லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால் சட்டம் குறித்த சில காலவரிசைப்படுத்தப்பட்ட தகவல்கள்…

 

Parliament

லோக்பால்: அன்று முதல் இன்று வரை…

  • ஊழல் பெருக்கத்தின் போது தான் அதை ஒழிக்க என்ன செய்வது என்ற சிந்தனை வரும். அவ்வாறே 1960களில் இந்தியாவில் ஊழல் நிலைகொள்ள ஆரம்பித்த தருணங்களில் உருவான சிந்தனை தான் லோக்பால்.

    எல்.எம்.சிங்வி
  • ராஜஸ்தான் மாநில சுயேச்சை எம்.பி.யாக இருந்த டாக்டர் எல்.எம்.சிங்வியால் லோக்சபாவில் 1963-ல் முன்வைக்கப்பட்ட கருத்தே லோக்பால். (பிற்பாடு இவர் பாஜக எம்.பி.யாக இருந்து 2007-ல் மறைந்தார்). இவர் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராகவும் இங்கிலாந்து தூதராகவும் இருந்தவர்.
  • 1966-ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அரசுப் பணியாளர்கள், எம்.பி.க்கள் ஊழலில் ஈடுபட்டால் அவர்களை சுயேச்சையான அமைப்பால் விசாரிக்கவும் தண்டிக்கவும் லோக்பால் அவசியமென்றார் தேசாய்.
  • 1968-ல் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சாந்திபூஷன் முன்மொழிந்த லோக்பால் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. எனினும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் முன் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சட்டம் முழுமை பெறவில்லை. இந்த சாந்திபூஷன் 1977-ல் ஜனதா அரசில் சட்ட அமைச்சராக இருந்தவர். இவரது மகன் தான் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான பிரசாந்த் பூஷன்.
  • அதன் பிறகு 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001 ஆகிய காலகட்டங்களில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற அடுத்து வந்த அரசுகள் முயன்றன. எனினும் முழுமையான ஆர்வம் இன்றி செயல்பட்ட அரசுகளால் இச்சட்டம் நிறைவேறுவது ஒவ்வொருமுறையும் தள்ளிப்போனது. அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத சூழலால் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் 2001-ல் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
  • 2002-ல் அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையிலான அரசியல் சாசன மறுசீரமைவு ஆணையம், லோக்பாலின் அவசியம் குறித்து வலியுறுத்தியது.
  • 2004-ல் காங்கிரஸ், பாஜக இரண்டுமே தங்கள் தேர்தல் அறிக்கையில் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தன. காங்கிரஸ் கூட்டணி வென்றது.

    சாந்திபூஷன்
  • 2005-ல் வீரப்ப மொய்லி தலைமையிலான இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையமும் லோக்பால் சட்டம் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆயினும் ஐ.மு.கூட்டணியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் லோக்பால் கண்டுகொள்ளப்படவில்லை. 2009 தேர்தலிலும் லோக்பால் சட்டம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.
  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாள்தோறும் வெளியான பூதாகரமான ஊழல்களால், லோக்பாலின் அத்தியாவசியம் உடனடியாக உணரப்பட்டது. ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவரும் சமூக சேவகருமான அண்ணா ஹஸாரே லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 2011-ல் வலியுறுத்தத் துவங்கினார்.
  • ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வு பெருகிய நிலையில் லோக்பால் சட்ட்த்தை நிறைவேற்ற ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்ட்து. ஆனால், அரசு கொண்டுவரும் லோக்பால் சட்டம் கடுமையான ஷரத்துகள் அற்றது என்றும், அதற்கு மாற்றாக ஜனலோக்பால் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் ஹஸாரே தலைமையிலான ஊழல் எதிப்பு இயக்கம் கோரியது.
  • பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தது. இந்நிலையில் புதுதில்லி, ஜந்தர்மந்தரில் 2011, ஏப். 5 முதல் ஏப். 9 வரை லோக்பாலுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் ஹஸாரே. அப்போது ஜனலோக்பாலின் அம்சங்களையும் பரிசீலித்து திருத்தங்களுடன் கூடிய லோக்பால் வரைவை உருவாக்க குடிமக்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சர்களும் இணைந்த கூட்டுக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
  • இதனிடையே, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, பிரஷாந்த் பூஷன், அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து ஜன்லோக்பால் வரைவை உருவாக்கி இருந்தார். இதனையே ஹஸாரே ஆதரித்து போராட்டம் நடத்தினார். ஊழலுக்கு எதிரான தன்னார்வ அமைப்புகள், குடிமக்களின் அமைப்புகள் இந்திய அரசியலில் வலுப்பெறத் துவங்கின.

    அண்ணா ஹஸாரே
  • 2011, ஜூலை 28-ல் லோக்பாலின் திருத்தப்பட்ட முன்வரைவை மத்திய அரசு உருவாக்கியது. இதன் வரையறைக்குள் பிரதமர் கொண்டுவரப்படவில்லை. தவிர, அதன் பல அம்சங்கள் குடிமக்கள் கூட்டமைப்புக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. எனவே, மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹஸாரே அறிவித்தார்.
  • 2011, ஆக. 16-ல் தில்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் உண்ணாவிரத்த்தை துவங்கினார் ஹஸாரே. நாடு முழுவதும் போராட்டம் பரவியது. ஹஸாரே கைது செய்யப்பட்டு, திஹார் சிறையிலும் அவர் போராட்டத்தைத் தொடர்ந்ததால், அரசு பணிந்தது. வேறு வழியின்றி லோக்சபாவில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவை அவசரமாக நிறைவேற்றியது மன்மோகன் அரசு. ஆக 28-ல் ஹஸாரே உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
  • ஆனால் ராஜ்யசபாவில் சில கட்சிகளின் கடும் எதிர்ப்பால் லோக்பால் மசோதா நிறைவேறவில்லை. உண்மையில் சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி.கட்சிகளின் எதிர்ப்பு ஒருபொருட்டல்ல. காங்கிரஸ் மீண்டும் ஹஸாரேவுக்கு ஏமாற்றம் அளித்தது.
  • 2012-ல் மீண்டும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில கட்சிகளின் எதிர்ப்பால் மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது.
  • 2013 டிசம்பரில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் மிசோரம் தவிர பிற இடங்களில் படுதோல்வியுற்றது. தில்லியில் ஹஸாரேவின் முன்னாள் ஊழியர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வெற்றி காங்கிரஸ் கட்சியை யோசிக்கச் செய்தது. லோக்பால் சட்டத்தை நிறைவேற்றி எப்படியேனும் சிக்கலிலிருந்து விடுபட ஐ.மு.கூட்டணி அரசு முயன்றது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திடீரெனெ லோக்பாலுக்கு ஆதரவாக முழங்கினார்.

    சட்டம் இனி தன் கடமையைச் செய்யும்?
    சட்டம் இனி
    தன் கடமையைச் செய்யும்?
  • 2013, டிசம்பர் 10-ல் தனது சொந்த கிராமமான ராலேகான் சிந்தியில் அண்ணா ஹஸாரே மீண்டும் உண்ணாவிரத்த்தித் துவக்கினார். லோக்பால் மசோதவை நாடாளுமன்றம் ஏற்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்தார்.
  • ஹஸாரே உண்ணாவிரதம், அரவிந்த் கேஜ்ரிவாலின் திடீர் வளர்ச்சி, நாட்டில் எழுந்துள்ள கடும் அதிருப்தி அலை, பாஜகவின் மாபெரும் வெற்றி, மோடி அலை ஆகியவற்றால் மிரண்ட காங்கிரஸுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் மசோதாவை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது.
  • திருத்தங்களுடன் கூடிய லோக்பால் மசோதா- 2013 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேற்றப்பட்டது. சில கட்சிகளின் எதிர்ப்பை மீறி, காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு முறையில் லோக்பால் மசோதா நிறைவேறியது.
  • லோக்பால் மசோதா நிறைவேறியதை அடுத்து அண்ணா ஹஸாரே தனது 9 நாள் உண்ணாவிரதத்தை டிசம்பர் 18-ல் முடித்துக் கொண்டார்.
  • ஜனாதிபதியின் ஒப்புதலுடன் லோக்பால் மசோதா சட்டமாகிவிடும். அதாவது இனிமேல், அரசுப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஊழல் செய்தால் நடவடிக்கை எடுக்க மேலும் ஒரு சட்டம் தயாராகிவிட்டது. இதனால் என்ன பலன் இருக்கும்? காலம் தான் பதில் சொல்ல முடியும்.

***

corruption

 

‘லோக்பால்’ என்பது சமஸ்கிருத வார்த்தை. இதன் பொருள், மக்களின் கண்காணிப்பாளர் என்பதே (Caretaker of People). அதாவது மக்களாட்சி முறையில் நிலவும் ஊழல்களைக் களைவதற்கான, அரசு சார்பற்ற, மக்கள் பிரதிநிதித்துவம் மிகுந்த சுயேச்சையான அமைப்பே லோக்பால்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் லோக்பால் சட்டம் கொண்டுவந்ததை ஒரு சாதனையாக பிரசாரம் செய்ய காங்கிரஸ் துடிக்கும் என்பது உண்மை. ஆனால், காலவரிசையில் நிகழ்ந்துள்ள லோக்பாலின் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்கள், காங்கிரஸுக்கு அந்த உரிமை இல்லை என்பதை அம்பலப்படுத்துகின்றன. இந்த சட்டம் பெயரளவிலேனும் இப்போது நிறைவேறக் காரணம் அண்ணா ஹஸாரே தான். அவருக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது.

லோக்பாலின் தத்துவம், கட்டமைப்பு, அதன் விதிமுறைகள், சிறப்பம்சங்கள், ஜனலோக்பாலுக்கும் அரசு கொண்டுவந்துள்ள லோக்பாலுக்கு இடையிலான வேறுபாடுகள், லோக்பால் சட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியுமா? ஆகியவை குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

(தொடரும்)

4 Replies to “லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1”

  1. தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்காவிட்டால், காங்கிரசும் பிஜேபியும் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முன் வந்திருக்காது.

    அரசாங்க ஊழல்களில் முக்கியமானது – தனியார்களுக்கு / தொழிலதிபர்களுக்கு விதிகளைத் தளர்த்தி / மீறி சலுகை காட்டுவதால் ஏற்படுவது. இதில் அரசாங்க ஊழியர்களை வழக்கில் சேர்க்க வழி செய்யும் லோக்பால் சட்டம், தனியார்களை விசாரிக்கும் அதிகாரம் இல்லாமல் இருக்கிறது.

    காங்கிரஸ், பிஜேபி – இவை இரண்டுமே ஒரு விஷயத்தில் ஒன்றாக உள்ளன – எந்தச் சட்டமும் எந்த அரசியல்வாதியையும் ஒன்றும் பண்ணாது என்பது.

    நாளை மோதி தலைமையில் பிஜேபி ஆட்சி (NDA அல்ல – பிஜேபியின் தனி பெரும்பான்மையில் அமையும் ஆட்சி) அமைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். 2ஜி, நிலக்கரி விவகாரம் தொடர்பான எந்த வழக்கையும் நடத்தி காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் என்று நினைக்கக் கூட வேண்டாம்.

    என்னைப் பொறுத்த வரையில், காங்கிரஸ், பிஜெபிக்குள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான் – சோனியா ராஹுல் பிஜேபியில் இல்லை.

    மோதியின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் எவ்வளவு பணம் செலவாகிறது என்பதிலேயே பிஜேபியின் ‘பணம் வசூலிக்கும் திறமை’ பளிச்சிடுகிறது.

    தமிழ் நாட்டில் தி மு கவிற்கு மாற்று அ தி மு க போல், மத்தியில் காங்கிரசுக்கு மாற்று பிஜேபி – நல்ல ஆட்சி தருவார்கள் என்பதால் அல்ல.

  2. அன்புள்ள திரு ஆர் நாகராஜன் அவர்களுக்கு,

    தங்கள் கருத்தை தெளிவாக எடுத்து வைத்துள்ளீர்கள். ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் நாளை அதாவது புதன் கிழமை 25-12-2013 ஆட்சியில் அமரப்போவதாக செய்திகள் கூறுகின்றன. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களிடம் எவ்வளவு ஊழலற்ற தன்மை எதிர்காலத்தில் இருக்கும் என்பது , அவர் காங்கிரஸ் ஆதரவை கேட்டுப்பெற்றதில் இருந்தே தெரிகிறது. காங்கிரசும் ஊழலும் இணைபிரியாதவை என்பது உண்மை.

    காங்கிரஸ் மற்றும் பாஜக ஒப்பீடு சரி அல்ல என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். பாஜகவில் வாஜ்பாயி, அத்வானி, நரேந்திரமோடி மூவருமே ஊழல் அற்ற உன்னத தலைவர்கள். ராஜஸ்தான், ம பி , சத்தீஸ்கர் முதல்வர்களும் மிக நல்ல தலைவர்களே ஆவார்கள். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கூட காங்கிரஸ் கட்சியைவிட பிஜேபி யில் உள்ளவர்கள் பல மடங்கு பெட்டர்.

    நரேந்திர மோடி தலைமையில் எதிர்கால அரசு மத்தியில் அமைந்தால் இந்தியாவை நிச்சயம் சிறந்த பொருளாதார கண்ணோட்டத்துடன் நடத்தி சென்று , இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயரச்செய்வார் என்பதே உண்மை. இன்றைய காங்கிரஸ் , திமுக இரண்டுமே அழிவின் விளிம்பிற்கு போய்விட்டன. அதற்கு ஊழலும், குடும்ப அரசியலும் முக்கிய காரணங்கள்.

    டூ- ஜீ வழக்கிலும், இன்னும்பிற வழக்குகளும் மத்திய அரசால் நடத்தப்படவில்லை. திரு சுப்பிரமணிய சாமி அவர்களின் வழக்கினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டாலும், மட்டுமே அந்த வழக்கில் பல உண்மைகள் வெளிவந்தன. டூ ஜி வழக்கில் நிச்சயம் குற்றவாளிகளில் சிலருக்காவது தண்டனை கிடைக்கும்.

    காங்கிரஸ் விரைவில் சின்னாபின்னமாகி அழியும். அந்த அழிவின் சிதறல்களில் இருந்து புதிய கட்சிகள் உருவாகும். ஆனால் இந்தியாவுக்கு அதிகபட்ச கெடுதல்களை செய்த தீய சக்தியாகவே காங்கிரஸ் கடைசிவரை திகழ்ந்தது. நகர்வாலாவில் ஆரம்பித்து , எமெர்ஜென்சி , மாருதி, போபார்ஸ், டூ ஜி, ஆதர்ஷ், நிலக்கரி- என்று அடுக்கி இன்னும் பல ஊழல் கோட்டைகளை கட்டும் முன்னர் மக்கள் சிறிது விழித்துக் கொண்டுவிட்டார்கள்.

    காங்கிரசில் ஊழல் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.( சிவராஜ் பாட்டில் போல ) ஆனால் பாஜகவில் ஊழல் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காங்கிரஸ் 50000 ஊழல். பாஜக 50 ஊழல். காங்கிரசில் ஊழலுக்கு தலைமையும் காரணம். பாஜகவில் ஊழல்களுக்கு தலைமை காரணம் அல்ல.

  3. இன்றைய மத்திய அரசைத் தாக்கி பிஜேபி கூறும் முக்கியக் குற்றச்சட்டு 2 G ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல்.

    பிஜேபி ஆட்சி அமைத்து, CBIக்கு முழு சுதந்திரம் வழங்கி முழு உண்மைகளையும் (2ஜி, நிலக்கரி ) கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்குமா என்பது எனது கேள்வி. மாறன் சகோதரர்கள் செய்த BSNL மோசடி தண்டிக்கப்படுமா என்பது எனது கேள்வி. CAG அறிக்கை அடிப்படையில் பல காங்கிரஸ் அரசு முறை கேடுகளை முறையான விசாரணை / வழக்குகள் மூலம் முறை கேடுகளுக்கு காரணமான காங்கிரஸ் அமைச்சர்கள் தண்டனை பெறுவார்களா என்பது எனது கேள்வி.

    இவை எதையுமே பிஜேபி அரசு அமைத்தால் செய்யாது என்பதே என் வாதம். பேருக்கு விசாரணை நடத்தி விட்டு ஏதோ ஒரு சில அதிகாரிகளுக்கு தண்டனை என்ற அளவிலேயே முடித்து விடுவார்கள்.

    பிஜேபியும் CBIயை தன் அரசியல் லாபங்களுக்காக பயன் படுத்தியே தீரும். வாஜ்பாய் அரசு முனைந்து செயல் பட்டிருந்தால் bofors வழக்கில் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்க முடியுமே? ஏன் செய்யவில்லை? ஏன் சோனியாவிற்கு அனுசரணையாக நடந்து கொண்டது?

    நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் அழுகிறேன் என்பது காங்கிரஸ் மற்றும் பிஜேபி நடத்தும் விளையாட்டு அரசியல். மக்களாகிய நாம் முட்டாள்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *