ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி

ஸ்ரீகண்டியை நான் முதலில் பார்த்தது மத்திய ஜாவாவின் முக்கிய நகரான செமராங்கின் (Semarang) அஹமத்யானி விமானநிலையத்தின் உள்ளே கலைப்பொருள்களை விற்கும் ஒரு கடையில். 1996 மே மாத இறுதியில் இந்தோநேசியாவில் வேலைக்குப் போன புதிதில் அந்த நாட்டின் பல பகுதிகளில் ஆலைகளைக் கொண்டிருந்த என் கம்பெனியில் அறிமுகப்படலம் என்று ஓரியன்டேஷனுக்காக சுற்றிக் கொண்டிருக்கையில்.

போர்க்கோலத்தில் ஓர் இளைஞன் வில்லேந்திய அழகிய இளம்பெண்ணைத் தழுவியவாறு தொடையில் அமர்த்தி நிற்கும் அந்த வினோத பொம்மையைப் பார்த்தவாறு நின்றிருந்தேன். உடன் அருகில் வந்த விற்பனைப்பெண் வாங்குகிறீர்களா என்று வினவ விலை மலைக்கும்படி இருந்ததால் மறுத்தாலும் இதில் இருப்பது யார் என்று கேட்டேன்.

அர்ஜுனனும் ஸ்ரீகண்டியும் என்றாள் அந்தப்பெண். அட சிகண்டி!

சிகண்டியா என்று அதிசயித்துக் கேட்க ‘ஸ்ரீகண்டி! அர்ஜுனன் மனைவி’ என்றாள்.

srikandi_java_1சிகண்டி அர்ஜுனன் மனைவியா! இது என்னடா நான் அறிந்திராத பாரதக்கதையாய் இருக்கிறதே என்று திகைத்து நின்றேன்.

பின்னர் ஜாவாவில் நான் வாழ்ந்திருந்த பத்துவருடங்களில் அந்த நாட்டின் கவி என்ற பண்டைமொழியில் எழுதப்பட்ட ஜாவானிய மஹாபாரதம் நான் அறிந்திராத அதன் பல கிளைக்கதைகளுடன், சிகண்டி, அரவான், கடோத்கஜன், அபிமன்யு, சாம்பன் என்று அதிநுணுக்கமாய் ஒவ்வொரு பாத்திரத்துடனும் விரிய விரிய வியப்பிலாழ்த்திக் கொண்டேயிருந்தது.

இன்று அம்பையின் கதையை ஜெயமோகனின்  வெண்முரசு மகாபாரத நாவலில் படித்த உணர்வு மிகுதியில் ஜாவானிய ஸ்ரீகண்டி என்னை எழுதத்தூண்டினாள்.

அம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் ஸ்ரீகண்டியின் கதையைத்தான்.

நம்மூரில் குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி என்றால் ஒட்டுமீசை பொருத்தி கோட், தலைப்பா சகிதம் பாரதியாகவோ, கோமணத்தைக் கட்டி கையில் வேலைக் கொடுத்து முருகனாகவோ எளிதாய் வேடம் கட்டுவதைப் போல் ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு.

*****

ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்.

யாகசாலை அக்கினியில் திரௌபதியும், புகையில் திருஷ்டத்யும்னனும் தோன்றிய பின்னர் மன்னன் துருபதராஜனுக்கும் கந்தவதிக்கும் இயல்வழியில் பிறக்கும் மகள் சிகண்டினி. அவள் பிறந்தபோதில் ‘இந்தக்குழந்தை பீஷ்மரைக் கொல்லவே பிறந்திருப்பவள். இவளை ஆணாகவே வளர்த்திடுக’ என்று தேவதைகள் சொல்ல அதைக் கேட்டஞ்சும் மன்னன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாது அவளை வளர்க்கிறான்.

srikandi_java_2சிறுவயதிலிருந்தே அஸ்திரப்பயிற்சியில் ஆர்வம் கொண்ட சிகண்டினி ஓர் ஆணைப் போலவே வளர்கிறாள். மணம்முடிக்கும் பருவம் வருகையில் ஆண்தன்மையே மிகுந்திருக்கும் சிகண்டினி ஒரு பெண்ணையே விரும்பி மணக்கிறாள். மணநாளிரவில் கணவன் ஆணல்லன் என்று மனைவிக்குத் தெரியவந்து அழுதுபுலம்ப, சிகண்டினி அவளை விடுத்து வனவாசம் செல்கிறாள்.

வனத்தில் திரிந்திருக்கையில் யட்சன் ஒருவன் இரக்கம் கொண்டு சிகண்டினிக்கு ஆணுறுப்பைத் தந்து சிகண்டியாக்கி, விரும்புகையில் பாலினத்தை மாற்றிக் கொள்ளும் வரத்தையும் நல்கி, காமக்கலையின் நுணுக்கங்களையும் சொல்லித் தருகிறான். வீடு திரும்பும் சிகண்டி மனைவியுடன் இல்லறத்தைத் தொடர்ந்து நடத்துகிறான்.

பின்னர் அண்ணன் திருஷ்டத்யும்னன் அஸ்தினாபுரியில் துரோணரிடம் வில்வித்தை கற்கச் செல்கையில் உடன் செல்லும் சிகண்டி அங்கு அழகன் அர்ஜுனனைக் கண்டு அவன் மேல் காதல் கொண்டு மீண்டும் பெண்ணாகிறாள். அர்ஜுனனிடம் பயிற்சிபெறும் அபிமன்யு முதலானோருடன் சேர்ந்து தானும் வில்வித்தை கற்கிறாள். சடுதியில் கற்றுத் தேரும் சிஷ்யை சிகண்டினியின் திறமையால் கவரப்படும் அர்ஜுனன் ஒருகட்டத்தில் காதல்வயப்பட்டு அவளை மணந்து கொள்கிறான்.

பின் சிகண்டினி வீடுதிரும்பி சிகண்டியாகி ஆண்வேடம் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்து, பாரதப்போரில் பீஷ்மரைப் பழிவாங்கவே மீண்டும் அர்ஜுனனிடம் சேர்வதற்குப் பெண்ணாகித் திரும்பி வருகிறாள்.

அர்ஜுனனுடன் ஸ்ரீகண்டி
அர்ஜுனனுடன் ஸ்ரீகண்டி

குருக்ஷேத்திரப்போரில் ஸ்ரீகண்டி எவ்வாறு பீஷ்மரை வீழ்த்துகிறாள் என்பதில்தான் அவள் ஜாவாவின் நாயகி ஆகி நிற்கிறாள்.

முற்பிறவியில் தன்னை அலைக்கழித்த வன்மத்தை மறக்காமல் காங்கேயன் பீஷ்மரை இப்பிறவியில் வென்றழிக்க காங்கேயன் முருகனையே இஷ்டதெய்வமாய்க் கொண்டு கடும்தவம் மேற்கொள்கிறாள் ஸ்ரீகண்டி.

தவத்தால் உருவேற்றப்பட்ட தாந்த்ரீக பலம் (Thaumaturgic) கொண்ட ஸ்ரீகண்டியின் வில் ஜாவானியக் கூத்துகளில் வியந்தோதிப் பாடல்பெறும் தனிச்சிறப்புடையது. விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி. அதிலிருந்து எய்யப்படும் அம்பு தார்மீகத்தில் பிறழாது நிற்பவன், நியாயவான் எனில் கொல்லாது திரும்பும். ஆனால் தர்மத்திலிருந்து சற்றும் பிறழ்ந்தோனைத் தவறாது கொல்லும்.

srikandi_java_3

இங்குதான் இந்திய ஜாவானிய பாரதக்கதைகளிடையே முக்கியமான வேறுபாட்டினைக் காண்கிறேன். இந்தியப்பதிப்புகள் எல்லாவற்றிலும் பீஷ்மர் 100 விழுக்காடு அப்பழுக்கில்லா அறவானாகவும், தம் சாவினை தாமே முடிவு செய்யும் வரவானாகவும், அம்பையை எதிர்கொள்ள விருப்பமின்றி விட்டுக்கொடுக்கும் சுத்தவீரனாகவும் காண்கிறோம். பள்ளிப்பருவத்தில் – ராஜாஜியின் மொழிபெயர்ப்பில் – அர்ஜுனனைப் பின்தள்ளி, நிராயுதபாணியாய் நிற்கும் பீஷ்மரைக் கொல்லப்பார்க்கும் சற்றே வில்லத்தனம் கலந்த நபும்ஸகன் சிகண்டியின் பிம்பமே என்னுள் இருந்தது. இந்தியர் பலருக்கும் அவ்விதமே இருக்கலாம். மேலும் பீஷ்மர் தம்மை வீழ்த்தும் அம்புகளை உருவி எடுத்துப்பார்த்து இவை அர்ஜுனன் எய்தவையே என்று மகிழ்ந்து உயிர்வாழும் வேட்கை விடுத்துப்பின் தேரிலிருந்து வீழ்வது போல் கதை செல்லும்.

ஜாவானியப் பதிப்பில் அம்பைக்கு பீஷ்மரிலும் உயர்ந்த தேவிவடிவம் தந்து அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அவள் எய்யும் ஹ்ருஸாங்கலியின் அம்பே பீஷ்மரை வீழ்த்தித் தீர்ப்பையும் நிறுவுகிறது.

அதனால்தான் அவள் நாயகி! ஜாவானிய, சுந்தானிய, இந்தோநேசிய மொழிகளில் நாயகி என்றாலே ஸ்ரீகண்டிதான். ஐயம் கொண்டோர் கூகிள் மொழிபெயர்ப்பானைச் சொடுக்கவும் – https://translate.google.com/#id/ta/srikandi

மேலே மடித்து நிமிர்த்தக்கூடிய ஹ்ருஸாங்கலி என்ற அம்பாதேவியின் வில்லின் அமைப்பு எப்படி இருக்குமென்று பலரும் கற்பனை வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறார்.  படம்: கூகிள் உபயம்.

srikandi_bow_java

*******

ஸ்ரீகண்டியின் தோல்பாவைக் கூத்து வடிவம். கீழே பண்டைய ஜாவானிய லிபி.
ஸ்ரீகண்டியின் தோல்பாவைக் கூத்து வடிவம். கீழே பண்டைய ஜாவானிய லிபி.

ஜாவாவில் ‘வாயாங் குலித்’ (Wayang Kulit) என்ற தோல்பாவைக் கூத்தின் மூலம் இப்படி ஏராளமான மகாபாரதக் கதைகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதை நடத்துவோர் தத்தம் சொந்தப்பார்வையில் சில அற்புதமான கருத்துகளை கதையினூடே சொல்லிப்போவார்கள்.

‘ஸ்ரீகண்டியின் மந்திரசக்தி வாய்ந்த அம்பால் எப்படி தர்மத்திலிருந்து வழுவாத பீஷ்மரை வீழ்த்த முடிந்தது!’ என்று கேள்வி கேட்டு அவரே அபாரமான பதிலும் சொல்வார்.

‘பீஷ்மரான தேவவிரதர் தாம் தந்த வாக்கை எந்நாளும் மீறாத சத்தியவாழ்க்கை வாழ்ந்தவர்தாம். அவர் அப்படியே இருந்திருந்தால் அம்பையால் அவரை வீழ்த்தியிருக்கவே முடியாது. ஆனால் என்று பீஷ்மர் அதர்மத்தின் பக்கம் துணை போனாரோ அன்றே அவர் வீழ்ச்சி தொடங்கியது. தேவி திரௌபதியை சபை நடுவே துகிலுரிந்ததைப் பார்த்தும் அமைதி காத்தாரே அன்றே அவரைக் கொல்ல தேவி ஸ்ரீகண்டியின் அஸ்திரமான ஹ்ருசாங்கிலிக்கு சக்தி வந்து விட்டது!’

ஸ்ரீகண்டியின் தொன்மக்கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாய் அவர்களிடை இருந்து வருவது. மத்திய ஜாவாவின் மாஜாபஹித் (Majapahit) அரசில் ஸ்ரீகண்டி சேனை என்று போர்ப்பயிற்சியில் சிறந்த பெண்களின் படையே தொடர்ந்து இருந்திருக்கிறது.

 

ஒருமுறை மத்திய ஜாவா பகுதியில் சுற்றுலா சென்றிருந்தபோது இயற்கை அரசாளும் டியாங் பீடபூமியில் (Dieng Plateau) அமைந்திருக்கும் 1300 ஆண்டுகளுக்கும் முந்தைய பாண்டவர்களின் கோயில்களைப் பார்த்தோம். ஸ்ரீகண்டியின் ஜாவானியக் கதைக்கு ஆதாரசாட்சியாய் அங்கே அர்ஜுனன் கோயிலுக்குப் பக்கத்திலேயே தேவி ஸ்ரீகண்டிக்கும் கோயிலைக் கண்டு வியந்து நின்றேன்.  Candi Srikandi என்றே இக்கோயில்  அழைக்கப் படுகிறது.

candi_srikandi_temple_java
ஜாவா தீவின் மத்தியப் பகுதியில் Dieng Plateau வில் உள்ள கோயில்கள்

அம்பையின் கதை அங்கே என்றும் உயிர்த்திருக்கும். இன்றும் பெண்ணுரிமைக் குழுக்கள் மட்டுமின்றி, மாற்றுப்பாலினக்குழுக்கள் பலவும் – நம்மூரில் அரவானைப்போல் – ஸ்ரீகண்டியின் பெயரில் தங்களை அமைப்பு ரீதியாய் அடையாளப்படுத்திக் கொள்கின்றன. இப்படி ஓர் அமைப்பு சமீபத்தில் எடுத்த ‘அனக் அனக் ஸ்ரீகண்டி’ (Anak Anak Srikandi – ஸ்ரீகண்டியின் குழந்தைகள்) என்றொரு குறும்படம் உலகத்திரைப்பட விழாவொன்றில் பரிசு வென்றது.

ஜெய் அம்பாஜி!

(ஜாவா குமார் தனது  ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியவற்றின் தொகுப்பு)

பி.கு:
இங்கே ஏடாகூடமான கமெண்டுகளைப் போடக்கூடிய சிலருக்கு முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.  ஜாவாத் தீவின் மகாபாரத  கதைசொல்லிகள் பலரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். அம்பையின் கதை மட்டுமின்றி இன்னும் பலப்பல அரிய ஆன்மிக விஷயங்களை அவர்கள் மூலமும், இன்னும் பல நண்பர்கள் மூலமும் கற்றிருக்கிறேன். இஸ்லாத்துக்கு மாறினாலும் தங்கள் பாகனீய வேர்களின் உன்னதம் உணர்ந்து பாதுகாத்து வருபவர்கள் அவர்கள். பெரும்பான்மை ஜாவானியர் அப்படித்தான். ஹஜ் யாத்திரை உட்பட தங்கள் மதக்கடமைப்படி ஒழுகுபவர். அவர்களின் இஸ்லாம் உலகத்தோடு ஒட்டி இணங்கிப்போவது; பிணங்கிப் போவதல்ல. மதம் என்பது தத்தம் அகவாழ்வை உயர்த்தவேண்டிய உட்சமயம் என்பது அவர்கள் தேர்ந்த வழி.

24 Replies to “ஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி”

  1. நானறியாத புதிய தகவல்கள்.

    நன்றி.

  2. மிகவும் வியப்பிற்குள்ளாக்கிய கட்டுரை! மகாபாரதம் நடந்தது வாடா இந்தியாவில், ஆனால் அதைப் போற்றிப் பாதுகாக்கும் தெற்குக் கோடியில் உள்ள ஜாவாவில்! 3000 வருடங்களுக்கு முன்னால் இந்திய கண்டத்திலேயே ஜாவா முதலியன இருந்தன என்பதற்கு இது ஒரு சான்று!

  3. லோந்தார் (Lontar) என்ற பெயரில் வழங்கும் ஓலைச்சுவடிகளில் இப்படி ஏராளமான பண்டைக்கதைகள் மட்டுமின்றி இன்னும் பல தொன்மங்கள் ஜாவானிய அரசகுடும்பங்களிடம் இன்றும் உலகறியாமல் இருக்கின்றன. முக்கியமாய் அதர்வணப் பிரயோகங்கள். பாலித்தீவுக்கு இடம்பெயர்ந்து விட்ட இந்துக்கள் சிலர் இவற்றை இன்னும் பாதுகாத்து வருகின்றனர். எதுவரை தாங்குமோ யானறியேன்!

  4. இதை எழுதத் தூண்டியது ஜெமோவின் அம்பைக்கதையில் குறிப்பாய் ‘காங்கேயரே, நான் மிக இளையவள். ஆனால் காதலில் மனம்கனிந்த பெண். உண்மையில் அன்னையும்கூட’ – என்ற ஒரு சொல்லாடல். அது ஓரிரவெல்லாம் என் உறக்கத்தைச் சுழற்றிப்போட்டது. அதுவே நாம் வணங்கியிருக்கும் பெண்மையின் உச்சம்!

  5. மகாபாரதம் நடந்தது வாடா இந்தியாவில், ஆனால் அதைப் போற்றிப் பாதுகாக்கும் தெற்குக் கோடியில் உள்ள ஜாவாவில்!//

    ஜாவானியரின் பார்வையில் அப்படி இல்லை. காலம் நேர்க்கோடல்ல என்பதே அவர்களும் ஏற்பது.

    சுழன்றிருக்கும் நால்யுகங்களில் இவை பல்வேறு பிரதேசங்களில் மீண்டும் மீண்டும் நடப்பவை. பேரூழி முடிந்து பினாகத்தின் அம்பால் குடம்வெடித்து மீண்டும் ஆலிலைக்கண்ணன் தொடங்கி நடத்தும் நாடகம் பாரதத்தில் அமையலாம்.

    அவர்களைப் பொருத்தவரை மேருமலையே ஜாவாவின் நடுவில்தான் அமைந்திருக்கிறது.
    https://en.wikipedia.org/wiki/Semeru

  6. ஜாவானிய மகாபாரதத்தைப் பற்றி விளக்கியமைக்கு நன்றி. பதினான்காம் நூற்றாண்டில் இஸ்லாமை மன்னன் பரமேஸ்வர வர்மன் தழுவியதன்மூலம் இந்தோனேசியாவே முஸ்லிமாக மாறினாலும், இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இன்றும் போற்றிப் பாதுகாத்து வருவது பாராட்டத்தக்கது. சிகன்டியைப் பற்றிய புதிய தகவலும் மகிழ்சியைத் தருகிறது. வண்ணப் படங்கள் மிக அருமை.

  7. கட்டுரைக்கு நன்றி . ஹிந்து வேர்கள் என்பதே சரியான சொல்லாக இருக்கும். அதிகபட்சம் ஹிந்து பண்பாட்டில் கிளைத்த மரம் என்பதால். பாகனீய வேர்கள் என்பது சரியாக படவில்லையே.
    சாய்

  8. Indonesia always fascinates me. Though they are the largest Islamic nation in the world, they don’t shun away their glorious past. Recently one of my friend visited there and posted pictures of giant statues of Arjuna, Krishna and other HIndu gods. Their national airline is ‘Garuda’. They still celebrate various hindu festivals in different names. Really amazing, unlike Sickular India.

    Good article sir. Nice to know about the story of Sikandi and new interpretation.

  9. பாகனீய வேர்கள் என்பது சரியாக படவில்லையே.//

    உலகெங்கும் அழித்தொழிக்கப்பட்டு இன்று பாரதம், பாலி முதலான சில பகுதிகளில் எஞ்சியிருக்கும் நம் பெயரிலாப் பெருவழியை நாம் ஹிந்துதர்மம் என்கிறோம். ஆயினும் இன்று ஐரோப்பாவில் தொடங்கி இன்று விழித்தெழுந்துள்ள சமூகங்கள் அனைத்தையும் பாகன் என்ற குடையின்கீழ் அடையாளப்படுத்தல் எளிதாய் இருக்கிறது.

    ஓர் எளிய காட்டு:
    பிரிட்டன் என்ற பெயருக்குக் காரணமான பிரித்தானிய நாயகி இவள்:
    https://inanna.virtualave.net/brigit.html

  10. அருமையானக்கட்டுரை. ஸ்ரீ ஜாவாகுமாருக்கு ப்பாராட்டுக்கள். அவரது ஜாவாவைப்பற்றிய ஒருசில பதிவுகளை இணையத்தில் ஆங்கிலத்தில் கண்டதாக நினைவு. அவற்றைப்படித்தபோது ஜாவாவுக்கு ஒருமுறையேனும் சென்றுவரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஜாவானிய மக்களின் சமயத்தினைப்பற்றி ஒரு சிலக்கட்டுரைகளையாவது சகோதரர் ஜாவாகுமார் தமிழ் ஹிந்துவில் எழுதவேண்டும் என்று வேண்டுகிறேன்.
    சிவசிவ

  11. சிவஸ்ரீ விபூதிபூஷண் ஐயா: ஜாவா / பாலி இந்துக்களின் தொல்சமயம் சைவம். அகத்தியர் வழி சைவசித்தாந்தியர். ஆனால் அது ஒட்டிப்போகும் சைவம்; வெட்டிபோவதல்ல. உலகின் மிகப்பெரிய சிவாலயம் ப்ரம்பனானில் இருக்கிறது. இருபுறங்களிலும் பிரம்மா விஷ்ணு கோயில்களுடன் மிகப்பெரிய வளாகமது.

  12. \\ இஸ்லாத்துக்கு மாறினாலும் தங்கள் பாகனீய வேர்களின் உன்னதம் உணர்ந்து பாதுகாத்து வருபவர்கள் அவர்கள். பெரும்பான்மை ஜாவானியர் அப்படித்தான். ஹஜ் யாத்திரை உட்பட தங்கள் மதக்கடமைப்படி ஒழுகுபவர். அவர்களின் இஸ்லாம் உலகத்தோடு ஒட்டி இணங்கிப்போவது; பிணங்கிப் போவதல்ல. மதம் என்பது தத்தம் அகவாழ்வை உயர்த்தவேண்டிய உட்சமயம் என்பது அவர்கள் தேர்ந்த வழி. \\

    அன்பின் ஸ்ரீ ஜாவாகுமார்,

    நான் வேறு ஒரு வ்யாசம் எழுதுவதில் மும்முறமாக இருப்பதால் இந்த வ்யாசத்தை ஆழ்ந்து வாசிக்க முடியவில்லை. சாவகாசமாக வாசித்து கருத்துக்களை உள்வாங்குவேன். பல வருஷ காலம் காஷ்மீரத்தில் உத்யோகம் செய்து வெளிப்போந்த எனக்கு மேற்கண்ட கருத்து மனதை மிகவும் கவர்ந்தது. பிரிவினை வாதம் கோலோச்சும் காஷ்மீரத்திலும் கூட இதே போன்ற கருத்துக்கள் கொண்ட பல முஸல்மாணிய சஹோதரர்கள் உண்டு என்பதனை அன்பு மிக நம் தளத்து வாசகர்களொடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    எந்த சொற்களைப் பயன் படுத்த வேண்டும் என்பதில் ஆசிரியரான உங்களுக்கு முழு உரிமை உண்டு தான்.

    ஆதிவாசி மற்றும் வனவாசி போன்ற சொற்கள் புழக்கத்தில் சுட்டுபவர் ஒரே நபரைத் தான் என்றாலும் …… ஆதிவாசி என்ற சொல் இதைத் தவிர மற்றும் பல தகாத அர்த்தங்களையும் சுட்டுகிறது.

    பாகனிய என்ற சொல் விபரீத அர்த்தங்களை சுட்டுவதாகத் தெரியவில்லை. *ஹைந்தவ* அல்லது *ஹிந்துமத வேர்கள்* என்ற சொல் இன்னமும் அணுக்கமாக இருக்கலாமோ என்பது என்னுடைய அபிப்ராயமும்.

    மற்றபடி தங்கள் சிந்தனையில் லகுவாக எழும் சொற்கள் படி வ்யாசத்தை வடிப்பது அதற்கு முறையான பொலிவை அளிக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    இயலுமானால் இந்தோனேஷியாவில் காணப்படும் பௌத்தம் பற்றியும் வ்யாசங்கள் சமர்ப்பிக்குமாறு விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

  13. அருமையான செய்திகளைத் தந்த ஜாவா குமார் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வந்தனங்கள். தங்களது விநாயகர் அகவல் குறித்த தத்துவக் கட்டுரையைப் படித்து வியந்திருக்கிறேன். பரமேஸ்வரன் தங்களுக்குப் பிறப்பில்லாப் பெருவாழ்வை (சாவா குமாராக) வழங்கப் பிரார்த்திக்கிறேன்.

    நிற்க, பாகன் என்ற சொல்லாடல் ஒருவிதத் தாழ்த்துதல் சொல்லாகவே பயன்படுத்தப் படுகிறது.
    excerpts from
    https://en.wikipedia.org/wiki/Pagan_religions
    // The adoption of paganus by Latin Christians as an all-embracing, pejorative term for polytheists represents an unforeseen and singularly long-lasting victory, within a religious group, of a word of Latin slang originally devoid of religious meaning. The evolution occurred only in the Latin west, and in connection with the Latin church. Elsewhere, “Hellene” or “gentile” (ethnikos) remained the word for “pagan”; and paganos continued as a purely secular term, with overtones of the inferior and the commonplace.
    —Peter Brown, Late Antiquity, 1999[12] //

    A pejorative[1] (also term of abuse or derogatory term) is a word or grammatical form of expression that expresses contempt, criticism, hostility, disregard and/or disrespect.

    எனவே ஹிந்து சமயத்தைப் பாகன் என்று நாமே சொல்லுதல் சரியன்று. மாற்று மதத்தார் சொல்லும்போதும் அதை நாம் எதிர்க்க வேண்டும்.

    இது போலவே ஹிந்து mythology என்றும் cult என்றும் கிறிஸ்தவர்கள் சொல்லி வருவதை எதிர்க்கவேண்டும். அவர்களது புராணங்களை நம்பிக்கை என்றும் நமது புராணங்களை myth என்றும் சொல்லி வருகின்றனர். அதை நம்மவர்களும் பொருளாழம் புரியாமல் அதே போல சொல்கின்றனர்.

  14. அன்புக்குரிய ஜாவா குமார் அவர்களுக்கு,
    ஜாவானிய ஹிந்துக்களின் சமயம் சைவம் என்று ஏர்கனவே உங்களுடைய இணையப்பதிப்பின் மூலம் உணர்ந்திருக்கிறேன். எல்லா தெய்வங்களுக்கும் மேலாக மும்மூர்த்திகளுக்கும் மேலான சிவத்தினை வழிபடுவோர் சைவர் என்பது ஜாவானிய ஹிந்துக்களுக்குப் பொருந்துகையில் ஒட்டிப்போகும் சைவம் அது வெட்டிப்போவதன்று என்று மொழிந்தது என்று தாங்கள் கூறுவது ஏனோ? சைவம் அடிப்படையிலேயே இதர வழிபாடுகளை இணைத்து செல்வதாகத்தானே இந்தியாவில் உள்ளது. சிவாலயத்தில் மட்டுமே அனைத்து மூர்த்திகளுக்கும் இடமிருக்கையில் அதில் வெட்டி செல்லும் பிரிவு எங்கே இருக்க முடியும்.
    அன்புடன்
    சிவசிவ

  15. அடியவன் அவர்கள் பேகன் என்ற கருத்தாக்கத்தினை நிராகரித்திருக்கிறார். பேகன் என்ற வார்த்தை தாழ்ந்ததாக கிறிஸ்தவ மிச நரிகளாக பரப்பப்பட்டிருந்தாலும் அதை தாழ்ந்ததாக நாம் ஏற்கவேண்டிய அவசியமில்லை. கிறிஸ்தவத்திற்கு முந்தைய பேகன் சமயங்களை உயர்வானவை என்றே உலக முழுதும் எழுந்துவரும் பேகனியர்கள் கருதுவதை நாம் ஆதரிக்கவேண்டும். நமது சமயங்களோடு பலவழிகளில் ஒத்திசைந்துள்ள பேகனிய சமயத்தவர்களுக்கு தமது சமயத்தினை மேற்குலகில் மீட்க ஆக்கமும் ஊக்கமும் அளித்தல் வேண்டும்.

    அடியவன் ஹிந்து மித்தாலஜி என்ற கருத்தாக்கத்தினை நிராகரிக்கவேண்டும் என்றும் மொழிந்திருக்கிறார். இந்தகருத்தாக்கம் கிரேக்க, ரோமானிய தொல்கதைகளுக்கு இணையாகப் புராணங்களை கருதி அவற்றை அழித்தது போல மியூசியத்தில் வைத்தது போல வைக்க முயலும் அபிராஹாமிய முயற்சியன்றி வேறில்லை.

  16. கட்டுரையைப் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. ஆர்வியின் அரிய பட்டியலில் மேலும் ஒன்று சேர்க்கலாம். 🙂

    அடியேன் பல்வேறு பாகன் குழுக்களில் உள்ளேன். உலகின் பல பகுதிகளிலிருந்து அக்குழுக்களில் சேர்ந்து பலரும் தத்தம் நம்பிக்கைகளைப் பகிர்கையில் அடிநீரோட்டமாய் ஏகம் சத் விப்ரா பஹூதா வதந்தி என்ற வேததரிசனமும், ஏகன் அநேகன் என்னும் திருவாசகப் பேருரையும் இருப்பதைக் காண்கிறேன். மேலும் பாகன் என்பது எவ்வகையிலும் இழிசொல்லன்று. மதம் மாறாத கிராமிய மக்களை வில்லன் என்று வைது கொடியோராக்கி அழித்ததைப் போல் அது சிலருக்குப் பொருந்தாத பெயராய்த் தொனிக்கலாம்.

    இனி கட்டுரையைப் பற்றி பேசுவோம்.

  17. அடியவன் அவர்களே: நான் வணங்கும் பெம்மான் முருகனே பிறவான் இறவான் அவனே என்றும் சாவா குமார். நாமெல்லாம் சின்னாள் பல்பிணியர். 🙂

    திரு.கிருஷ்ணகுமார்: ஜாவாவின் பௌத்தம் மணிமேகலை காலத்தியத் தொன்மை வாய்ந்தது. மணிமேகலையின் காலக்கணக்கீடுக்கு உதவும் பொ.ச. 2’ம் நூற்றாண்டுச் சான்றுகளை என் முகநூல் பக்கத்தில் இடவுள்ளேன். தொடுப்பை அனுப்புகிறேன். பின்னர் வஜ்ரபோதியால் பரவிய தாந்த்ரீக பௌத்தம் அங்கு இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்து விட்டது எனலாம். வஜ்ராயன வழிவந்த பேராலயம் போரோ புதூரில் இருக்கிறது. இது அடிப்படையில் யந்த்ர வடிவிலானது.
    https://www.buddhanet.net/boro.htm

  18. அன்புக்குரிய சிவஸ்ரீ விபூதிபூஷண் அவர்களுக்கு, சைவம் என்றும் அடிப்படையில் ஒட்டிப்போகும் சைவம்தான். ஆனால் இடைக்காலத்தில் சிலரால் – அதுவும் சில காலமே – வெட்டிப்போகுமாறு ஆனதும் பின்னர் அருணகிரியாரைப் போன்ற பேரருளாளர் மூலப்பாதைக்கு மடை மாற்றியதும் காண்கிறோம். இதைத் தேவையின்றி குறித்தமைக்கு மன்னிக்கவும்.

  19. நண்பர்களே

    உடனே மறுமொழி எழுத முடியவில்லை. மன்னிக்கவும். திரு ஜாவாகுமார் அவர்களுக்கும் நன்றி. ப்ரிகிட் என்ற அழகிய பெயர் பண்டைய பெயர் என்பது நல்ல தகவல். டயானா போன்ற பெயர்களும் செரிக்கப்பட்டு விட்ட பண்டைய மத பெயர்கள் தான் . பைபிள் பெயர்கள் அல்ல என்பதையும் நினைவூட்டுகிறது.

    பாகநீயம் என்ற சொல் இழிவு என நான் கருதவில்லை. திரு கிருஷ்ணகுமார் அவர்கள் சொல்வது போல ஹிந்து என்பது இந்த இடத்தில மேலும் பொருத்தம் ஆக இருக்கலாம் என்பதே எனது தாழ்மையான எண்ணம்.

    காரணம் பண்டைய மதங்கள் அனைத்திற்கும் ஒரு பொது பெயராக பாகனியம் இருக்கலாம். கிட்டதட்ட முற்றாக அழிக்கப்பட்டு பின் தற்போது துளிர்க்க முயலும் மதங்கள் எல்லாவற்றிற்கும் அது பொருந்தலாம்.

    ஆனாலும் ஒரு தலைமுறை கூட பிசகாமல் , .அழிவு சக்திகளின் முழு ஆற்றலையும் எதிர் கொண்டு [ அதனாலேயே அவர்களுக்கு எரிச்சலை ஊட்டும்]
    ஹிந்து மதம் மற்றைய பண்டைய மதங்களில் இருந்து வேறுபட்டது. இன்றும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருவது. . பல கோடி மக்கள் பின் பற்றுவது. அதனாலேயே பலஅழிவு சக்திகளின் முழு மூச்சான எதிர்ப்பை, திட்டப்மிட்ட பிரச்சாரத்தை ,உள் இருந்து பிளக்கும் முயற்சிகளை எதிர்கொள்வது.

    மேலும் தாக்கப்படும் போது ஹிந்து என்று ஸ்பஷ்டமாக குறிப்பிடப் பட்டே தாக்கப்படுவது. பாகன் என்றல்ல.

    ஜாவா விஷயத்தில் ஹிந்து என்பது சரியான சொல்லாக இருக்கும் —இங்குள்ள நமக்கும் அந்த உண்மை நினைவிருக்க வேண்டும் என்று நினைப்பதன் காரணமே நான் எழுதியது. .எனக்கு தெரிந்த வரை என் கோணத்தை தெளிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். நன்றி

    சாய்.

  20. அன்பின் சாயி,

    //ஜாவா விஷயத்தில் ஹிந்து என்பது சரியான சொல்லாக இருக்கும் —இங்குள்ள நமக்கும் அந்த உண்மை நினைவிருக்க வேண்டும் என்று நினைப்பதன் காரணமே நான் எழுதியது. .எனக்கு தெரிந்த வரை என் கோணத்தை தெளிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். நன்றி //

    தங்கள் பார்வையும் சரியானதே. ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.

  21. இந்தோனேஷியா தான் அடுத்த ஆஃப்கானிஸ்தான் என்று சொல்கிறார்கள். கட்டுரையாளரின் எதிர்பார்ப்பு அதை முறியடிக்கும் என்று நம்புவோம், அங்கே பயங்கரவாதத்தை துறந்து பழைய கலாச்சாரத்தை பின்பற்றும் நல்ல முஸ்லீம்களின் எண்ணிக்கை கூடுதலாகி அமைதி தொடர்ந்து நிலவ ஸ்ரீகண்டி அருள் புரியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *