இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு- மார்ச் 20, 2014
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு- மார்ச் 20, 2014

மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. ஆளும் கட்சியான அதிமுகவின் அசுரத்தனமான வெற்றியால் தமிழக தே.ஜ. கூட்டணி நிலைகுலைந்திருப்பது, கூட்டணித் தலைவர்களின் மௌனத்திலேயே புலப்படுகிறது. இந்தக் கூட்டணி இனிவரும் காலத்தில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழத் துவங்கிவிட்டது

இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், நாடு முழுவதும் வெற்றியை ஈட்ட முடிந்த மோடி அலை தமிழகத்தில் செல்லுபடியாகாமல் போனதன் காரணம் என்ன என்று ஆராய்வது அவசியம்.

இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி என்ற பெயரே மந்திரம்போல மாறியதை களத்தில் கண்டோம். பிற மாநிலங்கள் மட்டுமல்ல, தமிழகத்திலும் கூட மோடி அலை பரவலாக வீசியது என்பது உண்மை. அதன் விளைவாகவே- முக்கிய எதிர்க்கட்சியான திமுக வெல்லாதபோதும்-  இரு இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. எனினும் பிற மாநிலங்களில் மோடிக்குக் கிடைத்த வெற்றி விகிதத்துடன் ஒப்பிடுகையில் தமிழகம் பின்தங்கியே உள்ளது.

பொதுவாக,  ‘வெற்றிக்கு ஆயிரம் தந்தையர்; தோல்வி ஓர் அநாதை’ என்று சொல்வார்கள். ஆகவே, தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி இரு இடங்களில் வென்றது மோடி அலையால் என்றால், பிற இடங்களில் தோல்வி யாரால்?

கண்டிப்பாக தமிழகம், ஒடிசா, கேரளா, மேற்கு வங்கத்தில் மோடி அலை வெற்றியை அறுவடை செய்யப் போதுமானதாக இல்லை. அதாவது, மோடி அலை மக்களிடையே புழங்கியதை வாக்குகளாக மாற்றும் திறன் இம்மாநிலங்களில் இன்னமும் கட்சிக்கோ, கூட்டணிக்கோ  வாய்க்கவில்லை.

தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியின் ஏமாற்றத்துக்கு இதுவே காரணம். மக்களிடையே நல்ல மதிப்பு பெற்றிருந்தும் அதை வாக்குகளாக மாற்றும் திறன் இல்லாமல் போனதற்கு, தோழமைக் கட்சிகள் மீதான அதீத மதிப்பீடும் காரணம்.

தமிழகம், ஒடிசா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் செல்வாக்கிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஈடு கொடுக்க முடியவில்லை.  குறிப்பாக தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமிட்ட அணுகுமுறைக்கு முன்பு, அவசரகதியில் அமைக்கப்பட்ட தே.ஜ.கூட்டணியால் சோபிக்க முடியவில்லை.

முதல் கோணல்:

Vijaykanth
விஜயகாந்த்

முதலாவதாக, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்க காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தானாகவே முன்வந்து பல மாதங்கள் தீவிரமாக முயன்றார். ஆனால், அப்போது தேமுதிகவும் பாமகவும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஊசலாட்டம் மாநிலம் முழுவதும் பெரும் அதிருப்தியை உருவாக்கியது. மலேசியாவுக்குச் சென்று அங்கிருந்து அரசியல் பேச்சுகளை நடத்திய விஜயகாந்த், கூட்டணியில் தானே முதன்மையாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு அடுத்த கட்சியாக வென்று பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தேமுதிகவை பாஜக அணிசேர்க்க விரும்பியது இயல்பே. ஆனால், விஜயகாந்தோ ஒரே நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்ய முற்பட்டார். ஒருபுறம் பாஜகவுடன் பேச்சு நடத்தியபடியே மறுபுறம் காங்கிரஸ், திமுக தரப்பிலும் நட்பைத் தொடர்ந்தார். அதனால் ஏற்பட்ட குழப்பமே, தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இது மக்களிடையே அவரது நம்பகத்தன்மையைக் குலைத்துவிட்டது.

பிறகு ஒருவழியாக அவர் சம்மதம் தெரிவித்தபோது அதிமுக தலைவி ஜெயலலிதா தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரப் பயணத்தைத் துவங்கி இருந்தார். தேமுதிகவின் தாமதமான முடிவால், சென்னையில் நடைபெற்ற மோடி பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியவில்லை.

அடுத்து பாமகவை சமாதானப்படுத்துவது பெரும் சிக்கலானது. தேமுதிக கோரிய தொகுதிகளின் எண்ணிக்கை (14) போலவே பாமகவும் கோரியது. பிறகு வட தமிழகத்தில் தேமுதிக கோரிய பல தொகுதிகளை பாமகவும் கோரியது. பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆரம்பம் முதல் தேர்தல் முடியும் வரை கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படவே இல்லை. அன்புமணியின் முனைப்பால் தான் இந்தக் கூட்டணியே அமைந்தது. எனினும், பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது ராமதாஸுக்கு திருப்தி அளிக்கவில்லை.

இவ்வாறாக தேர்தலுக்கு முன்னதாகவே தேமுதிக, பாமக இரு கட்சிகளிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படவில்லை. இதனை பாஜக மாநிலத் தலைவர்களால் சரிசெய்ய முடியவே இல்லை. வைகோ தலைமையிலான வைகோ மட்டுமே உறுதியான கூட்டணி சகாவாக முதன்முதலில் மோடியுடன் கைகோர்த்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளை கூட்டணி தர்மதத்திற்காகப் பொறுத்துக்கொண்டு பெற்றவர் அவர் மட்டுமே.

பிற்பாடு பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதியநீதி கட்சி, புதுவையில் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டணியில் இடம் பெற்றன. இதிலும் புதுவையில் ரங்கசாமிக்கு ஆதரவாக பாமகவும் தேமுதிகவும் இருக்கவில்லை. அதை மீறி அவரது வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்க அம்சம்.

மாயையான பலம்:

Ramadoss
ராமதாஸ்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தே.ஜ.கூட்டணியில் சேர்ந்த கட்சிகள் பலவும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே செல்வாக்குடையவை. மதிமுக கடந்த பல ஆண்டுகளில் தனது ஆதரவுத் தளத்தை சிறுகச் சிறுக இழந்துவிட்டது. பாமகவுக்கோ வட மாவட்டங்களில் வன்னியர்கள் மிகுந்த பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு.

தேமுதிகவிலோ, விஜயகாந்துக்கு மக்களிடையே பரவலாக செல்வாக்கு இருந்தாலும், கீழ்மட்ட அளவில் மக்களிடம் சென்று பணியாற்றும் தொண்டர்படை போதிய அளவில் இல்லை. பாஜகவுக்கு மோடி அலை மட்டுமே சாதகமான அம்சமாக இருந்தது; சில தொகுதிகள் தவிர்த்து பாஜகவுக்கு பெருமளவில் தொண்டர்பலம் இல்லை.

மாறாக, எதிர்முனையில் ஆளும்கட்சியான அதிமுகவோ,  களப்பணியாற்றும் தொண்டர்படையுடன், அவர்களை வழிநடத்தும் எண்ணற்ற மக்கள் பிரதிநிதிகளையும் கொண்டதாக இருந்தது. இலவச திட்டங்களும் கடைசிநேர பணப்பட்டுவாடாவும் அதிமுகவை முதல் நிலையிலேயே தக்கவைத்திருந்தன.

திமுக தேர்தலின் துவக்கத்திலேயே மருண்டுபோனதால் அதன் தேர்தல் பணி தீவிரமாக அமையவில்லை. பலரும் எதிர்பார்த்தது போல வாக்குப்பிளவு பெருமளவில் நடைபெறவில்லை.

ஆக, அதிமுக, திமுக அணி, பாஜக அணி, இடதுசாரி அணி, காங்கிரஸ் என்ற ஐந்துமுனைப் போட்டியில் அதிமுக வெகு இலகுவாக வெற்றிக்கோட்டினை எட்டிவிட்டது.

இவ்வாறாக, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்பார்த்த வெற்றியை அறுவடை செய்ய இயலாமல் போனது. எனினும் திமுகவை பல தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கு தள்ளிய இக்கூட்டணி, இப்போதும் அதிமுகவுக்கு எதிரான சக்தியாக மாற வாய்ப்பு உள்ளது.

ஆனால், தேர்தலில் தோல்விகண்ட தேமுதிகவும் பாமகவும் மதிமுகவும் இன்னமும் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. மோடியை நம்பி தேர்தல் களம் இறங்கியும் தங்களுக்கு மட்டும் பயனில்லாமல் போனதை வைகோவும் விஜயகாந்தும் நம்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் தங்கள் ஆதார தொண்டர் பலத்தைப் பெருக்கியாக வேண்டும் என்ற தேர்தலின் செய்தியை இன்னமும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

கூட்டணி தொடருமா?

Vaiko
வைகோ

குறிப்பாக விருதுநகரில் வைகோவின் தோல்வி மிகவும் வருத்தம் அளிப்பது. வைகோவுக்கு உள்ள மாநிலத் தலைவர் என்ற சிறப்பம்சமும் அவருக்கு உதவவில்லை. அவரை திமுகவும் அதிமுகவும் திட்டமிட்டுத் தோற்கடித்தன. அவரும் தனது வழக்கமான மிகை உணர்ச்சி மிகுந்த பேச்சை மட்டுமே நம்பி அரசியல் வாழ்க்கையை வீணாக்கி வருகிறார்.

அதேபோல, பாமகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் தேமுதிகவுக்கு ஆதரவாக அக்கட்சியினர் பணியாற்றவில்லை என்பது அரசியல் முறைமையாகத் தெரியவில்லை. கடைசிவரை தேர்தல் பிரசாரத்திற்கு வராத ராமதாஸ், இப்போது எந்த அடிப்படையில் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கிறார் என்பதும் புலப்படவில்லை.

மாறாக, கூட்டணி அமைக்கத் தாமதித்தாலும், விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் சக்கரமாகச் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்தனர். பாஜக மாநிலத் தலைவர்கள் பலரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் முடங்கிய நிலையில் மோடி அலையை மக்களிடம் பரப்பப் பாடுபட்டவர் விஜயகாந்த் எனில் மிகையில்லை.  அதனால் தான் தில்லியில் தேஜ கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் விஜயகாந்தின் கன்னத்தைப் பிடித்து வருடி நன்றி பாராட்டினார் மோடி.

இத்தேர்தலில் தேமுதிகவின் வாக்கு விகிதம் குறைந்துவிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. அக்கட்சி போட்டியிட்ட 14 தொகுதிகளின் அடிப்படையில் கணக்கிட்டால் அது குறைவாகத் தான் இருக்கும். இந்தப் புள்ளிவிவரத்தால் விஜயகாந்த் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.

இப்போது விஜயகாந்த் தமிழக பாஜகவில் ஐக்கியமாகப் போவதாக ஊடகங்கள் தங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு கதையளக்கின்றன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.

இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி மோடி தலைமையில் புதிய அரசும் அமைந்துவிட்டது. இந்தச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது புத்திசாலித்தனமல்ல என்பதால் தான், பாஜகவின் தமிழகத் தோழர்கள் மௌனம் காக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், இக்கூட்டணி தொடர முடியுமா?

கடுமையான மனவருத்தங்களுடன் உள்ள விஜயகாந்தும் ராமதாஸும் தே.ஜ.கூட்டணி என்ற ஒரே படகில் தொடர்ந்து பயணிக்க முடியுமா? மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே வருகையால் கொதிப்படைந்துள்ள வைகோ கூட்டணியில் என்ன செய்யப் போகிறார்?

இக்கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது ஒருபுறம் இருக்க, பாஜக தேசியத் தலைமை என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற கேள்வியும் பூதாகரமாக எழுந்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய நிலைமை:

Jeyalalitha
ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் இணக்கமாகச் செல்லவே மோடி அரசு முற்படும். ஏனெனில் அனைத்து மாநில அரசுகளுடனும் மோடி அரசு மோதல் போக்கை மேற்கொள்ள விரும்பவில்லை என்பது அவரது பேச்சுகளிலிருந்தே வெளிப்படுகிறது. அவ்வாறாக அதிமுகவுடன் பாஜக தோழமை காட்டுவது, அதன் கூட்டணித் தோழர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பிரதமர் மோடியை அரசுப்பயணமாக தில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தபோது பல யூகங்கள் கிளப்பப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைகிறது என்றும்கூட செய்திகள் வெளியாகின. ஆனால், பாஜக தலைமை அதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மோடியும் ஜெயலலிதாவும் அரசியலைக் கடந்த நண்பர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் ஆதரிக்கலாம் என சில பாஜக தலைவர்கள் சொன்னாலும், கட்சி அதிகாரப்பூர்வமாக அவ்வாறு முயற்சிக்கவில்லை.

இதுகுறித்த தில்லி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜெயலலிதா, “இப்போதைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான நிலையிலேயே உள்ளது. பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. எனவே அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டிய தேவை இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது அதைப் பற்றி யோசிப்போம்’’ என்றார்.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய மீனவர் பிரச்னை தொடர்பான கடிதங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த பாதிரியாரை விடுவிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கடிதத்துக்கு மதிப்பளித்து பதில் கடிதமும் அனுப்பி இருக்கிறார் மோடி.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோது,  தமிழகத்தின் மழைநீர் சேகரிப்புத் திட்டம், சத்தீஸ்கரின் பொதுவிநியோகத் திட்டம்  உள்ளிட்ட பல மாநிலத் திட்டங்களை தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப் போவதாக மோடி கூறியது, பலரது சிந்தனையைத் தூண்டியுள்ளது.  மேற்குவங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியைப் பாராட்டவும் மோடி தவறவில்லை. அவரது பேச்சு அரசியலைத் தாண்டியதாக- அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பையும்  நாடுவதாக – அமைந்திருந்தது.

இதனை பாஜக- அதிமுக பக்கம் நெருங்குவதாக ஊடகங்கள் கருதக்கூடும். ஆனால் யதார்த்தம்  அவ்வாறில்லை என்பதே உண்மை. அதேசமயம், அதிமுகவை முற்றிலும் புறக்கணித்துவிட பாஜக தயாராக இருக்காது.

லோக்சபையில் மிகுந்த பலம கொண்டிருந்தாலும் ராஜ்யசபையில் பாஜக பலம் குறைவாகவே உள்ளது. எனவே அதிமுக, பிஜு ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவை பாஜக நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராஜ்யசபையில் அதிமுக ஆதரவைப் பெறுவதற்காக, லோக்சபை துணை சபாநாயகர் பதவி அதிமுகவுக்கு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் அரசியல் ராஜதந்திர நடவடிக்கையை தமிழக பாஜக தோழர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என்பது தெரியவில்லை.

இவ்வாறாக, வரும் நாட்களில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது, அதிமுக எந்த திசையில் இயங்கப் போகிறது ஆகிய கேள்விகளுக்கான பதிலில் தான் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆயுள் நிலைக்கும்.

பொறுப்புணர்வு தேவை:

Modi
நரேந்திர மோடி

இந்தக் கூட்டணி நிலைக்க வேண்டும்; இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக புதிய அரசியல் அணி மலர வேண்டும் என்று பலரும் விரும்பினாலும், அதை சாத்தியமாக்கும் அரசியல் முதிர்ச்சி தோழமைக் கட்சிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

தொட்டால் சிணுங்கிகளாக தமிழக அரசியல் தலைவர்கள் மாறியிருப்பதால், அனைத்து அரசியல் தலைவர்களுடனும் நட்புப் பாராட்ட முடியும் என்பதையே அவர்களால் ஏற்க முடிவதில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர தலைவர்களிடம் பெருந்தன்மையும், பொறுமையும் தேவையாக உள்ளது. குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இதில் பெரும் பங்குண்டு.

அதேபோல, மத்திய அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின் பாஜக மாநிலத் தலைமையில் வெற்றிடம் நிலவுகிறது. விரைவில் புதிய தலைவர் பொறுப்பேற்ற பிறகு, அவரது வழிகாட்டுதல் எத்திசையில் இருக்கும் என்பதைப் பொருத்தே, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்வது உறுதியாகும்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் போலித்தனமான கூச்சல்களை விடுத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் பாஜக ஈடுபட ஒத்துழைப்பதும் அவசியம். வெறும் உணர்ச்சிகரமான மனநிலையில் நாட்டை ஆள முடியாது என்பதை பாஜகவின் தோழர்கள் உணர்வதும் நல்லது.

அதிமுக உடனான முந்தைய கூட்டணி அனுபவங்களை பாஜக மறந்துவிடக் கூடாது. அக்கட்சியின் தற்போதைய முக்கியத்துவத்தை உணரும் அதேவேளையில், ராஜதந்திரத்துடன் அதிமுகவை அனுசரிக்கும் அதேசமயம்,  தமிழகத்தில் ஏற்கனவே அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதே பாஜகவுக்கு நெடுநோக்கில் பயனளிக்கும். இதனை பாஜகவும் உணர்வது நல்லது.

தேசிய அளவில் அற்புதமான இலக்குகளுடன் பாஜகவின் வெற்றிப்பயணம் துவங்கிவிட்டது. தமிழகத்தில் மட்டும் இலக்கின்றித் தவிக்கின்றன பாஜகவும் தே.ஜ.கூட்டணியும். இதை சரிப்படுத்த வேண்டிய பொறுப்பு பாஜகவின் தேசியத் தலைமைக்கும் உண்டு.

.


 

54 பேரவைத் தொகுதிகளில் திமுகவை

3-வது இடத்துக்குத் தள்ளிய பாஜக கூட்டணி

சென்னை,  மே 23:  நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் 54 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணியை பின்னுக்குத்தள்ளி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாதனை படைத்துள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக சாதனை படைத்துள்ளது. கன்னியாகுமரியில் பாஜகவும், தருமபுரியில் பாமகவும் வெற்றி பெற்றன.

தமிழகத்தில் அதிமுகவுக்கு அடுத்து மிகப்பெரிய கட்சியான திமுக, இந்தத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிமுக 44.3, திமுக கூட்டணி 26.8, பாஜக கூட்டணி 18.5, காங்கிரஸ் 4.3, இடதுசாரிகள் 1, ஆம் ஆத்மி கட்சி 0.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன.

இடதுசாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைவிட நோட்டாவுக்கு அதிகமாக அதாவது 1.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

217 பேரவைத் தொகுதிகளில் அதிமுக முதலிடம்:  மக்களவைத் தேர்தல் முடிவுகளை சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கணக்கிட்டால்,  கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 7 தொகுதிகளில் பாஜகவும்,  தருமபுரி, பாலக்கோடு, பெண்ணாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் பாமகவும்,  கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும்,  பாளையங்கோட்டை, திருவாரூர், ஆத்தூர், கூடலூர் ஆகிய 4 தொகுதிகளில் திமுகவும்,  காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முதலிடத்தைப் பிடித்துள்ளன. மற்ற 217 தொகுதிகளிலும் அதிமுக முதலிடத்தைப் பெற்றுள்ளது.

திமுகவை பின்னுக்குத் தள்ளிய பாஜக கூட்டணி: இந்தத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்துத்துள்ள திமுக, 4 இடங்களில் முதலிடத்தையும், நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகளில் 4-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

தருமபுரி, கோவை, வேலூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் உள்ள 18 பேரவைத் தொகுதிகளிலும் திமுக 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தவிர, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் (புதிய தமிழகம்), ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், ஜெயங்கொண்டம் (விடுதலைச் சிறுத்தைகள்), மண்ணச்சநல்லூர், முசிறி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், காங்கேயம், எடப்பாடி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, சோளிங்கர், விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, பெருந்துறை, பவானி, அந்தியூர் என மொத்தம் 54 பேரவைத் தொகுதிகளில் திமுக 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

1977-க்குப் பிறகு அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியல் களம் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்துள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிமுக தனது செல்வாக்கை அதிகரித்துள்ள நிலையில் திமுக தனது வாக்கு வங்கியை இழந்திருப்பதும், பாஜக கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதும் தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

நன்றி: தினமணி (24.05.2014)

 .

 

9 Replies to “இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி”

  1. தமிழ் ஹிந்து.காம் தனது தலையாய பணியிலிருந்து விலகி செல்வது போல் தெரிகின்றது. இவ்வாறான கட்சி விசயங்களை மட்டும் அலசினால் போதுமா? இந்துக்களை ஓன்று படுத்தும் செயலல்லவா நமது தலையாய பணியாக இருக்கவேண்டும்? ஒரு பக்கம், ஜாதி துவேஷம், மறுபக்கம் நக்சல் வாதம், இன்னொரு பக்கம் பயங்கரவாதம், மறுபக்கம் சேவை என்ற போர்வையில் கொத்து கொத்தாக மதமாற்றம், லவ் ஜிஹாத் (அதுவும் சினிமா துறையில் உச்சகட்டம்), அன்றாடம் காலை பொழுதில் அருமையான பக்தி நிகழ்ச்சியை தந்த வசந்த் டிவி யை கூட வேற்று மதத்தவர்கள் வளைத்து போட்டாகி விட்டது. ஆக்கபூர்வமான பணிகளை தாமதப்படுத்தவே உருவாக்கப்படும் தொண்டு நிறுவன குறிக்கீடுகள், ஆலய சொத்தெல்லாம் கொள்ளை போய், அங்கு திருப்பணிகள் தடைபட்டுள்ள அவல நிலைகள், வேற்று மத மாணவ மாணவிகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை இவ்வாறு அன்றாடம் இந்துக்களுக்கும், இந்து சமயத்திற்கும் எதிராக பலமுனை தாக்குதல்கள். ஆனால் இங்கு சமீப நாட்களாக இடம்பெறும் பல கட்டுரைகளையும் படிக்கும்பொழுது, ” ரோமாபுரி பற்றி எரியும்பொழுது நீரோ மன்னன் …” என்ற வரியே நினைவுக்கு வருகின்றது. தயவு செய்து haindavakeralam hindujanjaakruthi போன்ற நமது ஒத்த கருத்துடைய வலைதளங்களில் வரும் செய்திகளையாவது மொழியாக்கம் செய்து நமது தமிழ் ஹிந்துக்களுக்கும் அறிய தந்து விழிப்படைய செய்யலாமே?

  2. திரு சேக்கிழானின் மேற்கண்ட ஆய்வு எண்ணற்பாலது . பாஜக கூட்டணிக்கு ஆதரவு கூடியுள்ளபோதிலும் , பாஜக ஆதரவாளர்களில் பெரும்பகுதியினர் அதிமுகவுக்கே வாக்களித்தனர் என்பதே உண்மை. தமிழக அரசியல் நிலைமையில், டூ ஜி மற்றும் இந்து எதிர்ப்பு சக்திகள் தலைதூக்காமல் இருக்க, அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பது நல்லது என்ற எண்ணம் தமிழகம் முழுவதும் பரவி விட்டது ஒரு மறுக்க முடியாத உண்மை. பாஜக கூட்டணி கட்சிகளில் வைகோவை தவிர , விஜயகாந்த், பாமக ஆகிய இருகட்சிகளும் , இழுபறி நிலை ஏற்பட்டிருந்தால், ( அதாவது மீண்டும் மூன்றாவது அணி -காங்கிரஸ் என்ற பிணிக்கூட்டணி ஏற்படுத்த கம்யூனிஸ்டு புரோகிதர்கள் முயற்சி செய்தால் , ) பாஜக பக்கம் நிலையாக இருந்திருப்பார்களா என்ற சந்தேகம் அவர்கள் மேல் எப்போதும் மக்களுக்கு உண்டு. திரு அன்புமணி அவர்கள் அளித்த ஒத்துழைப்பில் ஒரு பாதியையாவது அவரது தந்தையும்,மூத்த தலைவருமான திரு ராமதாஸ் இந்த கூட்டணிக்கு வழங்கி இருந்தால், பாஜக கூட்டணி 3-க்கு பதிலாக ஐந்து அதாவது கோவை மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளை கைப்பற்றி இருக்க முடியும். அவற்றை இனிப்பேசி என்ன பயன் ?

    தமிழகத்தில் எம் ஜி ஆர் கட்சி ஒரு அசைக்கமுடியாத தூண் என்பது பலமுறை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. எம் ஜி ஆர் கட்சி பிளவு பட்டபோது, சிறிதுகாலம் திமுக தலைகாட்டியது. பிளவு நீங்கி இரு அணிகளும் சேர்ந்தபின்னர், அதிமுகவே வலுவானது என்பது உறுதிப்பட்டது. ஜெயா மேல் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்ட போதும், வழக்குகள் எல்லாம் தோற்றுவிட்டன. சொத்துக்குவிப்பு, வருமானவரி வழக்கு இரண்டு மட்டுமே பாக்கி உள்ளன. இந்த இரு வழக்குகளை போடக் காரணமான தீயசக்திகள் மக்களால் குப்பைக்கு வீசி எறியப்பட்டுவிட்டன. அதிலும் வருமானவரி வழக்கின் மூலகர்த்தாவான பசி அவர்கள் தன்னுடைய மகனுக்கே டெபாசிட் கூட திரும்ப வாங்கமுடியாத ஒரு கேவலமான தோல்வியை சந்தித்து, அந்த திருட்டுக் காங்கிரஸ் கட்சிக்கே தமிழக மக்கள் பாலூற்றி, எள்ளும் , தண்ணீரும் தெளித்துவிட்டனர்.

    வைகோவுடன் கூட்டணி தொடரலாம் ஆனால், விஜயகாந்த்,பாமக நிலை எதிர்காலத்தில் நம்பமுடியாதது.

  3. கண்ணன் சொல்வது மிகவும் சரி.இன்றைய நிலையில் பக்தி கட்டுரைகளை குறைத்து ஹிந்து சமய மேம்பாட்டிற்கு தேவையான செய்திகளை மற்றும் கட்டுரைகளை வெளியட வேண்டும்

  4. தி மு கழத்திற்கு கிடைக்கவேண்டிய % குறைவு அண்ணா தி மு கக்கு சென்றுவிட்டது தி மு க வின் குறைவு வாக்கு பி ஜே பி கூட்டணிக்கு கிடைத்ததாக கூறமுடியாது தி மு க குறைவிற்கு காரணம் குடும்ப ஆட்சி திராவிட கட்சிகளை தவிர தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை பி ஜே பி ல் அடிமட்ட தொண்டர்கள் குறைவு திராவிட மாயையை வெளிச்சம் போட்டு காட்ட சரியான பிரச்சாரர்கள் பி ஜே பில் இல்லை என்பது சத்தியமான உண்மை

  5. கண்ணன் ஜி,

    நீங்கள் எழுப்பியுள்ள ப்ரச்சினைகள் அனைத்தும் மிக ஆழ்ந்து ஆராயப்பட வேண்டியவை. சந்தேஹமேயில்லை.

    ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்.

    எண்பதுகளின் கடைசியில் இரண்டு சீட் கட்சியாக இருந்த பாஜகவை ஸ்ரீ லால் க்ருஷ்ண அத்வானி அவர்களது குழுவினரின் (அதில் மோதி முக்யமான அங்கம் வகித்தவர்) வழிகாட்டலில் 85 சீட் கட்சியாக பரிணமிக்க வைத்தது தேசத்தில் மாறுதல் சமுத்திரத்தின் முதல் அலையைக் காண்பித்தது.

    உத்தரப்ரதேசம், ஹிமாசல ப்ரதேசம், ராஜஸ்தான், மத்யப்ரதேசம், மஹாராஷ்ட்ரா, குஜராத் என்று பல மாகாணங்களில் ஆட்சியைப் பிடித்த பின்னரும் கூட…………. தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை. உட்கட்சிப்பூசல், சண்டை தகறாறு என ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு வளர்ச்சிப்பணிகள் என்று ஏதும் செய்ய முடியாது நகைப்புக்காளாகி மதிப்பிழக்கத் துவங்கியது பாஜக. கல்யாண் சிங்க், ஷங்கர் சிங்க் வகேலா, உமாபாரதி போன்றோர் கட்சியை விட்டு வெளியே சென்று விஷம் கக்கியது போன்றவை கட்சிக்கு இன்னமும் சோர்வைக் கொடுத்தது.

    ஆட்சியைப் பிடித்தல்; தொலைத்தல் என்பது தொடர்ந்தது.

    நரேந்த்ரபாய் அவர்கள் குஜராத்தில் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்கு முன்னர் பாஜக தரப்பிலிருந்து கூட உள்குத்தாக எதிர் வேலைகள் செய்யப்பட்டமை நாடறியும். ஒட்டு மொத்த மீடியாவும் மோதி திரும்ப ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ஜோதிஷம் சொல்லியது. ஆனால் மோதி திரும்ப உறுதியாக ஆட்சியைப் பிடித்து அனைவரின் வாயையும் அடக்கியது இரண்டாவது அலையைக் காண்பித்தது. அதை அடுத்து மத்யப்ரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாகாணங்களிலும் மூன்று முறைக்கு மேலாக ஆட்சியைப் பிடித்து நல்லாட்சி செய்ய முடியும் என்று தேச மக்களுக்கு பாஜக காண்பித்துள்ளது.

    அந்த செயல்பாடு தான் மோதி அவர்கள் மத்ய சர்க்காரைக் கைப்பற்ற வழி வகுத்தது.

    பாஜக வலுவில்லாமல் இருக்கும் ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சி வலுப்பெற ஆவன செய்யப்பட வேண்டியது மிக முக்யமான கார்யம்.

    ஒரு புறம் உள்நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் (நக்ஸல் வாதம் என்ற பழைய சொல்லை விடுத்து அரசாங்கம் புதிய சொல்லாடலை வழங்கியுள்ளது) ; உதட்டளவில் நட்பு பாராட்டி செயல்பாடுகளில் வன்மம் பாராட்டும் அண்டை நாடுகள், தலையெடுக்கும் ஆப்ரஹாமிய பயங்கரவாதம், ஆப்ரஹாமிய பித்தலாட்ட மதமாற்ற செயல்பாடுகள் ………… இவையெல்லாம் எதிர்கொள்ளப்பட வேண்டியவை. ஒவ்வொன்றும் சரிசமமான அழுத்தத்துடன். அது போன்ற அழுத்தம் தேசம் முழுதும் கட்சியை வலுப்படுத்தல் என்ற விஷயத்திலும் செலுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை ஸ்ரீ சேக்கிழான் அவர்களின்இந்த வ்யாசம் முழுமையாகச் செய்துள்ளது.

    நீங்கள் சொல்லும் விஷயங்களைப் பற்றிய விவாதங்கள் எழுவதற்கு அது சம்பந்தப்பட்ட வ்யாசங்கள் எழுதி சமர்ப்பிக்கப்படுவது தேவையானது. தளத்தின் மூத்த எழுத்தாளர்களின் வ்யாசங்கள் தளத்தில் பதிவேறி பஹு காலம் ஆகிறது. மூத்த எழுத்தாளர்களின் வ்யாசங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலை கலைந்து எழுமின் விழுமின் என நம் பயணம் தொடர வேண்டும் என்று வெற்றி வேல் பெருமாளை இறைஞ்சுகிறேன்.

    பல விஷயங்களில் எழுதுவதற்கு முயற்சி செய்து வந்தாலும் ஒரு வ்யாசம் கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளது. ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்கிறேன்.

    வெற்றிவேல்

  6. திரு சேக்கிழான் அவர்களின் இந்த ஆய்வுக் கட்டுரை இன்றைய சரியான நிலையையே கூறுகிறது.திரு தமிழருவி மணியனின் முயர்ச்சியால்தான் இந்தக் கூட்டணி உருவானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும் இது ஒரு பொருந்தாக் கூட்டணி.விஜயகாந்த் ஆரம்பம் முதலே தான் ஊழலை எதிர்க்கும் சக்தி என்பதை மக்கள் முன் நிரூபிக்கத் தவறி விட்டார்.பா ஜ க வுடன் கூட்டணி வைக்க மிகவும் தயங்கினார்.தி மு க , காங்கிரசுடன் இணைந்த கூட்டணியை அதிலும் ப ஜ க வையும் இதில் இணைத்து அ தி மு க வை எதிர்க்க வேண்டுமென்ற முயற்ச்சியில் இருந்தார்.அது கைகூடாத போது ஊழல் தி மு க மற்றும் ஊழல் காங்கிரசுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.அதாவது அதிக சீட்டுக்கள் தேர்தகள் செலவுக்குப் பணம் இதில் யாரால் அதிகப் பலனோ அங்கு சேர ஆர்வம் காட்டினார்.மேலும் யாருடன் கூட்டணி என்பதிலும் ஜவ்வாக இழுத்தார்.இன்றைய ஊடக ராஜ்யத்தில் இவயெல்லாம் மக்களிடம் உடனுக்குடன் சென்று சேர்ந்து மக்களின் மனதில் இவரின் பால் நம்பிக்கையின்மையை உருவாக்கியது.அப்புறம் ராமதாஸ் விஜயகாந்த் வளர்வதை சற்றும் விரும்பாதவர்.இவர் கடைசிவரை விஜயகாந்த்தை ஆதரிக்கவே இல்லை.இதனால் இவரது கட்சியின் ஆதரவாளர்களை ஆளும் கட்சி பல வழிகளிலும் வாங்கி விட்டது.விஜயகாந்த் கட்சியினர் பா ம க வுக்கோ , ராமதாஸ் கட்சியினர் தி மு தி க வுக்கோ வாக்களிக்கவில்லை.இவர்களை அம்மா கட்சியினர் சுலபமாக ( சாம, தான, பேத, தண்ட முறையில் ) விலைக்கு வாங்கி விட்டனர்.இதெல்லாமே அம்மா தி மு க வின் பிரமாண்ட வெற்றிக்குக் காரணமாக அமைந்து விட்டன.மேலும் தேர்தலுக்கு சற்று முன் வரை தமிழக ஆளும் கட்சியை பா ஜ க வோ , பா ஜ க வை அம்மாவோ விமர்சிக்கவில்லை.கடைசி நேரத்தில் குஜராத்தின் வளர்ச்சி பற்றி அம்மா வின் விமர்சனத்துக்கு பா ஜ க வின் பதில் தீவிரமானதாக இல்லை.பொதுவாகவே மோடியை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும் பா ஜ க கூட்டணியின் கட்சிகளை நம்பத் தயாரில்லை.மேலும் மோடி ஆதரவு வாக்குகளை தாமரைக்கு விழச் செய்ய கீழ்மட்டத்தில் அமைப்பு பலமில்லை.இதையும் மீறி கன்யாகுமரியில் வெற்றி அங்கு கிராமங்கள் தோறும் கட்சி அமைப்பைப் பலப் படுத்தி இருப்பதே காரணம். இனியாவது தமிழகமெங்கும் உண்மையான தொண்டர்களை அறிந்து அவர்களிடம் கட்சியின் பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்து கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும்.மேலும் பொன் ராதா அவர்களின் செயல்பாடு தமிழகத்துக்கு முழுமையாகப் பயன்படும்படி இருக்க வேண்டும்.குமரிக்குள் முடங்கி விடக் கூடாது. தமிழகத்தின் பலதரப்பட்ட மக்களிடம் பேசப் பழக எனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன் தமிழகத்திலும் இந்தியாவைப் போலவே மோடி அலை வீசியது.அனாலும் பல காரணங்களால் அதை வாக்குகளாக மாற்ற முடியவில்லை.

  7. திரு கண்ணன் அவர்களின் ஆதங்கம் புரிகிறது அதை எப்படி யார் செய்வது

  8. தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகளையும், தே.ஜ.கூட்டணியின் எதிர்கால நிலைமையையும் அலசும் அற்புதமான கட்டுரை. பா.ஜ.க. போன்ற தேசிய கட்சி கூட்டணி ஒன்றை அமைக்கும்போது, ஒத்த கருத்துடைய கட்சியோடு மட்டும்தான் இணைய முடியும். எலியும் தவளையும் கூட்டணி அமைத்தால் அது நிலைக்காது. பா.ஜ.க.வோடு இணைந்து பணியாற்றக் கூடிய திராவிட கட்சி ம.தி.மு.க. ஒன்றுதான். அதோடு நம்பகத் தன்மையுடையவர் வை.கோ. மற்ற கட்சிகள் இரண்டும், தங்கள் இலாபத்தை மட்டுமே பார்த்து அரசியல் நடத்தை கூடியவர்கள். எண்ணையும் நீரும் சேராது. பா.ஜ.கவும். பா.ம.கவும் இணையாது.. அதுபோலவேதான் விஜயகாந்த் கட்சியும். அவருக்குத் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு தமிழ் நாட்டு பாணியில் அரசியல் செய்ய வேண்டும். ஆகவே பா.ஜ.க. இனி வருங்காலங்களில் தேசிய உணர்வும், காங்கிரசுக்கு எதிரான, ஊழலுக்கு எதிரான, திராவிட இயக்கங்களின் ஜாதி, இன, மொழி வெறிக்கு எதிரான கட்சிகளைத் தான் இணைத்துக் கொள்ள வேண்டும். காங்கிரசின் பழைய நினைப்பில் மக்களில் சிலர் அந்த கட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். ரங்கராஜன் குமாரமங்கலம் அங்கிருந்து ப.ஜ.க.வுக்கு வரவில்லையா, அப்படி உண்மையான காங்கிரசார் பா.ஜ.க.வுக்கு வந்து வலு சேர்க்கலாம். காங்கிரஸ் கட்சியின் கொடியே அவர்களுக்கு மறந்துவிட்டது. ராட்டைக்கு பதிலாக கை சின்னம் வரைந்த கட்சியை பயன்படுத்து கிறார்கள். இந்து இந்திரா கட்சி, உண்மையான காங்கிரஸ் கட்சி அல்ல என்பதை பிரசாரம் செய்ய வேண்டும். 1957இல் ம.போ.சி. சேலம் மகா நாட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அது அந்த ஆண்டு தேர்தலில் தமிழரசு கழகம் யாரை ஆதரிப்பது என்பது. அப்போது அவர் எடுத்த முடிவுதான் சரியானது. அது “காங்கிரஸ் அல்லாத தேசிய சக்திகளை” ஆதரிப்பது என்பது. அதில் கம்யூனிஸ்ட் களும் இடம் பெற்றார்கள். இப்போது கம்யூனிஸ்ட் நீங்கலாக தேசிய, கலாச்சார உணர்வுடைய கட்சிகளும், மக்களும் உறுப்பினர் ஆக வேண்டுகோள் விடுக்கலாம்.

  9. This article is one sided. Blaming the alliance partners alone is not correct.

    BJP leaders initially wanted an alliance with the AIADMK. They were also not averse to joining with DMK. Even they were vacillating.

    It was only bcos of Tamilaruvi manian that this alliance took shape.

    MDMK was the ist party to join the BJP alliance, but did the BJP respect that?

    They kept going after Vijaykanth & ramadoss. They should have finalised the seats with the MDMK first. That would have sent a clear signal to the others that the BJP means business.

    Even after the alliance was announced, it was V’kanth who campaigned in all the constituencies. The BJP leaders did not move out of their constituencies to campaign for the rest of the alliance partners.

    The 2 seats that the alliance won was also not because of the Modi wave.

    In Kanyakumari, all the candidates opposing Ponnar belonged to the the minority communities. So, the non hindu vote got split. That is why Ponnar won & not bcos of the strength of the alliance.

    In Dharmapuri, the vanniars cutting across party lines voted for anbumani.

    JJ’s victory was a positive vote for the party. It also proved that there is no other wave except the Jaya Wave in tamilnadu.

    BJP as a party will never be able to gain a foothold in tamilnadu if they are alone.

    The local leaders CPR, Ila ganesan etc., lack mass appeal. Also there is infighting amongst themselves.

    They need the help of either V’kanth or JJ to develop their party.

    Given the present situation, their only hope is JJ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *