சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்

சிவாத்துவித பாடியம் என்று அறியப்படுவது, பிரம்ம சூத்திரத்திற்கு நீலகண்டர் அல்லது ஸ்ரீகண்டர் எழுதிய பாஷ்யத்தைக் குறிக்கும். இந்திய தத்துவ ஞான தரிசனங்களில் விருப்பம் உடையவர்கள் பெரும்பாலும் ஆதி சங்கராச்சாரியர் பிரம்ம சூத்திரத்திற்குக் கண்ட கேவலாத்துவித பாடியத்தையும் ஸ்ரீ இராமானுஜர் எழுதிய விசிஷ்டாத்வைத பாடியத்தையும் ஸ்ரீமாத்துவர் எழுதிய துவித்தாத்துவித பாடியத்தையும் அறிவர். ஸ்ரீகண்ட பாடியத்தைப் பெயரளவிலேனும் அறிந்தவர் மிகச் சிலரே. அதனை அறிமுகம் செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

வேதங்களும் ஆகமங்களும்:

vedasஇந்தியத் தத்துவ ஞானம் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேதாந்தம், சித்தாந்தம் எனும் இருபெரும் பிரிவுகளாக வளர்ந்துள்ளன. வேதாந்தாந்தம் என்பன வேதத்தின் ஞான காண்டமாகிய உபநிடதங்கள். சித்தாந்தம் என்பன 28 சைவ ஆகமங்கள்.  வேதங்கள் காட்டிய நெறி வைதிகம் என்றும் ஆகமங்களின் நெறி சைவநெறி என்றும் அறியப்படுகின்றன. ‘வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள், வேறுரைக்கும் நூல்கள் இவற்றின் விரிந்த நூல்கள்’  என்றும், வேதம் உலகவருக்குச் செய்யப்பட்டதாதலின் ‘பொது’ என்றும், ஆகமம் பிறப்பறுத்து வீடு பேற்றினை விரும்பும் சத்திநிபாதகளுக்கு உரைக்கப்பட்டதாகலின் ‘சிறப்பு’ (சி.சி267) என்றும் கூறப்பட்டன.

வேதம், ஆகமம் இரண்டும் சிவனருளிய நூல்கள் என்று கூறப்பட்டாலும் இவற்றைப் பின்பற்றியவர்களிடையே பிற்காலத்தில் வேற்றுமைகள் தோன்றின. வேதாந்திகள் சித்தாந்திகளைப் பழித்தனர். சித்தாந்திகள் வேதாந்திகளை இகழ்ந்தனர். சித்தாந்திகள் வேதங்களைப் ‘பாசநூல்’ என்றனர். வேதியர் சிவாகமங்களை ‘மயக்க நூல்கள்’ எனத் தூற்றினர். அறிந்தோர் இவ்விரண்டும் தவறான பார்வை என்பர்.

நிலையற்ற சுவர்க்க போகங்களுக்கு உரிய வேள்வி முதலியவற்றை விளக்கும் கன்ம காண்டமே சித்தாந்தத்தில் விலக்கப்பட்டன. அவ்வாறே, சுரைக்குடம் (கள்பானை) தாபித்தல் போன்ற அவைதிகக் கருமங்களைக் கூறும் வாமம், பாசுபதம், இலாகுளம், காபாலம் முதலிய ஆகமங்களே விலக்கப்படுவன.

காமிகம் முதலிய சிவாகமங்கள் வேத சம்மதமாவன; வைதிகத்தில் அங்கீகரிக்கப்பட்டன. ஆகம முடிபும் வேதாந்த முடிபும் ஒன்றே என்பது தென்மொழி வடமொழி அறிந்த ஞானியர் முடிபு.

திருமூலர் இக்கருத்தினர்.

வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் சிறப்பும் பொதுவும் என்றுள்ளன
நாதனுரையிவை நாடிலிரண்டந்தம்
பேதமதென்பர் பெரியோர்க் கபேதமே

வேதாந்த சூத்திரம் ஈச, கேன, பிரசின, முண்டக, மாண்டூக்கிய, ஐதரேய, தைத்திரிய, சாந்தோக்கிய, பிருகதாரணிய, கெளஷிதகிப்பிராம்மண, மகோபநிடத, பிருகச்சாபால, சரப, ஜாபால, கைவல்லிய, காலாக்கினிருத்திர, சுவேதாசுவதர, மைத்திராயண, அதர்வசிரசு, அதர்வசிகை முதலிய உபநிடதப் பொருள்களை ஆதாரமாகக் கொண்டு யாக்கப்பட்டது. பாடியக்காரர்கள் வேதாந்தசூத்திரத்திற்குப் பாடியம் எழுதும்போது இவ்வுபநிஷத்துக்களையே பெரும்பான்மையும் மேற்கோள் காட்டுகின்றனர்.

சுவேதாசுவதரம், அதர்வசிரசு, அதர்வசிகை, கைவல்லியோபநிடதம் முதலியன சிவபரத்துவத்திற்கு ஆதரவாக இருத்தலின், சிலர் இவை பிற்காலத்தன என்று விலக்குவர். நீலகண்டர் இவற்றையும் மேற்கோளாகக் காட்டுவார்.

வேதாந்த சூத்திரத்தின் உண்மைப் பொருள், முன்னையோர் கூறிய ஏகான்ம, மாயா வாத  உரையினால் மேகத்தால் கவிக்கப்பட்ட சூரியனைப்போல மறைந்திருந்தன என்றும், நீலகண்டரே மறைப்பை நீக்கி உண்மைப் பொருளை வெளிப்படுத்தினார் என்றும், ஏகான்ம வாதிகளால் வேதாந்த சூத்திரப் பொருள் திரிக்கப்பட்டு அதனால்  ஒளி மாழ்கிய சிவநெறி விளக்கம் பெறும்  பொருட்டுப் பரமசிவனார் சிவகணத்தினராகிய நீலலோஹித உருத்திரரை நீலகண்ட சிவாசாரியராக மண்ணுலகில் பிறக்கச் செய்தார் என்று கூறுவர்.

(When Lord Siva along with Parvathi were holding court in the Hiranya Mantap in Kailash, with Hari, Brahma and other celestial Gods, Narayana requested Siva to send a scholar to propagate Siva Bhakti and to clearly explain the truth in Vyasa Sutrams to the people on the Earth. Siva stated, that since the influence of Maharshi Vighanas and Badari who were sent earlier to propagate Siva Bhakthi is fading away, He is sending Nilalohita Rudra to take birth on Earth to drive away the insanity of the people under the preachings of the Mayavadis and to propagate Srouta Sivaradhya Sampradayam. (www.Srouta saiva siddhanta)

தென்னாட்டில் வேதாந்த சித்தாந்த சமரசம்:

தாயுமானவர்
தாயுமானவர்

இதுவே  தாயுமானார் ‘சித்தர்கணம் என்று அருளிய பதிகத்தின் மகுடமாகிய ‘ வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே” என்றதன் கருத்து. (வித்தகம்- ஞானம்) வேதாந்தம் சித்தாந்தம் மற்றும் உள்ள அந்தங்களின் குறிக்கோள் சிவத்தில் அத்துவிதமாகக் கலப்பதே.

வேதாகமங்களைப் பிரமாணமாகக் கொண்ட தென்னாட்டுச் சைவசித்தாந்தத்திற்குச் ‘சுத்தாத்துவித வைதிக சைவ சித்தாந்தம்’ என்பது தத்துவ உலகில்   வழங்கிவரும் பெயராகும். சுருக்கமாக ‘வைதிக சைவம்’ என்பர். சுத்தாத்வைதம் என்னும் இச்சொற் பிரயோகம்,-” தந்மநோவிலயம் யாதி தத்விஷ்னோ: பரமம்பதம் | தல்லயாச் சுத்தாத்வைத ஸித்தி😐 பேதாபவாத் | ஏததேவ பரமதத்வம்||” என்னும் மண்டல ப்ராஹ்மணோபநிஷத் வசனங்களில் அறியவுள்ளது. இந்தச் சுத்தாத்துவிதத்தைத் தாயுமானார்  புனிதம் எனும்அத்துவிதம் என்று குறிப்பிடுவார். இச்சுத்தாத்துவிததை எடுத்தியம்பியவர் மெய்கண்டாரே எனும் கருத்தில்

பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித
மெய்கண்ட நாதனருள் மேவுநாளெந்நாளோ

என்று பாடினார்.

வைதிக சைவம் என்னும் சொல்லாட்சி சைவ இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றதுது.

பண்ணின் பயனாம் நல்லிசையும் பாலின் பயனாம் இன்சுவையும்
கண்ணின் பயனாம் பெருகொளியும் கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும்
விண்ணின் பயனாம் பொழிமழையும் வேதப்பயனாம் சைவமும் போல்
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்புடைத்தோ

(பெரியபுராணம்)

நலம் மன்னிய தண்டக நாடு செழித் துமல்கப்
பலரும் புகழ் காஞ்சி வளம்பதி மேன்மை சாலக்
குலவுஞ் சமயங்க ளொராறும் மகிழ்ச்சி கூர
உலகெங்கணும் வைதிக சைவம் உயர்ந்து மல்க.

 (பெரியபுராணம்)

வேதாந்தத் தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம்  (சைவம் என்றது சிவாகமங்களை)

வேதாகம உடம்பாடா வைதிக சைவமார்க்கமே சன்மார்க்கம்”                                                                                                         (தாயுமானார்)

வைதிக சைவம் அழகு’  (தாயுமானார்)

வீடு வைதிக சமய ம்பகரும்’  (உமாபதிசிவம் – சிவப்பிரகாசம்)

பிரம்மசூத்திரமும்சைவசித்தாந்தமும்

பிரம்ம சூத்திரம் தோன்றிய வரலாற்றை நீலகண்ட பாடியம் பின் வருமாறு  கூறுகின்றது.

“சிவபெருமான் பிரமா விஷ்ணு என்னும் இருவரையும் விளித்து , நீவிர் இருவரும் முறையே மநுவும் வியாசருமாகத் துவாபரயுகங்கடோறும் உதித்து, வரையறைப்படாத வேதங்களையும் சாஸ்திரங்களையும் (உபநிடதங்களையும்) சுருக்கி, கலியுகத்திலே அறிவு சுருங்கிய மானுடர் அறிவுக்கேற்ற வாறு (அந்தக்) கன்மத்தையும் பிரமத்தையும் விதிக்கும் சாஸ்திரங்களைச் சூத்திர ரூபமாக மற்றைய இருடிகளோ டியைந்து விரைந்து செய்யுங்கள்” என்று ஆஞ்ஞாபித்தார்.

இவ்வாறு, சிவபெருமான் ஆணையிட, விஷ்ணு தமக்குரிய பல கலைகளுள்ளே ஓர் கலைகொண்டு வியாசராகத் திருவவதாரஞ் செய்து  பிரமசூத்திரம் செய்தருளினர்.”

வேத உபநிடதங்கள் வரையறைப்படாதன; விரிந்து பரந்து கிடக்கும் அவை அறிவு சுருங்கிய மானுடர்களால் முழுதும் அறிந்து கைக் கொள்ள இயலாது. எனவே, சுருங்கிய அறிவினை யுடைய மானுடர்களின் அறிவுக்கு ஏற்ப பிரம்மஞானத்தைத் தரும் வேத உபநிடதக் கருத்துக்களைத் திரட்டிச் சுருக்கிச் சூத்திர வடிவில் வியாசர் அருளினார்.

shiva_paravati_with_rishis

நம் பாரத நாட்டுத் தத்துவ ஞானியர் உபநிடதங்கள் மேலும் பிரம்ம சூத்திரத்தின்பாலும் சிறப்பான பற்று வைத்துள்ளனர் . இதற்குக் காரணம் யாது.? அந்த நூற்றெட்டு உபநிடத நூல்களும் ஒருவகையில் தம்முள் மாறுபடப் பகர்வன போலக் காணப்படினும் அவையாவும் , ‘மனோலய வாய்ப்பின்கண்ணே நாட்டமுடையனவாய் அதனையே பலதிறத்தானும் விரித்துரைப்பன வாயுள்ளன. அவை ஞானியர்களின் சுவானுபவங்களை எடுத்துரைக்கும் நூல்கள். எனவே, பரதகண்ட பண்டிதர்களால் விரும்பிப் ஆராய்ந்து படிக்கப்பட்டன. ; ஆராயப்பட்டன’. (பாம்பனடிகள்)

ஒன்றற்கொன்று மாறுபட்டதுபோல் தோன்றும் உபநிடதக் கருத்துக்களை ஒருவகையில் சமன்வயப்படுத்தும் நூல் பிரம்மசூத்திரம்.

சூத்திரம் என்ற பெயருக்கு ஏற்பச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளை செறித்துப் பாதராயணர் கூறியுள்ளார். இதே காரணத்தால் இந்நூலுக்கு தம்முள் மாறுபட்ட பல பேருரைகள் (பாஷ்யங்கள்) தோன்றியுள்ளன. இந்தியத் தத்துவ உலகில் சங்கராசாரியரின் ஏகான்மவாதமான அத்துவித பாடியமும் இராமானுசரின் விசிட்டாதுவித ஸ்ரீபாடியமும் ஆனந்ததீர்த்தரின் துவைத பரமான மத்துவ பாடியமும் பிரபலமானவை..இவற்றோடு ஒருங்கு வைத்து எண்ணத் தக்க சிறப்புடையது, சைவபாடியம் எனப் போற்றப்படும் நீலகண்டசிவாசாரியரால் வரையப்பட்ட சிவாத்துவித நீலகண்டபாடியம்.. இன்னும் இவைபோல் வேதந்த சூத்திரத்திற்குப் பல பாடியங்கள் உண்டெனக் கூறப்படு கின்றது.

நீலகண்டபாடியமும் சைவசித்தாந்தமும்

நீலகண்ட பாடியம், சைவபாடியம் என்று கூறப்பட்டாலும் சைவசித்தாந்திகள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.  வேதாந்தங்களான உபநிடதங்களின் சாரமாகப் பாதராயணரால் செய்யப்பட்ட பிரம்ம சூத்திரம் ஏகான்ம வாத நூல், அதற்குக் கூறப்படும் எவ்வகை விளக்கமும் ஏகான்மவாதத்திலேயே முடியும் என்று சைவசித்தாந்திகளில் ஒரு சாரார் கருதுவர். அதனால், சித்தாந்த சாத்திரங்களைக் கற்பதுபோல் நீலகண்டபாடியத்தைச் சைவர்கள் கற்பதில்லை.

நீலகண்டபாடியம் சிவாத்துவிதம் எனும் சிவசமவாதத்தைக் கூறுகின்றதென்றும் சிவசக்திக்குப் பரிமாணம் கூறுகின்றதென்றும் தென்னாட்டுச் சைவசித்தாந்திகள் இப்பாடியத்தைப் புறக்கணிப்பர்.

சிவாத்துவிதம், சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சம் சிவபரம்பொருளின் அம்சமாய் (விசிட்டம், வியாப்பியம்) ) சிவத்துக்குக் குணமாய் இருப்பன என்ற கொள்கையை யுடையது. சிலந்திப்பூச்சியின் உடம்பே சிலந்திவலைக்கு உபாதான காரணமும், அதன்கண் உள்ள உயிரே நூலினைச் செய்யும் நிமித்தகாரணமுமாக ஒருசேர இருத்தல் போல நிமித்தகாரணமாகிய சிவபரம்பொருளின் விசிட்டமாகிய சிவசத்தியே பிரபஞ்சமாகப் பரிணமிக்கும் என்பது நீலகண்டருடைய கொள்கை. எனவே இவருடைய கொள்கையை நிமித்தமும் உபாதானமும் சேர்ந்த நிமித்தோபாதான காரணம் என்பர்.

சைவ சித்தாந்தம் பிரமத்துக்கு நிமித்தம் ஒன்றையே கூறும். அதனால் சைவர்களை நிமித்த காரணவாதிகள் என்பர்.

நீலகண்ட பாடியம் ஒருவகையில் இராமாநுஜர் விளக்கிய விசிட்டாத்வைதம் போன்றதே. இராமாநுஜர் பிரம்மத்தை  நாரயணர் என்றார். நீலகண்டர் பிரம்மம் சிவம் என்றார். இதனால் இவருடைய கொள்கை சிவவிசிஷ்டாத்வைதம் எனப்பட்டது.

சிவசமவாதத்தையும் சிவசக்திக்குப் பரிமாணம் கூறுவதையும் கொற்றவங்குடி உமாபதி சிவாச்சாரியார் தம்முடைய சங்கற்ப நிராகரணம் என்னும் நூலில் கண்டிப்பார். சிவஞானபோதம் மாபாடியத்தில் சிவசமவாதத்தைக் கடுமையாக நிராகரித்தாலும் நீலகண்டபாடியம் சைவர்கள் கைக்கொண்டு ஒழுகுதற்குரிய பலசெய்திகளைக் கொண்டுள்ளது என்று கருத்துத் தெரிவித்ததோடு தம்முடைய திராவிடமாபாடியத்தில் பலஇடங்களில் இப்பாடியத்தைச்  சிவஞான முனிவர் எடுத்தாண்டுள்ளார்.

நீலகண்டருடைய சிவாத்துவிதக் கொள்கையைத் தெளிவாக நன்கு மறுத்த சிவஞானமுனிவர், இறுதியில், ‘சித்தாந்தத்தொடு பொருளால் முரணுத லின்றாயினும், வாய்பாடு மாத்திரையான் முரணுதலின் சிவாத்துவித சைவம் வேறு எனப்பட்டது’ என்று உணர்க’ என எழுதினார்.

பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்பது சைவசித்தாந்தம். பிரமம் நிமித்த காரணம் மட்டுமே என்ற கொள்கையை நீலகண்டர் வன்மையாக மறுக்கின்றார். பிரமம் உபாதானகாரணமும் ஆகும் என்பது நீலகண்டர் கொள்கை. அவ்வாறே பிரமம் நிமித்த காரணமும் உபாதான காரணமுமாகும் என்ற கொள்கையைச் சிவஞான முனிவர் வன்மையாக மறுக்கின்றார்

நீலகண்டருடைய குரு மெய்கண்டாரா?

நீலகண்ட பாடியத்தில் சிவாகமங்களுடன் ஒத்துப் போகும் கருத்துக்கள் காணப்படுவதற்குக் காரணம் சிலரால் கூறப்படுகின்றது.

நீலகண்டர் பாடியத்தின் தொடக்கத்தில் தம்முடைய குருவுக்கு வணக்கம் கூறியுள்ளார். அத்துதியாவது:  “ஒன்றுக்கொன்று மாறுதல்போலப் பொருள் போதிக்கும் ஆகம வேதங்களை விரோதமுறாவண்ணம் உபதேசிப்பவரும், முத்தியாகிய கைவல்லியத்தை விரும்பினவர்களுக்குப் பிரசாதிக்கும் கற்பகதருவும், இவ்வுலக இன்பத்தை விரும்பினவர்களுக்குப் பிரசாதிப்பவருடைய குருவுமாகிய சுவேதாசாரியருக்கு  நமஸ்காரம்

மெய்கண்டார்

இத்துதியில் நீலகண்டருடைய ஆசாரியர் சுவேதாசாரியர் என்று அவர் பெயர் கூறப்பட்டுள்ளது. சிலர் சுவேதாசாரியர் என்றது, மெய்கண்டாரை எனச் சிலர் கருதுகின்றனர். மெய்கண்டாரின் பிள்ளைத் திருநாமம் சுவேதவனப்பெருமாள்என்பது. சுவேதவனம் என்பது திருவெண்காட்டின் வடமொழிப்பெயர். சுவேதம்- வெண்மை. இந்தப் பெயர் ஒற்றுமை கருதி மெய்கண்டாரே நீலகண்ட சிவாச்சாரியரின் குரு என்றும் அதனால்தான் சித்தாந்தக் கோட்பாடுகள் இப்பாடியத்தில் விரவியுள்ளன என்பர். இதன் பொருத்தம் ஐயத்திற்குரியது.

நீலகண்டருடைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. இப்பாடியத்தைப் பதிப்பித்த காசிவாசி செந்திநாதய்யர் அவர்கள், நீலகண்டர் சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய பாடியக்காரர் அனைவருக்கும் முன் தோன்றியவர் என்கிறார். அப்படியானால், 13ஆம் நூற்றாண்டினரான மெய்கண்டார் அவருக்கு ஆசிரியர் ஆதல் இயலாததொன்று. இராமானுஜ பாடியத்துடன் இச்சைவ பாடியம் பல இடங்களில் ஒத்துப் போதலை நோக்கி இவர் இராமாஜரின் சமகாலத்தவர் எனச் சிலர் கருதுவர்.

நீலகண்டசிவாச்சாரியார் தமிழ் நாட்டில் தொண்டைநாட்டு ஆதிசைவப்பிராமணர் என்றும் இவருடைய திருவுருவப் படிமம் தொண்டைமண்டலத்து வடதிருமுல்லைவாயில் சிவாலயத்தில் உள்ளது என்றும் இவருக்கு இங்குஆவணிமாதம் பூச நாளில் குருபூசை நடைபெறுகின்றது என்றும் காசிவாசி ஸ்ரீசெந்திநாதய்யர் அவர்களின் பதிப்பில் ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆதிசைவ பிராமணராதலால் இவருடைய பாடியத்தில் சித்தாந்த சைவக் கருத்துக்கள் விரவியுள்ளன எனச் சிலர் கருதுவர்.

நாகலிங்க சாஸ்திரியார் என்பார் வடமொழியில் எழுதியுள்ள நீலகண்ட விஜய மஹா காவ்யம் என்னும் நூலில் நீலகண்டர் ஆந்திர நாட்டில் உள்ள வாரங்கல்லில் விச்வேஸ்வர மகேஸ்வர ஆராத்யா , கெளரி தம்பதியருக்குப் பாரத்வாஜ கோத்திரத்தில் கலியுகம் 2044க்குச் சமமான கி.மு 3001ல் நீலலோஹித ருத்ராம்சத்துடன்   மஹாகாளேஸ்வர ஸ்வாமி ஆசியுடன் அவதரித்தார் என்று பெளராணிகத்தனமான நம்ப முடியாத செய்தி கூறப்பட்டுள்ளது.  இது ஏனைய பாடியக்கரர்களைக் காட்டிலும் நீலகண்டரை மிக உயர்த்தி வைக்க விரும்பும் பேராசையின் விளைவே.

dr-muthukumara-swamyமுனைவர் கோ.ந.முத்துக்குமார சுவாமி அவர்கள் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

சைவசமயத்திலும், மரபிலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை வாய்ந்தவர்.

திருமுறைகள், சைவசித்தாந்தம், தல புராணங்கள் ஆகியவை குறித்த விரிவான, ஆழமான கட்டுரைகளைத் தொடர்ந்து தமிழ்ஹிந்து தளத்தில் எழுதி வருகிறார்.

28 Replies to “சிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்”

  1. கட்டுரையைப் படித்தேன். என்றாலும்மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். அதோடு நீளம் அதிகமாக இருப்பதால் (என்னைப் பொறுத்தவரை) கொஞ்சம் படித்துப் புரிந்து கொள்ள நேரமும் எடுக்கிறது. என்றாலும் முயல்கிறேன். மெய்கண்டாரைக் குறித்து சமீபத்திலே தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். கொஞ்சம் கட்டுரை அளவைக் குறைத்தால் நன்று.

  2. அன்பின் ஆசிரியப் பெருந்தகை அவர்களுக்கு,
    தங்களின் இக்கட்டுரை படித்து பெரும் மகிழ்ச்சி அடியேன் அடைந்தேன். சைவ சித்தாந்த கோட்பாட்டை தமிழகத்தில் நன்கு பரப்புதல் இன்று வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக சிவ ஞான போதத்தை அருளிய மெய் கண்டார் தேசிகரை மக்கள் அனைவரும் அறிதல் வேண்டும்.

    நீலகண்ட பாடியம் சைவத்திற்கு கிடைத்த கொடையாகும். தாங்கள் மேலும் இது குறித்து விளக்க வேண்ட அன்புடன் இறைஞ்சுகின்றேன்.

    ஆரூரா!! ஐயாரா!!
    சிவ சிவ..

  3. //நாகலிங்க சாஸ்திரியார் என்பார் வடமொழியில் எழுதியுள்ள நீலகண்ட விஜய மஹா காவ்யம் என்னும் நூலில் நீலகண்டர் ஆந்திர நாட்டில் உள்ள வாரங்கல்லில் விச்வேஸ்வர மகேஸ்வர ஆராத்யா , கெளரி தம்பதியருக்குப் பாரத்வாஜ கோத்திரத்தில் கலியுகம் 2044க்குச் சமமான கி.மு 3001ல் நீலலோஹித ருத்ராம்சத்துடன் மஹாகாளேஸ்வர ஸ்வாமி ஆசியுடன் அவதரித்தார் என்று பெளராணிகத்தனமான நம்ப முடியாத செய்தி கூறப்பட்டுள்ளது. //

    இன்று வரை இது தான் கேள்விப்பட்டிருந்தேன். நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் புதிய அரிய தகவல். சரியான வரலாறு தெரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறீர்கள்.

  4. முனைவர் ஐயா அவர்கள் நெடு நாட்களுக்குப்பின்னர் தமிழ் ஹிந்துவில் கட்டுரை எழுதியிருக்கிறார். அதற்கு நன்றி. சைவ சித்தாந்ததிற்கு அகசமயமும் மிக நெருங்கியதுமான சிவாத்வைதத்தின் தகைசான்ற நூலை அறிமுகப்படுத்தியமைக்கும் அவருக்கு நன்றி.
    வேதமும் ஆகமமும் இறைவன் அருளியவை. அவற்றுள் முரண் இல்லை முடிவாக வேதாந்தமும் சித்தாந்தமும் அடைவது ஒன்றே என்பது ஏற்புடையது.

  5. ப்ரஸ்தனத்திரயத்தில் ஒன்றான ப்ரம்ம சூத்திரத்திற்கு சிவாத்வைத பாடியம் இயற்றிய ஸ்ரீ நீலகண்ட ஆச்சாரியார் ஸ்ரீ கண்டாச்சாரியார் எனவும் அழைப்படுகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அவரது உரைக்கு சிவார்க்கமணிதீபிகை என்ற உரையை பிற்காலத்தில் தமிழகத்தில் தோன்றிய ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் வரைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் வழியில் வந்த ஸ்ரீ ஸ்ரீனிவாச் சாஸ்த்ரிகளிடம் பயின்ற ஸ்ரீ நாகலிங்க ஆராத்யாரவர்கள் மீண்டும் சிவாத்வைதக்கருத்துக்களை பரப்புவதில் பெரும் தொண்டாற்றினார். ஸ்ரீ நாகலிங்க சாஸ்த்ரி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை சிவாத்வைதம் அல்லது ஸ்ரொவ்த்த சைவசித்தாந்தத்தினை பரப்புவதற்காக எழுதி வெளியிட்டதோடு தம் வாழ்க்கை முழுவதையும் அதற்காகவே அர்பணித்தார். ஸ்ரீ நாகலிங்க சாஸ்த்திரிகள் கேவலாத்வைத த்வைத விசிட்டாத்வைத பண்டிதர்களோடும் வாதிட்டு தர்கரீதியில் வெற்றியும் பெற்றார். ஸ்ரீ நீலகண்ட ஆராத்யாயரின் காலம் ஸ்ரீ சங்கரரின் காலத்திற்கும் முற்பட்டது என்று நாகலிங்க ஆராத்யாயர் கருதுகிறார். அவரது நூலில் ஸ்ரீ கண்டரின் ஜாதகத்தினையும் வெளியிட்டுள்ளார்.
    ஸ்ரீ நீலகண்டாச்சாரியார் காலம் விவாதத்திற்குறியது. எனினும் அவரது காலம் ஸ்ரீ ராமானுஜரின் காலத்திற்கும் முற்பட்டது என்பதிலும் ஸ்ரீ மெய்கண்டார் காலத்திற்கும் முற்பட்டது என்பதில் ஐயம் இல்லை. ஸ்ரீ நீலகண்டாச்சாரியாரிடமிருந்தே விசிட்டாத்வைதக்கருத்தினை ஸ்ரீ ராமானுஜர் மேற்கொண்டார் என்று ஆணித்தனமாக ஸ்ரீ காசிவாசி செந்திநாதையரும் ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்.
    ஸ்ரீ நீலகண்டாச்சாரியாரின் ப்ரம்மசூத்திர பாடியத்தில் லிங்கதாரணம் வலியுறுத்தப்பட்டிருந்ததாகவும் அந்தப்பகுதிகள் அப்பைய தீக்ஷிதரின் உரையில் விலக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றை ஸ்ரீ நாகலிங்க சாஸ்திரிகள் மீண்டும் கண்டறிந்து விளக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆகவே ஸ்ரீ நீலகண்டாச்சாரியார் ஸ்ரீ காளேஸ்வரத்தில் தோன்றியவர் என்பதில் ஐயமில்லை. அவரது வழிவந்தவர்கள் காளேஸ்வரம் என்ற பட்டப்பெயரோடு இன்னும் விளங்குவதாக ஸ்ரீ நாக லிங்க ஆராத்யாயர் கூறுகிறார்.

  6. சிவஸ்ரீவிபூதி பூஷண் அவர்களுக்கு என் நன்றி ஸ்ரீகண்டரின் காலம் குறித்தும் அவர் கேவலாத்துவிதிகளுடனும் விச்ஷ்டாத்துவிதிகளுடனும் வாதம் செய்து வெற்றி பெற்றார் என்பதும் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை சிவத்திரு காசிவாசி செந்திநாதய்யர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அவருடைய கருத்துக்கள் பல எனக்கும் உடன்பாடெனினும் சர்ச்சைகளைத் தவிர்க்க விரும்புகின்றேன்.

  7. ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி மஹாசயர் அவர்களுக்கு வந்தனங்கள்.

    நீ வேறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க நேராக வாழ்வதற்குனருகள் கூறி……

    இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா இமையவர் பெருமாளே….

    இந்த இரண்டு திருப்புகழ்களுக்கும் தேவரீர் அளித்த எளிமையான சித்தாந்த வ்யாக்யானம் இன்னமும் பசுமையாய் பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்துள்ளது. இந்த வ்யாசத்தை வாசிக்குங்கால் அதே என் நினைவில் வந்தது.

    விரிவானதொரு வ்யாக்யான விருந்துக்கு ஆவலுடன் உள்ளோம்.

    எனக்குப் பட்ட பிழை / சம்சயம்

    \\ஸ்ரீமாத்துவர் எழுதிய துவித்தாத்துவித பாடியத்தையும் \\ ஆனந்ததீர்த்தரின் துவைத பரமான மத்துவ பாடியமும் \\

    முந்தைய வாசகத்தில் மத்வ பாஷ்யம் த்வைதாத்வைதம் எனவும் பிந்தையதில் த்வைதம் என்றும் உள்ளது ஐயா. முந்தையது தவறு என்பது என் புரிதல்.

  8. ஸ்ரீ முத்துக்குமாரஸ்வாமி மஹாசயர் என்னுடைய இந்தப் பதிவிற்காக க்ஷமிக்கவும். தயவுசெய்து சிறியேன் சர்ச்சைக்காக இதை எழுதுகிறேன் என்று எண்ண வேண்டா.

    \\\\நீலலோஹித ருத்ராம்சத்துடன் மஹாகாளேஸ்வர ஸ்வாமி ஆசியுடன் அவதரித்தார் என்று பெளராணிகத்தனமான நம்ப முடியாத செய்தி கூறப்பட்டுள்ளது.\\\\

    நம்ப முடியாத செய்தி என்று மட்டிலும் சொல்லியிருந்தால் கூட மேற்கண்ட வாசகம் சரியான பொருள் தந்திருக்கும். அதற்கு பௌராணிகத்தனமான என்ற விகுதி வருத்தத்தை அளிக்கிறது.

    புராணங்களைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும் என்பது தங்கள் அபிப்ராயமாக இருக்காது என்பது என் புரிதல். பின்னிட்டும் இந்த அபசப்தத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

    அஷ்டாதச மஹாபுராணங்கள் யாவை என்பதில் அபிப்ராயபேதம் இருக்கலாம். புராணங்களில் இடைச்செருகல்கள் இருக்கலாம் என்பது சிஷ்டர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமே.

    தசலக்ஷண புராணானி என…..ஸ்ருஷ்டி வர்ணனம் (facts as to cosmos and creation) பூகோளககோள வர்ணனம் (Geographical descriptions) …..ரிது வர்ணனம் (description of seasons) ….ராஜவம்சவர்ணனம் (facts about history of kings)….என்றெல்லாம் கருத்துடன் ஸலக்ஷணமாக சாக்ஷாத் விஷ்ணுஸ்வரூபியான வ்யாசரால் எழுதப்பட்ட புராணங்களில் ஆங்காங்கு காலக்ரமம் சொல்லுதல் அல்லது இலக்கியச்சுவை கருதி மிகைப்படுத்தல்களும் இருக்கலாமேயன்றி புராணங்கள் மிகப்பெரும்பகுதி தத்வார்த்தம் மற்றும் மிகத்தேவையான தகவல்களின் கருவூலம் என்பது என் புரிதல். அதுவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ள பூகோளககோள வர்ணனைகளைப் பற்றி சமீபத்தில் விக்ஞான ஆராய்ச்சி சார்ந்த ஓரிரு வ்யாசம் விஜயவாணி தளத்தில் வாசிக்க நேர்ந்தது. அப்போது இவை எப்படிப்பட்ட கருத்துக்கருவூலங்கள் என வியப்பு ஏற்பட்டது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

    அதுவும் என் நித்ய படனத்தில் உள்ள பாகவதம் தாங்கள் இங்கு ப்ரதானமாக எடுத்துள்ள ப்ரம்மசூத்ரத்துக்கு துல்யமாக சொல்லப்படுவது. இரண்டும் உபக்ரமம் (சொல்ல எடுத்த பொருள்) உபசம்ஹாரம் (அறுதியாகச் சொல்லும் விஷயம்) என்ற விஷயத்தில் சாம்யதை உடையன எனப் பெரியோர் சொல்லக்கேட்டிருக்கிறேன். *ஜன்மாத்யஸ்ய யத:* என்ற பொதுவான உபக்ரமம் நினைவுக்கும் வருகிறது. அதே போலத்தான் சிவபுராணம், ஸ்காந்தம் — இத்யாதி புராணங்களும் தசலக்ஷணங்களுடன் கூட தீர்த்தம், க்ஷேத்ரம், வ்ரதாதிகள் — என ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிக்கப்பட்டன என்றே என் புரிதல்.

    ஆகவே நம்பமுடியாத என்ற சொல்லுடன் பௌராணிகத்தனமான என்ற சொல்லை மூத்த எழுத்தாளரான தங்களைப் போன்றோர் தவிர்த்திருக்கலாம் என்பது என் ஆதங்கம் ஐயா.

    நான் தவறாக ஏதும் சொல்லியிருந்தால் க்ஷமிக்கவும்.

  9. பெரியவர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, வணக்கம். தாங்கல் என் கட்டுரையைப் படித்து கருத்தினை வெளியிட்டமைக்கு நன்றியுடையேன். வேத உபநிடதங்களின் அடிப்படையில் தத்துவக் கொள்கைகளை அத்துவிதம் என்ற பதத்துடன் பொருத்திக் கூறுவதைச் சில புத்தகங்களில் வாசித்துள்ளமையால் துவிதாத்துவிதம் என்ற பதத்தை ஆண்டுள்ளேன். தவறெனின் திருத்தி வாசித்துக் கொள்ள வேண்டுகின்றேன். புராணங்கள் சைவசித்தாந்தத்திலும் பிரமாணமே. சில்ர் வரலாற்று உண்மைக்குச் சற்றும் பொருந்தாமல் தாம் கருதியவற்றை மிக் உயர்த்திக் கூற நிலை நாட்ட அவை ஏதோ புராணங்களில் உள்ளதாக எழுதிவிடுகின்றனர். அக்கற்பனை மொழிகளைப் பிரமாணமாக எடுத்து ஆளுவோரின் கருத்து வலுவற்றதென ஒதுக்கப்படும். புராணப் பிரசங்கம் செய்வோர் இத்தகைய கற்பனைகளில் ஈடுபடுவர். ‘நீலகண்ட மஹா காவியம்’ எனும் நூல் அத்தகைய கறபனை என்பது என் கருத்து. அவர்களின் கற்பனை மொழிகளையே இக்கட்டுரை ‘பெளராணிகத்தனமான’ என்னும் பிரயோகத்தால் ஒதுக்குகின்றது. தாங்கள் கூறுவதிலும் உண்மை உள்ளது . என்கூற்றிலும் உண்மை உள்ளது. மீண்டும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  10. பௌராணிகம் என்றால் என்ன என்ற கேள்வி இங்கே க்ருஷ்ணக்குமார் மஹாசயரின் பின்னூட்டத்தில் எழுகிறது. புராணத்தில் உள்ளதை அப்படியே உண்மை என்றுகொள்கிறவர்கள் பௌராணிகர்கள். வேதாந்திகளும் சித்தாந்திகளும் புராணங்களை ஆதாரமாக ப்ரமாணமாகக்கொண்டாலும் வேதம் மற்றும் ஆகமங்களின் ஞானக்காண்டதின் முடிபாகக்கொள்வதால் அவர்கள் பௌராணிகர்கள் ஆகார்.
    ஸ்ரீ நீலகண்ட பகவத்பாதரை ஸ்ரீ நீலலோகித ருத்ராம்சமாகக்கொள்வது சிவாத்வைத மரபு. ஸ்ரீ சங்கராச்சாரியாரை கேவலாத்வைதிகளும் ருத்ராம்சமாகக்கருதலும்.ஸ்ரீ ராமானுஜரை சேஷாவதாரமாகக்கருதலும் ஸ்ரீ நம்மாழ்வாரைத் திருமாலாகவே காண்டலும் ஸ்ரீ வைணவ மரபு.தம்பிரான் தோழர் சுந்தரர், சம்பந்தர், அப்பரடிகள் அனைவ்ர் சார்ந்தும் அத்தகு கருத்துக்கள் உள்ளனவே. அவ்வண்ணமே சிவாத்வைத மரபின் நம்பிக்கைகளையும் மதிப்பது சிறந்தது என்பதே அடியேனின் விருப்பம்.

  11. ‘நீலகண்ட மஹா காவியம்’ காட்டும் நீலகண்டரும், ‘சிவாத்துவித பாடியத்துக்கு பேருரை எழதிய நீலகணடரும் ஒருவரே எனபதற்கு வலுவான அடிப்படை இருந்தாலொழிய பிரச்சினைகளுக்கும் சர்ச்சைகளுக்குமிடமேயில.

  12. ஸ்ரீகண்ட பாச்ஷ்யத்தை சங்கர – ராமானுஜ – மாத்வ தர்சன பூர்வாசார்யர்கள் யாரும் எடுத்து பேசவில்லை. ஸ்ரீகண்டர் என்று ஒருவர் இருக்கவே ஆதாரம் இல்லை. இது முற்றிலும் அப்பைய தீட்சிதரின் சிருஷ்டி என்று கருதுவோர் இருக்கிறார்கள்.

  13. இக்கட்டுரையில் சில கருத்துக்கள் உண்மைக்கு மாறானாவை, ஏற்புடையதல்ல.

    // சுவேதாசுவதரம், அதர்வசிரசு, அதர்வசிகை, கைவல்லியோபநிடதம் முதலியன சிவபரத்துவத்திற்கு ஆதரவாக இருத்தலின், சிலர் இவை பிற்காலத்தன என்று விலக்குவர்.//

    இது உண்மையல்ல. பாஷ்யங்களில் நாராயண பரத்துவத்தைப் பெரிதும் பறைசாற்றிய ஆதி சங்கரரும் சுவேதாச்வதாரத்தைப் பல இடங்களில் மேற்கோளாக எடுத்துள்ளார். சுவேதாசுவதாரம், அதற்வசிரசு, அதர்வசிகை – இவற்றை ஆளவந்தார், இராமானுஜர் முதலானோர் உபனிடதங்களென்றே கருதியுள்ளனர். இவை சிவபரமாகாது என்றும் சாதித்துள்ளனர். ஆகம ப்ராமாண்யம், வேதார்த்த சங்க்ரஹம், ஸ்ரீபாஷ்யம் முதலிய நூல்களில் கண்டுகொள்க.

    கைவல்யோபநிடதத்தை விசிஷ்டாத்வைதிகள் கையாண்டதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து வந்த ஸ்மார்த்த பண்டிதராகிய திருவிச்சனல்லூர் ராமசுப்பிரமணிய சாஸ்திரி அவர்கள் ‘கைவல்யோபனிஷத் விலாசம்’ என்ற நூலில் கைவல்யோபனிஷத்தும் சுவேதாச்வதாரம், அதர்வசிகை, அதற்வசிரசு போல விஷ்ணுபரமே என்று விளக்கியுள்ளார்.

    சரபம், பஸ்ம ஜாபாலம், ருத்ராட்ச ஜாபாலம் போன்ற சிவபரத்துவத்தை வலிந்து கூறும் நூற்களையும், இன்னூற்களை உபநிடதங்கள் என்று பறைசாற்றும் முக்திகத்தையுமே நவீனக் கற்பிதங்கள் என்பது வைணவப் பெரியோர் கூறுவது. இவை உண்மையில் உபனிடதங்களாக இருந்தால் சிவபரத்துவத்தைச் சாதிக்கப் பல நூல்கள் இயற்றிய ஹரதத்தர், ஸ்ரீகண்டர் – அப்பைய தீட்சிதர் முதலானோரில் ஒருவராவது எடுத்திருக்கலாமே என்பது வைணவச் சான்றோர்கள் கேட்கும் கேள்வி. அப்பைய தீட்சிதரின் காலத்திற்குப் பிறகே இந்நூல்களை ‘உபநிடதங்கள்’ வரிசையில் நாம் கேள்விப் படுகிறோம்.

    சென்ற நூற்றாண்டில் ‘சமய சாதனம்’ எனும் சைவப் பத்திரிகையின் ஆசிரியருக்கும், ‘ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்’ எனும் வைணவப் பத்திரிகையின் ஆசிரியருக்கும் ‘உபநிஷத்துக்கள் நூற்றெட்டா’ என்ற தலைப்பில் நடந்த விவாதம் அப்பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. வைணவ ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சைவப் பெரியவர் பதிலுரைத்ததாகத் தெரியவில்லை. முந்தைய பாராவிலே கேட்கப்பட்ட கேள்வி அக்கேல்விகளுள் ஒன்று. சைவப் பெருமக்கள் எவரேனும் அக்கேள்விக்குப் பதில் தெரிந்தால் அறிய ஆவல்.

  14. ஐயா கந்தர்வரே
    “பாஷ்யங்களில் நாராயண பரத்துவத்தைப் பெரிதும் பறைசாற்றிய ஆதி சங்கரரும் சுவேதாச்வதாரத்தைப் பல இடங்களில் மேற்கோளாக எடுத்துள்ளார்”.
    ஆதி சங்கரர் தமது பாஸ்யத்தில் விஷ்ணுபரத்தினை சொன்னாரா எப்படி என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

  15. சிவஸ்ரீ அவர்களே,

    // ஆதி சங்கரர் தமது பாஸ்யத்தில் விஷ்ணுபரத்தினை சொன்னாரா எப்படி என்று விளக்கினால் நன்றாக இருக்கும். //

    இந்த சுட்டியில் பக்கம் 74, 43-வது கேள்வியையும் அதற்கான பதிலையும் பார்க்கவும்: https://saranagathi.org/blogs/books/files/2009/11/dialog_on_hinduism.pdf

  16. இந்தியர்களின் இறை நம்பிக்கை எல்லைகளுக்குள் அடங்காதது. அதனை சைவம், வைணவம் என்ற குறுகிய எல்லைகளுக்குள் அடக்கும் முயற்சி என்றுமே வெற்றி பெறாத ஒன்றாகும். ஒரே சக்தியே பலவாக தோற்றம் அளிக்கிறது என்பது அறிவியல் கண்ட உண்மை. எல்லாமே எலக்ட்ரான், புரோட்டான், ந்யூட்ரான் ஆகியவற்றின் மாறுபட்ட கலவைகளே. வெற்றிடம் என்பது எப்படி ஏற்பட்டது என்பது இன்னமும் யாருக்கும் புரிபடாத உண்மை. இறைச்சக்தி என்பது அளவிட இயலாதது என்பதே சரி. சிவ என்பதற்கு / சுபம் ,மங்களம், வேதம், மோட்சம் , என்பதே அகராதிகள் தரும் பல பொருள்கள் .அதே போல விஷ்ணு/ அல்லது நாராயணன் என்பதற்கும் பல பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன. எங்கும் நிறைந்தவன், சர்வ வியாபி , நரனை ( மனித இனத்தை ) அசையச் செய்பவன் / மனிதனை இயக்குபவன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். இது வேறு அது வேறு என்பது ஒரு குறுகிய பார்வை மட்டுமே. அகண்ட பார்வை கொண்டோருக்கு மட்டுமே எல்லாம் ஒன்று தான் என்ற உண்மை புலப்படும். அத்வைத, விசிஷ்டாத்வைத, துவைத, சைவ நூலாசிரியர்களும், உரை ஆசிரியர்களும் , அவரவர் மனத்துக்கு தோன்றிய விளக்கங்களை அளித்துள்ளனர். ஒரே வழி, ஒரே பாதை என்று மனித இனத்துக்கு என்றுமே வரமுடியாது ஏனெனில் மனிதர்களின் சிந்தனைப்போக்கிலும், செயல்பாட்டிலும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. மத்துவாச்சாரியார், இராமானுஜர், ஆதி சங்கரர் ஆகியோர் நம் சனாதன வழி வந்தவர்களே தவிர சனாதனத்தை உருவாக்கியவர்கள் அல்ல. நமக்கு எவரும் மதத்தலைவர் கிடையாது. இவர் தான் தலைவர் என்று யாரையாவது தூக்கிவைத்து ஆடும் நிலை ஏற்பாட்டால், அன்றே சுதந்திர சிந்தனைக்கும், இந்து மதத்துக்கும் ஆப்பு வைத்ததாகி விடும். எந்த வழியாயினும் இறைப்பேறை நாம் அனுபவிக்க முடியும் என்பதே இந்துமதத்தின் சிறப்பு.

  17. சிவாத்வைத சித்தாந்தத்தின் முக்கியக்கருத்துக்கள்.
    1. நிர்குணப்பிரம்மம் என்று ஒன்று இல்லை. இருப்பது சகுண்ப்பிரம்மமான சக்தியோடு இயைந்த சிவமே.
    2. பக்தி(உபாசனை) வேறு ஞானம் வேறு அல்ல இரண்டும் ஒன்றே.

  18. ‘Jabala’ Upanishad names in Shiva puranam

    In the Tamil booklet ‘Sankararum Vainavamum’, the Vishishtadvaitin author makes this charge on page 10:

    (Translation):// Appayya Dikshita and his associates concocted several Upanishads that proclaim ‘Shaivadvaita’ and compiled a list of 108 ‘Upanishads’. //

    Here is a related comment on the following page:
    https://tamilhindu.com/2013/10/sivadvaita-bhashyam/

    சரபம், பஸ்ம ஜாபாலம், ருத்ராட்ச ஜாபாலம் போன்ற சிவபரத்துவத்தை வலிந்து கூறும் நூற்களையும், இன்னூற்களை உபநிடதங்கள் என்று பறைசாற்றும் முக்திகத்தையுமே நவீனக் கற்பிதங்கள் என்பது வைணவப் பெரியோர் கூறுவது. இவை உண்மையில் உபனிடதங்களாக இருந்தால் சிவபரத்துவத்தைச் சாதிக்கப் பல நூல்கள் இயற்றிய ஹரதத்தர், ஸ்ரீகண்டர் – அப்பைய தீட்சிதர் முதலானோரில் ஒருவராவது எடுத்திருக்கலாமே என்பது வைணவச் சான்றோர்கள் கேட்கும் கேள்வி. அப்பைய தீட்சிதரின் காலத்திற்குப் பிறகே இந்நூல்களை ‘உபநிடதங்கள்’ வரிசையில் நாம் கேள்விப் படுகிறோம்.
    Translation/gist: The Vaishnavaite elders say that the ‘Sharabha, Bhasma Jabala, Rudraksha Jabala, etc. that make a struggled case of Shiva as the
    Supreme Brahman and the Muktika that endorses these as Upanishads are modern concoctions.’ If these were Upanishads really, Haradatta, Srikantha, Appayya Dikshita,
    etc. who authored several books to establish Shiva-supremacy would have cited these. But they have not.’ We hear these in the list of Upanishads only in the post-Appayya
    Dikshita period.

    To the above charge, the Advaitin’s response is as follows:
    Upanishad/s with a ‘Jabala’ suffix is found named in the Shiva Puranam that is admitted to be of very ancient antiquity. The size of the Shivapuranam is of that of the Maha
    bharata. Shankara has cited from this Purana in the Vishnu Sahasra Nama Bhashya to bring out the Shiva-supremacy, as the Parama Kaaranam. Later, Sridhara Swamin in the Vishnu Purana commentary has cited two verses,
    for the same purpose, from the Shiva Purana. Sri Raghavananda who lived during the same period, 13 – 14 CE, in Kerala, and wrote a commentary on the Srimad Bhagavatam
    has cited several verses from the Shiva Purana in the Sarva Mata Sangraha, again, that bring out Shiva Supremacy.
    The ‘Jabala’ found in the following sample verses of the Shiva Purana is definitely not the Jabala Upanishad cited several times by Shankara in the Prasthana traya
    Bhashya. That Jabala is available fully and has no mention of Bhasma Dharana vidhi. The Shiva Purana is also replete with Rudraksha Dharana vidhi, Mahatmya, etc.

    https://www.sanskritworld.in/public/assets/book/book_50dbeb7a95cd3.txt

    जाबालकोक्तमंत्रेण भस्मना च त्रिपुंड्रकम् ॥ १,१३.२१
    अन्यथा चेज्जले पात इतस्तन्नरकमृच्छति ॥ १,१३.२१
    तत्रैतेबहवोलोकाबृहज्जाबालचोदिताः ॥ १,२४.४९
    त्रिपुंड्रोद्धूलनंप्रोक्तजाबालैरादरेणच ॥ १,२४.९
    अग्निरित्यादिभिर्मंत्रैर्जाबालोपनिषद्गतेः ॥ १,२४.८
    [ स होवाच सद्योजातादिपञ्चब्रह्ममन्त्रैः परिगृह्याग्निरिति भस्मेत्यभिमन्त्र्यमानस्तोक ..in Brihajjaabaalopanishat,which is a very lengthy Upanishat. https://sanskritdocuments.org/doc_upanishhat/brihajjabala.html?lang=sa and also in this collection containing Brihajjabalopanishat: https://sa.wikisource.org/s/ktu ]
    कालाग्निरुद्रोपनिषत् too has this vidhi for bhasma with the mantras: परिगृह्याग्निरिति भस्म वायुरिति भस्मजलमिति भस्म स्थलमिति भस्म व्योमेति ..which is in the Atharvashiropanishat.]
    श्वेतागस्त्यदधीचाद्यैरस्माभिश्च शिवाश्रितैः ॥ ७.२,३३.४ [reference to Shvetashvataramuni?]
    Muktikopanishat is cited in Jivanmukti viveka (JMV) by Swami Vidyaranya 13 – 14 CE:
    https://sanskritdocuments.org/doc_upanishhat/muktika.html?lang=sa
    These two mantras are cited in the JMV together, after citing from the Kathopanishad:
    बहुशास्त्रकथाकन्थारोमन्थेन वृथैव किम् ।
    अन्वेष्टव्यं प्रयत्नेन मारुते ज्योतिरान्तरम् ॥ ६३॥
    अधीत्य चतुरो वेदान्सर्वशास्त्राण्यनेकशः ।
    ब्रह्मतत्त्वं न जानाति दर्वी पाकरसं यथा ॥ ६५॥
    The following mantra is cited elsewhere in the JMV
    वासनाहीनमप्येतच्चक्षुरादीन्द्रियं स्वतः ।
    प्रवर्तते बहिः स्वाऽर्थे वासनामात्रकारणम् ॥ २२॥
    All these three are found in the Muktikopanishad.

    The JMV cites several Upanishads that are part of the 108 such as the Amritabindu, Amritanada, Aruni, Paramahamsopanishad, Yajnavalkyopanishad, Brahmopanishad, etc. and the Naradaparivraka Upanishad which even has this specification for the pundra of sannyasins:

    https://sanskritdocuments.org/doc_upanishhat/naradparivra.html?lang=sa ऊर्ध्वपुण्ड्रं कुटीचकस्य त्रिपुण्ड्रं बहूदकस्य ऊर्ध्वपुण्ड्रं त्रिपुण्ड्रं हंसस्य भस्मोद्धूलनं परमहंसस्य तुरीयातीतस्य तिलकपुण्ड्रमवधूतस्य
    न किञ्चित् |
    Thus we see that several centuries before the advent of Appayya Dikshita, the Muktikopanishat and the Upanishads listed therein have existed. The charge that these are concocted ones post-Appayya Dikshita is completely without any basis. Unable to stomach the presence of Shiva-supremacy in innumerable Upanishads, the objection has stemmed by trying to blame Appayya Dikshita. The Shivapurana of very ancient antiquity citing the ‘Jabala’ Upanishad/s and Vidyaranya citing from the Muktia and several Upanishads enumerated therein is a fact that cannot be denied.
    Om Tat Sat

  19. இந்த அபிப்ராயத்திற்கு பதிலாக ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் கீழ்கண்ட பதிவில் பார்க்கலாம்:
    //சரபம், பஸ்ம ஜாபாலம், ருத்ராட்ச ஜாபாலம் போன்ற சிவபரத்துவத்தை வலிந்து கூறும் நூற்களையும், இன்னூற்களை உபநிடதங்கள் என்று பறைசாற்றும் முக்திகத்தையுமே நவீனக் கற்பிதங்கள் என்பது வைணவப் பெரியோர் கூறுவது. இவை உண்மையில் உபனிடதங்களாக இருந்தால் சிவபரத்துவத்தைச் சாதிக்கப் பல நூல்கள் இயற்றிய ஹரதத்தர், ஸ்ரீகண்டர் – அப்பைய தீட்சிதர் முதலானோரில் ஒருவராவது எடுத்திருக்கலாமே என்பது வைணவச் சான்றோர்கள் கேட்கும் கேள்வி. அப்பைய தீட்சிதரின் காலத்திற்குப் பிறகே இந்நூல்களை ‘உபநிடதங்கள்’ வரிசையில் நாம் கேள்விப் படுகிறோம்.

    சென்ற நூற்றாண்டில் ‘சமய சாதனம்’ எனும் சைவப் பத்திரிகையின் ஆசிரியருக்கும், ‘ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்’ எனும் வைணவப் பத்திரிகையின் ஆசிரியருக்கும் ‘உபநிஷத்துக்கள் நூற்றெட்டா’ என்ற தலைப்பில் நடந்த விவாதம் அப்பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. வைணவ ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சைவப் பெரியவர் பதிலுரைத்ததாகத் தெரியவில்லை. முந்தைய பாராவிலே கேட்கப்பட்ட கேள்வி அக்கேல்விகளுள் ஒன்று. சைவப் பெருமக்கள் எவரேனும் அக்கேள்விக்குப் பதில் தெரிந்தால் அறிய ஆவல்.//
    இங்கே பதிலைப் பார்க்கவும்:

    https://lists.advaita-vedanta.org/archives/advaita-l/2018-September/050575.html

  20. இங்கு பதில் எழுத முடியவில்லை. எடுத்துக்கொள்வதில்லை. முயற்சி செய்கிறேன்.

  21. ‘கந்தர்வன்’ கூறிய://சரபம், பஸ்ம ஜாபாலம், ருத்ராட்ச ஜாபாலம் போன்ற சிவபரத்துவத்தை வலிந்து கூறும் நூற்களையும், இன்னூற்களை உபநிடதங்கள் என்று பறைசாற்றும் முக்திகத்தையுமே நவீனக் கற்பிதங்கள் என்பது வைணவப் பெரியோர் கூறுவது. இவை உண்மையில் உபனிடதங்களாக இருந்தால் சிவபரத்துவத்தைச் சாதிக்கப் பல நூல்கள் இயற்றிய ஹரதத்தர், ஸ்ரீகண்டர் – அப்பைய தீட்சிதர் முதலானோரில் ஒருவராவது எடுத்திருக்கலாமே என்பது வைணவச் சான்றோர்கள் கேட்கும் கேள்வி. அப்பைய தீட்சிதரின் காலத்திற்குப் பிறகே இந்நூல்களை ‘உபநிடதங்கள்’ வரிசையில் நாம் கேள்விப் படுகிறோம்.//

    என்பதற்கு இங்கு பதில் கூறியுள்ளேன்: https://adbhutam.wordpress.com/2018/09/03/jabala-upanishad-names-in-shiva-puranam/

  22. ‘காலாக்னிருத்ரோபனிஷத்தை’ இப்பொழுது நமக்குத் தெரிந்தவரை மிகப் பழைய அத்வைத ஆசார்யர் மேற்கோள் காட்டியிருப்பது 13 வது நூற்றாண்டைக் கேர்ந்த நாராயணாஸ்ரமி தமது ‘அதர்வசிகா’ உபநிஷத் தீபிகையில், ப்ரணவம் பற்றிய விசாரம் செய்கயில் ‘காலாகாலாக்னிருத்ரோபனிஷத்தில் மகேசுவர, சதாசிவ, சிவ மூன்று தேவவடிவங்கள் அ,உ,ம எழுத்துக்களில் முறையே த்யானம் செய்யப்படவேண்டும்’ எனக் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறார். இவ்வுபநிடதம் விபூதி அணிவதற்கான விதி/முறைகளை விளக்குகிறது. ஆக, சிவசம்பந்தமான மற்றொறு உபநிடதம் மிகப் பண்டைய காலத்திலேயே வேதாந்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘அசல்’ உபநிடதம் என்பது புலனாகிறது.

  23. கந்தர்வனே ஆணவ மிகுதியால் சங்கரனைப் பழித்துப்பேசுவதும் அவர் அருளிய ஆகமங்களைப் பழிப்பதும் மோகன சாத்திரம் என்பதும் அவருடைய புராணங்களை தாமத நூல்கள் என்பதும் விபூதி உருத்திராக்கத்தை மாட்டுச் சாம்பல் என்றும் இலந்தைக் கொட்டை என்று நிந்திப்பதும் நந்திதேவரை அவமதித்து கங்க எருது என்பதும் இன்னம் பலவாறாய நிந்தனைகள் செய்யும் இராமானுச வழிவந்தோர் கூற்றை நாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை

  24. இன்னும் கேளும் சாபால உபநிடதம் சிவபுராணங்களில் பல இடங்களிலும் பேசப்பட்டிருப்பதாலும் அவையே விபூதி அணியும் முறைமையை எடுத்தோதுகின்றன என்பதாலும் அவைகள் ஒருநாளும் இடைச்செருகலாகாது.

    முக்கண்ணரால் அருளப்பட்ட ஆகமங்களை
    மத்துவ ராமானுச சங்கராச்சாரியாரால் ஏற்றுக்கொள்ளப்படாததால் அவை அப்பிராமணமாகாது.சங்கராச்சாரியார் சிவாகமங்களைப் பழித்தார் என்பது அவர் ஸ்ரீகண்டரிடம் தீட்சை பெறுவதற்கு முன்.அதன் பின் அவர் பாடிய சிவானந்தலகரி சௌந்தரியலகரியில் அஃதிடம் பெறவில்லை என்பதால் அது பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    அதுவும் கூரத்தாழ்வார் என்பவர் எழுதிய கூரேசவிசயத்தில் சிவாகமங்களை மோகனம் என்று எழுதி அவற்றை அவமதித்தார்.
    அந்த அவைதிகசிகாமணி
    இப்படி எழுதயிருக்கிறார்
    “மோகன சாத்திரத்தின் மொழிகுவதெண்ணினாரி பாகநின் பண்பாலென்னைப் படைத்தனை எனவும் யானுன் மோகனகதாட் கன்பு குழைந்துளே னெனவு” என்று கீறியிருக்கிறார்

    சீசீ இப்படியும் சிவனைப் பழிக்கும் சமயமும் உண்டோ
    ஆனால் எங்கள் திருமூலரோ
    ஆகமங்களைப் போற்றுகிறார்

    “அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணிலிகோடி” என்கிறார்

    இதிலிருந்து சிவாகமங்கள் காலத்தால் மிகவும் முந்தையது என்பதும் அவையே எல்லாவாகமங்களினும் சிறப்புடையன என்பதும் தெளிவாம்

    அதனால் கந்தர்வன் அவர்களே ஆகமங்களின் பெருமையை திருமந்திரத்தைப் படித்து தெளிந்து கொள்ளும்

    அவர் இன்னும் பல சிவநிந்தனை பாடல்களை எழுதியிருக்கிறார் என்பதும் அதன் பயன் நரகமே என்பதும் உறுதி

    அந்த குருட்டாழ்வார் எழுதிய துஷ்டப் பாடல்களையும் அவர் வழிவந்தவர்களின் உலறல்களை இங்கு பேசாதீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *