அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்

g10 தன் இறுதி மூச்சு இருக்கும் வரை இந்துத்துவத்தின் மேன்மைக்கும், பரந்து பட்ட இந்து சகோதரர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு பாடுபட்ட அருந்தவப்புதல்வனை இந்த தேசம் இன்று இழந்து தவிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக , மராத்வாடா பகுதியின் பிரதிநிதியாக இந்து சமூகத்தின் தொண்டனாக  துடித்து கொண்டிருந்த இதயம் அமைதியில் ஆழ்ந்து விட்டது . இந்துக்களின் நம்பிக்கை சுடராக விளங்கியவர் கோபி நாத் முண்டே.

3ம் தேதி காலை 6.30 மணிக்கு தன்னுடைய பீட் மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், மகாராஷ்ட்ரத்தில் பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட சென்ற வழியில் வாகன விபத்தில் சிக்கி ஈசனடி நிழலில் இயைந்த மராட்டிய மக்கள் தலைவனுக்கு நம் கண்ணீர் அஞ்சலி.

ஐந்து முறை மராட்டிய சட்டமன்ற உறுப்பினராகவும், 1 முறை துணை முதல்வராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய ஊரக மேம்பாட்டு துறையின் அமைச்சராக பதவி வகித்த கோபி நாத் முண்டே எனும் பாஜகவின் முக்கிய தளகர்த்தர் நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார்.

g1மகாராஷ்ட்ராவில் இவர் சார்ந்த வன்சாரி பிற்படுத்தப்பட்ட மக்களை பெரும்பாலும் திரட்டி இந்துத்தவ சக்திகளை பலப்படுத்திய மகத்தான தலைவர். பிற்படுத்தப்பட்ட , மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்களின் பாதுகாவலனாக திகழ்ந்த பாஜகவின் முக்கிய போர் படை தளபதி. வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக சிவசேனை கூட்டணி அரசின் முதல்வராக பொறுபேற்க இருந்த தலைவர்.

1949 ஆம் ஆண்டு பீட் மாவட்டத்தில் கீழ் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த விவசாயக்குடும்பத்தில் பாண்டு ரங்க ராவ், லிம்பா பாய் தமபதிக்கு மகனாக பிறந்த கோபி நாத் முண்டே . கிராமப்புற  அரசு கல்வி நிலையத்தில் தன் பள்ளி படிப்பை முடித்து விட்டு அம்பிஜோகை நகரில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். வணிகவியல் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.1971ல் தேசிய கலாச்சார அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் பயிற்சி பெற்று அதன் செயல் பாடுகளுக்கு ஊக்கமாகவும் உறு துணையாகவும் இருந்து வந்தார்.

g3கல்லூரி காலங்களில் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி அமைப்பில் பங்கேற்று அதில் மாநில அளவில் பொறுப்பும் வகித்தார். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை எதிர்த்தும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காகவும் நாசிக் சிறைச்சாலையில் எமர்ஜென்சி முடியும் வரை சிறைப்பட்டிருந்தார்.

1980 களில் ஜனசங்கத்திலிருந்து பாரதிய ஜனதா ஆனபிறகு மராட்டியத்தின் பாஜக இளைஞரணி மாநில தலைவராக பொறுப்பேற்று இளைஞர்களை வழி நடத்தினார். பிரமோத் மகாஜன் அவர்களின் சகோதரி பிரதன்யாவை மணந்து 3 பெண் குழந்தைகளுக்கு தகப்பனாராகவும் கோடிக்கணக்கான இந்துக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பனவராகவும் இருந்தார்.

g45 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முண்டே அவர்கள் 1991-1995 காலங்களில் எதிர் கட்சி தலைவராக இருந்தார். 1995 ல் மகாராஷ்ட்ர துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். பீட் மக்களவை தொகுதியிலிருந்து இரு முறை தேர்வு பெற்றவர். தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். மகாராஷ்ட்ராவில் இந்து வாக்குகளை ஒருங்கிணைத்ததில் மிக முக்கிய பங்காற்றியவர்.

பாஜக மேல்தட்டு வர்க்கத்தின் கட்சி என்ற அடையாளத்தை மாற்றி கீழ் தட்டு மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக பரிணமிக்க செய்தவர் கோபி நாத் முண்டே. எளிமையாக அணுகக்கூடியவராகவும், தேர்ந்த செயல்பாட்டாளராகவும் . தூய்மையான பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் இருந்த இந்து ஆன்மா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டது.

அவருக்கு நம் கண்ணீர் அஞ்சலி. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் பாஜக தொண்டர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

g2“இந்தியப் பெருநிலத்தின் மண்ணிலும் புழுதியிலும் பிறந்து வளர்ந்து கலந்து போராடி அரசியலின் மையத்திற்கு வந்த அனுபவமும் உரமும் மிக்க தலைவர்களின் வரிசை ஒன்று 60 – 75 வயது வரம்பில் இருக்கிறது. இந்தியாவில் நல்லாட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்களாக, அரசாட்சியின் தூண்களாக இருப்பவர்கள் இத்தகைய தலைவர்களே.

இந்த சூழலில் மகாராஷ்டிராவின் மதிப்பு மிக்க தலைவர் கோபிநாத் முண்டே அவர்களின் திடுக்கிடும் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அமைச்சராகி தனது அரசியல் பயணத்தின் ஒரு சிகரத்தைத் தொட்ட கணத்தில் ஒரு சில்லறைத் தனமான சாலை விபத்தில் மரணம்.

இத்தகைய மாபெரும் மக்கள் தலைவரின் மறைவு, இந்தியாவுக்கு ஒரு பேரிழப்பு.”

– ஜடாயு,  தனது ஃபேஸ்புக் பக்கத்தில்

“மோடியின் மந்திரிகள் முக்கியமானவர்கள். அவர்களை இவ்வளவு அலட்சியமாக இழப்பது தவறு.

மந்திரிகள் எளிமையாக இருப்பது அவசியம் தான் ஆனால் அவர்களின் உயிர் பாதுகாப்பு அதை விட முக்கியம். ஒவ்வொரு மந்திரியின் உயிருக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆபத்து நேரிடலாம்.

பா ஜ க வின் மஹராஷ்ட்ர மாநிலத்தின் முக்கியமான தலைவர். அவரது மைத்துனரைப் போலவே கட்சியிலும் ஆட்சியிலும் முதன்மையான ஒரு தலைவராக செயல் பட்டவர். சிவசேனாவுக்கு போட்டியாக மஹராஷ்ட்ரத்தில் தனியே ஆட்சி அமைத்திருக்கக் கூடிய தலைவர். இறப்பதற்கு முன் தினம் கூட சிவசேனா கட்சி இவர் மீது தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. அவர்களது முழுமையான ஆட்சிக்கான முக்கிய தடை இப்பொழுது அகற்றப் பட்டுள்ளது. மஹராஷ்ட்ர மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர் கட்சியினரைத் தவிர தாவூத் கும்பல் மற்றொரு இணை அரசாக செயல் பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்த மாநிலத்தின் மிக முக்கியமான பி ஜே பி தலைவர் தன் சுய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தியிருந்திருக்க வேண்டும். முண்டேயின் மரணம் கொலையா விபத்தா என்பது இன்னும் தெரியவில்லை. அவரது மாநிலத்தின் அரசியல் சூழல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் அது திட்டமிட்ட சதியாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

வெற்றிக் களிப்பு, மந்திரி பதவியின் அழுத்தம், பெருமிதம், உற்சாகம் எல்லாம் சேர்ந்து அவரது பாதுகாப்பில் சற்று கவனம் சிதற வைத்து விட்டதாகவே தெரிகிறது. வெற்றி தந்த உற்சாகத்திலும் அவசரத்திலும் சில அடிப்படையான பாதுகாப்புக்களை அவர் செய்து கொள்ள தவறியிருக்கிறார். இதை ஒரு பாடமாகக் கொண்டு பிற பி ஜே பி எம் பிக்களும் மந்திரிகளும் மிக கவனமாக தங்கள் சுய பாதுகாப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமானவை சில அடிப்படை பாதுகாப்பு கட்டுப்பாடுகள்.

கார்களில் பயணம் செய்யும் பொழுது கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டியது அவசியம். இதை மோடி தன் மந்திரிகளுக்கு ஒரு கட்டளையாகவே பிறப்பிக்கலாம்.

மந்திரிகள், அரசியல்வாதிகளின் வாகனங்கள் எப்பொழுதுமே ஒரு வித அவசரத்துடனேயே அதி வேகத்திலேயே பறக்கின்றன. வாகனங்களில் நிதானம் அவசியம். பல அரசியல்வாதிகள் வேகமான வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகளிலேயே மரணத்திருக்கிறார்கள்.

வெளித் தாக்குதல் இல்லாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் மந்திரிகள் கொஞ்சம் சுய பாதுகாப்பையாவது செய்து கொள்வது அவசியம், முன்பு ஜெயலலிதா ஜெயித்த பொழுது திருச்சியில் இருந்து கிளம்பிய மந்திரி ஒருவர் சாலை விபத்தில் கொல்லப் பட்டது நினைவில் இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் மோடியின் மந்திரி சபையில் இருக்கும் அனைத்து மந்திரிகளுக்கும் சில பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு உறுதியாக கடைப் பிடிக்கப் பட வேண்டும். தாங்கள் செல்லும் வாகனங்கள், தங்கும் இடங்கள், சாப்பிடும் உணவுகள், சந்திக்கும் நபர்கள், பேசும் வார்த்தைகள் என்று அனைத்திலும் இவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட வேண்டும். மோடியைப் போலவே கிட்டத்தட்ட ஒரு வித துறவு வாழ்க்கைக்கு இவர்கள் நிர்ப்பந்திக்கப் பட வேண்டியது அவசியம்.

இவர்கள் பயணிக்கும் வாகனங்கள் உறுதியானதாகவும் பாதுகாப்பானதாகவும் தரப் பட வேண்டும். கட்டாயம் பெல்ட் அணிதல் தேவைப் படும் இடங்களில் புல்லட் ப்ரூஃப் உடை அணிதல் ஆகியவை கட்டாயப் படுத்தப் பட வேண்டும். குறிப்பிட்ட பாதுகாப்பான ஹெலிக்காப்ட்டர்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும். இந்த மரணம் தீவீரமாக விசாரிக்கப் பட வேண்டும். இதுவே மோடியின் கடைசி இழப்பாக இருக்கட்டும் இனி பாதுகாப்பில் மோடி மட்டும் அல்லாமல் அவரது மந்திரிகள் உறுப்பினர்கள் அனைவருமே கடுமையான கவனம் செலுத்த இந்த மரணம் ஒரு பாடமாக அமையட்டும்”.

– ச. திருமலை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில்.

Tags: , , , , , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்

 1. venkatesh on June 3, 2014 at 11:42 pm

  ஆழ்ந்த வருத்தத்தையும் , இறைவன் ஆத்மா சாந்தி வழங்க வேண்டுகிறேன்

 2. suvanappiriyan on June 4, 2014 at 3:11 am

  ஆழ்ந்த அனுதாபங்கள்! இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாரின் துக்கத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.

 3. ஐயாரப்பன் on June 4, 2014 at 8:11 am

  இறைவன் அடி சேர்ந்த முண்டே அவர்கள் நம் நினைவில் என்றும் வாழ்வார்.

 4. Dheeran on June 4, 2014 at 9:22 am

  அதிர்ச்சியூட்டிய செய்தி, மனதிற்க்கு வருத்தமாக உள்ளது. பா.ஜ.க வின் ஆற்றல்வாய்ந்த இளம் தலைமுறை தலைவர்களுக்கு இவ்வாறு நடப்பது ஏனென்று புரியவில்லை.

 5. nandhitha on June 4, 2014 at 9:58 am

  மிகுந்த மன வருத்தைத் தருகின்றது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன், அவரை இழந்து வாடும் அனைவரின் சோகத்தில் பங்கு கொள்கிறேன்
  நந்திதா

 6. க்ருஷ்ணகுமார் on June 4, 2014 at 1:47 pm

  சதிவலையால் விபத்தில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மானனீய ஸ்ரீ கோபிநாத் முண்டே அவர்களின் ஆன்மா சாந்தியடைய முருகப்பெருமானை ப்ரார்த்திக்கிறேன். பண்டித ஸ்ரீ ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி, பண்டித ஸ்ரீ தீன் தயாள் உபாத்யாய் போன்ற பாரதீய ஜனசங்கத் தலைவர்கள் அரசியல் சதியால் கொலைசெய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முகர்ஜி அவர்களின் கொலைக்கு காங்க்ரஸ் காரணம் என்று முன்னாள் ப்ரதமர் ஸ்ரீ அடல் ஜீ அவர்கள் பொதுமேடையிலேயே முழங்கியுள்ளார்.

  முன்னாள் ப்ரதமர் ஸ்ரீ லால் பஹாதூர் சாஸ்த்ரி அவர்கள் பாகிஸ்தானுடனான யுத்தம் முடிந்து அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருந்த போது ரஷ்ய இடதுசாரி பயங்கரவாதிகளின் சதியால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

  ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களின் உத்வேகம் மிகுந்த சர்க்கார் ஹிந்துஸ்தானத்தை பிளந்து துண்டு துண்டாக்க விழையும் சக்திகளின் கண்களில் முள்ளாய் உறுத்துகிறது என்றால் மிகையாகாது. மோதி அவர்கள் பதவியேற்ற முதல் நாளிலேயே மோதி அவர்களின் பாதுகாப்பு பற்றி விரிவான நடவடிக்கைகளை சர்க்கார் எடுக்க வேண்டும் என்ற என் அபிலாஷையைப் பகிர்ந்திருந்தேன். மோதி அவர்கள் மட்டுமின்றி ஹிந்துத்வ இயக்க செயல்வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு பற்றிய முழுமையான விழிப்புணர்வை பெற வேண்டும். தலைவர்கள் அனைவருக்கும் சர்க்கார் தரப்பிலிருந்து முழுமையான பாதுகாப்பு தரப்படவேண்டும். இதுபோல் இனியொரு அசம்பாவிதம் நிகழாது முருகன் காப்பானாக.

 7. Hari on June 4, 2014 at 2:31 pm

  Need to investigate.

  Another incident.
  http://www.dinamalar.com/news_detail.asp?id=990935

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*