Payday loans
முகப்பு » சூழலியல், புத்தகம், பொருளாதாரம்

பசுமைப் புரட்சியின் கதை


சமீபத்தில் எழுத்தாளர் கி.ராஜ்நாராயண்  அவர்களுடன்  பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் அவரது கிராமத்தில் வாழ்ந்த ’மண்ணு திண்ணி ”நாயக்கர்  என்பவரது  சிறப்பியல்புகளை சொன்னார். ஒரு சிட்டிகை  மணலை அள்ளி வாயில் போட்டு சுவைத்து  அந்நிலத்தில்  என்ன வகையான  பயிரிடலாம்  என்பதை  அந்த நாயக்கர்  சொல்லிவிடுவார்  என்றார். கேட்க  ஆச்சர்யமாக  இருந்தது.  நான்  விவசாயப்  பாரம்பரியத்தில்  வந்தவனல்ல.   சமீபத்தில்  எனது  நண்பர் பேரம் பேசி  சாலையோரம்  வெள்ளரிக்காய்  வாங்கினார் . ஒரு  கடி கடித்து  சுவைத்தார்  உடனடியாக ”அம்மா  இது காரைக்காட்டு [எங்களூர் கிராமம் ஒன்று] பிஞ்சு, வடலூர்ப் பிஞ்சுன்னா  உன்  விலை  சரி, இன்னும் ரெண்டு போடு” என்று  வாங்கிக் கொண்டார். அந்த நண்பர்  விவசாயி  மகன்.   அக் கணம்  நான்  அந்த  நண்பர் மீது  பொறாமைப் பட்டேன். ஒரே ஒரு கடி –   அதன் வழியே அக்காய் விளைந்த மண், அதன் பின்புலமான இயற்கை, மற்றும் விவசாய அமைப்பு, அதன் பகுதியான மனிதர்களின் உழைப்பு வியர்வை, அனைத்தையும் ருசிக்கும் அந்தப் பேரனுபவம், எல்லா மனிதர்களுக்கும் சாத்தியப்படாதது. மண்ணுக்கும்  மனிதனுக்குமான தொடர்பு  வெறும்  ஏட்டறிவில்  தேங்கிவிடுவது  எத்தனை பெரிய இழப்பு?

Agriculture

இன்றைய  நகர்ப்புறக்  குழந்தைகளுக்கு  பெரும்பாலும்  அரிசி  கடையில்  கிடைக்கும் பொருள் என்பதைத் தாண்டி  விவசாயம்  என்பதைப்பற்றி  அறியாதவர்களாகவே  இருக்கிறார்கள்.  நான் பிறந்த 77 இந்தியாவில்  பசுமை ப்புரட்சி  அதன்  உச்சத்தில்  இருந்த ஆண்டு  என்று வாசித்திருக்கிறேன். விவசாயத்தின் எழுச்சி  வீழ்ச்சிகள் மீது  பிறரைப் போலவே  என் கவனமும்  நிலைக்காதபோது  ஒரு  சம்பவம்  என்னை  தற்கால  விவசாய  நிலை பற்றி  நிலை கொள்ளாதவாறு  செய்தது.

பலமாதங்களுக்கு முன்  ஒரு  மாலை, நீர்வரத்து குறைந்த, ஆட்கள் நடமாட்டமே அற்ற  கோமுகி  அணையில் நின்று, அணையும்  அந்திச் சூரியனை  பார்த்துக் கொண்டிருந்தேன். சூரியன் அடங்கிய தொடுவானத்தில்  மொட்டு விட்டது  ஒரு செஞ்சுடர். இருள்கவிய  தீயின் விஸ்தீரணம்  புரிபட, காவலாளியை  விளித்து  அது பற்றி  கேட்டேன் .  அவர்  ”தம்பி  அது எல்லாம்  ஆலைக் கரும்பு. தண்ணி  அதிகம் குடிக்கும். அதனால  இப்படி  அணை ஓரம்  இருக்கும் நிலக்காரர்கள் இதை பயிர்  பண்றாங்க. கரும்பு  விளைச்சல்  அமோகம்.  பல  காரணத்துல ஒரு  முக்கியமான காரணம் 100 நாள்வேலைத்  திட்டத்தால அறுவடைக்கு  ஆள் வரல, கரும்பெல்லாம்  தக்க வாங்கிருச்சி  [எடை இழந்து ,சாரம் இழந்து]  வேற வழி கிடையாது, உடயவங்களே  வயலைக் கொளுத்துறாங்க ” என்றார். இனிக்கும் கரும்பு, கரும்புகை, கரிக்கும் கண்ணீர்  என ஏதேதோ சித்திரங்கள்  மனதில் விழுந்தது.  நமது பாரத விவசாய போக்கின் ஒரு கண்ணி இது. இதன்  வேறுவடிவம்  விதர்ப்பாவில்  அரங்கேறியவை.  இன்றைய வேளாண்மையின்  இடர்களும் சவால்களுமே  இந்தியாவின்  தலையாய பிரச்சனைகளில் முதன்மையானதாகப் படுகிறது.

சங்கீதா ஸ்ரீராம்: வேளாண் அறிஞர், பசுமை செயல்வீரர்

சங்கீதா ஸ்ரீராம்: வேளாண் அறிஞர், பசுமை செயல்வீரர்

நமது  வேளாண்மை வரலாற்றின் அனைத்துக் கூறுகள் மீதும், நேற்று இன்று நாளை என அது எதிர்கொண்டு  முன்னகர வேண்டிய  சவால்கள் மீதும்  கவனம் குவித்து, இன்றைய  தலைமுறை, நமது விவசாயப்  பாரம்பரியம்  குறித்து  தம்மைத் தொகுத்துக்கொள்ளவும் உதவக் கூடிய திறன் வாயந்த  அடிப்படை நூலாக  வந்திருக்கிறது சங்கீதா ஸ்ரீராம்  அவர்கள் எழுதிய பசுமைப் புரட்சியின் கதை.

நூலின் முதல் பகுதியைப் படிக்கையில் ஜெயமோகன் பலமுறை தனது பல கட்டுரைகள் வழியாக ஆவணப் படுத்தியிருக்கும் 18,19ம் நூற்றாண்டின் கொடும் பஞ்சங்கள் பற்றிய விவரணங்கள் நினைவில் மேலெழுந்து வந்து கொண்டிருந்தன. ஆங்கில நிர்வாகத்தின்  மோசமான  வரி  முறைகளால் உருவான  செயற்கைப்பஞ்சங்களை  முதலாகக் கொண்டு நூல் துவங்குகிறது. 1800 முதல் 1900 வரை  சுமார் 35 பஞ்சங்களில் பலகோடி  இந்தியர்கள் பலியாகிறார்கள். 1877 பஞ்சத்தின்போது  சென்னை மாகாணத்தில் மழை அளவு 66 செ மீ. [அங்கு சராசரி அளவு 55 செ மீ].  வங்கத்தில்  பஞ்சம்  அதன் உச்சத்தில்  இருக்கும்போது 80000 டன் தானியம்  பிரிட்டனுக்கு அள்ளிச்செல்கிறது  ஆங்கில  நிர்வாகம்.   நிர்வாகத்தின்  அனைத்து சுரண்டல்களையும்  வில்லியம் டிக்பே  எனும்  ஆங்கிலேயரே  ஆவணப்படுத்தி உள்ளார்.

மொகலாயர் காலம் துவங்கி, வெள்ளையர் காலம்  வழியாக   நிலம் உழைப்பவர் வசமிருந்து, விவசாயிகள்  கையில் இருந்து  வியாபாரிகள்  கைக்கு, வரிவிதித்தல் எனும் சுரண்டல்  வழியாக  கை மாறுவதை  அடுத்தபகுதி  விவரிக்கிறது. ஜமீன்தாரி, ரயத்வாரி  என  விதவிதமான  நிலமானிய முறைகள் வாயிலாக, அந்நிலத்திர்க்குரிய மக்கள் அந்நிலத்திற்கு  அன்னியமாகிரார்கள். பணப் பயிரை நோக்கிய ஆளும் அரசின்  நகர்வு பாரம்பரிய  விவசாய முறைகளுடனான, இயற்கை உடனான  நமது விவசாயத்தின்  உறவைக்  குலைக்கிறது. 1) ஒரே நேரத்தில் பலவகைப் பயிர்களை சேர்த்துப் பயிர் செய்தல், 2) மண் வளம் பேணுதல் 3) கால்நடை மற்றும் இயற்கை உரம் 4) சூழலுக்குகந்த,மண்வாகுக்கு உகந்த பயிர்கள் – என நான்கு  அடிப்படைகளைக் கொண்ட  நமது  பாரம்பரிய விவசாய முறையும், நீராதாரங்களும், அதன் பங்கீட்டு முறையும்,  பணப்பயிர்  எனும் இலக்கு மொத்தமாக குலைத்துப் போடுகிறது. 1907 இல்  மொத்த இந்தியாவில் 7 லட்சம் ஏக்கர், அபினி  விளையும் களமாக மாறிப்போகிறது. தேயிலையும்,  தைல மரமும், புகைவண்டி வருகையும், பெருமளவு  கானகத்தின் அழிவுக்கு காரணிகள்  ஆகின்றன. ரசாயனம்  அறிமுகம் ஆகும்வரை அவுரிக் களங்களில்  மாய்ந்தோர் பலர். இந்திய விவசாயம்  மனிதர்களின் இரைப்பையை  மறந்து ஆலைகளின்  வாய்களை  நோக்கிப் பயணித்தது .

பகுத்தறியும்  அறிவியலின் விளைவுகளை  உரசிப்பார்க்கும்  சோதனைச் சாலையாக  இந்திய விவசாயம்  மாற்றப் படுகிறது. பயிர்கள் வளர நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்  எனும்  அடிப்படை ரசாயனங்கள் போதும் என்பதைக் கண்டறிகிறார் , வான் லீபிக் .  மண்ணுக்குள்  பயிருக்கு தேவையான  அமைப்பில் நைட்ரஜனைப் பிரித்துத்தரும் உயிர்ச் சூழல்  அமைப்பு  அவரது கவனத்திற்கு வரவில்லை.  ரசாயனங்கள்  கண்டடையப் பட்டு,  இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கின்றன. உலகப் போருக்கு  கண்டடையப் பட்ட  ரசாயனம் அம்மோனியா. உரமாக மாறி இங்கு வந்து குவிகிறது. ஓரினப் பயிரும், கைவிடப்பட்ட பயிர் சுழற்சி  முறையும், கால்நடைகளுக்கான  தீவனப் பற்றாக்குறையும்,  கன ரக உழவு முறைகளின்  தாக்கமும்  எவ்வாறு  நமது  விவசாயத்தை மொத்தமாக சீர்குலைத்ததென்று நூல் பல்வேறு தரவுகள் வழியே சொல்லிச் செல்கிறது .

pasumai-puratchiyin-kathai-book-coverசுதந்திர  இந்தியாவில் நமது வேளாண்மை  சந்தித்த இடர்களையும், அதன் பலனான உணவுப் பற்றாக்குறையும், அமரிக்காவின்  உதவி  பற்றியும்  செறிவான தகவல்களுடன், அமரிக்காவின் pl 480 திட்டமும், அதன்  விஷக் கரங்களுக்குள்  சிக்கிய  இந்தியப் பொருளாதாரமும், அதன் விளைவுகளையும் பல்வேறு  ஆவணங்கள்  கொண்டு நூல் விளக்குகிறது.  ஐந்தாண்டுத் திட்டத்தின் வழியே  பசுமைப் புரட்சிக்குள்  அடி எடுத்துவைத்த இந்தியா, இன்றுவரை  கேன்சர் முதல் மரபணுவிதை வரை  மீளஇயலாமல்  சிக்கிக்கொண்ட விஷச் சுழலை  பக்கச் சாய்வற்று  நூல் சொல்லிச் செல்கிறது.  இன்றைய  வேளாண்  நெருக்கடிகளையும்,  இயற்கை வேளாண்மை நோக்கி  நாம் திரும்பவேண்டிய  அவசசியத்தையும், இன்றைய  தேதியில்  இயற்கை வேளான்மை  என்பதன் மேலுள்ள  ஆதாரமற்ற பயத்தையும், இன்றும்  நமக்கு  எஞ்சி உள்ள சாத்தியங்களையும்,  இதற்காக  குரல் தந்த  அனைத்து ஆளுமைகளையும், நூல் செறிவாக  முன்வைக்கிறது.

நூலின் சில பகுதிகளை  கண் கலங்காமல், குரல்வளை அடைக்காமல் கடக்கமுடியாது. வான் லீபிக்  தனது  சோதனை  தோல்வி கண்டதை, இயற்கையின் ஒத்திசைவை  அறியாமல், அதன் விடுபட்ட கண்ணிகளில் ஒன்றினை  தான் கண்டடைந்துவிட்டதாக பரவசப்பட்டு, நிலத்தை அழிவுக்கு இட்டுச்சென்ற  தனது பேதமையை மனம் வருந்தி அவர் ஒப்புக்கொள்ளும் இடம் நூலின் சிறந்த இடங்களில் ஒன்று.   ஆம், ஒரு புனைவு தரும்  அறச் சீற்றம், அக எழுச்சி  இரண்டையுமே  அளிக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுதி.

ஆசிரியர் சங்கீதா ஸ்ரீராம்  வணக்கத்திற்குரியவர்.  இந்த நூலின்  சாரத்திற்கு  வளம் சேர்க்கும் வண்ணம்செறிவான  முன்னுரை நல்கி இருக்கிறார் பாகுலேயன் பிள்ளை  எனும் விவசாயப் பிரியரின்  புதல்வர்  எழுத்தாளர்  ஜெயமோகன் .

பசுமைப் புரட்சியின் கதை
சங்கீதா ஸ்ரீராம்
பக்கங்கள்: 319
விலை: ரூ 200
காலச்சுவடு பதிப்பகம்

ஆன்லைன் மூலம் இங்கே வாங்கலாம்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

 

3 மறுமொழிகள் பசுமைப் புரட்சியின் கதை

 1. ஸ்ரீ கடலூர் சீனு அவர்களின் புத்தக மதிப்புரையைப் படித்தேன். உடனே ஸ்ரீ சங்கீதா ஸ்ரீ ராம் அவர்களின் பசுமைப்புரட்சியின் கதை நூலை இணையத்தில் வாங்கப்பணமும் செலுத்திவிட்டேன். உடனே இணையத்திலேயே ஸ்ரீ ஜெயமோகன் அவர்களின் முன்னுரையையும் வாசித்தேன். பசுமைப்புரட்சி தொழில் நுட்பம் நம் பாரம்பரியவிவசாயத்தின் மீதான அன்னிய ஆதிக்கம் என்பதும் அதனால் நமக்கு விவசாயிகளாகவும் சரி நுகர்வோராகவும் சரி அதீத தீங்குகளே விளைந்துள்ளன என்பது தெளிவு. நமது பாரதப்பாரம்பரியம் என்பது நம்முடைய வேளாண்மையும் மருத்துவமும் கூடத்தான் என்பதை ஹிந்துத்துவர்கள் முழுமையாக உணரவேண்டும். இயற்கைவேளாண்மை, யோகா, சித்த ஆயுர்வேத இயற்கை மருத்துவ முறைகளை பேணுவதில் தங்களை அர்பணித்துக்கொள்ளல் வேண்டும்.

 2. கண்ணன் on June 21, 2013 at 3:39 pm

  ஆழமான, நல்ல தகவல்கள், தரவுகள் அடங்கிய புத்தகம்; விவசாய அனுபவமோ, அது தொடர்பான பின்னணி எதுவுமில்லாத எழுத்தாளர் ஒருவரால் சுய ஆர்வத்தில், முயற்சியில், உழைப்பில் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட ஒரு அருமையான புத்தகம்.

 3. madhavaraman on June 22, 2015 at 6:41 am

  அப்பப்பா பசுமை புரட்சியின் கதையில் இத்தனை அம்சங்களா? மலைத்துபோனேன்.ஆசிரியர் சங்கீதா ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  ஆர்.மாதவராமன்
  31/14 தெற்கு மாடத் தெரு
  கிருஷ்ணகிரி 635001

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.