மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

Modi1தேசம் எதிர்பார்த்துக் காத்திருந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

பாரதத்தின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே இருக்க வேண்டும் என்று நாட்டுமக்கள் தீர்மானித்துவிட்டனர்.

வாராதுவந்த மாமணியாக, வளர்ச்சியின் நாயகனாக தேசம் முழுவதும் திக்விஜயம் செய்த மோடியின் கடும் உழைப்புக்கும் அவரைத் தலைமையாகக் கொண்டு இயங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அற்புதமான பரிசாக, யாரும் எதிர்பாராத மாபெரும் வெற்றி கைகூடி இருக்கிறது.

இந்தியாவின் வரலாறு திருத்தி எழுதப்படும் இனிய தருணம் இது…

16வது நாடாளுமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடந்துமுடிந்து, தேர்தல் எண்ணப்பட்ட ஏப்ரல் 16ம் தேதியை இன்னமும் நீண்ட நாட்களுக்கு பாரதம் நினைவில் வைத்திருக்கும். ஏனெனில், இதுவரையிலான சுயநலமே பிரதானமான பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலுக்கு மாற்றாக, வளர்ச்சியை முன்னிறுத்திய எளிய குடும்பத்தைச் சார்ந்த ஒருவரை –  தனது வாழ்வையே நாட்டுநலனுக்காக அர்ப்பணித்தவரை-  தேசம் முழுவதும் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடிய நாள் அது.

இந்திய அரசியலில் சுயநல காங்கிரஸுக்கு எதிரான ஹிந்துத்துவ இயக்கங்களின் பன்னெடுங்காலத் தொடர் போராட்டத்திற்கு மக்கள் அளித்துள்ள ஆகச் சிறந்த பரிசாகவே இத்தேர்தல் முடிவைக் கொள்ளலாம்.

சங்கத்தில் புடம்போடப்பட்ட ஸ்வயம்சேவகரான மோடி, இதுவரை காங்கிரஸ் அல்லாத எவரும் பெறாத அறுதிப் பெரும்பான்மையுடன் நாட்டின் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு வித்திட்ட, முகம் தெரியாத கோடிக்கணக்கான செயல்வீரர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி.

மற்றொரு நரேந்திரனின் தலைமையில், முன்னொரு நரேந்திரன் காட்டிய வழியில் நாடு மகோன்னத நிலையை நோக்கிப் பயணிக்கத் தயாராகிவிட்டது.

இறைவனுக்கு நன்றி!

Gujarat state Chief Minister Narendra Modi gestures from his car after casting his vote during the second phase of state elections in the western Indian city of Ahmedabad

திருப்புமுனை முடிவுகள்:

இதுவரையில் இருந்த இந்தியா வேறு; இனிவரும் இந்தியா வேறு என்பதற்கு கட்டியம் கூறியுள்ள தேர்தல் இது. இத்தேர்தலின் முடிவுகளை சுருக்கமாக இவ்வாறு வகைப்படுத்தலாம்:

1. காங்கிரசுக்கு மாற்றான பாரதிய ஜனதா கட்சி இதுவரை காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அடல் பிகாரி வாஜ்பாய்- லால் கிருஷ்ண அத்வானி காலகட்டத்தில் கூட (1998- 2004) எட்ட இயலாத வெற்றி இது. பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

1984-க்குப் பிறகு இந்திய அரசியலில் நிலவிய குழப்பமான, அரசியல் எண்ணிக்கை விளையாட்டுக்கு வழிவகுத்த சூழல் இத்தேர்தலில் காணாமல் போயிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் சிறு கட்சிகள் கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையையும், பாஜகவின் மகத்தான வெற்றி மாற்றி அமைத்திருக்கிறது.

1984-ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில்தான் 400க்கு மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் வென்றது. ஆனால், இத்தேர்தலிலோ, மோடியே உருவாக்கிய தன்னம்பிக்கை மிகுந்த எழுச்சியால் இந்தச் சாதனை அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்களின் ஏகோபித்த தேர்வாக மோடி எழுச்சி பெற்றிருக்கிறார். இதுவரை காணாத வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிப்பு  (சராசரி 66.4%) அதனையே காட்டுகிறது.

2. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றதன் வாயிலாக, லோக்சபாவில் மூன்றில் இரு பங்கு இடங்களை நெருங்கிவிட்டது. தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் மேலும் சில கட்சிகள் இக்கூட்டணியில் ஐக்கியமாவதால், மத்திய அரசு இதுவரை காணாத வலுவுடன் திகழ வாய்ப்பேற்பட்டுள்ளது.

இனிமேல் கூட்டணி தர்மத்திற்காக, தோழமைக் கட்சிகள் நிகழ்த்தும் கூத்துகளை மன்மோகன் சிங் போல மௌனமாக வேடிக்கை பார்க்க வேண்டிய அவலம் ஏற்படாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒட்டுமொத்த வாக்குகள் 37.73 சதவிகிதமாக அதிகரித்துள்ளன. பாஜகவின் வாக்குவிகிதமும் 31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

Result Graphics1

3. நாட்டை 1947-லிலிருந்து- சில இடைவெளிகள் தவிர்த்து- பெரும்பாலும் காங்கிரஸ் தான் ஆண்டுள்ளது. அக்கட்சியின் வாரிசு அரசியல், மதரீதியாக மக்களைப் பிரிக்கும் சூழ்ச்சி அரசியல், வரலாறு காணாத ஊழல், நிர்வாகத் திறமையின்மை, தவறான கொள்கை முடிவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்தாக இத்தேர்தல் அமைந்தது. அதனால் தான், அக்கட்சி இதுவரை காணாத படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

நெருக்கடி நிலையை  அடுத்து நடைபெற்ற 1977 தேர்தலிலும் கூட காங்கிரஸ் இவ்வளவு கேவலமான தோல்வியைச் சந்திக்கவில்லை. அன்னை- மகன் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு பகல்கனவு கண்டுவந்த காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியோ மொத்தமே 59 இடங்களில் தான் வென்றுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த தேசிய மாநாடு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் அனைத்துக்கும் சரியான அடி கிடைத்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற வேண்டுமானால், ஒட்டுமொத்த லோக்சபையில் பத்து சதவிகித (54 இடங்கள்) இடங்களிலேனும் வென்றிருக்க வேண்டும். காங்கிரஸ் தற்போது பிரதான எதிர்க்கட்சி என்ற அரசியல் சாசன அந்தஸ்துக்கும் கூட தகுதியற்றதாகிவிட்டது.

4. மக்களிடம் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்து வென்று, பிறகு மக்கள் முதுகில் குத்துவது போல காங்கிரஸை ஆதரித்துவந்த பல கட்சிகளுக்கும் இத்தேர்தல் ஆப்பு வைத்துவிட்டது. பாஜக எதிர்ப்பையே (மதவாத எதிர்ப்பு!) காரணமாகக் காட்டி சுயநல அரசியல்வாதிகள் நடத்திவநத அந்த நாடகங்களுக்கு தெளிவான தீர்ப்பால் பாடம் கற்பித்துள்ளனர் இந்திய மக்கள். நிதிஷ்குமார், சரத் பவார், லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பலருக்கும் நல்ல படிப்பினையை இத்தேர்தல் வழங்கி உள்ளது.

5. வளர்ச்சியை முன்னிறுத்தி பிரசாரம் செய்த மோடிக்கு மக்கள் பெருமளவில் ஆதரவு நல்கி இருக்கிறார்கள். மோடி குறித்த மிகைப்படுத்தப்பட்ட, பொய்யான துஷ்பிரசாரத்திற்கு தங்கள் வாக்குச்சீட்டால் சரியான பதிலை வாக்காளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, ஊழல், பணவீக்கம், பொருளாதாரத் தேக்கநிலை, அரசுத் துறைகளில் அதிகரிதுள்ள லஞ்சம், நிர்வாகச் சீர்கேடுகள், அரசியல் ஆணவம், இழிவான பிரசார உத்திகள்  ஆகியவற்றின் காரணகர்த்தாவாக காங்கிரஸைக் கருதிய மக்கள், அக்கட்சியை குப்பைக்கூடைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதேசமயம், அதிக குற்றச்சாட்டுகள் எழாமல் காத்துக்கொண்ட ஒடிசாவின் நவீன் பட்நாயக், தமிழகத்தின் ஜெயலலிதா, மேற்குவங்கத்தின் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் மக்கள் ஆதரவு காட்டி இருக்கிறார்கள்.

6. சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்குவங்கியால் அரசியலில் வென்றுவிடலாம் என்று மனப்பால் குடித்துவந்த அரசியல்வாதிகளின் தலையில் இடி விழுந்திருக்கிறது. குறிப்பாக இஸ்லாமியர்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டு, பூச்சாண்டி காட்டி பாஜவைத் தோற்கடிக்க முயன்ற எத்தர்கள் எட்டி உதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களும் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்து, தங்கள் மீதான அபவாதத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கிற்கு இத்தேர்தல் முடிவு கண்டிருக்கிறது. போலி மதச்சார்பின்மைக்கு மக்கள்  ‘விடை’கொடுத்திருக்கிறார்கள்.

16ஆவது லோக்சபாவில் கட்சிகளின் நிலவரம்:

மொத்த இடங்கள் : 543

அ) தேசிய ஜனநாயகக் கூட்டணி

பாஜக 282

சிவசேனை 18

தெலுங்கு தேசம் 16

லோக் ஜனசக்தி 6

சிரோமணி அகாலிதளம் 4

ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 3

அப்னா தளம் 2

பாட்டாளி மக்கள் கட்சி 1

என்ஆர் காங்கிரஸ் 1

தேசிய மக்கள் கட்சி 1

நாகா மக்கள் முன்னணி 1

ஸ்வாபிமானி கட்சி 1

மொத்தம்- 336

ஆ) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

 காங்கிரஸ் 44

தேசியவாத காங்கிரஸ் 6

ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2

கேரள காங்கிரஸ் (எம்) 1

மொத்தம்- 59

இ) மற்றவர்கள்:

அதிமுக 37

திரிணமூல் காங்கிரஸ் 34

பிஜு ஜனதா தளம் 20

தெலங்கானா ராஷ்டிர சமிதி 11

ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 9

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9

சமாஜவாதி கட்சி 5

ஆம் ஆத்மி கட்சி 4

மக்கள் ஜனநாயகக் கட்சி 3

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 3

ஐக்கிய ஜனதா தளம் 2

மதச்சார்பற்ற ஜனதா தளம் 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1

இந்திய தேசிய லோக்தளம் 2

மஜ்லிஸ்-இ-இதேஹாதுல் முஸ்லிமீன் 1

சிக்கிம் ஜனநாயக முன்னணி 1

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 1

மொத்தம்- 145

 ஈ) சுயேச்சைகள்:  3

 மொத்தம் 543

 7. இத்தேர்தலில் நாடு முழுவதும் பரவலாக பாஜக வென்றுள்ளது. கேரளா, சில வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்து, எல்லா இடங்களிலும்- யூனியம் பிரதேசங்களிலும் கூட- பாஜக வெற்றி பெற்றுள்ளது. முன்னர் காங்கிரஸ் இருந்த தேசிய பிரதிநிதித்துவ நிலைக்கு பாஜக தன்னை தகுதி உயர்த்திக் கொண்டுள்ளது.

குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், கோவா, இமாச்சல் பிரதேசம், புதுதில்லி, உத்தரகண்ட் மாநிலங்களில் பாஜக நூறு சதவிகித வெற்றி கண்டுள்ளது. மாறாக, காங்கிரஸ் 10க்கு மேற்பட்ட மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை; எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தில் வெல்லவில்லை. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பிகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக 90 சதவிகித வெற்றி பெற்றுள்ளது.

8. தலித் வாக்குவங்கியை வைத்துக்கொண்டு அரசியலை தவறாக நடத்திவந்த மாயாவதிக்கு (பகுஜன் சமாஜ்) பூஜ்ஜியம் இடங்களை அளித்து, அவருக்கான இடத்தை இத்தேர்தல் காட்டி இருக்கிறது. மாறாக, பாஜகவுடன் கைகோர்த்த ராமதாஸ் அதவாலே (இந்திய குடியரசுக் கட்சி), உதித்ராஜ் (பாஜக), ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி) போன்ற தலித் தலைவர்களின் வரவால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்றுள்ளது. இந்நிலை நீண்டகால நோக்கில் சமூக ஒருமைப்பாட்டிற்கும் உதவக்கூடியதாக அமைந்துள்ளது.

Result Graphics29. நல்லாட்சி நடத்தும் கட்சிகள் அனைத்துக்கும் வாக்காளர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் மோடிக்கு ஆதரவாக வாக்களிக்க இதுவும் ஒரு காரணம்.

தமிழகம், மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்கள் மீது பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் இல்லை என்பது, அவர்களின் வெற்றியில் புலப்படுகிறது. தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் (விலையில்லாத் திட்டங்கள்!) பெருவாரியாக மக்களைச் சென்று சேர்ந்துள்ளதை தேர்தல் முடிவுகளிலிருந்து யூகிக்க முடிகிறது. எனினும் தமிழகத்தில் ஆளும்கட்சியின் வெற்றி குறித்து தனியே விவாதித்தாக வேண்டும்.

10. தேர்தல் ஆணையம் நடுநிலையின்றிச் செயல்பட்டாலும் மக்களை முட்டாளாக்க முடியாது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக வெறுப்பூட்டும் பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்ட வேணிபிரசாத் வர்மா, திக்விஜய் சிங், ஆஸம்கான், அபிஷேக்சிங் யாதவ், கபில்சிபல், ஃபரூக் அப்துல்லா, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கும், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை கேலி பேசிய அரசியல் வாதிகளுக்கும் இத்தேர்தல் அளித்துள்ள பாடம்- வரம்பு மீறுவோருக்கு இதுவே தங்கள் பதில் என்பதே.

11. நாடாளுமன்றத்தில் நுழைவதையே அதிகாரத் தரகுக்கான வாய்ப்பாகக் கொண்ட பல பிரதானத் தலைவர்களை மட்டம் தட்டி இருக்கிறது இத்தேர்தல். பவார், முலாயம், லாலு, மாயாவதி, கருணாநிதி, தேவே கவுடா போன்றவர்கள் இனிமேல்  வாலாட்ட முடியாது.

ஜெயலலிதா, மமதா பானர்ஜி ஆகியோர் பெரும் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களது வெற்றியால் புதிய அரசை மிரட்டவோ, நிலைகுலையச் செய்யவோ முடியாத அளவுக்கு பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மையை வாக்காளர்கள் அளித்திருக்கிறார்கள்.

குறிப்பாக இடதுசாரிகள் இதுவரை காணாதவகையில் 10 இடங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அக்கட்சிகளின் ஆதாரப் பகுதிகளான கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இடதுசாரிகள் துடைத்தெறியப்பட்டுள்ளனர். மூன்றாவது அணி என்ற மாயையை ஏற்படுத்தி குளிர்காய்ந்துவந்த சுயநல அரசியல்வாதிகளுக்கும் இத்தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

12. அமைதியான முறையில் உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாட்டில் மகத்தான அரசியல் மாற்றம் நிகழ்த்தப்பட்டுவிட்டது.   “2020-ல் இந்திய வல்லரசாகும்” என்ற மேதகு அப்துல் கலாம் அவர்களின் கனவை நனவாக்குவதற்கான முதல்படியாக இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன எனில் மிகையில்லை.

“இந்தியா வென்றுள்ளது. இனிவரும் நாட்கள் நல்ல நாட்கள்” என்ற- தேர்தல் வெற்றி குறித்த நரேந்திர மோடியின் பிரகடனத்தில் பல உண்மைகள் உள்ளன.

வரும் நாட்கள் நல்லதாக அமையட்டும். இந்தியா வெல்லட்டும்!

ஜயவிஜயீ பவ!

 

Tags: , , , , , , , , , , , ,

 

28 மறுமொழிகள் மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…

 1. அத்விகா on May 18, 2014 at 6:55 am

  ‘ தேர்தல் எண்ணப்பட்ட ஏப்ரல் 26ம் ‘- இந்த தட்டச்சுப் பிழையை சரிசெய்து மே 16- ஆம் தேதியை – என்று மாற்றிப் படிக்கவேண்டுகிறேன்.

 2. "Honest man" on May 18, 2014 at 7:02 am

  தனது மோசமான எதிரிகளை முட்டி மோதி அவர்களை மூலைக்கு மூலைக்கு தூக்கி எரிந்து சாதனை படைத்த மோதி வாழ்க. இது குறித்து என் அளவிலா ஆனந்தத்தையும் மட்டிலா மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். நான் சில மாதங்களுக்கு முன் தமிழ் இந்துவில் தேர்தல் முடியும் வரை ஆன்மிக கட்டுரைகளை சற்று நிறுத்தி வைத்து மோடி மற்றும் பிஜேபி பற்றிய கட்டுரைகளை எழுதுங்கள் என்று சொன்னபோது என் மீது சீறி பாய்ந்து என்னை மட்டம் தட்டி எழுதிய அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

  எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் சில தேர்தல் தோல்விகளின் விவரம் :——
  1) மிசா பாரதி 2) ராப்ரிதேவி 3) அரசியலில் நகைச்சுவை நடிகரான நாராயணசாமி 4) தன கபுவாஇயை திறந்தாலே பிஜேபி ஒரு மதவாத கட்சி என்று பேசி திரிந்த திருமாவளவன். 5) உளறல் வாயன் பேணி பிரசாத் வர்மா 6) குலாம் நபி ஆசாத் 7) மோடி பிரதமரானால் காஷ்மீர் பிரிந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டிய பருக அப்துல்லா 8) காவி தீவிரவாத என்று உளறிய சுசில் குமார் ஷிண்டே 9) உளறல் வாயன் சல்மான் குர்ஷித் 10) y .s விஜயம்மா (ஆந்திரா) 11) தேநீர் விற்றவர்களுக்கு தேசத்தை ஆழ தகுதி இல்லை என்று இறுமாப்போடு பேசிய மணி சங்கர் ஐயர் 12) ஆதர்ஷ் கார்ட் ஊழல் திலகம் நிலன்கனி (பெங்களுர்) 13) LOOSE TALK கபில் சிபில் 14) மயிலாடுதுறை ஹைதர் அலி. 15) எஸ்.பி. உதயகுமார் (கன்யாகுமரி) 16) எம். புஷ்பராயன். 17) அப்துல் ரஹ்மான் (IUML ) (VELLORE தொகுதி) 18) சரத் யாதவ் (பீகார்)
  2) மதசார்பற்ற அரசு அமைக்க எந்த கையுடனும் கை சேர்க்க தயார் என்று கூறிய கருணாநிதியின் கையையே வெட்டி விட்டார்கள் (பெரிய ஜீரோ) கஈருந்தால்தானே கை கோர்க்க முடியும்?
  3)வாய் சவடால் பேசிய ஜெகன்மோகினி மாயாவதி ஆடிய ஆட்டம் கொஞ்சமா பேசிய வார்த்தைகள் கொஞ்சமா? பெரிய பாடாவதி! பிரதமாராக ஆசைபட்ட அவர் இன்று இருக்கும் இடம் இல்லாமல் போய்விட்டார் (பெரிய ஜீரோ)
  4) காங்கிரஸ் இன்று 20 மாநிலங்களில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.
  இதை எப்படி ஒரு தேசிய கட்சி என்று சொல்வது?
  5) உத்திரப்ரதேசதில் உள்ள 80 இடங்களில் 71 இடங்களை பிஜேபி வென்றுள்ளது. இரண்டே இடங்களில் அதுவும் அம்மாவும் மகனும் மட்டும் காங்கிரஸ் சார்பில் வென்றுள்ளனர்.
  6) 8 மாநிலங்களில் பிஜேபி 100% வெற்றி. நோ என்ட்ரி பார் அதர்ஸ்
  7) அஸ்ஸாமில் 14 ல் 7 சீட்டுகளை பிஜேபி வென்றுள்ளது. அந்த மாநில முதல்வர் ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.
  8)பீகாரில் 40 தொகுதிகளில் 22 பிஜேபி 6 பஸ்வான் கட்சி வென்றுள்ளது. ஆனால் நித்திஷ் 2 தொகுதிகளை மட்டும் வென்றுள்ளது. மோடியை பகைத்து கொண்டால் மக்கள் என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று தெரிகிறதா நிதிஷ்? சும்மாவே மதவாதம் மதவாதம் என்று பூச்சாண்டி காட்டினாயே உனக்கு மக்கள் சரியான பாடம் கொடுத்து விட்டார்களா?
  9) டெல்லியில் ஆடாத ஆட்டம் ஆடிய கேஜ்ரிவாள் டெல்லியில் ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. டெல்லி சட்டசபையில் முட்டாள்தனமாக ஒரு பைத்தியக்காரனுக்கு வாக்களித்து விட்டோமே என்று வருந்தி அதை இந்த தேர்தலில் திருத்தி கொண்டார்கள். பஞ்சாப் மக்கள் தெரியாமல் 4 சீட்டுகளை இந்த துடைப்பகட்டை கட்சிக்கு கொடுத்து விட்டார்கள்.இப்போது அதற்கு தேசிய கட்சி என்ற அந்தஸ்து அதற்கு இல்லை என்பது சந்தோஷமான விஷயம்.
  10) வெறும் 44 இடங்களை வென்றுள்ள காங்கிரஸ் க்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் போச்சு. 120 ஆண்டு பரம்பரை கட்சி என்று மார்தட்டிகொண்டவர்களுக்கு இது ரொம்ப ரொம்ப கேவலம் (தொடரும்)

 3. "Honest man" on May 18, 2014 at 7:44 am

  வீராப்பு பேசி திரிந்த சில ஜென்மங்கள் வாங்கிய வாக்குகள் விவரம கீழே:——
  1)மணிசங்கர் ஐயர் – 58465, (2) உதயகுமார் (கன்யாகுமரி)- 15314 (3) வாசுகி (கம்யூனிஸ்ட் – வட சென்னை) -11731 (4) ஞானி (துடப்பைகட்ட கட்சி) -5729 (ஆலந்தூர் சட்டசபை)

  12) Exit POLL சொன்னதை காட்டிலும் அதிகமாக சீட்டுகளை பிஜேபி வென்றுள்ளது. ஊடகங்களுக்கு பணம் கொடுத்து இப்படி பூஸ்ட் செய்து செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று சொன்னவர்கள் இப்போது அவர்களது முகங்களை எங்கே வைத்து கொள்வார்கள்?
  13) வேதனை தரும் வெற்றிகள் விவரம் கீழே பின் வருமாறு:——————————-
  1) கொலைகாரன் சிபு சோரன் 2) அஜித் ஜோகி 3) கமல் நாத் 4) சிந்தியா 5) நடிகை ரோஜா (ஆந்திரா) 6) Asauddin Owaisi (ஹைதராபாத்) 14) ஆறுதல் தரும் நடிகர்களின் தோல்விகள் விவரம் கீழே:————————————–
  1) தீவிரவாதிகளோடு தொடர்புள்ள நக்மா 2) விஜய் சாந்தி 4)ராஜ் பப்பர்
  15) மேற்கு வங்கத்தை 30 ஆண்டுகள் ஆண்டு சீரழித்த கம்யூனிஸ்ட் கட்சி இரண்டே இடங்களை வென்று மாபெரும் உலக சாதனை படைத்துள்ளது.
  16) காந்தி எப்படி நேருவை தன அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்து ஒரு பெரிய தவறை செய்தாரோ அப்படியே அந்த காந்தியின் பேரன் ராஜ் மோகன் காந்தி துடப்பை கட்டை கட்சியோடு சேர்ந்து கிழக்கு டெல்லியில் நின்று படு தோல்வி அடைந்தார்.”தேர்ந்தெடுப்பதில்”” தவறு நேர்வது Gene ல் இருக்கும் போலும்.
  17) வருந்த தக்க தோல்விகள் விவரம் பின்வருமாறு:———————————————
  1)திருவனந்தபுரத்தில் ஒ. ராஜகோபால் வெறும் 15470 ஒட்டு வித்தியாசத்தில் “தன மனைவியை தற்கொலை செய்து கொண்டு சாக காரணமாயிருந்த மகா உத்தமபுருஷன்” சசி தரூரிடம் தோற்றது. (2) கோவையில் 42016 ஒட்டு வித்தியாசத்தில் பிஜேபி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தோற்றது.
  18) முசாபர் நகரில் முகலாயர்களின் வாரிசான முலாயம் வேண்டுமென்றே கலவர வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த பிஜேபி வேட்பாளர்களான சஞ்சீவ் குமார் (முசாபர் தொகுதியில் 400000 வாக்குகள் வித்தியாசத்தில்) மற்றும் ஹக்கும் சிங் ஆகியோர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்
  19) ஜனதா ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டதை போன்று பத்ம பூஷன், பத்மஸ்ரீ போன்ற பட்டங்கள் கொடுப்பதை நிறத்த வேண்டும்.
  20) அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது என்று மோடி அவர்கள் உடனே அமேரிக்கா போக கூடாது. அவர்கள் எவ்வளவு கேவலப் படுத்தினார்கள். ஆகையால் அவசரபடாமல் ரொம்ப தேவை எனும்போது போகலாம்.
  21) காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போல அடிக்கடி வெளிநாடுகளுக்கு தேவையில்லாமல் செல்ல கூடாஹு. மக்கள் மனதில் காங்கிரஸ் ம் பிஜேபி யும் ஒன்றுதான் என்ற எண்ணம் வரக்கூடாது.
  22) பழிவாங்கும் போக்கும் தேவையற்ற விசாரணை கமிசன் களும் அமைப்பதை நிறுத்தி “வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி” என்று ஒரு எண்ணத்தோடு மட்டுமே செயல்படவேண்டும். அப்போது மக்கள் அனைவரும் சந்தொசபடுவார்கள். பிஜேபி காரர்கள் சொல்லுவது போல அது ஒரு வித்தியாசமான கட்சிதான் என்று நினைப்பார்கள். விசாரணை கமிசன் அமைத்து அவர்களை சில நாள் சிறையில் அடித்தால் மக்களிடம் அனுதாபம் பெற்று மீண்டும் வளர்ந்து விடுவார்கள். அதற்கு மோடி வழிவிடகூடாது. விசாரணை கமிசன் அமைத்து இந்தியாவில் எந்த தலைவனும் மரண தண்டனை பெற்றது கிடையாது அரசு பணம்தான் காலியாகும்.
  (தொடரும்)

 4. அத்விகா on May 18, 2014 at 7:48 am

  1. பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பரான திரு பிஜு பட்நாயக் அவர்களின் புதல்வரும் , நல்ல நேர்மையான அரசியலுக்கு சொந்தக் காரருமான திரு நவீன் பட்நாயக் அவர்கள் நான்காவது முறையாக ஒரிசா சட்டசபை தேர்தலில் வென்று , நான்காம் முறை முதலமைச்சராக பதவி ஏற்கிராரார். அவருக்கு நமது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

  2. மோடிக்கு சுமார் 340- இடங்கள் , அதாவது nda -கூட்டணிக்கு கிடைக்கும் என்று சொன்ன டுடே சாணக்யா கருத்துக்கணிப்பு வென்றது. மோடி தலைமையில் மீண்டும் மூன்று தேர்தல்களில் பாஜக வென்று நல்லாட்சி தந்து ,பாரதத்தை தலை நிமிரச்செய்ய வேண்டும் என்று வினாயகப்பெருமானையும், அவன் இளைய சகோதரன் சக்திவேலனையும் , அவருக்கு சக்திவேல் தந்த அன்னையாம் பார்வதியையும் வணங்குகிறோம். பாரதம் மேலும் மிளிர்க.

 5. "Honest man" on May 18, 2014 at 8:12 am

  23) பிஜேபி வளராத் மாநிலங்கள்:– தமிழ்நாடு, கேரளா, ஓடிஸா, தெலுங்கான,மேற்கு வங்காளம். ஆகியவையே. தமிழ் நாட்டில் வளர வேண்டும் எனின் கங்கை காவிரி ஆறுகளை இணைக்க வேண்டும். தண்ணீர் பஞ்சம் தீரும். மின்வெட்டு தீர குஜராத்தில் செய்தது போல இங்கேயும் செய்திடவேண்டும். சேது சமுத்திரத்தை புதிய பாதையில் (அதாவது ராமர் பாலத்திற்கு ஊரு நேராத வகையில்) அமைத்து தமிழ்நாட்டில் நற்பெயர் பெறவேண்டும். அப்புறம் பிஜேபி தமிழ்நாட்டில் தானாக வளரும்.
  24) மாநிலங்களை கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். காங்கிரஸ் போல எதேச்சாதிகாரமாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட கூடாது.
  25) காங்கிரஸ் பதவி இழந்த ஆத்திரத்தில் அங்கங்கே மத கலவரங்களை தூண்ட கூடும். பிஜேபி க்கு கெட்டபெயர் வரவேண்டும் என்று நினைக்கும் அது நடவாமல் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
  26) நல்லவைகளை செய்து மக்களிடம் நற் பெயர் வாங்கியபின் அஸ்ஸாமிலும் மேற்கு வங்காளத்திலும் உள்ள வெளி நாட்டவரை வெளியேற்றவேண்டும்.
  27) இந்த 5 ஆண்டில் கோவில் கட்டுவது 370 ஐ காஷ்மீரில் நீக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்த கூடாது. அடுத்த 5 ஆண்டில் பார்த்து கொள்ளலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அவசரப் படுவார்களோ என்று சந்தேகம் எனக்கு உள்ளது. நல்ல வாய்ப்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம். ஒழுங்காக மக்கள் வளர்ச்சியை பற்றி மட்டும் இந்த 5 ஆண்டில் நினையுங்கள். பிச்சனையான விஷயங்களை சற்று ஒத்தி போடுங்கள். நாம் குறைந்த பட்சம் 20 ஆண்டுகலகிலும் தொடர்ந்து ஆட்சி நடத்தினால் நாடும் முன்னேறும். அந்த கால கட்டத்தில் காங்கிரெஸ் கட்சி சுத்தமாக ஒன்றுமில்லாமல் அழிந்தே போய்விடும். இது நிஜம். ஆகவே அவசரப்பட்டு காரியத்தை கெடுத்து கொள்ளாதீர்கள். மீண்டும் இது போன்ற ஒரு மெஜாரிட்டி ஆட்சி நமக்கு கிட்டாது. எஹையும் ஒரு தடவைக்கு 10 தடவை நன்றாக யோசித்து நிதானமாக (பிரச்சனையான விஷயங்களை மட்டும்) செய்யுங்கள். மக்கள் உங்களுக்கு கோவில் கட்டவோ 370 நீக்கவோ வாக்களிக்க வில்லை. குஜராத் போல நாடு முழுவதும் வளர்ச்சி வராதா என்ற ஏக்கத்தில்தான் வாக்களித்துள்ளர்கள் என்பதை கனவிலும் மறந்து விடாதீர்கள் தயவுசெய்து.
  28) காங்கிரஸ் காரர்கள் பழிவாங்கும் நோக்கில் பாராளுமன்றத்தை முடக்க சகல வித்தைகளையும் செய்வார்கள். அது நடக்காதவாறு பார்த்துகொள்வது நலம்.
  29) ஊழல் தலை காட்டாமல் பார்துகொள்ளவேண்டும் (அதனால்தான் காங்கிரஸ் ஆட்சி இழந்தது என்பதை நாம் மறக்கலாகாது) CAG போன்றவை குற்ற அறிக்கை தயாரிக்கும் அளவிற்கும் எந்த ஊழலும் நடக்காதவாறு பார்த்து கொள்ளவேண்டும்.
  30) தமிழ் மீனவர்கள் என்று குறிப்பிடுவதை தவிர்த்து தமிழகம் வாழும் இந்திய மீனவர்கள் என்று மாற்றவேண்டும். அவர்களின் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்தால் தமிழ்நாட்டில் பிஜேபி மதிப்பு எங்கோ உயர்ந்துவிடும்.
  31) கச்ச தீவை மீட்க எல்லாவித நடவடிக்கையும் எடுக்கவேண்டும். (தொடரும்)

 6. R.sridharan on May 18, 2014 at 8:40 am

  லட்சக் கணக்கான நல்ல உள்ளங்களின் ஆர்வம், பிரார்த்தனை, உழைப்பு இவை எல்லாவற்றுக்கும் பலன் கிடைத்து விட்டது.

  பாரத அன்னையின் விலங்குகள் உடைத்து எறியப்பட்டன.

  16.5.2014 -ஹிந்துகளின் விடுதலை நாள்!

  ஆயிரம் ஆண்டுகளாகத் துன்பக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த பாரத மாதா இன்று ஆனந்தக் கண்ணீர் சிந்துகிறாள்.

  நாமும்தான்!

  இரா. ஸ்ரீதரன்

 7. bala on May 18, 2014 at 8:52 am

  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் செக்குலர் பிரித்தாளும் அரசியல் உலுதர்களின் கோரப்பிடியிலிருந்து இந்நாட்டை மீட்டெடுக்க நடைபெற்ற இந்த இரண்டாம் ஸ்வதந்திரப் போரில் 4 மாநிலங்கள் பங்கேற்க்கவில்லை என்பதை வரலாறு மன்னிக்காது. இந்த கடமை தவறியோர் பட்டியலில் எம் தமிழகமும் இருப்பதை நினைக்கும்போது அருவருப்பாயிருக்கிறது.

 8. raman on May 18, 2014 at 9:06 am

  தேசத்தைப் பொருத்தவரை, அனைவரும் வேண்டியபடி தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. நல்ல பதிவு. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம். திரு.சேக்கிழானுக்கு இருக்கும் மகிழ்ச்சியில், ஏப்ரல் 24-யையும் மே 16-யையும் இணைத்து விட்டார்.

 9. அடியவன் on May 18, 2014 at 9:08 am

  ஆரம்பம் முதலே நான் இத்தனை இடங்கள் 325 வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், இதை இதே தளத்தில் சொல்லவும் செய்தேன்.

  http://www.tamilhindu.com/2013/09/tn-2014-election-projections-2/
  ///எப்படி ஆயினும் தமிழ்நாடு கேரளம் தவிர பிற மாநிலங்களில் பாஜக நல்ல நிலையில் இருக்கிறது. மோடி அலை வீசுவதைப் பார்த்தால் 325 சீட்டுகள் வென்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ///

  சொன்னது போலவே தமிழ்நாடு கேரளம் தவிர, மோடி அலை சுனாமியாக அடித்து விட்டது. தமிழ்நாட்டில் கூட அந்த அலையின் மின்சாரத்தை ஜெயலலிதா அறுவடை செய்து விட்டார். அதற்குக் காரணம், இங்கே பா.ஜ.க.விடம் சரியான தொண்டர் படை, அடிமட்ட அரசியல் செய்யம் வட்ட, கிளை அமைப்புகள் இல்லை. வாக்குச் சாவடிகளில் பா.ஜ.கவின் பிரதிநிதிகள் என்று செயல் பட யாருமில்லை. இதை அதிமுக தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தமக்கு அளிக்கப்படும் வாக்குகள், பின்னர் மோடி அரசுக்கு அதிமுக அளிக்கும் ஆதரவின் மூலமாக மறைமுகமாகப் போய்ச் சேரும் என்று சொன்னதும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தம் பக்கம்தான் என்று திமுக அதிக சத்தம்போட்டு முழங்கியதும்தான். திமுக தேர்தலுக்குப் பின் மோடிக்கு ஆதரவு தரவே மாட்டார்கள் என்ற நிலை வந்ததால், பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு தரும் என்ற நம்பிக்கையில் அந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதிலும் சோ போன்றவர்கள் வெளிப்படையாகவே இதைச் சொல்லி அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கச் சொன்னார்கள்.

 10. அத்விகா on May 18, 2014 at 9:48 am

  தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தவர்கள் பட்டியலில் ஜெயலலிதா புகழேணியில் ஏறிவிட்டார் என்பது ஒரு உண்மை. கம்யூனிஸ்டுகளை கூட்டணியில் வைத்திருந்தாலும் இதே 37 தொகுதிகள் தான் கிடைத்திருக்கும். ஆனால் தனியான வாக்கு வங்கி எவ்வளவு என்பது தெரியாமலேயே போயிருக்கும். நமது மீடியா நண்பர்கள் ஜெயா வலுவான கூட்டணியை அமைத்து , வெற்றி பெற்றார் என்று எழுதுவார்கள். அம்மா அவர்கள் அந்த தவறை செய்யாமல் , கம்யூனிஸ்டுகளை வெளியே அனுப்பியது, அதிமுக, ஜெயலலிதா, தமிழகம், இந்தியா என்று எல்லோருக்குமே நல்ல காலம் தான்.

  திமுகவினர் 1996-2004 ஆகிய இரு தேர்தல்களிலும் 40 க்கு 40 வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி தனித்துப் பெற்ற வெற்றி அல்ல. மூப்பனார், ரஜினி, கம்யூனிஸ்டுகள் என்று கூட்டணிக் கட்சியினரின் அரவணைப்புடனே வெற்றி பெற்றனர். திமுக பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து நின்ற வரலாறே கிடையாது.

  1967-லே ஒரு 14 கட்சி கூட்டணியை அண்ணா அமைத்தார். அது எவ்வளவு கேவலமான கூட்டணி என்று சொன்னால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தனிநபர் சுதந்திரம் என்ற மாணிக்கத்தின் மதிப்பு தெரிந்த இராஜாஜி அவர்களும் , பொது உடைமை என்று சொல்லி , நாட்டை குழப்பிய கம்யூனிஸ்டு தலைவர் இராமமூர்த்தி, போன்ற முரண்பட்ட கருத்துக்கள் கொண்டோருடைய கூட்டணி அது ஆகும். அந்த கேவலமான
  கூட்டணி கூட , 37- இடங்களை வெல்ல முடியவில்லை.

  1971- 1977,1980-1984,1989-1991-1996-2004 என்று எல்லா தேர்தலுமே கூட்டணிக் குழப்பமாகி விட்டது. துணிச்சலாக தனித்து நாற்பது இடத்திலும் போட்டிபோட்டு, 37- லே வெற்றிக்கொடி நாட்டிவிட்ட ஜெயாவின் இந்த சாதனையை இனியொரு தமிழக அரசியல்வாதி முறியடிக்க இன்னமும் 50 வருடம் ஆனாலும் முடியாது . ஜெயா அவர்கள் மோடி தலைமையிலான அரசுடன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகத்துக்கு தேவையான மத்திய மின் இணைப்பு மூலமான மின்சார சப்ளை , அரிசி, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவற்றை தங்குதடங்கல் இன்றி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். டெல்லியில் இதுவரை இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு , தமிழகத்துக்கு ஏராளமான வஞ்சனைகள் செய்து, மின்சாரம், அரிசி, பாமாயில், மண்ணெண்ணெய் என்று எல்லாவற்றிலும் தமிழக ஏழை மக்களின் வயிற்றில் அடித்து வந்தது. எனவே தான், தமிழக மக்கள் திமுக மற்றும் காங்கிரஸ் வஞ்சகர்கள் கும்பலை அடித்து விரட்டியுள்ளனர். துரோகிகளை நம் மக்கள் எப்போதும் சும்மா விடமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  காங்கிரசை விட கம்யூனிஸ்டுகள் தீயசக்திகள் என்பதால் தான் , நம் மக்கள் அவர்களை பாதியாக்கி விட்டனர்.

  கனி, இராசா, தயாநிதி, பாலு ஆகியோருக்கு பிரச்சாரம் மற்றும் போட்டியிட வாய்ப்பு ஆகியவை கொடுக்கப்படாமல் இருந்திருந்தால், திமுக இப்படிப் போயிருக்காது. சென்ற தேர்தலில் குஷ்பூ, வடிவேலு ஆகியோரின் காமெடி எடுபடவில்லை என்று தெரிந்திருந்தும் இந்த தேர்தலிலும் குஷ்புவை பிரச்சாரத்துக்கு அனுப்பியது, திமுக தலைமையின் செயல்பாடு ஒரே குழப்பமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

  பாஜக கூட்டணி தமிழகத்தில் 17 இடங்களில் ஜாமீன் தொகையை இழந்தது. திமுக இரு தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்தது. காங்கிரஸ் 38 தொகுதியிலும், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டுகள் ஆகியோர் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ஜாமீன் தொகையை இழந்தனர். ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கும் அதே அதோகதிதான்.

  காங்கிரசுக்கு 4.3 விழுக்காடும், ஆம் ஆத்மி 0.5 விழுக்காடும் ஓட்டு வாங்கி உள்ளன.காங்கிரஸ் முதல் முறையாக அதாவது , காமராஜர் சகாப்தத்துக்கு பிறகு , நாற்பது இடங்களிலும் தனித்து விடப்பட்டு, தேர்தலிலும் பலிபீடத்தில் தலையை நீட்டுவது போல , தலையை நீட்டியது. கன்னியாகுமரி தொகுதியில் திரும்ப கிடைத்துவிட்ட டெபாசிட் வசந்தகுமாரின் சாதனை.

 11. K R A Narasiah on May 18, 2014 at 10:51 am

  முதலில் தமிழ் ஹிந்துவுக்கு பாராட்டுகள். இவ்வெற்றியைப் பாராட்டிச் சிறந்த முறையில் ஆசிரியர் எழுதியுள்ளதை மெச்சிப் புகழ்கிறேன். முக்கியமாக, இவ்வெற்றியைச் சாதாரணமாக கருதாமல், மற்ற பெரும் வெற்றிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தான் இதன் பெருமை தெரியும். 1984 ம் வருடத்து காங்கிரசின் வெற்றியின் காரணம் இந்திரா அம்மையாரின் படுகொலைதான்.

  ஆனால் மோடிஜியின் வெற்றி ஒரு இலட்சியத்தின் வெற்றி; சாமானியனின் வெற்றி; ஊழலை எதிர்த்த காரணத்தின் வெற்றி; காங்கிரஸ் காரர்களின் தில்லுமுல்லுகளையும் அவர்களை ஒட்டி நின்ற சில கட்சிகளின் உதாவாக்கரைத் தனத்தையும் மனதில் கொண்டு, மக்கள் அளித்த மாபெரும் வெற்றி.

  இது ஊழலுக்கும், ஏமாற்றுவித்தைகளுக்கும் கொடுக்கப்பட்ட சவுக்கடி; சாவுமணி.

  இதை அறிந்து கொள்ளாது பேசும் மணிசங்கரய்யர் போன்றவர்கள் என்றும் கற்றுக் கொள்ள மறுப்பவர்கள். மோடியைச் சிறுமைப படுத்திப்பேசிய சிதமபரம் போன்றோருக்கு ஒரு கல்வி புகட்டல் – ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மறுப்பவர்க்ள். தமக்குத் தான் தெரியும் என்ற மமதையில் இருப்பவர்களுக்கு எப்படிப் பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும்? இதில் நம்மூர் ஆ ஆ கட்சி ஞானியையும் சேர்த்துக் கொள்ளலாம்!

  இந்தியா இந்தியர்களின் நாடு; இது பாரத பூமி; பழம்பெரும் பூமி; இப் பெரும் வெற்றி இந்நாட்டின் வெற்றி; தாம் தான் சிறந்தவர்கள் என்ற அகங்காரத்தில் மிதக்கும், (குப்புற் விழுந்த பின்னரும்) மணீசங்கர் அய்யர் போன்றவர்களால் ஜீரணித்துக் கொள்ள இயலாது.

  அது வேண்டியதில்லை, அவர்களைத்தான் மக்கள் ஓரம் கட்டிவிட்டார்களே! இனி எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருக்கும் அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டியதில்லை. ஆனாலும் இந்தியர்கள் ஜாக்கிரதையுடன் செய்லாற்ற வேண்டும், இப்புனித பூமிக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் எவ்வள்வோ உண்டு. அதைத் தேடிச் செல்லும் மோடிக்கு நமது ஆதரவு என்றென்றும் நிலைத்து இருக்க வேண்டும்.

  பழம் பெருச்சாளிகள் உள்ளே நுழையாதவாறு காக்க நாம் கடமைப் பட்டுள்ளோம். அதே போல சந்தர்ப்ப் வாதிகளான தி மு க கட்சியையும் தமிழர்கள் ஒதுக்கி ஒரம் தள்ளியிருப்பது ஜனநாயகத்தின் வெற்றி.

  பாரதமாதா புன்னகைக்கிறாள். பாரதி இருந்திருந்தால், விவேகானந்தர் மீது எழுதியது போல ஒரு கவிதையே புனைந்திருப்பார் மகிழ்ந்துமிருப்பார்.

  வாழ்க ஜனநாயகம்; வெலக் மோடியின் ஆட்சி!

  நரசய்யா

 12. arumugam on May 18, 2014 at 11:47 am

  Congratulations! To modiji.waiting for ramarajyam

 13. ரங்கன் on May 18, 2014 at 11:51 am

  சற்றும் நினைக்க முடியாத அளவு மெஜாரிட்டி திரு மோதி அவர்களுக்குக் கிட்டி உள்ளது. இது சற்றும் வீண் போகாது என்று நம்பிக்கையோடு இருப்போம். அப்பா – ராணியையும், இளவரசனையும் இப்போது பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அது போல மஞ்சள் துண்டு மகானின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

  ஆனால் —

  37 இடங்களைப் பிடித்தும் அம்மா இப்போது மத்தியில் ஆட்சியில் பங்கு பெற முடியாத நிலைமை. 40 ம் நமதே – நானே நாளைய பிரமதர் என்று ஆரம்பித்ததிலிருந்து அவருடைய நடவடிக்கைகளை மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று வர்ணித்தனர். இனியாவது செல்வி ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசுடன் விரோதப் போக்கை விடுவாரா ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

 14. "Honest man" on May 18, 2014 at 11:53 am

  32) நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் பெயரில் உள்ள திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு: “இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம்” என்பதை “இந்திய மக்கள் குடியிருப்பு திட்டம்” என்று மாற்ற வேண்டும். இது போலவே மற்ற அனைத்து திட்டங்களின் பெயர்களையும் நீக்கி “பாரத” அல்லது “இந்திய” என்று மாற்றவேண்டும்.
  33)வெளிநாட்டிலிருந்து உடனடியாக கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவரவேண்டும். காங்கிரெஸ் போல வெறும் வாய்ஜாலம் காட்டி 5 ஆண்டு முடிந்ததும் ஏதாகிலும் சாக்குபோக்கு சொல்லாமல் பிஜேபி “ஒரு வித்தியாசமான கட்சி” என்பதை நிருபிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பணம் இந்தியாவிற்கு வந்தால் நதி இணைப்பு திட்டத்தை எளிதாக நிறைவேற்றலாம். மேலும் சோனியாவின் கருப்பு பணம் எவ்வளவு என்று தெரியவந்தால் அப்போதே காங்கிரஸ் கட்சி அவுட்
  34) ஐரோப்பிய நாடுகள் நமது அல்போன்ச மாம்பழங்களையும் சவூதி அராபிய நாடு நமது மிளக்காயக்கும் தடை விதித்துள்ளது. ஆகவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். விவசாயத்திற்கு முன்னுருமை கொடுக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலையை நிறுத்த வேண்டும்.
  35)தீவிரவாதிகள் மோடி என்ற பெயரை கேட்டாலே மூத்திரம் பெய்யவேண்டும். Terrorists நிறைந்த நாடு என்ற அவப்பெயரை நீக்கி அதற்கு பதிலாக Tourists destination ஆக இந்தியாவை வெகு விரைவில் மாற்ற வேண்டும்.

 15. Dheeran on May 18, 2014 at 8:21 pm

  “Honest man” அவர்களுக்கு வாழ்த்துக்கள்,

  போன தேர்தலில் ஆட்சியை பிடிக்கமுடியாமல் போனதற்கு பிஜேபி சரியான உறுதியான தலைமையை முன்னிருத்தாதது காரணம், இப்பொழுது அப்படி இல்லாமல் மோதி அவர்களை கொண்டுவந்ததால் மக்களின் நம்பிக்கையைப் பெறமுடிந்தது. அவரது ஆளுமையில் “Honest man” சுட்டிக்காட்டிய தவறுகள் நடக்க வாய்ப்பில்லை என நம்புவோம்.

  வாழ்க பாரதம்.

 16. N.Paramasivam on May 19, 2014 at 12:20 am

  Honest Man கருத்துகளை நான் வழி மொழிகிறேன். அம்மா அவர்களின் பிடியில் சிக்காத திரு மோடி நிச்சயம் நன்கு ஆட்சி செய்வார். திரு வாஜ்பாய் அவர்கள் அம்மாவினால் எவ்வாறு கஷ்டப்பட்டார் என்பது இன்னும் எனக்கு நினைவு வருகிறது. திரு மோடி அவர்களுக்கு வாழ்த்துகள். நமக்கு ஒரு ஒளிமயமான வருங்காலம் உள்ளது தெரிகிறது.

 17. "Honest man" on May 19, 2014 at 8:19 am

  நரேந்திர மோடியின் அபார வெற்றி – பலரின் வயிறு எரிகிறது தீப்பற்றி. சதாசர்வகாலமும் மோடியை திட்டிதீர்த்த வீரமணிக்கு இன்று சாவுமணி. கருணாநிதி இனி அதோகதி. திருமா! வசந்தகாலம் மீண்டும் வருமா? மாயாவதி ஒரு மாயமா போன யுவதி. இத்தாலி இன்முகத்தோடு அழைக்கிறது உன்னை சோனியா! தாயே! நீ இங்கிருந்து போனியா (=போய்விட்டால்) எங்க தாய் நாடு பிழைக்கும். உன்னை அழைக்கும் இத்தாலிக்கு போய்விடு. பல்லு போன பாம்பு. இல்லை இல்லை பல்லு போன லல்லு. Nithish கதை இத்தோடு finish .கபில் சிபல் இப்போது கப் சிப் ஹரே ஷிண்டே! இனி ஆயுள்பூரா உனக்கு சண்டே (=விடுமுறை).வீட்டில் முடங்கி கிட. சரத் பவார் நோ power . “”எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும். அங்கே எனக்கோர் இடம் வேண்டும்””– இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர் டெல்லியை சேர்ந்த மன்மோகன் சிங். 10 ஆண்டுகள் மிகவும் நொந்து நூட்ல ஆகிவிட்ட இவருக்கு நிம்மதி வரவேண்டுமானால் ஒரு “திருமதி” தன புகுந்தகம் துறந்து பிறந்தகம் உடனே போகவேண்டும் அதுவே அந்த திருமதி அவரது 10 ஆண்டு சேவைக்கு தரும் வெகுமதி.

 18. A.Seshagiri on May 20, 2014 at 10:41 am

  Honest man தனது பின்னூட்டத்தில் அஜித் ஜோகி வெற்றி பெற்றதாக தவறாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால அவர் 1000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வேட்பாளர் திரு.சந்து லால் சாஹு என்பவரிடம் தோற்றுப் போய்விட்டார்.இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில்,இந்த ”யோக்கிய சிகாமணி” யின் பேரில் (இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி என நினைவு) அந்த தொகுதி மக்களை குழப்புவதற்காக 7-8 பேரை சந்து லால் சாஹு என்ற பெயரில் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறக்கி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் தேர்தல் நேரத்தில் இவர் மேல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.அதற்கு ஏற்றார் போல் இந்த சுயேச்சை வேட்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து சுமார் 60000 வாக்குகள் பெற்றுள்ளார்கள்.எப்படிப்பட்ட கிரிமினல் மோசடி பாருங்கள்.
  “படித்தவன் தப்பு செய்தால் ஐயோ” என்று போய்விடுவான் என்று பாரதி சொன்னதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
  http://indiatoday.intoday.in/story/ajit-jogi-loss-chandu-lal-sahu-mahasamund-lok-sabha-elections-2014/1/362554.html

 19. சேக்கிழான் on May 20, 2014 at 1:30 pm

  // தேர்தல் எண்ணப்பட்ட ஏப்ரல் 26ம் ‘- இந்த தட்டச்சுப் பிழையை சரிசெய்து மே 16- ஆம் தேதியை – என்று மாற்றிப் படிக்க வேண்டுகிறேன்//

  //திரு.சேக்கிழானுக்கு இருக்கும் மகிழ்ச்சியில், ஏப்ரல் 24-யையும் மே 16-யையும் இணைத்து விட்டார்//

  இப்பிழை சரிசெய்யப்பட்டுவிட்டது. சுட்டிக்காட்டிய நண்பர்கள் திருவாளர்கள் அத்விகா, ராமன் ஆகியோருக்கு நன்றி.

 20. ஐயாரப்பன் on May 21, 2014 at 8:57 am

  இந்த தேர்தல் முடிந்து விட்டபோதும் நடந்த பல நிகழ்ச்சிகளை மறுபார்வை செய்யவேண்டி உள்ளது.

  1.முலயாம் சிங்கின் சமாஜ்வாதி அரசு வாரணாசி பாஜக அலுவலகத்தில் தேவையில்லாமல் ஒரு ரெய்டு நடத்தி, கட்சிக்கொடிகளையும், கட்சி உறுப்பினர்களின் பேட்சுகளையும், கட்சி சின்னம் பதித்த பனியன்களையும் அள்ளிச்சென்று , பின்னர் அவற்றை திருப்பிக்கொடுத்து விட்டது. தொலைக்காட்சிகளில் பாஜக அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு என்று செய்தி பரப்பி ஏதாவது லாபம் பார்க்கலாம் என்று குறுகிய புத்தியுடன் செயல்பட்டது.

  2.யோகா குரு திரு ராம்தேவின் தலையை கொண்டுவருவோருக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி என்று அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பகவான்சிங் உட்பட அந்த வன்முறை கட்சியின் 80 வேட்பாளர்களும் உ பியில் தோல்வியை தழுவினார்கள்.

  3. அஜித் யோகி என்ற இந்திரா காங்கிரஸ் கட்சி வேட்பாளர் , தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரின் பெயர் கொண்ட சுயேட்சைகள் சுமார் ஒன்பது பேரை தேர்ந்தெடுத்து , பெயர் குழப்பத்தை ஏற்படுத்தினார். அப்படியும் காங்கிரஸ் அந்த தொகுதியில் தோற்றுப்போனது. அஜீத் யோகி மூக்கு உடைபட்டார்.

  4. தமிழ் நாட்டை விட்டு ஜெயலலிதாவை ஓட ஓட விரட்டவேண்டும் என்ற தொனியில் , தேர்தல் கூட்டங்களில் பேசிய டூ ஜி நாயகி கனியின் பேச்சுக்களை கேட்ட தமிழக வாக்காளப் பெருமக்கள் முகம் சுளித்ததுடன் , திமுகவை முற்றிலும் துடைத்து எறிந்து விட்டனர். ஏழு இடங்களில் மூன்றாம் இடம், இரண்டு தொகுதிகளில் நான்காம் இடம் என்று ஆகி , திமுக கட்சியே அமிழ்ந்தது.

  5. நரேந்திரமோடியின் திருமணம் , என்று ஆரம்பித்து தேவை இல்லாத விஷயங்களைப் பேசி , முக்கியமான விஷயங்களை பேச காங்கிரஸ் பயந்து நடுங்கியது. காங்கிரசின் பயமே அதனை பல தொகுதிகளில் தோற்கடித்து விட்டது.

  6. ஒரு உ பி அரசியல்வாதி கூட்டத்தில் பேசும்போது நான் நரேந்திர மோடியின் தலையை வெட்டுவேன்/ காலை வெட்டுவேன் என்றெல்லாம் பேசி , உ பி யில் உள்ள ஆளுங்கட்சியை காலி செய்து விட்டார். சமாஜவாதியின் நண்பர்கள் கூட இருந்தே அந்த கட்சிக்கு குழி பறித்தனர்.

  7. வாரணாசியில் மோடியின் கூட்டத்திற்கு அனுமதி மறுத்த தேர்தல் கமிஷன் அடுத்த நாள் அதே இடத்தில் ராகுல் காந்தியின் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து , முரண்பட்ட நிலைகளை எடுத்து குழப்பியது. அந்த கூட்டம் இன்றியே நரேந்திர மோடி பெரு வெற்றி பெற்றார்.

  8.வட இந்தியாவில் இஸ்லாமியப் பெருமக்கள் வாக்கு அதிகம் உள்ள எல்லா தொகுதிகளிலும் பாஜகவே வென்றுள்ளது. அதனை விட முக்கியம் தமிழகத்தில் இஸ்லாமிய கட்சிகள் இரண்டும், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணியில் போட்டியிட்டும், திரு பி ஜெயினுலாபுதீன் அவர்கள் தனது நிலையை மாற்றிக்கொண்டு , கடைசி நேரத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டும், இஸ்லாமிய பெருமக்களின் ஓட்டுக்கள் அதிகம் உள்ள அனைத்து தொகுதியிலும் திமுக தோற்றுப்போய், அதிமுகவே பெருவெற்றி பெற்றது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இஸ்லாமிய மக்களின் பெயரை சொல்லி, மோசடி அரசியல் செய்யும் தலைவர்களை இஸ்லாமிய மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

  9. 434 லோக்சபா இடங்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி நாலே நாலு இடங்களில் வென்றது. அதற்கு காரணம் பஞ்சாபில் உள்ள அகாலி தளத்தின் மீது உள்ள அதிருப்தி ஆகும். மற்ற இடங்களில் பெரும்பாலும் ஜாமீன் தொகையை இழந்தனர். ஆட்சிக்கட்டில் ஏறிய டெல்லியில் ஏழு இடத்திலும் தோற்றனர்.

  10. விஜயகாந்த் தமிழகத்தில் பாஜக கூட்டணி போட்டியிட்ட எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். அதனை விட முக்கியம் அவரது மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல கூட்டங்களிலும், பிரச்சார வானில் ஏறி, சிறப்பாக பேசி மக்களைக் கவர்ந்தார். விஜயகாந்த் அவர்களின் பேச்சினை விட திருமதி பிரேமலதா அவர்களின் பேச்சு பொதுமக்களால் அதிக அளவு வரவேற்கப்பட்டது. அவர் பேசும்போது தெளிவாக பாயிண்ட் பாயிண்டாக அடுக்கி பேசி, மக்கள் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் திரு இராமதாஸ் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்து தன் மகன் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்து , தன்னுடைய குறுகிய புத்தியை காட்டிவிட்டார். ராமதாசும் எல்லா தொகுதியிலும் பிரச்சாரம் செய்திருந்தால், பாஜக அணி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற வேலூர், கோவை ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் விதி இராமதாசின் மனதில் நல்லவிதமாக வேலை செய்யவில்லை.

  11. நான் கரூரில் 500 பெண் வாக்காளர்களிடம் பேசிப்பார்த்து, கரூரில் திமுக வெற்றிபெறும் என்று அதிகமான பத்திரிகைகளில் கருத்துக்கணிப்பு வந்துள்ளதே என்று கேட்டேன். ஏங்க, நாங்க எம் ஜி ஆர் கட்சிக்கு ஓட்டுப்போடும் போது, திமுக எப்படி இங்கே ஜெயிக்க முடியும் ? பத்திரிகைகாரனுங்க பணக்காரங்களிடம் சூட்கேசை வாங்கிக் கொண்டு அப்படி எழுதுவானுங்க. இன்னும் ஒரு மாசம் பொறுத்துப் பாருங்க அய்யா, எங்க தொகுதி மட்டுமில்லே, தமிழ் நாட்டிலேயே இவுனுக எங்கேயும் கெலிக்க மாட்டானுங்க. அப்பத்தான் உங்களுக்கு எல்லாம் உண்மை புரியும் என்றனர். இறந்து போய், சுமார் 27 வருடம் ஆகிவிட்ட எம் ஜி ஆர் மீது மக்களுக்கு இருக்கும் பற்று எனக்கு இன்னமும் ஒரு பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தேர்தல் முடிவு வந்தவுடன் , இந்த பெண்களுக்கு தெரிந்தது நமது பத்திரிக்கையாளர்களால் கணிக்க முடியவில்லையே என்று நினைத்தேன்.

  12. என் டி டி வீ மட்டுமே தமிழக தேர்தல் முடிவை ஓரளவு சரியாக கணித்தது.அதிமுக 32 இடம் வெல்லும் என்று சொல்லிய அவர்கள் , வாக்கு வித்தியாசம் அதிமுகவுக்கு 22 சதவீதம் கூடுதலாக இருப்பதால், இந்த 32 இடம் என்பது 35 வரை போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்களால் கூட இந்த 37 ஐ சரியாக சொல்லமுடியவில்லை.

  13. இந்திய ஜனநாயகம் மீண்டும் மக்கள் சக்தியை நிரூபித்துள்ளது. இந்திய ஜனநாயகம் உலகுக்கே ஒரு எடுத்துக்காட்டாக வரும் காலங்களில் திகழும்.
  இந்தியா வெல்க இந்திய ஜனநாயகம் வெல்க ! வையகம் வளமுடன் வாழ்க !

 21. JANAVI PUTHTHIRAN on May 21, 2014 at 1:02 pm

  தெய்வப்பற்றும் தேசப்பற்றும் கொண்ட அனைத்து மக்களும் பிஜேபி கட்சியை மட்டுமே ஆதரிப்பார்கள் . நம் தமிழ் நாட்டில் பிஜேபி ” பார்ப்பான் ஜனதா கட்சி என்று திராவிடர் ,திமுக கட்சிகள் டமாரம் அடித்து விட்டதனால் கடந்த 30 வருடங்கள் பெரும்பாலான நம் தமிழ் மக்கள் படித்தவர்கள் ,படிக்காதவர்கள், கை நாட்டுக்கள் அதனை தீண்டத்தக்கதாக கட்சியாகவே இன்னமும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் .வடக்கே காஷ்மீரில் ,அருணாச்சல பிரதேசத்தில் ,லேஹ் ,அக்ஷைசின் ,பாகிஸ்தான் பிடித்துக்கொண்டிருக்கும் காஷ்மீர் பகுதிகள் …நடந்த , நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளைப்பற்றி, அரசியலில் நம் தமிழ் நாட்டில் புலிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் எத்துனை மட ஜனங்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கும் . வெறும் சினிமா சினிமா ,தலைவர் தலைவர் …என்று அடி வருடிகள் இருக்கும்வரை இவர்களை தெளிய வைப்பது கடினம் .சிவ சேனா , பஜ்ராங்க்தல் ,ராம் சேனா போன்று நம் தமிழ் நாட்டில் சிவா,வைணவ பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ” சிவ கணங்கள் ” என்ற கட்டமைப்பு ஏற்படுத்தி ஒன்று பட்டால்தான் , ஒரு நல்ல எதிர் கால த்தை , நம் சந்ததிகளுக்கு விட்டுச்செல்ல முடியும் . நல்ல சிந்தனை மிக்க நல் இதயங்கள் ஒன்றுபட எல்லாம் வல்ல இறைவன் என் அப்பன் ஆதி சிவனை வேண்டிக்கொள்கிறேன் .இந்த களத்தில் அருமையான கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருக்கும் என் இனிய சகோதர நண்பர்களுக்கு பணிவான வணக்கங்களை உள்ளன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் . நன்றி .

 22. "Honest man" on May 21, 2014 at 2:21 pm

  1. முலாயம் பிஜேபி கட்சி அலுவலகத்தில் “கோடிகள்”(பணம்) கிடைக்கும் என்று நினைத்து raid நடத்தினார். ஆனால் கிடைத்து “கொடிகள்”தான்

  2. தலைகளுக்கு வெகுமதி அளிப்பது முஸ்லிம் பயங்கரவாதிகளின் வழக்கம். அந்த முஸ்லிம்களோடு பழகி பழகி பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்காரன் பக்வான்சின்கிற்கும் அந்த புத்தி வந்துவிட்டது. நாயோடு கன்று சேர்ந்தால் அந்த கன்றுக்கும் அந்த புத்திதானே வரும்.

  3. அஜித் யோகி ஒரு கிறிஸ்தவன். மட்டுமல்ல ஒரு கிறுக்கனும் கூட. அதனால் அந்த 9 பேரை நிர்கவைத்தான்.

  4. மோடியின் வெட்டுவேன் என்று பேசியது ஒரு முஸ்லிம்.(காங்கிரஸ் வேட்பாளர்)

  5. விஜயகாந்த் கூட்டணி அமையும் வரை அடம் பிடித்தார். ஆட்டம் காண்பித்தார். தகராறு செய்தார்.(நிறைய சீட்டுகளுக்காக). ஆனால் கூட்டணி அமைந்த பிறகு ஒவ்வொரு கூட்டத்த்திலும் மோடி மோடி என்று உச்சரித்தார். அதே போல அவரது மனைவியும். அவர்கள் உழைத்த உழைப்பிற்கு ஒரு சீட் கிடைத்திருக்கலாம். அன்புமணி ஒத்துழைத்தார். அவர் மீது குறை சொல்ல முடியாது. ஆனால் அவரின் தகப்பனை போல ஒரு மோசமான் பேர்வழியை இந்த லோகத்திலேயே பார்க்கமுடியாது. இப்போதும் கூட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது அந்த கட்சி நின்ற தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும் நன்றி சொல்கிறார். அந்த ஆள் ஒரு மனுஷனே கிடையாது. அந்த ஆளுக்கு பிஜேபி பிடிக்கவில்ல என்றால் அவர் தன மகனுக்கு மந்திரி பதவி வேண்டும் ஆசைப்பட கூடாது.

  (edited and published)

 23. க்ருஷ்ணகுமார் on May 25, 2014 at 9:42 pm

  ஹிந்தி / ஹிந்துஸ்தானி தெரிந்த தமிழ் ஹிந்து வாசகர்கள் கீழ்க்கண்ட உரலில் முஸல்மாணிய சஹோதரர்கள் பங்கெடுத்த ஆப் கீ அதாலத் நிகழ்ச்சியை அவச்யம் பார்க்க வேண்டும்.

 24. ஐயாரப்பன் on June 1, 2014 at 11:01 pm

  சற்று முன்னர் இன்டர்நெட்டில் டெல்லி சட்டசபை தேர்தலுக்காக இந்திரா காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டு சேரப்போவதாக செய்திகள் வந்துள்ளன. காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தால் ஆம் ஆத்மியின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு விடும். தனியாக நின்றாலும் ஐந்து இடம் கிடைத்தாலே அதிசயம்தான். கூட்டு என்ற பெயரில் காங்கிரசுடன் சேர்ந்தால் இந்த ஐந்தும் கிடைக்காமல் போய்விடும்.

  2) ஆம் ஆத்மி கட்சிக்கு சவூதி அரேபியா , துபாய் போன்ற இன்னும் பல நாடுகளில் இருந்து நன்கொடை பல கோடிரூபாய்கள் வந்துள்ளன என்று செய்திகள் கசிகின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நன்கொடை பற்றி மத்திய அரசின் உள்துறை விசாரணை செய்து, இதில் முறைகேடுகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் , அரவிந்த கேஜ்ரிவால் பாத்வா அளிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளை சந்தித்து ஓட்டுக்கேட்டவர் ஆவார்.

 25. "Honest man" on June 2, 2014 at 9:17 am

  திரு கிரிஷ்ணகுமார் அவர்களே!///கீழ்கண்ட உரலில்///// கீழே எங்கே இருக்கிறது? மறந்துவிட்டீர்கள் போல தெரிகிறது.

  2)நேற்று மோதி அவர்கள் பிஜேபி தேசிய தலைமை அலுவலகத்தில் பேசியபோது “People have chosen us witha new hope and wit a lot of expectations and we need to live up to their expectations.The trust of the people should not be broken” மோடி அவர்களே நீங்கள் பேசும்போது இலக்கனமாகதான் பேசுகிறீர்கள். ஆனால் செயல்படும்போது கோட்டை விட்டுவிடுகீறேர்களே! அதாவது வளி எண்ணெய் (=Diesel ) விலையை 0-50 காசு ஏற்றியது நியாயமா? அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறும் என்று அறியாதவரா நீர்? அப்புறம் விலைவாசியை குறைப்பேன் என் சொல்வது சரியா? அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? விலைவாசி குறைப்பு. காங்கிரஸ் காரர்கள் விலைவாசியை குறைக்காமல் நாங்கள் அந்த ACT ஐ pass செய்தோம். இந்த ACT ஐ pass செய்தோம் என்று சொன்னார்கள். மக்கள் ஏற்றுகொண்டார்களா? அவர்களுக்கு படுதோல்வியையும் உங்களுக்குமாபெரும் வெற்றியையும் கொடுத்தார்கள். நீங்களும் அவர்களை போலவே விலைவாசியை குறைக்காமல் போனால் உங்களுக்கும் அதே கதிதான் நேரும் என்பதை மறந்து விடாதீர்கள். அடுத்து தொடர்வண்டி கட்டணத்தையும் ஏற்றபோவதாக மந்திரி பேதிகை கொடுக்கிறார். ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் இப்படி நடந்து கொண்டால் ஹூஹீம் மனசுக்கு சரிபட்டு வரவில்லை.

  பொன் ராதகிரிஷ்ணனை மீனவர் அமைச்சராக நியமித்து இருக்கலாம். இலங்கை அதிபர் இந்தியா வரும்போது சில இந்திய (அல்லது தமிழ்) மீனவர்கள் விடுவித்தார். ஆனால் இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிகொண்டது. ஜெயா (பிள்ளையார் சுழி போட்டு) கடிதம் எழுத ஆரம்பித்து விட்டார்.இன்னும் எத்தனை கடிதம் எழுதுவாரோ?

  ராணுவத்தில் 100% அன்னியமுதலீடு தேவைதானா? கம்யூனிஸ்ட் கட்சிகாரர்கள் குற்றம் சாட்டுவது போல “காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகியவை இரண்டுக்கும் எந்தவிதமான வித்தியாசமில்லை” என்பதற்கு ஏற்றார்போலவேதான் நீங்களும் விலைவாசி பற்றி கவலை படாமல் FDI விவகாரத்திலும் வேறுபடாமல் உள்ளது வேதனையை அளிக்கிறது. பார்த்து செயல்படுங்கள். தவறினால் மீண்டும் இதுபோல ஒரு மெஜாரிட்டி கிடைக்காது.

 26. வெள்ளைவாரணன் on June 2, 2014 at 7:57 pm

  அன்புள்ள திரு ஹாநெஸ்ட் மேன் அவர்களே,

  பாதுகாப்புத்துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு வழி வகுப்பதால் என்ன நன்மைகள் உள்ளன என்று தினமணி பத்திரிகையில் நேற்றோ முந்தாநாளோ ஒரு முக்கிய கட்டுரை முதல் பக்கத்திலேயே வந்துள்ளது. கம்யூனிஸ்டுக்காரன் பேச்சையும், எதிர்ப்பையும் நம்பி , தாங்கள் எழுதியுள்ளது வருத்தத்தை தருகிறது. எந்த கம்யூநிச்டுக்காவது யோக்கியதை இருந்தால் , தினமணி கட்டுரைக்கு பதில் எழுதட்டும் . வெறும் புலம்பல் தவறானது. தினமணி செய்தியில் இந்த வெளிநாட்டு முதலீடு எப்படி நியாயமானது என்பதை தெளிவாக கொடுத்துள்ளனர். தேவை இல்லாமல் வெற்றுக்கூச்சல் போடுவது கம்யூனிஸ்ட் பித்தர்களின் வேலை.

 27. க்ருஷ்ணகுமார் on June 2, 2014 at 9:46 pm

  அன்பின் ஸ்ரீ ஹானஸ்ட்மேன்,

  க்ஷமிக்கவும். அவசரத்தில் பிழை நேர்ந்து விட்டது.

  சுட்டியமைக்கு நன்றி

  சம்பந்தப்பட்ட உரல்

  https://www.youtube.com/watch?v=Zs8bNyYgIgc

  இதன் சாராம்சத்தை தமிழாக்கம் செய்யவும் முயற்சி செய்து வருகிறேன்.

  அரசியல் சம்பந்தமாக உங்களுக்கு ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கின்றன. நிறைய எழுதுவதிலும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது.
  உங்கள் எழுத்துக்களை அள்ளித்தெளித்த கோலமாக தனித்தனி உத்தரங்களாகப் பகிராது குறு வ்யாசங்களாகத் தொகுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என அபிப்ராயப்படுகிறேன். ப்ரயாசிக்கவும். கூடவே எழுத வரும் விஷயத்தில் இயன்ற வரை நிதானத்தையும் பேணவும்.

 28. வெள்ளைவாரணன் on June 3, 2014 at 10:01 pm

  Murshidabad 11

  BADARUDDOZA KHAN Communist Party of India (Marxist)
  ABDUL MANNAN HOSSAIN Indian National Congress margin 18453

  Raiganj 5

  MD. SALIM Communist Party of India (Marxist)

  DEEPA DASMUNSI Indian National Congress margin 1634

  மேற்கு வங்காளத்தில் காம்ரேடுகள் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். இரண்டில் ஒன்றில் வித்தியாசம் 1634 ஓட்டுக்கள். மற்றதில் 18453 ஓட்டுக்கள். பாவம் காம்ரேடுகளின் சாயம் வெளுத்துப் போச்சு.1977- இலிருந்து 34 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காம்ரேடுகள் முதல் இரு தேர்தல்களில் மட்டுமே உண்மையான வெற்றி பெற்றனர். பின்னர் நடை பெற்ற 5 சட்டசபை தேர்தல்களிலும் மிரட்டல், வாக்கு சாவடிகளை கைப்பற்றல் ஆகிய வழிமுறைகளை பின்பற்றியே கேலிக்கூத்தாக்கினார்கள். இப்போது சாயத்தினை மமதா பானெர்ஜி வெளுத்துக் கட்டிவிட்டார். காம்ரேடுகள் காரல் மார்க்சின் சாமாதிக்கு பக்கத்தில் ஒரு கொட்டகையைப் போட்டுக்கொண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகலாம். அதுதான் ஒரே வழி. பொய் பித்தலாட்டம் இவற்றின் அடிப்படையிலான ஒரு மோசடி தத்துவத்துக்கு மக்கள் செருப்படி கொடுத்துள்ளனர். இனியாவது கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு, கம்யூனிஸ்டுகளின் எஜமாநியான சோனியா கட்சியில் கரைந்துவிடுவது இவர்களுக்கு நல்லது. கம்யூனிஸ்டுகள் காங்கிரசின் ஏஜெண்டுகள் என்று நாடு முழுவதும் மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*