ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை]

February 19, 2014
By

குனி தளர்ந்த நடையோடும் எங்கோ வெறித்த பார்வையோடும் துரியோதனின் மாளிகையின் வெளி அறைக்கு வந்தார். துரியோதனனை சந்திக்க வரும் முக்கிய அதிகாரிகள் அந்த வெளி அறையில்தான் காத்திருப்பார்கள். பத்து இருபது அதிகாரிகள், அவர்களது சேவகர்கள், அவர்களுக்கு அருந்த நீரும் பழச்சாறும் சிறுபசி அடங்க அப்பங்களும் அதிரசங்களும் வினியோகித்துக் கொண்டிருக்கும் அரண்மனை ஏவலர்கள் மற்றும் சேடிகள் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் அறை இன்று வெறுமையாக இருந்தது. மருந்துக்குக் கூட ஒரு அதிகாரியையும் காணவில்லை.

ஹஸ்தினாபுரத்தில் செய்தி பரவும் வேகத்தைக் கண்டு சகுனி கொஞ்சம் விரக்தியோடு தனக்குத் தானே நகைத்துக் கொண்டார். என்னன்னெவோ சிந்தனைகளோடு வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு தூணின் மறைவிலிருந்து கர்ணன் வெளிப்பட்டான். ஆடைகள் கொஞ்சம் கசங்கினாலும் பொறுக்காது உடனே மாற்றிக் கொள்ளும் கர்ணனின் உடைகளில் இன்று அழுக்குப் படிந்திருந்தது. எப்போதும் நேர்த்தியான உடைகளையும் ஆபரணங்களையும் அணியும் அவன் இன்று ஒரு காதில் மாணிக்கத் தோடையும் இன்னொன்றில் மரகதத் தோடையும் அணிந்திருந்தான். கலைந்து கிடந்த அவனது கேசத்தில் தூணின் சுண்ணம் அங்கங்கே ஒட்டி இருந்தது.

தூணைக் கிழித்து வந்த நரசிம்மத்தைப் பார்த்த ஹிரண்யகசிபு போல சகுனி அவனைக் கண்டு திடுக்கிட்டார். சரியான தூக்கம் இல்லாமல் சிவந்திருந்த அவரது கண்கள் சினத்தில் மேலும் சிவந்தன. கர்ணன் கூனிக் குறுகி நின்றதால் இன்று சகுனி அவனை அண்ணாந்து பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது.

“எங்கு வந்தாய்?” என்று தாழ்ந்த சுருதியில் சகுனி உறுமினார்.

கர்ணனின் குரல் ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுபவனைப் போல ஒலித்தது. “துரியனைப் பார்க்கத்தான் அதிகாலையிலிருந்து இங்கேயே…”

சகுனி கர்ஜித்தார். “நிறுத்தடா! துரியனாம் துரியன்! தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்த நான் கூட இப்போதெல்லாம் மன்னர், இளவரசர் என்றுதான் சொல்கிறேன், சூதன் மகன் அவனை துரியன் என்று அழைக்கிறாய்!”

கர்ணன் தழுதழுத்த குரலில் “ஆருயிர்த் தோழர்கள் மாமா அவர்களே ஆருயிர்த் தோழர்கள்!” என்றான். உடனே “தவறுதான் காந்தார மன்னரே!” என்று தன்னைத் தானே திருத்திக் கொள்ளவும் செய்தான்.

கர்ணன் சகுனியை காந்தார மன்னர் என்று அழைத்தபோது ஒரு கணம் தன்னிச்சையாக அவரது முகம் சுருங்கியது. உடனே சுதாரித்துக் கொண்டு தன் கண்ணில் தெரிய ஆரம்பித்த வலியை மறைத்தாலும் அவர் குரலும் தழுதழுக்க ஆரம்பித்ததை அவரால் தடுக்க முடியவில்லை. “ஏனடா கர்ணா? ஏன் இப்படி செய்தாய்?” என்றார்.

கர்ணன் எதுவும் பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டே நின்றான்.

சகுனி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அது கர்ணனைப் பார்க்க விரும்பாமலா அல்லது தன் கண்ணும் கலங்குவதை கர்ணன் பார்க்கக் கூடாது என்றா என்று அவருக்கே சரியாகத் தெரியாது.

DUSHTA CHATUSHTAYAM

வேறு எங்கோ பார்த்தபடி கொஞ்சம் சாந்தமான குரலில் சகுனி தொடர்ந்தார். “இத்தனை நாள் பழகிய தோஷத்துக்காக சொல்கிறேன் கர்ணா. துச்சாதனன் உன்னைக் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கிறான். துர்மர்ஷணனோ உன்னைத் தேடிக் கொண்டு உன் மாளிகைக்கே போயிருக்கிறான். அவர்கள் யாராவது உன்னைப் பார்ப்பதற்குள் இங்கிருந்து போய்விடு. ஹஸ்தினாபுரத்திலிருந்தே போய்விடு!”

சகுனி முடிப்பதற்குள்ளேயே கர்ணனின் பதில் வேகமாக வந்தது. “எங்கே போகட்டும் மா… எங்கே போகட்டும் காந்தார மன்னரே?”

“எங்காவது போ. உன் நாட்டுக்குப் போய்விடு. அங்க நாட்டு மக்கள் தன் அரசனை மறந்தே போயிருப்பார்கள், அவர்களுக்கு உன் முகம் எப்படி இருக்கும் என்பதை நினைவுபடுத்து! கேள்வி கேட்காதே கர்ணா, இந்த முரட்டுப் பயல்கள் துரியன் ஒருவனுக்குத்தான் கட்டுப்படுவார்கள். உனக்குத் தெரியாததா?”

“அங்க நாடு மட்டும் என்ன அன்னிய நாடா? துரிய… மகாராஜா துரியோதனருக்கு சொந்தமானதுதானே காந்தார மன்னரே!”

“துரியோதனனை முழுவதும் புரிந்து கொண்டவன், என்னை விடவே நன்றாக அறிந்தவன், நீ ஒருவன்தான் என்று நினைத்திருந்தேன் கர்ணா! நேற்று அவன் மனதை உடைத்தாய். இன்றோ அவன் உன்னிடமிருந்து மீண்டும் அங்க நாட்டைப் பிடுங்கிக் கொள்வான் என்று பயப்படுவது போலப் பேசுகிறாயே!”

“பிடுங்கிக் கொள்ள என்ன தேவை காந்தார மன்னரே?”

“ஒரு சூதனுக்குத் தந்த பரிசை எந்த க்ஷத்ரியனும் திரும்பிப் பெற்றுக் கொள்ள மாட்டான் கர்ணா! இதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது?”

“இந்த சூதனுக்கே அங்க நாட்டுக்குச் செல்ல வழி தெரியும்போது குரு வம்ச இளவல்கள் துச்சாதனனுக்கும் துர்மர்ஷணனுக்கும் வழி தெரியாமலா போய்விடும்? அங்கே படையெடுத்து வரமாட்டார்களா?”

“வாதம் செய்ய இது நேரமில்லை. இரண்டு பேரும் அளவுக்கு அதிகமாக மது வேறு அருந்தி இருக்கிறார்கள். மேலும்…”

சகுனி பேசுவது அடைபட்டது. சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டார். உடைபட்ட குரலில் “கர்ணா உனக்காகச் சொல்லவில்லை. இந்தக் கிறுக்குப் பிள்ளைகளுக்காகச் சொல்கிறேன். இதற்கு மேலும் இந்தக் கிழவனை வெளிப்படையாகப் பேசும்படி வைக்காதே” என்றார்.

கர்ணனின் மார்பு விம்மியது. “துச்சாதனனுக்கும் துர்மர்ஷணனுக்கும் எதிராக என் வில் எழும் என்று நினைக்கிறீர்களா? நீங்களே, நீங்களே இப்படித்தான், உண்மையாகவேதான் நினைக்கிறீர்களா?” என்று உயர்ந்த குரலில் கேட்டான். அவன் குரல் நடுநடுங்கியது. யானை பிளிறுவது போல ஓங்கி ஒலித்த குரலைக் கேட்டு கதவைத் திறந்த ஒரு சேடி கர்ணனைப் பார்த்துவிட்டு திகைத்தாள். பிறகு உள்ளே விரைந்தாள். சகுனி இரண்டு மூன்று முறை ஏதோ சொல்ல வாயெடுத்து ஆனால் எதுவும் சொல்லாமல் வாசலை நோக்கி நடந்தார். கர்ணன் தன் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டு அங்கேயே ஒரு ஆசனத்தில் அமர்ந்தான்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு காலணிச் சத்தம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்ததை கர்ணன் உணர்ந்தான். ஆனால் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. முதலைத் தோலில் செய்யப்பட்ட மிகவும் பரிச்சயமான காலணிகள் அவன் அருகே வந்து நின்றன. சகுனி. ரகசியம் பேசும் குரலில் சொன்னார் – “நேற்று நீ மறுப்பாய் என்று கூட நினைக்கவில்லை கர்ணா!”

கர்ணன் மௌனமாகவே இருந்தான்.

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன் உயிரையும் நீ துரியனுக்காகக் கொடுப்பாய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உன் மகனின் உயிர் என்று வரும்போது…”

வலி மிகுந்த கண்களோடு கர்ணன் சகுனையை நிமிர்ந்து பார்த்தான்.

“ரத்த உறவு எந்த நட்பையும் விட பெரியது என்று நான் நேற்று புரிந்து கொண்டேன் கர்ணா! யார் கண்டது, ஆற்றிலே வந்த நீயும் குந்திக்குப் பிறந்த இன்னொரு பாண்டவன் என்று நாளை தெரிந்தால் அவர்கள் பக்கம் போய்விடுவாயோ என்னவோ?”

கர்ணன் சகுனியையே உற்று நோக்கினான். சகுனிதான் கடைசியில் அவன் கண்களைப் பார்க்க சக்தி இல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ஆசனத்தை விட்டு எழுந்தவன் எதுவும் பேசாமல் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மாளிகையின் இன்னொரு உள் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. “அண்ணா!” என்று அழைத்தபடி பட்டமகிஷி பானுமதி விரைந்து வந்து கொண்டிருந்தாள். கர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் “மாமா! மாமா!” என்று அழைத்தபடி ஒரு அழகிய இளம் பெண் தன் நீலப்பட்டாடை சலசலக்க வேகவேகமாக ஓடி வந்து கர்ணனின் நீண்ட கை ஒன்றைப் பற்றினாள். பாதி அலங்காரத்தில் ஓடி வந்ததால் அவள் தலையில் சரியாக செருகப்படாத மல்லிகைச் சரம் கீழே கர்ணன் கால்களில் விழுந்தது. மீண்டும் புற உலகத்துக்கு வந்த கர்ணனின் முகம் அவளைப் பார்த்ததும் முதலில் தன்னிச்சையாக மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே மீண்டும் அவன் கண்கள் சுருங்கின. அதற்குள் பானுமதியும் அருகில் வந்தாள்.

“என்ன அண்ணா இது? இங்கே வெளியறையில் காத்திருக்கிறீர்களாமே? இது என்ன புதுப் பழக்கம்?”

“அரசியார் என் மீது கோபமாக இருப்பீர்கள் என்று…”

“தாத்தா ஏதாவது சொன்னராக்கும்! அவரிடம் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் அம்மாவிடம் இல்லை இல்லை அரசியாரிடம் காட்டுகிறீர்களா, மாமா?” என்று அந்தப் பெண் புன்னகையோடு கேட்டாள்.

பானுமதி “நண்பனோடு மன வருத்தம் ஏற்பட்டால் இது உங்கள் தங்கை வீடு என்பது மாறி அது என்னவோ சொன்னீர்களே அரசியார் மாளிகை ஆகிவிடுமா? உள்ளே வாருங்கள் அண்ணா!” என்றாள்.

சகுனிக்கு கோபம் நெஞ்சையே அடைத்தது. “ஆமாம், அண்ணன், மாமா என்று இந்த சூதன் மகனோடு இன்னும் உறவு கொண்டாடிக் கொண்டிருங்கள்!” என்று இரைந்தார். “இந்தப் பெண்களுக்கு ஆண்களுக்கு ஏற்படும் அவமதிப்பு எப்படிப்பட்டது என்று புரிவதே இல்லை. அது சரி, திரௌபதிக்கே துகில் உரிந்தால்தான் புரிகிறது, இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன புரிந்துவிடப் போகிறது!” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார்.

“பெரிதுபடுத்தாதீர்கள் அண்ணா. உண்மையில் மாமாவுக்கு அவரை விட உங்களோடுதான் நெருக்கம் அதிகம். பெரியவர் கோபத்தில் பேசுகிறார், விட்டுவிடுங்கள். உள்ளே வாருங்கள், பேசிக் கொள்ளலாம்.” என்று பானுமதி ஆறுதலாகப் பேசினாள். கர்ணன் இன்னும் தயங்குவதைப் பார்த்து அந்த இளம் பெண்ணின் பக்கம் திரும்பினாள். “த்யுதி, நீ சொன்னால்தான் உன் மாமா கேட்பார், அவரை அழைத்துக் கொண்டு உள்ளே வா” என்று சொன்ன பானுமதி உள்ளே நடந்தாள். த்யுதியும் கர்ணனின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். சில சமயங்களில் அவள் கர்ணனை இழுக்க வேண்டி இருந்தது. போகும்போது மெதுவாகக் கேட்டாள் – “ஆமாம் தாத்தா அங்க நாட்டு மக்களுக்கு உங்கள் முகம் மறந்து போயிருக்கும் என்று சொன்னாராமே? இவருக்கு காந்தார நாடு என்று ஒன்று இருப்பதாவது நினைவிருக்கிறதாமா?” கர்ணன் முகத்தில் சின்னப் புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.

ரகசியம் பேசும் குரலில் கர்ணன் கேட்டான் – “துரியன்…?”

bhanumathiபானுமதி “நேற்று மாலை உங்கள் மாளிகையிலிருந்து திரும்பி வந்தவர் தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார். மாமா பல முறை கூப்பிட்டுப் பார்த்தார். அவரிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. துச்சாதனன், விகர்ணன், துர்மர்ஷணன் மூவரும் அறை வாசலை விட்டு நகரவே இல்லை. அதுவும் தம்பிகள் எல்லாரும் சாதாரணமாகவே மதுவை அருந்த மாட்டார்கள், குடம் குடமாக குடித்துத்தான் பழக்கம். நேற்று ஒரு சாக்கு வேறு கிடைத்துவிட்டது. சொல்ல வேண்டுமா?” என்று சொல்லி நகைத்தாள். அவள் சிரித்தாலும் அவள் சிரிப்பில் வலி தெரிந்தது.

கர்ணன் அந்த இளம் பெண்ணின் பக்கம் திரும்பினான். “த்யுதி…” என்று இழுத்துப் பேசினான். மேலே வார்த்தைகள் வரவில்லை.

த்யுதி “என்ன இது மாமா? என் ஜாதகத்தில் குறை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? வீராதிவீரர்களையும் ஓட்டம் பிடிக்க வைக்கும் ஜாதகம் அது!” என்று சிரித்தாள்.

கர்ணன் “நீ பெருவாழ்வு வாழ்வாய் த்யுதி! இந்த ஜாதகம், நிமித்தகர், க்ரகங்கள் எல்லாவற்றையும் விட உளப்பூர்வமான ஆசிக்குத்தான் சக்தி அதிகம்” என்றான்.

“அதுதான் அண்ணா வேண்டும். உங்கள் ஆசி இருந்தால் போதும், இன்றில்லாவிட்டால் நாளை திருமணம் நடந்துவிட்டுப் போகிறது!” என்று பானுமதி நிராசை நிறைந்த குரலில் சொன்னாள்.

“என்ன, மணமகன் இனி மேல்தான் பிறந்து வரவேண்டும்!” என்று த்யுதி நகைத்தாள்.

“என்னைக் கொல்லாதே த்யுதி! பானு, நான் மறுத்தது ஏனென்றால்…”

“வேண்டாம் அண்ணா, நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். தவறு எங்கள் மீதுதான். எங்கள் சுயநலத்தின் மீதுதான், எங்கள் பேராசையின் மீதுதான். இவள் பிறந்த வேளையைக் கணிக்கும் நிமித்தகர் ஒருவர் விடாமல் இவளை மணம் செய்து கொள்பவனின் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள். அப்படி இருந்தும் ஹஸ்தினாபுரத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி காசி நாட்டின் வாரிசு தேவாங்கனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தோம். திருமணம் செய்து கொள்ள ஹஸ்தினாபுரம் வரும் வழியிலேயே கங்கையில் படகு கவிழ்ந்து இறந்து போனான். அடுத்தபடி உங்கள் பரிந்துரையால் ஏற்பாடு செய்த சேதி நாட்டு இளவல் நாகம் தீண்டி இறந்தான். அதற்குப் பிறகு இரண்டு வருஷமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் அரசகுமாரர்கள் தட்டிக் கழிக்கிறார்கள். இது அத்தனையும் தெரிந்தும் நேற்று வசுசேனனுக்கு இவளை மண முடித்துக் கொள்ளுமாறு உங்களிடம் கேட்க வந்தது எங்கள் தவறுதானே? வசுசேனன் எங்களுக்கும் பிரியமானவன்தானே? அவன் உயிரை பணயம் வை என்று உங்கள் உயிர் நண்பரே உங்களைக் கேட்டிருக்கக் கூடாதுதான் அண்ணா, தவறு எங்கள் மீதுதான்.”

“உண்மைதான் அண்ணி, தவறு நம் மீதுதான்!” என்று துச்சாதனின் குரல் அறை வாசலில் இரைந்தது. அவன் பின்னால் கர்ணனைப் பார்த்துவிட்டு உள்ளே சேதி சொல்லப் போன சேடியின் முகமும் தெரிந்தது.

“இந்த சூதன் மகனை அங்க நாட்டு அரசனாக்கினோம். தோழன் தோழன் அண்ணன் மாமன் என்று கொண்டாடினோம். நமக்கு உண்மையிலேயே சரிசமானமாக வைத்தோம். சூத ரத்தம் என்று பார்க்காமல் நம் வீட்டு ரத்தினத்தை அவன் வீட்டுக்கு ஒளி தர அனுப்ப எண்ணினோம். மண உறவு கொண்டால் இவன் சூதன் என்ற பழி நீங்கும் என்று நினைத்தோம். எல்லாத் தவறும் நம் மீதுதான் அண்ணி!”

பானுமதி “தம்பி, கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்றாள்.

“அண்ணன் போட்ட பிச்சையில் உடல் வளர்த்த இவன் அண்ணன் சொல்லைத் தட்டி இருக்கிறான், பொறுமையா! முதலில் இந்த கர்ணனைக் கொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு உலகத்தில் உள்ள நிமித்திகர்கள் அனைவரையும் ஒவ்வொருவராகக் கொல்லப் போகிறேன். வாடா கர்ணா!” என்று துச்சாதனன் தன் தொடையைத் தட்டினான்.

கர்ணன் முகத்தில் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. உதட்டோரம் சின்னப் புன்னகை கூடத் தெரிந்தது. “இல்லை துச்சாதனா… இல்லை இளவரசே, நான் உங்களுக்கெதிராக ஆயுதம் எடுப்பதற்கில்லை” என்றான்.

“சிறிய தந்தையே, நீங்களே முடிவெடுத்து மாமாவுடன் போரிடுவதா? மூச்சு விடுவதைக் கூட அப்பாவின் அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது, அதுதான் உத்தமத் தம்பியின் லட்சணம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று த்யுதி மேலும் சிரிக்க ஆரம்பித்தாள்.

“சும்மா இரு த்யுதி! இந்தத் துரோகியைக் கொல்லாமல் விடமாட்டேன். கர்ணா, நீ ஆயுதம் எடுத்து வரும்வரை எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது. இங்கேயே இப்போதே மல்யுத்தம். ஒன்று நன்றி மறந்த நீ. இல்லாவிட்டால் நான். இருவரில் ஒருவர் இறக்கும் வரை போரிடுவோம் வா!” என்று துச்சாதனன் தன் தோளைத் தட்டினான்.

அறை வாசலில் மீண்டும் நிழலாடியது. “அதற்கு முன் நீ என்னோடு போரிட வேண்டி இருக்கும்” என்று துரியோதனின் குரல் சன்னமாகத்தான் ஒலித்தது. ஆனால் அது அந்த அறையில் இருந்த அனைவரையும் சிலையாக நிற்க வைத்தது. த்யுதியைத் தவிர.

கர்ணன் துரியோதனனைக் கண்டதும் இரண்டு எட்டு முன்வைத்தான். ஆனால் துரியோதனன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அதை உணர்ந்து தானாக பின்வாங்கினான்.

அப்போது உல்லாசமான குரலில் த்யுதி தன் அன்னையிடம் சொன்னாள். “பார்த்தாயா அம்மா? நேற்றிலிருந்து உன் கணவனை நீயும் நானும் தம்பிமாரும் மாமாவும் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். மூடிய கதவு மூடியதுதான், அறைக்குள் ஒரு அசைவு கூடத் தெரியவில்லை. இங்கே உன் அண்ணன்காரன் மெதுவான குரலில்தான் பேசிக் கொண்டிருக்கிறார். ஓடோடி வருகிறாரம்மா உன் கணவர்! அவருக்கு உன்னையும் என்னையும் எல்லாரையும் விட மாமாதானம்மா முக்கியம்!” என்றாள். அவள் அதை ரகசியமான குரலில் சொல்லவில்லை என்று அவளைத் தவிர அத்தனை பேருக்கும் தெரிந்திருந்தது. எவ்வளவுதான் முயன்றாலும் அவளால் அவள் சிரிப்பை முழுவதுமாக அடக்க முடியவில்லை. அவளுடைய சிரிப்பு அங்கே அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதில் மேலும் அதிகரித்தது.

சிலையாக நின்ற துச்சாதனனையும் அந்தக் குரல் எழுப்பியது. “இன்னுமா அண்ணா இந்த சூதன் மகன் மீது அன்பு காட்டுகிறீர்கள்? என் கையைக் கட்டிப் போடாதீர்கள் அண்ணா! ஒன்று அவன் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நான். உங்களை மறுத்துப் பேசிய இவன் நாவைத் துண்டித்தால்தான் என் மனம் ஆறும்” என்று வெஞ்சினம் பேசினான்.

“உன் ஒருவன் மனமாவது ஆறுதல் கொண்டால் சரிதான். வா, துச்சா… வாருங்கள் இளவரசே!” என்றான் கர்ணன். அப்படியே இடுப்பில் இருந்த தன் கச்சையை உடைவாளோடும் குறுவாளோடும் கழற்றிக் கீழே போட்டான்.

துரியோதனனின் இதழோரத்தில் சின்ன புன்சிரிப்பு வர ஆரம்பித்தது. “இங்கே என்ன உணர்ச்சி மிகுந்த காட்சிகளை நம் சூதர் நடித்துக் காட்டுகிறாரா?” என்றான்.

கர்ணன் அதிர்ச்சி அடைந்து துரியோதனனைத் திரும்பிப் பார்த்தான். முதலில் அவன் பார்த்தது துரியோதனனின் இதழோரத்துப் புன்முறுவலைத்தான். இப்போது அவன் இதழோரத்திலும் புன்னகை ஆரம்பித்தது. “க்ஷத்ரிய குல ஏந்தலே, சூதர்களின் ஒரே புரவலரே, இதற்கெல்லாம் பரிசு கொடுக்க மாட்டீர்களோ?” என்றான்.

“பரிசா? உனக்கா? மூடர்களுக்கெல்லாம் பரிசு தருவதற்கில்லை கர்ணா!”

“எல்லாரும் அழைத்தும் ஒரு நாள் இரவு முழுவதும் பூட்டிய கதவைத் திறக்காமல் ஆர்ப்பாட்டம் செய்யும் மகா அறிஞர் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!”

“எல்லாருமா? நீ அழைக்கவில்லையே!”

“துரியா…” என்று கர்ணன் குரல் தழுதழுத்தது. மேலும் பேசாமல் அவன் தன் கைகளை விரித்தான். துரியோதனன் விரைந்து வந்து அவனைத் தழுவிக் கொண்டான். ஓரிரு நிமிஷங்களுக்குப் பின் பிரிந்த இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கி நகைத்தார்கள். பிறகு மீண்டும் தழுவிக் கொண்டார்கள்.

இந்த முறை விலகிய பிறகு துரியோதனன் உரத்த குரலில் சொன்னான். “யாரங்கே! கொஞ்சம் மது கொண்டு வாருங்கள்!” என்றான். கர்ணன் “அப்படியே கொஞ்சம் பொரித்த மீன். நேற்றிரவிலிருந்து சாப்பிடவில்லை, இப்போதுதான் பசிக்கிறது” என்று கூடச் சேர்ந்து கொண்டான். பானுமதியும் துச்சாதனனும் பேச்சிழந்து ஸ்தம்பித்து நின்றார்கள். சளசளவென்று பேசும் த்யுதி கூட என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைத்து நின்றாள்.

இப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கனிவோடு நோக்கினார்கள். துரியோதனன் “என்னை, என் நட்பை குறைத்து மதிப்பிட்டுவிட்டாய் கர்ணா!” என்றான். “இல்லை துரியா, நீதான் என்னை, என் மனோதிடத்தை, என் தைரியத்தை, அதிகமாக மதிப்பிட்டுவிட்டாய்” என்று கர்ணன் பதிலளித்தான்.

karna-s-wifeபானுமதி, துச்சாதனன், த்யுதி மூவரில் த்யுதிதான் முதலில் பேச வாயெடுத்தாள். அவளுக்கு சிரிப்பு, வாய் கொள்ளாத சிரிப்பு. “என்ன நடக்கிறது… ஹிஹிஹி… என்ன நடக்கிறது, இங்கே? ஹிஹிஹி! இரண்டு பேரும் எதிரிகளாகிவிட்டீர்கள்… ஹிஹிஹி… என்று எல்லாரும் பயந்தார்கள், என்னவோ நட்பு இன்னும் அதிகமானது போல இருக்கிறதே!” என்றாள்.

துச்சாதனன் “ஆம் த்யுதி, எனக்கு தலையே சுற்றுகிறது. அண்ணி, உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா?” என்றான்.

துரியோதனன் “உனக்கு இதெல்லாம் என்று புரிந்திருக்கிறது? த்யுதிக்கு ஒரு குறை ஏற்பட நான் சம்மதித்தாலும் கர்ணன் சம்மதிக்க மாட்டான், அவ்வளவுதான். அது குறை என்று நான் நினைக்கமாட்டேன் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை என்று சினம் ஆரம்பித்தது. அவன் உணர்வுகள் எனக்கே புரியாது என்று நினைத்து மருகிக் கொண்டிருக்கிறானே என்று கோபம் அதிகரித்துக் கொண்டே போனது, அவ்வளவுதான் துச்சா” என்றான்.

பானுமதியின் விழியோரம் கண்ணீர் விழத் தயாராக தளும்பி நின்றது.”அவர் மறுத்தது வசுசேனனின் நலனுக்காக அல்ல, த்யுதியின் நலனுக்காக” என்று அவள் மெதுவாக முனகினாள்.

“ஆம் பானு. கர்ணனை மற்றவர் இகழ்ந்து பேசுவது அவனுக்கும் புதிதல்ல, நமக்கும் புதிதல்ல. த்யுதியையும் சூதன்…”

“போதும் துரியா, விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதே. இத்தனை காலம் சென்றும் என்னை சூதன் மகன் என்று ஒவ்வொருவரும் பேசும்போது என் உள்ளத்தில் முள் குத்திக் கிழிக்கிறது. இப்போது இந்தச் சிறு பெண்ணையும் சூதன் வீட்டு…” கர்ணனின் குரல் திக்கியது. அவனால் மேலே பேச முடியவில்லை.

“ஆமாம், இவளை இழிவாகப் பேச நம் சூதர் எவருக்கும் வாய்ப்பளிக்க மாட்டாராம்! இவனை சூதன் மகன் என்று இழித்துப் பேசுபவர்கள் என்னையும் சேர்த்துத்தான் இழித்துப் பேசுகிறார்கள் என்பது இன்னும் இவருக்குப் புரியவில்லை. நம் பெண் போயும் போயும் இவனுக்குத்தான் மருமகள் என்று யாராவது இழித்துப் பேசினால் அது எனக்கும் ஒன்றும் புதிய இழிசொல் இல்லை, அது ஒரு பொருட்டும் இல்லை என்று இவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை”

“ஆயிரம்தான் நட்பு என்றாலும் அந்த வலி உனக்குப் புரியப் போவதில்லை, துரியா! புரியவும் வேண்டாம். உன் ஒருவனைத் தவிர வேறு யார் சொன்னாலும் அது இழிசொல்தான். அந்த இழிசொல்லை எதிர்கொள்வதில்தான் நான் என் முழு வாழ்வையும் கழித்திருக்கிறேன். மான்குட்டி போல சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் இவள் முகத்திலும் அந்த சாட்டையடி விழ நான் சம்மதியேன். ஐவரின் மனைவி பத்தினி அல்ல என்று அறைகூவினவன் நான். நம்மைப் பழி வாங்கவே காத்திருக்கும் அந்த எதிரிகள் சூதனுக்குப் பெண்ணைக் கொடுத்தான் ஹஸ்தினாபுர மன்னன் என்று நம்மைப் பார்த்து நகைக்க மாட்டார்களா? எதிரிகளை விடு துரியா, பீஷ்மரும், துரோணரும், விதுரரும் என்ன சொல்வார்கள்? உன் தந்தையும் தாயும் இதற்கு மனப்பூர்வமான சம்மதம் தருவார்களா? யுயுத்சு உன் சகோதரன் என்று எந்த இளவரசியாவது அவனை மணந்து கொண்டிருக்கிறாளா என்ன? அரண்மனைப் பாணர்களும் விறலிகளும் என்ன பாடுவார்கள் என்று நினைக்கிறாய்? என்னால் முடியாதுதான் துரியா முடியாதுதான்!”

த்யுதி கர்ணனை ஓடி வந்து தழுவிக் கொண்டாள். கர்ணன் மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டு அவள் தலையில் கை வைத்து “”உங்கள் எவருக்கும் அந்த இழிசொல்லின் பாரம் புரியாது. அப்படி எதிர்காலத்திலும் புரியாமலே இருக்க இறைவன் அருள் புரியட்டும்” என்று ஆசி வழங்கினான்.

துச்சாதனனும் இந்த உலகத்துக்குத் திரும்பினான். மெதுவாக கர்ணனை நோக்கி நடந்து வந்தவன் கடைசி சில அடிகளில் விரைந்து வந்து கர்ணனை மார்புறத் தழுவிக் கொண்டான். ” ‘ஆயிரம் ராமர் உன்கேழ் ஆவரோ’ என்று குகன் பரதனைப் பார்த்து வியந்தானாம். ஆயிரம் துச்சாதனர் உன்கேழ் ஆக மாட்டார்கள் கர்ணா!” என்று உணர்ச்சி மிகுந்த குரலில் சொன்னான். பிறகு த்யுதியை நோக்கித் திரும்பினான். “நீ கேட்பதற்குள் நானே சொல்லிவிடுகிறேன், ஆம், நானும் ராமாயணம் படித்திருக்கேனாக்கும்!” என்று சிரித்தான்.

************

பின்குறிப்பு:

வியாச பாரதத்தில் கர்ணன் ஒரு முறை தானும் தன் பிள்ளைகளும் சூதர்களைத்தான் மணக்க வேண்டி இருந்தது என்றும் எந்த க்ஷத்ரியனும் அவனோடு மண உறவு கொள்ளத் தயாராக இல்லை என்றும் புலம்புகிறான்.

கர்ணனின் குடும்பத்தோடு மண உறவு கொள்ள ஏன் நூறு கௌரவர்களில் ஒருவர் கூட முன்வரவில்லை என்று நான் வியந்திருக்கிறேன். துரியோதனனின் நட்பு மேலோட்டமானதுதானோ? அவர்களுக்குள் இருந்தது விசுவாசம் மட்டும்தானோ? இல்லை கர்ணனின் பிறப்பு எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் யாரும் பேச விரும்பாத ரகசியமோ? “அண்ணன்” முறை உள்ளவன் கர்ணன் என்று தெரிந்திருந்ததால் கௌரவர் யாரும் மண உறவு கொள்ள முன் வரவில்லையோ? என் ஒரு யூகத்தை சிறுகதையாக எழுதி இருக்கிறேன்.

Tags: , , , , , , , , , , , , , ,

 

13 மறுமொழிகள் ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை]

 1. JavaKumar on February 19, 2014 at 11:03 am

  Krishna’s son Samba abducts and marries Duryodhana’s daughter Lakshmana as per the original version. Isn’t it?

 2. அன்புக்கினிய ஆர்வி,
  மஹாபாரதப்பெருங்காவியத்தில் உள்ள ஒரு இடைவெளியைக்கொண்டு ஒரு அருமையான சிறுகதையை வழங்கி உள்ளீர்கள். உங்கள் வரிகள் கதையை கண்முன்னேகொண்டுவருகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

 3. ஸ்ரீராம் on February 19, 2014 at 1:41 pm

  அற்புதம்.

 4. ஸ்ரீராம் on February 19, 2014 at 1:42 pm

  புதிர்முடிச்சு அவிழுமிடமும், கர்ணன் – துரியோதனன் நட்பின் ஆழம் வெளிப்படும் இடமும் ரசிக்க வைத்தன. அருமை.

 5. Geetha Sambasivam on February 19, 2014 at 2:23 pm

  அருமையான கதை. புதிய கோணம்.

 6. ஒரு அரிசோனன் on February 20, 2014 at 3:47 am

  விறுவிறுப்பாக இருக்கிறது. புதிய கண்ணோட்டம். நன்றாக இருக்கிறது.

 7. […] ஆயிரம் துச்சாதனர் என்று இன்னும் ஒரு மகாபாரதச் சிறுகதை. பதித்த தமிழ் ஹிந்து தளத்தினருக்கும் ஜடாயுவுக்கும் நன்றி! […]

 8. சிலிகான் ஷெல்ஃப் on February 20, 2014 at 11:04 am

  […] ஆயிரம் துச்சாதனர் என்று இன்னும் ஒரு மகாபாரதச் சிறுகதை. பதித்த தமிழ் ஹிந்து தளத்தினருக்கும் ஜடாயுவுக்கும் நன்றி! […]

 9. ஜடாயு on February 20, 2014 at 4:16 pm

  ஆர்.வி, துச்சாதனனை ராம காதையிலிருந்து, அதுவும் கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்ட வைத்து விட்டீர்களே.. 🙂 சபாஷ்!

 10. T K Ramesh on February 20, 2014 at 7:09 pm

  I have read about the friendship of Krishna and Kuchela. The point at which the knot is removed in this story makes me feel the friendship of Duryodhana and Karna to be better than that of Krishna and Kuchela.

  Wonderful creativity and great presentation of a thought seed from Mahabharatha.

  Continue your good work.

 11. RV on February 21, 2014 at 11:31 am

  படித்த, மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி!

  ஜாவா குமார், ஆம் சாம்பன் துரியோதனனின் மகள் லக்ஷ்மணையை மணந்ததாகச் சொல்வார்கள். அதனால்தான் எனக்கு சவுகரியமாக இன்னொரு மகளைப் படைத்துக் கொண்டேன்.

  ரமேஷ், அதுக்குள்ள படிச்சிட்டியா? 🙂

 12. Prassannasundhar N on February 21, 2014 at 11:33 pm

  நல்லதொரு படைப்பு…. நன்றிகள் பல!

 13. B SRIVATHSAN on March 7, 2014 at 11:26 am

  நன்றாக இருந்தது

  இது வரை நன் படிக்காதது போல் இருந்ததது

  அனேகமாக இது மிகுந்த கற்பனை போல் தன உள்ளது

  பா ஸ்ரீவத்சன்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*