புத்தாண்டில் ஒரு புது சபதம்!

Lotus Blooms

சில வரலாற்றுத் தருணங்கள் வரும்போதே ஒரு முன்னறிவிப்புடன் வரும். எதிர்காலத்தைக் கட்டமைக்கும் அந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு என்பது வரலாற்றையே மாற்றி எழுதுவது தான். அப்படிப்பட்ட தருணம் தமிழகத்திற்கு வருகிறது ஏப்ரல் 24-ல்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16வது லோக்சபா தேர்தல், நமது நாட்டிற்கே திருப்புமுனையாக அமைந்திருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இத்தேர்தல் இதுவரை நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கட்சி அரசியலை மீறி, அரசுக்கு எதிரான மனப்போக்கையும் தாண்டி, எதிர்கால நாயகர் ஒருவரை மையமாகக் கொண்டு நடைபெறும் இத்தேர்தலில், நரேந்திர மோடி என்ற சொல்லே பிரதானம்.

ஆதரவோ, எதிர்ப்போ, மோடி இப்போது பெற்றுள்ள முக்கியத்துவத்தை இதுவரை சுதந்திர இந்தியாவில் எந்தத் தலைவரும் பெற்றிருக்கவில்லை என்பது உண்மை. சுதந்திரம் பெற்ற காலத்தில் நட்டின் தனிப்பெரும் தலைவராக, முடிசூடா மன்னராக விளங்கிய ஜவஹர்லால் நேருவுக்கும், 1978-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயபிரகாஷ் நாராயணனுக்கும், 1998-2004ல் கூட்டணி அரசியலை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அடல் பிகாரி வாஜ்பாய்க்கும் கிட்டாத முக்கியத்துவம் மோடிக்கு கிடைத்திருக்கிறது. ஏனெனில், இதுவரை இருந்த இந்தியா வேறு; மோடி படைக்கப்போகும் இந்தியா வேறு என்பதை நாட்டின் பெரும்பாலான மக்கள் உள்ளூற உணர்ந்துள்ளனர். கண்டிப்பாக, இது வரலாற்றுத் தருணம் தான்.

நாட்டின் மேற்குத்திசையில் இருக்கும் குஜராத் மாநிலத்தை தனது மூன்று ஆட்சிக்காலங்களில் அற்புதமான மாநிலமாக மாற்றிக் காட்டிய அம்மாநில முதல்வர் மோடியின் செயலூக்கமே அவரை தேசிய மைய அரசியலுக்கு இழுத்துவந்திருக்கிறது. அதை தென்சிசையில் உள்ள தமிழகம் புரிந்துகொண்டுவிட்டதையே, இங்கு அமைந்த மாபெரும் அரசியல் கூட்டணி காட்டுகிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னறிவிக்கப்பட்ட மோடியை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டுசேர்க்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்றனர், பாஜகவின் புதிய கூட்டணித் தோழர்கள்.

இந்த அனுபவம் பாஜகவுக்கு புதியது. தமிழ்கத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக இயங்கியதில்லை. திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்வதையே வழக்கமாகக் கொண்ட காங்கிரஸைப் பின்தொடர்ந்த்து பாஜக. சிலநேரங்களில் தனித்துவிடப்பட்ட அநாதையாக பாஜக தத்தளித்ததும் உண்டு. அதுவெல்லாம் பழங்கதை. இப்போது, இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, திமுக- அதிமுக என்ற இருதுருவ அரசியலை முறியடிக்கும் விதமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறது பாஜக.

இரு பிரதான திராவிடக் கட்சிகளின் வெறுப்பரசியலால் பொது நாகரிகம் குலைந்துள்ள மாநில அரசியல் சூழலில், புதிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது இந்தப் புதிய அணி. வைகோவின் மதிமுக, விஜயகாந்தின் தேமுதிக, ராமதாஸின் பாமக, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, புதுவை முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்கான அறைகூவலை விடுத்திருக்கிறது.Modi and Flag

ஊழல் அரக்கனை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய பெருமை திமுக தலைவர் கருணாநிதிக்கே உரித்தானது. அதை அமைப்புரீதியாக வளர்த்தெடுத்ததில் அதிமுக தலைவி ஜெயலலிதாவின் பங்களிப்பு கருணாநிதிக்கு சற்றும் குறைந்ததல்ல. அரசு நலத்திட்டங்களில் தரகுக் கழிவை அறிமுகப்படுத்திய இவ்விரு கட்சிகளுமே, ஒன்றையொன்று எதிர்த்தபடி அரசியல் நாகரிகத்தைக் காற்றில் பறக்கவிடச் செய்தன. இரு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டுகொண்டு, பழிவாங்கும் அரசியல் நாடகத்தை நடத்துவதால், இவ்விரு கட்சிகளையும் மீறி புதிய கட்சிகள் தலையெடுக்க முடிவதில்லை.

இவ்விரு கட்சிகளுக்கும் மாற்றாக வைகோ 1990களில் உருவாக்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), அரசியல் நிர்பந்தங்கள், தேர்தல் கூட்டணிகளால் சுயம் இழந்து முகவரி இழந்தது. எனினும், தமிழகத்தின் முன்னிலை அரசியல் தலைவராக அவர் மதிக்கப்படுகிறார். அவரது தமிழீழம் உள்ளிட்ட சில அரசியல் நிலைப்பாடுகள் முரண்பாடாகத் தோன்றினாலும், கொண்ட கொள்கைக்காக அயராது பாடுபட்டு வருபவர் அவர்.

1980களில் வன்னியர்களுக்கான அரசியல்தளமாகத் துவங்கிய பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) பிற்பாடு தமிழ்ப் பண்பாடு, மொழி, சமூகநலக் கொள்கைகளை அறிவித்து மாற்று அரசியல் கட்சியாக மாற விழைந்தது. ஆனால், வன்னியர் கட்சி என்ற அதன் அடையாளம் அதனை பொதுவான அரசியல் கட்சியாக தரமுயர்த்த தடையாக இருந்து வந்தது. எனினும், மருத்துவர் ராமதாஸின் மதுவிலக்கு, போதை எதிர்ப்பு உள்ளிட்ட சில கொள்கைகள் நாடு முழுவதிலும் பரவ வேண்டியவை என்றால் மிகையில்லை.

திமுக- அதிமுக என்ற இருகட்சி அரசியலுக்கு மாற்றாக புதிய கட்சியை உருவாக்க விழைந்த நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் (தேமுதிக) குறுகிய காலத்தில் இரு அரசியல் கட்சிகளாலும் பந்தாடப்பட்டது. குறிப்பாக தமிழக ஆளும் கட்சியான அதிமுகவின் சினப் பார்வையை எதிர்கொண்ட விஜயகாந்த், தான் பாடுபட்டு உருவாக்கிய எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து இழந்து வருகிறார். எத்ற்கும் ஒரு விலைபேசும் தமிழக அரசியல் சூழலில் தேமுதிக, புயலில் அகப்பட்ட தோணி போலத் தள்ளாடியது. ஆயினும், ஜெயலலிதா, கருணாநிதிக்கு அடுத்த மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர் விஜயகாந்த் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1967-லிலிருந்து திராவிட நச்சு அரசியல் பரவிய தமிழகத்தில் தேசியக் கட்சியான பாஜக காலூன்ற முடியாமல் தவித்து வந்தது. இந்நிலையில் தான் இந்திய அரசியலில் புதிய விடிவெள்ளியாக உதித்த மோடியின் பிராபல்யம், தமிழகத்தில் புதிய மாற்று அணியை உருவாக்கி இருக்கிறது. தமிழகத்தில் சூழ்நிலைக் கைதிகளாக இருந்த வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோரை அணுகி, மோடி என்ற பசையால் இணைத்து ஓரணி கண்டிருக்கிறார் பாஜகவின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இவற்றுடன் கொங்கு மண்டலத்தில் செல்வாக்குள்ள கொமுதேக மற்றும் ஐ.ஜ.க, பு.நீ.க, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இணைத்து இரு பிரதான கட்சிகளுக்கும் சவாலான மாற்று அணியை பாஜக அமைத்திருக்கிறது. தவிர, இத்தேர்தல் மாநில சட்டசபைக்கானது அல்ல என்பதும், மத்தியில் ஆட்சிமாற்றத்திற்கான வித்துக் கொண்டதென்பதும் தே.ஜ.கூட்டணியின் பலங்கள்.

நரேந்திர மோடி என்ற, சாதித்துக் காட்டிய தலைவனை முன்னிறுத்தி மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை ஒன்றுதிரட்டி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி வரும் தேர்தலில் வாகை சூட வேண்டும். நாடு நலம்பெற, நல்லாட்சி மலர, தேசிய அளவில் தேசிய ஜனநாயக்க் கூட்டணி அதிக இடங்களில் வெல்ல வேண்டும். அதற்கு, தமிழகத்திலும் இக்கூட்டணி அதிமான இடங்களில் வெல்ல வேண்டும்.

நாடு முழுவதிலும் மோடி அலை வீசுவதை பெரும்பாலான ஊடகங்கள் உறுதி செய்துவிட்டன. கிட்டத்தட்ட அறுதிப் பெரும்பான்மையை நெருங்கும் நிலையில் தே.ஜ.கூட்டணி உள்ளதை பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. வெற்றிக் கோட்டினை எட்டும் தருணம் மிகவும் முக்கியமானது. அப்போதுதான் இன்னமும் வேகம் தேவை. அத்தகைய தருணத்தில் தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி பெறு ஒவ்வொரு வெற்றியும் நாட்டின் பெருமையாக மாறும்.

தற்போது தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி மூன்றாவது அணியாக மதிப்பிடப்படுகிறது. உண்மையில்,  ஆளும் அதிமுகவுக்கும் தே.ஜ.கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. திமுக அணி மூன்றாவது இட்த்தில் இருக்கிறது. அதிமுக, திமுக- இரு கட்சிகளுமே பாஜகவை முன்புபோல கடுமையாக எதிர்க்கவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

தேர்தலுக்குப் பிந்தைய நிலவரத்தில் பாஜகவுக்கு ஆதரவளிக்க இவ்விரு கட்சிகளும் முன்வரலாம் என்று யூகங்கள் பரப்பப்படுகின்றன. அது உண்மையாக வாய்ப்பிருப்பினும் கூட, பாஜகவோ, அதன் தோழர்களோ ஆயாசமடையத் தேவையில்லை. இவ்விரு கட்சிகளின் ஆதரவே தேவையில்லை என்ற நிலையை எட்ட தே.ஜ.கூட்டணிக் கட்சிகள் போராட வேண்டும்.

Modi and Viveka

அதேபோல, தமிழக வாக்காளர்களும் இம்முறை திமுக அல்லது அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அதிமுக, அல்லது திமுகவைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதுகாலம் வரை அவர்களுக்கு வேறெந்த வாய்ப்புகளும் இருந்திருக்கவில்லை. இம்முறை அப்படியல்ல. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக சிந்தனை செய்து, நேரிய வழிமுறையில் வாக்குசக்தியைப் பயன்படுத்தி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் உருவாக்க வேண்டும். தேசிய அளவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் தாமரை அணி மலர்ந்தாக வேண்டும்.

அடுத்து அமையப்போவது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான். எனினும் இறுமாப்பால் சோம்பி வெற்றிக்கோப்பையை நழுவ விட்டுவிடக் கூடாது. அடுத்து மத்தியில் அமையும் ஆட்சியில் தமிழகத்தின் பங்களிப்பு சிறப்பாக இருந்தால், நமது கோரிக்கைகளை உரிமையுடன் கேட்க முடியும். தவிர, அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலிலும் புதிய மாற்றங்களுக்கு அடிகோல முடியும்.

தமிழகத்தில் புதிய அணியாக மலர்ந்துள்ள தே.ஜ.கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒத்த கொள்கைகள் கொண்டவை அல்ல என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது உண்மையே. அவ்வாறு அனைத்துக் கட்சிகளும் ஒரே கொள்கைகளைக் கொண்டிருந்தால் அவை தனித்து இயங்க வேண்டிய தேவையே இல்லையே? அதேசமயம், மதுவிலக்கு, இலவச கவர்ச்சி அரசியலுக்கு எதிர்ப்பு, பொதுவாழ்வில் தூய்மை, அரசியல் நாகரிகம் ஆகிய பொது அம்சங்களில் இக்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முடியும்.

சில உதாரணங்கள் நமக்கு புதிய திசையைக் காட்டுவதாக அமைந்துள்ளன. இவை அனைத்தும் குஜராத் முதல்வர் மோடியின் புகழ் பாடுபவை.இவற்றை இங்கு முன்வைக்கக் காரணம், குஜராத்தில் சாதனை நிகழ்த்திய பிறகே அவர் தேசிய மைய அரசியலுக்கு வந்தவர் என்பதால் தான்.

குஜராத் மாநிலத்தில் இலவச கவர்ச்சி அரசியல் எடுபடுவதில்லை. ஆனால், தமிழகத்தில் தொலைக்காட்சி, மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், மிதிவண்டிகள், தாலிக்கு தங்கம்,  இலவச அரிசி எனப் பல இலவசத் திட்டங்களைக் காட்டி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர். சென்ற சட்டசபைத் தேர்தலில் குஜராத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்குவதாக அறிவித்தும் கூட, தேர்தலில் தோல்வியுற்றது. இந்த விஷயத்தில் தமிழகம்- குஜராத் மாநிலங்களிடையிலான வேறுபாட்டை மக்களுக்கு புரியவைப்பது அவசியம்.

குஜராத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படுவதில்லை; தமிழகத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், குஜராத்தில் 24 மணிநேர மும்முனை மின்சாரம் தரமாகக் கிடைக்கிறது; தமிழ்கத்தில் எப்போது மின்சாரம் வந்துபோகும் என்பது யாரும் பதில் சொல்ல முடியாத கேள்வியாக உள்ளது. 2013 குஜராத் சட்டசபை தேர்தலில் அம்மாநில மக்களிடம்  ‘இலவச மின்சாரம் வேண்டுமா? தரமான மும்முனை மின்சாரம் நியாயமான விலையில் வேண்டுமா?’ என்ற மோடியின் கேள்விக்கு அவர்கள் தேர்தலில் அளித்த பதிலால் தான் அவர் மீண்டும் மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார். அதே போன்ற நிலை- இலவசங்களுக்கு மயங்காத, சுயமரியாதை உள்ள மக்களால் தமிழ்கத்திலும் உருவாக வேண்டும். அதற்கான ஆரம்பநிலையாகவே, நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலைக் கருத வேண்டும்.

குஜராத்தில் மாநில நிதிநிலைமையை மேம்படுத்த நடைபெற்ற முதல்வர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் (இவர் தமிழகத்தைச் சார்ந்தவர்!) மாநிலத்தில் உள்ள மதுவிலக்கு நிலையை ரத்து செய்துவிட்டு தமிழகம் போல அரசே மதுவிற்பனையில் இறங்கலாம் என்று ஆலோசனை கூறினாராம். அப்போது மோடி, “மக்களைக் கெடுத்துக் கிடைக்கும் வருவாய் எனது அரசு கருவூலத்திற்குத் தேவையில்லை” என்றாராம். தமிழகத்தில் தற்போது நடப்பது என்ன? சற்றே சிந்தித்துப் பாருங்கள். நாம் கண்ணை விற்று சித்திரம் வாங்குகிறோம் என்பதே புரியாத செம்மறி ஆட்டு மந்தையாக எத்தனை நாட்களுக்கு இருக்கப் போகிறோம்?

Modi and advani

இந்தியாவில் ஊழல் இல்லாத இடமில்லை. நாடு அடிமைத்தளையிலிருந்து விடுபட குருதி சிந்திய தியாக மறவர்களை பாடப் புத்த்கங்களில் இருட்டடிப்பு செய்த காங்கிரஸ் அரசுகளின் சூழ்ச்சியின் விளைவு இது. நமது சுதந்திரத்தின் அருமை நமக்கே புரியாததால், சுயநலமே பிரதானம் என்றாகிவிட்டது; பிறகு வல்லவன் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் கூட, குஜராத்தில் ஊழலின் சதவீதம் மிகவும் குறைவு என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அங்கு மேல்மட்டத்தில் ஊழல அறவே இல்லை. கீழ்மட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக லஞ்சம் இருந்தாலும், தமிழகத்தில் இருப்பது போல, பட்டியல் அச்சிட்டு வசூல் நடப்பதில்லை. நாடு முழுவதும் ஊழல் பெருகிவரும் நிலையில் குஜராத்தில் மட்டும் ஊழல் குறைவாக இருப்பதன் காரணம் அம்மாநில ஆட்சியாளர்களின் நேர்மைத் திறம் மட்டுமல்ல.

‘மாவுக்குத் தக்க பணியாரம்’ என்பது போல, குஜராத் மக்கள் இயல்பிலேயே நேர்மை மிகுந்தவர்களாகவும், பொதுவாழ்வில் தூய்மையை விரும்புபவர்களாகவும் உள்ளனர். அதனால் தான், எத்தனையோ இடையூறுகளையும் மீறி அவர்களால் நரேந்திர மோடியை தொடர்ந்து முதல்வராக்க முடிந்தது. தமிழகத்தில் அப்படிப்பட்ட நிலை இன்றுள்ளதா? நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது.

இத்தனைக்கும் தமிழகமும் குஜராத் போலவே பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்டது. வாழ்வை அகம்- புறம் என்று பிரித்து பேரிலக்கியங்களும், அற்புத நாகரிகத்தின் சின்னமான காப்பியங்களும் கண்ட பகுதி தமிழகம். உலகிற்கே நீதி வழங்கிய வள்ளுவனும், தேசத்திற்கே வழிகாட்டிய மகாகவி பாரதி போன்ற மகத்தான தலைவர்களும் பிறந்த பூமி இது. மனுநீதி சோழனும், கரிகால் வளவனும்,  ராஜராஜ சோழனும், பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரன் செங்குட்டுவனும், மாமல்லனும் ஆண்ட மண் தமிழகம். இன்று இழிநிலையில் தமிழகம் தடுமாறுவது ஏன்?

கேள்விகள் நம்மைச் சிந்திக்கச் செய்கின்றன. இதற்கான நேர்மையான பதில், நம்மை நாம் உணரவில்லை என்பதே. வரக்கூடிய தேர்தல், நம்மை நாமே உணர்வதற்கான தேர்தல். குஜராத்தில் மோடி கண்ட மாற்றம் போல தமிழகத்திலும் மாற்றம் காண விழையும் நல்லோர் வெல்ல வேண்டிய தேர்தல்.

எனவே நடைபெறவுள்ள இத்தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை முதலில் உறுதிப்படுத்துவோம்! அடுத்து, இத்தேர்தலில் வெல்ல வேண்டியவர்களை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி,  நல்லோரை வெற்றி காணச் செய்வோம்! இதுவே இன்று துவங்கும்  ‘ஜய’ ஆண்டின் புத்தாண்டு சபதமாக இருக்கட்டும்!

120 ஆண்டுகளுக்கு முன் இந்து மதத்தின் பெருமையையும் பாரதத்தின் சிறப்பையும் நிலைநாட்ட உலகப் பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தரை அடையாளம் காட்டிய பூமி இது. இன்று தேசிய அளவில் பிரகாசிக்கும் அரசியல் தாரகையான நரேந்திர மோடியை அடையாளம் கண்டுகொண்டுவிட்டது தமிழகம் என்பது, அவர் கலந்துகொள்ளும் தமிழகக் கூட்டங்களில் திரளும் மக்கள் திரளிலேயே தெரிகிறது. இந்த மாபெரும் மக்கள் கூட்டம் வாக்குகளாக மலர வேண்டும். அதற்கு நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்!

ஊழலுக்கு எதிரான முரசு தமிழகத்தில் கொட்டட்டும்!

பம்பரமாக தொண்டர்கள் சுழலட்டும்!

தாமரை அணி மலரட்டும்!

மாம்பழமாக இனிக்கட்டும் வெற்றி!

தமிழக அரசியல் தடாகத்தில் தாமரைகள் மலரும்போது, தேசிய அளவில் பாஜகவின் வலிமை பெருகும்.

அப்போது தான், உலகிற்கு வழிகாட்ட பாரதத்தின் புனிதப் பயணமும் துவங்கும்.

 


நீலகிரி தொகுதியில் என்ன செய்வது?

தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளில் தற்போது 38 தொகுதிகளில் மட்டுமே தே.ஜ.கூட்டணி போட்டியிடுகிறது. நீல்கிரி (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் இன்னிலை ஏற்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கலின்போது சமர்ப்பிக்க வேண்டிய கட்சியின் அதிகாரப்பூர்வச் சான்றிதழை வேட்பாளர் உடன் இணைக்கவில்லை; வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகே அதனை சமர்ப்பித்தார் என்று கூறி, அவரது மனு நிராகரிக்கப்பட்டதால், அங்கு பாஜக போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறு தெரியாமல் நடந்ததா, திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமா என்று, பாஜகவின் மூவர் குழு விசாரித்து வருகிறது. எது எப்படியாயினும், தேவையற்ற யூகங்களைப் பரப்பி நிம்மதியை இழக்க வேண்டியதில்லை.

அங்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றவாளியான திமுகவின் ஆ.ராசாவும், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள். தற்போது பாஜக அங்கு போட்டியிட முடியாத சூழலில், அத்தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் என்று கூறியிருக்கிறார் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.


 .

 

 

 

 

8 Replies to “புத்தாண்டில் ஒரு புது சபதம்!”

  1. The Tamil Nadu c.m. has started has attack on BJP. Why this sudden change in her attitude? I take it as the beginning of her down fall. I am sure she will get not more than 5 seats in T.N. chami.

  2. தமிழ் இந்து வாசகர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  3. அன்பார்ந்த அனைத்து வாசகர்களுக்கும் இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    குறிப்பாக எந்த மாற்று மொழியும் கலவாத தூய தமிழில் பற்றுள்ள எனதன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன் ஸ்ரீ பாலா போன்ற தமிழன்பர்களுக்கு இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    தமிழுக்கு விரோதமான த்ராவிடம் என்ற நஞ்சு தமிழகத்திலிருந்து வேரும் வேரடி மண்ணுமாக அகற்றபட வேண்டியதன் துவக்கம் இந்த தேர்தல். ஆகையால் தமிழக மக்கள் த்ராவிட நச்சுப் பதர்களை அழித்தொழிக்கும் படி இவர்களை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டிய தருணம்.

    தமிழின் பொக்கிஷமான திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் போன்ற அரும்பெரும் நூற்களை இழிப்பதன் மூலம் தமிழை அழிக்க முடியும் என்று கனவு கண்ட — நம் தாய்மொழி தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று இழிவாகப்பேசிய — இழிந்த விலங்குகளைத் தலைவர்களாகக் கொண்ட இயக்கம் த்ராவிட நச்சு இயக்கம்.

    அதற்கு மாறாக மாற்று மதக்கருத்துக்களையே போதிப்பதாக இருந்தாலும் தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதற்காக தமிழ் இலக்கியத்தின் அங்கமாகக் கருதி — நாம் என்றென்றும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியத்தின் ஒரு அங்கமாக கொடுக்க விழைவது — தேம்பாவணி சீறாப்புராணம் போன்ற மாற்று மதத்தை விதந்தோதும் தமிழ்ப்பனுவல்கள்.

    இது தமிழ் விரோத த்ராவிட நச்சுப் பதர்கள் மற்றும் ஹிந்துத்வம் என்ற உயர்ந்த கோட்பாட்டினை விதந்தோத விழையும் தமிழ் அன்பர்களின் செயல்பாட்டு வித்யாசம்.

    தேச விரோத மற்றும் மத வெறி நிலைப்பாடுகளை முன்னிலைப்படுத்தி மத வெறியை அறுவடை செய்வதையே குறியாகக் கொண்டுள்ள — *மதசார்பற்ற* என்ற முகமூடியில் உலா வரும் — *முற்போக்கு* என்று தங்களை அடையாளப்படுத்த விழையும் கட்சிகள்– படு பீதியில் உள்ளதை — இக்கட்சியினர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் — வளர்ச்சி பற்றியோ மதநல்லிணக்கம் பற்றியோ பேசாது — உரத்த குரலில் மதவெறியை பினாத்தி வருவதை — தேச முழுதுமான மக்கள் கவனித்து வருகிறார்கள்.

    இந்தக்கட்சிகளின் நாடகங்களை இஸ்லாமிய க்றைஸ்தவ சஹோதரர்களும் உணரத்துவங்கியுள்ளார்கள்.

    ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் க்றைஸ்தவர்களும் ஒற்றுமையாக தேச வளர்ச்சியில் தங்களை அர்ப்பணிக்க முடியும் என்பது ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களது தேர்தல் ப்ரசாரங்களிலிருந்து மக்களுக்கு அவர் அளிக்க முயலும் செய்தி.

    சர்வ ஸ்ரீமான் கள் ஜோ.டி.குரூஸ், தமிழ்ச்செல்வன், ஜஸ்டின் திவாகர் போன்ற க்றைஸ்தவ சஹோதரர்கள் க்றைஸ்தவ மதவெறிக்காரர்களின் மிரட்டல் உருட்டல்களுக்குப் பயப்படாது மதநல்லிணக்கம் மேலோங்க தேசஒற்றுமைக்கான ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களது குரலுக்குச் செவி சாய்த்து ஹிந்து சஹோதரர்களுடன் கைகோர்த்து பணிசெய்து வருவது தமிழகத்தின் த்ராவிட இருள் விலகி வசந்த காலம் மலரப்போவதின் குறியீடு.

    மத நல்லிணக்கத்தில் ஈடுபாடு உள்ள — ஹிந்துக்களுடன் கைகோர்த்து தேச வளர்ச்சிக்குப் பாடுபடுவதில் இணக்கம் உள்ள தேசிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் போன்ற இஸ்லாமிய சஹோதரர்களுடைய இயக்கங்களும் ஸ்ரீ மோடி அவர்களது முனைப்பிற்கு ஒத்துழைப்பு தர முடிவு செய்தது வசந்தம் மலரப்போவதின் குறியீடு.

    வந்தே மாதரம். வெற்றி வேல்

  4. ஸ்ரீமான் வை.கோபால்சாமி அவர்கள் உறுதியுடன் அடல்ஜீ அவர்களது சர்க்காரில் அங்கம் வகித்தவர். முதுகில் குத்தாது முழு நம்பிக்கையுடன் ஆட்சி செய்ய கைகொடுத்த பெருந்தகை.

    மருத்துவர் ஸ்ரீ ராமதாஸ் அவர்களின் பல நற்கருத்துக்களை ஸ்ரீமான் சேக்கிழான் அவர்கள் பகிர்ந்துள்ளார்கள். பூர்ண மதுவிலக்கின் மீது மருத்துவரான அவரின் ஈடுபாடு, போதை எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் அன்னாரின் ஈடுபாடு.

    த்ராவிட சாக்கடை கலாசாரத்தில் இருந்து வெளிவந்த மருத்துவர் ஸ்ரீ ராமதாஸ் அவர்கள்.

    தமது முன்னோர்களின் சமய வழிபாட்டு முறைகளை விதந்தோதும் போக்கை தமது கட்சி பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்தி த்ராவிட நாஸ்திக நஞ்சிலிருந்து அவர் கட்சியைச் சார்ந்த நமது சஹோதர சஹோதரிகளை வெளிக்கொணர விழையும் அன்னாரது செயல்பாடும் போற்றத்தக்கதே. தமது மூத்தோர்களின் பண்பாட்டை போற்ற விழையும் எந்த சமூஹமும் உண்மையான முன்னேற்றத்தின் பாதையில் செல்ல விழைகிறார்கள் என்றால் மிகையாகாது.

    மருத்துவர் ஸ்ரீ ராமதாஸ் அவர்களின் முன்னாள் சிஷ்யர் — இன்னாட்களில் ஆப்ரஹாமிய உக்ரவாத சக்திகள் மற்றும் த்ராவிட சாக்கடை ஆகியவற்றில் உழலும் தலைவிதிக்கு ஆளான —

    ஸ்ரீமான் திருமாவளவன் அவர்கள் கூட ஸ்ரீ நரேந்த்ரபாய் மோடி அவர்களின் தலைமைப் பண்பை விதந்தோதியுள்ளமையை நான் கவனிக்கத் தவறவில்லை.

    ஆப்ரஹாமிய உக்ரவாத சக்திகள் மற்றும் த்ராவிட சாக்கடை கூடா நட்பு ஸ்ரீமான் திருமாவளவன் அவரது மதியை மயக்கியிருக்கலாம்.

    தமிழ் விரோத நாஸ்திக மற்றும் ஆப்ரஹாமிய உக்ரவாத மதவெறி சக்திகளிலிருந்து விலகி ஸ்ரீமான் திருமாவளவன் அவர்கள் ஸ்ரீ மோடி அவர்களது கரத்தை வலுப்படுத்த விழையும் நாள் அருகில் வருவதாக என பழனியாண்டவன் திருத்தாள்களை இறைஞ்சுகிறேன்.

  5. இம்முறை தமிழ் நாட்டில் பாஜகவுக்கு இருக்கும் வரவேற்பு திராவிட கட்சிகளையும் பொதுவுடைமையாளர்களையும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. இதுவே தருணம். தமிழகத்தில் பாஜக கால் பதிப்பது மட்டுமல்ல, சிறிது சிறிதாக தி.மு.க. எனும் அழிவு சக்தியை ஒழித்துவிட்டு தேசிய அரசியலில் தமிழகம் சிறக்க வழி வகை செய்தல் வேண்டும். நீலகிரியில்தான் மக்கள் விரோதி ஆ.ராசா முக்கியமாக தோற்கடிக்கப்பட வேண்டும். அங்கு பொய் ஒரு குளறுபடி, இது பாஜகவுக்கு அழகு இல்லை.

  6. நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க
    விளைக வயலே வருக இரவலர்
    பால்பல ஊறுக பகடுபல சிறக்க
    பசிஇல் ஆகுக பிணிசேண் நீங்குக
    அறம்நனி சிறக்க அல்லது கெடுக
    நன்று பெரிது சிறக்க தீதுல் ஆகுக
    மாரி வாய்க்க வளம்நனி சிறக்க…
    ஐங்குறுநூறு…

    அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்…..

  7. இன்டர்நெட்டில் ஒரு தளத்தில் , பாஜக அணிக்கு 317 இடங்கள் வரை கிடைக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

    எனது நண்பர் ஒரு கே பி ஜோதிடர். அவர் அம்மாவுக்கு 25 , மோடிக்கு 307 என்று கணித்துள்ளார் .

    இன்டர்நெட்டில் வேறு ஒரு தளத்தில் , தமிழ் நாட்டில் ஜெயா 20, பாஜக 9, கருணா 10 என்று கணித்துள்ளனர்.

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் என்று யாரும் சொல்லக்காணோம். மேலும் தமிழ் நாட்டில் எந்த தொகுதியிலும் காங்கிரசுக்கு கட்டுத்தொகை திரும்பக்கிடைக்காது என்று பந்தயம் கட்டுவோருடன் மோத, எந்த காங்கிரஸ் காரருக்கும் தைரியம் / துணிவு இல்லை. காங்கிரசுக்கு அரை சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை வாக்கு கிடைக்கும் என்று உத்தேசமாக சிலர் கூறுகின்றார்கள் .

    காங்கிரசுக்கு ஐந்து சதவீதம் ஓட்டுப்போட , செவ்வாய், சுக்கிரன், சனி ஆகிய வேற்றுக்கிரகங்களில் இருந்து ஆட்களை கூட்டிவர , இத்தாலிக் கம்பெனி ஏற்பாடு செய்து விட்டது என்று யாரும் சொல்லவில்லை.

    முக்கியமாக டூ ஜி யில் நம் நாட்டுக்கு அதிக லாபம் மட்டுமே கிடைத்துள்ளது என்று உளறிய கபில் சிப்பல், இம்முறை டெல்லியில் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில், ஏ.கே -வாலிடம், ஷீலா தீட்சித் தோற்றதைப்போல ,இவரும் காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் அடித்துச் செல்லப்படுவார். கடலில் விழுந்தவுடன், டூ ஜி-யில் கிடைத்த லாபம் கடலுக்கு அடியில் எங்கு புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயும் பணியில் ஈடுபடுவார்.

    பாஜகவுக்கு ஆதரவாக நாட்டில் எங்கும் ஒரு அலையும் இல்லை. ஆனால் காங்கிரஸ் ஒழிப்பு அலை மிக வேகமாக அடித்துக்கொண்டிருக்கிறது. மஞ்சள் நிறத்தில் துண்டு அணிந்தவர்கள் கண்களுக்கு அது கடைசி வரை தெரியாது. காங்கிரஸ் எதிர்ப்பு அலையில், காங்கிரசுடன் லாலி பாடிக்கொண்டிருந்த சிலர் , காணாமல் போவார்கள். நாட்டுக்கு நல்ல செய்தி ஒன்று உள்ளது.

    ஆந்திராவில் 25 இடத்தில் காங்கிரஸ் , எங்கும் ஜாமீன் தொகையை திரும்பப் பெறமுடியாது. போட்டியிட ஆளைத்தேடி அலைகிறார்கள். காங்கிரஸ் சார்பில் ஆந்திராவில் போட்டியிட யாரேனும் முன்வந்தால், அவர்களை அந்த தொகுதி மக்கள் காரித்துப்பி , சாணியால் அடித்து, செருப்பு அடியும் கொடுப்பார்கள். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு ஆந்திராவில் இனிமேல் நிரந்தரப் பூட்டுத்தான்.

    இந்திரா காங்கிரஸ் என்பது துரோகம் என்பதன் மறுபெயர் ஆகும். நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் துரோகம் செய்தவர்கள் பட்டியலில் , இந்திரா காங்கிரஸ் என்ற பெயரே முதல் இடம் பெறும். எட்டப்பனை விட பெரிய துரோகி இந்திரா காங்கிரஸ் தான்.

    அவசரநிலைக் காலத்தில், காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு, இந்திராவின் பின்னால் ஓடிய ஓடுகாலிகளே , இன்று காங்கிரஸ் என்ற பெயரில் மோசடி வியாபாரம் செய்து வருகிறார்கள். இலங்கை அப்பாவி தமிழரை லட்சக்கணக்கில் , கொத்து எறிகுண்டுகளைப் போட்டுக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு ,அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்த சோனியாவையும், சோனியாவை சொக்கத்தங்கம் என்று சொன்ன மஞ்சளுக்கும் நம் மக்கள் இத்தேர்தலில் நல்ல பாடம் கற்பிப்பார்கள்.

    சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்த இந்திரா கட்சியும், அந்த இரத்தக்காட்டேரி கட்சிக்கு , பாராளுமன்றத்தில் திருட்டுத்தனமாக பல்லக்கு தூக்கிய எட்டப்பன் கருணா, புரூட்டஸ் முலயாம் சிங்கு, ஆகியோரின் அரசியல் வாழ்வு 2014-மே மாதம் முடிந்துவிடும்.

  8. இந்தியத்தேர்தலில் ஆறாவது கட்டமாக ஏப்ரல் 24- ஆம் நாளன்று தமிழகம், பாண்டி உட்பட 117 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் நாளின் மகத்துவம் என்ன ? இந்த 117 தொகுதிகளும் நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாறுதலை செய்ய விருக்கின்றன. அரசியல் கிரகம் எனப்படும் சூரியன் மேஷ இராசியில், தனது பரம உச்சப் பாகையாகிய மேஷம் 10 டிகிரியில் ,வரும் 24-4-2014 வியாழன் அன்று பயணிப்பார். மாஸ் எனப்படும் பொதுமக்களை குறிக்கும் கிரகமாகிய உச்ச சனியின் பார்வையும் சூரியன் மீது உடன் பதிவதாலும், சூரியன் நின்ற மேஷ வீட்டின் அதிபராகிய செவ்வாய் தன்னுடைய எட்டாம் பார்வையாக , கன்னி வீட்டிலிருந்து மேஷ சூரியனைப் பார்ப்பதாலும், நம் நாட்டில் மிகப்பெரிய மாறுதலை , இந்த 117- தொகுதிகளில் நடக்கும் தேர்தல் உருவாக்கும். தமிழகம், பாண்டி ஆகிய இரு பகுதிகளும் முழுமையாக ஒரே நாளில் 24-4-2014 அன்று தேர்தல் நடப்பதால், நல்ல திருப்பு முனை ஏற்படும். அது பாஜக அணியின் வெற்றித்தடத்தினை தமிழகத்தில் பதிக்கும்படி இருக்கும். ஜனநாயகம் வெல்க, இந்தியா வெல்க, தமிழகம் வெல்க.

    நல்ல மாறுதல் வேண்டும் என்று கடந்த 47 வருடங்களாக ஏங்கி வந்த தமிழகப் பெருமக்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்படும். திருடர்கள் கழகங்களை விட்டால் தமிழனுக்கு வேறு நாதி இல்லை என்ற கூற்று முறியடிக்கப்படும். இலங்கை தமிழனை திட்டமிட்டு அழித்த சோனியாவை, சொக்கத்தங்கம் என்று சொன்ன பெரியவர் , தான் துணைபோன துரோகச் செயலை எண்ணி வருந்துவார். தமிழகம் வெல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *