23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்

morning_hindutvaமைதிப்புறா ஜவஹருக்கு ராஜேந்திர பிரசாத்தை தொடக்கத்திலிருந்தே பிடிக்காததற்கு காரணங்கள் இருந்தன. ராஜேந்திர பிரசாத் பசு வதை தடுப்பு இயக்கம் ஒன்றில் தலைவராக இருந்தார். நேருவுக்கு இது எட்டிக்காயாக இருந்தது. ஆனால் ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசு தலைவராகிவிட்டார். நேருவுக்கும் ராஜேந்திர பிரசாத்துக்கும் பல பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வந்தன. மிக எளிய விஷயங்களில் அது தொடங்கியது. உதாரணமாக இந்தியா என்கிற பெயர் மட்டுமே அரசியல் நிர்ணய சட்டத்தில் இருக்க வேண்டும் என்றும் பாரதம்23_imsai என்பது வரக்கூடாது என்றும் நேரு வலியுறுத்தினார். ஆனால் ராஜேந்திர பிரசாத் பாரதம் எனும் பெயர் வர வேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தார். குறிப்பாக சோமநாதர் ஆலயம் மீண்டும் கட்டப்பட்ட நிகழ்ச்சியில் ராஜேந்திர பிரசாத் பங்கு கொண்டதில் நேருவுக்கு கடும் வருத்தம் இருந்தது. அதை போல வாரணாசியில் ஒரு வைதீக விழாவில் கலந்து கொண்ட ராஜேந்திர பிரசாத் அங்கு சாதுக்களின் கால்களை வணங்கினார் என்பதை நேரு கடுமையாக விமர்சித்தார் நேருவிய ஊடகங்களில் கேலி சித்திரங்கள் மூலம் குடியரசு தலைவர் கிண்டல் செய்யப்பட்டார். ஆனால் அதே வாரணாசியில் நேருவும் ஒரு வைதீக சடங்கில் தங்க செங்கோல் எல்லாம் ஏந்தியபடி கலந்து கொண்டார் என்பதை ஒரு மராட்டிய பத்திரிகை புகைப்படத்துடன் வெளியிட்டது.

நேருவுக்கு ராஜேந்திரபிரசாத் ஜனசங்கத்துடன் இணைந்து தனக்கு எதிராக சதி செய்துவிடுவார் என்கிற அச்சம் கடுமையாக இருந்தது. நேருவிடம் பேசுவதையே ராஜேந்திர பிரசாத் சங்கடமாக உணர ஆரம்பித்தார். எனவே தொடர்ந்து கடிதங்கள் மூலம் தனது எண்ணங்களையும் எதிர்வினைகளையும் ஆவணப்படுத்தி வந்தார். prasadநேருவின் உதவியாளர்கள் படேல்-முன்ஷி-ராஜேந்திர பிரசாத் ஆகியோர் சர்க்கரை வியாபாரிகளுடன் சேர்ந்து ஊழல் செய்வதாக வதந்திகளைப் பரப்பவும் தயங்கவில்லை. ஆனால் ராஜேந்திர பிரசாத் ஊழலுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை ஆராய சுதந்திரமான ஒரு மையம் தேவை என்றும் ஊழலே காங்கிரஸின் சவப்பெட்டியில் முக்கிய ஆணியாக அமையும் என்றும் கூறிய போது நேருவால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் ஊழல்கள் வெடித்து கிளம்ப ஆரம்பித்திருந்தன. நேருவின் பொருளாதார அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1958 இல் ஆயுள் பாதுகாப்பீடு ஊழலில் பதவி விலக நேர்ந்தது. (இதை பாராளுமன்றத்தில்  நேருவின் மருமகன் ஃபெரோஸ் காந்தியே எழுப்பியது தற்செயலா அல்லது நேருவின் ராஜ தந்திரமா என்பது தெரியவில்லை.) நேருவின் உதவியுடன் செயல்பட்ட ஜெயந்தி தர்ம தேஜா பண மோசடி செய்து நாட்டை விட்டே ஓடினார். ஒரு இந்திய குத்ராச்சி என்று வைத்து கொள்ளூங்கள். ஆனால் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஊழலினாலோ 2-ஜி ஸ்பெக்ட்ரத்தினாலோ எந்த தனிப்பட்ட லாபமும் இல்லை என்பது போல நேருவுக்கும் இந்த ஊழலுக்கும் தனிப்பட்ட ஆதாயங்கள் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை. அவரது சொந்த பெர்சனல் செக்கரட்டரி மாத்தாய் கூட வருமானத்துக்கு அதிக அளவு சொத்து சேர்த்த விவகாரத்தால் ராஜினாமா செய்ய நேர்ந்தது.

நேருவின் திபெத்திய நிலைபாடுகளிலும் ராஜேந்திர பிரசாத்துக்கு கடுமையான கருத்து வேறுபாடு இருந்தது. ”திபெத் சிந்தும் ரத்தம் இறுதியில் இந்தியாவின் மீதான தாக்குதலாக வந்து சேரும்” என அவர் நேருவுக்கு கூறினார். காம்ரேட் கிருஷ்ண மேனன் ஒரு கடும் சோஷியலிஸ்ட்.  நேரு விசுவாசி. நேருவின் முழு நம்பிக்கை பாத்தியமானவர். பெரும் அகங்காரி. அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவார். தனக்குதான் எல்லாம் தெரியும் என செயல்படுவார்.menon_nehruநேருவின் செல்லபிள்ளையாக வளைய வளைய வந்த காம்ரேட் கிருஷ்ண மேனன் எந்த மதிப்பிற்குரிய காங்கிரஸ் தலைவர்களையும் எத்தனை மோசமாகவும் கிண்டல் செய்ய நேரு அனுமதித்தார். பிரிட்டிஷ் தடியடிகளை தாங்கி எப்போதும் நரம்பு பிரச்சனையால் நடுங்கும் தலையையும் தொங்கு மீசையையும் கொண்ட கோவிந்த வல்லப பந்த் நேருவுக்கு போராட்ட கால சகா. பின்னர் அரசியல் பிளவுகளிலும் நேருவுடன் இருந்தவர். இவரை மேனன் நேருவிடமே ‘நடுங்கும் தலை கொண்ட வால்ரஸ்’ என்றுதான் குறிப்பிடுவார். நேரு மகத்தான நகைச்சுவை உணர்வுடன் ஜனநாயகவாதியாக அந்த கிண்டலை புரிந்து கொண்டார். ஆனால் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா நேரு குறித்து கேலி சித்திரங்கள் வெளியிட்ட போது ‘பிரதம மந்திரி’ இல்லத்துக்கு வரும் பத்திரிகைகள் வரிசையிலிருந்து வீக்லி விலக்கப் பட்டது.

ஜெனரல் திம்மய்யாவுடன் பாதுகாப்பு அமைச்சர் காம்ரேட்  கிருஷ்ண மேனனுக்கு பிரச்சனை இருந்தது. முக்கியமான முதன்மை தலைமை ராணுவ பதவிகளில் நேருவுக்கு வேண்டிய திறமையில்லாத ராணுவ தளபதிகள் நியமிக்கப்பட்டார்கள். ஒருவர் பிரேம்நாத் தாப்பர், மற்றொருவர் கவுல். திம்மய்யா சர்வதேச அரங்குகளில் செயல்பட்ட போர்வீரர். timmayaஅன்றைய உலகின் தலைசிறந்த போர் தளபதிகளில் ஒருவர். இந்திய ராணுவத்தின் ஒவ்வொரு வீரனாலும் நேசிக்கப்பட்டவர். அவர் மீது போர்வீரர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவரது பரிந்துரைகளை உதாசீனப் படுத்தி அவரை அவமானப்படுத்தினார் மேனன். காம்ரேட் கிருஷ்ண மேனனை மனிதருள் மாணிக்கம் ஆதரித்தார். காம்ரேட் கிருஷ்ன மேனன் அவர் இஷ்டப்படி செயல்பட்டார். திம்மய்யா பதவியை எவ்வித தயக்கமும் இல்லாமல் ராஜினாமா செய்தார். பஞ்சசீலம் தந்த பண்டிதரின் அரசியல்வாதி மூளைக்கு இது நல்ல விளம்பரமல்ல என புரிந்தது. திம்மய்யாவை ராஜினாமாவை திரும்ப பெற கோரினார். ஆனால் காம்ரேட் கிருஷ்ணமேனன் தான் செய்த பதவி நியமனங்களை மாற்ற இயலாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். திம்மய்யாவும் ஜனநாயக தலைமைக்கு கட்டுப்பட்டார்.

“நல்லது. உங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளுங்கள். ஆனால் நான் ராஜினாமாவை திரும்ப பெற முடியாது. ராணுவ வீரர்களுடனான தனது இறுதி பேச்சில் உணர்ச்சிவசப்பட்டு கூறினார் திம்மய்யா “உங்களை எல்லாம் சீன பீரங்கிகளுக்கான சுலப இலக்குகளாக நான் விட்டுச்செல்கிறேனோ என அச்சப்படுகிறேன்.” திம்மய்யா-மேனன் பிரச்சனையில் திம்மய்யாவுக்கு ஆதரவாக பேசினார் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்.

தமது நல்லாட்சிக்கு அரசியல் மூளை இல்லாத ஒரு பிரபலம் குடியரசு தலைவராக இருந்தால் நல்லது என நினைத்தார் ஜனாப். எனவே டாக்டர்.ராதா கிருஷ்ணனை அவர் தேர்வு செய்தார். ராஜேந்திர பிரசாத் ஏதோ இந்து வெறியர் ஜனநாயகத்தன்மையற்றவர் என நினைப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியம் இருக்கிறது. ஜனாப் நேரு இரண்டாம் முறை ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவராகிவிட கூடாது என்பதில் அதி தீவிரமாக செயல்பட்ட போது, அதற்கு எதிராக ராஜேந்திர பிரசாத்தின் பெயரை மீண்டும் குடியரசு தலைவராக பரிந்துரை செய்தவர்  தீவிர இஸ்லாமிய நம்பிக்கையாளரான அபுல்கலாம் ஆசாத். rkதீவிர கம்யூனிச எதிர்ப்பாளராக இருந்தவர் ராஜேந்திர பிரசாத். ராதாகிருஷ்ணனும் அவ்வாறே. ஆனால் கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசை நேருவிய காங்கிரஸ் நீக்கியதை ராஜேந்திர பிரசாத்  தவறு என்றே கருதினார் என்பதை ராதாகிருஷ்ணன் பதிவு செய்கிறார்.

1962 இல் ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவராகிறார். அதன் பிறகு ராதாகிருஷ்ணனுக்கு ஆசியஜோதியின் மற்றொரு முகம் தெரிய ஆரம்பிக்கிறது.  1963 இல் ராஜேந்திர பிரசாத் பாட்னாவில் மரணமடைகிறார். குடியரசு தலைவரான ராதாகிருஷ்ணனுக்கு நேரு எழுதுகிறார்: “என்னால் வரமுடியாது. நீங்களும் போக வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.” ஏனென்றால் தேசிய நிவாரண நிதி வசூலுக்காக ராஜஸ்தான் போக வேண்டி இருப்பதால் கடமையே கண்ணான கர்மயோகியால் பாட்னா வரமுடியாதாம். ஆனால் உடனடியாகவே இதற்கு ராதாகிருஷ்ணன் பதில் எழுதுகிறார், “நான் போவது அவசியம் மட்டுமல்ல. நீங்களும் உங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு முதல் குடியரசு தலைவரின் அந்திம கிரியைகளுக்கு வர வேண்டும்.”

இந்திய சீன போரில் நேருவின் நடத்தை, காஷ்மிர் விஷயத்தில் தொடர்ந்து நேருவின் போக்கு இவையெல்லாம் ராதாகிருஷ்ணனுக்கும் நேருவுக்கும் இடைவெளியை ஏற்படுத்த ஆரம்பிக்கின்றன. குடியரசு தலைவரான பின்னர் ராதாகிருஷ்ணன் நேருவிடம் காம்ரேட் கிருஷ்ண மேனனை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிடுமாறு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தினார்.  ஐநா சபையில் மேனன் இந்திய பிரதிநிதியாக செயல்பட்ட விதம் இந்தியாவுக்கு உகந்ததாக இல்லை என டாக்டர் ராதாகிருஷ்ணன் கருதினார்.  இந்திய ராணுவம் மிக மோசமான முறையில் அரசியல் தலையீடுகளால் சீர்குலைக்கப்பட்டு சீனாவினால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. நேரு இப்போது ராதாகிருஷ்ணனும் ராஜாஜியுமாக சேர்ந்து தமக்கு எதிராக சதியாலோசனைகள் செய்வதாக அச்சம் கொண்டிருந்தார்.  சீன இந்திய எல்லையில் ராணுவ தலைமை ஏற்றிருந்தவர் லெப்.ஜெனரல் பி.எம்.கவுல். காஷ்மிரி பண்டிட்டான இவர் நேருவின் அணுக்கர். எனவே கிருஷ்ண மேனனால் ராணுவத்தில் மேலே கொண்டு வரப்பட்டவர். இவரது நியமனம் திம்மய்யாவை ஏளனம் செய்யவும் நேருவை திருப்தி செய்யவும் கிருஷ்ண மேனனால் நடத்தப்பட்டது. மீண்டும் தனிப்பட்ட உரையாடலில்  இந்த கவுலின் திறமையை குறித்த ஐயங்களை ராதாகிருஷ்ணன் பண்டிதரிடம் தெரிவித்தார்.

ஆனால் போர் தொடங்கியதும் நேருவின் கையாளான கவுல் அட்டகாசமான ஒரு சாதனையை செய்தார். ஆம். துருப்புகள் சீன தாக்குதலில் சிக்கி அத்தனை கைவிடல்களுக்கு மத்தியிலும் உயிரை கொடுத்து போராடிக் கொண்டிருக்க, கவுல் ராணுவ மருத்துவமனையில் ‘உடம்பு சீக்கு’ என்று சொல்லி படுத்து கொண்டார். மருத்துவமனையிலிருந்த படி களத்தில் போராடும் வீரர்களுக்கு உத்தரவுகளை அனுப்பிக் கொண்டிருந்தார். நேருவோ பாராளுமன்றத்தில் சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தில் புல்லும் கிடையாது பூண்டும் கிடையாது எனவே நாம் அதற்கெல்லாம் அதிகம் கவலைப்பட வேண்டியது கிடையாது என காம்ரேட் கிருஷ்ண மேனனை பாதுகாத்துக் கொண்டிருந்தார்.

himalayan_blunder_bookகாம்ரேட் கண்டெடுத்த மற்றொரு முத்து பிரேம்நாத் தப்பார். எவ்விதத்திலும் ராணுவத்துக்காக குறிப்பாக சீன இந்திய எல்லையில் உள்ள ராணுவத்தின் தேவைகளை அரசு தலைமையிடம் பட்டும் படாமலும் கூறிக் கொண்டிருந்தவர். கிருஷ்ண மேனன் சொன்னது தவறு என்று தெரிந்தால் கூட நேரு சொன்னவுடன் அதற்கு ஆதரவு தெரிவித்து கொண்டிருந்தவர். திம்மய்யாவின் எதிர்ப்பை மீறி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதே இந்த காரணத்துக்காகத்தானே. இந்த போர் காலத்தில் அவமானம் தாங்காமல் வேறுவழியில்லாமல் தன் பதவியை ராஜினாமா செய்தார் தப்பார். பாய்ந்தார் பண்டிட் ஆசிய ஜோதி. 23-ஆம் புலிகேசிக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் மருத்துவமனை மாவீரர் கவுலிடம் இந்திய ராணுவத்தின் தலைமையை அளிக்க வேண்டும் என்றார். குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் மிகத் திட்டவட்டமாக அதை மறுத்துவிட்டார். ’அநீதியும் முட்டாள்தனமும்’ கொண்டதாக அந்த தீர்மானம் இருக்கும் என்பதை டாக்டர் ராதாகிருஷ்ணன் மனிதருள் மாணிக்கத்துக்கு சுட்டிக் காட்டினார். ராதாகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் பெயரில் லெப்.ஜெனரல் ஜி.என்.சவுத்ரி தளபதியாக்கப்பட்டார்.

போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு கிருஷ்ண மேனன் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமென்று குரல்கள் எழுந்தன. ஆனால் நேருவுக்கு மனம் இல்லை. எனவே பாதுகாப்பு துறையை தான் ஏற்றுக் கொண்டு பாதுகாப்புத் துறைக்கான தயாரிப்புத் துறை ஒன்றை உருவாக்கி அதன் அமைச்சராக மேனனை நியமித்தார். அக்டோபர் 31, 1962 இல் இது நடந்தது. அப்போது மேனன் தேஜ்பூரில் இருந்தார். மேனன் அங்கிருந்து கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார்: “கவலைப்படாதீர்கள். எதுவும் மாறிவிடவில்லை. உண்மையான பாதுகாப்புத் துறை அமைச்சராக நீடிப்பது நான் தான்.” இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் தெளிவாக சொல்லிவிட்டார். இதற்கு மேல் மேனன் சகிக்கப்பட கூடாது. ஆனால் இந்திய எல்லைகளை பாதுகாத்தாரோ இல்லையோ மேனனை பாதுகாப்பதில் தன் அத்தனை பாண்டித்தியத்தையும் காட்டினார். காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட குழு கூடியது. அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே கோரிக்கைதான் இருந்தது. கிருஷ்ண மேனன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். நேருவுக்கு ஒரே அச்சம்தான் இருந்தது. அதை ஏற்கனவே சவானிடம் சொல்லியிருந்தார்: அவர்கள் இன்றைக்கு கிருஷ்ணமேனனை விலக சொல்வார்கள் நாளைக்கு என்னை விலக சொல்வார்கள். எனவே நேரு அவருக்கு தெரிந்த அத்தனை வித்தைகளையும் காட்டினார். கடும் கோபத்துடன் திட்டினார் – “உங்கள் ஒவ்வொருவரையும் நான் கமிட்டியிலிருந்து நீக்கிவிட முடியும் தெரியுமா?” ஆனால் இந்த முறை எவரும் அசைந்து கொடுக்கவில்லை.  எவரும் எத்தனை பெரியவராக இருந்தாலும் தேசத்தை விட அவர் பெரிதில்லை என்றார்கள்.

தன்னை காப்பாற்றி கொள்ள காம்ரேடை பலி கொடுக்க வேண்டுமென்பது நேருவுக்கு தெளிவாயிற்று. ஆனாலும் இறுதியாக ஒரு தந்திரத்தை செய்ய பார்த்தார். நான் சொல்லி கிருஷ்ண மேனன் ராஜினாமா செய்ததாக இருக்க வேண்டாம். நீங்கள் எழுதி கொடுங்கள். அதை வைத்து நான் கிருஷ்ண மேனனை ராஜினாமா செய்ய சொல்கிறேன். ராதாகிருஷ்ணன் பொறுமையை இழந்து கிண்டலாக சொன்னார் நம் அரசியல் நிர்ணய சட்டத்தின் படி பிரதம மந்திரிதான் ஒரு அமைச்சரின் நீக்கத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நீங்கள் தலைகீழாக சொல்கிறீர்கள். வேறு வழியில்லாமல் நவம்பர் 7 அன்று அமைச்சரைவியிலிருந்து மேனன் நீக்கப்படுவதை நேரு குடியரசு தலைவருக்கு எழுதினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டார். நேருவின் மரணத்துக்கு பின் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு பிறகு 1975 இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் மரணமடைந்தார். எனவே டாக்டர் ராதாகிருஷ்ணனின் இறுதி சடங்குகளில் பங்கு பெற வேண்டாம் என எவரையும் தடுத்து நிறுத்த பண்டித நேருவால் முடியவில்லை.

மீண்டும் தேநீருடன் நாளை காலை சந்திப்போம்.

 

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

 • Durgadas, India from Curzon to Nehru and After, John Day,1970
 • K. Satchidananda Murty, Ashok Vohra, Radhakrishnan: His Life and Ideas, SUNY Press, 1990
 • Sankar Ghose, Jawaharlal Nehru, a Biography, Allied Publishers, 1993

 

Tags: , , , , , , , , , , , , , , ,

 

25 மறுமொழிகள் 23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்

 1. கண்ணன் on November 20, 2013 at 7:41 am

  இந்த கவுல் குறித்த கட்டுரைகள் முன்பு ஆங்கில பத்திரிகைகளில் வந்துள்ளன; தமிழ் பத்திரிகைகள் ‘சுத்த தேசீயம்’ காத்ததாகவே தெரிகிறது; கப்சிப்; திசா ராஜு அவர்கள் மட்டும் சில இடங்களில் இந்த விவகாரங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாக நினைவு.

  அரசியல்களுக்கு அப்பாற்பட்ட உன்னத ஜனநாயக, தேசீயவாதியாகப் பிரபலப்படுத்தப்பட்டவரின் மறைக்கப்பட்ட இன்னொரு பக்கம் பரவலாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுவது எதிர்கால பாரதமாவது சரியான திசையில் செல்ல உதவும்;

  குருவை தாண்டிய சிஷ்யனாக இருப்பது பாராட்டுக்குறியதுதான், பொதுவாக; ஆனால், குருவின் கொள்கை, நடைமுறை, சாயல் இப்படி ஏதொன்றையையும் கைக்கொள்ளாததொடு மட்டுமல்ல நேர் எதிரான அணுமுறையில் செயல்பட்ட இவர் அவருடைய சிஷ்யனாக முன்னிறுத்தப்பட்டு அவரைத்தாண்டிய சிறப்புக்கள் இவரிடம் இருப்பதாக போற்றப்படுவது என்னவிதமான அறிவுடைமையோ தெரியவில்லை!

 2. பெரியசாமி on November 20, 2013 at 7:44 am

  ஜவஹர்லால் நேரு ஒரு அசிங்கம் பிடித்த சர்வாதிகாரி. அவருடைய சர்வாதிகாரப் புத்தி தான் அவர் மகள் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தி நாட்டின் மூத்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும் , எதிர்க்கட்சித்தலைவர்களையும் சுமார் 19 மாதம் வெஞ்சிறையில் அனுப்பி வாட வைத்ததற்கு அடிப்படையாக அமைந்தது. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா என்பார்கள். இவ்வளவு கேவலமான இந்த நபர் நாட்டின் முதல் பிரதமர் ஆனது இந்தியாவின் சாபக்கேடு.

  “ஜனாப் நேரு இரண்டாம் முறை ராஜேந்திர பிரசாத் குடியரசு தலைவராகிவிட கூடாது என்பதில் அதி தீவிரமாக செயல்பட்ட போது, அதற்கு எதிராக ராஜேந்திர பிரசாத்தின் பெயரை மீண்டும் குடியரசு தலைவராக பரிந்துரை செய்தவர் தீவிர இஸ்லாமிய நம்பிக்கையாளரான அபுல்கலாம் ஆசாத். “- ஆசாத்தின் பேச்சையும், கருத்தையும் உதாசீனம் செய்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். இஸ்லாமிய தலைவர்களில் சிறிதாவது நிதான புத்தி உடைய தலைவர்களை நேரு புறக்கணித்தார் என்பது வரலாற்று உண்மை. காங்கிரஸ் அழிவது காலத்தின் கட்டாயம். ஜனநாயக விரோத , குடும்ப அரசியல் அடிப்படைகொண்ட, பொருளாதார மோசடிகள் மற்றும் ஊழலின் வேறாக விளங்கும் கட்சி நம் நாட்டில் ஆளுவது நாட்டுக்கே ஆபத்து.

 3. அரசன் on November 20, 2013 at 7:46 am

  இன்றைய தேநீருடன் முற்றிலும் அறியப்படாத செய்திகளை அறிய முடிந்தது. நன்றி.

 4. வீர. ராஜமாணிக்கம் on November 20, 2013 at 7:47 am

  காங்கிரஸின் இந்து எதிர்ப்பு, இந்து மக்கள் வெறுப்பு என்பது தொடர்கதை தான் என்பதை வெளிச்சமிட்டு காட்டி இருக்கிறீர்கள். நேருவை வானாளவ புகழும் பொய்களுக்கு நடுவில் அவர் பற்றிய உண்மைகள் ஒளி பெற செய்யும் மகத்தான உங்கள் சேவைக்கு நன்றி. டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜெனரல் திம்மப்பா போல வரலாற்றின் ஒளி அதிகம் படாதவர்கள் மீதும் ஒளி பெறச்செய்யும் அநீயின் செயல் ஒரு வரலாற்று ஆய்வாளனின் கடமையை மற்றவர்களுக்கு நினைவு படுத்துவதோடு போற்றத்தக்கதும் ஆகும்.

 5. மீனாட்சிசுந்தரம் சோமையா on November 20, 2013 at 8:09 am

  INDIA AFTER GANDHI என்னும் நூலில் திரு ராமச்சந்திர குஹா , (ஒரு நேர்மையான HISTORIAN )வேறு விதமாக சொல்லியிருக்கிறார்
  .உங்கள் பதிவில் ANTI நேரு என்பது முதன்மைபடுத்த பட்டுள்ளது என்று கருதுகிறேன் .
  நேரு தவறுகள் செய்தவர் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை
  ,SECULARISM சார்ந்து இருக்க முயற்சித்து இருப்பது ANTI HINDU ஆக வர்ணபடுத்தபட்டுள்ளதோ என்றும்
  நேருவை நயவஞ்சகர் போல சித்தரிப்பதும்
  உணர்வுபூர்வமானது என்றும் கருதுகிறேன்

 6. Geetha Sambasivam on November 20, 2013 at 8:58 am

  அருமையான தகவல் களஞ்சியம்.

 7. K.Muthuramakirushnan on November 20, 2013 at 9:12 am

  கட்டுரைகளும்,பின்னூட்டங்களும் ‘கவுன்டெர் ப்ரொடக்டிவ்’ஆக ஆகிவிடக் கூடாது என்று ஆண்டவனை வேண்டுகிறேன்.

  என்னைப் போன்ற கட்சி சார்பில்லாத பலரும் இன்றைய‌ காங்கிரஸ் அரசு விலக்கப்பட வேண்டும் என்றே நினைக்கிறோம்.

  சுதந்திரப்போராட்ட காலத் தலைவர்கள் பலரும் செய்த பல தியாகங்களை அவர்களுடைய ‘ஈகோ’ பிரச்சனைகளை வெளிச்சம் போட்டுக்காட்டி அல்லது அவர்களுடைய சொந்த வாழ்க்கை நிகழ்வுகளை சொற்களாலும் படங்களாலும் சிறுமைப்படுத்துவது ‘கவுன்டெர் ப்ரொடக்டிவ் ஆகக் கூடிய அபாயம் உள்ள‌து.

  அநீ போன்றவர்கள் அறியாததல்ல நான் சொல்வது.சரியான நோக்கத்தில் என் கூற்றை புரிந்துகொள்ள வேண்டுமே என்றும் ஆதங்கப்படுகிறேன்.

  பட்டேலுக்கும் நேருவுக்கும், நேருவுக்கும் ராஜன்பாபுவுக்கும்,நேருவுக்கும் ராதாகிருஷனனுக்கும் இருந்ததைப்போன்ற ஈகோ பிரச்சனைகள், எல்லா கட்சிகளிலும் உண்டுதானே?

  சமீபத்தில் கூட இந்து சார்பு எதிர் கட்சியில் அதனை சந்தித்தோமே!

 8. rajaram on November 20, 2013 at 9:42 am

  1948 Jeep scandal has been missed.

 9. வரதராசன் on November 20, 2013 at 9:56 am

  நேரு குறைகள் உள்ள தலைவர்தான். ஆனால் அவரிடம் இருந்த லட்சியவாதம் நடைமுறையில் இருந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. மகாத்மா காந்தியும் அப்படிப்பட்ட லட்சியவாதியாக இருந்ததால் இந்துத்துவர்களால் வெறுக்கப்படும் விளைவுகளை உருவாக்கினார். இவை உங்களுக்கு புரியவில்லை. புரிந்துகொள்ள இந்துத்துவர்களுக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. நேரு பற்றிய ஒரு முழுமையான பார்வை இல்லாமல் நேருவை குறித்து ஒரு நெகட்டிவான பிரச்சாரத்தை இந்துத்துவர்கள் செய்து வருகிறீர்கள். மோடி ஆரம்பித்துவைத்த பல தீய போக்குகளில் இதுவும் ஒன்று. இந்துத்துவம் தவிர மற்ற கொள்கைகளைப் பற்றி இந்துத்துவர்கள் வெறுப்பை கக்குவது புதிய சமாச்சாரம் இல்லை. பிரச்சாரம் செய்யும்போது இந்து மதம் அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் மதம் என்று சொல்லுவதும், நடத்தையில் மற்றவர்களை பற்றி வெறுப்பை அள்ளிகொட்டுகிற போக்கையும் கண்ட பொதுமக்களிடம் இந்துத்துவத்தின் மேல் எந்த ஆதரவும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நடத்தை இல்லாத நேரு தன்னைப் பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக எதிர்கொண்டார். அவர் ஒரு ஜனநாயகவாதி. உளவுத் துறையை வைத்து வேவு பார்க்கும் பழக்கம் கொண்டவர் இல்லை. அந்த ஜனநாயகத்தன்மையில் சிறிதளவேனும் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால் இந்த கமெண்டை வெளியிடுவீர்கள்.

 10. த. துரைவேல் on November 20, 2013 at 11:27 am

  இதைப்போன்ற பிரச்சாரத்தை முதலில் கம்யூனிச்டுகள் செய்தார்கள் திராவிட கழகத்தினர் செய்தார்கள். இப்போது நீங்கள் செய்கிறீர்கள். நீங்களும் இந்த வெறுப்பரசியலை பின்பற்றுவீர்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

 11. அத்விகா on November 20, 2013 at 12:16 pm

  நேருவின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி இங்கு யாரும் விமரிசிக்கவில்லை. அவர் இந்தியத்திருநாட்டுக்கு எவ்வளவு துரோகம் செய்தார் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. அவர் பற்றிய படங்கள் எல்லாம் ஏற்கனவே பிற பத்திரிகைகளில் வந்தவை தான். நம் நாட்டின் பொருளாதாரத்தினை பாழடித்த முழு மூடர் அவர். நேருகுடும்ப சொம்புகளுக்கு ஆத்திரம் வருவது இயல்பு தானே.

 12. paandiyan on November 20, 2013 at 12:57 pm

  என் முதல் பின்னுட்டம் இது இங்கு . திரு .மீனாட்சிசுந்தரம் சோமையா அவர்கள் இந்த blog கன்டென்ட்ம் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.

  http://rprajanayahem.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
  நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க செல்லுகிறார். மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை. நேருவுக்காக நைட் கவுனோடு லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’ செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு “Lady Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
  கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார். “ டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
  குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப் போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”

 13. paandiyan on November 20, 2013 at 12:59 pm

  continuation of the above;
  குஷ்வந்த் சிங் காட்டும் கிருஷ்ணமேனன் பற்றிய குறிப்புகள் இந்த விக்கிரகத்தை உடைத்து விடுகிறது. ஒரு முழுமையான வில்லன் போலவே தான் கிருஷ்ணமேனன் பற்றி தெரிய வருகிறது.
  13 மணி நேரம் காஷ்மீர் பற்றி பேசியதன் out put என்ன? காஷ்மீர் பற்றிய இந்திய நிலைப்பாட்டிற்கு எதிராகத் தான் ஐக்கிய நாடுகள் சபையில் ஓட்டு போட்டார்கள். A unanimous vote against India!
  சீன சண்டையில் இந்தியாவின் தோல்விக்கு கிருஷ்ணமேனன் தான் பொறுப்பாளி.

  எப்படியோ நேருவை கிருஷ்ணமேனன் இன்ஃப்ளூயன்ஸ் செய்ய முடிந்திருக்கிறது. அவர் சுதந்திர இந்தியாவின் இங்கிலாந்து தூதராக ஆக முடிந்திருக்கிறது.
  ஹைகமிஷனராக லண்டனில் அவர் செயல் பாடுகள் பற்றி குஷ்வந்த் சிங் எழுதுவதைப் படிக்கும்போது கோபமே வருகிறது. இப்படிப்பட்டவர்கள் பற்றி அறிய வரும்போது நீட்ஷே சொன்னது தான் எப்போதுமே நினைவில் வருகிறது, ” அவ்வப்போது ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது ! அவ்வப்போது அரியணையே ஆபாசத்தின் மேல் !”
  கிருஷ்ணமேனன் ஒரு womanizer, sadist and a liar என்றாலும் ஒரு Bachelor.

 14. க்ருஷ்ணகுமார் on November 20, 2013 at 2:16 pm

  1947ல் ஹிந்துஸ்தானப் பிரிவினைக்குப் பின் தேசம் சந்தித்த மிகப் பெரும் இழிவு 1962ல் சீனயுத்தத்தில் அபஜெயம். இதற்குக் காரணம் தோழர் க்ருஷ்ண மேனனும் அவரது அடிப்பொடிகளும் மற்றும் இவர்களை ஊக்குவித்த பண்டித நேருவும்.

  1962 சீன யுத்தம் முடிந்து 50 வருஷம் பூர்த்தி ஆகிய 2012ல் தமிழ் ஹிந்துவில் இது சம்பந்தமான வ்யாசத்தை எதிர்பார்த்தேன். ஸ்ரீ அ.நீ அவர்கள் இங்கு இது சம்பந்தமாகப் பகிர்ந்த தகவல்கள் சொற்பம். தனியாக பல பாகங்களான வ்யாசம் இது சம்பந்தமாக பதிப்பிக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  நேருவின் தவறான நிலைப்பாடுகளை விமர்சித்தால் — அவர் காலத்திய ஊழல் சுருட்டல் இத்யாதிகளை விமர்சித்தால் — ந்யாயமான நிலைப்பாடுடையவர்கள் – சரியான தகவலை பகிர்ந்து நேரு ஊழலுக்கு அப்பாற்பட்டவர் — சீனப்போரில் தோல்விக்கு ஏன் அவருக்கு பங்கில்லை – என காரண காரியங்களுடன் கருத்துப் பகிர வேண்டும். அப்படி இல்லாது வரதராசனார் போல ஹிந்துத்வர்கள் நேருவுக்கு எதிராக விஷம் கக்குகிறார்கள் என்று அல்ல.

  இன்று 2ஜி அமைச்சர், கரி அமைச்சர், பசி அமைச்சர், சர்தார் மன் மோஹன் சிங்க், இத்தாலி ராஜகுடும்பம் – இவை கூட்டு சேர்ந்து தேசத்தைக் கொள்ளை அடித்த பின்பும் கூட — இதை சுட்டிக்காட்டுகையில் — காசுக்கு விலை போன அரசியல் வாதிகள் – ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை இதே குற்றச்சாட்டுகளால் — ஹிந்துத்வ வாதிகள் என அடையாளம் காட்டுகிறார்கள்.

  வரதராசனார் போன்றவர்கள் – வெளிப்படையாக – சீனப்போரில் ஹிந்துஸ்தானத்துக்குத் தோல்வியையும் சீனத்துக்கு வெற்றியையும் களிப்புடன் கொண்டாடுவதாக கருத்துப் பகிர்ந்தால் நேர்மையாக இருக்கும்.

 15. M.Sadasivan on November 20, 2013 at 3:07 pm

  த. துரைவேல்// நோய்க்கு மருந்து கொடுப்பதன் கூடவே நோய் எதனால் வந்தது என்பதையும் சேர்த்து மருத்துவர் சொன்னால் அந்த மருத்துவர் கெட்டவர் ஆகிவிட மாட்டார். அது நோயாளிக்குத்தான் நல்லது, இன்னொரு தரம் அந்த நோய் வராமல் பார்த்து கொள்வார். அதே கதைதான் இங்கும், நாடு இந்த மாதிரி சீரழிய யார் காரணம் என்று சொல்லப்படுவது தவறாக தெரியவில்லை.

 16. Ramasubramanian on November 20, 2013 at 3:51 pm

  ஆங்கில இந்துவில் இத்தனை தைரியமாக இப்படி ஒரு கட்டுரையை publish பண்ண மாட்டார்கள் !! வெரி குட் !!

 17. சான்றோன் on November 20, 2013 at 4:39 pm

  யாரும் இங்கு புனிதப்பசு கிடையாது…..ஜனநாயக நாட்டில்விமர்சன‌த்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாருமே கிடையாது. நேருவின் இந்திய பிரதமர் பதவியில் இருக்கும் கடைசி வெள்ளையன் நான் என்று பகிரங்கமாக அறிவித்தவர் நேரு.. நேரு , காந்தி அவர்களால் இந்தியாவின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டவர்…..தனது முட்டாள்தனமான கொள்கைகளால் இந்த தேசத்துக்கு தீராத தலைவலிகளை ஏற்படுத்தியவர்…..வெளியே ஜனநாயகவாதிபோல் நடித்துக்கொண்டே உள்ளே சர்வாதிகாரம் செய்தவர்…… மொரார்ஜி போன்ற தகுதி வாய்ந்த தலைவர்களை மீறி தன் மகளை தலைமைப்பொறுப்பிற்குக்கொண்டு வந்தவர்……காமராஜரின் குருட்டுத்தனமான விசுவாசத்தைப்பயன்படுத்தி [ கே பிளான் ] தன் காரியத்தை சாதித்துக்கொண்டவர்…….

  சுதந்திரம் பெற்றவுடன் நேருவை பிரதமராக்க வேண்டும் என்று காந்தி நினைத்தபோது அப்போதைய பிர‌தேசகாங்கிரஸ் கமிட்டித்தலைவர்கள் [ மொத்தம் ஆறு பிரதேச கமிட்டிகள்தான் அப்போது ] ஒருவர் கூட நேருவை ஆதரிக்கவில்லை……. ஐந்து பேர் படேல் அவர்களையும் , ஒருவர் அபுல்கலாம் ஆசாத்தையும் முன் நிறுத்தினர்……அதிர்ச்சியடைந்த காந்தி வழக்கம்போல் தனது பிளாக் மெயில் அஸ்திரத்தைப்பயன் படுத்தி நேருவை பிரதமராக்கினார்……

  நேருவின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி அ. நீ விவரிக்கவில்லை….. எனவே வரதராசன் போன்றவர்கள் வருந்துவதில் அர்த்தமில்லை….

 18. அருண்பிரபு on November 20, 2013 at 8:28 pm

  //உளவுத் துறையை வைத்து வேவு பார்க்கும் பழக்கம் கொண்டவர் இல்லை.//
  உளவுத்துறையை வைத்து வேவு பார்க்காமல் வேர்க்கடலை விற்கச் சொல்வார்களோ? உளவு சொன்ன தகவல்களை ஒழுங்காகப் பார்த்து நேரு மாமா நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சினையே இல்லையே.

  ஒரு சங்கதி தெரியுமா? ஜனநாயகவாதி, உளவுத்துறையை வைத்து வேவுபார்க்காத நல்லவர் நேரு அமெரிக்க உளவு விமானங்கள் ஒரிசாவில் உள்ள இந்திய விமானத் தளங்களில் இருந்து சீனாவை வேவு பார்க்க அனுமதித்தார் .
  http://www.thehindu.com/news/national/us-planes-used-indian-airbase-to-snoop-on-china/article5028660.ece
  ரோஜாவின் ராஜா மீது முள் அதிகம் படாமல் சிண்டு சொல்கிறது….

  ப்ரஃபுல் பித்வாய் பல சங்கடமான கேள்விகளைக் கேட்டுவிட்டுச் சப்பைக்கட்டும் கட்டுகிறார்.
  http://www.navhindtimes.in/opinion/nehru-s-deviations-non-alignment

  //நேரு குறைகள் உள்ள தலைவர்தான். ஆனால் அவரிடம் இருந்த லட்சியவாதம் நடைமுறையில் இருந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை.// நடைமுறைப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் லட்சியவாதம் பேசுவதால் அம்மஞ்சல்லியில் ஒரு சிறு துளியளவுக்கும் பயனில்லை.

  //மகாத்மா காந்தியும் அப்படிப்பட்ட லட்சியவாதியாக இருந்ததால் இந்துத்துவர்களால் வெறுக்கப்படும் விளைவுகளை உருவாக்கினார். //
  ஆக இந்துத்வர்கள் நடைமுறைக்கேற்ற சிந்தனை கொண்டவர்கள், வரட்டு லட்சியவாதத்துக்கு எதிரானவர்கள் என்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி. ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத லட்சியவாதி என்று மார்தட்டிக் கொள்வதில் இடதுசார் சிந்தனையாளர்கள் எய்தும் இறும்பூது இமயத்தின் அளவு. இதனால் யாருக்கும் ஒரு மயிரிழை அளவு பயனுமில்லை.

 19. அத்விகா on November 20, 2013 at 11:19 pm

  ” நடைமுறைப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் லட்சியவாதம் பேசுவதால் அம்மஞ்சல்லியில் ஒரு சிறு துளியளவுக்கும் பயனில்லை. “- திரு அருண் பிரபுவின் அம்மஞ்சல்லி என்ற சொல்லாக்கம் புதுக்கோட்டை (தொண்டைமான் புதுக்கோட்டை) பகுதியில் உள்ள சொல்லாக்கம் ஆகும். புதுக்கோட்டை ஸ்டேட்டில் அம்மன் காசு என்ற நாணயம் புதுகை தொண்டைமான் மன்னரால் அச்சடிக்கப்பட்டது புழக்கத்தில் இருந்தது. தாமிரத்தால் ஆன இந்த காசை மக்கள் அம்மன் சல்லி காசு என்பர். அதன் மதிப்பு குறைவே. நல்ல பழைய தமிழின் சொல்லாக்கத்தை கையாண்ட அருண் பிரபு அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.

 20. Vanthia Thevan on November 21, 2013 at 12:22 am

  திரு. வரதராசன் அவர்களின் கருத்து முரண்பாடுடன் கூடியுள்ளது. நடைமுறைக்கு ஒத்துவராத இலட்சிய சிந்தனைகள் பல்குத்தவும் உதவாது என்பது நண்பருக்கு தெரிந்திருக்கும். அதனால் பாதிக்கபடுபவர் பிற்கால சந்ததியினர் என்ற அடிப்படை உணர்வுடன் செயல்பட்டிருந்தால் இத்தகைய இலட்சிய சிந்தனைகள் சற்று மாறுபட்டு ஒரு நிதானமடைந்திருக்கும். மாறாக, 60 ஆண்டுகளாக ஐநா சபாயில் காஷ்மீர பிரச்சினை வெறும் விவாதமாக மாறியிருக்காது. இன்று நான்கு இலட்சம் பண்டிட்டுகள் அகதிகளாக இந்தியாவிலேயே வாழும் நிலை ஏற்பட்டிருக்காது. இதோ, இன்று கூட பணம் சேர்க்கும் இலட்சியத்துடன் அரசியலில் ஊழல் செய்கிறார்கள். இதுவும் இந்துத்துவ சக்திகள் எதிர்பதால், நல்ல செயல் தான் என்பதை ஒப்புக்கொள்ள முடியுமா? சுயமாக சிந்திப்பது கூட ஒரு தப்பான செயல் என்ற நிலையை உருவாக்க வேண்டாம். காலில் முள்குத்தினால் எடுத்தெரிய வேண்டுமே தவிர, இந்துதுவர்களை குறை கூறினால் ரணம் தான் பெரிதாகும்.

 21. ravichandran on November 21, 2013 at 5:58 am

  அன்புள்ள அநீ,

  தீர்க்கமான ஆய்வும் திறன்மிக்க எழுத்தாற்றல் இருந்தாலும், வெறுப்பைக் கக்கும் உள் அரசியல் கலக்கும்போது அந்தக் கட்டுரைகள் எவ்வளவு அபத்தமாகக் காணப்படும் என்பதற்கு உங்களது சமீபத்திய எழுத்துக்கள் இங்கு சான்றாகின்றன. போகட்டும், நீங்கள் இங்கு கிடைக்கும் பின்னுட்டங்களால் திருப்திகொள்ளும் சாமானியத்திலிருந்து வெளியே வர விரும்புகின்றேன்.

  மோடியின் அரசியல் வெற்றிக்கு உழைக்க அமெரிக்க நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன். அமெரிக்காவில் மட்டுமல்ல போலும் என்று இப்போது உணர்கிறேன்.

  தங்கள் நேர்மையான பணி சிறக்க வாழ்த்துக்கள்

  / மதுரை ரவி

 22. andal on November 21, 2013 at 3:29 pm

  நாடு நேருவை மறந்து இருந்தது. மீண்டும் துளிர் விட வேண்டாம். இன்று நம் முன் நிற்பது பாரதத்தின் பெருமையை உலகம் உணரவேண்டும். அதற்கு என்ன என்ன செய்யவேண்டும் இபொதூல்ல நிலை. அதற்கு தமிழ் ஹிந்து முயலவேண்டும். ஹிந்துக்கள் இடையில் ஒற்றுமை வேண்டும். இதற்கு ஏற்றால்போல் கட்டுரை தேவை.

 23. Photo on November 21, 2013 at 3:47 pm

  உண்மையைக் கூறினால் அதை ‘வெறுப்பை கக்குகிறாய் ‘ என்பதும் தனிப்பட்டத் தாக்குதல் என்பதும் என்னவகை விமரிசனங்களோ ?

 24. v.balamurugan on November 22, 2013 at 6:43 am

  மிகவும் அருமையான கட்டுரை வரதராஜன் ,ரவிச்சந்திரன் இவர்களின் பின்னூட்டங்களை பார்க்கும்போது காந்தி ,நேரு இவர்களின் பிம்பங்கள் உடைவதை இவர்கள் ஏற்று கொள்வதே இல்லை பள்ளி நாட்களில் படித்த வரலாற்றையே இன்னும் நம்பிக்கொனு இருக்காங்க என்பது தெளிவாகிறது அது காங்கிரசால் காங்கிரசுக்காக எழுதப்பட்டது அதில் மறைக்கப்பட்டது எத்தனையோ தேச பக்தர்களின் வாழ்க்கை

 25. வெங்கட் சாமிநாதன் on November 22, 2013 at 4:43 pm

  என் நினைவில் இருப்பது “ஒரு புள் பூண்டு கூட அங்கு இல்லை” என்று வாய் மலர்ந்தது கிருஷ்ண மேனன். இன்னுமொரு புகழ் பெற்ற வீர வாக்கியம் we will defend every inch of our inhabited territory

  நான் சொல்வது நினைவிளிருந்து. ஆகவே நீங்கள் சொல்வதே சரியாக இருக்கும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*