புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக 2013 ஜூன் மாதம் 28-30 தேதிகளில் மூன்று நாட்கள் ஏற்காடு இலக்கிய முகாம் நடைபெற்றது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், கவிஞர்கள் தேவதேவன், க.மோகனரங்கன் மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட இலக்கிய வாசகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சிறுகதைகள் குறித்த அமர்வில் வாசித்த கட்டுரை.

Yercaud-meet-2013-group-photo

மிழின் முதல் தலைமுறையில் தலைசிறந்த படைப்பாளி புதுமைப் பித்தன் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. தமிழ்ச் சிறுகதையின் பல்வேறு வகைமாதிரிக் கதைகளின் முதல் வடிவத்தை புதுமைப் பித்தனே எழுதியிருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த கதையாக “அன்று இரவு” என்ற இந்தக் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

(சிறுகதையை இங்கே படிக்கலாம்).

அடிப்படையில் இது ஒரு புராண மீட்டுருவாக்கக் கதை. ஒரு கதையாக, தமிழ் நாட்டார் எல்லாருக்கும் ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்று தான் இது. தமிழ் மரபில், பண்பாட்டில் ஆழப் பதிந்து விட்ட ஒரு கதையும் கூட. இதன் ஒரு வடிவம் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணத்தில் வருகிறது. இன்றளவும் ஒவ்வொரு வருடமும் மதுரை மூதூரில் ஒரு மாபெரும் திருவிழாக் காட்சியாக இக்கதை நிகழ்த்தப் பட்டு வருகிறது. வாதவூரர் என்ற இயற்பெயருடைய மாணிக்க வாசகருக்காக இறைவன் நரிகளைப் பரிகளாக்கி, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு விளையாடிய கதை.
இதை வைத்துக் கொண்டு ஒரு அழகான, கவித்துவமான, தத்துவமும் அங்கதமும் சுய விமர்சன நோக்கும் சுவாரஸ்யமும் இழையோடும் ஒரு இலக்கியத் தரமுள்ள ஒரு புதுமையான *நவீன* சிறுகதையை புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார் என்பதே இதனை ஒரு கூர்ந்த வாசிப்புக்குரிய இலக்கியப் படைப்பாக ஆக்குகிறது. இச்சிறுகதையின் நுட்பங்களை மூன்று தளங்களில் முன்வைக்கிறேன்.

கதை:

”கட்டுடைப்பு” என்ற வகையில் கதையின் போக்கில் இரண்டு சிறிய மாற்றங்களை மட்டுமே புதுமைப் பித்தன் செய்திருக்கிறார்.

மூலக் கதையில் தானும், மற்ற உயிர்கள் அனைத்தும் பிரம்படி பட்டதைப் பார்த்த அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாய் வந்தவனும், முன்பு குதிரைச் சேவகனாய் வந்தவனும் இறைவனே என்றுணர்ந்து பரவசமடைகிறான். வெள்ளத்தில் குதித்த ஆள் என்ன ஆனான் என்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. பாண்டியன் வாதவூரன் காலில் விழுந்து மன்னித்தருள வேண்டுகிறான். வாதவூரனும் இறைவனது அருளை எண்ணி மெய் சிலிர்த்து துறவு பூண்டு மாணிக்க வாசகன் ஆகி விடுகிறான்.. கதை முடிந்தது, மங்களம். சுபம்.

ஆனால், புதுமைப் பித்தன் சொல்லும் கதையில், அடி வாங்கி பயந்து போய் வெள்ளத்தில் குதித்தவனைக் காப்பாற்ற பாண்டியனும் வெள்ளத்தில் குதிக்கிறான். ஆனால் அவன் திரும்பி வருவதில்லை. அன்றிலிருந்து இன்று வரை, ஆயிரமாயிரம் பேரைக் காவு கொண்ட ”அந்தப் பெரு வெள்ளத்தில்” மூழ்கி மறைந்து போகிறான். ஆனால், அப்படி மறையும் போதும் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு விடையைத் தேடி அடைந்து விட்டான் – குதிரைப் பாகனுக்கு எழுதித் தந்த முறிச்சீட்டைக் கூலியாள் கையில் இருந்து கைப்பற்றி தன் கைக்குள் இறுக்கிக் கொண்டு விட்டான். அழியாத சத்தியத்தைத் தேடி மரணத்தின் வாயிற் கதவைத் தட்டிய நசிகேதனைப் போன்று ஆகி விட்டான் அரிமர்த்தன பாண்டியன்.

மூலக் கதையில் இல்லாத இன்னொரு இணைப்பு – தகிக்கும் ஈசனின் வேதனையை மாற்றும் மருந்தாக, அவனது விளையாட்டையும் அதில் அவன் திணறுவதையும் கண்டு நகைக்கும் ”சாட்சி”யாக, அங்கயற்கண்ணியைச் சித்தரித்திருப்பது. இங்கு அங்கயற்கண்ணி ஈசனின் பாகம் பிரியாளாக, மனையாளாக மட்டும் அல்ல, அவனது வெந்துயரை மாற்றும் அன்னையாக, உலகின் சுமைகள் அனைத்தையும் சுமந்துழலும் ஜீவராசிகளுக்கு ஆறுதல் தரும் தாய்மையின் பேரொளியாக சுடர்கிறாள்.

வடிவம், மொழி:

இந்தக் கதையின் வடிவ போதமும் வடிவ நேர்த்தியும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. நான்கு பகுதிகள் – அரிமர்த்தன பாண்டியன், வாதவூரன், சொக்கன், அங்கயற்கண்ணி. முதல் மூன்று பகுதிகளும் அந்தந்த பாத்திரங்களின் அகமொழி வெளிப்பாடாகத் தொடங்கி பிறகு கதையின் சம்பவங்களாக விரிகின்றன. ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் வரும் “இடை வெட்டு” கதைக்கு ஒரு Meta-fiction தன்மையை அளிக்கிறது; தங்கள் சமகால நிகழ்வைக் குறித்து உரையாடுபவர்களாக, தமிழ் இலக்கிய மரபின் மூன்று தலைசிறந்த உரையாசிரியர்களையும், அவர்கள் கூடவே எப்போதும் இருக்கும் ஒற்றனையும் புதுமைப் பித்தன் காட்டியிருப்பதிலேயே ஒரு உள்ளார்ந்த அங்கதம் உள்ளது. அவர்கள் பேசிக் கொள்வதில் அதை விடவும் அங்கதம் ததும்புகிறது. வெள்ள அடைப்புக் கூட்டத்துடன் நின்று கொண்டு “நீர் அந்தப் பக்கமாக மண்ணை அள்ளிப் போடும்” என்கிறார் ஒரு புலவர், “வையையிலே இப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்றால் யாராவது நம்புவார்களா?” என்கிறார் இன்னொருவர்.

“அவன் ஒருத்தன் தானே தனக்குள் வெள்ளம் அடக்கம் என்பது போல அதன் மீது பாய்ந்து நீந்தினான்.. அவனை அடிக்கலாமா?” என்று கேட்கும் புலவரின் குரல் நமக்கு மிகவும் பரிச்சயமான குரல், நவீன காலத்திய தமிழ் எழுத்தாளன் என்ற ஜீவராசியின் தீனக் குரல் தான் அது.

பொற்பிரம்பின் அடியை கதையின் ஊடாக ஒரு சம்பவம் போல் சொல்லாமல் இறுதியில் கொண்டு வைத்திருப்பது ஒரு சிறந்த உத்தி. கதையின் “முடிச்சு” அது தான். மேலும் அங்கு அது சொல்லப் படும் விதத்தில், அது பிரபஞ்சம் அளாவிய ஒரு குறியீடாக, ஒரு மாபெரும் சத்திய தரிசனத்தின் வடிவமாக ஆகி விடுகிறது.

”கருவூரில் அடைப்பட்ட உயிர்கள் மீது, மண்ணின்மீது, வனத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின்மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின்மீது அந்த அடி விழுந்தது. காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது.”

இந்தக் கதையின் பேசுபொருளுக்கு ஏற்றதொரு கவித்துவ மொழியை புதுமைப் பித்தன் தேர்ந்தெடுத்திருக்கிறார். “நான்மாடக் கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை” என்ற ஆரம்பமே இந்தக் கதையின் மொழியழகுக்கு கட்டியம் கூற ஆரம்பித்து விடுகிறது. அங்கங்கு வரும் சிறு உவமைகள், அலங்காரமான சொற்கள், பரிபாஷைகளும் சங்கேதங்களும் கலந்த மொழி, இவை இந்தக் கதையின் சூழலுடன் பொருந்தி, கதையை இன்னும் அழகாக்குகின்றன. இந்த “கனமான” கதைக்கு இவ்வளவு அணிகள் பூட்டிய இத்தகைய மொழி இல்லையென்றால் இது நீர்த்துப் போயிருக்கும். இந்த வகையில், நாஞ்சில் நாடனின் “பாம்பு”, லா.ச.ராவின் “ஜனனி”, ஜெயமோகனின் “ஈராறு கால்கொண்டெழும் புரவி” போன்ற கதைகளின் மொழியை இக்கதையுடன் ஒப்பிடலாம். கதை முழுக்க விரவிக் கிடக்கும் தமிழ் மரபு, தமிழ்ப் பண்பாடு பற்றிய நுண் தகவல்கள் இக்கதையை ரசிப்பதற்கு இன்றியமையாதவை. அந்த வகையில் “மொழி பெயர்க்க முடியாத” ஒரு கதை இது. ஒருவகையில் அதுவே அதன் சிறப்பும் கூட.

கருத்தியல், தரிசனம்:

இந்தக் கதையின் கருத்தியல் என்ன, இது அளிக்கும் தரிசனம் என்ன?

pudumaipiththanஅதிகார வர்க்கமும், மதமும் இணைந்து செயல்படுத்தும் அடக்குமுறையை சித்தரிக்கவும் கடவுள் பற்றிய கொள்கையையும், கடவுள் நம்பிக்கையையும் நையாண்டி செய்யவும் மட்டுமே இப்படி ஒரு கதையை புதுமைப் பித்தன் எழுதியிருப்பதாக முற்போக்கு இலக்கிய விமர்சன முகாம்கள் கூறி வருகிறார்கள்.. இதை விட புதுமைப் பித்தனை அவமதிக்கும் செயல் இருக்க முடியாது. அப்படிப் பட்ட ஒரு தட்டையான கதையை எழுதுவதற்கு புதுமைப் பித்தன் எதற்கு? ஒரு பொன்னீலன், சோலை சுந்தரப் பெருமாள், டி செல்வராஜ் போன்றவர்களே எழுதிவிட மாட்டார்களா என்ன?

பிட்டு விற்கும் கிழவியிடம் “ஆச்சி, அப்படியென்றால் நீ ரொம்ப ஏழையா?” என்று அப்பாவியாகக் கேட்கிறான் ஆலவாய் மெய்யன். “”இதென்ன கூத்தா இருக்கு! உங்க ஊர்லே பணக்காரங்களா புட்டுச் சுட்டுப் பொளைக்கிறாங்க?” என்று அவனது அறியாமையை நகைக்கிறாள் அவள். ஆனால் இந்த உரையாடலுக்கு முன்புள்ள இந்த வரிகள் இதை லௌகீகத் தளத்திலிருந்து மேலெழுந்து பார்க்கக் கோருகின்றன –

“உலகத்தைத் தன்வசம் இழுக்கும் சொக்கன் விளையாடினான். ஜீவாத்மாவின் வேதனையை உணராது விளையாடினான். பெரியவராக வந்து, பெரிய ஞானோபதேசம் செய்வதுபோலப் பாவனை செய்து, தெரிந்ததையே சொல்லி, ஏற்கனவே தன் பாசத்தில் சிக்கிய ஜீவனை இன்னும் ஒரு பந்தனம் இட்டு வேடிக்கை பார்த்தான். ஈசன் விளையாடினான்.”

இக்கதையில் உள்ள சமூக விமர்சனமும், அற உணர்வு, நீதியுணர்வு பற்றிய பார்வையும் சம நிலை கொண்டவையே தவிர எந்த ஒரு அரசியல் சித்தாந்த நோக்கையும் சார்ந்தவை அல்ல.

”மனித வம்சம் அநாதி காலந்தொட்டு இன்றுவரை, இனிமேலும், அறுகு போலப் படர்ந்து கொண்டே இருக்க, கண்களைக் கட்டிக்கொண்டு நடக்கும் நீதியின் பின்புறமாக, தம் மனசைச் செப்புக் கோட்டைக்குள் சிறை செய்து நடந்தார்களே, அவர்கள் அல்லவா மந்திரிகள்! மந்திரிகள் என்று உலகத்தில் வேடமிட்டால் மந்திரியாகவே நடிக்க வேண்டும். இடையிலே வேஷத்தைக் கலைத்துக் கொள்ளலாமா? அது மனுதர்மமாகாது; உயிர்த் தருமம். உயிர்த் தருமத்துக்கு அரசனது பட்டிமண்டபத்தில் இடங்கொடுக்க முடியாது? கொடுத்தால் பட்டி மண்டபத்தில் வௌவாலும் குறுநரியும் கொண்டாடி நடக்குமே…”

இப்படி மறுகும் வாதவூரனின் குரல் தனிமனித அற உணர்வு சமூகக் கட்டமைப்பின் மீது மோதுவதன் விளைவுகளைப் பற்றியே கவலை கொள்கிறது எனலாம்.

”மனித வம்சம் துயரத்திலும் வேதனையிலுமே ஒன்றுபட்டு வரும். தன்னை அறியாமலே முக்திநிலை எய்தும். அன்றிரவு அவ்வூரின் நிலை அது. யானையும் காளையும் மனிதனும் மதிலும் மண்ணும் அரசனும் ஆண்டியும் அன்று வெள்ளத்தைத் தடுக்க, மறிக்க, தேக்கி நகரத்தைக் காப்பாற்ற, காரிருட்டில் அருகில் இருப்பவன் என்ன செய்கிறான் என்பதை அறியாமல் மண்வெட்டிப் போட்டுப் போட்டு நிரப்பினர். மண் கரைந்தது. மறுபடியும் போட்டனர். கரைந்தது. மறுபடியும் போட்டனர்”

இந்த வரிகள் வெள்ளம் வந்தது, மக்கள் அடைத்தார்கள் என்ற கதையின் சம்பவத்தை மட்டும் சொல்லவில்லை, சமூகத்தின் நிலை சக்திகளுக்கும் இயங்கு சக்திகளுக்குமான நிரந்தர ஊடாட்டத்தைச் சித்தரிப்பவை போல் உள்ளன.

கதையில் உள்ள தத்துவ விசாரமும், ஆன்மீகத் தேடலும் ஆழமானவை, அவற்றை ஒதுக்கி விட்டு இந்தக் கதையை வாசிக்கவே முடியாது. குறிப்பாக, வாதவூரனின் அகமொழியாக வரும் கதையின் இரண்டாம் பகுதி அவன் மனதில் எழும் மதிப்பீடுகளுக்கிடையிலான மோதலை, கடவுள் – பிரபஞ்சம் – மனிதன் மூன்றுக்கும் இடையிலான உறவை அவன் புரிந்து கொள்ள முயல்வதன் தத்தளிப்பை, அவனது அடிப்படையான ஆன்மீக பிரசினையை அற்புதமாக சித்தரிக்கிறது.

”நரிகள் பரிகளாதல்” “செம்பைப் பொன்னாக்குதல்” ஆகியவை சைவ சித்தாந்தத்திலும், சித்தர் மரபிலும் மன பரிபாகத்திற்கான குறியீடுகளாக ஏற்கனவே நன்கறியப் பட்டவை. பாசத்தில் ஆழ்ந்து மும்மலங்களால் கட்டுண்ட ஜீவன் அவற்றை அறுத்து மேலெழுவதையே இந்தக் குறியீடுகள் சுட்டுகின்றன. ஆனால், இக்கதையில் இவற்றின் குறியீட்டு வெளி இந்த அளவில் மட்டும் நின்று விடவில்லை. குதிரைகளைப் பற்றி பாண்டியனும் வாதவூரனும் கொள்ளும் விசாரங்களையும், நரிகளால் கிழிக்கப் பட்டு சாகும் ஒற்றைக் குதிரையின் ஓலத்தையும், நரிகளின் ஊளையால் நகரமே நடு நடுங்கி தன்னைத் தாழிட்டுக் கொள்வதையும் புதிய குறியீடுகளாக புதுமைப் பித்தன் படைத்துக் காட்டுகிறார்.

பிரபஞ்சத்தின் வேதனையைத் தன்னில் சுமக்கும் வாதவூரன், வாதவூரனின் வலியை நீக்க எல்லா விதிகளையும் மீறி விளையாடி, பிறகு அந்த விளையாட்டே பெரும் சுமையாக மறுகும் ஈசன், இந்த விளையாட்டுக்குள் சிக்கிக் கொண்டு அதில் தன்னையே பலியாகத் தந்து அதன் மூலம் அரன் மடியில் சிசுவாக அமரும் பாக்கியம் பெற்று விடும் பாண்டியன், இது எல்லாவற்றையும் பார்த்துச் சிரிக்கும் அங்கயற்கண்ணி. அவள் உட்பட எவரையும் விட்டு வைக்காமல் எல்லாரையும் ஒரு சாத்து சாத்தும் பொற்பிரம்பு !

எது அந்த பொற்பிரம்பு? இயற்கையா? விதியா? பிரபஞ்ச லீலையின் ஒரு சாயலா? அல்லது இவற்றை எல்லாம் கட்டி வைத்து விளையாடும் ஒரு இலக்கிய கர்த்தாவின் எழுதுகோலா? அவனது எழுத்தே தானா அந்தப் பொற்பிரம்பு?

புதுமைப் பித்தன் என்னும் மகத்தான இலக்கிய கர்த்தா தனது கடைசி காலகட்டத்தில், 1946ல் எழுதிய கதை இது. அவரது அபிலாஷைகளும் நிராசைகளும் அவ நம்பிக்கைகளையும் புதுமை வேட்கையும் ஞானமும் எல்லாம் கனிந்த நிலையில் அந்தக் கனி உதிரப் போவதற்கு முன்பாகக் காணும் மெருகும் பொலிவும் அவரது இந்தக் கடைசி காலகட்டத்திய கதைகளில் காணக் கிடைக்கின்றன. ”கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” எழுதிய கதாசிரியனின் அதே முகம் தான், அதே குரல் தான், அதே நையாண்டி தான், ஆனால் அதன் பல மடங்கு முதிர்ந்த, கனிந்த பரிணாமத்தை, ஒரு தத்துவப் பாய்ச்சலை இந்தக் கதையில் பார்க்கிறோம். ஒரு “முதல் தலைமுறை” கதையாக இருந்த போதும் என்றென்றும் வாசிக்கப் படாத ஒரு மறைபொருள், ஒரு mysticism இக்கதையில் உள்ளது. இதனை காலத்தால் அழியாத கலைப் படைப்பாக ஆக்குவதும் அதுவே.

One Reply to “புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…”

  1. ஆலவாய் அண்ணலின் திருவிளையாடல் புதுமைப்பித்தனின் எழுத்தோவியத்தில் நம் சிந்தை கவர்கிறது. ஜடாயு நும் தொண்டு வாழ்க வளர்க . இது போன்ற புனைவுகளும், புதிய சிந்தனை ஓட்டமும் மேலும் மேலும் வரவேற்கப்படவேண்டும். புதுமைப்பித்தன் கருத்து நாத்திக கருத்து அல்ல. அதனை முழுவதும் புரிந்துகொள்ளாமல் பெரியார் திடல் மந்தைகள் உளறுவது ஒன்றும் புதிது அல்ல.தமிழ் இந்துவின் பணி தொடரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *