நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1

morning_hindutvaநேருவை வசை பாடுகிறாய்… அவர் ஒரு விக்கிரகம்… அவர் ஒரு கவித்துவ அரசியல்வாதி… அவர் தவறுகள் செய்திருக்கலாம் ஆனால் நோக்கம் பழுதானதல்ல. பொன்னுலக கனவுகளின் வசந்தகால நாயகர் அவர்…  இதுதான் ஹிந்துத்துவ வெறுப்பு அரசியல்… நீ செய்வது ’counter-productive’…சமநிலை இல்லாமல் எழுதுகிறாய்…  பொய்களை எழுதுகிறாய். அண்மையில் எதிர்கொண்ட எதிர்வினைகள் இவை. ஏன் தொடர்ந்து நேருவை குறித்து சில கட்டுரைகள் எழுதப்பட்டது என்பதை கூற வேண்டிய அவசியம் உள்ளது. அவற்றை பின்னால் பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்னால் இந்த கட்டுரைகளுக்கான எதிர்வினைகளில் சாரம் உள்ளவை என கருதும் சிலவற்றுக்கு மட்டுமான பதில்கள்  இங்கு இரு பாகத் தொடராக அளிக்கப்படும்.

//காந்தியின் தந்தை போர்பந்தர் சமஸ்தானத்தின் திவான். பணத்தில் கொழித்து புரண்ட குடும்பம். பின்னாட்களில் காந்தியின் எளிமை  கூட செல்வந்தர்களின் செழிப்புடன் தான் இருந்தன.//  இந்த வரிகள் கடுமையான ஆட்சேபனைக்கு உள்ளாகியுள்ளன. காந்திக்கு எதிரான அவதூறு என்றே இது சொல்லப்படுகிறது.

காந்தி பிறந்த ‘காபா காந்தின்னோ திலோ’ (காபா காந்தியின் இல்லம் – இன்று காந்தி ஸ்மிருதி) என்கிற 22 அறைகள் கொண்ட அந்த வீட்டை காணலாம். (இதில் 600 சதுர அடிதான் காபா காந்திக்கு ஒதுக்கப்பட்டிருந்தது என்கிறார் காந்தியை ‘கட்டுடைக்கும்’ ஒரு ஆராய்ச்சியாளர். ஆனால் அந்த வீடே காபா காந்தி இல்லம் என்று காந்தி மகாத்மாவாக உருமாற்றம் அடைவதற்கு முன்பே அழைக்கப்படுவதிலிருந்து அப்படி அல்ல என தெரிகிறது.)

காந்தியின் தந்தை குறித்து காந்தி ஒரு மகனாக பெருமிதம் கொள்வது இயல்பே. காந்தி தமது தந்தையையும் முந்தையரையும் திவான் என குறிப்பிடுகிறார். 1891 இல் ஆங்கில பத்திரிகை ஒன்றில் அவரே அதை ‘பிரதம மந்திரி’ (prime minister) என மொழி பெயர்ப்பும் செய்கிறார். ஆனால் போர்ப்ந்தரிலோ அல்லது ராஜ்கோட்டிலோ திவான் எனும் பொறுப்பு இருக்கவில்லை என்பது காந்தியின் அணுக்க சீடரான பியாரேலால் கடும் உழைப்புடன் சேகரித்த ஆவணங்களிலிருந்து தெரிகிறது. அதிலெல்லாம் காந்தியின் தந்தையும் பாட்டனாரும் திவான்கள் என்று அழைக்கப்படவில்லை. ‘கர்பாரி’கள் எனும் பொறுப்பில் இருந்தவர்கள். இவர்கள் வரி வசூல் செய்பவர்கள். இவர்கள் வசூலிக்கும் வரிகள் அனைத்தும் அந்தந்த சமஸ்தான அரசர்கள்/இளவரசர்களின் சொந்த வருமானமாக பிரிட்டிஷாரால் கருதப்படும் என்பதால் எந்த அளவு கர்பாரி ’திறமையாக’ செயல்படுகிறாரோ அந்த அளவு மேன்மை தங்கிய சமஸ்தான ராஜ குல திலகம் ‘சுகமாக’ வாழ முடியும். எனவே இவர்கள் முக்கியமானவர்கள்.

gandhi_house

மகரத்வஜவம்சீய மகிமை தீபமாலை என்பது காந்தியின் பாட்டனார் காலத்தில் அவர் பணியாற்றிய ’ராஜ வம்ச’ நிகழ்வுகளை குறித்து பாடப்பட்ட புகழ் பாடல்கள். அதில் காந்தியின் பாட்டனார் எந்த அளவு ‘ராஜ குல’ விஷயங்களில் முக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. காந்தியின் பாட்டனார், காபா காந்தியின் தந்தை  ராணா கிமோஜிக்கு வெகு அணுக்கர். அவரது இரண்டாவது மனைவி ரூபாலிக்கு எதிராக கிமோஜியிடம் பேசி பேசி கிமோஜியை அவருக்கு எதிராக திருப்புகிறார். ராணி பிறந்த வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். உள்ளூர் பெரும் கொள்ளைக்காரன் நாதா மோத்வாலா உதவியுடன் அவள் காந்தியின் பாட்டனார் வீட்டை தாக்குகிறாள்.  காபா காந்தியும் மிக முக்கியமானவர்தான். காந்தி பிறந்த ஆண்டு ஒரு விஷயம் நடக்கிறது. போர்பந்தர் அரசர் புனித யாத்திரிகை சென்றிருக்கும் போது கடும் குடிகாரனான இளவரசன் மாதவசிங் இறந்துவிடுகிறான். இளவரசனை குடிகாரனாக்கியவன் என்று சொல்லி அவனது தோழனான லக்ஷ்மண் கவாஸ் என்பவனை கரம்சந்த் கைது செய்து காவலில் வைக்கிறார். ராணா அவனது மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிய உத்தரவிடுகிறார். அந்த நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான். பிரிட்டிஷ் அரசு மேலதிகாரி இதனால் கோபமடைகிறார். காபா காந்தி போர்பந்தரிலிருந்து வெளியேற்றப்படுகிறார். ஆனால் அவர் போர்பந்தர் ராணாவுக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் மீண்டும் அவரை முக்கிய பதவியில் அமர்த்துகிறார் ராணா.  அதுவும் கூட முதலமைச்சர் பதவி அல்ல. சொத்துகளை மதிப்பீடு செய்து அளவைகளை நிர்வகிக்கும் பதவி.

காபா காந்திக்கு தமது 45 ஆவது வயதில் மீண்டும் திருமணம் செய்யும் தேவை ஏற்பட்டது. இதற்கு காரணம் அவரது மூன்றாவது மனைவி சீக்காக இருந்ததுதான். இது அந்த காலத்தில் பெரிய தவறல்ல. செல்வந்தர்கள் செய்யும் செயல்தான். ஆனால் மூன்றாம் மனைவி உயிருடனே இருந்ததால் அவரது சாதியில் பெண் கிடைக்கவில்லை. தன் சாதி அந்தஸ்துக்கு சற்றே குறைந்த அடுத்தநிலை சாதியை சார்ந்த பெண்தான் கிடைத்தார். எனவே காபா காந்தி 15 வயது புத்லிபாயை மணந்து கொண்டார்.   குடும்பத்துக்குள் காந்தியின் மனநிலையையும் அந்தஸ்தையும் பாதித்திருக்கக் கூடிய இந்த விஷயங்கள் எதையும் காந்தி பேசாதது ஆச்சரியமில்லை. ஆனால் நிச்சயமாக இவை காந்திக்கு தெரிந்திருக்கும்.  இவை எல்லாம் சொல்லும் விஷயம் ஒன்றுதான் காபா காந்தி நிச்சயமாக செல்வாக்குடன் வாழாவிட்டாலும் செல்வந்தராக வாழ்ந்தார். அந்த சிறிய ஊரின் மொத்த அதிகாரத்தின் முக்கிய உதவிகரமாக திகழ்ந்தார். (இதனால் பிரிட்டிஷார் இவரை சந்தேகக் கண்ணுடன்தான் பார்த்தனர்.) போர்பந்தரில் தாலுகா பள்ளி ஒன்று இருந்தது. பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் (கீழ்தட்டு மக்களை குறித்த பேச்சே கிடையாது.) படிக்கும் பள்ளி அதுதான். ஆனால் காந்தி போர்பந்தரில் உள்ள மேல்தட்டு குழந்தைகள் படிக்கக் கூடிய தனியார் பள்ளியில்தான் சேர்க்கப்பட்டார்.  காந்தியின் இளம் வயதிலேயே காபா காந்தி மறைந்துவிட்ட பிறகு பிரிட்டனுக்கு போக பணம்திரட்டுவதை குறித்து பேசும் போது (அந்த காலத்தின் மதிப்பின்படி) தன் மனைவியின் நகைகள் சில ஆயிரக்கணக்கான மதிப்பு கொண்டவை என்கிறார்.  பெரும் தனவந்த குடும்பங்கள் குடும்ப தலைவர்களின் ஊதாரித்தனத்தால் அல்லது தயா குணத்தால் அவர்களின் மரணத்துக்கு பின்னர் வறுமையை அடைவது அப்படி ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் காந்தி குடும்பம் அப்படியும் ‘வறுமையை’ அடையவில்லை.  அது அடைந்தது பிரிட்டனுக்கு பாரிஸ்டர் பட்டத்துக்கு தன் மகனை அனுப்ப முடியாத ஒரு பண நெருக்கடியைத்தான். எனவே காந்தி போர்பந்தரிலும் நேரு அலகாபாத்திலும் சர்வ நிச்சயமாக பணக்கார குடும்பங்களே. இதில் காந்தி குறித்த எந்த அவதூறும் இல்லை.

ஆர்.வி என்பவர் தமது மறுமொழியில் , ‘கிருபளானி, திருவிக அபுல் கலாம் ஆசாத் படேல்’ என பட்டியலிடுகிறார். இவர்களில் பலர் அதிகார மையத்தில் இல்லை. படேலை தவிர. பலர் நேருவிய அரசியலில் மனம் வெறுத்து வெளியேறினர். நேருவுக்கு அடங்கி நடந்தால் அல்லது நேரு குடும்பத்திடம் விசுவாசமாக இருந்தால் மட்டுமே காங்கிரஸில் நீடிக்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலை காந்தி-நேரு அதிகார மையத்தால் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டது. இதற்கு ஏற்றபடியே பிராந்திய காங்கிரஸ் கமிட்டிகளில் ஆட்கள் தேர்ந்தெடுப்புகள் -குறிப்பாக போஸ்-சீதாராமய்யா பிரச்சனைக்கு பிறகு- செய்யப்பட்டன.  ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நில சுவான்தார்களின் கட்சியாகவே தோற்றமளித்ததற்கு காரணமும் அதுதான்.

இதற்கான ஆதாரமாக ஒன்றை மட்டும் சுட்டலாம்.  சுப்பிரமணிய சிவா அப்போது சிறையிலிருந்து வெளிவந்திருக்கிறார். கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு செல்கிறார். 1920 – காந்தி அப்போதுதான் முக்கியமான அதிகார மையமாக உதயமாகிக் கொண்டிருக்கிறார்.  சுப்பிரமணிய சிவா நிச்சயமாக வகுப்புவாதி அல்லர்.  அவர் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலிருந்து மனம் வெதும்பி ஒரு கடிதம் எழுதுகிறார். subramania_siva
இந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் பேரிருளை குறித்த முக்கிய முன்னறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தை நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவரல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்:

அனுபவம் மிகுந்த தலைவர்கள் பலருடையவும் யோசனைகளை புறக்கணித்து காந்தி தம் மனம் போனபடி காரியங்களை நடத்திக் கொண்டார். முகமதியர்கள் குருடர்களை போன்று அவரைப் பின்பற்றினார்கள். காந்தி காங்கிரஸை ஊழல் செய்துவிட்டார்.

நிச்சயமாக SubramaniyaSivaசுப்பிரமணிய சிவாவை வகுப்புவாதி என பொதுவாக வயதான காந்தியர்கள் கூறிவிட மாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் ராமசந்திர குகா, …  இத்யாதிகளால் உருவாகியுள்ள இணைய-நியோ காந்தியிஸ்ட்களை குறித்து சொல்லத் தெரியவில்லை. அவர்கள் சொல்லக்கூடும் சுப்பிரமணிய சிவா உடல்நிலை சீர் கெட்டிருந்ததால் காந்தியை குறித்து இப்படி எழுதிவிட்டார்…

இல்லாவிட்டால் சுப்பிரமணீய சிவா வகுப்புவாதி என்பது இதனால் நிரூபிக்கப்பட்டுவிட்டது என.  ஏன் புதிய காந்திய பக்தரான அ.மார்க்ஸ் சுப்பிரமணிய சிவாவின் பூணூலைக் கூட தேட வாய்ப்புள்ளது. அதனால் நியோ காந்தியவாதிகள் புளகாங்கிதம் அடையவும் வாய்ப்புள்ளது.

எதுவானாலும்…அதென்ன ஊழல்? சுப்பிரமணிய சிவா ஏன் காந்தி ஊழல் செய்துவிட்டார் என கூறுகிறார்? 20 ஆண்டுகளுக்கு பின்னர் மற்றொரு புத்தகத்தில் அது வெளியானது. அது என்ன?

நாளை காலை வரை பொறுத்திருங்கள்…

Tags: , , , , , , , , , , , , , ,

 

29 மறுமொழிகள் நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1

 1. kmv on November 22, 2013 at 6:46 am

  Was it wrong to be born in a Rich Family? By establishing or not establishing MKGandhi’s family wealth, what do we achieve?

 2. Rathna on November 22, 2013 at 7:57 am

  It is the responsibility of the citizens to know the facts as it were, and then go on to form their own opinions. In that regard, with due respect, I think the general misconceptions or misrepresentations that have been fostered are being addressed.

 3. ஓகை நடராஜன் on November 22, 2013 at 8:11 am

  \\Was it wrong to be born in a Rich Family?//

  kmv, what is this? Where it is said it is wrong? Even at this stage of time if we do not evolve true pictures about much established images, we will be forced to in wrong beliefs which will lead to wrong decisions.

 4. Srinivasan V on November 22, 2013 at 8:41 am

  நன்றி நீலகண்டன்.
  மிக உபயோகமான + தேவையான விளக்கம் இது. ஆவலோடு படித்துத் தெளிந்து கொள்கிறேன்.
  இன்றைய காந்தி என்று மகாத்மாவாக்கித் துதித்து மகிழ்ந்து மயங்கும் கூட்டத்துக்கு நடுவே இத்தகைய சத்திய அலசல், சாதனையே ….. அவசியமே. பிரச்சனையை என்ன என்பதை ஒழுங்காக முழுசாகத் தெரிந்துகொண்டால்தான், விடியலை நோக்கி தெளிந்த பிரக்ஜையுடன் விழித்தெழ முடியும்.
  காலைத் தேநீர் வேண்டிய மட்டும் பருகியபின், நல்ல ஒரு சிற்றுண்டியும் பிறகு ஒரு மாபெரும் விருந்தும் வேண்டும் ஹிந்துத்வாவுடன் நமது பாரத தேசத்துக்கு.
  பசியோடு அன்றாடம் காத்திருக்கிறேன்.
  நமஸ்தே.
  அன்புடன்,
  ஸ்ரீநிவாசன் .

 5. வரதராசன் on November 22, 2013 at 9:29 am

  சுப்பிரமணிய சிவா காங்கிரசில் தீவிரவாத குழுவை சேர்ந்தவர் என்பதால் காந்தியின் மீது குறை கண்டுபிடித்து எழுதுவது இயல்பே. இந்த ஒட்டுமொத்த பார்வை இல்லாமல் ஏதோ ஓரளவு வசதி இருப்பதே மிகப் பெரிய தவறு என்பது போல எழுதுவது இந்துத்துவத்தின்மீது இருக்கும் லேசான மதிப்பை கூட இடித்து தள்ளுகிறது. சுப்பிரமணிய சிவாவோடு ஒப்பிட்டால் காந்தி மட்டுமல்ல, நேதாஜி, பாரதியார், அம்பேத்கர், படேல், வ.உ.சி. உள்ளிட்ட யாருமே பெரும் பணக்காரர்கள்தான். வெறுப்பை கொட்டுவதற்காக ஆதாரங்களை தேடிப் பிடித்து வெளியிடுவது வரலாற்று புரிதலை உருவாக்காது. ஆனால், கட்சி அரசியலை முன்னிறுத்தி ஒரு முழுமையான பார்வை இல்லாமல் வெறுப்பை தூண்டுவதோடு இந்துத்துவர்கள் நின்று விடுகிறார்கள். இந்துத்துவத்தின் மீது எனக்கு இருந்த லேசான ஆர்வத்தையும் இந்த தொடர் தவறென்று நிரூபித்துவிட்டது. நேருவின் பாதையில் இந்தியா தொடர்ந்து நடக்க வேண்டும்.

 6. […] அறிகுறிகள் அரவிந்தன் நீலகண்டனின் – நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்…என்ற பதிவிலும் தெரிகின்றன.  எனவே […]

 7. "HONEST MAN" on November 22, 2013 at 12:06 pm

  ////////நேருவின் பாதையில் இந்தியா தொடர்ந்து நடக்கவேண்டும்////// ஆமாம்! சுடுகாடு நோக்கி.தொடர்ந்து மட்டுமல்ல விரைவாகவும் நடக்க வேண்டும். இந்த தளத்திற்கு இதுவரை வராத ராசனாக இருந்த இந்த வரதராசன் இப்போது வந்த பிறகு தளமே தாளம் போடும் அளவிற்கு கருத்துக்களை கொட்டுகிறீர்கள். வாழ்க!

 8. அத்விகா on November 22, 2013 at 12:45 pm

  வரதராசனாரே,

  நீரும் உம்முடைய வாரிசுகளும் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டுமய்யா. உமக்கு ஏனய்யா இந்த தீய எண்ணம். நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் நாசப்பாதையில் அழைத்து சென்றவர் நேரு. அவர் பாதையில் நடை போடவேண்டும் என்று கூறுகிறீர்களே ? நேருவால் நம் நாட்டுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். அவை மீண்டும் தொடர வேண்டாம். நேருவால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை எழுத 10, 000 பக்கம் உள்ள புத்தகம் தேவை. அவர் நாட்டுக்கு செய்த உதவி ஒன்றே ஒன்று தான். நம் நாட்டை முழுவதுமாக அழிக்காமல், தான் 1964- மேமாதம் இறக்கும் போது,சிறிது விட்டு வைத்து சென்றதே ஆகும். நேரு ஒரு குழப்பவாதி. காங்கிரசை கலை என்றார் மகாத்மா காந்தி. காங்கிரஸ் அழிந்தால் தான் நாட்டுக்கு நல்லது. தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாகிவிட்டது காங்கிரசும், நேரு வாரிசுகளும். வரதராசனாருக்கு நல்ல புத்தியை கொடப்பா என்று எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த, யாதும் அறிந்த பரம்பொருளை வேண்டுகிறேன். வையகம் வளமுடன் வாழ்க.

 9. rama on November 22, 2013 at 1:45 pm

  if nehru legacy is allowed to rule india with the successive dynastic model further by voting their family to power, currently india is ruled by italian lady and in future it will be ruled by colombian lady, the girl friend of rahul vinci. people like varadarajan who is used to the mentality of slavery, will be happy to see his respected nehru legacy to continue to rule india and our future generation by white skins.

 10. Udayasoorian CN on November 22, 2013 at 2:37 pm

  Aravind Neelakantan ,
  Your article on Gandhi early life is just how a propaganda (mouth piece of an organisation )writer view it . My prescription to you is read ‘Gandhi Before India’ by Ramachandra Guha(2013). His early life also written in it. Compare both. You just take one or two letters, weave a story of your own , write an article . . It’s so sad people who distorting facts getting attention. U are an attention seeker. Nothing else

 11. K.Muthuramakirushnan on November 22, 2013 at 4:56 pm

  இன்று ஜஸ்டிஸ் வி ஆர் கிருஷ்ணையர் போன்ற நெருவியர்கள் கூட நமோ ஆதரவு
  நிலை எடுக்கிறார்கள் என்றால் இந்துத்வா எண்ணத்தால் அல்ல. மாற்றத்தை நாடு
  விரும்புகிறது. இப்போது தேவை நமோவின் பொருளாதார திட்டம் பற்றிய பிரச்சாரம்
  வரலாறு,பழங்கதைகள் பின்னர் செய்து கொள்ளலாம்.

 12. வெங்கட் சாமிநாதன் on November 22, 2013 at 4:57 pm

  சுப்பிரமணிய சிவா உள்ளெ நுழையும் போதே காந்தியைப் பற்றிய கிண்டலோடு தான் நுழைவாராம். “என்னய்யா உங்க காந்தி என்ன சொல்றார்? ராட்டையைச் சுற்றினால் சுதந்திரம் வந்துடும்னு சொல்லியிருக்காரே நீர் என் இன்னும் ராட்டை ஒண்ணு வாங்கலை? என்பாராம்.

 13. வீர. ராஜமாணிக்கம் on November 22, 2013 at 6:14 pm

  அரவிந்தனை விமர்சிக்கும் நேருவிய, காந்தீய மனுவாதிகளின் கவனத்திற்கு, சுப்ரமணிய சிவாவை மட்டுமல்ல. தலித் மக்களுக்கு நல்லது நடப்பதற்காக செயல்பட்ட சுவாமி ஸ்ரத்தானந்தருக்கு ஏற்பட்ட அவமானத்தை கொஞ்சம் பட்டியலிடுங்கள்.

 14. RV on November 22, 2013 at 10:24 pm

  அ.நீ. எல்லாம் என்னைப் பொருட்படுத்தி பதில் எழுதி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இப்படி வினவு தளம் தரத்தில் எழுதுவதுதான் வருத்தமாக இருக்கிறது.

  // ஆர்.வி என்பவர் தமது மறுமொழியில் , ‘கிருபளானி, திருவிக அபுல் கலாம் ஆசாத் படேல்’ என பட்டியலிடுகிறார். இவர்களில் பலர் அதிகார மையத்தில் இல்லை. படேலை தவிர. //
  நான் ஒன்பது பெயர்களை குறிப்பிட்டிருந்தேன். படேலைத் தவிர வேறு யாரும் அதிகார மையத்தில் இல்லை என்றால் யார்தான் அந்த அதிகார மையத்தில் இருந்த அந்த நிலச்சுவான்தார்கள் ? கவர்னர் ஜெனரலாக இருந்தவர் அதிகார மையத்தில் இல்லை; இறக்கும் வரை மத்திய மந்திரிகளாக இருந்த கித்வாயும் ஆசாதும் அதிகார மையங்கள் இல்லை. இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தவர் அதிகார மையம் இல்லை. அப்படி என்றால் நாட்டின் பிரதமர், உதவிப் பிரதமர், கிங்மேக்கர் மட்டுமே அதிகார மையமா? அப்படி என்றால் நேரு, படேல், சாஸ்திரி, காமராஜ் நாலு பேர்தானே இந்தக் காலகட்டத்தில்? நாலில் மூன்று பெரும் பணக்கார சூழலில் இருந்து வரவில்லை, ஆனால் அவர்கள் விதிவிலக்கு என்றால் நான் விதிவிலக்கு என்றால் என்ன என்று வரையறுக்க வேண்டுமா? அதுவும் அ.நீ.க்கு? ஒரு வேளை நேருவின் கடைசி காலத்தில் நேரு மட்டுமே அதிகார மையம் என்று சொல்ல வருகிறாரோ?

  காந்தி ஏழை குடும்பத்தில் பிறந்தவர் என்று (எனக்குத் தெரிந்து) யாரும் வாதிடவில்லை. காந்தியையும் நேருவையும் ஒரே தட்டில் – “அட்டகாசமான பணக்கார சூழலில் பிறந்து வளர்ந்தவர்” – வைப்பதுதான் உண்மையைத் திரிப்பது. நேருவின் பள்ளிப்படிப்பே ஈடன் பள்ளியில், அவருக்கு காந்தி சமம் என்று சொல்வது அப்பட்டமான மிகைப்படுத்தல் என்று அ.நீ. போன்ற அறிவாளிகளுக்குப் புரியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

  அ.நீ. ஹிந்துத்துவவாதிகளை நான் மதிக்க உங்கள் புத்தி கூர்மையும், ஆய்வுகளும், நீங்கள் முன்வைக்கும் தரவுகளும் ஒரு முக்கிய காரணம். பொருட்படுத்தப்பட வேண்டிய ஹிந்துத்துவ் கோணங்களை முன் வைப்பதில் நீங்கள் முதன்மையானவர். இணையத்தில் காமெடி பீஸ் ஹிந்துத்துவ வாதங்கள் அதிகம் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. காந்தி-நேருவின் குறைகளையும் தவறுகளையும் ஆராயவும் எடுத்துச் சொல்லவும் உங்களை விட திறமை உள்ள அறிஞர்கள் அபூர்வம். காந்தியும் நேரும் (சவர்க்காரும் அம்பேத்கரும் கூடத்தான்) தவறுகளே செய்யாத தெய்வப் பிறவிகள் அல்லர். ஆனால் நேருவை இப்படி தரம் தாழ்ந்து தாக்குவது உங்களிடம் எதிர்பார்க்காத ஒன்று. நேருவை நாஜி என்று எழுதும் நீங்கள் கோல்வால்கரின் “இரண்டாம் தர குடிமகன்” கருத்துக்கு பெரிய வியாக்கியானம் எழுதி இருக்கிறீர்க்ள்!

  எல்லாவற்றையும் விடுங்கள், நீங்கள் ஜனாப் நேரு என்று எழுதுவதற்கும் கருணாநிதி அவாள் இவாள் என்று எழுதுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை நீங்கள் உணரவில்லையா?

 15. Vanthia Thevan on November 23, 2013 at 1:02 am

  அமெரிக்க ஜனாதிபதி கென்னெடி இறந்து இன்று ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. அவர் மூன்றே வருடங்கள் பதவியில் இருந்தார். அவருடைய நினைவு நாளில் இன்றும் பல கேள்விகள் எழுப்பபடுகிறது. முக்கியமாக அவருடைய மூன்று வருட ஆட்சியின் சாதனைகளையும் ஓட்டைகளையும் சற்றும் தயக்கமில்லாமல் விவாதிக்க ஆட்கொள்ளப் படுகிறது. ஆனால் நமக்கு மட்டும் காந்தியாகட்டும் நேஹ்ருவகட்டும் கேள்விக்குறிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மனப்பான்மை. விவாதமில்லாத சரித்திரம் ஏட்டு சுரக்காய்; கறிக்கு உதவாது. சுதந்திரத்திற்கு பிறகு கோங்க்றேச்சை கலைக்காதது நேஹ்ருவின் மனநிலையையும் அவர் காந்திக்கு அளித்த மரியாதையும் படம் பிடுத்து காட்டுகின்றன. இன்றைய அவலத்திற்கு முக்கிய காரணம் நேஹ்ரிவின் பெயரை மறைத்து காந்தியின் பெயரை வைத்து பிழைக்கும் கும்பல் தான். இந்த விவாதங்கள் எதிர்கால தலைமுறைக்காவது ஒரு பாடமாக அமையும் என நம்புகிறேன்.

 16. Vanthia Thevan on November 23, 2013 at 3:20 am

  கென்னடியின் பட்டமேர்ப்பு உரையை கேட்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் கூறுகிறார், “, இந்த நூறாண்டில் பிறந்த ஒரு இளம் சமுதாயம் ஆட்சியை அமைத்துள்ளது. இந்த சமுதாயம்……தனது தொன்மைவாய்ந்த சரித்திரத்தில் பெருமை கொண்டுள்ளது,……” 400 வருடங்களுக்கும் குறைவான, பழங்குடியினரின் அழிவிற்கு காரணமான சரித்திரத்தை பெருமை கொள்ள சொல்கிறார். இங்கோ பல்லாயிரமாண்டுகள் பழமையான சரித்திரத்த்தை மாற்றி நமது மூதாதரையறை நாமே எள்ளி நகையாட, நம்மை நாமே தூற்றிக்கொள்ள திட்டமிட்ட சதி தீட்டப்பட்டது. இதை சிறிதும் மனதில் கொண்டாலே போதும் நாம் உண்மை சரித்திரத்தை நாடுவது நிச்சயம். இல்லையெனில், இந்துத்வா எதிர்ப்பு கொள்கையில் நம்மை நாமே அழித்துக்கொள்வது தப்பாது.

 17. ஓகை நடராஜன் on November 23, 2013 at 9:00 am
 18. kmv on November 23, 2013 at 9:31 am

  தன் சாதி அந்தஸ்துக்கு சற்றே குறைந்த அடுத்தநிலை சாதியை சார்ந்த பெண்தான் கிடைத்தார். எனவே காபா காந்தி 15 வயது புத்லிபாயை மணந்து கொண்டார். குடும்பத்துக்குள் காந்தியின் மனநிலையையும் அந்தஸ்தையும் பாதித்திருக்கக் கூடிய இந்த விஷயங்கள் எதையும் காந்தி பேசாதது ஆச்சரியமில்லை. please through more light on ” what should Gandhi have told” …

 19. Manoj Kumar, M.A., LLB on November 23, 2013 at 12:00 pm

  இந்த ஆர்.வி.யின் கருத்துக்களை படித்தால் அவர் மனுவாதி என்பது தெரிகிறது.

 20. K.Muthuramakirushnan on November 23, 2013 at 2:32 pm

  //காந்தி பிறந்த ‘காபா காந்தின்னோ திலோ’ (காபா காந்தியின் இல்லம் – இன்று காந்தி ஸ்மிருதி) என்கிற 22 அறைகள் கொண்ட அந்த வீட்டை காணலாம்.//

  காபா காந்தி தி லோ இருப்பது ராஜ்கோடில். காந்தி பிறந்தது போர்பந்தரில்.

  ராஜ்காட் சமஸ்தானத்தில் காபா காந்தி வேலை பார்த்தபோது தங்கியிருந்த இடம அது. காந்தியும் ஆறுவருடங்கள் அங்கே இருந்திருக்கிறார்.

  திவான் என்னும் (கொள்ளையடிக்கும்?) பதவியில் இருந்து கொழித்தவர்கள் என்ற ரீதிய்ல் எழுதிவிட்டு,வெறும் வரிவசூலிப்பவர்கள்(கார்வார்) தான் என்று மாற்றி எழுதியதற்கு நன்றி!அந்த அளவில் காந்திமீதான பழி கொஞ்சம் குறைந்தது.

 21. பரமசிவம் on November 23, 2013 at 3:17 pm

  நாம் காலம் காலமாக பாட புத்தகங்களில் காந்தி, நேரு கடவுளுக்கு சமம் என்ற ரீதியில்
  மூளை சலவை செய்யப்பட்ட காரணத்தால், இப்போது அது குறித்து பேசவும் மறுக்கிறோம். இந்தியாவை நேருவுக்கு நேரு குடும்பத்திற்கு பட்டயம் அளிக்க துடிக்கிறோம். நாம் எப்போது தான் இம் மாயை லிருந்து வெளி வருவோம். ஆர்,வி.,
  வரதராசன், உதயசூரியன் ஆகியோர் யோசிக்க வேண்டும்.

 22. திரு.கே.முத்துராமகிருஷ்ணன் தவறை திருத்தியமைக்கு நன்றி. ஆம் ஆறு ஆண்டுகள் காந்தி வளர்ந்த காபா காந்தின்னோ திலோ பங்களா வேறு காந்தி பிறந்த 22 அறைகள் கொண்ட பங்களா என்பது வேறு. மேலும் சிறிது தேடியதில் இந்த மூன்றடுக்கு பெரும் வீடு அவரது மூத்த பாட்டனார் ஹரிஜீவன்தாஸ் என்பவரால் 1777 இல் வாங்கப்பட்டது. ‘A massively built three-storeyed structures erected on three sides of a courtyard’ என்கிறார் பியாரேலால். ஆக காபா காந்தி வாழ்ந்த இடங்கள் அனைத்துமே பங்களாக்கள் தான்.
  //திவான் என்னும் (கொள்ளையடிக்கும்?) பதவியில் இருந்து கொழித்தவர்கள் என்ற ரீதிய்ல் எழுதிவிட்டு,வெறும் வரிவசூலிப்பவர்கள்(கார்வார்) தான் என்று மாற்றி எழுதியதற்கு நன்றி!அந்த அளவில் காந்திமீதான பழி கொஞ்சம் குறைந்தது.// இதை நான் எங்கே சொன்னேன்? கொள்ளையடித்து கொழுத்தவர்கள் என்று? இதை சொன்னவர் காந்தியேதான். (Ours is a notorious family, that is, we are known to belong to a band of robbers.: Collected Works Vol.12 பக்கம்.381)

 23. அத்விகா on November 23, 2013 at 11:11 pm

  திருடர்கள் கூட , கொள்ளையர்கள் கூட தங்களைப் பற்றி உயர்வாக சொல்லிக்கொள்ளும் இந்த உலகில் காந்தி தன் மூதாதையரை பற்றி சொல்லும் போது,” a band of robbers.”: Collected Works Vol.12 பக்கம்.381) என்று சொல்லியிருப்பதால், அவரது எழுத்தில் பொய்கள் இருக்க வாய்ப்பில்லை என்று நன்றாக தெரிகிறது. அதே சமயம் அவர் கிழக்கு பாகிஸ்தானின் வாகன ஓட்டிகளுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கி , காங்கிரஸ் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பது ஒரு வேதனையான விஷயம். ஒரு மனிதரில் இத்தனை நிறங்களா ?

 24. K.Muthuramakirushnan on November 24, 2013 at 10:03 am

  நன்றி அநீ அவர்களே!

  காந்திஜியின் பூர்வீக வீடு முதலில் கீழ்தளம் மட்டுமே கொண்டதாக இருந்தபோது வாங்கப்பட்டது.பின்னர் காந்திஜியின் கொள்ளுப்பாட்டானரால் இரு தளங்களும் கட்டபட்டுள்ளன.அந்தவீட்டுக்குள் சென்று எடுத்த வீடியோ யூ டூபில் கிடைக்கிறது.
  ஒரு அறை கூட தனி அறை கிடையாது.ஒன்றோடு ஒன்று கதவுகளால் இணைக்கப்பட்டுள்ளது. விசாலமான அறைகள் குறைவு.10க்கு10 அல்ல‌து 10க்கு எட்டு கொண்ட இருப்பிடங்கள். கூட்டுக் குடும்ப அமைப்பில் சகோதரர்கள் எல்லோரும் ஒவ்வொரு பகுதியில் வாழும் அமைப்பில் திட்டமிடப் பட்டுள்ளது.
  சரியான ஜன்னல் கதவுகளோ, உயரமான கூரையோ இல்லாத காரைக்கட்டிடம்.
  இதனை மேன்ஷன் என்று காந்திஜியே சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.

  இந்த இடத்தினை காந்தி குடும்பத்தினர் அனைவரிடமும் கையொப்பம் பெற்று
  (காந்திஜி உட்பட) படேல் பெற்று கீர்த்தி மந்திர் என்ற கோவில் அமைப்பினை
  இவ்வீட்டுக்கு அருகில் அமைத்துள்ளார்.அங்கே நமோ பேசியது இதோ:

  http://www.youtube.com/watch?v=O8eJBSM-nLc

  காந்திஜியின் பூர்வீக‌ வீடு உட்புறம்
  http://www.youtube.com/watch?v=PUnniTTXmSg

  நமோவின் பேச்சினை ஏதோ ஃபர்மாலிடிக்குப் பேசினார் என்று கொச்சைப் படுத்திவிட வேண்டாம்.

  காந்திஜியின் மனைவியாரின் இல்லமும் பூர்வீக வீட்டுக்கு அண்டை வீடுதான்.
  அவர்களும் இவர்கள் அளவு ஒரு மேல்நிலை மத்திய வர்க்க (அப்பர் மிடில் கிளாஸ்)குடும்பமாக இருக்க வாய்ப்பு உண்டு.

  ஒரு பெண்ணுக்கு நகைகள் எப்படி கிடைக்கின்றன?
  பிறந்த வீட்டு சீதனமாக, மாமியாரின் பரிசாக,திருமணம் வளைகாப்பின் போது
  உறவினர் அளிக்கும் பரிசாக இத்யாதி.அப்படி கஸ்தூரிபாயின் நகைகள் கணிசமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் காபா காந்தி செல்வச்செழிப்பில் இருந்தார் என்பது ….?

  இன்று நம் செட்டிநாட்டில் பெரிய மேன்ஷன் கூட்டுக் குடும்பச் சொத்தாக இருக்கும்.ஆனால் வறுமையில் தள்ளப்ப‌ட்ட செட்டியார்கள் அதனை விற்கவோ, வறுமையைப் போக்கிக் கொள்ளவோ முடியாது.

  அதுதான் காந்திஜி தலை எடுக்கும் சமயம் காந்திஜி குடும்ப நிலவரம்.
  என் வாழ்வில் இதுவரை மனைவியின் நகையை அடகுக் கடைக்கு அனுப்பும்
  சந்தர்ப்பம் ஆண்டவன் அருளால் எனக்கு ஏற்படவில்லை. நாளயே 65 வயதான் நான் பெரிய வைத்திய செலவில் மாட்டிக் கொண்டால் என் மனைவியே தன் நகைகளைக் கழுத்தைவிட்டு கழட்டிவிடுவாள் அல்லவா?

  ‘செட்டி கெட்டால் பட்டு கட்டுவான்’என்பது அனுபவ மொழி. பட்டைக் கட்ட ஆரம்பித்துவிட்டால் சாதாரண நூல் வேட்டி வாங்க கூட காசில்லை என்று பொருள்.காந்திஜி மனைவி நகைகளை அடகு வைத்தால்,அவர்களுக்கு அவ்வளவு வசதி இருந்ததே என்ப‌து….? கடைசி பட்சமாகத்தான் மனைவியின் நகைகளுக்கு ஒருவன் கைநீட்டுவான். குடிகாரன் மட்டும்தான் எப்போதும் மனைவியிடம் இருப்பதைத் தட்டிப் பறிப்பான்.

  நான் காந்தீய சூழலில் வளர்ந்தவன்.என் தந்தையாரின் முற்றுப் பெறாத‌
  நாட்குறிப்பை இங்கே வாசிக்கலாம்.
  http://gandhiashramkrishnan.blogspot.in/

  ஆனாலும் விடலைப் பருவத்தில் காந்திஜியின் ‘காம’த்திலிருந்து,எளிமையான ‘ஆடம்பர’ வாழ்க்கை வரை அனைத்தையும் என் தந்தையாரிட்ம் விதண்டாவாதம் செய்தவன்தான். எல்லாவற்றுக்கும் அப்பா பொறுமையாக பதில் சொல்லியுள்ளார்.

  இன்றைய தேவை காந்திஜி, நேருஜி பிம்பம் உடைததல் அல்ல. பொருளாதாரப் பின்னடைவும், ஊழல்மிகு அரசிய‌லையும் கொடுத்துள்ள இத்தாலிய சார்பு காங்கிரஸ் அரசின் தவறுகளை எப்படி நமோ சரிசெய்வார் என்ற திட்ட வட்ட‌
  பிரச்சாரம். மற்றவை, அனைத்தும் பின் இருக்கையைப் பெறலாம் என்பது என்
  தாழ்மையான அபிபிராயம்.

  மேலும் அநீ தவறான தரவுகளைக் கொடுப்பவர் என்ற பிம்பம் உங்கள் மேல் ஏற்படுவதையும் நான் விரும்பவில்லை.இதை வைத்து உங்கள் ஏனைய‌ பங்களிப்புக்கள் கொச்சைப் படுத்தப் படலாம்.என் அச்சம் நியாயமானது என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

  மீண்டும் நன்றி

 25. K.Muthuramakirushnan on November 24, 2013 at 1:59 pm

  ‘ஊழல்’ என்ற சொல் பணம் சம்பந்தப் பட்டதற்கு மட்டுமல்லாமல் பலவகையிலும் பயனாகிறது.
  வீடு குப்பையும் கூளமுமாகக் கிடந்தால் ‘ஒரே ஊழலாகக் கிடக்கிறது’ என்று சொல்வதுண்டு.ச‌ரியாக ஒருவன் ஒரு செயலைச் செய்ய மாட்டான் என்றால்
  ‘அவனிடம் அதைச் செய்யச் சொல்லதே ஊழலாக்கி விடுவான்’ என்பதுண்டு.

  அதுபோல சிவா கூறியது பண ஊழல்தான் என்பது தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தாலே நாம் காந்தியைக் குற்றம் சாட்டலாம். இல்லையெனில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளிப்பதே முறை.

  ‘வேறு ஒருவர் என்னிடம் கூறினார்’ என்பது அம்பேதகாரே கூறினாலும் அதற்கு வதந்தி என்ற மதிப்பைத்தான் அளிக்க வேண்டும்.

  சிவா, அம்பேதகர் இருவரும் அரசியலில் காந்திக்கு எதிர்தரப்பு.அவர்கள் காந்தியைப் பற்றிக் கூறுவது வெற்று அரசியலே.

  சிவா, அம்பேதகர் இருவருமே காந்திஜியைப் புகழ்ந்து(ஒரு ஃபார்மாலிட்டிக்காகவாவது)பேசிய சொற்கள் தேடினால் கிடைக்காதா என்ன?

 26. K.Muthuramakirushnan on November 24, 2013 at 11:08 pm

  //(Ours is a notorious family, that is, we are known to belong to a band of robbers.: Collected Works Vol.12 பக்கம்.381)//

  நான் தேடியவரை அந்த வால்யூம் 12 பக்கம் 381ல் அப்படி ஒன்றும் இல்லை. சரியான
  பக்கத்தை சுட்டவும்.

 27. 1964 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுப்பில் உள்ளது (வெளியீடு: Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India,) மற்ற தொகுப்புகளில் பக்கம் மாறியிருக்கலாம். மார்ச் 1914 இல் சாகன்லால் காந்திக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதை கூறுகிறார்.

 28. K.Muthuramakirushnan on November 25, 2013 at 9:40 am

  அன்புள்ள அநீ!
  அருமையான காந்திஜியின் கடிதத்தை மீள் வாசிச்ப்புச் செய்ய உதவியதற்கு நன்றி!

  வரிவசூல் செய்வதில் தன் மூதாதையர் கடுமையான முறையிலும் சுயந‌லமாகவும் நடந்திருக்கக்கூடும் என்று யூகத்திலேயே காந்திஜி எழுதுகிறார்.காந்திஜிதான் குடும்பத்திற்குக் கடைசிபிள்ளை என்பதைக் கணக்கில் கொண்டால் அவரது தந்தையார் பற்றி மட்டுமே காந்திஜி நேரடி அனுபவத்தினை அடைந்திருக்க முடியும். அவரைப் பற்றி நல்லெண்ணமே கொண்டிருந்திருக்கிறார்.தந்தைக்கும் முந்தியவர்கள் நடந்த முறைகள் யூகம்,அல்லது கேள்வி ஞானம் மட்டுமே.
  அவர‌து யூகம், அல்லது கேள்விப்பட்டது சரியாகவும் இருக்கலாம், அல்லது மாறாகவும் இருக்கலாம்.

  தான் ஒருவேளை கொல்லப்படலாம் என்ற எதிர்பார்ப்பில்,தன் காலத்திற்குப் பின்னர் தன் குடும்பம்/உறவினர்களூக்கான ஆலோசனையே இக்கடிதம்.

  குடும்பச் செய்திகளுக்கு நடுவிலேயே வரதட்சணை, வரைமுறை இல்லாமல் குழந்தை பெறுவது ஆகிய சமூக அவலங்களையும் சுட்டி இருப்பது அவ‌ரால்
  சமூகத்தையும் தன் குடும்பமாகவே பார்க்க முடியும் என்பதையே காட்டுகிறது.

  உணவு முறைகள் பற்றிய அறிவுரையும் உபரியாக.

  அது ஒரு ரகசியக் கடிதம். அதனை யார் யார் படிக்கலாம் என்று அவர் கூறியதில் மூத்தபிள்ளை ஹரிலால் இல்லை என்பதும், இரண்டாவது பிள்ளை மணிலாலுக்கு பதிவுத் தபாலில் அனுப்பச் சொல்லி பின்குறிப்பும் தன் பிள்ளைகளைப் பற்றி அவருடைய கணிப்பைக் காட்டுகிறது.

  சகன்லால்தான் காந்திஜியின் அடுத்த தலைமுறையில் மூத்த‌வர் போலும்!
  காந்திஜியின் அண்ணா ல‌க்ஷ்மிதாஸ் காந்தியின் மகன் சகன்லால். அதனால்
  தான் கொல்லப்பட்டால் செய்ய வேண்டிய குடும்பப் பொறுப்பை அவரிடம் ஒப்புவிப்ப்தாக எழுதப்பட்ட கடிதம்.

  இது பின்னர் பிரசுரிக்கபடும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமையால் தன் மூதாதையரைப் பற்றி சுய விமர்சனமாக எழுதியுள்ளார். அவர்து விமர்சனம் சரிதானா என்று சரிபார்க்க நமக்கு வாய்ப்பு இல்லை.

  சகன்லாலுக்கு எழுதிய கடிதத்தின் தேதி 11 மார்ச் 1914

  நன்றி!

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*