ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18

முந்தைய பகுதிகள்

தொடர்ச்சி..

50. तीर्त्वा मोहार्णवं हत्वा रागद्वेषादिराक्षसान् |
योगी शान्तिसमायुक्त आत्मारामो विराजते ||

தீர்த்வா மோஹார்ணவம் ஹத்வா ராகத்வேஷாதிராக்ஷசான் |
யோகீ ஷாந்திசமாயுக்த ஆத்மாராமோ விராஜதே ||

மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று – யோகி
அமைதியொடு கூடி ஆன்மாவின் இன்பத்து
அமைந்து ஒளிர்வன் என்றே அறி

(மோகம் எனும் கடலைத் தாண்டிவந்து மூண்டு எழுகின்ற ஆசை, கோபம் முதலான அரக்கர்களை முற்றிலுமாக அழித்து, யோகியானவன் அமைதியுடன் ஆன்மாவிடத்தில் ஒன்றி ஆனந்தத்தை அடைந்தவனாகி ஒளி வீசுபவனாய் இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்.)

rama-lord-of-boons-2இந்த ஸ்லோகத்தில் “ஆத்மா ராம:” என்ற சொற்றொடர் ‘ஆன்மாவில் திளைத்து இன்புற்று’ என்ற பொருளில் வருகிறது. ஆனாலும் “ராம:” என்று வந்திருப்பதால் இந்த ஸ்லோகம் “அத்யாத்ம ராமாயண” முறையில் இராமாயண நிகழ்வுகளையே சுருக்கமாகக் குறிப்பிடுவதாக பெரியோர்களால் சொல்லப்படுவதும் உண்டு. இராமன் சீதையை இழந்து தவிப்பது போல ஜீவனும் சாந்தியை இழந்து தவிக்கிறான் என்ற உருவகம் இங்கு காணப்படுகிறது.

அதன்படி விருப்பு-வெறுப்பு எனும் வாசனைகளாகிய அரக்கர்களினால் மோகம் எனும் கடலின் நடுவில் சாந்தி எனும் சீதை சிறை வைக்கப்படுகிறாள். அப்போது தொலைந்து போன சீதையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த ஆஞ்சநேயர் போல, குரு வடிவில் ஒருவர் சாந்தியை அடைவதற்கு உரிய வழியைக் காட்டுகிறார். அந்த வழிகாட்டுதலின் படி, ஜீவனாகிய இராமன் தியானப் பயிற்சிகள் என்ற பாலத்தின் துணையினால் மோகம் எனும் அஞ்ஞானக் கடலைத் தாண்டி வந்து, சிறை வைக்கப்பட்டுள்ள அமைதி எனும் சீதையை ஆன்ம விசாரம் எனும் ராம பாணத்தினால் வாசனைகளாம் அரக்கர்களிடமிருந்து தப்பிக்க வைத்து, அமைதியுடன் தன் இயல்பான இடமான அயோத்தியை அடைந்து ஆனந்தமாய் இருந்தான் என்று பொருள் கூறுவர்.

முந்தைய மற்றும் இந்த ஸ்லோகம் உள்பட இன்னும் இரண்டு ஸ்லோகங்களிலும் ஜீவன் முக்தனின் லக்ஷணம் விவரமாக விளக்கப்படுகிறது. வெளியுலக விஷயங்களில் ஆசைகளை வளர்த்துக்கொண்டு, அதனால் பெருகி வரும் வினைக்கடலில் மூழ்கியுள்ள ஜீவன், தன் மன அமைதியை இழக்கிறான். ஆனாலும் அவன் என்றோ செய்த நல்வினைப் பயனாய், அவனுக்கு வழிகாட்ட ஒரு குரு அமைகிறார். அவர் சொல்படி அவன் முயற்சிகள் எடுக்க, அவனது மனம் ஆன்மாவுடன் ஒன்றுபடுவதே யோகம் எனப்படுகிறது. அப்படிப் பண்பட்ட மனம் வெறும் மனோலயத்தோடு நிற்காது, ஆன்ம விசாரத்தினால் “மனம் என ஒரு பொருளில்லை” என்று ரமணர் சொல்வதுபோல மனோநாசமாகி, ஆன்மானுபவத்திலே திளைத்து ஆனந்தமயமாய் இருப்பதே முக்தி எனப்படுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, ஆத்மானந்தமாய் இருப்பவன் ஆன்மாவின் தன்மையால் எப்போதும் ஒளி வீசிக்கொண்டு பிரகாசமாய் இருப்பான்.

51. बाह्यानित्यसुखासकितं हित्वात्मसुखनिर्वृतः |
घटस्थदीपवत्स्वस्थं स्वान्तरेव प्रकाशते ||

பாஹ்யாநித்யசுகாசகிதம் ஹித்வாத்மசுகநிர்வ்ருதஹ |
கடஸ்ததீபவத்ஸ்வஸ்தம் ஸ்வாந்தரேவ பிரகாஷதே ||

அனித்த வெளி இன்பிச்சை அற்றானாய் ஆன்மா
தன் இன்பில் திருத்தி தனையுற்று – அனிசமும்
தன்னொளியால் குடந்தன்னுள் விளக்கெனத்
தன்னுளே தான் ஒளிர்வன்தான்

(தனக்கு வெளியே உள்ள பொருட்களினால் வரும் நிலையற்ற இன்பங்களில் ஆசை இல்லாதவனாய், ஆன்மானுபவத்தினால் வரும் இன்பம் ஒன்றிலேயே திருப்தி அடைபவனாய் இருந்து, குடத்துக்குள் இருக்கும் விளக்கைப் போல, அவன் எப்போதும் தனக்குள்ளே தானாய்ப் பிரகாசிப்பவன்.)

மனிதர்கள் அனுபவிக்கும் சுகங்களிலேயே உயர்வானது அரச போகம் என்னும் மனித ஆனந்தம் என்றும், அதையும் விட உயர்ந்ததாக கந்தர்வ ஆனந்தம், அதற்கும் மேலாக தேவ ஆனந்தம் என்றும் படிப்படியாக வந்து இறுதியில் பிரும்ம ஆனந்தம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தப் பிரம்மானந்தமோ பரமானந்தக் கடலின் ஒரு துளிக்கு மட்டுமே சமம் என்றும், ஆத்மனை உணர்ந்தவனின் ஆனந்தம் அந்தக் கடலுக்கே சமம் என்றும், அதனை எல்லாவற்றிலும் உயர்ந்ததாக உபநிஷத்துக்கள் சொல்கின்றன. இதுதான் மனிதனின் வெளிப்பார்வையால் அடையப்பெறும் உலக விஷய இன்பத்திற்கும், உண்முகப் பார்வையால் அடையப்பெறும் ஆன்ம ஞானத்தால் வரும் ஆனந்தத்திற்கும் உள்ள மாபெரும் வித்தியாசம்.

அப்படி வெளியுலக விஷயங்களில் மூழ்குவது என்பது ஒரு திரைப்படம் பார்ப்பது போலத்தான். திரையில் காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கும்வரைதான் ஒருவனுக்கு அதில் ஈடுபாடு உண்டு. அதனால் இன்பமும் வரும்; துன்பமும் வரும். அதேபோல ஒரு விஷயம் இல்லாவிட்டால் இன்னொரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டு மனிதன் தன் வெளிப்பார்வையை வளர்த்துக்கொண்டே போவான். அதனால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பதையே வாழ்க்கையின் போக்கு என்று சொல்லி, அதை அனுபவிப்பதே வாழ்வின் இலக்கு என்றுதான் பலரும் நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். பார்க்கப்படுவதில் வெண்திரை இல்லாவிட்டால், மற்றெதுவும் இருந்தும், அங்கு காணப்பட்ட காட்சி இல்லை என்ற உண்மையை உணர்ந்தவனே ஞானி. வெறும் காட்சியை மட்டும் கண்டு களித்துக் கொண்டிருப்பவன் அஞ்ஞானி.

அப்படிப்பட்ட ஞானியின் ஆனந்தத்தை பார்ப்பவர்கள் உணரமுடியாது. ஏனென்றால் அது குடத்துக்குள் இடப்பட்ட விளக்கு போல ஆடாது, அசையாது ஒளி விட்டுக்கொண்டு இருக்கும். அது வெளியே தெரியாது. அவனைத் தெரிந்துகொண்டு இருப்பவர்களுக்கு அது புரியலாம். அவனால் அந்த ஆனந்த நிலையைப் பற்றி ஓரளவுக்கு சொல்ல முடிந்தாலும், அதன் முழு பரிமாணத்தையும் விளக்க முடியாது. அவனது வாழ்க்கை முறை, செய்கைகள், மற்றும் பேச்சுக்கள் மூலமே அதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

52. उपाधिस्थोsपि तद्ध्मैरलिप्तो व्योमवन्मुनिः |
सर्वविन्मूढवतिष्ठेदस्क्तो वायुवच्चरेत् ||

உபாதிஸ்தோபி தத்தர்மைரலிப்தோ வ்யோமவன்முனிஹி |
சர்வவின்மூடவதிஷ்டேதஸ்கதோ வாயுவச்சரேத் ||

உபாதி உற்றானேனும் ஒட்டா விண்போல அவ்
வுபாதி தர்மங்களோடு ஒட்டான் – உபாதியிலான்
முற்றறிவன் ஏனும் முனி மூடன் என வாயுபோல்
பற்றற்றுச் சஞ்சரிப்பான்

(ஞானி உபாதிகளுடன் இருந்தாலும், ஆகாயம் எதனாலும் பாதிக்கப்படாது இருப்பது போல, ஞானியும் உபாதியின் தன்மைகளோடு ஒட்டாமல் இருப்பான். அவன் உபாதிகள் இல்லாதிருந்தால், முற்றும் உணர்ந்த முனிவனாயினும் மூடனைப் போலவும், காற்றைப் போலவும் எதனிலும் பற்றில்லாமல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருப்பான்.)

adishankara-and-four-disciples

ஆத்ம ஞானம் அடைந்தவன் எப்போதும் ஆனந்தமாய் இருப்பான் என்றும், அது பொருட்களின் சேர்க்கையால் ஒருவனுக்கு சாதாரணமாக வரும் இன்பம் என்பதிலும் வேறானது என்றும் முன்பு நாம் பார்த்தோம். மற்றவர்களைப் போலவே ஞானியும் உலக வாழ்க்கையில் இயல்பாக ஈடுபடுவதைப் பார்க்கிறோமே, அப்படியென்றால் அவனுக்கும் மனம், புத்தி போன்றவைகள் எவருக்கும் இருப்பது போலத்தானா என்ற சந்தேகத்திற்கு இந்த ஸ்லோகத்தில் பதில் கொடுக்கிறார் சங்கரர்.

இவ்வுலகில் பிறந்துவிட்டான் என்பதால் ஞானிக்கும் மற்றவர்களைப் போலவே உடல் இருக்கிறது என்பது தவிர, மற்றவர்களைப் போலவே மனமும், புத்தியும் இயங்குகிறது. ஆனாலும் மற்றவர்கள் மனமும் புத்தியுமே தான் என்று தன்னைப் பற்றிக் கருதுவது போல ஞானி தன்னை அவ்வாறு குறுக்கிக் கொள்ளமாட்டான். மேலும் அவனுடைய உடல் என்பதுகூட மற்றவர்கள் பார்வைக்கு இருந்தாலும், அவனைப் பொருத்தவரை அவன் தன்னை உடல் என்றும் கருதமாட்டான். அதனால் அவனது உடலுக்கு ஏதும் நேர்ந்தாலும் ஏதோ வேறு ஒரு பொருளுக்கு அது நடப்பது போலவே அவனுக்கு உணர்வு இருக்கும். அதைப் போலவே அவனது மனமும், புத்தியும் இயங்கும். குழந்தைகள் எப்படி வெகுளித்தனமாகப் பேசி எல்லோரையும் மகிழ்விக்கின்றனரோ, அதே போல ஞானியின் பேச்சும் செயல்களும் இருந்தாலும், அவனது பேச்சு மற்றும் செய்கைகளில் ஒரு முதிர்ச்சியும் இருக்கும். ஆனாலும் குழந்தைகள் எப்படி தனது செயல்களின் விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லையோ, அதே போன்ற மனநிலைதான் ஞானிக்கும் இருக்கும்.

அவனுக்கு இருப்பதெல்லாம் தனது இருப்பு என்ற உணர்வு ஒன்று மட்டுமே. மற்றதையெல்லாம் அவன் ஒரு சாட்சியாக மட்டுமே எவருக்கோ நடப்பது போலப் பார்த்துக் கொண்டிருப்பான். முன்பு வேறொரு ஸ்லோகத்தில் நாம் பார்த்தது போல, எப்படி எல்லாவற்றிலும் ஆகாயம் பரவி விரிந்து இருந்தாலும் அதில் இருக்கும் பொருட்களின் குணத்தால் பாதிக்கப்படுவது இல்லையோ, அதேபோல ஞானி உபாதிகளுடன் இருந்தாலும் அவைகளின் குணத் தன்மைகளால் அவன் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்திலே, மற்ற நான்கு பூதங்களான மண், நீர், நெருப்பு, வாயு இருந்தாலும் எப்படி ஆகாயம் பாதிக்கப்படுவது இல்லையோ, அதேபோல ஞானியும் உபாதிகள் இருந்தாலும் அவைகளால் பாதிக்கப்படுவது இல்லை. அவனுக்கு உபாதிகள் இருப்பதுபோல நமக்குத் தெரிகிறது என்பதுதான் வெளியே புலப்படாத ஓர் உண்மை.

உபாதிகள் இன்று ஞானிக்கு இருப்பதுபோலத் தோன்றினாலும் அவை நாளை தினமும் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. ஒரேயடியாக ஞானிக்கு எப்போதுமே உபாதிகள் இல்லாமலும் போகலாம். அப்படி இருந்தால் அவன் காற்று எங்கும் பரவி, விரிந்து இருப்பதுபோல எந்த இடத்திலும் நில்லாமல் அலைந்து கொண்டிருப்பான். அதனையே “சித்தம் போக்கு, சிவம் போக்கு” என்று சொல்வார்கள். அதாவது அந்த நிமிடத்தில் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி நடப்பார்கள் என்பதுதான் அதில் நாம் காணவேண்டியது. குண விசேஷங்கள் ஏதும் அவனுக்கு அப்போது வெளிப்படையாகவும் இல்லாதபடியால் அவனது செய்கையும் புரியாத புதிராக இருக்கும். கிட்டத்தட்ட அவனது செய்கைகள் ஒரு பைத்தியக்காரனுடையது போலவே இருக்கும். ஆனானப்பட்ட சிவபெருமானையே “பித்தா” என்று விளிக்கும்போது ஞானிகள் மட்டும் வேறு எவ்வாறு இருக்கலாம் என்று எதிர்பார்க்க முடியும்?

ஞானிக்கு பிராரப்தம் எனச் சொல்லப்படும் ஊழ்வினை மீதம் உள்ளதால் மட்டுமே அவன் உடல் எடுத்து வந்திருக்கிறான் என்று அவனைப் பார்ப்பவர்க்குக் காரணம் சொல்லப்படும். அதனால், நம்மைப் பொருத்தவரை, நாம் ஞானியைப் பார்க்கும் கொடுப்பினை நமக்கு இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஞானியைப் பொருத்தவரை பிராரப்தம் மட்டும் அல்ல, சஞ்சிதம், ஆகாமியம் என்று சொல்லப்படும் மூவினையும் அவனை ஒட்டாது. இதனையே ரமணர் “மூன்று மனைவியுள்ள ஒருவன் இறந்துவிட்டால், பர்த்தா போன மூவருமே கைம்மை அடைவதுபோல, கர்த்தா போன ஞானிக்கு மூவினையும் கழன்றுவிடும்” என்பார்.

53. उपाधिविलयाद्विष्णौ निर्विशेषं विशेन्मुनिः|
जले जलं वियद्व्योमिन तेजस्तेजसि वा यथा ||

உபாதிவிலயாத்விஷ்ணெள நிர்விஷேஷம் விஷோன்முனிஹி |
ஜலே ஜலம் வியத்வ்யோமின் தேஜஸ்தேஜஸி வா யதா ||

உபாதி நாசத்தால் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே – அபேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயில் தீயும் போலத் தேர்

(நீரில் நீரும், தூய்மையான ஆகாயத்தில் ஆகாயமும், தீயில் தீயும் கலப்பது போல, தூலமாகிய உடல் நீங்கும்போது, மீதமுள்ள நுண்ணியதான மனம், புத்தி இவைகளும் நீங்கி ஞானியானவன் உபாதியற்ற, எங்கும் நிறைந்த பிரம்மத்தில் கலந்து இரண்டற்ற நிலையை அடைவான்.)

man_exclaiming_at_llightமுந்தைய ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்ட ஒரு ஜீவன்முக்தன் விதேக முக்தன் ஆகும்போது நடப்பது பற்றி இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சாதகன் ஆன்ம ஞானம் பெற்று ஜீவன்முக்தன் ஆகும்போது, பரமாத்மாவிலிருந்து அவனை அதுவரை பிரித்து அறியக் காரணமாயிருந்த அவனுடைய அவித்தையான காரண சரீரம் நாசமடைகிறது. அவனுக்கு இவ்வுலகில் இருக்கும் பிராரப்தம் எனும் ஊழ் இருக்கும்வரை, மற்றவர்களைப் பொருத்தவரை தூலமாகிய அவனது உடலும், நுண்ணியதான அவனது மனமும், புத்தியும் எல்லோருக்கும் இருப்பது போலவே இயங்குகிறது. ஆனால் அவனது உடல் மரிக்கும்போது (விதேகம் அடையும்போது) அந்தத் தூலம் மட்டுமன்றி, நுண்ணிய சரீரங்களும் நாசமடைகின்றனஎன்று நமது சாத்திரங்கள் கூறுகின்றன. ஆக அவித்தையான அஞ்ஞானம் அழிவதுதான் முக்கியமே தவிர, மற்ற சரீரங்கள் இருப்பதும் இல்லாததும் ஒரு பொருட்டல்ல. அப்படி ஞானம் அடைந்தவர்கள் உலகில் சஞ்சரித்து வருவது, மற்றவர்கள் ஞானம் பெறுவதற்கு கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பே.

அப்படி விதேக முக்தியின் போது நடப்பதை இங்கு மூன்று உவமைகளைக் கூறி விளக்குகிறார். ஒரு குடத்தில் நீர் இருக்கிறது, அதை ஒரு குவளையில் மொண்டு எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது குடத்து நீரும், குவளை நீரும் அவை இருக்கும் இடத்தால் வேறு வேறாக குறிப்பிடப்படுகின்றன. அந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் அவை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்த முடியும்? அதேபோல ஒரு காலி குடத்திலும் ஆகாயம் இருக்கிறது, வெளியேயும் ஆகாயம் இருக்கிறது. அப்போது குடத்தின் உள்ளே வெளியே என்று ஆகாயத்தைப் பிரித்துச் சொல்ல முடியும். குடத்தை உடைத்து விட்டால் உள்ளே இருந்த ஆகாயம் வெளியே கலந்துவிட்டது என்றா சொல்வது? அது போன்றே எரியும் அக்னிப் பிழம்பிலிருந்து ஒரு கனலை எடுத்தால் அவை இரண்டையும் வெவ்வேறாகக் குறிப்பிடுவோம். மறுபடியும் அந்தக் கனலை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டால் அவை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்திச் சொல்ல முடியும்? அப்படியாக பரம்பொருளையும், சீவனையும் பிரித்து வைத்த உபாதிகள் நீங்கியதும், சீவன் எங்கும் பரவி விரிந்துள்ள பரமனிடம் கலந்து ஒன்றாகிவிடுகிறான் என்று சொல்லப்படுகிறது.

இதையும் நாம் யோசித்துப் பார்த்தோமானால், உண்மை வேறாக இருப்பது நமக்கு விளங்கும். குடம் இருப்பதால் ஆகாயம் பிளவுபட்டது போலத் தோன்றுவது நமது பிரமையே. குடத்துக்குள் இருந்த ஆகாயம்தான், குடம் இருந்தபோதும் இல்லாதபோதும் எப்போதும் அங்கேயே இருந்திருக்கிறது. ஆகாயம் அப்படி பிளவுபடாது இருப்பது போல, பரம்பொருள் என்றும் சீவன் என்றும் வெவ்வேறாகத் தோன்றுவதும் இடையில் வந்த உபாதிகளால் வந்துள்ள ஒரு பிரமையே. அதனாலேயே உபாதிகள் நீங்கியதும் சீவன் தான் பரம்பொருள் அன்றி வேறில்லை என்பதை உணர்வதே முக்தி, அல்லது அதுவரை அவனைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த பிரமையிலிருந்து விடுதலை, எனப்படுகிறது. அது உயிர் உள்ளபோதே நடந்தால் அவன் ஜீவன் முக்தன் எனப்படுகிறான். அப்படியும் அவனது முன்வினைப் பயனால் ஸ்தூல மற்றும் சூக்ஷ்ம உடல்கள் இயங்கிக் கொண்டிருந்தால், அவனது உயிர் பிரியும்போது அவைகளும் மறைகின்றன. அப்போது தனியே இருந்தது போலக் காணப்பட்ட சீவன் எல்லா உடல்களையும் இழந்ததால், பரம்பொருளில் ஒன்றாகி இழந்தது போல இருந்த நிலையிலிருந்து மீள்கிறான். அதனாலேயே அதனை யோகம் என்றும் சொல்கின்றனர்.

(தொடரும்)

5 Replies to “ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 18”

  1. இனிய தொடரை வழங்கிவரும் திரு இராமன் அவர்களுக்கு நமது நன்றி. பாராட்டுக்கள்.

  2. இனிய ஆன்மீக சிந்தனைகளின் தொகுப்பு. ஆன்மீகம் என்பது அன்றாட வாழ்க்கைக்கு தேவை இல்லாத ஒரு விஷயம் என்று பலரும் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சமநோக்கு உள்ளவர்களே அன்றாட செயல்களிலும் சிறந்து விளங்க முடியும். ஒரே நோக்கு பெற ஆன்மிகம் மிக மிக உதவுகிறது. அந்த ஒரே நோக்கு ( ஏகாக்கிரக சிந்தனை) பெற இத்தொடர் நமக்கு உதவுகிறது. தமிழ் ஹிந்துவுக்கும் , திரு இராமன் அவர்களுக்கும் இறைஅருள் என்றும் பெருகுக. வையகம் வளமுடன் வாழ்க.

  3. ஆதிசங்கரரின் இந்த ஆன்ம போதனை தொடர் வெளிப்பார்வைக்கு வயதான பெரியவர்கள் மட்டுமே படிக்க வேண்டிய தொடர் என்பதுபோல ஒரு மாய தோற்றம் நம் மனதில் வருகிறது. அது எவ்வளவு அறியாமை என்பது போகப்போக தெளிவாகிறது. மவுன குருவாம் ஆதி தட்சிணாமூர்த்தி தன் சீடர்களாம் சனகாதி முனிவர்களுக்கு செய்த உபதேசத்தில் வாக்கிறந்த பூரணமாய் , கேள்வியும் பதிலும் மவுனத்திலேயே வெளிப்பட்டன என்ற அற்புதம் எப்படியோ, அப்படியே இந்த தொடர் தரும் சிந்தனைகள் நமக்கு நல்ல ஆனந்தத்தை தருகின்றன. இந்த ஆனந்தம் என்றும் தொடர, தென்புலம் நோக்கிய கடவுளை வணங்கி மகிழ்வோம்.

    ” கல்லாலின் புடை அமர்ந்து நான் மறை ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி

    வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

    எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி

    சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.”

  4. ஆதி சங்கரரின் அத்வைதமே ஐன்ஸ்டீனின் பொருளும் சக்தியும் ஒன்று எனும் தத்துவம் . யார் ஒருவர் அவற்றை அறிந்து கொள்கிறாரோ அவரிடம் சுயநலம் , பேராசை இருக்காது. வாழ்வு என்பது இயற்கையை அறிந்து கொள்ள இறைவன் அளித்டிருக்கும் கொடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *