வியாசன் எனும் வானுயர் இமயம்

December 13, 2013
By

விசாலமான அறிவும், மலர்ந்த தாமரை இதழ் போன்ற விழிகளும் கொண்ட வியாசனே, உனக்கு வணக்கம். பாரதம் என்னும் எண்ணெயால் நிரம்பிய சிறந்த ஞான விளக்கை நீயல்லவோ ஏற்றினாய் !

–    கீதை தியான சுலோகம்

O Thou, venerable first of poets… O Author of this Song whose maxims transport the spirit to the eternal and divine heights of inexpressible felicity;  I incline myself profoundly before thee in one everlasting adoration for thy sacred words.

–    Friedrich Von Schlegel,  Indologist and Philosopher

morning_hindutvaகிழக்கும் மேற்கும் என்றென்றும் வணங்கித் துதித்துப் போற்றும் ஒப்பற்ற பெருந்தகை வியாசர். உலகின் மாபெரும் பழைய ஞானிகளின் மேற்கோள்களை சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், கன்பியூஷியஸ், லாவோட்சு என்ற பெயர்களுடன் பார்த்திருக்கிறோம். வியாசர் என்று பெயர் போட்டு நாம் எதையும் எடுத்துக் காட்டுவதில்லை. நமது தொல் ஞானம் முழுவதுமே ஒரு வகையில் வியாசரின் கொடை என்று  கருதுகிறோம்.   வ்யாஸோச்சிஷ்டம் ஜகத் ஸர்வம் – இவ்வுலக அறிவு அனைத்தும் வியாசனின் எச்சில்.

நமது சமய பாரம்பரியம் கீழ்க்காணும் மகரிஷிகள் அனைவரையும் ஒன்று போல வியாசர் என்றே அடையாளப் படுத்துகிறது.

 1. வேதங்களை ரிக்,யஜுர்,சாம,அதர்வண என்று நான்காகப் பகுத்த வேத வியாசர்
 2. மகாபாரதம் அளித்த கவி-ரிஷி கிருஷ்ண த்வைபாயனர்.
 3. பதினெட்டு புராணங்களையும், அவற்றுடன் கூடிய உப புராணங்களையும் இயற்றியவராகக் கருதப் படும் காவிய கர்த்தாவான வியாசர்
 4. வேதாந்த தரிசனத்தின் மூல நூல்களில் ஒன்றான பிரம்ம சூத்திரம் இயற்றிய பாதராயண வியாசர்.

புராணக்  கதைகளில் கால முரண்களும், பின் நவீனத்துவ உத்திகளும், எல்லாம் சாத்தியம். கதைத் தொடர்ச்சியும், காவியங்களுக்கு உட்பட்ட தர்க்கபூர்வமான ஒருமையும் வேண்டும் பொருட்டு வியாசர், பரசுராமர் போன்ற சிரஞ்சீவி கதை மாந்தர்களைக் குறித்து பற்பல புராணங்களில் பல்வேறு முரண்பாடு கொண்ட கதைகள் புனையப் பட்டுள்ளன. சென்னை நகரில் உள்ள வியாசர்பாடி என்ற ஊரில் வியாசர் வசித்தது போன்ற ஸ்தல புராணங்கள் கூட நம்மிடம் உண்டு! புராண அழகியலின் ஒரு பகுதியாகவே அவற்றைக் கருத வேண்டும். ஆனால் வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நால்வரும் ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. எனவே, பல கபிலர்கள், அகஸ்தியர்கள் போல வியாசர்களும் பல்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கக் கூடும்; வியாசர் என்பது ஒரு சிறப்பு அடைமொழி என்பது ஏற்புடைய ஒரு பொதுக் கருத்தாக உள்ளது.

மேற்கண்ட பட்டியலில் மூன்றாவது, நான்காவதாக உள்ள வியாசர்களை முதலில் எடுத்துக் கொள்வோம்.

புராணங்களில் உள்ள பல தொன்மங்கள் மிகப் பழமையானவை. ஆனால் புராண நூல்கள் இதிகாச காலத்திற்குப் பிற்பட்டவை. பொ.மு 2ம் நூற்றாண்டு முதல் பொதுயுகம் 6ம் நூற்றாண்டு வரை அவை பரிணமித்து வந்துள்ளன. ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களின் சில பகுதிகள் 9-10ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்றும் கருதப் படுகின்றன.  எனவே, சைவ, வைணவ, சாக்த சமயப் பிரிவுகளை வளர்த்தெடுத்த மகரிஷிகளே இவற்றை இயற்றிய “வியாசர்கள்” ஆக இருக்கக் கூடும்.

தத்துவ விவாத நடையில் உள்ள பிரம்ம சூத்திரம், சாங்கியம், யோகம் முதலான ஆறு தரிசனங்கள் தனித்த பிரிவுகளாக நிலைபெற்று விட்ட காலத்தைச் சேர்ந்தது. புத்தருக்குப் பிற்பட்டது என்ற கருத்தும் உள்ளது. ஆனால், இதை எழுதிய வேதாந்த ஞானியாகிய பாதராயணரையும்  வியாசர் என்றே மரபு அடையாளப் படுத்தி விட்டிருக்கிறது.

vedasஇந்த இருவரையும் தவிர்த்தால், முதல் இரண்டு வியாசர்கள் எஞ்சுகின்றனர்.  இதில் இரண்டாவதாக உள்ள கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது. “பாரதம் ஐந்தாவது வேதம்” என்ற வழக்கும் அது பற்றியே. எனவே வேதங்களை நான்காகப் பகுத்து, தனது நான்கு சீடர்களுக்கு வழங்கிய வேத வியாசரும் இவரும் ஒருவரே என்று கருத இடமிருக்கிறது. கலைந்தும், சிதறியும் கிடக்கும் மூத்தோர் சொற்களை நினைவிலிருந்து எடுத்து நெறிப்படுத்தி பகுத்து வைத்து பாகுபாப்பது ஒரு முக்கியமான அறிவுச் செயல்பாடாகவே பழங்காலத்தில் கருதப் பட்டிருக்கும். வியாச என்ற சொல்லுக்கு பகுத்தல், அமைத்தல், சீராக்குதல் என்ற அர்த்தங்கள் உண்டு.

கிருஷ்ண துவைபாயன வியாசர் பாடியது 8800 சுலோகங்களே கொண்ட மகாபாரதத்தின் முதல் வடிவமான “ஜெயம்” எனும் காவியம். அரசவம்ச கதைகளையும், வீரகதைகளையும் பாடும் சூதர்களிடமிருந்து கேட்ட கதைகளே இக்காவியத்தின் விதைகள் எனலாம். மகாபாரதத்தின் காவிய கட்டமைப்பை நோக்கும் போது, இதன் முதல் வடிவத்திலேயே ஒவ்வொரு பகுதியையும் விரிவு படுத்துவதற்கான சட்டகத்தையும் அவர் அளித்திருக்கிறார் என்று கருத இடம் உள்ளது.

பின்னர் அவரது சீடர்களான வைசம்பாயனர், லோமஹர்ஷணர், லோமஹர்ஷணரின் மைந்தரான உக்ரஸ்வரஸ் ஆகியோரும், அவரது புதல்வரான சுகரும் பாரதக் கதையை விரிவாக்கி மீள் உரைத்தனர். இப்படித் தான் மகாபாரதம் படிப்படியாக ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மாபெரும் நூலாக உருவெடுத்தது. இதற்கான அகச்சான்றுகள் மகாபாரதத்திற்கு உள்ளேயே உள்ளன. மற்றொரு சீடரான  ஜைமினி வழியாக வந்த பாரதம் பெரும்பாலும் வழக்கில் இல்லை. வியாசர் கூறுவதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதுவதாக உள்ள தொன்மம், வாய்மொழி மரபாகவே இருந்த மானுட அறிவு, முதன் முதலில் எழுத்து வடிவம் கொள்வதைக் குறிக்கிறது.

வசிஷ்ட மரபில் வந்த பராசர முனிவருக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர் கிருஷ்ண துவைபாயனர். கிருஷ்ண என்றால் கருப்பு நிறமுடையவர். துவைபாயனர் என்றால் “தீவில் வளர்ந்தவர்” அல்லது தீவின் வழி வந்தவர் என்று பொருள்.  யமுனை நதியிலுள்ள ஒரு தீவில் பிறந்து வளர்ந்தவர், அல்லது  நாவலந்தீவு (ஜம்பு த்வீபம்) என்று அழைக்கப் பட்ட அன்றைய பாரதவர்ஷம் முழுவதும் பயணம் செய்து வந்தவர் என்ற பொருளில் இப்பெயர் வந்திருக்கலாம்.

சத்யவதி பின்னர் குரு வம்சத்தில், பரத மன்னரின் மரபில் வந்த சாந்தனுவைத் திருமணம் செய்து கொண்டதால், வியாசரின் வாழ்க்கை குரு வம்சத்துடன் தொடர்பு கொண்டதாகிறது.  வியாசருடன் நியோக முறை மூலம் இணைந்து குரு வம்சத்து ராணிகள் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரைப் பெறுகிறார்கள். எனவே, பாண்டவர்கள், கௌரவர்கள் இருவருக்கும் மூதாதையாக இருப்பவர் வியாசர் என்றாகிறது.  இந்த அம்சம் வியாசரை இந்த வரலாற்றின்  இணைபிரியாத ஒரு பகுதியாக ஆக்குகிறது. இந்த வரலாறு இதிகாசமாக விரியும் போது, அதன் கதையை இயக்கும் சூத்திரதாரியாகவும், எந்த சார்புமின்றி சாட்சியாக நின்று நடந்ததைப் பதிவு செய்பவராகவும் ஆக்குகிறது. Meta fiction  போன்ற நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக உள்ளது பாரதத்தின் காவியச் செழுமை.

பாரதத்தில் வியாசர் தோன்றும் இடங்களை ஆராய்ந்து பார்த்தால், அதன் நோக்கம் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாகவோ, அல்லது அந்தத் தருணத்தில் ஏற்பட்ட ஒரு அறச் சிக்கலுக்கு விடையளிப்பதாகவோ இருக்கும்.

vyasa_ganapatiதிரௌபதி சுயம்வரத்திற்குப் பிறகு அவள் ஐவருக்கு மனைவி ஆவது தர்மமா என்று குழம்பி நிற்கும் இடத்தில் வியாசர் வந்து விளக்கம் அளிக்கிறார்.  ராஜசூய யாகத்தின் முடிவில் சிசுபால வதம் நிகழ்கிறது. அது ஒரு அபசகுனமோ என்று கவலை கொண்டிருக்கும் தருமனுக்கு வியாசர் அறிவுரை வழங்குகிறார். யுத்தம் உறுதி என்று இரு தரப்பும் முடிவு செய்த பிறகு திருதராஷ்டிரனிடம் வந்து வியாசர் பேசுகிறார். யுத்தக் காட்சிகளைக் கண்டு உரைக்கக் கூடிய ஞான திருஷ்டியை சஞ்சயனுக்கு வழங்குகிறார். போர்க்களத்திற்கும் வியாசர் வருகிறார். அபிமன்யு மரணத்திற்குப் பின் கலங்கி நிற்கும் பாண்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.  போரின் இறுதிக் கட்டத்தில் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் உலகை அழிக்கும் அஸ்திரங்களை ஏவ, இருவரையும் அமைதிப் படுத்தி அவற்றைத் திரும்பப் பெற அறிவுறுத்துகிறார்.  இப்படி வியாசர் வரும் இடங்கள் எல்லாம் உண்மையில் வியாசரின் பௌதீக வருகை அல்ல. மாறாக “கதாசிரியன் கதையில் தோன்றும் இடங்கள்” போன்ற ஒரு இலக்கிய உத்தியாகவும் இருக்கலாம்.

வியாசர் அருளிய ஞானத்தின் மணிமுடி கீதை. கிருஷ்ண துவைபாயனனும் கிருஷ்ண வாசுதேவனும் இரு தனித்த தெய்வீக அவதாரங்களானாலும், சிந்தனை அளவில் ஒருவரே தான். ஒரே தத்துவ ஞான விருட்சத்தின் இரு கிளைகள். தர்மத்தையும், மானுட வாழ்க்கையையும் குறித்த அவர்களது பார்வைகள் ஒன்றே. ஒருவர் மகரிஷியாக எதிலும் பற்றற்று, அதே சமயம் உலக நலனுக்காக தர்மத்தைப் போதித்துக் கொண்டே இருக்கிறார்.  மற்றொருவரும், எப்போதும் பற்றற்ற யோக சமநிலையுடன் இருந்து கொண்டு, நடைமுறையில் யாதவ மன்னனாக, பாண்டவர்களின் துணைவனாக, அதர்மத்தை அழிக்க போர்க்களத்தில் இறங்குகிறார்.  இந்த மண்ணின் அழியாத தெய்வீக ஞானம் இவர்கள் இருவரது சிந்தனையும் மொழியும் ஒன்று கூடும் மகத்தான தருணத்தில், பகவத்கீதையாக வெளிப் படுகிறது.

மனித அகத்தின் உன்னதங்களையும் கீழ்மைகளையும், போரின் வீரத்தையும், கோரத்தையும் அழிவையும் சம நிலையில் நின்று பிரமிப்பூட்டும் வகையில் பேசிச் செல்கிறது வியாசனின் கவிதை. உலகின் எல்லாப் பேரிலக்கியங்களையும் போல இறுதியில் எஞ்சுவது எது என்ற “அபத்த” தரிசனத்தையும் அது அளிக்கிறது தான். ஆனால் அதனோடு மட்டும் நின்று விடுவதில்லை. மகாபாரதத்தின் ஒவ்வொரு சொல்லும் தர்மம் என்ற எல்லையற்ற கருத்தாக்கத்தினை மானுட மனத்திற்கு அருகில் கொண்டு வரும் ஒரு சிறு அடிவைப்பு போல இருக்கிறது.

“கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை?

காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர்! தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை.. “

(ஸ்வர்க்க ஆரோஹணிக பர்வம், 5.62-63)

மானுட அறம் என்பதையே தனது சாரமான இறுதிச் செய்தியாக வியாசர் விட்டுச் செல்கிறார்.

வியாசரின் மகோன்னதமான அறிவுச் சுடரின் ஒளி  விண் நோக்கி எழுகிறது. வானம் அளாவுகிறது. ஆனால் அவரது விழிகளின் கருணை எப்போதும் மண்மீதும், மானுடம் மீதும் ஆழப் பதிந்திருக்கிறது. உணவூட்டி, உயிர்காக்கும் கங்கையும் யமுனையும் பிறக்குமிடம் இமயம். மண்மீது நிற்கும் அம் மாமலையின் முகடுகள் என்றென்றைக்குமாக வான் நோக்கி உயர்வது போல.

நாளை மீண்டும் சந்திப்போம்.

Tags: , , , , , , , , , ,

 

28 மறுமொழிகள் வியாசன் எனும் வானுயர் இமயம்

 1. T S Rajagopalan on December 13, 2013 at 9:38 am

  அருமை . வியாசரைப் பற்றிய புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது.

 2. ஹரி கிருஷ்ணன் on December 13, 2013 at 10:17 am

  வழக்கம்போல் சிறப்பாக எழுதியிருக்கும் ஜடாயுவுக்குப் பாராட்டுகள். ஆனால், கட்டுரையில் ஒரு சிறிய பிழை இருக்கிறது.

  “கிருஷ்ண துவைபாயன வியாசர் பாடியது 8800 சுலோகங்களே கொண்ட மகாபாரதத்தின் முதல் வடிவமான “ஜெயம்” எனும் காவியம்” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

  வியாச பாரதம், ஆதி பர்வம், முதல் படலத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது:

  “Ganesa, upon hearing this address, thus answered, ‘I will become the writer of thy work, provided my pen do not for a moment cease writing.” And Vyasa said unto that divinity, ‘Wherever there be anything thou dost not comprehend, cease to continue writing.’ Ganesa having signified his assent, by repeating the word Om! proceeded to write; and Vyasa began; and by way of diversion, he knit the knots of composition exceeding close; by doing which, he dictated this work according to his engagement.

  I am (continued Sauti) acquainted with eight thousand and eight hundred verses, and so is Suka, and perhaps Sanjaya. From the mysteriousness of their meaning, O Muni, no one is able, to this day, to penetrate those closely knit difficult slokas. Even the omniscient Ganesa took a moment to consider; while Vyasa, however, continued to compose other verses in great abundance.

  அதாவது, ‘பொருள் புரிந்து கொண்டுதான் எழுத வேண்டும்’என்று வியாசர் விதித்த நிபந்தனையின்படி, விநாயகரே புரிந்து கொள்ள சற்று அவகாசம் எடுத்துக் கொண்ட பாடல்களின் எண்ணிக்கைதான் 8800 என்பது. மொத்த வியாச பாரதமும் 8800 ஸ்லோகங்கள்தாம் என்று மூலத்தில் சொல்லப்படவில்லை.

  பின்வரும் சுட்டிகளையும் பார்க்கவும்: கிஸாரி மோஹன் கங்கூலி மொழிபெயர்ப்பு–
  http://www.sacred-texts.com/hin/m01/m01002.htm

  உங்கள் பணி சிறக்க, வாழ்த்துகள்

 3. andal on December 13, 2013 at 10:44 am

  பகவன் ஜெம்புதீவில் மட்டும் அவதாரம் செய்திருக்கமாட்டார் பல தேசங்களிலும் வியாசராக அவதாரம் செய்திருப்பார் அவ்வாறு நிகழ்வுகள் இருந்தால் கட்டுரை வாயிலாக ஆசிரியர் கூறலாம்

 4. ஜடாயு on December 13, 2013 at 10:45 am

  அன்புள்ள ஹரிகி, அது “பிழை” அல்ல. பல மகாபாரத ஆய்வாளர்களின் கருத்தும் அதுவே. “வியாசர் விட்டுச் சென்ற முடிச்சுக்களை பின்னால் வந்த வைசம்பாயனர் முதலியவர்கள் சிறிது சிறிதாக அவிழ்த்து பெரும் காவியமாக விரித்துரைக்கிறார்கள்” என்றும் நீங்கள் அளித்த சுலோகங்களை interpret செய்யலாம் இல்லையா?

  பண்டார்கர் ஓரியண்டல் ஆய்வு மையத்தில் இது குறித்து விரிவான ஆய்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். மகாபாரத சுலோகங்கள் அனைத்தும் அனுஷ்டுப் சந்தஸ் என்ற சந்தத்தில் உள்ளன. ஆனால் அவற்றில் 5-6 வகைகள் உள்ளன. சில வகைகளை பின்னால் வந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள். சுலோகங்களை விதவிதமான frequency analysis களுக்கு உட்படுத்தியும், அவற்றில் உள்ள சொற்பிரயோகங்களை ஆராய்ந்தும் இத்தகைய முடிவுகளை அவர்கள் வந்தடைந்தார்கள்.. வியாசர் இவ்வளவு குறைவான சுலோகங்கள் மட்டுமே தான் எழுதியிருப்பாரா என்று நாம் கவலை கொள்ளத் தேவையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. நேரடி சீடர்களின் வழி வெளிப்பட்டதும் அவரது பெரும் அறிவும் பேரருளுமே அல்லவா?

 5. கந்தர்வன் on December 13, 2013 at 11:01 am

  முக்கியமான சில கேள்விகளையும் வரலாறு குறித்த சில தரப்புகளையும் முன்வைக்கிறது இந்தக் கட்டுரை.

  // பதினெட்டு புராணங்களையும், அவற்றுடன் கூடிய உப புராணங்களையும் இயற்றியவராகக் கருதப் படும் காவிய கர்த்தாவான வியாசர்//

  வியாசர் புராணங்களை எழுதவில்லை, வேதத்தைத் தொகுத்தது போல அவற்றையும் தொகுத்துத் தந்தார் என்பதே நம் பழைய நூல்களில் பெரும்பாலும் காணப்படும் செய்தி. புராணங்களை உரைத்தது பிரம்மா, அதனை ரிஷிகள் மீள் உரைத்தனர் என்றே விஷ்ணு புராணத்திலும் உள்ளது. மத்ஸ்ய புராணத்தில் வெவ்வேறு கல்பங்களில் பிரம்மா புராணங்களை உரைக்கின்றார் என்றும் உள்ளது.

  // கிருஷ்ண துவைபாயனனும் கிருஷ்ண வாசுதேவனும் இரு தனித்த தெய்வீக அவதாரங்களானாலும், சிந்தனை அளவில் ஒருவரே தான். //

  ஆதி சங்கரரால் சஹஸ்ரநாம பாஷ்யத்தில் காட்டப்பட்டுள்ள பின்வரும் மகாபாரத சுலோகம் இங்கு பொருந்தும்:

  “க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்
  கோ ஹி அன்யஃ புண்டரீகாக்ஷாத் மஹாபாரதக்ருத் பவேத்”

  — கிருஷ்ணத்வைபாயனராகிய வியாசர் நாராயணனே என்று அறிவாய். தாமரைக் கண்ணனை அன்றி மகாபாரதத்தை வேறு யார் எழுதியிருக்க முடியும்?

 6. கந்தர்வன் on December 13, 2013 at 11:23 am

  // வியாசர் புராணங்களை எழுதவில்லை, வேதத்தைத் தொகுத்தது போல அவற்றையும் தொகுத்துத் தந்தார் என்பதே நம் பழைய நூல்களில் பெரும்பாலும் காணப்படும் செய்தி. //

  இதற்கான முக்கியத் தரவு:

  “ஏவம் அன்யானி ச புராணானி வ்யஸ்தானி ஆனேன வ்யாஸோ ப்ரஹ்மா” என்று ஆதி சங்கரர் விஷ்ணு ஸஹஸ்ரனாம பாஷ்யத்தில் கூறியிருப்பது.

 7. ஹரி கிருஷ்ணன் on December 13, 2013 at 11:49 am

  /“வியாசர் விட்டுச் சென்ற முடிச்சுக்களை பின்னால் வந்த வைசம்பாயனர் முதலியவர்கள் சிறிது சிறிதாக அவிழ்த்து பெரும் காவியமாக விரித்துரைக்கிறார்கள்” என்றும் நீங்கள் அளித்த சுலோகங்களை interpret செய்யலாம் இல்லையா?/

  எனில்,

  Even the omniscient Ganesa took a moment to consider; while Vyasa, however, continued to compose other verses in great abundance.

  என்ற வாக்கியத்தில், while Vyasa, however, continued to compose other verses in great abundance. என்ற பகுதிக்கு என்ன விளக்கம் அல்லது இன்டர்ப்ரடேஷன் கொடுக்கலாம்? 🙂

  முடிச்சைப் போட்டுவிட்டு அபரிமிதமாகப் பொழிவதைத் தொடர்ந்தார் என்றால், 8800 பாடல்களோடு நிறுத்திக் கொண்டார் என்று எப்படிப் பொருள் கொள்ள முடியும்.

  இந்த விஷயத்தில், மூலத்தை நேரடியாகப் பேசுவதே சரி. ஆய்வாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத்தான் நாம் வாரா வாரம் பார்க்கின்ற ஒரே உரையாசிரியர் சான்று தந்துவிடுகிறாரே!

 8. மாரியப்பன் on December 13, 2013 at 12:13 pm

  வைசம்பாயனார் ஜனமேஜய மஹாராஜாவுக்குக் கூறியது … மூலத்தில் உள்ள வரிகள்….

  ஆதி பர்வம் – அம்சாவதரண பர்வம் – அத்தியாயபம் – 62 – ஸ்ரீமஹாபாரத பர்வங்கள் – ம.வீ.ரா பதிப்பு

  மிகுந்த சக்தியுள்ள வியாஸர் இந்தக் கிரந்தத்தில் புண்ணிய கர்மம் செய்தவரைப் பற்றிய ஶ்லோகங்கள் நூறாயிரம் சொல்லியிருக்கிறார்….

 9. sarang on December 13, 2013 at 12:29 pm

  பாரதத்தின் முதல் வடிவம் ஜெய என்பதுதான். பாரதத்தில் பதினெட்டு அத்யாயங்கள் ,கீதையில் பதினெட்டு அத்யாயங்கள், ஜெய என்பது பதினெட்டை குறிக்கும் சொல்லே. கடபயாதி சந்க்ஹ்யா என்ற ஒரு முறை இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு அக்ஷரமும் ஒரு என்னை குறிக்கும் ஜெய என்பது 81 திருப்பிப்போட்டால் பதினெட்டு வரும். அக்காலத்தில் பதினெட்டு என்பது ஒரு மகத்தான விஷயத்தை குறிக்கும் எண்ணாக இருந்தது. இந்த பதிநேட்டை குறிக்கும் ஜெய தான் மூலம், அதன் பின் பாரதம் என்ற இருவத்தி நான்காயிரம் ஸ்லோகங்களை கொண்ட நூல், பின்னால் அது ஒரு லட்சத்தி இருபதாயிரம் ஸ்லோகங்களை கொண்ட மகா பாரதமானது

  மகாபாரதத்தை ஒரு முறை வாசித்தாலே எது பிற்சேர்க்கை என்பது தெளிவாகிவிடும்.

  பாதராயனருக்கும் ஜைமினிக்கும் நடக்கும் சம்வாதத்தை போல பிரம்ம சூத்திரத்தில் சில அதிகரனங்கள் உள்ளன. தேவாததிகரனத்தில் பாதராயன: சம்பவாத் என்ற சூத்திரத்தில் அவருக்கும் ஜைமினிக்கும் நடக்கும் வாத பிரதிவாதம் இடம் பெறுகிறது. இது ஒரு வேலை தன்னுடைய காலத்திற்கு முற்பட்ட ஜைமினியின் கருத்தை நிராகரிப்பதாகவும் இருக்கலாம்.

  பிரம்ம சூத்திரம் புத்தர் காலத்திற்கு பின்னதாக இருக்க வாய்ப்பில்லை, அதில் புத்தத்தின் ஒரு கருத்து கூட கையாளப்படவில்லை.

  வேதம் என்பதை த்ரயி வித்யா என்று தான் அழைத்தனர். ருக் யசுஸ் சாம என்ற மூன்றும் தான் த்ரயி வித்யாவில் அடக்கம். அதர்வண வேதம் அதர்வண ருஷியால் கையாளப்பட்டது. இவ்வேதத்தை வேத கோஷ்டியில் சேர்த்து சதுர்-வேதமாக்கியது வியாசரே.

 10. க்ருஷ்ணகுமார் on December 13, 2013 at 1:45 pm

  சமீபத்தில் தமிழ் ஹிந்து தளத்தில் வந்த படைப்பு மற்றும் தொடரும் பின்னூட்டங்கள் – இவற்றில் மிக அதிக மன நிறைவைத் தரும் படைப்பு இது என்றால் மிகையாகாது. அருமை.

  \\\ உலகின் எல்லாப் பேரிலக்கியங்களையும் போல இறுதியில் எஞ்சுவது எது என்ற “அபத்த” தரிசனத்தையும் அது அளிக்கிறது தான். \\\

  இதை மேற்கொண்டு விளக்க வேண்டும் என ஸ்ரீமான் ஜடாயு அவர்களிடம் விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  மஹாபாரதம் இறுதியில் எஞ்சுவது எது என்று சொல்லும் விஷயம் எது
  உலகின் மற்றொரு பேரிலக்கியம் இந்த விஷயம் பற்றி சொல்வது எது
  ஒற்றுமை. வேற்றுமை.

 11. R S Iyer on December 13, 2013 at 3:20 pm

  மிகவும் சுவாரஸ்யமான சிந்தனையைக் கிளரும் படைப்பு. மிக்க நன்றி. வேதவியாசர் என்ற பெயரில் 4 பேர் இருந்தே இருக்கவேண்டும் என்று சொல்வது மட்டும் நம்ப முடியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் எப்படி வேண்டுமானாலும் கருத்தை தங்களிஷ்டம்போல் எழுதக்கூடியவர்கள். வேதங்கள், உபநிஷத்துகள், பாரதம், பகவத்கீதை, ராமாயணம், புராணங்கள், இவை எல்லாவற்றையும் நாம் ஆழ்ந்து படித்தோமானால் அவற்றின் சாரமெல்லாம் பகவத்கீதை சொல்லும் தத்துவத்தை ஒட்டியே இருக்கின்றன. எனவே வேதங்கள், பாரதம், புராணங்கள், ப்ரஹ்மசூத்ரம், இவற்றை தொகுத்தவர்/ அல்லது இயற்றியவர் ஒருவராகவே இருந்திருக்கலாம் என்று ஏன் எண்ணக்கூடாது? எனவே 4 வெவ்வேறு வியாசர்கள் இருந்திருக்கக்கூடும் என்று சொல்லமுடியுமே தவிர கட்டாயம் அப்படித்தான் இருந்திருக்கமுடியும் என்பது ஒப்புக்கொள்ள முடியவில்லை!

 12. பா.மாரியப்பன் on December 13, 2013 at 3:51 pm

  1) ஜயம் என்ற பெயர் குறித்த கேள்வி

  ஆதி பர்வம் முதலாவது அத்தியாயம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.

  புருஷோத்தமர்களாகிய நரநாராயணர்களையும் ஸரஸ்வதி தேவியையும் வியாஸரையும் நமஸ்கரித்துப் பிறகு ஜயத்தை ஒருவன் சொல்லக்கடவன்.

  ஆதி பர்வம் – அம்சாவதரண பர்வம் (அறுபத்திரண்டாவது அத்தியாயம்) கீழ்க்கண்டவாறு வருகிறது.

  இந்த இதிஹாஸம் ஜயமென்று சொல்லப்பட்டது. ஜயிக்க விரும்புகிறவன் இடைக் கேட்க வேண்டும்;

  இவைகளை மட்டும் கொண்டு பாரதத்திற்கு முதலில் வழங்கிய பெயர் ஜயம் என்ற முடிவுக்கு வருவது சரியா؟

  இவைகளிலிருந்து ஜயம் என்ற பெயர் சொல்லப்பட்டது உண்மை. ஆனால் ஆதி முதல் ஜயம்தான் அதற்குப் பெயர் என்ற திட்டவட்டமான முடிவுக்கு வர முடியுமா؟ யூகம் கொள்ளலாம். தவறில்லை. ஆனால் ஆய்வு முடிவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

  2) எண்ணிக்கை குறித்து.. வியாஸர் விநாயகரிடம் தனக்கு 8800 சுலோகங்கள் தனக்குத் தெரியும் என்று சொன்னார் என்ற வரி வருகிறது. அதைத் தொடர்ந்து வியாஸர் அறுபது லட்சம் கிரந்த ஸங்கியையுள்ள வேறோர் இதிஹாஸமாகச் செய்தார் என்றும் வருகிறது. இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமே؟ ஒரு வரியை மட்டும் பிடித்துக் கொண்டு 8800 சுலோகங்கள் தான் வியாஸர் சொன்னார் என்ற முடிவு எந்த அளவுக்கு உண்மை؟

  ஆதி பர்வம் முதலாவது அத்தியாயம்

  அப்போது வியாஸர் விக்நேஶ்வரருக்குப் பூஜை செய்து, வீற்றிருந்த அவரை நோக்கி, ‘கணநாதரே! மனத்தில் முன்னமே அமைக்கப்பட்ட இந்தப் பாரதத்தை இப்போது நான் சொல்லுகிறேன்; நீர் இதை எழுத வேண்டும்’ என்று பிரார்த்தித்தார்.

  விநாயகர், ஸம்மதித்து எழுதத் தொடங்கினார். அப்போது மஹரிஷியானவர் விளையாட்டாகவே கிரந்தத்தில் பொருள் விளங்காத பாகமாகிய முடிச்சை அமைத்தார். அது விஷயத்தில், த்வைபாயன மஹரிஷி, ‘எண்ணாயிரத்து தெண்ணூறு சுலோகங்கள் எனக்குத் தெரியும்; சுகருக்குத் தெரியும்; ஸஞ்சயனுக்குத் தெரியுமோ தெரியாவே’ என்று பிரதிஜ்ஞை செய்திருக்கிறார்.

  த்வைபாயன மஹரிஷி இந்தப் பாரதத்தை முதலில் தம்முடைய புத்திரராகிய சுக மஹரிஷிக்குக் கற்பித்தார். அந்தப் பிரபுவான வியாஸர், பின்பு தகுந்த மற்றச் சிஷ்யர்களுக்கும் சொல்லி வைத்தார். அவர் அறுபது லட்சம் கிரந்த ஸங்கியையுள்ள வேறோர் இதிஹாஸமாகச் செய்தார். அதில் முப்பது லட்சம் கிரந்தங்கள் தேவ லோகத்தில் நின்றன; பதினைந்து லட்சம் கிரந்தங்கள் பிதிர் லோகத்திலும், பதினான்கு லட்சம் கிரந்தங்கள் இராட்சஸர்கள் யக்சர்களிடத்திலும், வெளியடப்பட்டு நின்றன; ஒரு இலட்சம் மட்டும் மனுஷ்யர்களிடம் நின்றன. நாரதர் தேவர்களுக்குச் சொன்னார். அஸிதரும் தேவலரும் பிதிர்க்களுக்குச் சொன்னார்கள். கந்தர்வர்களுக்கும் ராட்சஸர்களுக்கும் யக்சர்களுக்கும் சுகர் சொன்னார். வியாஸருடைய சிஷ்யரும் தர்மத்திலேயே மனமுள்ளவரும் வேதமறிந்தவர்களெல்லாரிலும் சிறந்தவருமாகிய வைசம்பாயனரென்பவர், இந்த மனுஷ்ய லோகத்தில் வெளிப்படுத்தினார். பரிட்சித்தின் புத்திரரும் மஹாத்துமாவுமான ஜனமேஜய ராஜாவுக்கு வைசம்பாயனரென்னும் பிரமரிஷி சொன்ன லட்சத்தையும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்;

  3) ஒரு கட்டுரை படித்த ஞாபகம்…. பகவத்கீதை இடைச்செருகல் என்று…

  ஆதி பர்வம் முதலாவது அத்தியாயம்

  முனிஶ்ரேஷ்டராகிய கிருஷ்ணத்வைபாயனர் உலகங்களுக்கெல்லாம் நன்மைக்காகக் கருணையினாற் பாபத்தைப் போக்கத்தக்க உபநிஷத்தென்று சொல்லப்பட்ட பகவத்கீதையை இந்தப் பாரதத்திற் சொன்னார்.

  முன்பு, தேவர்களெல்லாரும் சேர்ந்து நான்கு வேதங்களை ஒரு தட்டிலும் பாரதத்தை ஒரு தட்டிலுமாக வைத்துத் தராசில் நிறுத்தினர். உபநிஷத்துக்களடங்கிய நான்கு வேதங்களைக் காட்டிலும் பாரதம் அதிகமாகவிருந்தது. அது முதல் இவ்வுலகத்தில் இது மஹாபாரதமென்று சொல்லப்படுகிறது.

  4) ஒருவர் பேசும் தமிழே ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டிருக்கிறது. பத்து இருபது வருடங்களுக்கு முன் என்னுடைய அம்மாவும் அப்பாவும் ஆங்கிலச் சொற்களை கலக்காமல்தான் பேசினார்கள். இப்போது அவர்கள் பேசுவதே வேறு. வியாஸர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்தவர். அப்படி இருக்க இந்த சுலோக அதிர்வுகளின் மாறுபாடுகளை வைத்து எப்படி பிறரால் விரிவாக்கப்பட்டது என்று கொள்ள முடியும்؟ வியாஸருடைய மொழியே காலத்திற்குத் தகுந்தபடி மாறிக் கொண்டிந்திருக்கலாம் அல்லவா؟ நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழும் இப்பொழுது இருப்பதும் ஒன்றா؟ நம்முடைய தாத்தா ஐம்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பேசுவதுபோலவா தமிழ் பேசினார்؟

  யூகத்தின் அடிப்படையில் நாவல்கள் எழுதலாம். சுவாரசியமாக அதை நாம் படித்து ரசிக்கலாம். அவ்வளவுதான்…..

 13. ஜடாயு on December 13, 2013 at 4:42 pm

  மாரியப்பன், நம்மிடம் உள்ள மகாபாரத பிரதியிலுள்ள வரிகளை மட்டும் வைத்துக் கொண்டு அது குறித்த *வரலாற்று ஆய்வு* செய்ய முடியாது. சில இலக்கில்லாத ஊகங்களை நிகழ்த்தலாம். அவ்வளவு தான். மகாபாரதம் ஒரு லட்சமும் கிருஷ்ண துவையானர் ஒருவரே செய்தார் என்பதை “அறுதியிட்டு” கூறும் எல்லாருக்கும் இதை சொல்லிக் கொள்கிறேன்.

  இந்தியா முழுவதும் பல இடங்களில் மகாபாரத சுவடிகள் கிடைத்துள்ளன. இவற்றை தொகுத்து முழுமையான பாடங்களாக ( recension) ஆக்கியதே ஒரு மாபெரும் பணி. பிறகு அதிலிருந்தும் ஆதாரபூர்வமான சுலோகங்களை கண்டெடுத்து critical edition என்று வெளியிட்டுள்ளனர். இதற்குப் பின்னால் பல பத்தாண்டுகள் உழைப்பும், பல நூறு பக்கங்களுக்கு விரியும் ஆய்வுகளும் உள்ளன. Dating the Mahabharata போன்ற முழு நீள நூல்கள் உள்ளன. இது எல்லாவற்றையும் ஒரு சிறிய கட்டுரையில் நான் எப்படி விளக்குவது? தேடல் கொண்டவர்கள் தேடிப் படித்துக் கொள்ள வேண்டும்.

  இங்கு மறுமொழியிட்டுள்ள கந்தர்வன், சாரங்க் இருவரும் சம்ஸ்கிருத அறிஞர்கள். மரபு மீது பெருமதிப்பு கொண்டவர்கள். நான் கூறிய அந்தக் கருத்தை அவர்களும் ஏற்றுள்ளனர் என்பதைக் கவனிக்கவும். சாரங் “ஜெயம்” குறித்து கூறிய முக்கியமான விளக்கத்தையும் பார்க்கவும்.

  பி.கு: frequency analysis என்பது சுலோகத்தின் “அதிர்வுகள்” அல்ல. ஒரு குறிப்பிட்ட அனுஷ்டுப் சந்தஸ் வகைகள், குறிப்பிட்ட சொல்/வழக்கு பிரயோகங்கள் எந்தெந்த இடங்களில் எத்தனை முறை வருகிறன்றன, சில குறிப்பிட்ட பர்வங்களில், பகுதிகளில் மற்றதை விட அதிகமாக/குறைவாக வருகின்றனவா போன்றதை எல்லாம் அளவீடு செய்யும் தீவிரமான ஆய்வுகள் அவை.

 14. கந்தர்வன் on December 13, 2013 at 5:16 pm

  // நான் கூறிய அந்தக் கருத்தை அவர்களும் ஏற்றுள்ளனர் என்பதைக் கவனிக்கவும். சாரங் “ஜெயம்” குறித்து கூறிய முக்கியமான விளக்கத்தையும் பார்க்கவும். //

  இதை உபந்யாசகர்கள் கூட ஏற்கின்றனர், உபன்யாச மேடையிலும் அவர்கள் கூறி ஒளிப்பதிவு கூட செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாபாரதத்திற்கு எந்த விதமான களங்கமும் இல்லை.

  Critical edition கொண்டு வந்ததில் பல பத்தாண்டுக்காலம் பிரயத்தனம் அடங்கியுள்ளமை உண்மையே. ஆனால் இந்திய மரபுகளை ஐரோப்பியப் பார்வையில் ஆய்வு செய்யும் போக்கு இதில் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் கூற முடியாது. பல இடங்களில் எந்திரத்தனமாக சுவடிகளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு மட்டுமே சுலோகங்களின் ப்ராமாண்யத்தை (authenticity-ஐ) நிர்ணயித்திருப்பது ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் இந்தியச் சுவடிகள் குறித்த தட்டையான பார்வையே பிரதிபலிக்கிறது. சுவடிகளின் தரம், சுவடி எடுக்கப்பட்ட களஞ்சியத்தின் தரம், மற்றும் பூர்வர்கள் கையாண்ட பல பாடபேதங்களை முற்றிலுமாக ‘பிற்சேர்க்கை’யில் தள்ளியிருப்பது மிகவும் துரதிஷ்டம். ஆகையால், இந்த critical edition-ஐ ஆய்வில் ஒரு துணையாகக் கொள்ளலாமே தவிர, அதைக் கேள்விக்குட்படுத்தாமல் வேதவாக்காக ஏற்பது அவ்வளவு சரியல்ல.

  // இங்கு மறுமொழியிட்டுள்ள கந்தர்வன்… சம்ஸ்கிருத அறிஞர். //

  இதை மறுக்கிறேன்; நான் ஆரம்பநிலை மாணவன் தான். கொஞ்சம் படித்ததுண்டு, படித்துக்கொண்டிருக்கிறேன்… ஆர்வமும் வளருகிறது அவ்வளவு தான்.

 15. ஜடாயு on December 13, 2013 at 5:32 pm

  கந்தர்வன், க்ரிடிகல் எடிஷன் விஷயத்தில் // ஐரோப்பியப் பார்வையில் ஆய்வு செய்யும் போக்கு // என்பதை விட முற்றிலும் புறவயமான (objective), அளவீட்டு ரீதியான (quantitative) அறிவியல் நோக்கு என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கீறேன். பழைய பைபிள் பிரதிகள், கிரேக்க ரோமானிய சுவடிகள், சீனாவின் பழைய ஆவணங்கள் விஷயத்திலும் இத்தகைய முறையைத் தான் உலகெங்கும் கடைப் பிடித்துள்ளார்கள்.

  இதில் உள்ள ஆபத்து என்பது நீங்கள் சரியாகவே குறிப்பிட்டது போல, மிக முக்கியமான, அழகான சுலோகங்களும் பிற்சேர்க்கையில் தள்ளப் படுவது தான்.. அதனால் தான் அந்த எடிஷனை ஆய்வாளர்களே அதிகமாக பயன்படுத்துகிறார்கள். பொது வாசகர்கள் கிசாரி மோகன் கங்குலியின் பதிப்பையும், கும்பகோணம் பதிப்பையும் தான் சார்ந்திருக்கிறார்கள்.

 16. பா.மாரியப்பன் on December 13, 2013 at 6:22 pm

  திரு.ஜடாயு

  பதிலளித்தமைக்கு மிக்க நன்றி. மஹாபாரதத்தை வைத்து விவாதம் நடத்தும் அளவுக்கெல்லாம் எனக்கு அறிவில்லை. நான் ஒரு அடிநிலை மாணவன்தான். ஆதலால் கேள்விகள் மனதில் எழுகின்றனவே? என்ன செய்ய? என்னைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக கீழ்க்கண்ட கேள்விகள். தவறிருந்தால் மன்னிக்கவும்.

  கிருஷ்ண துவைபாயனர் ஒரு இலட்சம் சுலோகங்களைச் செய்தார் என்று அறுதியிட்டு சொல்வது தவறென்றால் செய்யவில்லை என்ற முடிவும் தவறல்லவா?

  திரு.கந்தர்வன் அவர்கள் சொல்வதுபோல இது போன்ற ஆய்வு முடிவுகளால் மஹாபாரதத்துக்கு எந்தவித களங்கமும் வரப்போவதில்லை.

  ஜய என்பது பதினெட்டு என்பதைக் குறிக்கிறது. மஹாபாரதத்திற்கு ஜயம் என்ற பெயர்க்காரணமும் புரிகிறது. ஊகிக்கலாம். தவறில்லை. ஆனால் இதுதான் அதன் முதல் பெயர் என்பதை எவ்வாறு அறுதியிட்டு கூறுகிறார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. இதைப்பற்றி ஒரு சிறிய விளக்கம் தந்தால் தெரிந்து கொள்வேன்.

  நீங்கள் சொல்லிய விளக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சந்த வகைகளையும் சொல் பிரயோகங்களையும் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியுமா?

  அன்புள்ள
  பா.மாரியப்பன்

 17. ரங்கன் on December 13, 2013 at 7:41 pm

  இங்கு கட்டுரை எழுதுபவர்கள் பின்னோட்டம் ( ஆதரவு – எதிர்ப்பு ) இடுபவர்கள் அனைவரும் – அப்பப்பா !! என்ன விஷய ஜ்ஞானம் !!! 60 வயதில் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பதை நினைத்தால் அவமானமாக உள்ளது. தமிழ் ஹிந்து தளம் நன்கு மென்மேலும் வளர என் அன்னை காமாட்சியை வணங்கி வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.

 18. Prassannasundhar N on December 13, 2013 at 9:30 pm

  // இப்படி வியாசர் வரும் இடங்கள் எல்லாம் உண்மையில் வியாசரின் பௌதீக வருகை அல்ல. மாறாக “கதாசிரியன் கதையில் தோன்றும் இடங்கள்” போன்ற ஒரு இலக்கிய உத்தியாகவும் இருக்கலாம்.//

  அன்புள்ள ஜடாயு சார்,
  ஒரு சிறிய ஐயம். வியாசர் உண்மையிலே கதை மாந்தர்களுள் ஒருவராக இல்லாமல் இருந்திருந்தால் பாரதமே ஒரு புனைவு என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும் அல்லவா? ஒரு மகரிஷி தான் வாழ்ந்த காலத்தில் தனக்கு சரிசமமான இரண்டு பேரக் குழந்தைப் பிரிவினரின் பங்காளி சண்டையை தர்மத்தின் பக்கம் மட்டும் நின்று நோக்கி இவ்வுலகுக்கு அளித்தார் என்னும் எண்ணப்பாடு இந்த இதிகாசத்தை தூக்கி நிறுத்துகிறது. இதிஹாசமென்பதே இது இவ்வாறு நிகழ்ந்தது எனும் அர்த்தமுடைய சொல் தான் என்று சிறியேன் கேள்விப்பட்டுள்ளேன். தவிர பல்வேறு பர்வங்களில் சொல்லப்பட்டிருக்கும் க்ரஹ நிலைகளெல்லாம் துல்லியமாக கூறப்பட்டுள்ளது. ஒரு புனைவுக் கதை என்றால் தருமன் இந்த மாசத்தில், இந்த வருஷத்தில், இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தான் என்பது வரையிலா புனையப்பட்டிருக்கும்? யுத்தத்திற்கு முன்பு எழும் கிரஹணம் போன்ற விஷயங்களும் மிகவும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளன.

  அவ்வாறிருக்கையில் வியாசர் வரும் இடங்கள் எல்லாம் உண்மையில் வியாசரின் பௌதீக வருகை அல்ல என்றும் கதாசிரியன் கதையில் தோன்றும் இடங்கள் போன்ற இலக்கிய உத்தியாகவும் இதைக் காண்பது ஒரு உண்மையான வரலாற்றை புனைவு என்னும் அளவுக்கு சுருக்குவதாகாதா? தாங்கள் ஏன் இப்படி ஒரு கருத்தை முன்வைத்தீர்கள்? என்று அறிய ஆவலாக உள்ளேன் ஐயா!

 19. ஜடாயு on December 13, 2013 at 10:35 pm

  பிரசன்னா, வியாசர் பாண்டவ கௌரவர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர் தான். “இந்த வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கிறார்” என்று அதனால் தான் குறீப்பிட்டேன்.

  ஆனால், மகாபாரத நூலில் வியாசர் வரும் *எல்லா* இடங்களும் அவரது நேரடியான வருகை அல்ல என்பதே நான் சொல்ல விழைந்தது. மகாபாரதம் முற்றீலும் புனைவு என்பதாக அல்ல.

 20. ariyan on December 14, 2013 at 3:27 am

  தாய் மீனவ பெண்மணி – தந்தையோ பிராமணர் – இவர்களுக்கு பிறந்த வியாசர் வேதங்களை நமக்கு தொகுத்து வழங்கினார் ! அப்போதே சாதி மறைந்து விட்டது ! அவர் தொகுத்து வழங்கிய வேதங்கள் தான் இன்று கோயில்களில் பாராயணம் செய்யபடுகிறது ! பிராமணர்களும் ஓதுகிறார்கள் !

 21. gopi on December 14, 2013 at 12:09 pm

  vyas is still a surname for gujarati and rajasthan brahmins. eg.girija vyas, jai narayan vyas. may be they are many people with the same vyas surname.

 22. yogi on December 14, 2013 at 12:57 pm

  vijai tv மகாபாரதம் தொடர் நன்றாக இருக்கிறது ..பாருங்கள்

 23. Geetha Sambasivam on December 14, 2013 at 2:36 pm

  நல்லதொரு பகிர்வு. புதிய விஷயங்களையும் விளக்கங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

 24. kavuniyan on December 14, 2013 at 3:04 pm

  I don’t mean to distract the reader from the main thrust of this post; however the exchange of views regarding the so-called critical edition (of the Mbh) prompts me to direct the interested reader to a very thought provoking post by Prof. Arvind Sharma. See,

  http://arvindsharma.wordpress.com/2008/12/01/39-more-on-the-critical-text-of-the-mahabharata/

  p.s. Incidentally, Prof. Sharma’s works are crying out to be translated into Indian languages so that they can reach a wider (and arguably more interested) audience.

 25. mithran on December 19, 2013 at 9:43 pm

  வணக்கம். வியாசர் மகாபாரதம் இயற்றினரா (அதாவது 1 லட்சம் ஸ்லோகம் இயற்றினரா ) என்பதை ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் மிக அருமையாக கூறியுள்ளார் . மேலும் வியாச விஜயம் என்ற நூலும் இயற்றி உள்ளார். அதில் இது போன்ற கேள்விகளுக்கு மிக அருமையாக விளக்கமும் கூறியுள்ளார் . Please refer that.

  Basically it is totally our (human) perception stating he might not done 1 lakh slokas. just for our example if 1 gb can store 300 to 400 mp3 ..some people who doesnt know MP3 flexibility will say it is not all possible..it is his perception..

  As per swamigal Krishna Dwaipayan vysasa Bhagavan done 1 lakh slokas of mahabharata… he is bhagavaan.. his disciples just learned all those and spreaded…Sri Suka Bhagavan (His Son) took only Bhagavatha MahaPuraan and Spread the same.

 26. கோபால்சாமி on December 14, 2016 at 3:42 pm

  கோபால்சாமி ஆகிய நான் வேத வியாசரின் வழிபாட்டு தளம் கட்டலாம் என்று இருக்கிறேன். வியாசரின் விக்ரஹம் எப்படி இருக்கவேண்டும். கோவில் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வேண்டுகிறேன்

 27. கெனேசு on July 11, 2017 at 4:19 pm

  இதுவரையில் 28 வ்யாஸர்கள் தோன்றியுள்ளனர்
  *******************************************************************
  இப்பொழுது நடக்கும் ச்வேத வராஹ கல்பத்தில் ,இதுவரையில் 27 சதுர் யுகங்கள் முடிந்து இப்பொழுது 28 ஆவது சதுர் யுகத்தில் உள்ளோம். ஒவ்வொரு சதுர் யுகந்தோறும் நடக்கும் துவாபரயுகத்தில் ஒரு வியாசர் தோன்றி ஒன்றாய் இருக்கும் வேதத்தினை ,ருக் ,யஜுஸ் ,ஸாமம் ,அதர்வணம் என நான்காகப் பகுக்கின்றார் .

  த்வாபரே ப்ரதமே வ்யாஸ ஸ்வயம் வேதஸ்வயம்புவா |
  த்விதீயே த்வாபரே சைவ வேதவ்யாஸ ப்ரஜாபதி: || விஷ்ணுபுராணம் 3-3-11
  த்ருதீயே ச உஸநா வ்யாஸ சதுர்தே ச ப்ருஹஸ்பதி: |
  ஸவிதா பஞ்சமே வ்யாஸ ஷஷ்டே ம்ருத்யு ஸ்ம்ருத ப்ரபு: ||3-3-12

  த்ருதீயே ச உஶநா வ்யாஸ சதுர்தே ச ப்ருஹஸ்பதி: |
  ஸவிதா பஞ்சமே வ்யாஸ ஷஷ்டே ம்ருத்யு ஸ்ம்ருத ப்ரபு: ||3-3-13
  முதல் துவாபரயுகத்தில் வியாசர் – நான்முகன்
  இரண்டாம் துவாபரயுகத்தில் வியாசர் – பிரஜாபதி
  மூன்றாம் துவாபரயுகத்தில் வியாசர் – சுக்ராசார்யார்
  நான்காம் துவாபரயுகத்தில் வியாசர் – ப்ருஹஸ்பதி
  ஐந்தாம் துவாபரயுகத்தில் வியாசர் – சவிதா (சூரியன்)
  ஆறாம் துவாபரயுகத்தில் வியாசர் – எமதர்மன்
  ஏழாம் துவாபரயுகத்தில் வியாசர் – இந்திரன்
  எட்டாம் துவாபரயுகத்தில் வியாசர் – வசிஷ்டர்
  ஒன்பதாம் துவாபரயுகத்தில் வியாசர் – ஸாரஸ்வதர்
  பத்தாம் துவாபரயுகத்தில் வியாசர் – த்ரிதாமா
  பதினொன்றாம் துவாபரயுகத்தில் வியாசர் – த்ரிசிகர்
  பன்னிரண்டாம் துவாபரயுகத்தில் வியாசர் – பரத்வாஜர்
  பதின்மூன்றாம் துவாபரயுகத்தில் வியாசர் – அந்தரிக்ஷர்
  பதினான்காம் துவாபரயுகத்தில் வியாசர் – வர்ணீ
  பதினைந்தாம் துவாபரயுகத்தில் வியாசர் – த்ரைய்யாருணர்
  பதினாறாம் துவாபரயுகத்தில் வியாசர் – தனஞ்ஜயர்
  பதினேழாம் துவாபரயுகத்தில் வியாசர் – க்ரதுஞ்ஜயர்
  பதினெட்டாம் துவாபரயுகத்தில் வியாசர் – ஜயஸ்ம்ருதர்
  பத்தொன்பதாம் துவாபரயுகத்தில் வியாசர் – கௌதமர்
  இருபதாம் துவாபரயுகத்தில் வியாசர் – ஹர்யாத்மா
  இருபத்தொன்றாம் துவாபரயுகத்தில் வியாசர் – வாஜஸ்ரவர்
  இருபத்திரண்டாம் துவாபரயுகத்தில் வியாசர் – ஸோமசுஷ்காயனர்
  இருபத்துமூன்றாம் துவாபரயுகத்தில் வியாசர் – த்ருணபிந்து
  இருபத்துநான்காம் துவாபரயுகத்தில் வியாசர் – பார்கவர்
  இருபத்தைந்தாம் துவாபரயுகத்தில் வியாசர் – வால்மீகி
  இருபத்தாறாம் துவாபரயுகத்தில் வியாசர் – சக்தி(வசிஷ்டர் மகன்)
  இருபத்தேழாம் துவாபரயுகத்தில் வியாசர் – ஜாதுகர்ணர்
  இருபத்தெட்டாம் துவாபரயுகத்தில் வியாசர் – அதாவது
  இப்பொழுது நடக்கும் துவாபரயுகம் மற்றும் கலியுகத்திற்கு வியாசர் – க்ருஷ்ணத்வைபாயனர் (பராசரர் மகன் -மஹாபாரதம் எழுதியவர்.)
  ஜாதுகர்ணோ பவந்மத் த க்ருஷ்ணத்வைபாயநஸ் தத:|
  அஷ்டாவிஶதிரியேதே வேதவ்யாஸா: ப்ரகீர்திதா: || 3-3-19
  பவிஷ்யே த்வாபரே சாபி த்ரௌணிர்வ்யாஸோ பவிஷ்யதி | 3-3-21
  இருபத்தொன்பதாம் (அடுத்து இனி வரப்போகும்) துவாபரயுகத்தில் வியாசர் – அச்வத்தாமா (த்ரோணர் மகன்) .

  18 புராணங்கள் அருளிச் செய்ததும்
  மஹாபாரதம் அருளிச் செய்ததும் ,
  அத்யாத்ம ராமாயணம் அருளிச் செய்ததும் ,
  மஹாபாரத கில பாகமான ஹரிவம்ச மஹாபுராணம் அருளிச் செய்ததும் ,
  பிரம்மசூத்ரங்கள் அருளிச் செய்ததும் இப்பொழுதுள்ள க்ருஷ்ண துவைபாயன வ்யாஸர்தான் .

  வ்யாஸரின் சீடர் ஜெமினி அருளிய 16 அத்யாயங்கள் கொண்ட பூர்வ மீமாம்ஸையும்
  வ்யாஸரே அருளிய 4 அத்யாயங்கள் கொண்ட உத்தர மீமாம்ஸையும் (பிரம்மசூத்ரங்கள்) சேர்ந்து சாரீரக சாஸ்திரம் என்பர் வைதீகர்கள் .

  இவண்,
  கெனேசு

 28. கோபால்சாமி on June 13, 2019 at 4:05 am

  வியாசரை நான் கனவில் கண்டு வாழ்த்து‌ பெற்றேன் அன்றிலிருந்து நன்மைகள் நடைபெறுகிறது
  அவருக்கு ஆலயம் கட்ட நினைக்கிறேன் நடக்குமா

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*