பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

morning_hindutvaமிக கச்சிதமாக எழுதப்பட்ட அந்த ஆர்ப்பாட்டமில்லாத வரிகள்  அந்த புத்தக ஆசிரியரை இப்படி அறிமுகப்படுத்தின.

இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு. நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்

… புத்தகத்தின் பெயர்? ’ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’.  ஏராளமான தரவுகளுடன் இரக்கமில்லாமல் ஈ.வே.ராமசாமியை தோலுரித்த நூல் அது. நூலாசிரியரின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. 2004 நவம்பரில் வெளிவந்த அந்த நூல் அந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது. எதிர்க்க முடியாதவர்கள் எரிச்சல் பட்டார்கள். வைக்கம் போராட்டமா? பெண்கள் விடுதலையா? தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றமா? ஒவ்வொன்றிலும் உருவாக்கப்பட்டிருக்கும் mave2ஈ.வே.ராமசாமியின் பிம்பம் எத்தனை பொய்யானது போலியானது வரலாற்றிலிருந்து முழுமையாக விலகியிருப்பது என்பதை அந்த நூல் துல்லியமாக சொன்னது. ஆற்றொழுக்கான நடை, அசைக்கமுடியாத ஆதாரங்கள், முக்கியமான பெட்டிச்செய்திகள் – இன்றைக்கு இணையத்திலும் வெளியிலும் இந்துத்துவர்களால் ஈவேராமசாமியின் உண்மை முகத்தை தோலுரிக்க முடிகிறதென்றால் அதில் இந்த நூலின் பங்கு மகத்தானது. இந்த பார்வை மாற்றம் முக்கியமானது. ஏனெனில் 2004-க்கு முன்னர் ஈ.வே.ராமசாமியை ’பெரியார்’ என்றே இந்துத்துவர்கள் பலர் பேசுவதுண்டு. தமிழ்நாட்டின் ஒரு மிக முக்கிய இந்துத்துவ சிந்தனையாளர் தனி உரையாடலில் ‘பெரியார் அன்றைக்கு இந்த மண்ணுக்கு ரொம்ப தேவையாக இருந்தாரப்பா… அவரும் நம்ம சமுதாயத்தை நேசித்தவர்தான்.’ என்றார். ஒரு ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்பு வெளியிட்ட தேசபக்தர்கள் மகான்கள் பிறந்த நாட்கள் நினைவு நாட்கள் பட்டியலில் ஈ.வே.ராமசாமி பெயரும் இருந்தது. சூழ்நிலை புரிந்திருக்கும். இத்தகைய சூழலில்தான் இந்த புத்தகம் வெளியானது. இன்றைக்கு ஈ.வே.ராமசாமியை எவராவது இந்துத்துவர் ‘பெரியார்’ என்றால் அது பழக்க தோஷமாக மட்டுமே இருக்கும். இந்த நூலை எழுதியவர் நிச்சயமாக திராவிட இயக்க வரலாற்றில் ஊறித் தோய்ந்து போன ஒரு பெரிய வரலாற்றாராய்ச்சியாளராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றும். ஒரு முதிய ஆராய்ச்சியாளரின் தோற்றம் மனக்கண் முன் தோன்றும்.  அதுதான் இல்லை.  பெரிய வரலாற்றாராய்ச்சியாளர்தான். ஆனால் அவர் ஒரு இளைஞர். அந்த நூல் வெளிவந்த போது அவருக்கு முப்பது வயது கூட நிரம்பியிருக்கவில்லை. எளிமையின் மகோன்னதமாக விளங்கும் ஒரு ஆளுமை; இத்தனை பெரிய சாதனையை செய்து முடித்தவர் எந்த ‘பந்தா’வும் இல்லாமல் இருப்பார். ஸ்திதப் பிரக்ஞன் கர்மயோகி என்றெல்லாம் சொல்கிறார்களே… அதெல்லாம் என்னவென்று தெரிய வேண்டுமா?

ம.வெங்கடேசனை பாருங்கள்.

இந்த புத்தகத்துடன் ம.வெங்கடேசன் நின்றிருந்தால் இந்த கட்டுரையே தேவைப்பட்டிருக்காது. ஈவேராவை பிம்பம் உடைத்தல் என்பது மகத்தான சாதனைதான். ஆனால் அதைவிட முக்கியமான வாழ்க்கை சாதனை ஒன்றை ம.வெங்கடேசன் செய்து வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்கள் உண்மை. அதை குறித்து பொதுவாக ஹிந்து சமுதாயத்தின் அக்கறையின்மை மற்றொரு அவமானகரமான உண்மை. அதை பயன்படுத்தி இந்து விரோத சக்திகள் தம்மை முற்போக்காகவும் விடுதலை அளிக்கும் மார்க்கங்களாகவும் முன்னிறுத்துவது கொடுமை. mave1இந்த சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாற்றப்படாமல் இருப்பது என்பதை தாண்டி பொதுவாக இந்துத்துவர்கள் சிந்திப்பதில்லை. ம.வெங்கடேசன் இந்த நிலையை மாற்ற விரும்புகிறார். 1850 தொடங்கி 1950 வரை ஒடுக்கப்பட்ட சமுதாயம் ஆகட்டும் பெண் விடுதலை ஆகட்டும் – முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தவர்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய தலைவர்களின் பங்கு மிக சாமர்த்தியமாக முற்போக்காளர்களால் மறைக்கப்படுகிறது. பாபா சாகேப் அம்பேத்கரையோ பண்டிதர் அயோத்தி தாசரையோ அவர்கள் முன்வைப்பது இந்து மதத்தை திட்டுவதற்காக மட்டும்தானே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கவோ அல்லது உண்மையான வரலாற்றை முன்வைக்கவோ இல்லை.  ம.வெங்கடேசன் அவர்களுடன் சிறிது நேரம் இவ்விஷயங்கள் குறித்து உரையாடினால் பெரும் தலைவர் எம்.சி.ராஜா, கலியுக கர்ணனாக விளங்கிய மதுரை பிள்ளை, ஒடுக்கப்பட்டோரின் இந்துத்துவ உரிமை குரலாக ஒலித்த சுவாமி சகஜானந்தர் என ஒரு மாற்று வரலாறு வெகு சகஜமாக முன்வைக்கப்படும்.    அவருடைய வீட்டின் பெரும்பகுதி ஒரு அருமையான நூலகம். ஒரு அறிவுஜீவி மட்டும் அல்ல மகத்தான களப்பணியாளரும் கூட.  இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வள்ளலாரை இழிவுபடுத்தி துண்டு பிரசுரங்கள் வெளியிட்டதை எதிர்த்தாகட்டும், கிறிஸ்தவ மதமாற்றிகள் அவர் வாழும் பகுதியில் மதமாற்ற ஏமாற்றுகளில் ஈடுபடுவதை எதிர்ப்பதாகட்டும், எழுத்தில் அவர் காட்டும் அதே தீவிரம் செயலிலும் வெளிப்படும்.

மகாகவி பாரதிக்கு எதிரான பிரச்சாரத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் ஆதாரபூர்வமான வரலாற்றுத் தொடரை தமிழ்ஹிந்து இணையதள வாசகர்கள் படித்திருப்பார்கள். அதில் தெரியும் உழைப்பும் பாரதி மீதான அன்பும் உண்மை குறித்த  சமரசமில்லாத தேடலும் வாசகர்களுக்கு பரிச்சயமாகியிருக்கும். ம.வெங்கடேசனின் ambedkar_bookஅடுத்த புத்தகம் ‘ஈ.வே.ராமசாமியின் மறுபக்கம்’ நூலை விட முக்கியமானது. ‘புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?’ பாபா சாகேப் அம்பேத்கர் இந்து மதத்தை குறித்து முன்வைத்த விமர்சனங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் இந்து வெறுப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் முதன் முதலாக பாபா சாகேப் அம்பேத்கர் இந்து மதம் மீது மட்டுமல்லாது கிறிஸ்தவம், இஸ்லாம், மார்க்ஸிசம் ஆகிய மதங்களின் மீது வைத்த விமர்சனங்களை சரியாக தொகுத்து முன்வைக்கிறது இந்த நூல். பல இந்துத்துவர்களுக்கு இஸ்லாம் குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் வைத்த விமர்சனங்கள் ஆங்காங்கே கொஞ்சம் தெரியும். ஆனால் பாபா சாகேப் அதை ஒரு வெறும் விமர்சனமாக வைக்கவில்லை. இந்து மதத்தின் சாதியத்தை எப்படி கறாராக விமர்சித்தாரோ அதே போல இஸ்லாமியத்தின் பாசிச அரசியலை மதம் சார்ந்த அடிப்படைவாதத்தை மனிதர்களை பிரிக்கும் மானுடத்தன்மையின்மையை அவர் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.  மார்க்சிசத்தை அதன் ஆன்மிகமற்றத் தன்மைக்காக பாபா சாகேப் புறந்தள்ளியிருக்கிறார். கிறிஸ்தவத்தை அதன் வேரற்ற அந்நியத்தன்மைக்காக, பகுத்தறிவற்ற தன்மைக்காக ஒதுக்கியிருக்கிறார். கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஒடுக்கப்பட்ட மக்கள் தழுவினால் அவர்கள் தேசத்தன்மையற்றுப் போய்விடுகிறார்கள் என சொல்லியிருக்கிறார். ஹிந்துஸ்தானத்தில் இஸ்லாத்தை பரப்ப பாகிஸ்தான் நினைத்தால் ஹிந்துக்கள் அவர்களை மண்ணை கவ்வ வைப்பார்கள் என சொல்லியிருக்கிறார். இந்த நூல் பாபா சாகேப் அம்பேத்கர் ஹிந்துத்துவத்தின் மனசாட்சியின் முன் வைக்கும் ஒரு முக்கிய கேள்வியை சமரசம் சற்றும் இல்லாமல் வாசகரிடம் எழுப்புகிறது. இந்த நூலை படிப்பது ஒவ்வொரு ஹிந்துத்துவருக்கும் தமிழ் சூழலில் மிக முக்கியமானதாகும். இந்த நூலின் கருத்துகளை உள்வாங்காமல் பேசப்படும் ஹிந்துத்துவம் சர்வ நிச்சயமாக அரைகுறையானதாகவே இருக்கும்.

நீதி கட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தது? ம.வெங்கடேசன் இந்த கேள்வியை எடுத்து ஒவ்வொரு பிரச்சார பிம்பத்தையும் உடைக்கிறார். mave3  ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி?’ எனும் இந்த நூலும் தமிழ்ஹிந்து.காம் இணையதளத்தில் தொடராக வெளிவந்ததுதான். கடும் விவாதங்களை அப்போதே தோற்றுவித்தது இந்த தொடர்.  இப்போது நூலாக வந்துள்ள இது  திராவிட இயக்க மாயை மட்டும் உடைக்கவில்லை. கூடவே அன்று ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக நிலவிய சூழல்களை வெளிக் கொணர்கிறது. இன்றைக்கு நாம்  ‘taken for granted’ என எடுத்து கொள்ளும் சாதாரண அடிப்படை உரிமைகள் கூட எப்படி போராடி வெல்லப்பட்டன என்பதை இந்த நூல் வெளிக் கொணர்கிறது. நீதிகட்சியின் பிம்பத்தை உடைக்கும் அதே நேரத்தில் ஹிந்து சமுதாயத்தின் வரலாற்றில் இருக்கும் இருண்ட பக்கங்களையும் நம் முன் நிறுத்துகிறார் ம.வெங்கடேசன். ஒன்றை புறக்கணித்து மற்றொன்றில் குதூகலம் அடைய இயலாது. ஒடுகப்பட்ட சமுதாயத்துக்கான போராட்டத்தை முன்னின்று நடத்திய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் தோன்றிய எம்.சி.ராஜா போன்றவர்கள் நம் மனதில் காலம் காலமாக நிலவிய சாதியமெனும் மனநோயை போக்க போராடியவர்கள் எனவே ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தின் பெரும் தலைவர்கள் அவர்கள் என்பதை இந்த நூலை படிக்கும் ஒவ்வொரு ஹிந்துவும் உணர்வார்.

வெளிவந்த நூல்கள் சிலவென்றால் அவருள்ளே இருக்கும் நூல்கள் அனந்தம். திராவிடத்திடமும் மார்க்சியத்திடமும் அல்லது மிஷிநரி போலி தலித்தியத்திடமும் சமரசம் செய்தால் மட்டுமே ’அவர்கள்’ அனுமதிப்பவற்றை ’அவர்கள்’ திரிக்கும் விதத்தில் பேசப்பட்டு வந்த நிலை மாறுகிறது. வரலாறு ஒன்று – இது வரை பேசப்படக்கூடாததாக, மறைக்கப்பட்ட வரலாறு ஒன்று மேலெழும்பி வருகிறது. பேசுவதற்கான வெளி கூட இல்லாமல் அமுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பார்வை தன் உண்மையின் ஒளி கிரகணங்களை பரப்பி பிரச்சார இருளையும் அறியாமையின் இருளையும் கிழித்து மேல் வருகிறது. ஹிந்துத்துவத்தின் மகத்தான பரிமாணம் ஒன்று சமரசமில்லாமல் வெளிப்படுகிறது. ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்தரும்,  சுவாமி விவேகானந்தரும், அண்ணல் அம்பேத்கரும்,வீர சாவர்க்கரும்,  சுவாமி சகஜானந்தரும் செய்த தவ பலனாக, நம் மண்ணில் வராது வந்த மாமணியாக  உதித்திருப்பவர் ம.வெங்கடேசன். அவரது எழுத்துகள் நம்மை இருளிலிருந்து ஒளிக்கும் அசத்தியத்திலிருந்து  சத்தியத்துக்கும் அழைத்து செல்லட்டும்.  இவரது எழுத்துகளிலிருந்து சமுதாய விடுதலையும் நீதியும் அளிக்கும் உண்மையானதொரு ஆன்மிக பண்பாட்டு ஹிந்துத்துவ வரலாற்றியல் பேரியக்கமாக உருவாகட்டும்.

நாளை காலை மீண்டும் தேநீருடன் சந்திப்போம்…

 

Tags: , , , , , , , , ,

 

20 மறுமொழிகள் பேசப்படக்கூடாத வரலாற்றின் குரல்

 1. ஓகை நடராஜன் on November 13, 2013 at 6:15 am

  //ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்கள் உண்மை. அதை குறித்து பொதுவாக ஹிந்து சமுதாயத்தின் அக்கறையின்மை மற்றொரு அவமானகரமான உண்மை.// ஒவ்வொரு இந்துவும் உணர்ந்து செயலாற்ற வேண்டிய அவமானகரமான உண்மை. இந்த சூழலில் இத்தகு தொண்டாற்றிவரும் வெங்கடேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 2. கண்ணன் on November 13, 2013 at 6:39 am

  “ஒரு குரூப்பு சும்மா காபி இந்துத்துவம்னு திரியிது. வயத்த கலக்குற காப்பி நமக்கு சரிப்படாது. சித்தர் கசாயத்தப் போட்டு தெளிய வைக்கலாம்னு ஒரு ஐடியா. நாம யாருக்கும் கெடுதல் செய்றதில்ல”.

  எந்தவிதமான லாஜிக்கும் இல்லாமல் வெறுப்பின் அடிப்படையில் இப்படியொரு கமென்ட் முகநூலில்;

  இந்த சிறப்பான பணி தொய்வில்லாமல் தொடரட்டும்; உண்மைகள் வெளிவரட்டும்.

 3. அத்விகா on November 13, 2013 at 9:22 am

  திரு ம வெங்கடேசன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்களும், நன்றியும் உரித்தாகுக. அவரது பணி மேலும் தொடர்ந்து சிறக்கட்டும். அவருக்கு எல்லாம் வல்லான் முருகப்பெருமான் அருள்க .

 4. Dr.A.Anburaj on November 13, 2013 at 9:38 am

  இந்து பண்பாட்டின்உன்னதங்கள் அனைத்து மக்களுக்கும் முறையாக கற்றுக் கொடுக்க சரியான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்துக்கள் கோயிலிலும் வீட்டிலும் அமா்ந்து இருந்து வழிபாடு செய்யும் பழக்கம் ஏற்படவேண்டும். பத்மாசனத்தில் வழிபாடு செய்யும் பழக்கம் அனைத்து இந்துக்களுக்கும் பாலபாடம்.

 5. seenu on November 13, 2013 at 10:02 am

  நேற்றைக்கு மறைக்கப்பட்ட ஒரு மனிதரின் செய்தி, இன்றைக்கு நம்மோடு இருந்தும் நம்மால் மறக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றிய செய்தி….

  தேநீர் நாளுக்கு நாள் சுவை கூடுகிறது…

  சீனு, ஈரோடு.

 6. வீர. ராஜமாணிக்கம் on November 13, 2013 at 11:07 am

  ம.வெங்கடேசன் எனும் மகத்தான ஆராய்ச்சியாளரின் பணி போற்றத்தக்கதும், வணக்கத்திற்குரியதும் ஆகும். இந்து சமூகத்தின் வலுவான தூணாக விளங்கும் சகோதரருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். வாழ்வாங்கு வாழ்க வெங்கடேசன்

 7. rk on November 13, 2013 at 12:26 pm

  குடியும், விபச்சாரமும் மற்றும்
  பெரியாரின் முரண்பாடுகளும்…
  http://oosssai.blogspot.com/2010/11/blog-post_19.html http://oosssai.blogspot.com/2011/03/blog-post_07.html

 8. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை என்று சொல்லத்தோன்றியது இந்தக்கட்டுரையை வாசித்தவுடன். ஸ்ரீ வெங்கடேசன் அவர்களின் கட்டுரைகளை தமிழ் ஹிந்துவிலும் புத்தகத்திலும் சரி வாசித்தவர்களின் உணர்வு இது. ஆதாரங்களை ஆணித்தனமாக வைத்து வாதங்களை வைப்பதில் ஸ்ரீ வெங்கடேசன் அவர்களுக்கு நிகர் அவரே. வெற்றிகரமாகத் தொடர்ந்து அவரது ஆராய்ச்சிப்பணியும் மக்கள்பணியும் சிறக்க வாழ்த்துகிறேன்.

 9. Prassannasundhar N on November 13, 2013 at 1:40 pm

  முதன் முதலில் ஹிந்து ஆன்மீகக் கண்காட்சியில் இவரை திரு ஜடாயு சார் அறிமுகப்படுத்தி வைத்தார். ரொம்ப சிம்பிளாக உட்கார்ந்திருந்தார் திரு. ம.வெ அவர்கள். ஒரு ஹலோ சொன்னேன். திரும்ப ஒரு ஹலோ அவ்வளவு தான். யாருமே அவரைப் பார்த்தால் இவர் தான் பெரியாரின் மறுபக்கம் எழுதியவர் என்று நம்ப முடியாது. அவ்வளவு சாந்தம். அப்போதே அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எம் உள்துறை அமைச்சர் உடனிருந்ததால் அவசரமாகக் கிளம்ப வேண்டிய கட்டாயம்.

  நான் பெரியாரின் மறுபக்கம் தொடரை தமிழ் ஹிந்துவிலேயே படித்து விட்டேன். அதனால் அ.நீ அவர்களின் நம்பக் கூடாத கடவுள் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தேன். ம.வெ அவர்கள் தான் மாற்றுச் சில்லறை கொடுத்தார். 🙂 எளிமையின் மறுபெயர்.

 10. periyasamydhanapal on November 13, 2013 at 2:11 pm

  Kudoos to Sri. Venkatesan. Every small work which contribute to strengthen our community is very great in the view of reconstruction of our nation. Continue to play your role to awaken our people.

 11. "HONEST MAN" on November 13, 2013 at 3:01 pm

  தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மாமனிதரை ஏன் இந்து சமூகம் வெளிச்சத்திற்கு கொண்டுவராமல் இருட்டில் அடைத்து வைத்திருக்கிறது? அவரை இந்து இயக்க மேடைகளில் ஏற்றுங்கள்..மக்களிடம் உள்ள திராவிட் மாயை அகன்றிட அவரை பயன்படுத்துங்கள். சும்மா இந்த தளத்தில் அவருக்கு வெறும் வார்த்தைகளால் வாழ்த்து சொல்லிகொண்டிருக்காமல் உருப்படியான காரியங்களில் இறங்குங்கள். இந்து இயக்கங்கள் நிறைய தவறுகளை செய்து வருகின்றன.. அவைகளில் இதுவும் ஒன்று.

  நமக்கு அன்றாடம் உறுதுணையாக இருந்து இந்து கடவுள்களின் பெயர்களை சுமந்து வாழும் அன்பு சகோதரர்களை புறந்தள்ளி விட்டு நம்மை காபிர் என்று கூறி இந்து தெய்வங்களை கேலியும் கிண்டலும் பேசும் முஸ்லிம்களை பார்த்து பாய் (=சகோதரா!) என்றும் எஜமான் (=முதலாளி!) என்றும் அவனுக்கு சலாம் போடுவது நியாயமா என்று யோசியுங்கள். கோவில்களுக்குள் நாய் போகிறது. குரங்கு வாழ்கிறது.. வவ்வால் (=bat ) கருவறைக்குள் தொங்கி கொண்டிருக்கிறது. மூன்றறிவு நான்கறிவு படைத்த விலங்குகள் கோவிலுக்குள் போகும்போது ஆறறிவு படைத்த நம் சகமனிதன் போக கூடாது என்று தடுப்பது அக்கிரமம் இல்லையா? “இன்று இருக்கிறோம் நாளை இல்லை” என்பதுதான் இந்த நிலையா உலகின் நிலை என்று இருக்கும்போது (நமக்கு அன்றாடம் தோள் கொடுத்து உதவும்) நம் சகோதரனை கேவலப் படுத்தலாமா?

  அவனை பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு என்கிறோம். பேருந்து , தொடர் வண்டி, திரை அரங்கம் என்று பல இடங்களுக்கு செல்லும்போது பக்கத்தில் அமர்ந்திருப்பவர் யார் எந்த சாதி என்று பார்க்காமல் ஒட்டி உட்கார்ந்து உறவாடும்போது கோவிலுக்கு செல்லும்போது மட்டும் சாதி பார்ப்பதேன்? நமது இடது கையை ஒரு purpose க்கும் வலது கையை சாப்பிடுவதற்கும் பயன்படுத்துகிறோம். வெவ்வேறு காரியங்களுக்கு கைகளை பயன்படுத்தினாலும் கடவுளிடம் போகும் போது அந்த வேற்றுமைகளை மறந்து அந்த இரு கைகளையும் ஒன்று சேர்த்து வணங்குகிறோம் ஒற்றுமையை வெளிப்படுததுகிறோம். அப்படியிருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ஒரு மனிதனை இழிவு படுத்துவது சரியல்ல என்று atleast இன்றுமுதலாவது மனம் மாறி அவர்களை கோவிலுக்கு வராதே என்று தடுக்கக் கூடாது. நாம் அனைவரும் “மனம் மாறினால்” கண்டிப்பாக அவர்கள் “மதம் மாறவே” மாட்டார்கள்.

  முக்கியமாக மனம் மாறவேண்டியது “ஜகத் குரு” தான். காரணம் இது போன்ற (கோவிலுக்குள் நுழையவிடாத) விரும்பததகாத நிகழ்வுகள் நேரும்போது அவர் இந்துக்களுக்கு “இது முறை அல்ல இது தவறு அவர்களை அனுமதியுங்கள்” என்று சொல்லவேண்டும். ஜகத்தில் எது நடந்தாலும் நடந்து போகட்டும் என்று பேசாமல் இருப்பது சரியல்ல. ஜாதி கலவரங்கள் நடந்தால் இரு ஜாதி மக்களுக்கும் ஒற்றுமையோடு வாழுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கவேண்டும். நேரில் சென்று இருஜாதி மக்களுக்கும் பொதுவாக ஆறுதல் கூற வேண்டும். மடத்திலிருந்து பொருள் உதவிகள் செய்யவேண்டும். இப்படி நடக்கும் நாள் எந்நாளோ அந்நாளே இந்து மதத்திற்கு பொன்னாள் அப்போது திக இருக்காது முக வும் இருக்க மாட்டார்.

  கிறிஸ்தவர்கள் service (=சேவை) மூலம் மத மாற்றம் செய்கிறார்கள் என்றால் நாமும் சேவை செய்ய முன் வர வேண்டும் (முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும்) யாகம் செய்து அதில் TIN TIN ஆக நெய்யை ஊற்றி பட்டு புடவை முதலானவற்றை கொட்டி எரியவிடாமல் அதற்கு பதிலாக அந்த பணத்தில் ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவலாமே. (மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாயில் சொல்வது மட்டும் கூடாது. செயலில் அதை காட்டவேண்டும்)

  நான் காணும் இந்த இனிய கனவு பலிக்குமா? சுற்றி சூழ்ந்துள்ள பகைவர்களிடமிருந்து (ISLAM , cHRISTIANITY ) இந்து மதம் கெலிக்குமா? அல்லது என் நல்ல கருத்துக்கள் யாருக்கேனும் வலிக்குமா? இல்லை என் போன்ற நல்ல மனங்கள் குதூகலிககுமா?

 12. nandhitha on November 13, 2013 at 3:02 pm

  நமஸ்தே
  உணர்வுள்ள ஒவ்வொருவரும் மதிக்க வேண்டிய ஒரு ஒப்பற்ற ஆன்மா.
  என்னுடைய வணக்கங்களும் வாழ்த்துக்களும்
  அன்புடன்
  நந்திதா

 13. bharathanban v.s on November 13, 2013 at 3:28 pm

  உண்மையில் திரு.ம.வெங்கடேசன் மகத்தான காரியம் செய்திருக்கிறார். அவருக்கு உரிய அங்கீகாரத்தை இந்து சமுதாயம் அளிக்க வேண்டும். குறிப்பாக இந்து இயக்கங்கள் அவரை உரிய விதத்தில் கவுரவிக்க வேண்டும்!

 14. பரமசிவம் on November 13, 2013 at 10:32 pm

  புத்தகங்கள் கிடைக்கும் இடம்/பதிப்பகம் விவரம் அறிய ஆவல். வாங்கிப் படிக்க விரும்புகிறேன் .

 15. S Narayanan on November 14, 2013 at 2:42 pm

  ம.வெங்கடேசனை சந்தித்த தருணத்தில் அவரிடம் இருந்த இயல்பான நிலை மனதைக் கவர்ந்தது. அவருக்கு எனது வாழ்த்துக்களையும் மேலும் பல நல்ல காரியங்களை ஆற்ற இறையருள் தொடர்ந்து கிடைக்க எனது பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 16. V.Narayanan on November 14, 2013 at 7:04 pm

  Please let me know where these books are avilable.

 17. MURUGESAN P on November 14, 2013 at 11:04 pm

  வாராது வந்த மாமணியே ம. வேங்கடேசனே வருக வள மான கருத்து தருக
  உன்னால் ஏற்றம் பெறட்டும் இந்து கருத்து கருவூலம்

 18. நீலகண்டன் on November 16, 2013 at 10:27 pm

  திரு. ம வெங்கடேசன் அவர்களின் எழுத்துகள் அற்புதமானது, தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரைகள் அதற்கு சாட்சி.

 19. sivakumar on November 22, 2013 at 8:07 am

  இந்த நூல்கள் எங்கே கிடைக்கும் என்று தெரிவியுங்கள்

 20. raman on November 22, 2013 at 5:10 pm

  புத்தகம் வாங்குவதற்குச் சில அன்பர்கள் கேட்டிருப்பதற்கு இந்தத் தளம் உதவும்:
  https://www.nhm.in/shop/home.php?cat=1466
  அவைகளைச் சென்னையில் கிழக்குப் பதிப்பகத்தில் இருந்தும் பெறலாம் என்று நினைக்கிறேன்.

  கட்டுரையில் உள்ள, “…வரலாற்றுப் பார்வை தன் உண்மையின் ஒளி கிரகணங்களை பரப்பி பிரச்சார இருளையும் அறியாமையின் இருளையும் கிழித்து மேல் வருகிறது…” என்ற வரியில் இருக்க வேண்டியது “கிரகணங்களா” அல்லது “கிரணங்களா”, அதாவது கதிர்களா?

  திரு. வெங்கடேசன் அவர்களுடன் நன்கு பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். சமீப காலமாக உடல் நிலை சரியில்லாது இருந்ததாகவும் சொன்னார். ஆனால் அண்மையில் தொடர்பு கொள்ள முடியவில்லையே! அ.நீ. உதவ முடியுமா? ம.வே. சுகமாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*