திருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை

திரு. நரேந்திர மோதி திருச்சியில் உரையாற்றி முடித்து விட்டார். சம்பிரதாயமாக தமிழில் ஆரம்பித்து, பிறகு ஹிந்தியில் மிக உணர்ச்சிகரமாக பேசினார். நடுவில் சில பகுதிகள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தன. இயல்பாகவே மிகச் சிறந்த பேச்சாளர் மோதி. இந்த உரையும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா நன்றாகவே மொழியாக்கம் செய்தார். ஆனால் மோதியின் குரலில் இருந்த உணர்ச்சிகள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ராஜாவின் மென்குரல் பேச்சில் கொஞ்சம் நீர்த்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

தொடக்கத்தில் இன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியான நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்த படியே மௌனம் அனுஷ்டிக்கக் கோரினார் மோதி.  பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்,  அலைபாயும், கூச்சல் போடும் கூட்டத்தை அமைதிப் படுத்தி தன் நிலைக்குக் கொண்டு வந்து பேச்சில் கவனம் குவிக்கவும் இது உதவியது. பேசப் போகிற விஷயம் கைதட்டலுக்கானது மட்டுமல்ல, கவனத்திற்கானது என்று அறிவிப்பது போலிருந்தது இது.

modi_trichy”கம்பனும் வள்ளுவனும் பாரதியும் பிறந்த தமிழ் மண்ணிற்கு வருகை தருவதை மதிப்புக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். தமிழ் மக்களிடம் மூன்று நல்ல குணங்கள் உண்டு – கடும் உழைப்பு, சிரத்தை, ராஜகம்பீரம் & விசுவாசம் (royal & loyal). தமிழகத்தின் பொருட்கள் தேசிய, உலக சந்தைகளில் தரம் வாய்ந்தவையாக உள்ளன. தமிழ் மக்களின் உழைப்பினால் தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, தமிழ் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த மொழி” – இவ்வாறு தமிழ்ப் பண்பாட்டுக்கும் மக்களுக்கும் புகழாரம் சூட்டித் தனது உரையைத் தொடங்கினார்.

அடுத்து, குஜராத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள உறவுகளை, ஒற்றுமைகளைப் பட்டியலிட்டார். ”இரண்டும் கடற்கரைகள் கொண்ட மாநிலங்கள். பருத்தியை அதிகமாக விளைவிக்கிறது குஜராத், அதைப் பெருமளவு நுகர்ந்து ஆடையாக நெய்கிறது தமிழகம். குஜராத்தி காந்தியின் மனசாட்சியாக தமிழகத்தின் ராஜாஜி இருந்தார்.  தமிழ் மக்கள் குஜராத்திற்குப் புலம்பெயர்ந்து அதன் வளர்ச்சிக்கு உதவுவது போலவே, சௌராஷ்டிரர்களான குஜராத்திகள் தமிழ்நாட்டில் பல காலமாக இருக்கிறார்கள்.  பாலில் சர்க்கரை கலந்தது போன்ற இனிய உறவு அது. இங்கு சென்னையில் குஜராத்திகள் அதிகமாக வசிக்கும் சௌகார்பேட்டை போல  குஜராத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மணிநகர். எனது சட்டசபைத் தொகுதி அது. அங்குள்ள தமிழர்கள் தான் தொடர்ந்து வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்” என்று  நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இது ஒரு சாதாரண அரசியல்வாதி பேசும் பேச்சல்ல. இந்த தேசத்தின் மீது, மண்ணின் மீது, காலகாலமாக இருந்து வரும் அதன் சமூக, கலாசார பந்தங்களின் மீது ஆழமான பிடிப்பும், அன்பும் கொண்ட ஒருவரின் பேச்சு. எண்ணமும், செயலும் எல்லாம் இந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவதற்காகவே, இந்த தேசமக்களின் நல்வாழ்விற்காகவே இயங்கும் ஒரு தேசபக்தனின் பேச்சு. எத்தனை உரை எழுத்தாளர்களை வைத்துக் கொண்டாலும் காங்கிரசின் முட்டாள் இளவரனிடம் இருந்தோ, அல்லது மற்ற  சுயநல அரசியல்வியாதிகளின் வாயிலிருந்தோ இப்படி ஒரு பேச்சு சுட்டுப் போட்டாலும் வராது.

குஜராத்தின் மீனவர்களை பாகிஸ்தான் பிடித்துச் சென்று சித்ரவதை செய்வதையும், தமிழக மீனவர்களை இலங்கை அதே போன்று செய்வதையும் குறித்து அடுத்துப் பேசினார்.. இந்த நாடுகள் இப்படித் துளிர்த்துப் போய் விட்டதற்கு இடையே உள்ள கடல் நீர் காரணமல்ல,  தில்லியில் உள்ள பலவீனமான அரசும் அதன் கொள்கைகளுமே காரணம்.  இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கொல்கிறது. பாகிஸ்தானிய ராணுவம் நமது ராணுவ வீரர்களைக் கொல்கிறது.. பயங்கரவாதம் அபபவியான பொதுமக்களைக் கொல்கிறது, பூடான், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணமான அந்த பலவீனமான அரசை அகற்ற வேண்டும் – என்று முழங்கினார்.

அமெரிக்கா தனது மண்ணில் அநியாயமாக உளவறிந்து வருவதை அறிந்து, அந்த நாட்டுடனான ராஜரீக தொடர்புகள் அனைத்தையும் பிரேசில் துண்டிக்கிறது. தனது நாட்டின் தேசதுரோகியான ஸ்னோடன் என்பவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்ததால், தனது ரஷ்யப் பயணத்தையே அமெரிக்க அதிபர் ஒபாமா ரத்து செய்தார். இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றோம்? நமது பிரதமரோ பயங்கரச் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட தொடர்ந்து பாகிஸ்தானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார், அதன் அரசியல் தலைவர்களூடன் உட்கார்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்..  இந்த செயலை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.  இல்லை என்று பெரும் எதிரொலி வந்தது.

அடுத்து, காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ள பொருளாதார சீரழிவு குறித்து பேசினார்.

narendra-modi-trichy-295“இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால் இப்போது நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப் படுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதை சுட்டிக்  காட்டினார். ”அரசின் தவறான கொள்கைகளால் தொழில்கள் அழிகின்றன.  பெரும் வணிக முதலைகளுக்கு உதவும் அரசு, சிறிய தொழில் முனைவர்கள் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் போனால் அவர்களது பெயர்களை செய்தித் தாளில் விள்ம்பரப் படுத்தி அவர்களை அவமதித்து தற்கொலை வரை கொண்டு தள்ளுகிறது.  இந்தக் கொள்கைகள் மாற்றப்பட்டு  லட்சக்கணக்கான கோடிக்கணக்கான சிறீய தொழில்கள் வளர்க்கப் பட்டு அதன் மூலம் நமது இளைஞர்கள் மதிப்புக்குரிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் எங்களது அரசின் திட்டங்கள் இருக்கும்.

ஊழல் நமது பொதுவாழ்வை அழிக்கிறது. ஏழை மக்களைச் சென்று சேர வேண்டிய பணம் ஊழலில் வீணாகிறது. ஆதார் அட்டை என்ற திட்டம் குறித்த ஐயங்களை மூன்று வருடம் முன்பே நான் தெரிவித்தேன், அதே விஷயங்களை இப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்கிறது.  பண விரயம் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கும் வகையில் இந்த ஆதார் அட்டை முறைகேடுகள் உள்ளன.

காங்கிரசின் அரசியல் எப்போதும் மக்களைப் பிளப்பதாக, பிரிப்பதாக இருக்கீறது. சாதி, மதம், கிராம – நகர வேறுபாடு என்று பல முனைகளில் தொடர்ந்து மக்களைப் பிரித்தாளும் கொள்கைகளை காங்கிரஸ் செயல்படுத்தி வருகீறது.  காங்கிரசைக் கலைக்க வேண்டும் என்று அன்று காந்தி சொன்னதை உண்மையாக்கும் வகையில் நாம் தேசத்திற்கு காங்கிரசிடமிருந்து விடுதலை அளிக்க வேண்டும்” என்றார்.

”இந்த மைதானம் நிறைந்து, அதற்குப் பின்னுள்ள பாலத்தைத் தாண்டியுள்ள மைதானமும் நிறையும் அளவுக்கு இளைஞர்களின் கூட்டம் இங்கு கூடியுள்ளது. அந்த இளைஞர்களை என்னால் பார்க்க முடியவில்லை.. மைதானம் சிறியது, அதில் இடமில்லாமல் போகலாம்., ஆனால் என் இதயத்தில் எப்போதும் உங்கள் அனைவருக்கும் இடம் உண்டு.

தமிழக அரசியலையும் தேசிய அரசியலையும் அறிந்தவர்கள் இளைஞர்களின் இந்தக் கூட்டத்தைப் பார்த்தே இங்கு எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கீறது என்பதைக் காண முடியும், பல முறை தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறேன்,. இது போன்ற ஒரு இளைஞர் பெருந்திரளை இது வரை கண்டதில்லை, இங்கு வந்த அனைவருக்கும், ஏற்பாடு செய்த இளைஞர் அணியினருக்கும் மிக மிக நன்றி.

நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். எங்களது சக்தி அனைத்தையும் உங்களது முன்னேற்றத்திற்காக, நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். நீங்கள் எனக்கும் பாஜகவுக்கும் புதிய நம்பிக்கையையும் வலிமை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். வந்தே மாதரம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

இறுதியில் அனைவரும் முஷ்டிகளை உயர்த்தி வந்தே மாதரம் என்று முழங்கச் செய்தது சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.

சிறப்பான நிகழ்ச்சி.  அருமையான உரை. தனிப்பட்ட அளவில், மோதி இன்னும் சில விஷயங்களையும் பேசியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. சேலம் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டது குறித்து கட்டாயம் பேசப்பட்டிருக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணன் இலேசாக தன் பேச்சில் இதைச் சுட்டிக் காட்டினார்,  தமிழகத்தின் மின்சாரத் தட்டுப்பாடு,   இலங்கையில் தேர்தல் முடிந்த நிலையில் தமிழர்கள் மறுவாழ்வு குறித்த எதிர்பார்ப்புகள் ஆகிய விஷயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேசினார். அது போதாது. மோதியும் இந்த விஷயங்களைப் பேசியிருக்க வேண்டும்.

மொத்தத்தில் இது ஒரு மிக வெற்றிகரமான நிகழ்வு. மோதியின் திருச்சி விஜயம் கட்டாயம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், மோதி பிரதமராகப் போகும் வரலாற்றுத் தருணத்தில் தமிழகமும் தனக்குரிய பங்களிப்பை நல்கும் என்றும் நம்புவோம்.

நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை இந்த இணைப்புகளில் காணலாம்.

https://modiintamilnadu.com/

https://www.narendramodi.in/liveevent/social/index.html

தினமலர் செய்தி

தினமணி செய்தி

கட்டுரையாளர் ஜடாயுவை பேஸ்புக்கிலும் பின் தொடரலாம்: https://www.facebook.com/jataayu.blore

19 Replies to “திருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை”

  1. மோடி திருவடி பட்டு திருச்சி புனித மாகின்றது. புண்ணியபூமியாகின்றது………

    இந்தியாவில் உள்ள கட்சிகளில் ஜனநாயக முறையை ஓரளவுக்காவது பின்பற்றுவது BJP யும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான்.மற்றவை எல்லாம் மன்னராட்சி,பரம்பரை ஆட்சியாக மாறி விட்டன. கட்சியிலுள்ளவர்களும் கொத்தடிமைகளாக தான் செயல் பட்டு கொண்டிருக்கின்றனர்..இவர்கள் மாற வேண்டும் அல்லது நாம் மாற்ற வேண்டும்.நாம் என்ன செய்கிறோம்.நம் கட்சி தலைவர் சொல்லி விட்டால் கண்ணை மூடி கொண்டு ஓடுகிறோம். அவர் எதை செய்தாலும் ஆதரித்து சப்பை கட்டு கட்டுகிறோம். தவறு யார் செய்தாலும் தவறு தான் என்ன செய்வது,எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சமாதான படுத்தி கொள்வதிலும் பயனில்லை.இன்று BJP யும் MODI யும் நல்லது செய்வார்கள் என்று நம்புகிறோம்.அதற்கு காரணம் சென்ற முறை வாஜ்பாய் அவர்கள் தலைமையில் நடந்த ஆட்சி மற்றும் ஐந்து மாநிலங்களில் இப்பொழுது அவர்கள் தலைமையில் நடை பெறும் ஆட்சி.எனவே இப்பொழுது பிஜேபி யை ஆதரிப்போம்.

  2. தமிழ் வாழ தமிழர் நன்கு வாழ காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சி தேவை அது மோடி ஆல் மட்டுமே கொடுக்க முடியும் ..

  3. வேதாரண்யம் பற்றிய‌ செய்திகளைக் கூறும் போது மோடி சொதப்பியது
    தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

    உப்பு சத்யாகிரக தண்டி நடைப்பயணம் காந்திஜி முடித்து உப்பை எடுத்த பின்னர்தான் வேதாரண்யம் நடைப்பயணம் துவங்கியது.அதனை வழி நடத்தியவர்
    ராஜாஜி.தண்டி நடைப்பயணமும்,வேதாரண்யம் நடைப்பயணமும் ஒரே நாளில் துவங்கியதாகவும் அதனை வ உ சி வழிநடத்தியது போலவும் மோடி கூறிய‌து
    சரியான தகவல் அல்ல.அவரது உரைக்கு ஆலோசனை கூறியவர்கள் இன்னும்
    கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

  4. மோதியின் உரையைக் கேட்க முடியாமல் போனவர்களுக்கு தங்கள் பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும். நீங்கள் முறிப்பிட்டபடி மோதியின் ஆவேசப் பேச்சை நமுத்துப் போகச் செய்துவிட்டார் ஹெச்.ராஜா. இந்தியில் பேசியதையும் மிக அழகாக மொழிபெயர்த்தாலும், மோதியின் உணர்ச்சிப் பிரவாகத்தை ஒரு சிறிதாவது ராஜா அவர்கள் தன் குரலில் காட்டியிருக்க வேண்டும். மோதி போன்ற பேச்சாளர்களின் பேச்சின் வீச்சை தடையின்றி தொடர்ந்து பேசச் செய்திருந்தால் நன்றாக இருக்கும், என்ன செய்வது, மொழி பெயர்ப்பும் தேவைப்படுகிறதே. தமிழகம் விழித்துக் கொண்டுவிட்டது. இல்லாவிட்டால் ஒரு சில தமிழ் சானல்கள் அதை ஒளிபரப்பியிருக்குமா? ஒரு மாற்றம் தெரிகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஐம்பது அறுபது ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து, அரைத்த மாவை அரைத்து சலித்து விட்டார்கள். புதிய ரத்தம் ஓடவேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழர்களின் அந்தக் கனவை மோதி நிச்சயம் நிறைவேற்றுவார். அதற்குள் உழக்கில் கிழக்கு மேற்கு பார்த்துக் கொண்டு நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பூசலிடுவதற்கு முன்பு நம்மை ஸ்திரப் படுத்திக் கொள்ளும் முயற்சியில் அனைவரும் ஒன்றுபடவேண்டும். வாழ்க பாரதம். வந்தேமாதரம்!!

  5. வந்திருந்த கூட்டம், இளைஞர் கூட்டம். வந்த கூட்டம், அழைத்துவரப்பட்டது அல்ல.

    இதனால் அறியப்படுவது, பா.ஜ.கவுக்கு மோடியின் தலைமையில் தமிழ்நாட்டில் நல்ல எதிர்காலம் மட்டும் அல்ல ……..

    நல்ல நிகழ்காலமும் இருக்கிறது.

    இந்த நல்ல நிகழ்காலத்தை நாசமாக்காமல் இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டணி வைக்காமல் தனியே தனது தலைமயில் சாதிக் கட்சிகள் இல்லாத கூட்டணி அமைத்து நாற்பதில் இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.கவே போட்டியிட வேண்டும். செய்தால் நிச்சயம் கணிசமான தொகுதிகளில் வெல்லும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குக் கூட வளர முடியும்.

    திமுக கூடாது என்று அதிமுகவுடன் உறவு வைக்கத் துடிக்கும் சோ போன்றோரின் பேச்சைப் புறம் தள்ள வேண்டும்.

  6. லாரியில் பஸ்சிலும் ஏற்றிக் கொண்டு வரப்படாமல் ,சாராயமும், பிரியாணி பொட்லமும் வாங்காமல் வந்த மூன்று லட்சம் பேர் தமிழகத்தில் மாற்றம் வரப் போவதற்குக் கட்டியம் கூறியுள்ளனர். ஒரு , நல்ல, நேர்மையான , மக்களின் மேல் பாசம் வைத்துள்ள ,தேச பக்தர் பாரதத்தின் பிரதமராக வர தமிழகம் தனது பங்களிப்பை அளித்தால் தமிழ் நாட்டின் பெருமை 1967 க்கு முன்பு இருந்ததைப் போல் உயரும்.

  7. இது ஒரு சாதாரண அரசியல்வாதி பேசும் பேச்சல்ல. இந்த தேசத்தின் மீது, மண்ணின் மீது, காலகாலமாக இருந்து வரும் அதன் சமூக, கலாசார பந்தங்களின் மீது ஆழமான பிடிப்பும், அன்பும் கொண்ட ஒருவரின் பேச்சு. எண்ணமும், செயலும் எல்லாம் இந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவதற்காகவே, இந்த தேசமக்களின் நல்வாழ்விற்காகவே இயங்கும் ஒரு தேசபக்தனின் பேச்சு. எத்தனை உரை எழுத்தாளர்களை வைத்துக் கொண்டாலும் காங்கிரசின் முட்டாள் இளவரனிடம் இருந்தோ, அல்லது மற்ற சுயநல அரசியல்வியாதிகளின் வாயிலிருந்தோ இப்படி ஒரு பேச்சு சுட்டுப் போட்டாலும் வராது.

  8. மோதியின் உணர்ச்சிப் பிரவாகத்தை ஒரு சிறிதாவது ராஜா அவர்கள் தன் குரலில் காட்டியிருக்க வேண்டும்…..

  9. திரு கே.முத்துராமகிருஷ்ணன் எழுதியுள்ளபடி உப்பு சத்தியாக்கிரகம் பற்றி சரியான விவரங்களை மோடிக்கு யாராவது எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். ராஜாஜி வழி நடத்திய போராட்டத்தை வ.உ.சி.யுடையது என்றார் அவர். ராஜாவாவது அதைத் தன மொழி பெயர்ப்பில் சரி செய்திருக்கலாம், அவரும் அப்படியே சொல்லி விட்டார். தமிழ் நாட்டு சுதந்திரப் போராட்டம் குறித்த சரியான கண்ணோட்டம் பா.ஜ.க.வுக்கு இல்லை என்று பிரச்சாரம் செய்ய இதுபோன்ற தவறுகள் வழி வகுக்கும். தவிரவும் கடந்த ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி பற்றியும் தேசிய நீரோட்டத்தில் தமிழர்களின் பங்கு குறைவாக இருப்பது பற்றியும் அவர் பேசியிருக்கலாம். சரிதான் இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் இல்லாமல் இருந்தால் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற உதவும்.

  10. West Sun rises in the East region. Gandhi released the India from British Govt. Modi will be released Indians self respect from the Congress Govt. Indian people decided the power man in the world is Modi . We follow up and support to him.

  11. நான் என் வீட்டிலிருந்தே Prospective Prime Minister ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் உரையை “LOTUS tv ” மூலம் கேட்டேன்.அவர் உரையை நேரலை மூலம் ஒளிபரப்பிய மேற்படி டிவி க்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். இதே போன்று தேர்தல் முடியும்வரை தயவு கூர்ந்து கட்சிக்கு போர் வாளாக இருங்கள். (இமயம் டிவி வைக்கோவின் பேச்சுகளை ஒளிபரப்புவது போல நம் கட்சி தலைவர்களின் மேடை பேச்சுகளை தவறாமல் ஒளிபரப்புங்கள்) ஜெயா டிவி நடத்துவது போல (நம் கட்சியை சேர்ந்த) இருவரை அழைத்து ஒரு விவாத நிகழ்ச்சியை வாரம் இருமுறை நடத்துங்கள் யார் செய்வது மதவாதம்? யார் போலி மதசார்பின்மை வாதிகள் என்பது போன்ற மக்களை குழப்பத்திலிருந்து விடுவிக்கும் நல்ல விவாதங்களை நடத்துங்கள்.எனது இந்த அன்பான கோரிக்கையை உதாசீனப் படுத்தாதீர்கள்PLEASE ..” Lotus tv ” யின் MD திரு D . பாரதி மோகன் அவர்களை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.

    மற்றவர்களிடமிருந்து எந்த நல்லதை காங்கிரஸ் கற்று கொண்டதோ நமக்கு தெரியாது. ஆனால் பிரித்தானிய அரசிடமிருந்து (BRITAIN GOVT ) பிரித்தாளும் கலையை மட்டும் நன்றாக கற்றுகொண்டது. மோடி தனது உரையில் சொன்னது போல காங்கிரஸ் மக்களின் ஒற்றுமையை எப்படி எப்படி உடைக்க முடியுமோ அப்படியெல்லாம் உடைக்கிறது. அது மட்டுமா? நாட்டையும் உடைத்து பாகப் பிரிவினை செய்கிறது. கட்ச தீவை தான் தோன்றி தனமாக தன இச்சைப்படி இலங்கைக்கு கச்சத் தீவை பிச்சையிட்டார் இந்திரா.”தீன்பிகா” தீவை வங்காள தேசத்திற்கு தாரை வார்த்து கொடுத்தார் நரசிம்ம ராவ் 1962 ல் சீனா நம்மை தாக்கியபோது 90000 சதுர அடி பரப்பினை இழந்தோம். “சியாசின்” தீவை சீனாவிற்கு தாரை வார்த்து கொடுத்தோம். இப்படி கூறு போட்டு கூவி விற்கும் கூறு கெட்டவர்கள் கையில் நாடு சிக்கி சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறது. இவர்களை இனியும் இந்த நாட்டை ஆள விட்டால் காஷ்மீரை பாகிஸ்தானுக்கும் அருணாசல பிரதேசத்தை சீனாவிற்கும் கொடுத்து விட்டு மீதமுள்ள பகுதியை இத்தாலிக்கும் தாரை வார்த்து கொடுத்து விடுவார்கள்..
    2 G யில் கொள்ளை அடித்த பணத்தை காங்கிரஸ் மற்றும் திமுகவும் பாகப் பிரிவினை செய்து கொண்டனர். என்றைக்கு பாரதத்தை பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் பாகபிரிவினை செய்தார்களோ அப்போதே பாகபிரிவினை செய்வதில் இவர்கள் EXPERT ஆகி விட்டார்கள். இப்படி பிரிப்பதையே தன MAIN தொழிலாக வைத்துகொண்டு மற்றவர்களை பார்த்து DIVISIVE FORCE என்று குற்றம் சாட்டுவார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு வீட்டில் திருடியவன் பிடிபட இருந்த நேரத்தில் தப்பி ஓடியவன் “திருடன் திருடன்” என்று கத்திக்கொண்டு ஓடினானாம்! கத்திக்கொண்டு ஓடிய இவனப் பார்த்த மற்ற ஜனங்கள் இவன் திருடனை பிடிக்கத்தான் இப்படி ஓடுகிறான் என்று நினைத்து பேசாமல் இருந்து இவனை தப்ப விட்டுவிட்டார்கள். இப்படித்தான் . காங்கிரஸ் என்ற திருடனை தப்ப விட்டுவிட்டனர்.

    ராகுல் காந்தியை யார் LEADER என்று சொன்னது? அவர் மற்றவர்கள் எழுதி கொடுப்பதை படிக்கும் READER . அந்த கட்சியின் CADRE க்கு தெரிந்தது கூட அவருக்கு தெரியாது.

    நாட்டு எல்லையை காக்கத் தெரியவில்லை. நாட்டு மக்களை காக்கத் தெரியவில்லை. ரூபாயின் மதிப்பை காக்கத் தெரியவில்லை. தேர்தலில் கொடுத்த வாகுரிதியை காக்கத் தெரியவில்லை. வேட்டி கட்டிய தமிழன் மற்றும் TURBAN கட்டிய Mr CLEAN ஆகிய இரு பொருளாதார மேதைகளுக்கும் நாட்டின் பொருளாதரத்தை காக்கத் தெரியவில்லை இப்படி எதையும் காக்க தெரியாத இவர்களை ( அமரிக்கை நாராயணன், கோபண்ணா, விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் வேலூர் சட்ட மன்ற உறுப்பினர்) டிவி யில் பேசாவிட்டால் பொய் மூட்டையை அவிழ்த்து கொட்டுகிறார்கள். அதிலும் நாராயணன் என்று ஒரு நல்லவர் இருக்கிறாரே அவரை போல ஒரு உத்தமன் இந்த 7 உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கவே மாட்டார்கள்.

    நாட்டோரே நல்லோரே இந்த பக்கா அயோக்கியர்களை கை கழுவுங்கள். மிகப் பெருமளவிற்கு நல்லதும் எதோ ஒரு சிறு அளவிற்கு கெட்டதும் நடக்கும் என்று நம்பப்படும் பிஜேபியின் நல்ல தலைவன் மோடியை தேர்ந்தெடுங்கள்.

  12. வாழ்க பாரதம் வெல்க மாண்புமிகு மோதிஜி!

  13. ///கடந்த ஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி பற்றியும் தேசிய நீரோட்டத்தில் தமிழர்களின் பங்கு குறைவாக இருப்பது பற்றி …///

    அதெல்லாம் கிடையாது …….

    1996 க்குப் பிறகு திமுகவும் அதிமுகவும் பா.ம.கவும், த.மா.கவும் (கொஞ்சம் தமிழகக் காங்கிரசும்தான்) (மத்திய ஆட்சியில் இடம் பிடித்து)…..

    1952 முதல் 1996 வரை விட்டதை எல்லாம் பிடித்தாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால், தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்த நாள் முதல் திமுக ஒரு சில நூறு வருடத்துக்கான பங்கை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளிலேயே பிடித்துவிட்டதால்தானே 2 G விஷயமே வெளியே வந்தது!!

    “காங்கிரஸ்” தலைமையிலான “தேசிய நீரோட்டத்தில்” திமுகவின் “பங்கு” செழிப்பாகவே இருந்தது !!!

  14. பல தொகுதியில் போட்டி இடாமல் குறிப்பிட்ட 5-7 வலிமையான இடங்களில் போட்டி இட்டு, வென்று,. மோடி அமைச்சரவையில் 1 இடமும் நமக்கு கிடைக்க முடியும் என எண்ணுகிறேன்.

  15. ஐயா பரமசிவம் பாஜக நிச்சயம் பல தொகுதிகளில் வெல்லும் நிலை உருவாகிவருகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு வருகின்ற பொதுத்தேர்தலில் நிச்சயம் அமையும். மூன்று கூட்டணிகளுக்கு வாய்ப்புகள் உள்ளன.திரு மோதி ஜியின் முதன் தமிழகவிஜயம் அதற்கு கட்டியம் கூறிவிட்டது.
    ஒன்று தேமுதிக, மதிமுக பாஜக கூட்டணி.
    இரண்டு தேமுதிக, மதிமுக, பாமக பாஜக கூட்டணி.
    மூன்று அதிமுக பாஜக கூட்டணி.
    இந்த மூன்றில் எது சிறந்தது என்பதில் நிச்சயம் கருத்து வேறுபாடுகள் உண்டு. இவற்றில் எது அமையும் என்பது ஸ்ரீ மோதி ஜி அவர்களின் இரண்டாம் விஜயத்திற்குப்பின் நிச்சயம் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *