குமதியிலும் ஊழல் இருக்கலாம். அடுத்து வரும் ஊழல் பூதமாக அது இருக்க வாய்ப்பிருக்கிறது! ஏற்கனவே ஆகாய ஊழல் முடிந்துவிட்டது; அடுத்து மண்ணிலும் ஊழல் தெரிந்துவிட்டது; அடுத்து நீர்ம வடிவில் தானே ஊழல் இருக்க முடியும்?

நிலகரி ஒதுக்கீடுகளில் முறைகேடு காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கை ஆணையர் (சி.ஏ.ஜி.) கூறியபோதே, அப்படி ஏதும் இல்லை என்று வானுக்கும் பூமிக்கும் குதித்தனர் காங்கிரஸ் வாலாக்கள். கிட்டத்தட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிப்பட்டபோது நடந்த கதை தான் இது. அரசு இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்காது என்பது தெளிவானது. திருடனே எங்கேனும் திருட்டு குறித்து விசாரிக்க நடவடிக்கை  எடுப்பானா? ஆயினும், பொதுநல வழக்குகள் வாயிலாக இவ்விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துவிட்டது.

Coal 1
ஊழல் பெருச்சாளிகள் வாழ ஓடாகத் தேயும் தொழிலாளர்கள்

எதிர்க்கட்சிகளின் கூப்பாடுகளுக்குப் பிறகு வேறு வழியின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது; பெயரளவில் வழக்கு பதிவு செய்த மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.),  7 நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுத்தது. அப்போதே மத்திய அரசின் ஏவல் நாயான சி.பி.ஐ. மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில், நிலக்கரி ஊழலில் நேரடியாக லாபம் கண்ட காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் பக்கம் சி.பி.ஐ. திரும்பியும் பார்க்கவில்லை. இந்த வழக்கில் நமது மாண்புமிகு மந்திரிகள் சார்பாக வாதிட்ட அரசுப் பிரதிநிதிகள், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தனர். இப்போது, விஷயம் கைமீறி, மீண்டும் குட்டுப் பட்டிருக்கிறது மத்திய அரசு.

இப்போது ஆ.ராசாவும்,  அவரது கட்சியின் ராசாவும் நிம்மதி அடைந்துகொள்ளலாம். நிலக்கரி ஊழலை மறைக்க மத்திய அரசு நடத்தும் நாடகங்களால் ஸ்பெக்ட்ரம் விவகாரம் பிஸ்கோத்தாக  மாறிவிடும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. தவிர, தங்களை பலிகடா ஆக்கி ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து தப்பிய மன்னுமோகனும் சோனியா அன்னையும் படும் பாட்டைக் காண்கையில், கலாகாருக்கு கண்டிப்பாக குஷியாகத் தான் இருக்கும். கடவுள் இருக்கிறார் என்பதை  இப்போது நமது பகுத்தறிவு மாமணி உணர்ந்திருப்பார் என்று நம்பலாம்.

சரி விஷயத்துக்கு வருவோம். நிலக்கரி ஊழல் என்பது என்ன? அது எப்போது நடைபெற்றது? அதை மறைக்க மத்திய அரசு ஏன் துடிக்கிறது? ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் முக்கியமானவை.

ஊழலின் ஊற்றுமுகம்:

நாட்டின் மிகப்பெரும் இயற்கை வளமான நிலக்கரிச் சுரங்கங்கள்  1972-73ல் தேசிய மயமாக்கப்பட்டன.  ஆயினும், நிலக்கரி வெட்டி எடுப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இயற்கை வளத்தின் பயன் பெருமளவில் கிட்டாமல் இருந்தது. அரசு நிறுவனம் மட்டுமே நிலக்கரியை வெட்டி எடுப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு,   தனியாரையும்  இதில் ஈடுபடுத்த மத்திய அரசு 1990-களில் முடிவு செய்தது. ஜூலை 1992-ம் ஆண்டு நிலக்கரி அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி,  தனியாருக்கு நிலக்கரிச் சுரங்க உரிமையை வழங்க உதவியாக,  143 நிலக்கரித் தொகுப்புகளை (coal blocks)  அடையாளம் கண்டது.

அதைத் தொடர்ந்து தேசிய நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தில்  1993, ஜூனில்  ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது.  அதன்படி, சக்தி உற்பத்தி (மின்சாரம்) மற்றும் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்ட பிற தொழில்களில் ஈடுபடும் தனியார் கம்பெனிகள் நிலக்கரியை வெட்டியெடுக்கலாம் என்று அரசு அனுமதித்தது. பின்னர் 1996-ம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு, சிமென்ட்  கம்பெனிகளும் நிலக்கரியை வெட்டியெடுத்துக்கொள்ள வகைசெய்யப்பட்டது.

19993-ல் துவங்கி 2010 வரை சுமார் ஐந்து முறை சுரங்கச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2006-ம் ஆண்டு நிலக்கரிச் சுர

ங்கத்தில் நூறு சதவீதம் அன்னிய மூலதனத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

1993-க்கு முன் நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு தெளிவான கொள்கை ஏதும் அரசிடம் இல்லை. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான இந்திய நிலக்கரி நிறுவனமும் (Coal India Limited – CIL ) மற்றும் சிங்கரேனி நிலக்கரிச் சுரங்க நிறுனமும் (Singareni Collieries Company Limited – SCCL) நிலக்கரி ஒதுக்கீட்டை செய்து வந்தன. பொதுவாக அனல் மின்நிலையங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களுக்கு மாநில அரசின் பரிந்துரைக் கடிதத்தின் அடிப்படையிலும்,  உற்பத்தித் தேவையின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை நிலக்கரி அமைச்சகச் செயலாளரைத் தலைவராகவும், தொடர்புடைய பிற அமைச்சகங்களை உறுப்பினர்களாகவும் கொண்ட நிலக்கரி ஒதுக்கீட்டுக் கண்காணிப்புக் கமிட்டி கட்டுப்படுத்தியது.

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நிலக்கரி ஒதுக்கீட்டுக்காக விண்ணப்பிக்கத் துவங்கிய பின், நிலக்கரி ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும்  என்பதை 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி நிலக்கரித் துறைச் செயலாளர் முன்பு  நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நிலக்கரித் துறை அமைச்சருக்கு 2004 ஜூலை 16-ம் தேதி ஒரு குறிப்பு அனுப்பப்பட்டது. அதில், இந்திய நிலக்கரி நிறுவனம் விநியோகிக்கும்  நிலக்கரியின் விலைக்கும் நிலக்கரித் தொகுப்புகளுக்கான உரிமத்தை எடுத்த நிறுவனங்கள் விநியோகிக்கும்  நிலக்கரியின் விலைக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகவும், இதன் காரணமாக உரிமங்கள் எடுத்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2004,  ஜூன் மாதம் நடந்த கூட்டத்திலேயே நிலக்கரித் தொகுப்புகளை ஒதுக்கீடு செய்ய போட்டி ஏல முறையைப் பின்பற்ற வேண்டும் என்று  தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பழைய கண்காணிப்புக் கமிட்டியின் மூலம் ஒதுக்கீடு செய்யும் முறையையே மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் இன்று வரை பின்பற்றி வந்துள்ளது. இதற்கு பிரதமர் அலுவகத்திலிருந்தும் ஒப்புதல் கடிதம் கிடைத்திருக்கிறது.

போட்டி ஏல முறை பின்பற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்ட நாள்  (28.06.2004) வரை சுமார் 39 தொகுப்புகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.  ஆனால்,  2006-லிருந்து 2009 வரை சுமார் 145 நிலக்கரித் தொகுதிகள் முந்தைய பழைய முறையில், விதிமுறைகளை மீறி, ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

நிலக்கரி முறைகேட்டை மறைக்க முயன்ற அரசுக்கு எதிராகப் போராடிய தேசிய  ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள்.
நிலக்கரி முறைகேட்டை மறைக்க முயன்ற அரசுக்கு எதிராகப் போராடிய தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள்.

அதாவது, மத்திய அரசு தான் எடுத்த முடிவை தானே மீறி, நிலக்கரி வயல் ஒதுக்கீடுகளை அரசுக்கு நஷ்டம் ஏற்படும் விதமாக விநியோகித்துள்ளது. இதனால் தான் அரசுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி. கூறி இருக்கிறார்.

இந்த விவகாரம் வெடித்தவுடன்  விளக்கமளித்த  பிரதமர் அலுவலகம், மக்களுக்கு குறைவான விலையில் நிலக்கரியைக் கொண்டு, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் (இரும்பு, சிமென்ட், மின்சாரம் போன்றவை) கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நிலக்கரியை குறைந்த  விலைக்கு விற்றுள்ளோம் என்று சொல்லியிருக்கிறது.  இதே வாதத்தைத் தானே  ‘ஸ்பெக்ட்ரம் திலகம்’ ஆ.ராசாவும் கூறினார்?

1993-ம் ஆண்டுக்கு முன், நிலக்கரியைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சுரங்க உரிமை வழங்கப்பட்டது – ஆனால், அதன் பின்னர் செய்யப்பட்ட பல்வேறு சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து, தற்போது வெறும் சுரங்கத் தொழில் மட்டுமே செய்யும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிமென்ட், இரும்பு மற்றும் மின்சார உற்பத்தியில் எந்த சம்பந்தமும் இல்லாத வெறும் சுரங்க நிறுவனங்களுக்குக் கூட உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.  அதாவது, அரசாங்கத்திடமிருந்து நிலக்கரித் தொகுப்புகளை அடிமாட்டு விலைக்கு வாங்கும் தனியார் நிறுவனங்கள், வெட்டியெடுக்கப் பட்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடித்துள்ளன.

இன்னொரு புறம், அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் சுரங்கத் தொகுப்பிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களும் குறைந்த விலைக்கு மின்சாரத்தை விற்பதில்லை. யூனிட் ஒன்றுக்கு சுமார் 17 ரூபாய் வரை அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கறந்து விடுகிறார்கள். அரசு மிகக் குறைந்த விலையில் அளிக்கும் நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து அரசுக்கே ‘அல்வா’ கொடுக்கிறார்கள்!

ஆனால், ‘அரசாங்கம் நிலக்கரியை லாபமீட்டும் வகையினமாகக் கருதவில்லை என்பதால், அதிலிருந்து லாபம் சம்பாதிப்பது என்கிற கேள்வியே எழவில்லை என்று பிரதமர் மன்னுமோகன் சிங்கின் அலுவலகம் தெரிவித்தது. அரசியல் என்பதே சுயநலப் பிழைப்பாக மாறிவிட்ட நிலையில், நமது ‘பொருளாதார மேதை’யிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

ஆனால், சி.ஏ.ஜி. மூலமாக இந்த முறைகேடு அம்பலமாகிவிட்டது. இப்போது வெளி நிர்பந்தங்கள் காரணமாக  சி.பி.ஐ. எடுத்துவரும் நடவடிக்கைகளும்  கேலிக்குரியதாக மாறி வருவது தான் கவலை அளிக்கும் தகவல்.

இதனிடையே, நிலக்கரி வயல் ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு செய்த, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண்  பானர்ஜி தலைமையிலான  நாடாளுமன்ற நிலைக்குழு, 2004 முதல் 2010 வரை ஒதுக்கீடு செய்யப்பட நிலக்கரி ஒதுக்கீடுகளில் (218) இன்னமும் உற்பத்தி தொடங்காத (195) அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. அரசு இவ்விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

உச்ச நீதிமன்றம் கண்டனம்:

சி.பி.ஐ. அறிக்கையில் கை வைத்த அமைச்சர்!
சி.பி.ஐ. அறிக்கையில் ‘கை’ வைத்த சட்ட அமைச்சர்!

இந்நிலையில் நிலக்கரி ஊழல் தொடர்பான தனது இடைக்கால விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபி.ஐ. தாக்கல் செய்தது.  அதற்கு முன்னதாக மத்திய அரசால் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டது அம்பலமானது. இதில் மத்திய சட்ட  அமைச்சர் அஸ்வினி குமாரே நேரடியாக ஈடுபட்டிருக்கிறார். ஆரம்பத்தில் அதனை மத்தித்ய அமைச்சர்களும் , அரசின் வழக்கறிஞர்களும் மறுத்தனர். ஆயினும், இதுகுறித்த பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 25-ல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித்  சின்ஹா, ‘சி.பி.ஐ. நடத்திய விசாரணை விவரம் மத்திய நிலக்கரித் துறை. சட்ட அமைச்சக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது சி.பி.ஐ. இதனை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்தப் பிரமாணப் பத்திரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். லோதா கூறியது:

“இந்தப் பிரமாணப் பத்திரம் முழுமையான விவரங்களைக் கொண்டிருக்கவில்லை. நீதிமன்றம் கோரியபடி வரைவு அறிக்கையில் யாரேனும் திருத்தம் செய்தார்களா? அதை யார் செய்தார்கள்? போன்ற விவரங்கள் இடம் பெறவில்லை.

அரசில் இருப்பவர்களுடன் அறிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் நோக்கமே ஆட்டம் கண்டுவிட்டது. இதுபோன்ற வழக்கில் அரசில் இருக்கும் தலைவர்களிடம் இருந்து அறிவுரையோ, அனுமதியையோ பெற வேண்டிய அவசியம் சிபிஐக்கு கிடையாது. மொத்தத்தில் அரசியல் தலையீடு அறவே இருக்கக் கூடாது.

சிபிஐ நடவடிக்கையை நீதிமன்றம் நம்பியிருந்தது. ஆனால், அதைத் தகர்க்கும் வகையில் அதன் செயல்பாடு அமைந்துள்ளது.

நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் ஒரு வழக்கில், சிபிஐ நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை விவரங்களைப் பார்வையிட மத்திய சட்ட அமைச்சருக்கும், பிரதமர் அலுவலகம், மத்திய நிலக்கரித் துறை இணைச் செயலர்களுக்கும் யார் அதிகாரம் வழங்கியது? சிபிஐ மேற்கொள்ளும் விசாரணை அறிக்கைகளை யார், யாரெல்லாம் பார்வையிடலாம் என்ற வழிகாட்டுதல் நெறிகள் உள்ளனவா? அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது?

இந்த வழக்கில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் மூலம் ஏன் முரண்பட்ட தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது?

இந்த விவரங்கள் அடங்கிய புதிய பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் வரும் மே 6-ஆம் தேதிக்குள் சிபிஐ இயக்குநர் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் மே 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’

-என்று நீதிபதி குறிப்பிட்டார்.

சி.பி.ஐ. = கூண்டுக்கிளி?
சி.பி.ஐ. = கூண்டுக்கிளி?

இந்த கண்டனம், அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. நிலக்கரி ஊழலில் அரசின் பங்கு வெளிப்பட்டுவிட்டதாகவும், மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார், பிரதமர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால், இரு அவைகளும் கிட்டத்தட்ட முடங்கிப் போயின.  நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் உடனே ராஜினாமா செய்துவிட்டார். அவர் மானஸ்தன்!

ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் அவரது உறவினர் வாங்கிய லஞ்சத்தால் சி.பிஐ பிடியில் சிக்கி அது வேறு சந்தி சிரிக்கிறது. ஆரம்பத்தில் பதவி விலக மாட்டேன் என்று கர்ஜித்த பன்சால், இப்போது நாடாளுமன்றக் கூட்டம் முழுவதும் முடங்கிய பிறகு ராஜினாமா செய்திருக்கிறார் (அன்னை சோனியா உத்தரவாம்!). அதைப் பின்பற்றி இப்போது சட்ட அமைச்சர் அஸ்வினிகுமாரும் ராஜினாமா செய்திருக்கிறார். ஊடகங்களுக்கு காங்கிரஸ் கட்சியைப் புகழ ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே சி.பி.ஐ. யை  கூண்டுக்கிளியாக  வர்ணித்து உச்சநீதிமன்ற நீதிபதி வேறு கடுப்பேற்றினார். ‘‘சிபிஐ கூண்டுக்கிளியாக மாறி விட்டது. அதற்கு பல எஜமானர்கள் உள்ளனர். தனது எஜமானர்கள் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை போல சிபிஐ செயல்படுகிறது. சிபிஐயின் வேலை அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதல்ல. நேர்மையாக விசாரணை நடத்துவதுதான்’’ என்று மீண்டும் ஒரு குட்டு வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதை சி.பி.ஐ. இயக்குனரே தனது பேட்டியில் ஒப்புக்கொண்டும் விட்டார். மத்திய அரசுக்குத் தான் உரைக்கவில்லை.

இதுதான் இன்றைய நிலைமை. ஊழல் செய்வதில் மட்டுமல்ல, அதை மறைப்பதிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மிகவும் திறமைசாலி என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. இன்னமும் எத்தனை நாட்களுக்கு இந்த ஊழல் கூட்டணி ஆட்சியில் இருக்கும்?  அதுவரை நமது இயற்கை வளங்கள் கொள்ளை போய்க்கொண்டே  தான் இருக்கும். ஊழல் குற்றவாளிகள், ஊழலை எதிர்ப்பதாக முழங்கும் நாடகக் காட்சிகளும் நித்தம் அரங்கேறும்; ஊழல் இன்னமும் பாதாளம் வரை புரையோடும். நாட்டுநலன் குறித்த கவலையின்றி இந்தக் கூட்டணியை ஆளவைத்த மக்களுக்கு இது தானே பலனாகக் கிடைக்கும்?

 

 

5 Replies to “நாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்”

  1. நல்ல நெத்தியடி திரு சேக்கிழானுக்கு நம் பாராட்டுக்களும், நன்றியும். . படித்தால் வயிறு எரிகிறது. நம் நாட்டை ஆளும் மன்னர்கள் இப்படி இருக்கிறார்களே என்று. இனிமேல் , எதிர்காலத்தில் ஊழல்களை மூடி மறைக்கும் வேலையில் இந்திரா காங்கிரசார் ஈடுபட மாட்டார்கள். ஏனெனில், எல்லாம் அறிந்த பின்னரே, கர்நாடக தேர்தலில் எங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். என்று தெம்பாக பேச ஆரம்பித்து விட்டனர். ஊழல் ஒரு பிரச்சினையே அல்ல என்று தைரியமாக கூற ஆரம்பித்து விட்டனர்.

    கர்நாடக தேர்தல் முடிவுகள் ஓர் அலசல்.

    1. பாஜக எடியூரப்பா பிளவு இல்லை என்றால் அக்கட்சிக்கு 40-க்கு பதிலாக 76 இடங்கள் கிடைத்திருக்கும்.

    2. காங்கிரஸ் ( இந்திரா) கட்சி 223 இடங்களிலும் போட்டியிட்டு , 121 இடங்களில் வெற்றிபெற்று , 15 இடங்களில் டெபாசிட் இழந்தது.

    3.பாஜக 222 இடங்களில் போட்டியிட்டு, 40 இடங்களில் வெற்றி பெற்று, 103 இடங்களில் டெபாசிட் இழந்தது.

    4. தேவ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 221 இடங்களில் போட்டிட்டு, 40- இடங்களில் வென்று, 104 இடங்களில் டெபாசிட் இழந்தது.

    5. எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா பக்ஷ 202 இடங்களில் போட்டியிட்டு, 6 இடங்களில் மட்டும் வென்று, 135 இடங்களில் டெபாசிட் இழந்தது.

    6. பாஜக சென்ற தேர்தலை விட 14 சதவீதம் குறைவாக ஓட்டு வாங்கியுள்ளது. இந்த 14 சதவீதத்தில், எடியூரப்பா 10 சதவீதமும், காங்கிரஸ் இரண்டு சதவீதமும் , குமாரசாமி கவுடா கட்சி ஒரு சதவீதமும், இதரர் ஒரு சதவீதமும் கூடுதலாக பெற்று , பங்கிட்டுக் கொண்டனர்.

    கர்நாடகத்தில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, அந்த மாநில ஆளுங்கட்சியின் மீது , அவர்களின் ஐந்து வருட ஆட்சி மீது அளித்த தீர்ப்பு . அவ்வளவுதான். ஆனால் , அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் வரும்போதும் இதே தீர்ப்பு தான் வரும் என்று மனப்பால் குடிக்கும் காங்கிரசாருக்கு நம் மக்கள் நல்ல பாடம் புகட்ட இருக்கிறார்கள்.

  2. இக்கட்டுரை குறித்து 4 கருத்துகளை கூற விரும்புகிறேன்.

    (1)பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவு:
    அரசே நடத்திய வியாபாரத்திலிருந்து, தனியாருக்கு உரிமைகளை வழங்க
    ஆரம்பிக்கையில், இப்பிரச்சினையை அனைத்து மேற்குலக நாடுகளும் சந்தித்தே
    வந்துள்ளன. என்ன! ஊழலின் அளவு மாறியிருக்கலாம். இந்தியா கடந்த 20
    வருடங்களாக பொருளாதாரத்தில் சில துறைகளை சிறிது சிறிதாக தனியாருக்கு
    விட்டுக் கொண்டு வருகிறது. தொலைத்தொடர்பு துறை, நிலக்கரி முதலான
    சுரங்கத்துறை, காப்பீடு போன்ற துறைகளில் முதல் படியை எடுத்து
    வைத்துள்ளது. அதாவது, அரசே நடத்தும் கம்பெனியும் இயங்கும். அதோடு
    கூடவே தனியார் கம்பெனிகளும் இயங்கும். இது முதல் படி மட்டுமே! அரசே
    இத்துறைகளை நடத்தி வந்துள்ளதால், Checks and Balances, Procedures, Terms
    போன்றவற்றைக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், தனியார்
    உள்ளே நுழைந்தவுடன், Status Quo துவம்சம் செய்யப்படுகிறது. இரு
    கம்பெனிகளின் சச்சரவுகளுக்கு தேவையான சட்ட முறைகளும் இல்லை. எந்த
    தொழில் துவங்கவும் பல உரிமங்களை பெற வேண்டிய அவசியம். லஞ்சம்
    கொடுக்காமல் தொழில் தொடங்க முடியாத நிலை என்று பல பிரச்சினைகள்
    உள்ளன.

    நான் கூற வருவது, இது போன்ற தற்காலிக Transition பிரச்சினைகள்
    இருப்பதாலேயே, அரசுத்துறைதான் சிறந்தது என்ற பரப்புரை உலா வர
    ஆரம்பித்துள்ளது. பழைய நிலை கொடூரமானது என்பதை நாம் மறக்கக்கூடாது.
    100 சதவிகிதம் சரியாக இந்த Transition நடக்க முடியாது. மேற்குலகிலும் இது
    லஞ்ச லாவண்யத்துடனேயும், கேவலமாகவும்தான் நடந்தேறியது. இங்கும்
    அப்படித்தான் நடக்க வேண்டுமா? என்றால் வேறு வழியில்லை என்பதுதான் என்
    பதில். ஆனால் கண்டிப்பாக இதைவிட சிறப்பாக வாஜ்பாய் ஆட்சியில்
    பொருளாதார சீர்திருத்தங்கள் நடந்தன என்பதையும் நாம் இங்கு நோக்கலாம்.

    கடைசியாக இப்பகுதியில் நான் கூற விரும்புவது, முதல் படியில், அதாவது
    முதல் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களிலேயே நாம் தொய்வு
    அடைந்து விட்டோம். இன்னும் அடுத்த படியில் லஞ்சம் பாக்கியிருக்கிறது. 2ம்
    தலைமுறை சீர்திருத்தங்களிலும் சில கேவலங்கள் அரங்கேறத்தான் செய்யும்.
    என்ன லஞ்சத்தின் அளவில் மாற்றங்கள் வந்தாலும் வரலாம்.

    அதாவது, வங்கிகள், எஞ்சியிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள், போக்குவரத்து,
    மின்சாரம் போன்ற துறைகள் முற்றிலுமாக தனியாருக்கு அளிக்கப்படதான்
    செய்யும். அதில் லஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

    சரி, இது தொடர்ந்து கொண்டே இருக்குமா! இல்லை இதில்தான் எதிர்கால
    நம்பிக்கை அவசியம். மேற்குலகிலிருந்தும் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
    ஆரம்பத்தில் ஊழலுடன் வியாபாரம் ஆரம்பிப்பதை தடுக்க முடியாது என்பதே
    என் கருத்து. ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஒரு துறையில் கால்பதித்து,
    போட்டி போட்டுக் கொண்டு, வியாபாரம் செய்யும் போது, அரசின் இரும்புப்பிடி
    முற்றிலுமாக விடுபட்டவுடன், கிட்டத்தட்ட சரியான நிலையில் தனியார்
    வியாபாரம் நடக்கத்தொடங்கி விடும்.

    கட்டுமானத்துறையை எடுத்துக் கொள்ளுங்கள் (Real Estate). Newyorkலும்
    LosAngelsலும் Real Estate Mafia இருந்ததில்லையா?அவையெல்லாம் பழங்காலத்து
    வரலாறு. அவ்வளவுதான். இன்று வியாபாரம் சரியாக நடக்கிறது. இதற்கு சில
    தசாப்தங்கள் பிடிக்கத்தான் செய்தன. இந்தியாவிலும் சில தசாப்தங்கள் ஆகத்தான்
    செய்யும்.

    (2)சமூகத்தின் Mindset
    Aam Aadmi Party டில்லியில், மின்சார கட்டணம் ஏற்றப்படக்கூடாது என்று
    போராடுகிறது. பொதுமக்கள் மனநிலையும் கிட்டத்தட்ட இப்படித்தான் உள்ளது.
    மின்சார விலை ஏறக்கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை ஏறக்கூடாது.

    அடிப்படையில், மின்சாரக் கட்டணம் நிலக்கரியின் விலையை பொறுத்தே
    அமையும். நிலக்கரி சுரங்கத்தை அரசே நடத்தும் என்றால் உருப்படாது.
    தனியார் நடத்தினால், மின்சாரக் கட்டணம் உயரவே செய்யும். இதை ஏழை
    மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கூட புரிந்து கொள்ளாமல் பேசிக்
    கொண்டிருப்பதும் ஒரு முக்கிய காரணம்.

    எந்த ஒரு அரசும், மக்களின் ஓட்டிற்காக, மக்களின் அழுத்தத்திற்காக குறைந்த
    விலையில், சுரங்கத்தை தனியாருக்கு அளிக்கவே செய்யும். அதனால் ஊழல்
    அதிகமாக இருக்கவே செய்யும்.

    நான் இதை எழுதியதற்கு காரணம், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஊழல்
    செய்தார்கள் என்று கூறும்போதே, அதற்கான அடித்தளத்தை போட்டு
    கொடுத்ததில், மக்களும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நாம் நேர்மையாக
    ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

    (3) முட்டாள்தனத்தில் காமெடி
    கடந்த சில வருடங்களில் ஊழல்வாதிகளை கவனியுங்கள். “தப்பு செஞ்சாலும்
    தடயம் இல்லாமல் செய்யணும்” என்று ஒரு திரைப்படத்தில் வசனம் வரும்.
    பா.ஜ.கவை பொறுத்தவரை, கேமரா இல்லாமல் லஞ்சம் வாங்க மாட்டேன்
    என்று அடம் செய்பவர்கள் என்று துக்ளக் ஆசிரியர் கூறுவார். அவர்களையும்
    மிஞ்சிக்கொண்டு வருகிறார்கள் இன்றைய கோமாளிகள்.

    (அ)பவன் குமார் பன்சலின் உறவினர் கடந்த மாதத்தில் மட்டும் 234 முறை
    ரயில்வே துறையின் 12 உயர் அதிகாரிகளுடன் பேசியுள்ளார் என்று தெரிகிறது.
    பேச்சின் Record தேவையேயில்லை. இன்னார் பேசினார் என்பதே Conflict Of Interest.
    முகத்துக்கு நேராக பேச வேண்டியதை இந்த அச்சு-பிச்சு ஏன் இப்படி
    செய்தது என்று தெரியவில்லை?

    (அ)பவன் குமார் பன்சலின் CA, Canara Bankன் Directorஆக நியமனம்->25 கோடி
    கடன் பன்சலின் உறவினரின் கம்பெனிக்கு கொடுக்கப்படுகிறது-> 3 சதவிகித
    வட்டியில் அது பன்சலுக்கே அளிக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள்
    RTIக்குள் வந்தவுடன், யாராவது இப்படி செய்து மாட்டிக்கொள்வார்களா?

    (இ)ராசா பட்டப்பகலில் வரைமுறைகளை மாற்றி மாட்டிக்கொண்டார்

    இப்படி பல்வேறு உதாரணங்களை நாம் பார்த்து வருகிறோம். என்னுடைய
    கணிப்பு சரியாக இருந்தால், இனிவரும் ஊழல்வாதிகள் தடயம் இல்லாமல்
    ஊழல் புரிவார்கள் என்றே நம்புகிறேன்.

    நான் எழுதுவது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். என்னைப்பொறுத்தவரை,
    சிறிய அளவில் ஊழல் செய்து கொள்ளட்டும். ஆனால் பொருளாதார
    சீர்திருத்தம் நிறுத்தப்படக்கூடாது. வியாபாரம் தொடங்கியவுடன் ஊழல் குறைந்து
    விடும். அரசு அதிகாரிகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவரைதான்
    இந்த சித்து விளையாட்டு தொடர முடியும். எல்லா துறைகளும் தனியார் வசம்
    போய்விட்டால், இவ்வளவு பெரிய ஊழல்கள் வர வாய்ப்பே இருக்காது.

    எனக்கு ஒரே ஒரு குறைதான். சுரங்கத்தை கண்ட-கண்ட குப்பை
    கம்பெனிகளுக்கு தாரை வார்த்தார்கள். ஆனால் பெரும்பாலான கம்பெனிகள்
    நிலக்கரியை தோண்ட ஆரம்பிக்கவே இல்லை. மின்சார பிரச்சினை தீராதற்கு
    இதுவும் ஒரு முக்கிய காரணம்.

    கடைசியாக என் நான்காவது கருத்தாக, இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு
    கருத்தை கூற விரும்புகிறேன்.

    (4)எதிர்கால இந்தியா
    Centre-Right India என்ற இணைய தளத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு
    அருமையான கட்டுரை வந்தது.
    பின் லேடனைப்பற்றி துப்பு கொடுத்தால், ஒரு மில்லியன் அமேரிக்க டாலர்
    பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆஃப்கானிஸ்தானிலிருந்து ஒரு துப்பும்
    வர வில்லை. துப்பு கொடுத்தால், பல ஆடுகள் பரிசாக அளிக்கப்படும் என்று
    மாற்றி அறிவித்தார்கள். எக்கச்சக்கமாக துப்பு வந்தது.

    அதே போன்று, வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 10 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி-
    இந்தியா ஒளிர்கிறது என்றார்கள். வாஜ்பாயை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். 100
    நாள் வேலை என்றவுடன் 2009ல் ஓட்டு. தற்பொழுது அனைவர்க்கும் உணவு
    என்றால் மீண்டும் 2014லும் காங்கிரஸ் வெல்லலாம். கர்நாடகாவில் கில்லி
    மாதிரி வாக்காளர்கள் காங்கிரஸுக்கு பதவி அளித்துள்ளார்கள்.

    மக்களை, குறிப்பாக கிராமத்து மக்களை, நகரங்களில் வாழும் ஏழைகளை
    குற்றம் சுமத்தி எழுதப்பட்ட கட்டுரை அது.

    நான் இதைத்தாண்டி, 2ம் படியில், மக்களின் ஓட்டுகளைப் பெற, திரு.மோடி
    பொருளாதார காரணங்களைத்தாண்டி, சில விஷயங்கள் குறித்து பரப்ப
    வேண்டும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன்.

    தற்பொழுது, அதைத்தாண்டி, பட்டவர்த்தனமாக நான் எழுதுவது. நகர்ப்புற, படித்த,
    குறிப்பாக இளைஞர்களின் ஓட்டை வைத்துக் கொண்டு நாக்கைக்கூட
    வழித்துக்கொள்ள முடியாது. மற்றவர்களை கவர அவர்களை ஏமாற்ற வேண்டும்.
    அதாவது, இலவசங்கள் வழங்குவதாக சுற்றி விட வேண்டும் அல்லது
    பொருளாதாரமில்லாத, உணர்ச்சியை தூண்டும் விதமாக பேசியாக வேண்டும்.

    இல்லையென்றால், கர்நாடகாதான் அடுத்த இந்தியா. சோனியாஜி ஜிந்தாபாத்.

    நகர்ப்புற, படித்த மக்களின் ஓட்டு வெறும் 10 கோடியாக இருக்கலாம். மிச்சமுள்ள
    மக்களின் ஓட்டை வாங்க மற்றவர்களை ஏமாற்றித்தான் ஆக வேண்டும்.
    இந்த 10 கோடி பேரில் ஒரு பகுதியினரும், வெளிநாடுகளில் வாழும் சிலரும்
    சேர்ந்துதான், (என்னையும் சேர்த்து) மோடி-மோடி என்று
    முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

    நான் வாழும் தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராமத்தில், என்னையும் சேர்த்து,
    திரு.மோடியின் பெயரை அறிந்தவர்கள் 100 பேர் இருப்பார்கள். அதில் 10 பேர்
    ஓட்டளிப்போம். ஆனால் மீதமிருக்கும் 900 வாக்காளர்களை எப்படி ஈர்ப்பது?
    பொய்யை பரப்பாமல்?

    அனைத்து கிராம மக்களுக்கும், நகர்ப்புறத்தில் வாழும் ஏழைகளுக்கும்,
    செல்ஃபோன் இலவசமாக வழங்கப்படும் எனலாம். அல்லது பா.ஜ.கவிற்கு
    பிடித்தாற்போல், ஒரு பசு இலவசமாக வழங்கப்படும் எனலாம். இப்படி
    எதையாவது, உருப்படாத, ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மட்டுமே
    பா.ஜ.க தேர்தலை சந்தித்தால்தான் பிழைக்க முடியும். இல்லையென்றால், கடந்த
    சில வருடங்களாக, எழுதி எழுதி மாய்ந்து போனவர்கள் மேலும் 5 வருடங்கள்
    சோனியாஜியை எதிர்த்து எழுத வேண்டியிருக்கும்.

  3. திரு பாலாஜி யின் பார்வை மிக சரியானது . மேலும் சில யோசனைகள்
    .நமது தேர்தல் முறைகள் மாற்றி அமைக்க பட வேண்டும் . Percentage representation முறை வர வேண்டும். உதாரணமாக 4 கோடி வாக்களர் உள்ள ஒரு மாநிலத்தில் 2.5 கோடி வாக்கு பெற்ற ஒரு கட்சி 80% MLA உடன் ஆட்சி அமைக்கிறது . ஆனால் 1.5 கோடி வாகுகள் பெற்ற மற்ற கட்சிகள் வெறும் 20% MLA உடன் ஜன நாயகத்தை காப்பது இயலாது .இதுவே Percentage representation மூலம் 2.5 கோடி வாக்குகள் பெற்ற கட்சி சுமார் 60% MLA உடன் ஆட்சி செய்யும் இதர கட்சிகள் 40% MLA உடன் ஒரு ஆரோக்யமான ஜன நாயகம் நடக்கும். மற்றவர்களின் கருத்தை எதிர் நோக்கும் சௌந்தர்

  4. நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் ஐந்து சதவீத பங்குகளை விற்பதற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள திமுக , தமிழகத்தில் தங்கள் ஆட்சிக்காலத்தில் திருட்டுத்தனமாக தமிழக அரசின் டி என் பி எல் நிருவனப்பங்குகளை 15.68 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது. கபட நாடக தாரிகளான இந்த திருடர்களை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்., ஊருக்குத்தானடி உபதேசம் உனக்குமில்லை எனக்குமில்லை என்பதே இந்த திருடர்களின் வாழ்க்கை முறை.

  5. மேற்படி பங்குகள் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் , கருணாநிதியின் உதவியாளராக இருந்த ராஜமாணிக்கத்தின் சம்பந்தி மூர்த்தி ஐ ஏ எஸ் சின் மருமகனுக்கும் 15.68 சதவீத பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தனக்கு வேண்டியவர்களுக்கு பங்குகளை வாரி வழங்கிய கருணாநிதி கட்சியினர் , இப்போது யாரை ஏமாற்ற , பொதுத்துறை பங்குகளை விற்கக்கூடாது என்று தீர்மானம் போடுகின்றனர் ? காங்கிரஸ் கொள்ளையர்களுடன் திமுகவினர் கூட்டணி மீண்டும் ஆரம்பம். தமிழர்கள் ஜாக்கிரதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *