ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

December 31, 2013
By

சென்ற வாரம்  பெங்களூரில் இருந்து கிளம்பி  கர்நாடகத்தின் சில பகுதிகளைப் பார்த்து வந்தோம்.  சித்ரதுர்கா, ஹம்பி, பாதாமி ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள். மேற்குக் கடற்கரையில்  கோகர்ணா, முருடேஷ்வர்.  மளே நாடு எனப்படும்  மத்திய கர்நாடகப் பகுதியில் உள்ள சிருங்கேரி, சிக்மகளூர் ஆகியவை திட்டத்தில் அடக்கம்.

karnataka-trip-dec2013-map

அந்த ஆறு நாள் பயண அனுபவங்களை சுருக்கமாக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

திங்கட்கிழமை (23 டிசம்பர்) பயணம் கிளம்பியதும், முதலில் இறங்கிய இடம் சித்ரதுர்கா. பெங்களூர் ஹம்பி பயணத்தின் நடு வழியில் டிசம்பரிலும் வெயில் சுட்டெரிக்கும் இந்த ஊர் வருகிறது.

இங்குள்ள கோட்டை அழகானது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. விசித்திரமான வடிவங்களில் கற்பாறைகள் கொண்ட மலைக்கோட்டை என்பதால் சித்ர-துர்க்க என்று பெயர். இப்பகுதியின் வரலாறு மிகப் பழமையானது. ராஷ்டிரகூட, சாளுக்கிய காலத்திய கல்வெட்டுகள் ஊரைச் சுற்றிக் கிடைத்துள்ளன. தற்போது காணும் பிரம்மாண்டமான மலைக் கோட்டை 14 முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பரிணமித்து வளர்ந்துள்ளது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் படைத்தலைவரான திம்மப்ப நாயக்கர் தொடங்கி இதன் கடைசி இந்து மன்னரான மதகரி நாயக்கர் வரை தொடர்ந்த சித்ரதுர்க்கா நாயக்கர்களின் ராஜவம்சம் ஹைதர் அலி இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் முடிவடைகிறது. ஏழு சுற்றுகள், பதினெட்டு கோயில்கள், தோரண வாயில்கள், பண்டக சாலைகள், விழா மண்டபங்கள், குருகுலம், குளங்கள், சுனைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ரகசிய வாயில்கள் என பற்பல பகுதிகளைக் கொண்ட கோட்டையை ஏறி இறங்கி சுற்றி வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும். கோட்டையின் அமைப்பு காரணமாக வெயில் தெரிவதில்லை. உள்ளே பல இடங்களில் நல்ல காற்று வீசி களைப்பைப் போக்கி விடுகிறது.

IMG_4747

இராஜவம்சத்தின் குலதெய்வமான ஏகநாதேஸ்வரி என்ற சிவ-சக்தி கோயிலில் மட்டும் இப்போதும் பூஜை நடக்கிறது. மற்ற கோயில்கள் பாழடைந்து விட்டன. மகாபாரதத்தின் ஹிடும்பனும் ஹிடும்பனும் வசித்த மலைப்பகுதி என்ற ஐதிகம் உள்ளதை ஒட்டி, ஹிடும்பேஸ்வரர் என்ற சிவாலயமும் கோட்டைக்குள் உள்ளது.

இக்கோட்டையுடன் தொடர்புடைய “ஒனக்கே ஓபவ்வா” என்ற வீரப் பெண்ணைப் பற்றிய நாட்டார் வரலாற்றுக் கதை கர்நாடகத்தில் மிகவும் பிரபலமானது.. கோட்டைக்குள் ஒருவர் மட்டுமே நுழைந்து வரக் கூடிய ஒரு ரகசிய வழியை எப்படியோ கண்டுபிடித்து விட்ட ஹைதரின் படை வீரர்கள் ஒவ்வொருவராக அதற்குள் நுழைகிறார்கள்.. அந்த வாயிலைக் காவல் புரியும் வீரர் அருகிலேயே உள்ள தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.. தண்ணீர் எடுக்க வந்த அவரது மனைவி ஓபவ்வா இதைக் கவனித்து விடுகிறாள். உடனே, சமையலறையிலிருந்த பெரிய உலக்கையை (கன்னடத்தில் ஒனக்கே) எடுத்து வந்து உள்ளே வரும் ஒவ்வொரு எதிரிப் படைவீரனையும் அதனாலேயே அடித்துக் கொன்று போடுகிறாள். இப்படி 25க்கும் மேற்பட்ட்ட வீரர்கள் செத்துக் கிடப்பதை வந்து பார்த்த அவளது கணவன் பிரமித்துப் போகிறான். பிறகு, மற்ற காவல் வீரர்களுக்குச் செய்தி அனுப்பி அபாய மணியை அடிக்க, அந்தப் போரில் கோட்டை காக்கப் படுகிறது. ஆனால் ஓபவ்வா இறந்து விடுகிறாள்.  மூன்று முறை படையெடுத்தும், பல சூழ்ச்சிகளைச் செய்துமே இந்தக் கோட்டையைக் கடைசியில் ஹைதர் அலி கைப்பற்ற முடிந்தது.  வேடர் குலப் பெண்ணான ஓபவ்வாவின் வீரமும் தியாகமும் கன்னட மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டன.  சித்ரதுர்கா நகரில் அவளது சிலை உள்ளது. நகரின் விளையாட்டு அரங்கத்திற்கு அவள் பெயர்  சூட்டப் பட்டுள்ளது.

தேவகிரி (தௌலதாபாத்), செஞ்சி, சித்ரதுர்க்கா என்று இந்தியாவின் ஒவ்வொரு மிகச் சிறந்த கோட்டைக்கும் நீண்ட நெடிய வரலாறுகள் உள்ளன.. கொண்டாட்டங்கள், மாபெரும் வீரச் செயல்கள், சிலிர்ப்பூட்டும் தியாகங்கள், சதி வலைகள், காதல்கள் எல்லாம் கலந்து பெருமூச்சு வரவழைக்கும் கதைகள். கோட்டையிலிருந்து இறங்கும் போது வரலாற்றின் திசை மாற்றங்களை யோசித்துக் கொண்டே வந்தேன்.. 1980 – 90களில் அயோத்தி இயக்கத்தின் போது மதக்கலவரங்களில் சித்ரதுர்க்காவின் பெயரை அடிக்கடி பார்த்த நினைவு வந்தது.. ஊருக்குள் நுழைந்து பார்க்கும் போது அங்கங்கு இஸ்லாமிய ஆதிக்கத்தின் சுவடுகளும், அதனுடன் தொடர்ந்து போராடி தங்களது சுயத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இந்த மண்ணின் மைந்தர்களின் அடையாளங்களும் காணக் கிடைக்கின்றன. ஹைதரின் பீரங்கிக் குண்டுகள் பல இடங்களில் பட்டுச் சிதறி சிறு துளைகளை உண்டாக்கிய போதும், சிறிதும் அசைந்து கொடுக்காத சித்ரதுர்கா கோட்டைச் சுவர்களின் சித்திரம் அன்று மாலை ஹம்பி சென்று சேரும் வரை மனதில் நின்றது..

சித்ரதுர்கா புகைப்படங்கள்: https://picasaweb.google.com/100629301604501469762/ChitradurgaFortDec2013Trip#

(தொடரும்)

அடுத்த பகுதி >>

Tags: , , , , , , , , , , , ,

 

4 மறுமொழிகள் ஒரு கர்நாடகப் பயணம் – 1 (சித்ரதுர்கா)

 1. kmv on December 31, 2013 at 10:49 pm

  one old kannada movie about Obavva which was shown on DD ….Inspiring scenes…I think the actress was jayanthi..

 2. Sundararajan on January 2, 2014 at 5:19 pm

  Could you see the dark cave? Of course only with the help of a guide. Quite an interesting experience.

 3. RV on January 2, 2014 at 8:56 pm

  சித்ரதுர்காவை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன் (நாகர ஹாவு) நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை உண்டுபண்ணிவிட்டீர்கள்.

  “ஒனகெ ஒப்பவா” என்ற கன்னட திரைப்படமும் வந்திருக்கிறது. பேர் சரியாக நினைவில்லை, ஆனால் அந்தத் திரைப்படம் மூலம்தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்துகொண்டேன்.

 4. Latha on January 4, 2014 at 12:47 am

  கோட்டையுடன் தொடர்புடைய செய்தியும் படங்களும் அருமை.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*