போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை

alankara ஆகம மரபு சார்ந்த கோவில்களாயினும், ஆகமமரபைச் சாராத கோவில்களாயினும், இவ்விரு மரபினும் கோவில்களில் இறைவனை அழகுபடுத்தும் அலங்கார முறை இருந்து வருகின்றது. இறைவனுக்கு செய்யப்பெறும் அபிஷேகம், அர்ச்சனை போன்றவை எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவு முக்கியமானது அலங்காரமாகும். அலங்காரம் செய்வதில் துறை தோய்ந்தவர் ‘அலங்கரணாச்சார்யர்’ எனப்பெறுவார். இறைவனைப் போதுமானளவுக்கு அலங்கரிக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு அலங்கரிப்பதனைச் ‘சாத்துப்படி’ என்றும் அழைப்பர். அதாவது இறை மூர்த்தத்திற்கு ஆடை, ஆபரணங்கள், மாலைகளை சாத்தி (சார்த்தி) அலங்கரித்தலை இது குறிக்கும்.

இது ஒரு தெய்வீகக்கலையாகும். இது ஒரு அழகியற்கலையாகும். இன்னொரு சாரார் இதனை ஒரு கைவினையாகவும் கருதுவர். ஆக, இது கைவினையா..? அல்லது கலையா? என்ற கேள்வி உருவாகின்றது. என்றாலும் கைவினைக்கு அப்பாற்பட்ட ஒரு வித அருமைத்தன்மை காணப்படுதலால் இதனைக் கலையாகக் கருதலாம் என்பதும் பலர் கருத்து. சாத்துப்படி அலங்காரத்தில் கலைஞர்கள் ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப்படும் அலங்காரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை இரசனைத்தன்மை கொண்டனவாயுள்ளன. கலைஞர்களின் தனிப்பட்ட திறமையும், நுணுக்கமான அசைவுகளும், சாத்துப்படி அலங்காரத்தில் இழையோடியிருப்பதைக் காணலாம். என்றாலும் சாத்துப்படி அலங்காரம் பற்றிப் பெரியளவில், ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை. அதனை ஒரு கலையாகக் கூட பலர் நோக்குவதாகத் தெரியவில்லை.

எனவே, இது குறித்த ஒரு நோக்கினை நான் வாழும் பிரதேசமான இலங்கையின் வடமாகாணத்தின் யாழ்ப்பாணப் பிரதேசத்தினை முன்வைத்து வெளிப்படுத்துகின்றேன். உதாரணங்களுக்காக இப்பிரதேசத்தை முன்வைத்தாலும், இக்கலை குறித்த பார்வை பெரியளவில் உருவாக வேண்டும் என்றே கருதுகின்றேன்.

பல்வகை அழகு கொண்ட சாத்துப்படிகள்

தினமும் ஆலயங்களில் நடக்கிற பூஜை வழிபாட்டில் இறைவனுக்கு அலங்காரம் நடைபெற்றாலும், அதனை நடைமுறையில் ‘சாத்துப்படி’ என்று சொல்வதில்லை. நடைமுறை வழக்கில், விசேட உத்ஸவ காலத்திலும், விசேட நாட்களிலும் உத்ஸவ மூர்த்திக்குச் செய்யப்பெறும் அலங்காரமே சாத்துப்படி என்று அழைக்கப்பெறுகின்றது.

இவற்றினையும் சாதாரண சாத்தப்படி, விசேட சாத்துப்படி என்று இரு வகையாக அழைப்பர். விசேட சாத்தப்படி இவற்றுள் சிறப்பானது. யாழ்ப்பாணப் பிரதேச வழக்கில் விசேட சாத்துப்படியை மடல் சாத்துப்படி, சயனச்சாத்துப்படி, ஓங்காரச்சாத்துப்படி, நிருத்தச்சாத்துப்படி, வேல் சாத்துப்படி, நட்சத்திரச் சாத்துப்படி, ஆரச்சாத்துப்படி, மயில் சாத்துப்படி, நாகபடச் சாத்துப்படி, ஆறு கோணச்சாத்துப்படி, வட்டச்சாத்துப்படி, காலவரைச் சாத்துப்படி, பச்சைச்சாத்துப்படி, மஞ்சள் சாத்துப்படி, சிவப்புச்சாத்துப்படி, வெள்ளைச்சாத்துப்படி என்று பலவாறாக வகுத்து விரித்துச் சொல்லுவார்கள்.

tvkeni

முன்பு ஹஸ்தம், பாதம் (கை,கால்) வைத்துச் சாத்தும் மரபு இருந்தது என்றாலும் பல அறிஞர்களும் அது தவறு என்று குறிப்பிட்டு வந்ததால், யாழ்ப்பாணத்தில் அது கணிசமான அளவு இல்லாமல் போயுள்ளது. அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்கள் தமது “மூர்த்தி அலங்கார விதி” என்ற கைநூலில் அம்சுமான் ஆகமத்தை மேற்கோள் காட்டி, ‘போலிக் கரங்களையும் கால்களையும் பேரங்களில் சாத்துவதும் கட்டுவதும் தோஷமாமென்பது நிச்சயிக்கப்படும்’ என்கிறார்.

ஆறுமுகநாவலர் “கை,கால் வைத்துக்கட்டும் மூர்த்தி ஆகம விரோதமானது” என்று அடித்துக் கூறியுள்ளார். எனினும், இன்னும் சில பல ஆலயங்களில் ஹஸ்தம், பாதம் சாத்துவது வழக்கில் இருக்கிறது.

யாழ்ப்பாணத்துச் சாத்துப்படிக் கலைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் சிவாச்சார்யர்கள், பிராமணர்கள் மட்டுமன்றி வீரசைவமரபினரும், சிறப்பான அலங்கரணாச்சார்யர்களாகத் திகழ்கின்றனர். பல்வேறு கோவில்களில் இவர்கள் உத்ஸவமூர்த்தியைத் தீண்டி அலங்காரம் செய்ய அனுமதிக்கப்பெறுகின்றனர்.

இக்கலையில் சிறந்தவர்களை “சாத்துப்படி ஐயா” என்ற பெயராலும் அழைக்கிறார்கள். திருவுருவத்திற்குச் சாத்துவதற்கு அப்பால் பூச்சப்பறம், பூந்தண்டிகை, பூமணவறை போன்றவற்றை உருவாக்குவதிலும் இவர்கள் ஈடுபடுவார்கள். இவற்றில் விசேட திருவிழாக்களில் மூர்த்தி எழுந்தருளி வீதி உலா கண்டருள்வார்.

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்களுக்குத் தமிழ்நாட்டுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. வழக்கம்பரை முத்துக்குமாரு போன்ற சாத்துப்படிக்கலைஞர்கள் தமிழகத்தில் சாத்துப்படி ( பூ அலங்காரக்கலை) கற்று வந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இவர்களில் பலரும் முழுநேரத் தொழிலாக சாத்துப்படியில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியமாக, விதம் விதமாக மாலைகள், பூ அலங்கார வேலைகள் செய்வது அவற்றுக்கேற்ப இறைவனை அலங்கரிப்பது இவர்களின் பணியாகின்றது.

யாழ்ப்பாணத்து நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் ஆதீன மஹாசந்நிதானமாக முன் சிறந்த அலங்கரணாச்சார்யராகத் திகழ்ந்தார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

சிறப்பான அலங்காரங்கள்

நிற்பனவாயுள்ள மூர்த்திகளை நிற்பனவாயும், இருக்கும் மூர்த்திகளை இருப்பனவாயும், நிருத்த மூர்த்தியை நிருத்த வடிவமாகவும், சயன தோற்றமுள்ள மூர்த்தியை சயன ரூபமாகவேயும் அலங்கரிக்க வேண்டும் என்று காமிக ஆகமம் குறிப்பிடுகின்றது. விபரீத அலங்காரம் கூடாது என்றும் அது குறிப்பிடுகின்றது.

இவ்வாறான சாஸ்த்ரோக்தமாகவே வித்தியாசமாக அழகாக அலங்கரிக்க முடியும். உதாரணமாக பிரபலமான நல்லூர் முருகன் கோவிலில் ஸ்கந்தஷஷ்டி உத்ஸவத்தில் ஆறுநாட்களும் முறையே வெண்சாத்துப்படி, மஞ்சள் சாத்துப்படி, வெண்சிவப்புச் சாத்துப்படி, நீலச்சாத்துப்படி, பச்சைச்சாத்துப்படி, சிவப்புச்சாத்துப்படி என்று ஒரே நிறப்பூக்கள், பட்டாடைகளால் உத்ஸவ மூர்த்தி அலங்கரிக்கப்பெறுகிறார். தவிர, அம்மூர்த்தி உலா வரும் போது குடை, முதலிய உபசாரங்களும் அதே நிறமுள்ளனவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், மூர்த்திக்கு அணிவிக்கப்பெறும் ஆபரணங்களும் சிறப்பானவை. தனித்துவமானவை. உஷ்ணீபட்டத்துடன் கூடிய கிரீடம், ஜடாமகுடம், என்பன முறையே விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அணிவிக்கப்படுகின்றன. அம்பாளுடைய சிரசில் கேசபந்தம் (முடியை உருண்டையாக வைத்தல்), முக்கியமானது. சாயக்கொண்டையும் வைப்பர். முடியின் பின்புறத்தில், சிரச்சக்கரம் வைக்கும் வழக்கமும், நாகஜடை வைக்கும் வழக்கமும் உள்ளது.

மீன் போன்ற அமைப்புடைய மகரகுண்டலம், முதலை போன்ற நக்ரகுண்டலம், சங்கினால் அமைந்த சங்கபத்ரகுண்டலம், சிங்கம் போன்ற சிம்மபத்ரகுண்டலம் அல்லது கேசரீகுண்டலம், பாம்பின் அமைப்புடைய சர்ப்பகுண்டலம், போன்ற காதணிகளை சாத்துவார்கள்.

தோள்களில் கேயூரம், கைகளில் கடகம், மார்பில் பதக்கங்கள், பெண் மூர்த்திகளுக்கு மூக்குத்தி, இடையில் ஒட்டியாணம் அணிவிக்கப்பெறும், ஆண் மூர்த்திகளுக்கு இடையில் கடிசூத்திரம் (அரைஞாண்) அணிவிக்கப்பெறும். திருவடிகளில் சதங்கைகளோடு இணைந்த பாதசரம் சாற்றப்படும்.

flower-alankaram

அழகு பெறும் மலர்கள்

மனதைக் கவரும் தன்மை கொண்டன மலர்கள். அவற்றைக் கொண்டு இறைவனுக்கு அழகு செய்வதில் நம் முன்னோர்கள் மிக ஈடுபாடு காட்டினர். திருமுறைகளில் இண்டை, தொடை, கண்ணி, பந்து என்ற பல்வேறு வகை மாலைகள் சொல்லப்படுகின்றன.

ஆனால், யாழ்ப்பாண மரபில், கழுத்துமாலைகள், கண்ணிமாலைகள், சர மாலைகள், வரிச்சல் மாலைகள், புஜமாலைகள், கொண்டைமாலைகள் என்பன சாத்தப்படுகின்றன. இவற்றுள் கழுத்துமாலைகள் கரவாரம், குச்சாரம், பம்பாரம் என மூவகைப்படும். கரவாரம் பழுத்தில் போடப்பட்டு கைவரை நீண்டிருக்கும். குச்சாரம் கீழ்ப்பகுதியில் குஞ்சங்கள் பொருத்தப்பட்டிருக்கும். பம்பாரம் மூர்த்தியின் உடம்போடு இணைந்ததாயும் வளைவுள்ளதாயுமிருக்கும். கொண்டை மாலைகள் இறைவனின் திருமுடியை அலங்கரிக்கும்.

தாமரை, செவ்வரத்தை, தேமா போன்ற மலர்களில் ஏதாவது ஒன்றினை ஒரே திசை நோக்கி அமையுமாறு வரிந்து கட்டப்படுவது வரிச்சல் மாலையாகும். நல்லூர் முருகன் கோவிலில் பெரிய தாமரை ஆரம் சாத்தும் வழக்கம் இருக்கிறது. அது திருவாசி முதல் நீண்டு சுவாமி எழுந்தருளும் வாகனத்தின் அடி வரை பெரியதாகவும் அழகாகவும் காணப்படும்.

nallur-3

இதே போல, சுவாமிக்குப் பின் புறம் இருக்கும் திருவாசியை பல்வகைப் பூக்களால் அலங்கரித்து பல கோணங்களில் வடிவமுறச் செய்வர். இவ்வடிவங்கள் வட்டமாயும், சதுரமாயும், நட்சத்திரமாயும், பல்வகைக் கோணங்காளயும், ஓங்காரமாயும் மயிலிறகு போலவும், நாகபடம் போலவும், பலவாறாக அமைந்து எழிலுறக் காணப்படும்.

ஆக, மலர்களினதும் வண்ணங்களினதும் ஒத்திசைவிலேயே சாத்துப்படியின் அழகு வெளிப்படுகின்றது. ஆகவே, சாத்தப்படி பற்றிய பரிதல் உண்டாக வேண்டும். சாத்துப்படியை ஒரு கலையாக அங்கீகரிக்க வேண்டும். சாத்துப்படிக்கலை நிபுணர்களைக் கௌரவிக்க வேண்டும். சாஸ்த்த்ரோக்தமான (ஆகமங்கள் ஏற்றுக்கொள்ளும்) சாத்துப்படிக் கலையினைப் பரவலாகக்ம் செய்ய வேண்டும்.

8 Replies to “போற்றிப் பேண வேண்டிய சாத்துப்படிக்கலை”

  1. மிகவும் அருமையான கருத்துப்பகிர்வுக்கு நன்றி! கோவில் குருக்களாயிருந்து இவ்வளவு அரிய கருத்துக்களை அறியும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி!!

  2. இத்துணை வகைகளும் ,விவரங்களும் அலங்காரக்கலைக்கு இருப்பதை இப்போதே
    அறிகிறேன் .பதிவு செய்தமைக்கு நன்றி.

  3. அன்புள்ள மயூர கிரியாரே,

    சாத்துப்படி கலை பற்றிய இந்த சிந்தனை படித்தவுடன் எமக்கு ரொம்பவும் மனநிறைவு தந்தது. வாரி வழங்கிய உமக்கு நன்றி. இறைத்திருமேனிக்கு அலங்காரம் செய்யும் சிவாச்சாரியார்/ பட்டர் ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யும் அலங்காரங்கள் காரணமாக , தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஒரு மிக அற்புதமான உணர்வு ஏற்படும். இதனை நானும் உணர்ந்துள்ளேன். உணர்ந்த பலர் கூறவும் கேட்டுள்ளேன். எல்லாம் வல்ல பெரியசாமி எனப்படும் தந்தைக்கு உபதேசம் செய்த முத்துக்குமரன் உமக்கு மேலும் அருள்க.

  4. அருமையான விடயத்தினை அழகாகத்தந்திருக்கிறார் மயூரகிரியார். பாராட்டுக்கள் நன்றி. சாத்துப்படி என்ன என்று புரிந்தது. சாத்துப்படி சைவ வைணவ ஆலயங்களுக்கும் பொதுவானது என்பது இனியசெய்தி. திருமாலின் ஆலய சம்ப்ரோக்ஷண பத்திரிக்கையில் சாத்துப்படி என்றவார்த்தையை ஒரு இருபது ஆண்டுகளுக்குமுன் பார்த்ததாக நினைவு. ஏதோ வைணவத்திற்கே உரித்தான ஒரு வழிபாடு என்று நினைத்தேன். சாத்துப்படி செய்யும் கலையினை பயிலரங்குகள் பட்டறைகள் மூலம் ஆர்வலர்களுக்குப்பயில்விக்கவும். பல்வேறு முறைகளை ஆவணப்படுத்தவும் ஆச்சாரியார் பெருமக்கள் செய்யவேண்டும்.

  5. பகவானை அன்று மலர்ந்த பூக்களால் அலங்கரித்து அவனை ஆராதிப்பது சால சிறந்தது. ஆழ்வார்கள் ஆச்சரியார்கள் நந்தவன கைங்கரியம் செய்து நாள்தோறும் பூ கொய்து மாலைகள் செய்து அவன் திருமேனியில் சாற்றி அவனை மகிழ்வித்தார்கள். கடையில் வாங்கி சாத்துவது மத்திமம் எனவே வீட்டில் பூந்தோட்டம் வைத்து மலர்கள் கொய்து மாலைகள் செய்து பகவானுக்கு அவன் உகப்புவிற்கு அணிவிப்பது தான் திருமாலை பணி
    கட்டுரை வழங்கியவருக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

  6. சாத்துப்படிக்கலையீல் இருந்து சாத்தாண்டி(ஜாதீய அடிப்படையில்) என்ற வார்த்தை வந்துவிட்டதா பின்னாளில் ?

  7. அரிய தகவல்கள், அருமையான கட்டுரை. நன்றி சர்மாஜி!

  8. இறை மூர்த்தங்களுக்கு அலங்காரம் செய்யும் கலை என்பதை எவரும் கவனத்தில் கொள்ளாத நிலையில் சாத்துப்படிக் கலை என்பது குறித்துப் பல்வேறு விளக்கங்களுடன் ஒரு கட்டுரையாகத் தந்த மயூரகிரி சர்மா அவர்களுக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *