விதியே விதியே… [நாடகம்] – 4

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி.. 

காப்பகத்தில் குழந்தைகள் அனைவரும் சோகமாக உட்கார்ந்திருக்கிறார்கள். நடுவில் இருக்கும் தொட்டில் குளிர் காற்றில் லேசாக நடுங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு குழந்தை : அப்படிச் சொல்லிட்டாங்களா..?

ஆயா : அவங்க அப்படிச் சொல்லலைன்னாத்தான் ஆச்சரியம்.

குழந்தை (ஏக்கமாக) : அவங்க நினைச்சிருந்தா நிச்சயம் தடுத்திருக்க முடியும் இல்லையா..?

sri-lanka-genocide-tamil-civilian-interment-camp-vavuniya

ஆயா : முடியும்தான். ஆனா,  அவங்களுக்கு ஆதாயம் இல்லாத இடத்துல என்னதான் நடந்தாலும் கண்டுக்கவே மாட்டாங்க. இதே நேரம் இலங்கைல பெட்ரோலோ, வைரமோ, தங்கமோ கொட்டிக் கிடந்தா அதைக் கொள்ளையடிக்கறதுக்காக ஓடி வருவாங்க. நம்ம நாட்டுல அப்படி எதுவும் இல்லாம போச்சே. அதுவும் இல்லாம நம் ஊர்ல நடந்த சண்டையினால நமக்கு மட்டும்தான் பாதிப்பு இருந்துச்சு. அதனால, மத்த நாடுங்க இதைக் கண்டுக்கவே இல்லை.

குழந்தை : ஆனா, இந்தியா நிச்சயம் தன் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் இல்லையா…

இன்னொரு குழந்தை (ஆர்வத்துடன்) : அப்படி செஞ்ச தப்பை அவங்க ஒத்துக்கிட்டாங்கன்னா நமக்கு எல்லாமே கிடைச்சிடும் இல்லையா..?

குழந்தை : ஆமா… நாம நம்ம அப்பா அம்மா கிட்ட போயிடுவோம். நம்ம பொம்மைகளுக்கெல்லாம் கை கால்கள் முளைச்சிடும்.

குழந்தை : இந்த தடவை பூமிக்குப் போனதும் முதல் வேலையா உமி டப்பாக்குள்ள அடைச்சி வெச்சிட்டு வந்த பொன் வண்டையெல்லாம் எடுத்து பறக்க விட்டுடுவேன்.

இன்னொரு குழந்தை : நான் இனிமே தட்டானையெல்லாம் பிடிச்சு கல்லைத் தூக்கச் சொல்லி கஷ்டப்படுத்தமாட்டேன்.

ஆயா : சரி… நீங்க எப்ப பாக்கப் போறீங்க.

குழந்தை : நாளைக்கு அதிகாலைல எழுந்திரிச்சதும் பல் தேய்ச்சிக் குளிச்சிட்டு நேரா அங்கதான் போகப் போறோம்.

இன்னொரு குழந்தை : சீக்கிரம் நல்ல சேதியோட வாங்க.

ஆயா : எல்லாம் நல்லதே நடக்கும். எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காம நிம்மதியா படுத்துத் தூங்குங்க.

 

எதிர்க்காற்று காற்று பலமாக வீசுகிறது. மிகவும் சிரமப்பட்டு குழந்தைகள் தொட்டிலைத் தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். தூரத்தில் பரந்து விரிந்த பந்தல் ஒன்று தென்படுகிறது. அதில்  நிறைய பேர், கையில் கேமரா, மைக், காகிதங்கள்சகிதம்  உட்கார்ந்திருக்கிறார்கள். குழந்தைகள் அவர்களுக்கு அருகில் செல்கின்றன. ஒரு குழந்தை முன்னால் நிற்பவரிடம் கேட்கிறது.

குழந்தை : இந்தியப் பிரதமரை நாங்க பாக்கணும்.

முன்னால் நிற்பவர் : அதுக்குத்தான் நாங்களும் காத்துக்கிட்டிருக்கோம். நீங்க எங்க இருந்து வந்திருக்கீங்க?

குழந்தை : இலங்கைல இருந்து.

மு.நி. (லேசாகத் திடுக்கிட்டு) : இலங்கையா..? இங்க எதுக்கு வந்திருக்கீங்க..?

குழந்தை : இந்திய பிரதமர் கிட்ட சில கேள்விகள் கேட்கணும்.

மு.நி. : இந்தியால இருக்கறவங்களோட பிரச்னையைத் தீர்க்கவே இங்க வழியைக் காணும். இதுல நீங்க வேற பொறப்பட்டு வந்துட்டீங்களாக்கும்.

குழந்தை : எங்க பிரச்னைக்கெல்லாம் இந்தியாதான காரணம். அதனால நீதி கேட்டு இங்க வந்திருக்கோம்.

மு.நி. : ஆரம்பிச்சிட்டாங்கய்யா… ஆ ஊன்னா இந்தியாதான் காரணம்… இந்திக்காரன்தான் காரணம்னு சொல்றதே இந்தத் தமிழனுங்களுக்குப் பொழைப்பா போச்சுது. ஒரு இடத்துல ஒழுங்கா அமைதியா வாழத் தெரியாது. போற ஊர்ல எல்லாம் வம்பிழுக்க வேண்டியது. அப்பறம் அய்யோ அடிச்சிட்டான் அய்யோ குத்திட்டான்னு பொலம்ப வேண்டியது.

குழந்தைகள் : நாங்க தமிழர்கள்னு எப்படி நினைக்கறீங்க..?

மு.நி. (புருவத்தைச் சுருக்கிக் கூர்ந்து பார்த்தபடியே) : தமிழர் இல்லையா..? அப்ப நீங்க யாரு..?

குழந்தை : எங்கள்ல தமிழர்களுண்டு. ஆனா, நாங்க  எல்லாருமே தமிழர்கள் இல்லை.

மு.நி. : எதுவானாலும் இலங்கைல நடந்த சண்டைல அதிகம் பாதிக்கப்பட்டது அவங்கதான. அதனால அவங்கள்ள இருந்துதான் நீதிகேட்டு வந்திருக்கீங்களோன்னு நினைச்சுட்டுட்டோம். அதுவும்போக அவங்கதான் தப்பை எல்லாத்தையும் பண்ணிட்டு பழியை அடுத்தவங்க மேல போடுவாங்க.

இன்னொருவர் : இந்தத் தமிழங்களோட குணமே அதுதான். எங்க போனாலும் அடாவடி பண்றது. வம்புச் சண்டைக்குப் போறது. எவ்வளவு நாள்தான் ஒருத்தன் பொறுத்துக்கிட்டு இருப்பான். ஒரு நாள் ரவுண்டு கட்டி அடிச்சதும் அதைக் காரணமா காட்டி இன்னும் அதிகமா அடாவடி பண்ணறது. இதுதான் அவங்க பொழப்பே. இப்ப பாரு கர்நாடகால ஒரு ஆறு ஓடுது. அதுல இருந்து தண்ணியை அவங்க ஊருக்கு எடுத்துக்கிட்டா குத்தமாம். இவங்க கிட்ட கேட்டுத்தான் அணைக்கட்டோட உசரத்தை அதிகரிக்கணுமாம்.

கேரளால ஒரு ஆறு ஓடுது. அதோட அணை ஒண்ணு தமிழ் நாட்டுல இருக்கு. அதோட உசரத்தை இவனுங்க யாரையும் கேக்காம உசத்துவானுங்களாம். அணை பலம் குறைவா இருக்கு. இன்னும் உசத்திக் கட்டினா உடைஞ்சுபோயிடும். நெறைய பேரு சாக வேண்டிவருமேன்னு சொன்னா அதெல்லாம் தெரியாது. எங்களுக்கு தண்ணி வேணும் அப்படின்னு வம்பிழுக்கறான். உன் மாநிலத்துல ஜீவ நதி இல்லைன்னா என்ன செஞ்சிருக்கணும் ஆத்துப் பாசனம், குளத்துப் பாசனம், கிணத்துப் பாசனம்னு உருப்படியா செஞ்சு வெச்சிருக்கணும். முந்திக் காலத்துல அப்படித்தான் இருந்தாங்க. இப்ப அதுக்கு வக்கில்லை. அடுத்தவனை அட்டை மாதிரி உறிஞ்ச வேண்டியது. இலங்கைல சண்டை… மலேசியால சண்டை… இவ்வளவு ஏன் மும்பையில தாராவியில என்ன நடந்தது. மும்பை எவ்வளவு பெரிய வசதி வாய்ப்புகளைத் தரக்கூடிய சொர்க்கம். அங்க வந்தும் பன்னிக் கூட்டம் மாதிரி சேரில, சேத்துல விழுந்து பொறண்டு நாறடிக்க வேண்டியது. அடிச்சுத் தொரத்தாம வேற என்ன பண்ணுவாங்க.

முதலாமவர் : இதாவது பரவாயில்லை. இன்னொன்னு சொல்வானுங்களே… சட்டுனு ஞாபகம் வர மாட்டேங்குது.

இரண்டாமவர் : வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது.

முதலாமவர் : அது இல்லை… ஆனா அது மாதிரி இன்னொண்ணு… ஆ… ஞாபகம் வந்திருச்சு… திராவிடன்… இவனுங்கல்லாம் திராவிடனுங்களாம். ஆந்திரா, கர்நாடகா, கேரளாக்காரனெல்லாம் இவங்களோட ஒரே ரத்தமாம். நாம மட்டும் அந்நியராம்.

இரண்டாமவர் : இவங்களோட அந்தக் கதையைத்தான் மத்தவங்க யாரும் ஏத்துக்கலையே…

முதலாமவர் : அது என்னமோ சரிதான். ஆனா, ஆரியர் திராவிடர்ன்னு சொல்லி இவங்க பண்ணற அழும்பு இருக்கே… என்னமோ கைபர் கணவாய் வழியா ஆரியர்கள் ஆடு மாடு பத்திக்கிட்டு வந்தது மாதிரியும் இவங்க மரத்து மேல ஒளிஞ்சிருந்து பாத்த மாதிரியும் சொல்றானுங்க. கிறிஸ்தவர்களோட புனிதஸ்தலம் வாடிகன். அதனால வெளில இருந்து வந்தாங்கங்கறது நல்லாவே தெரியுது. இஸ்லாமியர்களோட புண்ணிய பூமி மெக்கா. அதனால அவங்களும் வெளில இருந்து வந்தவங்கங்கறது உறுதியாகுது. ஆனா, இந்தியால ஆரியர்கள்னு இவங்க சொல்றவங்களோட புண்ணிய பூமி எதுன்னு கேட்டா இந்தியாதான்னு அவங்க புராணங்கள் எல்லாம் சொல்லுது.

ஆரியர்கள்னு இவங்க சொல்றவங்க கும்படற எல்லா சாமியும் இந்தியாவுக்குள்ள தான இருக்குது. அப்பறம் எப்படி அவங்களை வெளில இருந்து வந்தவங்கன்னு சொல்ல முடியும். சரஸ்வதி நதி வத்திப் போனதுனால அங்க இருந்த மக்கள் எல்லாரும் தெக்க போயிட்டாங்கன்னு சொன்னா நம்ப மாட்டேங்கறாங்க. சரி இவங்களை தெக்க விரட்டினோம்னு சொல்றாங்களே அப்போ தெற்கில யாருமே இல்லாமலா இருந்தாங்க. அப்படி இருந்தங்கன்னா அவங்க எங்க போனாங்க..? அவங்களை இவங்க கொன்னு ஒரு துண்டு எலும்புகூடக் கிடைக்காம எரிச்சி சாம்பலாக்கிட்டானுங்களா..? என்னங்கடா கதை விடறீங்க..? ஒரு மண்ணோட மைந்தர்களை வந்தேறின்னு சொல்றது இருக்கே எவ்வளவு பெரிய புரட்டு தெரியுமா..? இத்தனைக்கும் எல்லாரும் சந்தோஷமா வாழலாம்னுதான் சொல்றோம். அது பொறுக்க மாட்டேங்குது. இலங்கைல போயும் அதைதான் சொல்லிப் பாத்தாங்க. எல்லாரும் நம்மளை மாதிரி வாயை மூடிக்கிட்டு இருப்பாங்களா..? பின்னிப் பெடலெடுத்துட்டானுங்க.

இரண்டாமவர் : சரியாத்தான் சொன்னீங்க. இப்ப மட்டும் தமிழ் நாட்டுல ஜெயலலிதா மேடமும் மத்தியில பி.ஜே.பி.யும் ஆட்சில இருந்திருந்து, இலங்கை சண்டைல சோனியா காங்கிரஸும் கருணாநிதி முன்னேற்றக்கழகமும் நடந்துக்கிட்டது மாதிரி பார்ட் டைம் உண்ணாவிரதம், ராஜினாமா நாடகம், அமைச்சர்களை அனுப்பறது அப்படின்னு அவங்க நடந்துக்கிட்டிருந்தா ஐய்யோ… ஆரிய சதி… பார்ப்பன சதின்னு சொல்லி தமிழ்நாட்டுல இருந்த அத்தனை பேரும் கடப்பாரை மண் வெட்டியைத் தூக்கிட்டு வந்து தமிழ் நாட்டை இந்தியால இருந்து துண்டா வெட்டி எடுத்துட்டுப் போயிருப்பானுங்க.

முதலாமவர் : அது என்னவோ சரிதான். ஆனா, இத்தனை பிரச்னை இலங்கைல நடந்த பிறகும் கருணாநிதி ஏன் சும்மாவே இருந்துட்டாரு. பதவிக்காக அப்படி இருந்தாருன்னு சொல்றதை நம்ப முடியலையே. ஏன்னா… இப்ப அமைதியா இருந்ததுனால இந்த முறை ஆட்சியை மட்டும்தான் காப்பாத்திக்க முடியும். அய்யோ கொல்றாங்க அய்யோ கொல்றாங்கன்னு வீதிக்கு வந்து போராடியிருந்தா தன்னோட அடுத்த ரெண்டு தலைமுறைக்கும் சேர்த்து தமிழ் நாட்டை ஆளற அதிகாரத்தை ஈஸியா தட்டிப் பறிச்சிருக்க முடியுமே… சின்ன மீனுக்கு ஆசைப்பட்டு பெரிய மீனை விட்டுட்டாரே… பொதுவா அப்படிச் செய்யக்கூடியவர் இல்லையே அவரு.

SL_tamil_TN_protestஇரண்டாமவர் : விஷயம் என்னன்னா… விடுதலைப் புலிகளுக்கும் இவருக்கும் ஆகாது.  வெளியில தமிழ் தமிழர்ன்னு இவர் சொன்னாலும் இவர் ஒண்ணுமே உருப்படியா பண்ணலைன்னு அவங்களுக்கு நல்லாத் தெரியும். அவங்க ஆரம்பத்துல இருந்தே எம்.ஜி.ஆர்.கூட நெருங்கின உறவு வெச்சிருந்தாங்க. அதுமட்டுமில்லாம வைகோ, நெடுமாறன்னு வேற ஆளுங்களுக்கு கொம்பு சீவிவிட்டாங்க. இவரும் அவங்களோட உள்ளடி வேலைகளைத் தெரிஞ்சிக்கிட்டு ஆரம்பத்துல இருந்தே புலிகளுக்கு எதிரான போராளிக் குழுக்களுக்கு ஆதரவு கொடுத்தாரு. விடுதலைப் புலிகளை ஒழிக்க திட்டம் போட்டாரு. அதே நேரம் தனக்கு தமிழின விரோதின்னு பேரு வந்துரக்கூடாதுங்கறதுக்காக அப்பப்ப கவிதை எழுதறது, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தறது, உண்ணாவிரதம் நடத்தறதுன்னு நல்லா ஃபிலிம் காட்டினாரு.

இன்னும் சரியா சொல்லப்போனா விடுதலை புலிகள் ஒழிஞ்சாத்தான் இலங்கைல இருக்கற தமிழர்களுக்கு நல்லது நடக்கும்னு அவருக்கு தெரிஞ்சு இருந்தது. கடைசி கட்ட போர் அப்படிங்கறது பிரபாகரனைச் சுத்தி வளைக்க நடந்த யுத்தம்தான். அவங்க சொன்ன மாதிரி அங்க ஒண்ணும் இனப்படுகொலையெல்லாம் நடக்கலை. வெறும் தீவிரவாத வேட்டைதான் நடந்ததுன்னு இவருக்கும் நல்லாத் தெரிஞ்சி இருந்தது. அதனால சைலண்ட்டா எதையும் கண்டுக்காம இருந்துட்டாரு.

முதலாமவர் : ஆனால், கடைசி யுத்தத்துல சிங்கள ராணுவம் ரொம்பவும் கொடூரமாத்தான் நடந்துக்கிட்டாங்க. மருத்துவனையெல்லாம் தாக்கறதுங்கறது எந்த  சூழ்நிலையிலயும் சரியே கிடையாது.

இரண்டாமவர் : அங்கதான் நீ தப்பு பண்ணற. மருத்துவமனைல குண்டு போட்டது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால், அதுக்குக் காரணமே விடுதலைப் புலிகள்தான். சதாம் ஹுசேன் கூட இதையேதான் பண்ணினாரு. அப்பாவி மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த மசூதில  அமெரிக்காக்காரன் தாக்குதல் நடத்திட்டாண்டோய்னு கூப்பாடு போட்டாங்க. விஷயம் என்னன்ன இவனுங்களே மசூதிக்கு உள்ள ஆயுதங்களையும் டாங்கிகளையும் ஒளிச்சு வெக்க வேண்டியது. மேல விமானத்துல ரேடார்ல பார்க்கும்போது அது ஏதோ ராணுவ மையம் மாதிரியே தெரியும். சுவிட்சைத் தட்டிடுவானுங்க. அதுதான் இங்கயும் நடந்துச்சு. மருத்துவமனைக்குள்ள கொண்டுபோய் ஆயுதங்களைப் பதுக்கி வெச்சுக்கிட வேண்டியது. அப்பறம் அய்யோ… ஆஸ்பத்திரிக்கு அடிபட்டு வந்த அப்பாவிங்களைக் கூட விட்டு வைக்கலியேன்னு பொலம்ப வேண்டியது. செஞ்சிலுவை சங்க ஆட்களே இவங்களோட அடாவடி தாங்க முடியாம எத்தனை தற்காலிக மருத்துவமனைகளை இடம் மாத்திக்கிட்டுப் போயிருக்காங்க தெரியுமா..?

பொணத்தைக் காட்டி பணத்தைக் கறக்கறதுல புலிகள் ரொம்பக் கில்லாடிங்க. இதனாலதான் சர்வதேச சமூகத்துக்கு இவங்க சொல்ற விஷயத்துல நம்பிக்கையே வரல்ல. சிங்கள ராணுவம் ரொம்ப நல்லவங்கன்னு நான் சொல்ல வரலை. ஆனா, இவங்க ஒட்ட வைக்கற அளவுக்கு கோரைப் பல்லும் கூர்மையான நகங்களும் கிடையாது.

முதலாமவர் : சேனல் 4ல் சிங்கள ராணுவ வீரர்கள் கண்ணையும் கையையும் கட்டி நிர்வாணமா உட்காரவெச்சு சுடறதை அப்படியே காட்டினாங்களே…

இரண்டாமவர் : அதைச் சொல்லத்தான் வந்தேன். நீயே யோசிச்சுப் பாரு. கொலை செய்யறவன் யாராவது போட்டோவுக்கு போஸ்கொடுத்துட்டு அதைச் செய்வானா? மொபைல் கேமரால எடுத்த படம்னு சொன்னாங்க. ஆனா, அவ்வளவு தெளிவா மொபைல் கேமராவால எடுக்கவே முடியாது. அது நல்ல வீடியோ கேமரா வெச்சு பிளான் பண்ணி எடுத்த சீன்தான்னு இன்ஜினியர்கள்லாம் தெளிவா சொல்லிட்டாங்க. அப்பறம் சிங்கள ராணுவ சீருடை போட்டுக்கிட்டு புலிகள் எத்தனையோ அட்டூழியங்களைப் பண்ணியிருக்காங்க. இன்னும் சொல்லப் போனா கொல்லப்பட்டது விடுதலைப் புலிகளா அல்லது அப்பாவி மக்களான்னு தெரியாது. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களைக் கொன்னுட்டு சிங்களர்கள்தான் கொன்னுட்டாங்கன்னு கதை கட்டியிருக்கலாம். அதனால அதையெல்லாம் ஒரு ஆதாரமா எடுத்துக்கவே முடியாது.

இப்ப புதுசா இன்னொன்னைச் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க பாத்தியா… அந்த பிரபாகரனோட பையன் சண்டைல சாகலையாம். சிங்கள ராணுவம் பிடிச்சி பக்கத்துல நின்னு சுட்டுக் கொன்னுடுச்சாம். போட்டோல்லாம் போட்டுக் காட்டியிருக்கானுங்க. ராணுவம் பிடிச்சிக் கொன்னிருந்தா இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுக்கல்லாம் விடிருப்பானா… கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அந்த போட்டோ எப்படி யாரால எடுக்கப்பட்டது.

அது உண்மையிலயே போய்யானது. புலிகளோட பங்கர்ல பாதுகாப்பா இருந்தப்போ அவங்களே எடுத்த போட்டோ அது. அப்பறம் சண்டையில செத்தப்ப எடுத்தபோட்டோவோட அதை அப்படியே சேத்துக்காட்டி ஊரையே எப்படி ஏமாத்திட்டான் பாருங்க. இவங்க டெக்னிக்கே அதுதான்.

கை கால் போனவங்களையும் பிணங்களையும் காட்டி நம்ம மனசாட்சியை உலுக்கோ உலுக்குன்னு உலுக்குவானுங்க. சில பிச்சைக்காரங்க, நம்ம கிட்ட கருணைய வரவழைக்கறதுக்காக சாட்டையால ஓங்கி ஓங்கி அடிச்சிக்கறமாதிரி பாவ்லா காட்டுவாங்களே அது மாதிரியான ஒரு டெக்னிக்தான் இது. உடம்பெல்லாம் குங்குமத்தை திட்டு திட்டா தீட்டிக்கிட்டு ரத்தம் மாதிரி ஷோ காட்டுவானுங்க. ஒரு சாட்டை அடி கூட மேல படாது. பாக்கற நமக்குத்தான் உடம்பு வலிக்கும். புலிகள்  இதைக் கொஞ்சம் வித்தியாசமா செய்வாங்க. தன்னோட ஆட்களைத் தானே கொன்னுட்டு அதைப் படம் எடுத்து ஊர் ஊராக் காட்டுவாங்க. இந்த டெக்னிக் எல்லாம் இன்னர் சர்க்கிள்ல இருக்கறவங்களுக்கு நல்லாவே தெரியும். குறிப்பா கருணாநிதி அன்கோவுக்கு நல்லாத் தெரியும். அதனால அமைதியா இருந்துட்டாங்க.

SL_tamil_children_killedஎல்லாம் முடிஞ்ச பிறகு இவரோட மந்திரிங்க கூட போய் அங்க இருக்கற நல வாழ்வு முகாம்களைப் பார்த்துட்டு எல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு சொல்லிட்டாங்க. ஒரு அறிக்கை விட்டாரு பாத்தீங்கள்ல… பிரபாகரன் தேர்தல்ல தமிழ் மக்களை வாக்களிக்கவிட்டிருந்தா  பிரச்னை அழகா தீந்திருக்கும். எல்லாத்தையும் கெடுத்துட்டாரு. என்னோட மவுன வலி யாருக்கும் புரியலை அப்படின்னு சொல்லிட்டாருல்ல. அதுதான் உண்மை. விடுதலைப் புலிகள் இவரை மதிக்கலைங்கறதுனால இந்த உண்மையை வெளிப்படையா சொல்லியிருக்காரு. இல்லைன்னா கூட்டுச் சேர்ந்து இவரும் கும்மி அடிச்சிருப்பாருங்கறது வேற விஷயம்.

முதலாமவர் : இப்ப பாருங்க…9 வருஷம் ஆட்சில ஒட்டிக்கிட்டு நல்லா கொள்ளையடிச்சாங்க. அடுத்த தேர்தல்ல ஆளுங்கட்சி மேல எதிர்ப்பு அலை வீசும். காங்கிரஸ் ஜெயிக்கவே முடியாதுன்னு தெரிஞ்சிடிச்சு. அதனால, சாமர்த்தியமா கூட்டணியில இருந்து விலகிட்டாங்க. தமிழருக்காக பதவியைத் தூக்கி எறிஞ்சதா சீன்வேற.

இந்திய அரசு சொன்னவற்றை நம்பி நாங்க அமைதியா இருந்துட்டோம். இந்தியா எங்களை ஏமாத்திருச்சு. துரோகம் பண்ணிடுச்சுன்னு பழைய பல்லவியைப் பாடினாலும் ஆச்சரியமில்லை. ஜெயின் கமிஷன் முன்னால இலங்கை தமிழர் இயக்கங்களுக்கு நடுவில நடந்த சண்டைக்கெல்லாம் இந்திய ரா உளவுப் பிரிவுதான் காரணம்னு ஒரு பிட்டைப் போட்டவருதான் இவரு.

உளவுத்துறை பிரிவினையை உண்டாக்கிருச்சாம். உங்களுக்கு அறிவு எங்க போச்சு. உங்ககிட்ட ஒத்துமை இல்லை. அதனால ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிகிட்டு செத்தீங்க. அதைவிட்டுட்டு அவன் சொன்னதைக் கேட்டு அடிச்சிட்டேன். இவன் சொன்னதைக் கேட்டு அடங்கியிருந்துட்டேன்னு பழியைத் தூக்கி அடுத்தவன் மேல போடறது இருக்கே ரொம்பவும் கேவலமானது. அபாயகரமானது.

இப்ப பாருங்க, இலங்கைல நடந்தது போர்க்குற்றம் மட்டும் இல்லையாம். இனப்படுகொலையாம். எப்படியிருக்கு கதை?  புலிகளோட கட்டுப்பாட்டுக்குள்ள இருந்த இடத்துல எவ்வளவு தமிழர்கள் இருந்தாங்களோ அதைவிட அதிக தமிழர்கள் சிங்களர்கள் மத்தியில இருக்காங்க. அவங்களையெல்லாம் யாரும் கொல்லலை. அப்பறம் எப்படி இனப்படுகொலைன்னு சொல்ல முடியும்?

இரண்டாமவர்: அது மட்டுமா… தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்லுதாம். இதை இந்தியா தட்டிக் கேக்கலைன்னா தனியா பிரிஞ்சு போயிடுவானுங்களாம். மனசுல என்ன நினைச்சிட்டிருக்கானுங்க. ஒரு கூட்டமைப்புல இருக்கும்போது ஏதாவது மனஸ்தாபம் இருந்தா பேசித்தான் தீர்க்கப் பார்க்கணும். பிரிஞ்சு போறதுங்றது என்னிக்குமே யாருக்குமே நல்லதில்லை.

தமிழர்கள்  இந்தியர்களா இல்லையான்னு பெரிசா கேள்விவேற? சரி… தலித்களை தமிழ் நாடு அரசு கொல்லுது. தலித்கள் தமிழர்கள் இல்லையான்னு கேட்கவேண்டியதுதான? தமிழ் நாடும் வேண்டாம்… நாங்க தமிழர்கள் இல்லைன்னு சொல்லி கோஷம் போடவேண்டியதுதான?  என்னமோ இவனுங்களுக்கு மட்டும்தான் பேசத் தெரியும்ங்கற மாதிரி ரொம்பத்தான் துள்ளறானுங்க.

ஒரு கட்சி தப்பு செஞ்சா அந்த அரசாங்கத்தை தண்டிக்கலாம். மக்களாட்சியில அதற்கான எல்லா வழியும் இருக்கும். அப்படித்தான் அது நடக்கவும் வேண்டும். தேசங்கறது அந்த கட்சி மட்டுமே இல்லையே. அமெரிக்கால புஷ் ஏதாவது தப்பு பண்ணினா அந்த மக்கள் புஷ்ஷை மட்டும்தான் விமர்சிப்பாங்க. ஒபாமா தப்பு பண்ணினா ஒபாமாவோட அரசாங்கத்தைத்தான் விமர்சிப்பாங்க. அமெரிக்கா ஒழிகன்னு யாரும் கூப்பாடு போடமாட்டாங்க. அதுதான் சரியான வழி. ஆனா இங்க மட்டும்தான் எதுக்கெடுத்தாலும் இந்தியா ஒழிக… இந்திய கலாசாரம் ஒழிகன்னு கோஷம் போட ஆரம்பிச்சிடுவானுங்க.

டெல்லியில ஒரு பொண்ணை நாலு பேர் கெடுத்துட்டானுங்களாம். உடனே இந்த இந்திய கலாசாரமே இப்படித்தான்… இது ஒழியணும்னு கூப்பாடு போடறானுங்க. தமிழ் நாட்டுலயும் எத்தனையோ சம்பவங்கள் இது மாதிரி நடக்குது. எவனாவது தமிழ் இனமே இப்படித்தான். தமிழர்கள் எல்லாருமே அயோக்கியர்கள்னு சொன்னா எப்படி இருக்கும்?

ஒரு நாட்டுல ராமரும் ராவணனும் இருந்தாலும் ராமன் தான் கலாசார அடையாளம்.  ராவணன் இல்லை. ஒரு மரத்தை அதன் கனிகளை வைத்து எடைபோடவேண்டும். அதில் வளரும் ஒட்டுண்ணிகளையும் பூச்சிகளையும் வைத்து அல்ல. அதன் பொந்துகளில் ஒளிந்து கிடக்கும் பாம்புகளை வைத்து அல்ல.  அந்தப் பாம்புகளை அழிக்கவேண்டுமானால் அவற்றைத்தான் அடிக்க வேண்டுமே தவிர மரத்தை வெட்டி வீழ்த்தக்கூடாது. அதுவும்போக, ஒரு நாட்டோட அடையாளங்கறது அந்த நாட்டுல பெரும்பான்மையா இருக்கறவங்க செய்யற செயலை வைத்துத்தான் மதிப்பிடப்படவேண்டும்.

அப்போதும்கூட தவறான தலைவன் கீழ இருக்கும்போது அவங்க தப்பு செய்துவிடக்கூடும். அதைவெச்சு அவங்க எப்பவுமே அப்படித்தான்னும் முடிவுகட்டவும் கூடாது. ஹிட்லர் இருந்தபோது ஒட்டு மொத்த ஜெர்மனியும் வெறி பிடிச்சதாகத்தான் இருந்தது. ஆனால், அந்த அரக்கன் ஒழிஞ்சதும் மக்கள் அந்த இனவெறி மயக்கத்தில் இருந்து வெளிய வந்துட்டாங்க இல்ல. ஜெர்மனியர்கள் எல்லாருமே எப்போதுமே அயோக்கியர்கள்னு சொல்லி ஒதுக்கிடமுடியுமா?  அப்படியிருக்கும்போது ஒரு இந்திய கட்சி செய்த தப்புக்காக இவங்க தேசத்தையே உடைச்சிடுவானுங்களாம்.

ஆனா, ஒரு விஷயத்தை ஒத்துக்கணும்… எல்லாம் நல்லா பிளான் பண்ணி செய்யறதுல கில்லாடிங்க. வெள்ளைக் கொடியை ஏந்திக்கிட்டு அமைதி அமைதின்னு இவனுங்க சொல்லிக்கிட்டு வந்தாங்களாம். சிங்கள ராணுவம் சுட்டுப் போட்டுச்சாம். அதுக்கு முன்னால இவனுங்க ஆயிரக்கணக்குல கொன்னதும் விரட்டி அடிச்சதும் ஒண்ணுமே இல்லைன்னு ஆயிருச்சுல்ல. வெள்ளைக் கொடி ஏந்திட்டு, நம்பி வந்தோம். கொன்னுபோட்டாங்கன்னு கூப்பாடு.  இவனுங்க துரோகின்னு நினைச்ச ஒருத்தனைக் கொன்னபோது அவருக்குக் கீழ இருந்த எத்தனை சின்ன வயசு போராளிகளை துள்ளத் துடிக்கக் கொன்னானுங்க. ஆனா, பிஸ்கட் சாப்பிடற அப்பாவிப் பையனைக் கொன்னுட்டாங்க… என்ன அநியாயம் பாருன்னு டிராமா…   உட்கார்ந்து நல்லா யோசிப்பாய்ங்க போலயிருக்கு. போங்க… போயி வேற வேலை இருந்தா பாருங்க.

குழந்தை : நூத்துக்கணக்குல ஆயிரக்கணக்குல நாங்க கொல்லப்பட்டது எல்லாமே வெறும் நாடகம்தானா..? எங்களோட அழுகைக்குரல் எல்லாம் வெறும் நடிப்புதானா உங்களுக்கு..? குரங்கு கிழித்தெறிந்த பஞ்சுத் தலையணையாக எம் இனம் உலகெங்கும் அலைய நேர்ந்தது எல்லாம் வெறும் வேஷமா..? (குழந்தையின் குரல் உடைகிறது)

இன்னொரு குழந்தை : வா… இவங்க கிட்டப் பேசிப் பலனில்லை. நாம திரும்பிப் போகலாம்.

மூன்றாவது குழந்தை : வேண்டாம். இருந்து பிரதமரைப் பாத்துட்டுப் போயிடுவோம்.

குழந்தை : இவங்க பேசினதைக் கேட்டல்ல… இவங்க வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கற ஆளு வேற எப்படி இருக்கப்போறாரு..?

குழந்தைகள் சோகமாகத் திரும்பிச் செல்கின்றன. உப்பரிகையில் நின்றபடி அதைப் பார்க்கும் பிரதமர், தன் உதவியாளரை அனுப்பி அவர்களை அழைத்து வரச் சொல்கிறார். குழந்தைகள் வேண்டா வெறுப்பாக அவரைப் பார்க்கச் செல்கின்றன.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *