ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்

லங்கையில் யாழ்ப்பாணத்திற்கும் பழம்பெரும் நகரான அனுராதபுரத்திற்கும் இடையே விரிந்து கிடக்கும் நிலப்பரப்பை வன்னி என்று குறிப்பிடுவர். இது மேற்கே மன்னாரையும் கிழக்கே திருகோணமலையையும் எல்லையாகக் கொண்டது. இவ்விரு எல்லைகளிலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய திருத்தலங்கள் முறையே அமைவு பெற்றுள்ளன. இந்த வன்னிப்பகுதி சுமார் 3000 சதுரமைல்கள் கொண்ட நிலப்பரப்பாகும்.

இதில் கிழக்கெல்லையான திருகோணமலையில் கோணேசருக்கு திருக்கோயில் எழுப்பிய குளக்கோட்டன் என்ற அரசன் அக்கோயிலையும் அதன் சொத்துக்களையும் பராமரிக்க தமிழகத்தின் பாண்டிய நாட்டிலிருந்து வரவழைத்தவர்களே வன்னியர்கள் ஆவர். இதே போல அவ்வப்போது நிகழ்ந்த சோழப்படையெடுப்புக்களின் போது வந்த படைவீரர்களும் இவ்வகுப்பினுள் சார்ந்தனர். இவ்வாறு வன்னியர்கள் குடியேறிய பகுதியே வன்னி எனப்படுகிறது.

இவ்வாறு வன்னியர்கள் வாழ்ந்த பெருநிலப்பரப்பான வன்னியில் பல சிவாலயங்கள் அமைவு பெற்றிருந்ததாக தொல்லியல்சான்றுகள், இலக்கிய சான்றுகள், வரலாற்றுக்குறிப்புகள் கிடைக்கின்றன.

thiruketheeswaramதிருக்கேதீஸ்வரம்

ஆதியில் நவக்கிரஹதேவர்களுள் ஒருவரான கேது பகவான் பூஜித்த ஸ்தலமாகச் சொல்லப்பெறும் கேதீஸ்வரம் வன்னியர்களின் வருகைக்கு முன்னரே சிறப்புற்றிருந்த திருத்தலமாகும்.

இலங்கையின் ஆதிகுடியான நாகர்களால் வழிபாடாற்றப்பெற்ற இத்தலம் திருஞானசம்பந்தராலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் தேவாரத்திருப்பதிகங்களால் போற்றப்பெற்ற சிவாலயமாகும்.

இங்கே பாலாவிக்கரையில் கௌரியம்மையுடன் காட்சி தரும் கேதீஸ்வரப்பெருமானை

அங்கம் மொழி அன்னாரவர் அமரர் தொழுதேத்த
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பங்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல்
செங்கணர வசைத்தான் திருக்கேதீச்சரத்தானே

என்று சுந்தரர் போற்றுகிறார்.

இதில் ‘வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்’ என்று சொல்வதால் அக்காலத்தில் கேதீஸ்வரக் கடலோரம் மிகவும் செல்வச்செழிப்பும், சீரும் பொலிவும் கொண்டதாகவும், மாநகராயும் விளங்கிற்று என்று கருதலாம்.

இராவணனின் மனைவியர் பலர். அவர்களுள், பேரழகு மிக்கவளும் , பட்டத்து ராணியாக விளங்கியவளுமான மண்டோதரி சிறந்த கற்புக்கரசி. இவள் மயன் என்ற சிற்றரசனின் மகள். மயன் ஆட்சி செய்த இடத்தின் பெயர் மாதோட்டம் என்ற மாந்தை. (மாதோட்டம் பண்டைய இலங்கையின் சிறப்பு வாய்ந்த துறைமுகம்.) மண்டோதரி சிறந்த சிவபக்தை என்பதும் அவள் மாதோட்டத்தில் இருந்த திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலில் சிவபெருமானை வழிபாடு செய்ததையும் பண்டைய இதிகாசங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன..

பிற்பட்ட காலகட்டத்தில், இலங்கையைப் போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியபோது, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகவும், இந்துத் திருக்கோயில்களில் நிறைந்திருந்த செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் இந்துக் கோயில்கள அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.

அவ்வாறே, திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலும் 1505 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின்னர், புராதனமான இத் திருக்கோயிலின் இடிபாடுகளில் மீதமிருந்த பொருட்கள் 1894 ஆம் ஆண்டு நிகழ்ந்த புதைபொருள் ஆராய்வின்போது கிடைக்கப்பெற்றன.

திருக்கேதீஸ்வரம் தேர்த்திருவிழா - 2013

திருக்கேதீஸ்வரம் தேர்த்திருவிழா – 2013

அந்த ஆராய்ச்சியின்போது, திருக்கேதீஸ்வரப் பெருமானின் சிவலிங்கமும் மேலும் பல வழிபாட்டுத் திருவுருவங்களும் கூட இறைவனருளால் கிடைக்கப் பெற்றன.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் அருமுயற்சியாலும், ஈழத்துச் சைவப் பெருமக்களின் ஒன்றுசேர்ந்த உழைப்பாலும் 1910 ஆம் ஆண்டில் இத் திருக்கோயில் புதிய பொலிவுடன் சிவாகம விதிகளுக்கு இணங்க மீண்டும் கட்டப்பட்டது. பாலாவிப் புனித தீர்த்தக் குளமும் புதுப்பிக்கப்பட்டது.

ஈழத் திருநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இத் திருக்கோயிலில் இறைவனை வழிபடுவதற்காக மக்கள் கூடி வருகின்றார்கள். மகா சிவராத்திரி விழா இத் திருக்கோயிலில் வெகு விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

five_temples_mapதிருக்கோணேஸ்வரம்

ஈழத்து பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது.

கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான்.

இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

koneswaram_700

இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்குளத்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான்.

eezham_kalvettuதெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார்.

பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது.

குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

இச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.

இப்பெருமானை திருஞானசம்பந்தர் போற்றிப்பாடியுள்ளார். அன்னை மாதுமையாளுடன் இன்றும் கோணமலையில் அருளாட்சி செய்கிறார் கோணநாதர்.thirukonamalai_thevaram

உருத்திரபுரீஸ்வரம்

உருத்திரபுரீஸ்வரம் ஆலயம் அல்லது பொதுவாக உருத்திரபுரம் சிவன் கோயில் என்பது இலங்கையில் கிளிநொச்சி -உருத்திரபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில். கிளிநொச்சி கூழாவடிச் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும். தற்போது அவ்வீதி நீவில் என்ற கிராமத்தினூடாகவே செல்கின்றது. ஆரம்பத்தில் அப்பாதையின் இருமருங்கும் அடர்ந்த காடாகவும் வண்டில் மாட்டுப் பாதையொன்றும்தான் இருந்தது. ஐம்பது அடி உயரத்திற்கும் மேற்பட்ட வீரமரம், பாலைமரம் மற்றும் பலவகை மரங்கள் சூழ்ந்த காட்டினூடாகவே அப்பாதையில் பயணிக்கவேண்டும். மந்திக் குரங்குகள் அப்பாதையில் காணப்படும்.

1950களில் அப்பிரதேசத்தில் செங்கற்களாலான இடிபாடு ஒன்று வேலாயுதசாமியால் கண்டறியப்பட்டது. பின்பு ஊர்ப்பெரியவர்களும் இணைந்து தோண்டிப்பார்த்து அவ்விடம் புராதன சிவன் கோவிலின் சிதைவுகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வேலாயுதசாமியார் அப்பகுதியில் சிறு குடிசையொன்றில் உருவாக்கி மூலஸ்தானத்தில் வேல் மட்டுமேயிருந்த முருகன் ஆலயம் மட்டுமே அவரால் பராமரிக்கப்பட்டு வந்தது.யாழ்ப்பாணத்திலிருந்தும் பக்கதர்கள் வந்து சென்றனர்.

இத்தல இடிபாடுகளைக் கொண்டும், இங்கு கிடைத்த சிவலிங்கத்தின் அமைப்பைக் கொண்டும் இத்தலம் சோழர் காலத்திற்கும் முந்தையது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்…

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில்

போர்த்துக்கீசர் காலத்தில் திருகோணமலையின் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைப் போத்துக்கேயர் அழித்தபோது அங்கிருந்த சில விக்கிரகங்களைக் காப்பாற்றுதவற்காக குருமார் மீட்டு எடுத்தனர். பின்னர் இந்த விக்கிரகங்களை தம்பலகாமத்தில் பிரதிட்டை பண்ணியதன் மூலம் உருவாக்கப்பட்டதே இந்தக் கோவிலாகும்.

thambalakamam_temple

குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கிபி 1624ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் இ தொழும்பாளர்களும் இபக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும்இ காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடு இயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள சுவாமி மலையில் ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர்.

இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார்.

மன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து சுவாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும் மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது. இன்றும் இக்கிராமத்தில் இக்கோவில் சிறப்புடன் விளங்குகின்றது..

ஓட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம்

வன்னிமன்னர்களின் முழு ஆணைக்குட்பட்ட இன்றைக்கு முல்லைத்தீவு என்று அழைக்கப்படும் இடத்தில் ஒட்டுசுட்டான் என்ற ஊரில் சிறந்து விளங்கும் சிவஸ்தலமாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றது. இங்குள்ள மூலவர் ஆவடையார் இல்லாத நிலையில் நிலத்தில் சுயம்புவாக தோன்றிய வடிவில் உள்ள சிவலிங்கம் ஆகும். எனவே, இம்மூர்த்தி தான்தோன்றீஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார். இத்தலத்தை போர்த்துக்கேயரால் அழிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

oddisuttan_temple

இன்றைக்கும் பழமையான திருவுருவங்களும், பண்டாரவன்னியன் என்ற அரசனினால் ஆலயத்திற்கு வழங்கப்பட்டதாக கருதப்படும் அண்டா ஒன்றும் இத்தலத்தில் உள்ளது.

திருக்கரசை சிவாலயம்

மூதூர் என்ற நகரத்திற்கு அருகில் மகாவலிகங்கைக்கரையில் ‘திருக்கரசை’ என்ற சிவாலயம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்வாலயம் குறித்து ‘திருக்கரசைப்புராணம்’ என்ற தமிழ்ச்செய்யுள்களால் அமைந்த புராணமும் உள்ளது. தற்போது இவ்வாலயத்திற்குரிய விநாயகர், சிவலிங்கம் முதலாய மூர்த்திகள் ‘அகஸ்தியர் ஸ்தாபனம்’ என்று அழைக்கப்பெறும் இடத்தில் வைத்து வழிபாடாற்றப்பெறுகின்றன.

இதே போலவே, மணித்தலை, அசுவகிரி, வவுனிக்குளம், சந்திரசேகரேஸ்வரம் என்ற ஊர்களிலும் சிவாலயங்கள் இருந்தன என்று அறியமுடிகின்றது.

Tags: , , , , , , , , , , , , , , , , ,

 

13 மறுமொழிகள் ஈழத்து வன்னிச் சிவாலயங்கள்

 1. ஒரு அரிசோனன் on February 27, 2014 at 9:34 am

  ஈழத்துச் சிவன் கோயில்களைப் பற்றி எழுதியமைக்கு நன்றி. நல்ல படங்களையும் இணைத்துள்ளீர்கள். இலங்கைக்கே பறந்து சென்று சிவ தரிசனம் செய்த மாதிரி உள்ளது.

 2. C.N.Muthukumaraswamy on February 27, 2014 at 10:40 am

  வன்னி திருக்கோயில்களைத் தன்கள் கண்கொண்டு தரிசித்தேன்.

 3. Madhan on February 27, 2014 at 1:26 pm

  VERY INFORMATIVE!! BUT IT IS SAD TO HEAR MOST OF THE TEMPLES WERE DESTROYED BY PORTUGUESE AND WHAT WE SEE NOW IS ONLY FEW CENTURIES OLD TEMPLES.

 4. Java Kumar on February 27, 2014 at 11:31 pm

  அற்புதமான கட்டுரைக்கு நன்றி.

  ஆழ்க தீயதெல்லாம் சூழ்க அரன் நாமமே!

 5. Vanthia Thevan on February 28, 2014 at 12:22 am

  மிகவும் நன்றி. என் போன்றவர்களுக்கு இலங்கையின் வரலாற்று சிறப்பும் அங்கு தழைத்து ஓங்கிய இந்து சமய பண்பாட்டையும் சிறப்பான முறையில் இத்தகைய பதிப்புகள் மூலம் விளக்கிவரும் உங்கள் பணிகள் சிறக்க இறைவனை வேண்டி நிற்கிறேன்.

 6. venkat on February 28, 2014 at 8:53 pm

  லங்கா தமிழர்களை அழிக்கும் போது வேடிக்கை பார்த்தது ஏனோ?

 7. s natarajan on March 1, 2014 at 6:02 pm

  fine article for informative learning

 8. க்ருஷ்ணகுமார் on March 2, 2014 at 4:34 pm

  ஈழத்து பஞ்சேஸ்வர க்ஷேத்ரங்களை மனக்கண்ணால் தரிசிக்க முடிந்ததற்கு நன்றி.

  வாசகர்கள்,

  http://viyaasan.blogspot.in/2014/02/blog-post_27.html

  மேற்கண்ட உரலையும் வாசித்து பயன் பெறலாம். கடைசீயில் அருமையான பாடலையும் கேழ்க்கவும்.

 9. க்ருஷ்ணகுமார் on March 2, 2014 at 4:43 pm

  கதிர்காமம் பற்றியும் நல்லூர் கந்தசாமி கோவில் பற்றியும் ஈழத்து பஞ்சேஸ்வர ஸ்தலங்கள் பற்றியும் ப்ரம்மஸ்ரீ மயூரகிரி சர்மா அவர்கள் அருமையாக வ்யாசங்கள் பகிர்ந்துள்ளார்கள். அதுபோல் ஈழத்தில் உள்ள விண்ணகரங்களைப் பற்றியும் விபரமாக ஒரு வ்யாசம் சமர்ப்பிக்க வேணும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

 10. Subramaniam Logan on March 2, 2014 at 5:54 pm

  வழமைபோன்று உங்கள் பதிவை வாசித்து பெருமை கொண்டேன். ஏனோ தேவிட்டும்படியான விபரம் போதவில்லை என்று உணர்கின்றேன். தொட்டீச்வரம் இருந்தமைக்கான பௌதீக தடயங்கள் அங்கு முற்றாக அழிந்துவிட்டன. தெஹிவளையில் சிலவருடங்கள் முன்பாக கண்டெடுக்கப்பட்ட சில தெய்வ சிலைகள் அந்தகொவிலுக்குரியதாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை வீரகேசரி பத்திரிகையில் வாசித்திருந்தேன். அங்கு ஒரு கோவிலை புதியதாகவேனும் நிறுவுவதற்கு தமில்ஹிண்டு தளத்தின்மூலம் முயற்சி மேற்கொண்டால் ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்பது எனது நீண்டகால ஆதங்கம். ஆனால் இந்த தளத்தில் பதிவிடுவோரில் பலரும் பதிவுகளுக்கு கருத்து இடுவோரில் பலரும் ஈழத்தமிழர்களை இந்துக்களாக பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் உள்ள இந்துவிரோதிகள் (கருணா,வை.கோ., சீமான் போன்ற) உங்களை போன்ற ஈழத்தவர்களின் அரசியல் நியாயங்களை மனித உரிமைகளை ஆதரிப்பதாலும் இந்திய சார்புநிலை பத்திரிகைகள் வெளியிடும் திரிபுபடுத்தப்பட்ட அல்லது பொய்யான தகவல்களை கமூடித்தனமாகவோ அல்லது வேண்டுமென்றோ நம்பிவிடுவதால் இந்த நிலை என்பதுதான் எம் போன்றவர்களின் அபிப்ராயம். எனவே நாங்கள்தான் முழுமுயற்சி எடுத்து அந்த இடத்தில தொட்டீச்வரம் என்ற பெயரிலேயே ஒரு ஆலையத்தை நிறுவவேண்டும். சோழக்கொடி அங்கு பறந்திதிருந்தால் இது இலகுவாக முடிந்திருக்கும் அனால் எமத துரதிர்ஷ்டம் இந்துதேசம் அதனை அனுமதிக்கவில்லை.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்

 11. லோகன் சுப்ரமணியம்
  “இந்த தளத்தில் பதிவிடுவோரில் பலரும் பதிவுகளுக்கு கருத்து இடுவோரில் பலரும் ஈழத்தமிழர்களை இந்துக்களாக பார்ப்பதில்லை”.
  நிச்சயம் அப்படி இல்லை. இலங்கைக்குறித்தக்கட்டுரைகளையும் ஆசிரியர் குழுவின் கட்டுரைகளையும் வாசித்துப்பாருங்கள். இந்த தளத்தின் சித்தாந்தத்தினை சிரமேற்கொள்ளும் எம்மனைய பலரும் ஈழத்தமிழருக்கு ஆதரவாகவே எமது பின்னூட்டங்களில் எழுதிவந்துள்ளோம். ஈழத்தின் வரலாற்றில் ஹிந்துசமயத்திற்கு நிகழ்ந்த அத்துணை அநீதிகளையும் வாசிக்கும் தொறும் வருந்தினோம். அத்தகு துன்பங்களைத்தாங்கி சமயம், பண்பாடு, மொழி ஆகியவற்றைப்போற்றிவாழும் எம்மக்களை எஞ்ஞான்றும் போற்றுகிறோம். அவர்களுக்கு எந்தவகையினாலும் ஆதரவு தரமுடியுமானாலும் அதை செய்வோம். ஈழத்து மக்களின் வாழ்வில் அமைதி ஆனந்தம் மலர எப்போதும் பிரார்த்திக்கும்.
  சிவஸ்ரீ

 12. venkat on November 19, 2015 at 1:40 pm

  ஈழத்தில் உள்ள சிவாலயங்கள் குறித்த கட்டுரை கண்டு பிரமித்தேன் ! சைவம் இலங்கை முழுமைக்கும் எவ்வாறு சிறப்புற பரவியிருந்தது. தமிழர்கள் எவ்வளவு பெருமையுடன் வாழ்ந்திருந்தனர் , என்பதை என்னும் போது கண்களில் நீர் கசிகிறது ! ஈழ தமிழர்களுக்கு நிம்மதியை தர அமைதி ஆட்களாலும் முடியவில்லை ! ஆயுத ஆட்களாலும் முடியவில்லை ! நமக்கு கதி இறைவன் மட்டுமே என்று ஈசனிடம் இலங்கை தமிழ் மக்கள் ஒன்று சேர பிரார்த்தனை செய்தால் ஈசன் மனமிரங்கி எல்லா நல்ல வளமும் அருள்வார் என்பதில் ஐயமில்லை !
  ஓம் நம சிவாய !

 13. Sugantharaj on September 15, 2016 at 9:35 pm

  நல்ல கட்டுரைகள், வாசிக்க இனிமையாக உள்ளன, நன்றிகள் பல.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*