விதியே விதியே… [நாடகம்] – 5

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

குழந்தைகள் சோகமாகத் திரும்பிச் செல்கின்றன. உப்பரிகையில் நின்றபடி அதைப் பார்க்கும் பிரதமர், தன் உதவியாளரை அனுப்பி அவர்களை அழைத்து வரச் சொல்கிறார். குழந்தைகள் வேண்டா வெறுப்பாக அவரைப் பார்க்கச் செல்கின்றன.

பிரதமர் : என்ன… குழந்தைகளே… வரிசைல நின்னீங்க… அப்பறம் திரும்பிப் போயிட்டீங்க. பொதுவா நான் கேட்டதுக்கு அப்பறம்தான் குறை தீரும். இந்தத் தடவை கேட்கறதுக்கு முன்னாலயே தீர்ந்துடுச்சா உங்க குறை..?

குழந்தை : இலங்கையைச் சேர்ந்த நாங்க நீதி கேட்டு வந்தோம். அது கிடைக்குங்கற நம்பிக்கை போயிடிச்சு. அதுதான் திரும்பிட்டோம்.

பிரதமர் : அப்படி மனசத் தளரவிடக்கூடாது. மெல்ல முடியாத கசப்பு மாத்திரை என்று எதுவுமே கிடையாது. செல்ல முடியாத யாத்திரை என்று எதுவுமே கிடையாது. கொஞ்சம் பொறுமை… கொஞ்சம் விவேகம். கொஞ்சம் அனுசரித்துப் போகும் குணம். இது இருந்தா போதும்.

குழந்தை : இலங்கைல நடக்கற பிரச்னைகளுக்கு இந்தியாதான் காரணம்… இந்தியா நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை எப்பவோ தீர்த்திருக்க முடியும். அதை ஏன் செய்யலைன்னு கேட்டுட்டுப் போக வந்தோம். ஊடகக்காரங்க கிட்ட இருந்து நிறையவே கேட்டுட்டோம். அதான் திரும்பிப் போறோம்.

பிரதமர் : அவங்க கிட்ட என்ன கேட்டீங்க. அவங்க சொல்றது எப்பவுமே சரியா இருக்காதும்மா… வாங்க நாம நிதானமா பேசலாம்.

குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்கிறார். ஒரு மேஜை முன் அமர்ந்துகொண்டு குழந்தைகளையும் அமரச் சொல்கிறார். சிறிது நேரத்தில் சீருடை அணிந்த ஒருவர் தேநீர் கொண்டு வந்து அனைவருக்கும் தருகிறார். குழந்தைகள் அதை எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

பிரதமர் (தேநீர் அருந்தியபடியே…) : இலங்கை இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்னையை சரியா கையாளலை. இந்தியாவையே எடுத்துக்கோங்களேன். அதுல 29 மாநிலங்கள் இருக்கு. அதாவது 29 இலங்கைகள் இருக்கு. இன்னும் சரியாச் சொல்லணும்னா 29 ஈழங்கள் இருக்கு. எத்தனை மொழி… எத்தனை மதம்… எத்தனை இனம்… எத்தனை சாதிகள்… எல்லாமே எப்படா பிரிஞ்சு போகலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனாலும் இதை நாங்க எவ்வளவு அழகா கட்டிக் காத்துக்கிட்டு வர்றோம் பாத்தியா…

குழந்தை : இலங்கை இந்தியாவோட இன்னொரு மாநிலம் மாதிரித்தான இருக்குது. போதாத குறையா நிறைய இந்தியர்கள் வேற அங்க இருக்காங்க. மலையகத் தமிழர்களுக்கு அதாவது இந்தியால இருந்து போன தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகத்தைத் தீர்க்க நீங்க அக்கறை காட்டியிருந்தாலே பிரச்னை அடுத்த கட்டத்துக்கு போயிருக்காதே… பத்து லட்சம் பேர்… நின்னுட்டிருக்கற காலடி நிலம் பிளந்து அப்படியே பாதாளத்துல விழற மாதிரி பத்து லட்சம் பேர்  ஒரே ஒரு நாள்ல நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது நீங்க கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு தட்டி வெச்சிருந்தா பிரச்னை பெரிசாகியிருக்காதே.

பிரதமர் : அந்தப் பிரச்னைக்கு எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சிகள் செய்யத்தான செஞ்சோம். இலங்கை அதிபர் கூட ஒப்பந்தம் செய்துக்கிட்டோம். பாதி பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கினோம். ஐ.நா. சபைல கூட குரல் எழுப்பினோம். ஆனா, பிரச்னை தீரலியே… பெரும்பான்மை சிறுபான்மை சண்டை உலகத்துல எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்யுது. சிறுபான்மை அப்படிங்கறது ஒரு மனுஷனோட கால் மாதிரி. பெரும்பான்மை அப்படிங்கறது உடம்பும் தலையும் மாதிரி. கால் ஒரு பக்கமும் தலை ஒரு பக்கமுமா திருகிக்கிட்டு நின்னா ரெண்டுத்துக்குமேதான் கஷ்டம். ஒழுங்கா தண்ணி விட்டுக் கழுவறதே இல்லை அப்படின்னு கோவிச்சுகிட்டு கால் வெட்டிக்கிட்டுத் தனியா போக முடியுமா..?

Resettlement_sinhalese2பெரும்பான்மையின் சம்மதத்தோடு சிறுபான்மையின் நலன்…  பெரும்பான்மையின் மீது மதிப்பு மரியாதையுடன் சிறுபான்மை… அதுதான் நடக்கணும். சில விஷயங்கள்ல இவங்க விட்டுக் கொடுக்கணும். பல விஷயங்கள்ல அவங்க புரிஞ்சு நடந்துக்கணும். அது ஒரு பரஸ்பர நல்லெண்ணத்தின், நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கணும். சிங்கள மொழி படிச்சுத்தான் ஆகணும்னு சொன்னாங்களாம். இவங்களுக்குக் கோவம் வந்திருச்சாம். ஏன் ஆங்கிலேயர் ஆட்சில இருந்தபோது அரசு வேலைல சேரணும்னா ஆங்கிலம் தேவைன்னு போய் விழுந்து விழுந்து படிக்கத்தான செஞ்சாங்க. சிங்களம் படிக்கச் சொன்னா படிச்சிட்டுப் போக வேண்டியதுதான. ஆங்கிலம் படிச்சி அழியாத தமிழ் அடையாளம் சிங்களம் படிச்சா அழிஞ்சிடுமா..? அப்படிப் பூஞ்சையா ஒரு அடையாளம் இருக்கும்னா அது அழியறதுல எந்தத் தப்பும் இல்லை.

அதே நேரம் சிங்கள அரசும் அப்பாவி ஒண்ணும் இல்லை. தீவிரவாதிகளை அழிக்கறதை விட்டுட்டு ஒட்டு மொத்த இனத்தையே கொல்றதுங்கறது ரொம்பத் தப்பு. பத்து கெட்டவங்க இருகாங்கங்கறதுக்காக 90 அப்பாவிங்களை அழிக்க முற்பட்டது ரொம்பத் தப்பு. இப்ப சீக்கியர்கள் கூட காலிஸ்தான் கேட்டு போராடினாங்க. வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததும் அவங்க துப்பாக்கியைக் கீழ போட்டுட்டு கலப்பையைத் தூக்கிட்டு வயல்ல இறங்கி பாடுபட ஆரம்பிக்கலையா..? ஒட்டு மொத்த சீக்கியர்களை அழிக்கவா செஞ்சோம்.

இஸ்லாமியத் தீவிரவாதம் இந்தியால தலைவிரிச்சுத்தான் ஆடுது. அதுக்காக எல்லா இஸ்லாமியர்களையும் கொல்ல ஆரம்பிச்சிட்டோமா என்ன?

அதிருப்திக் குழுவை சமயோசிதமா வழிக்குக் கொண்டு வரணும்.  ஈழப் பகுதியில வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிச்சு, போராளிகள் குழுக்களை பலவீனம் அடைய வெச்சு, சுமுகமா தீர்வை கண்டுபிடிச்சிருக்கணும். முள்ளுல விழுந்த சேலையை கிழியாம எடுக்கறதுதான் புத்திசாலித்தனம்.

குழந்தை : அப்போ காஷ்மீர்ல ஏன் பிரச்னை தீரலை? நாகாலாந்துல ஏன் பிரச்னை தீரலை..?

பிரதமர் : ஏன்னா பாகிஸ்தான்ல இருந்து சீனால இருந்து அதை தூண்டி விட்டுட்டு இருக்காங்க. காஷ்மீர் பிரச்னை அப்படிங்கறது காஷ்மீர் மக்களுக்கும் இந்தியாவுக்குமான பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பிரச்னை. பக்கத்து வீட்டுக்காரன் படுபாவியா வாய்ச்சிட்டா  ரொம்பக் கஷ்டம் அம்மா..? அது அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியுமம்மா.

குழந்தை : எங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கே…

பிரதமர் : என்னம்மா இது இப்படி அபாண்டமா பழி போடற. பாகிஸ்தான் இந்தியால தலையிடறதுல நூத்துல பத்து பங்குகூட நாங்க உங்க நாட்டு விஷயத்துல தலையிடலையே. நாங்க தலையிடலைங்கறதுதான பெரும்பாலானவங்களோட குற்றச்சாட்டா இருக்கு.

குழந்தை : ஆனா, போராளிகளுக்கு ஆரம்பத்தில் பண உதவியும் ஆயுதப் பயிற்சியும் தந்தது இந்தியர்கள்தானே… இப்போது கூட இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து வந்திருக்கிறீர்களே…

பிரதமர் :  இந்தியாதான் இலங்கையில் போரை நடத்தினதுன்னு கூட அவதூறுப் பிரசாரங்கள் செய்யப்பட்டுவருகின்றன. அது மிகவும் பிழையானது மட்டுமல்ல பயங்கரமானதும் கூட. சிங்கள ராணுவத்துக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் ரேடார் கருவிகள், ஆளில்லா விமானங்கள் போன்ற துணை ராணுவக்கருவிகள்தான் தரப்பட்டன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் என எத்தனையோ நாடுகளில் இருந்து ஏராளமான ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கி இருக்கிறது.

தெற்காசிய நாடுகள் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே ஒவ்வொரு துறையிலும் இதுபோல் தமக்குள் பரிமாற்றம் செய்து கொள்வது மிகவும் இயல்பான விஷயம்தான். மருத்துவத்துறை, கல்வித்துறை, விவசாயத்துறை என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாடுகளிலும் என்னென்ன முன்னேற்றங்கள் வந்துள்ளன… நம் நாட்டுக்கு என்னென்ன தேவை என்ற அளவில் இத்தகைய பரிமாற்றங்கள் நடப்பது இயல்புதான். ராணுவத் துறையிலும் அப்படியான பரஸ்பர உதவிகள் செய்து கொள்ளப்படுவதுண்டு.

விடுதலைப் புலிகளுக்கு இந்தியா கொடுத்த பயிற்சி என்பது மிகவும் வேடிக்கையானது. பெரும்பாலும் நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்ற உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகள்தான் வழங்கப்பட்டன. கொடுத்த பணமும் கூட யானைப் பசிக்கு சோளப்பொரி அளவுக்குத்தான் இருந்தது. அதுவும் போக அப்போது பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை.

இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட இன்னலைப் பார்த்து தான் இந்தியா இலங்கை விஷயத்தில் தலையிடவே ஆரம்பித்தது. 1958ல கொழும்புல தமிழர்களுக்கு எதிரா பெரும் கலவரம் வெடித்தபோது நிறைய கப்பல்களை அனுப்பி அங்க இருந்த தமிழர்களை பத்திரமா யாழ்பாணத்துக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.

குழந்தை : இப்ப நாலாம் ஈழப் போர்ல சிக்கின மக்களை அப்படி ஏன் காப்பாத்த முயற்சி செய்யலை..

பிரதமர் : என்ன செய்யறதும்மா… ஆற்றில் அதற்குப் பிறகு எவ்வளவோ வெள்ளம் வந்து போய்விட்டது. இப்போது இந்தியா அப்படி ஒரு முயற்சியை முன் வைத்தால், “சரி… நல்லது தீவிரவாதிகளை விட்டுவிட்டு அப்பாவிகளை மட்டும் அழைத்து வாருங்கள்’ என்று இலங்கை அரசு சொல்லியிருக்கும். அது எப்படி சாத்தியம் சொல். அது மட்டுமல்லாமல் அந்த முயற்சிக்கு புலிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்கள். ஏனென்றால், மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டுதான் அவர்கள் பதுங்கி இருந்தார்கள். மக்கள் போய்விட்டால் ராணுவம் புலிகளை துவம்சம் செய்து போட்டுவிடுமே. அதனால் இந்தமுறை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

ஆயுதப் போராட்டம் வளர்வதற்கு முன்பாகவும் இந்தியா பல சமாதான முயற்சிகளை மேற்கொண்டுதான் வந்தது. கச்சத் தீவை விட்டுக் கொடுத்து இலங்கை அரசுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டது. போராளிகள் இயக்கத்துக்கு பயிற்சி கொடுத்து அவர்களிடமும் நன் மதிப்பைப் பெற விரும்பியது. இலங்கையில் பிரச்னை பெரிதானால் இரு தரப்புமே நாம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஆனால், என்றைக்கு அண்டை நாட்டு ஆதரவையோ, சொந்த நாட்டு மக்களின் உயிரையோ மதிக்காமல் ஆயுதங்களை நம்பிக் களத்தில் இறங்கினார்களோ அன்றே அழிவின் விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டன. இந்தியா சூடுபட்ட பூனையாகத் தன் வாலைச் சுருட்டிக் கொண்டுவிட்டது.

இரு தரப்பினருமே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். போர் நிறுத்தம் வரவேண்டும் என்றுதான் ஆரம்பம் முதலே இந்தியா சொல்லிவந்தது. யாரும் அதைக் கேட்கவில்லை. இந்தியா என்னதான் செய்ய முடியும். சிங்கள அரசால் மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளாலும் பெரும் இழப்பைச் சந்தித்துவந்த ஈழத் தமிழர்களைப் பார்த்தபோது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது.

மறக்க முடியாத படுகொலைகள்
மறக்க முடியாத படுகொலைகள்

கடைசி நேரப் போர் எதனால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது. ஊடகங்கள் எப்படி இதை ஊதிப் பெரிதாக்கின என்பதையெல்லாம் எத்தனைநாள்தான் மறைத்துவைக்க முடியும். பிரபாகரன் என்ற ஒரு தீவிரவாதியை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்ததும் அவர்களுடைய சர்வதேச ஊடகச் செல்வாக்கை வைத்து, உலகமே இடிந்து விழுவதுபோல் மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. சிங்கள ராணுவம் அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக தமிழக பத்திரிகைகளில், இணைய தளங்களில் பெரும் பீதி கிளப்பப்பட்டது. இப்படிச் செய்தால் சர்வதேச சமூகம் தலையிட்டு சிங்கள ராணுவத்தைப் பின்வாங்க வைக்கும்; பிரபாகரன் தப்பிவிடலாம் என்று ஒரு தப்புக் கணக்குப் போடப்பட்டது. ஆனால், அது பொய் என்பது தெரிந்ததால் சர்வதேச சமூகம் மவுனம் சாதித்தது. இந்தியாவும் மவுனம் சாதித்தது. ஏன், தமிழகத்தின் முக்கிய தலைவர்களும் உண்மை என்ன என்பது தெரிந்ததால் நாடாளுமன்றத் தேர்தல் தீவிரம் பெற்ற நிலையிலும் அமைதியாக இருந்தனர். சிங்கள ராணுவம் போர் விலக்குப் பெற்ற பகுதிகளில் குண்டு மழை பொழிந்ததாக பொய்யான பரப்புரைகள் ஈழ ஆதரவு ஊடகங்களால் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உண்மையில் என்ன நடந்தது… பஞ்ச பாண்டவர்கள் போன்ற ஐந்து மருத்துவர்கள் உண்மையை உலகுக்கு எடுத்துரைத்துவிட்டார்கள் அல்லவா..? அப்பாவி மக்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு தப்பிக்கப் பார்க்கும் கயமைதான் நடந்தது. சர்வதேச சமூகம் கருணையுடன் அனுப்பிய நிவாரணப் பொருட்களைக்கூடப் புலிகள் தட்டிப் பறித்து பதுக்கி வைத்திருக்கிறார்கள். இலங்கை அரசு உரிய நிவாரணப் பொருளை தரவில்லை என்று பழி வேறு.

இத்தனை நாள் பயந்து கிடந்த மக்கள், விடுதலைப் புலிகள் தோற்கப் போகிறார்கள் என்பது தெரிந்ததும், கிணற்றுக்குள் விழுந்து கிடப்பவர் வீசப்படும் கயிறைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலேறுவதுபோல் சிங்கள ராணுவத்திடம் அடைக்கலம் தேடி ஓடினார்கள். பாதுகாப்புக் கோட்டைச் சுவரின் செங்கல்கள் ஒவ்வொன்றாக உதிர ஆரம்பித்ததும் எந்தவொரு போராளி இயக்கமும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத வகையில் தன் மக்களைத் தானே கொல்லும் அநியாயம் அரங்கேறியது.

நினைத்துப் பாருங்கள் மணல் மூட்டைகளுக்குப் பின்னால் பதுங்கியிருந்து தாக்கிய போராளிகள் அதற்கு பதிலாக மக்களைக் கேடயமாகப் பிடித்து அதுவும் எந்த மக்களுக்காக இயக்கத்தை ஆரம்பித்தார்களோ அதே மக்களையே கேடயமாக்கும் கொடூரம். அதிகார சதுரங்கத்தில் ராஜாவுக்காக சிப்பாய்கள் பலியிடப்படுவது ஒன்றும் வியப்பில்லைதான். ஆனால், விடுதலைப் போராட்டம் ஒன்றில் இப்படியான நிகழ்வு இதுவரை சரித்திரத்தில் இடம்பெற்றதேயில்லை. ஆனால், மக்களைக் கேடயமாகப் பிடிப்பது என்பது விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. அவர்கள் போரை ஆரம்பித்த அன்றிலிருந்தே அதைத்தான் செய்து வருகிறார்கள். கடைசியில் அது கொஞ்சம் துலக்கமாகத் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான்.

உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆளைவிட்டால் போதும் என்று அயல் நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள். வடக்கு கிழக்கு பகுதியில் இருப்பவர்கள் கூட தாமாக விரும்பி அங்கி இருக்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தாலும் பயத்தினாலும்தான் அங்கு இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மறைக்கத்தான் இந்தியா மீது அவதூறு அம்புகள் அடுக்கடுக்காக எய்யப்படுகின்றன. இன்னொரு நாட்டின் இறையாண்மையை மதித்து நடந்துகொண்டதற்குத்தான் இத்தனை வசைகள்… அவதூறுகள்

குழந்தை : இன்னொரு நாட்டின் இறையாண்மையை மதிப்பதால் தலையிட முடியவில்லை என்று சொல்லும் நீங்கள் பங்களாதேஷ் விஷயத்தில் என்ன செய்தீர்கள்…? உங்களால்தானே அது தனி நாடானது. அப்படி நீங்கள் ஈழத்தைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்தானே இந்தப் போரே ஆரம்பிக்கப்பட்டது.

பிரதமர் : ரொம்பத் தப்பான கேள்விம்மா இது. கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையில் நில ரீதியிலான தொடர்ச்சி என்று எதுவுமே கிடையாது. ஒரு தேசம் என்று சொல்ல வேண்டுமானால் அதன் முக்கியமான அம்சம் நில ரீதியிலான தொடர்ச்சிதான். அது மட்டுமல்லாமல் இரண்டுக்கும் இடையில் இன்னொரு நாடு வரவே கூடாது. அப்படி வந்தால் அது காலனி ஆட்சி போன்ற ஒன்றுதான். கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனியாகப் பிரியவேண்டும் என்று போராடினர். இந்தியா அவர்கள் கோரிக்கையில் இருந்த நியாயத்தைக் கவனத்தில் கொண்டு செயலாற்றியது. ஈழத்தின் கதை அப்படிபட்டதல்லவே. எதை எதனோடு ஒப்பிடுவது என்றொரு விவஸ்தை வேண்டாமா..? ஒரு தேசம் என்பது கடலை மிட்டாய் அல்ல… கேட்பவர்களுக்கெல்லாம் காக்காய் கடி கடித்துக் கொடுப்பதற்கு.

குழந்தை : கூட்டாட்சி முறையில் சுய நிர்ணய உரிமை கேட்டு அமைதியான முறையில் போராடியும் அது கிடைக்காததால்தானே தனி நாடு கேட்க வேண்டி வந்தது.

பிரதமர் : என்னவொரு விநோதமான பதிலம்மா இது. 50 ரூபாய் கேட்டு அமைதியாகப் போராடினேன். அது கிடைக்கவில்லை. எனவே 500 ரூபாய் கேட்டு அதிரடியாகப் போராடினேன் என்று சொல்வதுபோல் இருக்கிறது. 50 ரூபாய் கொடுக்கவே யோசித்துக் கொண்டிருந்தவரிடம் 500 ரூபாயை அதட்டிக் கேட்டால் எப்படியம்மா கொடுப்பார்..? இன்றைய இலங்கை அதிபர் ஒரு விஷயத்தை அழகாக அழுத்தமாகக் கூறியிருக்கிறார். இது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற பிரச்னையே இல்லை. தேசத்தை நேசிப்பவர்கள் சீர் குலைக்க நினைப்பவர்கள் என்று இரண்டு பிரிவு மக்கள்தான் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இலங்கையில் மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து பொறுக்க முடியாமல், ஏதாவது செய்தாக வேண்டும் என்று அதிக ஆர்வம் காட்டிய ராஜீவ்ஜிக்குக் கிடைச்ச பரிசு என்ன என்பது உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். 1987ல் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டிருந்தது. அந்த மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் மண்ணெணெயும், ஆடைகளும் ஏற்றிக்கொண்டு 19 இந்தியக் கப்பல்கள் இலங்கைக்குப் போனது. அதை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்ததும் திரும்பி வந்துவிட்டது. ஆனால், அதோடு நின்றுவிடவில்லை. அங்கு தவித்த மக்களுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் போர் விமானங்களின் துணையோடு உணவுப் பொருட்களைச் சுமந்து சென்று பூமாலை ஆப்பரேஷன் நடத்தப்பட்டது. உலகில்  பிற நாடுகளின் ராணுவ விமானங்கள் என்ன செய்யும் தெரியுமா… குண்டு மழை பொழியும். ஆனால், இந்திய ராணுவ விமானங்கள் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. வெறும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்ட செயல் அது.

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று இரு தரப்புக்கும் இசைவான ஒரு நியாயமான ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொடுத்தது. இந்தியாவில் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள். மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள் இருப்பதுபோல் இலங்கையில் ஒரு ஏற்பாடு செய்ய ஆத்மார்த்தமாக ராஜீவ்ஜி முயற்சிகள் எடுத்தார்.  தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்படும். இரண்டு தரப்பினரும் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட வேண்டும் என்று நடைமுறை சாத்தியமான ஒரு திட்டத்தை முன்வைத்தார். நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு ஊசி கூட இல்லை… தேனில் குழைத்து லேசான கசப்பு மருந்தைக் கொடுத்தார். ஆனால், கோபம் கொண்ட ஒரு குழந்தை, மருத்துவரையே கொன்ற கொடூரம்தான் நடந்தது.

rajiv_gandhi_assasinationஉலகில் எங்காவது இதைக் கேள்விப்பட்டதுண்டா நீங்கள். எதிரியைவிட்டுவிட்டு மத்யஸ்தம் செய்யவந்தவரைக் கொன்ற சோகம் எங்காவது நடந்ததுண்டா..? இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர் என்றே அதைச் சொல்லலாம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முன்னாள் பிரதமர் மட்டுமல்ல… அடுத்த பிரதமராக ஆகவிருந்த ராஜீவ்ஜியை மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்தார்கள்.

இருந்தும் தியாகத்தின் திருவுருவான அன்னை சோனியாஜி தன் கணவனைக் கொன்ற பாவிகளை மன்னித்துதான் வந்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவியாக, ஒரு தேசத்தின் அரசியல் தலைவியாக கருணையே உருவாகத் திகழ்கிறார். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில்  உலகில் இருக்கும் எந்த பிரிவைச் சேர்ந்த ஒருவரைவிடவும் அதிக அக்கறை கொண்டவர்தான் அன்னை சோனியாஜி… இலங்கை பிரச்னை என்பது அவரைப் பொறுத்தவரையில் ஏதோ அண்டை நாட்டுக் கலவரம் அல்ல… அவரை நேரடியாக மிக மோசமாக பாதித்த நிகழ்வும் கூட. ஆனால், அவராலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இந்த விஷயத்தில் தலையிட முடியும். அதை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அடிப்படையில் இந்த பிரச்னை இந்த அளவுக்கு மோசமாக யார் காரணம்..? விடுதலைப் புலிகள்தான். ராஜீவ்ஜி ஜெயவர்தனேயுடன் 1987ல் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதில் இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க எல்லா வழிகளும் செய்யப்பட்டிருந்தன. சுய ஆட்சிக்கான அருமையான வாய்ப்பு தரப்பட்டது. இவ்வளவுதான் செய்ய முடியும். அது தான் நியாயமும் கூட. பிரிவினைவாதம் என்பதை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. காஷ்மீரில் தனிநாடு வேண்டும் என்று கேட்டுத்தான் போராடிவருகிறார்கள். இந்திய ராணுவம் அதை எதிர்த்துத்தான் போராடுகிறது. அப்படி இருக்க இலங்கையிடம் போய் ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு கொடு என்று எப்படிச் சொல்ல முடியும்..? காஷ்மீர் மக்களுக்கு தனி நாடு கொடுக்க வேண்டியதுதானே என்று முகத்தில் அடித்தாற்போல் கேட்பார்களே..? ஊருக்கு ஒரு நீதி உனக்கு ஒரு நீதியா என்று காறி உமிழ்வர்களே… இந்தியா இந்த விஷயத்தில் நடுநிலை வகிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்..?

குழந்தை : அது சரி, நீங்கள் காஷ்மீருக்கு சுதந்தரம் கொடுக்காமல் இருப்பது ஏன்?

பிரதமர் : என்ன விஷமத்தனமான கேள்வியம்மா? யாராவது வந்து உன் கையை வெட்டிக் கொடு என்று கேட்டால் கொடுத்துவிடுவாயா?

குழந்தை : காஷ்மீர் என்பது கை போன்ற ஒன்று அல்ல. தனியான ஒரு நபர். கையில் விலங்கு மாட்டி உங்களுடன் இணைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறீர்கள். தனக்கு ஒரு பிரச்னை என்று அபயம் கேட்டு ஓடிவந்தவரிடம் ஒழுங்காக மரியாதையாக எனக்கு அடிமையாகிவிடு. அப்போதுதான் காப்பாற்றுவேன்  என்× மிரட்டி அல்லவா சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பிரதமர் : இல்லையம்மா. ஒரு பெண் அடைக்கலம் தேடி வந்தபோது, கவலைப்படாதே… உனக்கு உதவி செய்கிறேன். உன் சார்பாக நான் துணிந்து உரிமையோடு செயல்பட வேண்டுமானால், நீ முதலில் என்னை உன் காப்பாளனாக ஏற்றுக் கொள். அப்போதுதான் தார்மிக ரீதியில் தைரியமாக என்னால் உனக்கு உதவ முடியும் என்று சொல்லியது போன்ற நிகழ்வுதான் அது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தால்தான் தன் ராணுவத்தை அனுப்ப முடியும். வேறு நாடாக இருந்தால் இந்திய ராணுவம் அங்கு கால் பதிப்பதை ஆக்கிரமிப்பாகவே உலகம் பார்க்கும். எதையும் முறைப்படிச் செய்ய வேண்டும் என்பதால்தான் அந்த இணைப்பு அவரசர கோலத்தில் நடந்தது. எந்தவித கட்டாயப்படுத்தலும் இல்லை. அடிமைத்தனமும் இல்லை.

குழந்தை : ஆனால், மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துவதாகச் சொல்லிவிட்டு ஏமாற்றிவிட்டீர்களே… அது தவறுதானே.

பிரதமர் : ஏமாற்றவெல்லாம் செய்யவில்லை. மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தாததற்கு இரண்டு காரணங்கள். முதலாவதாக ஜம்மு காஷ்மீரின் சட்ட சபை இந்தியாவுடனான இணைப்பை ஏக மனதாக ஒப்புக்கொண்டு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்குப் பிறகு மக்கள் வாக்கெடுப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தானே அந்த தீர்மானத்தை இயற்றியது. இரண்டாவதாக, பாகிஸ்தானில் இருந்து பலர் அந்தப் பகுதிக்குள் ஊடுருவிக் குடியேறிவிட்டனர். காஷ்மீரி இந்துக்கள் பலர் வெளியேற்றப்பட்டுவிட்டனர். ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படவேண்டும். வெளியேற்றப்பட்டவர்கள் குடியேற்றப்படவேண்டும். அப்போதுதான் நியாயமான மக்கள் கணிப்பு நடத்த முடியும்.  ஒன்று தெரிந்துகொள்… இந்தியா தன் நிலத்தில் ஒரு பிடி மண்ணை இன்னொருவர் எடுத்துச் செல்ல அனுமதிக்காது. அதே நேரத்தில் இன்னொருவரின் ஒரு துளி மண் மீது ஆசைப்படவும் செய்யாது அம்மா.

இலங்கை பிரச்னையை இன்னொரு கோணத்தில் பார்த்தால்  வேறோரு அபாயம் புரியவரும். விடுதலைப் புலிகள் தலைமையில் ஈழத்தில் தனி நாடு அமைந்தால் அடுத்ததாக அவர்கள் தமிழ் நாட்டுத் தலைவர்களுடன் ஒன்று கூடி இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டைப் பிரித்துக்கொண்டு போகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்..? ஏற்கெனவே திராவிட நாடு என்று முழங்கியவர்கள்தான் அவர்கள்… இப்போது பாருங்கள்… இலங்கைக்கு இந்தியா ஆதரவாக நடந்திகொண்டால் தமிழ் நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொண்டுபோய்விடுவார்களாம். இலங்கை நட்பு நாடென்றால்  இந்தியா பகை நாடு ஆகிவிடுமாம். என்னவொரு மிரட்டல் பாருங்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்தியா தனது இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயலைச் செய்யவே முடியாது.

srilanka-eastern-tவிடுதலைப் புலிகள் தனி நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தால் நிச்சயம் பிரச்னை எப்போதோ தீர்ந்துவிட்டிருக்கும். கூட்டாட்சி அமைப்பு ஒன்றுதான் இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான் ராஜீவ்ஜி அப்படி ஒரு உடன்படிக்கையை ஜெயவர்த்தனேவுடன் செய்துகொண்டார். அதன் அடிப்படையில்தான் இந்திய அமைதிப்படையை அனுப்பிவைத்தார். ஆனால், இந்த உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதன் பிறகு தவறான பாதையில் போக ஆரம்பித்தனர் விடுதலைப்புலிகள். ஒப்பந்தம் கையெழுத்தான ஒன்றரை மாதத்துக்குள் திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். அமைதி திரும்பிவிடக்கூடாது என்பதில் அத்தனை அக்கறை.

சக போராட்டக் குழுக்களின் தலைவர்களைக் கொன்று குவித்தனர். தமிழ் முஸ்லீம்களை சிங்களர்களுக்கு உதவுவதாகச் சொல்லி கொன்று குவித்தனர். எண்பதாயிரம் இஸ்லாமியர்களை 2 மணி நேரக் கெடு விதித்து வீடு வாசல், நில புலன் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடும்படித் துரத்தினர். தமிழர்களிலேயும் கூட்டாட்சி அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைவரையும் அநியாயமாகக் கொன்று குவித்தனர். புலிகளை ராணுவம் சுற்றி வளைத்த போதெல்லாம் மக்கள் கூட்டத்தையும் துப்பாக்கி முனையில் மிரட்டி தங்களோடு இடம் பெயர வைத்தனர். தனது பிழையான அரசியலின் மூலம் இலங்கைத் தமிழ் சமூகத்துக்கும் சிங்களர்களுக்கும் இப்படியான ஒரு பேரிழப்பை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள்தான்.

ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு இந்திய அரசின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழ் அரசியல் தலைவர்களைப் பார்த்து நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கடைசிகட்டப் போரில் பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டபோது இவ்வளவு கூக்குரல் இட்ட நீங்கள் அதற்கு முன்னால் என்ன செய்தீர்கள்… ஈழத் தமிழர்கள் என்பவர்கள் உங்களுடைய தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறீர்களே… அவர்களுடைய பிரச்னை தீர நீங்கள் என்ன செய்து கிழித்திருக்கிறீர்கள்… உண்ணாவிரதம் நடத்துவது, தந்தி கொடுப்பது, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது, பத்திரிகைகளில் அடுத்தவர் மீது பழியைப் போடுவது என்பதைத் தவிர உருப்படியாக என்ன செய்திருக்கிறீர்கள்..?

அகதிகளாக தமிழகத்துக்கு எத்தனைபேர் வந்திருக்கிறார்கள்? கூப்பிடு தூரத்தில் இருக்கும் உங்களிடம் வராமல் அனைவரும் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் என்று மேலை நாடுகளுக்குத்தானே போயிருக்கிறார்கள். சிங்களர் அரசு இரண்டாந்தரக் குடிமகனாக நடத்துகிறது என்று சொல்லி வருந்திய அவர்களை அதைவிட மோசமாக நடத்தும் நாடுகளுக்கு அல்லவா புலம் பெயரவிட்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்..? ஈழத் தமிழர்களே நீங்கள் அகதிகள் அல்ல… எங்கள் விருந்தாளிகள் என்று வரவேற்று தமிழகத்தில் தங்க இடமும் உழைத்துப் பிழைக்க கவுரவமான வேலையும் உரிமையும் தந்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு காலங்கடந்த ஞானோதயமாக நூறு கோடி ரூபாய் தர முன்வந்திருக்கிறார்கள்.

அதற்கு முன்னால் வரை தமிழகத்தில் இருந்த அகதிகள் முகாம்களின் நிலை என்ன என்பது ஊருக்கே தெரியுமே..? தமிழ் தலைவர்களில் யாராவது ஒருவர் அங்கு போய் அவர்களுடைய குறை என்ன என்பதைக் கேட்டிருப்பீர்களா..? இந்தியா கைவிட்டுவிட்டது… என்று இப்போது கூக்குரல் இடுகிறார்களே… அவர்கள் என்ன செய்தார்கள்..?

திராவிடக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் வோட்டுப் பொறுக்கி அரசியலுக்கு உதவும்வகையில் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர வேறு என்ன செய்தார்கள்?

போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் இலங்கைக்குப் போகவேண்டும்… இந்திய பிரதமர் இலங்கைக்குப் போகவேண்டும் என்று வாய் கிழியக் கத்தினார்கள்…  தமிழகத்தில் இருந்து தலைவர்கள் வந்து பேச வேண்டும் என்று இலங்கை அதிபர் கேட்டுக் கொண்டதும் அடுத்த நிமிடமே வாயை மூடிக் கொண்டு ஓடிவிட்டார்கள்… ஏன்..? உங்கள் வீரமெல்லாம் வீட்டுக்குள் இருந்து வசனம் பேசுவதில்தான் அடங்கி இருக்கிறது இல்லையா..? இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போனால் விடுதலைப் புலிகள் உங்களையும் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம் இல்லையா..?

அதுமட்டுமல்லாமல் இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாகத்தான் கருதுகிறது. பிரபாகரன் ஒரு குற்றவாளிதான். ராஜீவ் கொலையை மட்டுமே வைத்து இலங்கைப் பிரச்னையை அணுகக்கூடாது என்று சொல்கிறார்கள். அது எப்படி சரியாக இருக்க முடியும். ராஜீவ்ஜி இலங்கையில் அமைதி திரும்ப ஆத்மார்த்தமாக முயற்சிகள் எடுத்தவர். அவரைக் கொன்றதன் மூலம் இலங்கையில் அமைதி திரும்பக்கூடாது என்று ரத்தால் அடிக்கோடிட்டுக் காட்டினார்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். இலங்கை சரித்திரத்தில் அந்த அத்தியாயத்தை மூடிவிட்டு படி என்று சொன்னால் என்ன அர்த்தம். நாளை சிங்கள அரசின் வன்முறைகளை மறந்துவிட்டு இலங்கை பிரச்னையைப் பாருங்கள் என்று ஒருவர் சொன்னால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ அது போன்றதுதான் இதுவும்.

குழந்தை : விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக  அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு பக்கம் போராளிகள்… இன்னொரு பக்கம் ராணுவம். இரண்டுக்கும் நடுவில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டிருந்தோமே… எங்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே…

பிரதமர் :  என்ன செய்ய… புலிகள்தான் மக்கள்… மக்கள்தான் புலிகள் என்று அல்லவா அங்கு நிலைமையை ஆக்கியிருந்தார்கள். ஒரு தவறான தலைவனுடைய முட்டாள்தனமான செயல்பாடுகளினால் ஒரு இனம் அழிய நேர்வதைப் பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில்தான் இந்தியா இருந்தது, மகாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் இருந்தது போல். குரு÷க்ஷத்திர யுத்தத்தில் கவுரவர்கள் அதிகமாக இருந்தார்கள். பாண்டவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள். இருந்தும் பாண்டவர்களால் வெல்ல முடிந்தது. ஏனென்றால் அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. நீதி இருந்தது. தர்மம் இருந்தது.

ஆனால், இன்றைய இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள். சிங்களர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்ய இன்று தர்மம் பெரும்பான்மையின் பக்கம் இருக்கிறது. பிரபாகரன் தவறான பாதையில் வெகு துரம் வரை போனார். இனி மீள்தல் சாத்தியமில்லை என்னும் அளவுக்குப் போனார். அவரைத் தலைவராக ஏற்றவர்களுக்கும் அதுதான் கதி… என்ன செய்வது மூளை போடும் தவறான திட்டங்களுக்கு அடியும் உதையும் வாங்குவது காலும் கையும் தானே..?

தமிழகத்தில் இருந்த தலைவர்கள் இந்தப் பிரச்னையில் உண்மையான அக்கறையை ஒருபோதும் காட்டியதில்லை. தம்பிக்கு ஒரு துன்பமென்றால் அண்ணனல்லவா விழுந்தடித்து ஓடிச் சென்று காப்பாற்றியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருந்துவிட்டு அடுத்தவர் மேல் பழி போட்டால் என்ன நியாயம்..? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வெறும் இருபத்து நாலு கிலோமீட்டர் இடைவெளிதான் தமிழகத்துக்கும் இலங்கைக்கும். கடல் அமைதியாக இருந்தால் வெறும் ஐந்தே மணி நேரப் பயணம்தான். பிரிவினைவாதத்துக்கு ஆதரவு கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அடிப்படைத் தேவையான டீசல், உணவுப் பொருட்கள், மருந்துகள், ஆடைகள் என ஆரம்பித்து ஆயுதங்கள்வரை கடத்திக் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார்கள். கள்ளப் பணம் கை மாறி இருக்கிறது. மருத்துவர்கள், மீனவர்கள், அரசியல்தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வியாபாரிகள், கடத்தல்காரர்கள் என மிகவும் வலுவான வலைப்பின்னல் இருந்திருக்கிறது. அழிவின் மர்மச் சுரங்கத்தில் ஆயிரம் காலடித் தடங்கள். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக. ஆனால், அன்பின் நெடுஞ்சாலையிலோ ஒற்றைக் கால் தடம் கூடப் பதிக்கப்படவில்லை. அது ஏன்..? ஆறு கோடித் தமிழர்கள் அருகில் இருந்தும் கடலின் அக்கரையில் இருந்த ஈழத் தமிழர்கள் அநாதைகளாக மடிய நேர்ந்ததேன்?  தமிழகத்தில் இருந்த தலைவர்களில் சிலர் ஈழப் போராளிகளைத் தவறாக வழி நடத்தினார்கள். மற்ற தலைவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என்று வேடிக்கை காட்டினார்கள்.

தவறான வழியில் போன தம்பியைத் தண்டித்து திருத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கோரிக்கையும் சரியில்லை. வழிமுறையும் சரியில்லை. நீ யாராக இருந்தாய் என்பதை வைத்து அல்ல… யாராக இருக்கிறாய் என்பதை வைத்துத்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று போராளிகளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.

அதைச் செய்யாததால் தமிழகத் தலைவர்கள்தான் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம். எங்கள் மீது எந்தத் தவறும் கிடையாது. நியாயத்தை அவர்களிடம் போய்க் கேளுங்கள்.

குழந்தைகள் சோகத்துடன் அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றன.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *