ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20

October 26, 2013
By

தொடர்ச்சி…

 

Adisankara 357. अतद्व्यावृतिरूपेण वेदान्तैर्लक्ष्यतेsद्वयम् |

      अखण्डानन्दमेकं यत्तद्ब्रह्मेत्यवधारयेत् ||

 

அதத்வ்யாவ்ருத்திரூபேண வேதாந்தைர்லக்ஷ்யதேத்வயம் |

அகண்டானந்தமேகம் யத்தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||

 

ஏது அழிவில்லாதது எதை அன்றென்று அன்றென்றே

வேத முடிவு விளக்கிடும் – யாதொன்று

அகண்ட இன்பாகி அமரும் அது தானே

திகழும் பிரமம் தெளி

(வேதங்களின் முடிவில் உள்ள உபநிஷத்துகள், இருப்பதுபோலத் தெரிவதையெல்லாம் இதுவல்ல, இதுவல்ல என்று மறுதலித்து எதை விளக்குகின்றனவோ, எது அழிவில்லாததாயும், இடைவிடாத இன்பம் தருவதாயும், எப்போதும் ஒன்றாய் இருப்பதாகுமோ அது தானே பிரம்ம சொரூபமாய் விளங்கும் என்று தெளிவாய்.)

வேதங்களின் தொடக்க பாகத்தை கர்மகாண்டம் என்றும், அதன் இறுதிப் பகுதியான உபநிஷத்தை ஞான காண்டம் என்றும் சொல்லப்படுவது உண்டு. ஞானம் என்பது அறிவு சம்பந்தம் கொண்டது. ஆனால் இங்கு கூறப்படும் அறிவோ அறியும் தனக்கு வெளியே உள்ள பொருட்களைப் பற்றிய அறிவு அல்ல. இது தன்னைப் பற்றிய அறிவே. தன்னைப் பற்றித் தானே அறியும் அறிவு இது என்பதால் அறியும் அறிவு என்று ஒன்றும், அறியப்படும் அறிவு என்று மற்றொன்றும் இருப்பதற்கு அங்கு இரு அறிவுகள் இல்லை. அதனால் அதை இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது என்று விளக்க முடியாது. அதை விளக்குவதற்கு ஒரே வழி சாதகன் அறிந்துள்ள அனைத்தையும் சொல்லி, இதுவல்ல அதுவல்ல என்றுதான் விளக்க முடியும்.

உடலாலும், உள்ளத்தாலும் காண்பது அனைத்தையும் அவை தானல்ல என்று விட்டுவிடச் சொல்லி, அவைகள் காணப்படுவதால் அவைகளைக் காண்பவன் யார் எனும் கருத்தில் சாதகன் “தான் யார்” என்பதை அலச வேண்டும். அது எப்படி முடியும் என்று கேட்டால், ஆரம்பத்தில் அதைத் தன் உடலிலும் நுண்ணியதான மனம், புத்தி போன்ற நம் கருவிகளை வைத்துக்கொண்டுதான் விசாரத்தைத் தொடங்க முடியும். “நான் யார்?” என்ற அந்தக் கேள்வியும் ஓர் எண்ணமேயாதலால், அது கேட்கப்படும்போது இயங்குவது மனம்தான். அதனை அலசி அதற்கு விடை காணத் துடிப்பது நமது புத்திதான். மனம், புத்தி இவ்விரண்டும் தூல, நுண்ணிய, காரண என்று பல பொருட்களை ஒவ்வொன்றாகப் பற்றிக்கொண்டு நம் கேள்விக்கு விடை தேட முயற்சிக்கும். அப்படித் தெரியவரும் பொருட்கள் எல்லாம் நம்மிலும் வேறு என்பதால் அவை நாம் அல்ல என்ற முடிவுக்கு வருவோம். இறுதியில் கேட்கும் மனமும், விடை காண முயலும் புத்தியும் நம் கருவிகளாக இருப்பதால் அவைகளும் நாம் அல்ல என்ற ஒரு தெளிவும் பிறக்கும். அதன் பின் அத்தகைய கருவிகளும் தானாக இயங்குவதில்லை, ஆனாலும் அவை இயங்கின என்பதாலும், கேட்பவன் இன்னும் இருக்கிறான் என்ற நிலை உணரப்படும்.

மனம், புத்தி இவைகளின் எல்லை உணரப்படும்போது அவைகள் தானே அடங்கி, இருக்கும் ஒன்றேயான பிரம்மம் தானே விளங்கும். மனம், புத்தி இவைகளுக்கும் அப்பால் உள்ளது “நான்” என்னும் இறுதித் தெளிவான பிரம்மமாய் இருப்பதையே சச்சிதானந்த நிலை என்பார்கள். அது இருப்பாகிய “சத்”தாகவும், இருக்கிறேன் என்று உணரும் அறிவாகிய “சித்”தாகவும், எப்போதும் அது தானே “ஆனந்தமாய்” இருப்பதாலும், நாம் உலகில் காண்பது, அனுபவிப்பது அனைத்தும் இதனிலிருந்து வரும் குணங்களே என்றும் அறியப்படும். அது இல்லை என்றால் எதுவும் இல்லை என்பது ஒன்றே உண்மை. அதை அனுபவித்தே உணர முடியும். சொற்கள் கொண்டு இதற்கும் மேல் விளக்க இயலாது.

இவ்வுலகில் உள்ள பொருட்களைப் பற்றி விளக்கும் சொற்களே ஓரளவுக்குத்தான் அதைச் செய்ய முடிகிறது. உதாரணமாகத் தேன், வெல்லம், சர்க்கரை என்ற மூன்று பொருட்களின் தன்மையை விளக்கும்போது அவை இனிப்பாக இருக்கும் என்றுதான் சொல்ல முடியும். ஒவ்வொன்றின் வெவ்வேறு விதமான இனிப்புத் தன்மையை எந்தச் சொல் கொண்டு விளக்க முடியும்? அதைத் தனித்தனியே வாயில் சுவைத்து அனுபவித்துத்தானே உணர முடியும்?  இவைகளே இப்படி என்றால் எல்லாவற்றையும் கடந்த, ஆனாலும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பிரம்மத்தை எப்படி விவரிப்பது? அதனாலேயே கண்டவர் விண்டதில்லை; உண்மையில் விள்ள முடிவதில்லை.

இப்படியாக மேலே நாம் கண்ட நான்கு ஸ்லோகங்களிலும் “யத் தத் ப்ரஹ்மேதி அவதாரயேத்” என்று சொல்லி “இதுதான் பிரம்மம் என்று உறுதியாக அறிந்துகொள்” என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இப்படியாக நான்கு முறை சொல்லப்பட்டுள்ளதை “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்பதன் எதிர்மறையாகக் “கூறியது கூறல்” என்ற முறைப்படி வருவதாகச் சொல்வார்கள். அதனால் இதற்கு மேல் பிரம்மத்தைப் பற்றிச் சொல்வதற்கும் ஒன்றில்லை என்றும் ஆகிறது.

glabella58. अखण्डानन्दरूपस्य तस्यानन्दलवाश्रिताः |

      ब्रह्माद्यास्तारतम्येन भवन्त्यानन्दिनोsखिलाः ||

அகண்டானந்தரூபஸ்ய தச்யானந்தலவாஸ்ரிதாஹா |

ப்ரஹ்மாத்யாஸ்தாரதம்யேன பவன்த்யானந்தினோகிலா ||

அகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப

சுகத்தை அடுத்தே சுரராய்த் – திகழும்

பிரமாதி ஏனோர் பிறங்குவர் இன்புற்றுத்

தராதரமாகத் தரி

(எங்கும் பரவி, எப்போதும் ஆனந்தமயமாய் இருக்கும் ஆன்மாவின் சுகத்தில் இருந்து, தேவர்களாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் முதலானோர் அவரவர் தகுதிக்கு ஏற்ப சொற்பமான சுகத்தையே பெற்று உயர்வும், பெருமையும் அடைந்தவர்கள் என்பதை திடமாக அறிவாய்.)

ஆன்மா ஆனந்தமயமானது என்றால் எவ்வளவு என்று கோடி காட்டுவதற்காக இங்கு ஒரு ஒப்புமை சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மாவின் ஆனந்தத்தை ஒரு கடல் என்று சொல்லி, அதில் ஒரு துளிதான் மிக ஆனந்தமாய் இருக்கும் பிரம்மாவிற்கே கிடைக்கிறது என்று சொல்லப்பட்டு ஆன்மாவின் ஆனந்தத்தை விவரிக்கிறார். ஒன்று பெரியது என்று காட்டுவதற்கு பக்கத்தில் ஒரு சிறு கோடு போடப்படும் “இரு கோடுகள்” தத்துவம்தான் இங்கு கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு ஒன்று மிகச் சிறியதாவும், மற்றொன்று மகா பெரியதாகவும் இருக்கிறது.

தைத்திரிய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, ஒரு நல்ல இளமையுடன் இருக்கும் பலசாலி மற்றும் அறிவாளி ஏகச் சக்கிராதிபதியாக இருக்கும்போது அனுபவிக்கும் ஆனந்தமே மனிதனின் ஆனந்தம் என்று வரையறுக்கப்படுகிறது. அதாவது மற்ற மனிதர்களின் ஆனந்தம் எதுவுமே ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. அந்த மனிதனில் தொடங்கி பிரம்மா வரை சொல்லப்பட்டு, அந்த பிரம்மா அனுபவிப்பதே ஆத்மானந்தத்தின் ஒரு துளி என்றும், மற்றவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆனந்தம் கிடைத்தும், அவர்கள் எல்லோருமே உயர்வாய் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களே அப்படியிருந்தால் ப்ரும்மத்தை உணர்ந்து அந்த ஆன்மானுபவத்தை அடைபவன் கடல் அளவு ஆனந்தம் அனுபவிப்பவன் என்பதால் அவன் இன்னும் எவ்வளவு பாக்யவான் என்று கோடி காட்டப்பட்டிருக்கிறது.

அதாவது மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பிரம்மாவின் சுகமே சொற்பம் என்பதால் இவ்வுலக சுகத்தை நாடுவதில் ஒருவனுக்கு என்ன லாபம் இருக்கிறது? இப்படிச் சொல்லி சாதகனின் மனத்தை இவ்வுலக இன்பங்களிலிருந்து திருப்பிவிட்டு, அவனுக்கு ஆனந்தக் கடலைக் காட்டி, அவன் ஆன்ம விசாரத்தில் ஈடுபடுவதே மிகப்பெரும் நன்மை பயக்கும் வழி என்று இங்கு காட்டப்படுகிறது.

 

the-prophet-on-self-knowledge-by-colleen-milburn-31664059. तद्युक्तमकिलं वस्तु व्यवकारस्तदन्वितः |

      तस्मात्सर्वगतं ब्रह्मा क्षीरे सर्पिरिवाखिले ||

தத்யுக்தமகிலம் வஸ்து வ்யவகாரச்ததன்விதஹ |

தச்மாத்சர்வகதம் ப்ரஹ்மா க்ஷீரே சர்பிரிவாகிலே ||

 அதனிடத்துள்ளது அகிலமும் செய்கை

அதை அடுத்துள்ளதேயாகும் – அதனால்

பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்

விரவிடு நெய் போலவே

(எல்லாப் பொருட்களும் பிரம்மத்தினிடமே இருக்கின்றன. அதனால் எல்லாச் செய்கைகளும் அதை அனுசரித்தே நடக்கின்றன. பால் முழுவதும் நெய் பரவி இருப்பது போல, பிரம்மம் எங்கும் பரவி வியாபித்து இருக்கின்றது.)

முன்பே நாம் பார்த்த மாதிரி எந்தப் பொருளுக்கும் ஐந்து குணங்கள் உண்டு. அவைகளில் முதல் மூன்றான அஸ்தி (சத்), பாதி (சித்), ப்ரியம் (ஆனந்தம்) பிரம்மத்தின் சொரூபம் என்றும், கடைசியான நாமம், ரூபம் இரண்டும் மாயையின் குணங்கள் என்றும் சொல்லப்படும். எங்கு நாமரூபங்கள் தோன்றுகின்றனவோ அங்கு உலகம் தெரிகிறது என்று பொருள். இவ்வுலகில் உள்ள பொருட்கள் எதற்கும் முதல் மூன்று குணங்கள் கிடையாது. ஆனாலும் அவைகளுக்கும் அந்தக் குணங்கள் இருப்பது போலத் தோன்றுவது, அந்தப் பொருட்களுடன் இருக்கும் பிரம்மத்தின் தொடர்பால் மட்டுமே.

ஒரு பொருளை வாங்கி வந்தோம், அல்லது ஒரு வேலையைச் செய்துமுடித்து விட்டோம் என்றால் நமக்கு வரும் ஆனந்தம் அந்தச் செயலால் வருவது என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அந்தச் செயலை செய்வதற்கு முன் நமக்கு இருந்த மன ஓட்டங்களும், கவலைகளும் செயல் முடிந்ததும் தீர்ந்து விட்டதால், நாம் நமது இயல்பான ஆன்ம நிலைக்கு ஒரு க்ஷணமேனும் திரும்புகிறோம். ஆக எப்போதும் அறிவுடன் இருக்கும் ஆன்மாவின் ஆனந்த இயல்பையே நாம் அப்போது உணர்கிறோம். அது அப்படியே நீடிக்காமல் இருப்பதன் காரணம் முன்பு கலைந்து போன கவலைகளின் இடத்தில், நாம் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் வாசனையால், வேறு ஒரு கவலை குடி புகுந்து விடுகிறது. இப்படியே நம் வாழ்க்கை தொடர்கிறது.

ஒரு குறுகிய இடைவெளியிலேயே நமக்கு அப்படிப்பட்ட ஆனந்தம் கிடைக்கிறது என்றால் அதை நீட்டி எப்போதும் அதில் நிலைத்து நிற்க வேண்டிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதுதான் இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம். அதற்கு நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்துமே பழைய வாசனைகளைத் தீர்க்கும் முகமாகவும், புதிய வாசனைகள் எதையும் சேர்க்காமல் இருப்பதாகவும் அமைய வேண்டும். அப்படிச் செய்து வரும்போது உள்ள ஒன்றான ஆன்மா தானே தானே ஒளிர்விட்டு விளங்கும்.

நாமம், ரூபம் மட்டுமே உள்ளதால் இவ்வுலகப் பொருட்கள், செய்கைகள் எல்லாமே மாயை என்றாகின்றன. அவைகளும் அந்தப் பிரம்மத்தின் சந்நிதானத்தில்தான் இருக்கின்றன, நடக்கின்றன. அதைத்தான் நமது அவ்வப்போதைய ஆனந்த நிலை காட்டுகிறது. அப்படி எல்லாமே பிணைந்து இருப்பதை நாம் எளிதாகக் காண இயலாது. எப்படி பாலில் இருக்கும் நெய்யைக் காண முதலில் பாலைத் தயிராக்கி, அதில் நீர் கலந்து மோராக்கி, அதைக் கடைந்து, வெண்ணையைத் திரட்டி, பின்பு அதை உருக்கி நெய்யை அடைகிறோமோ, அதேபோல தொடரும் நம் ஆன்ம விசாரம் எனும் பெருமுயற்சியால் பிரம்மம் எதிலும் இருப்பதை உணரலாம்.

60. अनण्वस्थूलमह्रस्वमदीर्धमजमव्ययं |

      अरूपगुणवर्णाख्यं तद्ब्रह्मेत्यवधारयेत् ||

அனண்வஸ்தூலமஹ்ரஸ்வ மதீர்தமஜமவ்யயம் |

அரூபகுணவர்ணாக்யம் தத்ப்ரஹ்மோத்யவதாரயேத் ||

பருமையும்  நுண்மையும் உற்பத்தி விநாசம்

குறுகலும் நீட்சியும் கூடாது – உருவம்

குணம் குலம் நாமமும் கொள்ளாமல் உள்ளது

உணர்க பிரம்மம் என்று உற்று

(எது தூலமாகவோ, நுண்ணியதாகவோ இல்லாது, உற்பத்தி, நாசம் என்ற நிலைகளும் இல்லாது, சுருங்கி குறுகியதாகவோ, நீண்டதாகவோ இல்லாது, உருவம், குணம், குலம், பெயர் என்று ஏதும் இல்லாது இருக்கிறதோ, அதைக் கூர்த்த மதியால் உணர்ந்து பிரம்மம் என்று அறியவேண்டும்.)

தூலமாக எது இருக்கிறதோ அதற்கு “நாம-ரூப” என்னும் நியதிப்படி பெயரும், உருவமும் இருக்கும். அது நீண்டதாகவோ, குட்டையாகவோ, ஏதோ ஒரு பரிமாண அளவுடன் இருக்கும். தூல உருவைத் தவிர அந்தப் பொருளுக்கு நுண்ணிய குணங்களும் இருந்தால், அதைப் போன்ற பல உருவங்கள் ஒரு சூழ்நிலையில் ஒன்றாய் இருக்கும்போது, அந்த ஒட்டு மொத்த சேர்க்கைக்கும் சில குணங்கள் ஏற்பட்டு ஒரு குலம் உருவாகிறது. தனித்தனியான பெயர்கள் போல, அந்தச் சேர்க்கைக்கும் ஒரு பெயர், குணம் எல்லாம் உருவாகிறது. ஒரு நிலையில் அவை இல்லாதும் போகலாம். அப்படி நேர்ந்தால் எப்படி முன்பு இருந்ததோ அப்படியே அவை மறுபடியும் உற்பத்தியும் ஆகலாம். இவையெல்லாமே உலகில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் பொருந்திய விவரங்களே.

இந்த விவரங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவைகள் ஆகையால், ஆன்ம சாதகன் பிரம்மத்தையும் அதே பரிமாணங்களுடன் பார்க்கலாம் என்பதால் அவை அனைத்தையும் சொல்லி, பிரம்மம் அத்தகையது அல்ல என்று முன்பு போல் எதிர்மறையாக உணர்த்தப்படுகிறது. அதாவது உலகில் உள்ளவைகள் எல்லாம் மேலே சொல்லப்பட்டுள்ளபடிதான் இருக்கின்றன; அதனால் உலகம் தெரியும்வரை பிரம்மமும் தெரியாது என்றும் உணர்த்தப்படுகிறது. அப்படியானால் அனைத்திலும் பிரம்மம் வியாபித்திருக்கிறது என்றால் என்ன பொருள்? பிரம்மத்தை விட்டுவிட்டு உலகத்திற்குத் தனியானதொரு இருப்பு உள்ளது என்பதுதான் தவறு என்று அதன் பொருள். ஒரு கல்லில் மிகவும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருக்கும் நாய் ஒன்றைப் பார்த்துவிட்டு அது நாயே என்று நினைப்பது தவறுதானே? அது நாய் என்றே நினைத்துக்கொண்டு  இருந்தால் அந்தக் கல் தெரியாதல்லவா? அதேபோல்தான் இதுவும். ஒரு விளக்கம் கொடுப்பதற்காகத் தரப்பட்ட உவமைதானே தவிர, இது முழு உண்மையையும் தரவில்லை. ஏனென்றால் உலகியற்படி கல் என்றும் நாய் என்றும் இரண்டு பொருட்கள் உள்ளன. ஆனால் உலகம்-பிரம்மம் இவைகளில் இருப்பது பிரம்மம் ஒன்றே; காணப்படுவதாகத் தோற்றம் அளிப்பது உலகம். ஒரு திரைப்படக் காட்சியை நாம் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தக் காட்சியை உண்மை என நம்புவது போலத்தான் இவ்வுலகக் காட்சிகளும் இருக்கின்றன.

முன்பு பட்டியலிட்டுச் சொல்லப்பட்ட தூல பரிமாணங்கள் இல்லாததால் நம் புலன்கள் ஐந்தாலும் பிரம்மத்தை அறியமுடியாது. அதற்கு அந்த நுண்ணிய பரிமாணங்களும் இல்லாததால்  அதை மனம்-புத்தி கொண்டும் அறிய முடியாது. அதனால் இருக்கும் பிரம்மத்தை அறிவதற்கு அது எப்படி இருக்கிறதோ அப்படி இருந்து மட்டுமே அறிய முடியும். இப்படியாக அறிவதற்கு முயலும்போது, அதை அறிய முடியாது வருகின்ற தடைகளை நமது கூரிய மதியால் உணர்ந்து அவைகள் ஒவ்வொன்றும் கிளம்பியதுமே அவைகளை விலக்க வேண்டும். அதாவது இருப்பது நான், இடையில் வந்திருப்பது எண்ணங்களும், அதைத் தொடர்ந்து வரும் செயல்களுமே; அவை நானல்ல என்று ஒதுக்கப்பட வேண்டும். அப்படிப் பழகப் பழகத் தடைகள் குறைந்தும், வலுவிழந்தும் செல்லச் செல்ல, நமது இருப்பாகிய நிலை வலுவடையும். அதை நாம் இயல்பாக அடையவேண்டும். ஆக ஆன்ம விசாரம் என்பது சதா சர்வ காலமும் விழிப்புடன் இருந்து, இறுதியில் தன்னை முற்றிலுமாக உணர்வது.

(தொடரும்)

Tags: , , , , , , , , , , , ,

 

8 மறுமொழிகள் ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 20

 1. K M Ramalingam on October 26, 2013 at 12:08 pm

  Respected Ramanjee,
  Very difficult under stand Upanishads. But your great effort and heard work you make us to under stand the same very easy. My sincere thanks for your help.

  Namaskaram
  Meivazhi Manimozhi Ramalingam M.A., B.L.,
  9710663461

 2. raman on October 26, 2013 at 7:44 pm

  திரு. ராமலிங்கம் அவர்களுக்கு நன்றி.
  ப்ரச்தாத் த்ரயம் எனப்படும் பிரிவில் உள்ள உபநிஷத்துகள் சொல்வதைப் புரிந்து கொள்வதற்காகவே ஆதி சங்கரர் போன்ற மேதைகள் நமக்காக எழுதியவைகளே ஆன்ம போதம், தத்வ போதம் போன்ற ப்ரந்தக் கிரணங்கள் என்ற பிரிவில் வரும் நூல்கள். அவர் எழுதியதைப் பற்றி விவரமாக வந்த இரண்டு நூல்களை நான் படித்துப் புரிந்து கொண்டதை அனைவரிடம் பகிர்ந்து கொண்ட அளவு மட்டுமே எனது முயற்சி. உங்களுக்கும், உங்களைப் போன்றோர்க்கும் அது உதவியிருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

 3. raman on October 26, 2013 at 11:10 pm

  எனது மறுமொழியில், “…ஆன்ம போதம், தத்வ போதம் போன்ற ப்ரந்தக் கிரணங்கள்…” என்று தவறுதலாக எழுதிவிட்டேன். அவை “பிரகரண கிரந்தங்கள்” என்று இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.

 4. narayanan chormpet on October 27, 2013 at 8:10 pm

  அண்ணா அருமை , நன்றி ; நாராயணன்

 5. சோமசுந்தரம் on October 29, 2013 at 5:21 pm

  //எது தூலமாகவோ, நுண்ணியதாகவோ இல்லாது, உற்பத்தி, நாசம் என்ற நிலைகளும் இல்லாது, சுருங்கி குறுகியதாகவோ, நீண்டதாகவோ இல்லாது, உருவம், குணம், குலம், பெயர் என்று ஏதும் இல்லாது இருக்கிறதோ, அதைக் கூர்த்த மதியால் உணர்ந்து பிரம்மம் என்று அறியவேண்டும்.//

  அப்படியானால், பிரமம்திற்க்கு (நம் இறைவனுக்கு) தூல ரூபம் கிடையாத? தூலமக இறைவனை காணமுடியாது எனில் அது அவனின் வியாகபதன்மைக்கு குறை ஆகும்.

  உங்களின் கட்டுரை படிக்க நன்றாக உள்ளது. ஆனால், அதில் பல தத்துவ சிக்கல்கள் உள்ளன.
  பல கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை.

  சோமசுந்தரம்

 6. மாசிப் பெரியசாமி on October 30, 2013 at 4:23 am

  உருவாய் அருவாய் உளதாய் இலதாய் – என்பதே நமக்கு சரியாகப் படுகிறது. இறை சக்தியால் எந்த உருவத்தினையும் எடுக்க முடியும். ஆனால் இங்கு பொருள் கொள்ளும்போது, எது தூலமாக மட்டுமோ, அல்லது சூக்குமமாக மட்டுமோ என்று எல்லை வகுத்து வரையறைக்கு உட்படுத்தி குறுக்கிவிட கூடாது என்பதே பொருளெனக் கொள்ளவேண்டும். மேலே ” பிரம்மம் எங்கும் பரவி வியாபித்து இருக்கின்றது.”- என்று வருகிறது. எனவே தூலமாகவும் இறைவனைக் காண முடியும் என்பது தெளிவு. இந்த கட்டுரை தொடரின் சில இடங்களில் நெருடல் வந்தமைக்கு , ஆதிசங்கரரின் கருத்துக்கு பிற ஞானிகளின் கருத்துடன் ஒப்பிடும்போது தான் இந்த நெருடல்கள் வருகின்றன. கடவுள் எங்கும் நிறைந்தவன் -OMNIPRESENT – என்ற உண்மையை மனதில் கொண்டால் தான் சரியான பொருள் கொள்ள முடியும். இறைவனை கண்ணாலும் காணமுடியும், உணர்வாலும் உணரமுடியும் என்பதே உண்மை.

 7. C.N.Muthukumaraswamy on October 30, 2013 at 11:44 am

  //எது தூலமாகவோ, நுண்ணியதாகவோ இல்லாது, உற்பத்தி, நாசம் என்ற நிலைகளும் இல்லாது, சுருங்கி குறுகியதாகவோ, நீண்டதாகவோ இல்லாது, உருவம், குணம், குலம், பெயர் என்று ஏதும் இல்லாது இருக்கிறதோ, அதைக் கூர்த்த மதியால் உணர்ந்து பிரம்மம் என்று அறியவேண்டும்.//
  எங்கும் நிறைந்து சர்வ வியாபகமாக நிற்கும் பரம்பொருளின் வியாபகத்துக்குள்தான் நாம் இருக்கின்றோம். அந்தப் பரம்பொருளே கருணையுடன் தன்னை ஒரு வடிவில் காட்டினால் தான் நாம் அப்பொருளி அறிந்துகொள்ள முடியும். அப்பரம்பொருள் எவ்வுயிரிடத்தும் , உயிர் பாசத்தினால் கட்டுண்ட நிலையிலும் பிரிவின்றி உள்ளான். பதியுடன் அத்துவிதம் என்பது முத்தி நிலையில் மட்டுமன்றி பெத்தநிலையிலு உண்டு. அதனைக் குமரகுருபரர் கந்தர் கலிவெண்பாவில் ‘ எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே” என்று உரைக்கின்றார். குணங்குறி கோலம் ஒன்றும் அற்ற அறிவே திருமேனியாக உடைய வியாபக்ப் பொருள், தன்னை ஆன்மாக்கள் வழிபட்டு உய்யவேண்டும் என்பதற்காகப் பல்வேறு உருவங்களை ஞானியர்க்குக் காட்டியுள்ளான். ஞான குருவே அவற்றுள் தலையாயது. “குருவாய் வர்வாய் அருள்வாய் குகனே” என அருணை முனிவர் முருகனையே குருவாக வர வேண்டியதும் அக்காரனத்தால்தான். குருநாதன் எந்த வடிவில் இறையைக் காண நம்மை நெறிப்படுத்தினாரோ, அந்த வடிவில் இறையை வழிபடுவதே உகந்தது. எங்கும் வியாபகமாக உள்ள இறை நம் வழிபாட்டை ஏற்றுக் கொள்ளும் சந்நிதானமாகாது. உருவ வழிபாடே அதற்கு ஏற்புடையதாகும். சங்கரபகவத் பாதர் அவர்க அருளிச் செய்ததாகக் கூறப்படும் தோத்திரங்கள் பிரமப் பொருளைச் சகுணமாக வழிபடுதலே உகந்தது என்ற கருத்தை வலியுறுத்துவதாகும்.

 8. raman on October 30, 2013 at 10:12 pm

  கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்டுள்ளது போல, “தூல பரிமாணங்கள் இல்லாததால் நம் புலன்கள் ஐந்தாலும் பிரம்மத்தை அறியமுடியாது. அதற்கு அந்த நுண்ணிய பரிமாணங்களும் இல்லாததால் அதை மனம்-புத்தி கொண்டும் அறிய முடியாது”. ஆதலால் மனம், புத்தி கொண்டு எழுதப்படும் கட்டுரையும், அதற்கு வரும் மறுமொழிகளும் பிரம்மத்தைப் பற்றி ஓரளவிற்கே விளக்க இயலும். நிர்குணப் பிரம்மத்தைப் பற்றி இவ்வளவு எழுதிய சங்கரர், பஜ கோவிந்தம் போன்ற தோத்திரங்கள் மூலம் சகுணப் பிரம்மத்தைப் பற்றியும் போற்றி எழுதினார் என்றால், அதுவும் சிலருக்குத் தேவை என்பதை உணர்ந்தார் என்றுதான் அர்த்தம். எல்லோருக்கும் எல்லாம் புரிந்துவிடாது என்பது என்றுமே நிலைத்துள்ள உண்மை.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*