சித்தருக்குக் கிட்டிய சித்தி

நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவரைப் பற்றி பல வரலாற்றுச் செய்திகள் சொல்லப்படுகின்றன. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பிரதிஷ்டை செய்தவர் இந்த சதாசிவ பிரம்மேந்திரர் என்கிறார்கள். இவர் நிகழ்த்திய அற்புதங்கள் இன்றும் பேசப்படுகின்றன. இவருடைய சமாதியின் மேல் வளர்ந்திருக்கும் விருக்ஷம் பட்டுப் போனது, இப்போது மீண்டும் துளிர்த்து வளர்வதைக் காண மக்கள் வந்து போகிறார்கள். நெரூர் காவிரிக் கரையில் அமைதியான சூழலில், வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சுகின்ற இடத்தில் அமைந்திருக்கிறது இவரது சமாதி. இவரது சித்துக்களில் ஒன்றை பார்க்கலாம்.

sadasiva-brahmendra-samadhi

காவிரியாறு ஈரோட்டைத் தாண்டி கொடுமுடி எனும் தலத்துக்கு வருகின்ற இடத்தில், ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அகத்தியம்பாறை எனும் இடம். ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்தப் பாறையின் மீது மோதி காவிரி வெள்ளம் கிழித்துக் கொண்டு இருபுறமாக விரைந்து செல்லும் அழகைப் பார்த்து ரசிக்கலாம். அந்த பாறையின் மீதுதான் சதாசிவ பிரம்மேந்திரர் வந்து அமர்ந்து தியானத்தில் இருப்பாராம். பிறரால் தொல்லை ஏற்படாத ஏகாந்தமான இடமாக இந்த இடத்தை பிரம்மேந்திரர் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை. அப்படி அவர் தியானத்தில் தன்னை மறந்து, இவ்வுலக புறவாழ்வை, தன் உடலை மறந்த நிலையில் பிரம்மத்தில் ஈடுபட்டிருக்கும்போது சுற்றுப் புறத்திலோ, தன் உடலுக்கோ எது நேரினும் அதனை உணரமுடியாத ஆழ்ந்த தியான நிலை. அப்போது அவர் உடல் வெறும் கட்டை, அதற்கு ஏற்படும் துன்பம் அவரை எட்ட முடியாத நிலை.

அப்படியொரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சதாசிவ பிரம்மேந்திரரை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஒவ்வொரு நாழிகைக்கும் அதிகரித்து இறுதியில் பாறையின் மீது ஆழ்நிலை தியானத்தில் இருந்த யோகியாரை அடித்துக் கொண்டு போய்விட்டது. அவர் உடல் என்னாயிற்று. அவர் உயிர் என்னவாயிற்று என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சில நாட்களில் ஆற்று வெள்ளம் வற்றியதும், பாறையில் அமர்ந்து தியானத்திலிருந்த அந்த யோகி எங்கே, என்னவானார் என்று சிலர் தேடத் தொடங்கினார்கள். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் எங்கு சென்றாரோ, கரை ஏறினாரோ, தன்னை மறந்து இருந்த நிலையில் நீரில் மூழ்கி இறந்து போய் உடல் எங்காவது கரை ஒதுங்கியதோ. அல்லது ஆற்று நீரோடு போய்விட்டதோ? தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை என்றதும், மக்களும் சோர்ந்து போய் தேடுதலை விட்டுவிட்டார்கள். மறந்தும் விட்டார்கள்.

சில காலம் ஆனபின்பு ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன. மணல் கொள்ளை என்பது இப்போதுதான், ஆனால் அந்த நாளில் வீடு கட்ட, மற்ற கட்டடங்கள் கட்ட மணலை ஆற்றிலிருந்து வண்டிகளில் எடுத்துப் போனார்கள். அப்படி மணல் எடுத்துப் போக வந்த ஆட்கள் ஆற்றில் நல்ல மணல் மேடிட்டுக் கிடந்த இடம் நோக்கிப் போய் அங்கு மண்வெட்டியால் மணலைத் தோண்டி எடுத்து வண்டிகளில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். மேடு கரைந்தது. வண்டிகளில் மணல் நிறைந்தது. சற்று ஆழத் தோண்டிய ஒரு இடத்தில் மணல் எடுத்தவன் ஓங்கி மண்வெட்டியால் வெட்டியபோது, மணல் அல்லாத ஏதோவொரு பொருளின் மீது மண்வெட்டி பட்டதை உணர்ந்தான். உடனே அந்த இடத்தை ஜாக்கிரதையாக தோண்டி மணலை விலக்கிப் பார்த்தான். அங்கு ஒரு மனிதரின் தலை. அதில் மண்வெட்டியின் வெட்டுப் பட்டு குருதி கசிந்தது.

சுற்றிலும் இருந்த மணலை விலக்கி அந்த மனிதரை வெளியே எடுத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாறையின் மீது யோகத்தில் ஆழ்ந்திருந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான் அவர். இத்தனை நாள் மணலுக்கடியில் தன்னுணர்வு இன்றி சதா சிவ தியானத்தில் ஆழ்நிலையில் உறைந்திருந்திருக்கிறார். பரப்பிரம்மமான ஞானி ஒருவர் மணலுக்கடியில் யோக நிலையில் இருந்தவர் தலையில் மண்வெட்டி பட்டு இரத்தம் கசிகிறது, அந்த ஞானி உயிருடன் தான் இருக்கிறார் எனும் செய்தி ஊருக்குள் கசிந்தது.

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்தனர். செய்தி சுற்றுப்புறங்களுக்கும் பரவியது. கொடுமுடிக்கருகில் ஆற்றுக்கிடையே இருந்த பாறையில் ஒரு ஞானி தவத்தில் இருந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது என்றார்கள். இவர் அவராகத்தான் இருக்க வேண்டும். இவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். ஞானி அல்லவா, உணவு, நீர் இன்றி உயிர்வாழும் சக்தி வேறு யாருக்கு உண்டு. அவரை மணலுக்குள்ளிருந்து வெளியே கொணர்ந்து, உடலுக்கு சூடேற்றி, உண்ண ஆகாரம் கொடுத்து அவரை மக்கள் சுயநிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

சுய நினைவு திரும்பி சுற்றிலும் நிற்கும் மக்களை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்து தான் எங்கிருக்கிறோம், தனக்கு என்னவாயிற்று என்பதை உணராமல், உடனே புறப்பட்டு யாரிடமும் எதையும் கேட்காமல் மெளனியாக கால்போன போக்கில் வேகமாகச் சென்று மறைந்து விட்டார் இந்த ஞானி சதாசிவ பிரம்மேந்திரர். இப்படியொரு வரலாறு இந்த யோகியைப் பற்றி இன்றும் பேசப்படுகிறது.

*********

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்.

தஞ்சாவூர் மாரியம்மன் என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்படும் இந்த மாரியம்மன் கோயில் இருக்குமிடம் புன்னைநல்லூர். தஞ்சையிலிருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் இவ்வூர் வழியாகத்தான் திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் செல்லும். இந்த மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன். இவ்வாலயம் எழுந்த வரலாற்றையும், இவளை வழிபட்டு பலனடைந்த பலருடைய வரலாற்றுச் செய்திகளும் ஏராளம். ஒரு ஆங்கிலேய அதிகாரிகூட இவளை வழிபட்டு தன் கண்பார்வை பெற்றதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இன்னொரு சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. நாகூர் தர்காவுக்கு இந்துக்களும் சென்று வழிபடுவது போல, இந்த மாரியம்மனை இதர மதத்தாரும் வந்து வழிபடுவதை நாம் பார்க்க முடிகிறது.

ஒரு முறை மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரச குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்தனர். அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது சமயபுரம் மாரியம்மனின் நினைவு மன்னனுக்கு வந்தது. சமயபுரத்தாள் பக்தன் மன்னன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, நீ சமயபுரம் தேடி அத்தனை தூரம் வருவானேன், உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க வெறு இடம் தேடி போவானேன், என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

mariamman-and-sadasiva-brahmendra

தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் தன்னுடைய இருப்பிடம் இங்குதான் என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு சித்தர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொல்ல, அந்த மகான் எழுந்து அந்த புற்றை மாரியம்மனாக உருவாக்கினார். மன்னனுடைய எண்ணத்தை உணர்ந்த அந்த மகான் அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் சதாசிவ பிரம்மேந்திரர். சித்தர் பெருமான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், சித்தரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

அந்தப் புற்றின் மேல் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.

இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்.

Tags: , , , , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் சித்தருக்குக் கிட்டிய சித்தி

 1. கதிரவன் on July 3, 2013 at 1:06 pm

  நெரூர் சதாசிவ ப்ரம் மேந்திரரை நினைத்து வணங்குவோம். வளம் பல பெறுவோம். சிறந்த கட்டுரை தந்த தஞ்சை வெ கோபாலன் அவர்களுக்கு நமது நன்றிகள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

 2. க்ருஷ்ணகுமார் on July 3, 2013 at 3:20 pm

  இன்று ஏகாதசி.

  எவருடைய மனத்தில் கண்ணன் விளையாடுவனோ (கேலதி மம ஹ்ருதயே) அந்த அருமைச் சித்தரைப் பற்றி வாசிக்கும் பேறு கிட்டிற்றல்லவா? அது கண்ணனருகில் அழைத்துச் செல்லுமல்லவா? அந்தப் பேறை அளித்திட்ட ஸ்ரீ கோபாலன் (எல்லாம் க்ருஷ்ணமயம்) திருவடித் தாமரைகளில் என் சென்னி இருப்பதுவே.

  ஸ்ரீ சதாசிவ ப்ரும்மம் பல வேதாந்த நூற்களும் செய்துள்ளார். இனிமை கொஞ்சும் பல சம்ஸ்க்ருத் கீர்த்தனைகளும் பாடியுள்ளார். என் மனம் கவர்ந்த ஒரு கீர்த்தனையும் என் புரிதலுக்கு எட்டியபடி அதன் தமிழாக்கமும்.

  கா3யதி வனமாலி மது4ரம் கா3யதி வனமாலி

  பாடுகின்றான் கண்ணன் இனிமையுடன்; பாடுகின்றான் கண்ணன்

  புஷ்ப சுக3ந்த4 மலய சமீரே

  மலர் கந்தம் கமழும் காற்றினிலே

  முனிஜன சேவித யமுனா தீரே

  முனிவர்கள் தொழுதிடும் யமுனைத்துறையிலே

  குஞ்சித சுக பிக முக2 க2க3 குஞ்சே

  கிளிகளும் குயில்களும் கொஞ்சும் குஞ்சத்தில் (மலர்ப்பூந்தோட்டம்)

  குடிலாலக ப3ஹு நீரத4 புஞ் ஜே

  நீருண்ட மேகக் குழலுடைய

  துளஸீ தா4ம விபூ4ஷண ஹாரி

  விருப்புடன் திருத்துழாய் சூடுபவன்

  ஜலஜ ப4வ ஸ்துத சத்கு3ண ஸௌரி

  நீர் (அலை) மகள் போற்றிடும் நற்குண ஸௌரி

  பரமஹம்ஸ ஹ்ருதயோத்ஸவகாரி

  முனிவோர் மனமென்றும் களிப்புறச்செய்பவன்

  பரிபூரித முரளீரவதா4ரி

  அமுதம் பொழி குழல் இதழிலணிந்தவன்

 3. ramesh srinivasan on July 5, 2013 at 1:04 pm

  சதாசிவப் பிரமம் மௌனத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒருமுறை திருவிசனல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் அவரிடம் நீங்கள் மக்கள் உய்ய வழி சொல்லவேண்டும் என்றார். அப்போது ஒரு மரத்தின் மேல் இருந்த சதாசிவர் ” ப்ருகி முகுந்தேகி என்று பாடிக் கொண்டே குதித்தார். அவர் மௌன குருவாய் வாழ்ந்தாலும் பல பக்தி கீர்த்தனைகளை பாடியுள்ளார். மானச சஞ்சரரே
  அவருடைய பாடல்தான்.

 4. Prassannasundhar N on July 7, 2013 at 3:48 am

  கட்டுரையை வழங்கிய ஐயா, திரு தஞ்சை வெ. கோபாலன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அடியேனின் பூர்வீகம் நெரூர் தான். ஆண்டு தோறும் சதாசிவ பிரமேந்திரரின் ஆராதனைக்கு சாதி மத பேதம் இன்றி பக்தர்கள் உண்ட இலையில் அங்கப்ரதக்ஷினம் செய்யும் பாக்கியத்தை சிறு வயது முதலே பெற்றவன். எங்கள் ஊர் கோவிலைப் பற்றியும், பிரமேந்திரரின் வாழ்க்கைச் சம்பவத்தையும் தாங்கள் எழுதியது அளவில்லாத மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 5. ramalingam on September 16, 2013 at 1:10 pm

  நெரூர் ஸ்ரீல ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் சுவாமிகள் வரலாறு மனம் பதிந்தது மிக நன்றி இவ்வுலகம் அறிய ஜீவ சமாதியர்களின் வரலாறு அறிந்திட வாழ்நாள் காப்போம் இறை பணியில் என்றென்றும் எம்ஜி ..ராமலிங்கம் ஜிஆர் நகர் மதுரை 625 007.

 6. v.lalitha on September 17, 2013 at 10:23 am

  it is a very appreciable thing that your news will reach all the masses since hindu is always actuing genuinely

 7. v.lalitha on September 17, 2013 at 10:29 am

  உங்களுடைய சேவை மிகவும் சிறப்பானது .நல்ல செய்திகளை ஆபாசமில்லாமல் கொடுப்பது உங்களால் மட்டுமே முடியும். எல்லாதரப்பு மக்களையும் சென்றடைய தாமதமானாலும் நல்ல முடிவு. வாழ்த்துக்கள்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey