பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

BRICS modi1
ஒரு நாயகன் உதயமாகிறான்….

பிரேசிலில் நடந்து முடிந்துள்ள ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களுக்கான கால்கோளை இட்டுள்ளது. குறிப்பாக, பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் முக்கியத்துவத்தை வெகுவாக உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கிற்குக் கடிவாளமாக உருவான சிந்தனையே பிரிக்ஸ். 2006-இல் உருவான இக்கரு 20089-இல் ரஷ்யாவின் எகடிரன்பர்க் நகரில் கூடிய முதல் உச்சி மாநாட்டில் நனவானது. ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டுமே அங்கத்தினராக இருந்தபோது பிரிக் (BRIC) மாநாடு என்றழைக்கப்பட்டது. இந்த நாடுகள் அனைத்துமே வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகள். 2011-இல் தென் ஆப்பிரிக்காவும் இதில் இணைந்தபோது பிரிக்ஸ் மாநாடு என்று பெயர் மாற்றம் பெற்றது.

இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் முதல் எழுத்துச் சேர்க்கையே பிரிக்ஸ் (BRICS). பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியநாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், உறுப்பு நாடுகளிடையே வர்த்தகக் கட்டுப்பாடுகளை தளர்த்துதல், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டமைப்பில் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவையும் சேர்ப்பது குறித்து பிரேசில் உச்சி மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அநேகமாக அடுத்த ஆண்டு அதுவும் பிரிக்ஸில் சேரலாம்.

உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சரிபாதி மக்கள் (300 கோடி) வாழும் நாடுகள் பிரிக்ஸ் நாடுகள். உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியிலும் 16 டிரில்லியன் (டிரில்லியன்= லட்சம் கோடி) டாலர் மதிப்புக்கு பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளன. அந்நியச் செலாவணியிலும் 4 டிரில்லியன் டாலர் கொண்டவையாக இந்நாடுகள் உள்ளன. ஆனால், உலக வர்த்தக அமைப்புகளிலும், நிதி அமைப்புகளிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையை மாற்றவே பிரிக்ஸ் மாநாடு உருவானது. அதன் நோக்கம் சிறிது சிறிதாக நிறைவேறிவந்த நிலையில், பிரேசிலில் நடைபெற்று முடிந்துள்ள ஆறாவது உச்சி மாநாடு, மாபெரும் உலக அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது.

.

இந்தியாவின் பெரும் பங்களிப்பு:

இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2012-இல் தில்லியில் கூடிய நான்காவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான வங்கி ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனை முன்வைக்கப்பட்டது. அந்தச் சிந்தனை பிரேசில் மாநாட்டில் நிறைவேறியுள்ளது. ஒவ்வொரு உறுப்பு நாடும் தலா 2,000 கோடி டாலர் முதலீட்டில், ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் கோடி டாலர் அடிப்படை முதலீட்டுடன் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவங்குவது என்று இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்லது. இந்த முடிவில் இந்தியப் பிரதமர் மோடியின் பங்களிப்பு அதிகம்.

BRICS modi8
பரஸ்பர ஒத்துழைப்பே பிரிக்ஸின் திட்டம்

தவிர, சீனாவின் ஷாங்காய் நகரில் இதன் தலைமையகம் இயங்கும் என்றும், வங்கியின் முதல் தலைவராக ஐந்தாண்டுகளுக்கு இந்தியா பொறுப்பு வகிக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர் குழுவின் முதல் தலைமைப் பொறுப்பு ரஷ்யாவுக்கு வழங்கப்படுகிறது. உலகவங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் பாரபட்சம் மிகுந்த செயல்பாட்டிற்கு பிரிக்ஸ் வங்கி ஒரு சவுக்கடியாகும்.

உலக வங்கியிலும் சர்வதேச நிதியத்திலும் அதிகபட்ச முதலீட்டைக் கொண்டுள்ள காரணத்தாலேயே அமெரிக்கா உலக நாடுகளை மேய்த்தும் ஏய்த்தும் வருகிறது. எனவே, பிரிக்ஸ் வங்கியில் எந்த ஒரு தனி உறுப்பு நாடும் அதிகப்படியான முதலீட்டைக் கொண்டிருக்க கூடாது; அனைவரும் சீரான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற கருத்து இந்தியப் பிரதமர் மோடியால் முன்வைக்கப்பட்டது; இதை, முதலில் மறுத்த சீனாவும் பிறகு ஏற்றுக்கொண்டது. இதன்மூலமாக, எதிர்காலத்தில் எந்த ஒரு நாடும் பிரிக்ஸ் வங்கியில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“உலக நிதி அமைப்புகள் நடுநிலையாக இல்லை; தேங்கிக் கிடக்கும் உலகப் பொருளாதாரத்திற்கு உதவுவதாக அவை இல்லை. அமெரிக்காவைச் சார்ந்துள்ள தற்போதைய நிலையை மாற்றியாக வேண்டும்’’ என்று ரஷ்ய அதிபர் புடின் பிரேசில் மாநாட்டில் வலியுறுத்தியதும் குறிப்பிடத் தக்கது. இந்த வங்கி பிரிக்ஸ் நாடுகளுக்கு மட்டுமல்லாது, பிற வளர்ந்துவரும் நாடுகளுக்கும் உதவுவதாக இருக்கும்.

இம்மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, பிரிக்ஸ் அமைப்பின் தேவையை திட்டவட்டமாக வரையறுத்தார். “பொருளாதாரச் சீரழிவையும், ஸ்திரத்தன்மையற்ற நிலைமையையும் உலகம் சந்தித்துவரும் வேளையில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் புதிய வர்த்தகம் தொடர்பான உடன்பாடுகளின்மூலம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி, வளரும் நாடுகளில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கும் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும். . குறிப்பாக உணவுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பிரிக்ஸ் நாடுகள் ஏற்படுத்த உள்ள புதிய வங்கி புதிய உத்திகளுடன் செயல்பட வேண்டும். சர்வதேசப் பொருளாதாரத்தை மீட்டு,  நிலைத்தன்மையுடன் செயல்பட உதவ வேண்டும். நமது மேம்பாட்டு நடவடிக்கைகள் உறுப்பு நாடுகளின் வளர்ச்சியை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். உள்கட்டமைப்புமலிவுவிலையில் வீடுகள், மருத்துவ நலன்கல்வி, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆகியற்றில் இந்தியா அதிக அளவு முதலீடு செய்ய உள்ளது என்று மோடி கூறினார்.

.

மோடிக்கு சிறப்பான வரவேற்பு:

பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படுத்தும் முதல் பயணமாக பிரேசில் பயணம் அமைந்தது. தனது பதவியேற்பு விழாவுக்கே தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) தலைவர்களை அழைத்து உலகை வியப்பில் ஆழ்த்திய மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் சென்றார். அடுத்து, தனது தலைமைப்பண்பை வெளிப்படுத்தக் கிடைத்த அரிய வாய்ப்பாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டை (ஜூலை 15, 16) அவர் பயன்படுத்திக் கொண்டார்.

BRICS modi7
பாரத எல்லையைத் தாண்டும் மோடியின் வசீகரம்

பிரிக்ஸ் மாநாட்டை வர்த்தகத்துக்கான சரியான வாய்ப்பு என்பதை மோடி கண்டுகொண்டார். அதனால்தான் தன்னுடன், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், தொழிலதிபர்களையும் அவர் அழைத்துச் சென்றார். அங்கு அவர் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனும் வர்த்தகக் குழுக்களுடனும் தனித்தனியேயும், இணைந்தும் உரையாடினார்.

இம்மாநாட்டில் பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரிடையிலும் தனி நட்சத்திரமாக மோடி ஒளிர்ந்தார் என்று உலக செய்தி நிறுவனங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் மாபெரும் மக்கள் செல்வாக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்டதே, மோடிக்குக் கிடைத்த மரியாதைக்குக் காரணம் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.

தனக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை மோடியும் மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொண்டார். பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி அமைத்தல், பிரிக்ஸ் பல்கலைக்கழகம் குறித்து ஆலோசனை, பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துருவாக்கம்,  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செய்ய வேண்டிய மாற்றம், சர்வதேச அளவில் நிகழும் சிக்கல்கள் எனப் பலவற்றை அவரது உரை வெளிப்படுத்தியது.

“ஆப்கானிஸ்தான் முதல் ஆஸ்திரேலியா வரை உலகம் முழுவதும் தற்போது பிரச்னைகள் சூழ்ந்துள்ளன.பயங்கரவாதம் மனிதவாழ்வுக்கு எதிரானது என்பதால் அதை எந்த வடிவிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; அணுவளவும் அதனைப் பொறுத்துக்கொள்ளக் கூடாது. பயங்கரவாதிகளுக்கு புகலிடமோ, ஆதரவோ அளிக்கக் கூடாது என்று, அவர்களுக்குஆதரவு அளிக்கும் நாடுகளை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்துநிர்பந்திக்க வேண்டும்.

பயங்கரவாதம் போரைப் போன்றது. பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் மீது மறைமுகப் போர் தொடுக்கப்படுகிறது. அதை சர்வதேச சமூகத்தால் முழுமையாக ஒடுக்க முடியவில்லை. மனிதாபிமானத்தால் ஒன்றிணைந்துபயங்கரவாத சக்திகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் நாடுகள்எடுக்கும் முடிவு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கையாக மாற வேண்டும். சர்வேதச பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து விரிவான வரைவு உடன்படிக்கையை ஐ.நா.சபை விரைவில் கொண்டுவர வேண்டும்என்றார் மோடி. அவரது கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது.

பிரேசில் மாநாட்டில் மோடியின் இரண்டாம் நாள் உரை, அவரது மேதாவிலாசத்தைக் காட்டுவதாக அமைந்து, அனைவராலும் பாராட்டப்பட்டது.

காண்க: உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை.

.

பல நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்பு:

தனது பிரேசில் பயணத்தின் அங்கமாக, சீன, ரஷ்ய அதிபர்களுடன் மோடி கலந்துரையாடினார். குறிப்பாக, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், வர்த்தகத்திற்கு போட்டியாகவும் உள்ள சீனாவின் அதிபர் ஜீ ஜின்பிங்குடன் மோடி நிகழ்த்திய பேச்சு அர்த்தமுள்ளதாக அமைந்தது.

சீன அதிபருடன் மோடி
சீன அதிபருடன் மோடி

இந்தியா வருமாறு மோடி விடுத்த அழைப்பை சீன அதிபரும் ஏற்றுள்ளார். மேலும், சீனாவின் ஷாங்காயில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு  நடத்தும் அபெக் (APEC) கூட்டத்திற்கு வருமாறு மோடிக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பின் போது இந்திய-சீன எல்லை பிரச்னையைத் தீர்ப்பது குறித்து இருவரும் பேசினர். மேலும் இந்தியாவில் உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யுமாறு சீனாவை மோடி வலியுறுத்தினார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசுகையில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வர்த்தகத்தை சமநிலைப்படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்த மோடி, இந்திய அணுமின் திட்டங்களுக்கு ரஷ்யா அளிக்கும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவின் நீண்டநாளைய நட்புநாடு என்று ரஷ்யாவைக் குறிப்பிட்ட மோடி, ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வரும் டிசம்பரில் வருமாறு அழைப்பு விடுத்தார். அதனை புடின் ஏற்றுக் கொண்டார்.

தென் அமெரிக்கத் தலைவர்களுடன் மோடி
தென் அமெரிக்கத் தலைவர்களுடன் மோடி

பாதுகாப்பு, அணுமின் துறை, தொழில்நுட்பம் ஆகியவற்றில் ரஷ்யாவின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் அதிக முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். மேலும் சில அணு உலைகளை இந்தியாவில் நிறுவத் தயாராக இருப்பதாக புடின் அப்போது உறுதி அளித்தார். சிரியா, இராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பலநாடுகளின் பிரச்னைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி அக்பருதீன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புகள் தவிர, தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் வரவழைத்து மோடியுடன் சந்திக்கச் செய்தார் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெஃப். இச்சந்திப்பு, ஜூலை 17-இல் நடைபெற்றது.

ரஷ்ய அதிபருடன் மோடி
ரஷ்ய அதிபருடன் மோடி

பிரேசில், அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈகுவடார், கயானா, பராகுவே, பெரு, சுரிநாம், உருகுவே, வெனிசூலா ஆகிய 12 நாடுகளும் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பு தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பாகும் (UNASUR). இந்த நாடுகளின் அதிபர்கள் அனைவரும், பிரேசில் அதிபர் முன்னிலையில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து அளவளாவினர்.

இது இந்தியாவுக்கு கிடைத்த மாபெரும் கௌரவம் ஆகும். இந்தச் சந்திப்பில் தென் அமெரிக்க நாடுகளுடான வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும், இருதரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

.

தெளிவான, உறுதியான அறிக்கை:

இம்மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக முன்வைத்ததில் மோடி அளப்பரிய வெற்றி பெற்றார். இம்மாநாட்டில் சர்வதேச ஆட்சி முறை, மண்டல நெருக்கடிகள் குறித்து மோடி அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:

பிரிக்ஸ் தலைவர்கள்: உலகின் எதிர்கால அரசியல்....
பிரிக்ஸ் தலைவர்கள்: உலகின் எதிர்கால அரசியல்….

மேற்காசிய நிலவரம், இந்த மண்டலத்திலும், உலக அளவிலும் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  இதனால்வளைகுடாநாடுகளில் வசிக்கும் 70 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.

இராக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி பிரிக்ஸ் மாநாடு ஆராய வேண்டும். ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தர மறுத்துதீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளுக்கு நாம் கூட்டாக எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும், தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடும் ஆப்கானிஸ்தானத்திற்கு நாம் உதவ வேண்டும்.

சிரியாவில் அமைதி ஏற்பட இந்தியா உதவும். இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கவலை அளிக்கிறது. தீவிரவாதம் குறித்து பல்வேறு நாடுகள் பல்வேறு அளவுகோல்களை வைத்திருப்பதால்அதற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கமுடியவில்லை என்று  கூறியிருந்தார் மோடி.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்கெல்லுக்கு பிரேசிலிருந்து ஜூலை 17-இல் விடுத்த பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி, மோடியின் உலகப் பார்வையைக் காட்டியது. அப்போது ஜெர்மனியின் உலகக் கோப்பை கால்பந்து வெற்றியைப் பாராட்டவும் மோடி தவறவில்லை. அப்போது இருதரப்பு உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறாக, தனது பிரேசில் விஜயத்தை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தெளிவாகப் பிரகடனப்படுத்தவும், இந்திய நலன்களுக்கான முதலீடுகளை ஈர்க்கவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி. இதன்மூலமாக, உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியும் வந்திருக்கிறார் மோடி.

சீன, ரஷ்ய, தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுடனான மோடியின் சந்திப்பு, உலகின் இந்தியத் தேவையை உணர்த்தி இருக்கிறது. வர்த்தகம் மூலமாக நாடுகளிடையே உறவை மேம்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரையும் திரட்டவும் மோடி முயன்றிருக்கிறார்.

எதிர்காலத்தில் இம்முயற்சிகள் முழுமையாகப் பலனளிக்கும்போது, இந்தியப் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இந்திய எல்லையைத் தாண்டி உலக அளவில் சாதிக்கத் துவங்குவதைக் காண முடியும்.

அமெரிக்காவை முந்துகிறது பாரதம்–  தொடர்கிறது…

.

5 Replies to “பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!”

  1. \\ ஆனால் இந்தியா தொடர்ந்து தமிழர்களை கைவிட்டு வருகிறதே?\\

    இல்லையே. முல்லைப்பெரியார் நீர்த்தேக்கத்து உயரத்தை அதிகப்படுத்த கேந்த்ர சர்க்கார் தானே முனைப்பெடுத்துள்ளது.

    ம்………. தங்கள் தளத்து இடுகைகள் சிலவற்றைப் பார்த்தேன். பல கருத்தொற்றுமைகளும் சில கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. நெற்றி நிறைய திருநீருடன் புகைப்படத்தைப் பார்த்தால் மிளிரும் தமிழ்ச்சைவப்பாரம்பர்யம் துலங்குகிறது. பெருமிதம் மிகுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள். திருச்சிற்றம்பலம்.

  2. \\ இம்மாநாட்டில் பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரிடையிலும் தனி நட்சத்திரமாக மோடி ஒளிர்ந்தார் என்று உலக செய்தி நிறுவனங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ளன. \\

    ஆனால் பரங்கிப்பிச்சைப்பணத்தில் செழித்துக் கொழித்து வளரும் ஹிந்துஸ்தானத்து செய்தி நிறுவனங்கள் பல தங்கள் எஜமானர்கள் கூறிய கருத்துக்கு விரோதமாகக் கருத்து தெரிவித்துள்ளன.

    மோதியின் ப்ரிக்ஸ் விஜயம் வெற்றி கரமானது என்று வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் கருத்துப்பழம் ஹிந்துஸ்தான உள்ளூர் ஊடக நரிகளுக்கு ஏன் புளிக்கிறது?

    முன்னாள் ப்ரதமர் மௌன மோஹன் சிங்கனார் ஐம்பது அறுபது வேலை வெட்டியில்லாத உள்ளூர் ஊடக வல்லூறுகளை ஓஸி செலவில் வெளிநாடு கூட்டிச்சென்று ஓஸி உல்லாச ப்ரயாணம் ஓஸி வெளிநாட்டு பிரியாணி ஆட்டுக்கறி மாட்டுக்கறி பன்றிக்கறி பாம்புக்கறி போன்ற படையல்கள் இட்டு குஷிப்படுத்துவார். ஆனால் வேலை வெட்டியற்ற வெட்டி ஊடக வல்லூறுகளை சர்க்காரின் ஓஸி செலவில் வெளிநாடு கூட்டிச்செல்ல மோதி சர்க்கார் மறுத்துள்ளது. ஓஸியிலேயே உடம்பு வளர்த்த வெட்டிப்பயல்களுக்கு வயிறெறியாது வேறு என்ன செய்யும்?

    மோதி ஆங்க்லத்தில் பேசவில்லை; சரி சீன அதிபர் ஆங்க்லத்தில் பேசினாரா? புடி ஆங்க்லத்தில் பேசினாரா?

    முதல் முறை ஒரு பெரிய பன்னாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பில் பங்கு பெறும் மோதி அவர்களுக்கு சூழல் புதிதாக இருக்கலாம். அவருடைய செயல்பாடுகளில் குறைகளும் கூட இருக்கலாம். உண்மையான நேர்மையான ……… மோதியின் செயல்பாடுகளில் பழகும் விதத்தில் தேவையான மாற்றங்களை பரிந்துரை செய்வது கூட சரியான செயல்பாடாக இருக்கலாம்.

    ஆனால் ஆங்க்லத்தில் பேசவில்லை. ப்ரிக்ஸ் விஜயம் தோல்வி என்று ஓஸி யில் உடம்பு வளர்த்த ஊடக நரிகள் ஊளையிடுவது………. சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று இவர்கள் ஊளையிடுவதாகவே வாசகர்களால் அவதானிக்கப்படும் என்று அறியார்களோ?

  3. நன்கு அலசி எழுதப்பட்ட பதிவு. தென் அமெரிக்க நாடுகளுடன் பேசியது குறித்து இப்போது தான் தெரிகிறது. இங்கு பத்திரிக்கைகள் பெரிதாக தெரிவிக்காதது தான் காரணம். ஒரு சந்தேகம். பிரிக்ஸ் வங்கியின் தலைமை நமக்கு 6 ஆண்டுகள் என படித்தேன். நீங்கள் 5 ஆண்டுகள் என கூறி உள்ளீர்கள். எது உண்மை ?

  4. ப்ரிக்ஸ் வங்கி துவங்குவது பற்றி முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில்தான் முடிந்தது. இப்போது நிறைவேறியது கேட்டு ஆனந்தமாக இருக்கிறது.

    உண்மையிலேயே இவ்வங்கி முழு வலிமையோடு இருந்தால் அமெரிக்க ஆதிக்கத்துக்கு வைக்கப்பட்ட செக்பாயிண்ட்-ஆக இருக்கும். அதன்மூலம், அமெரிக்காவுக்கு ஜலதோஷம் பிடித்தால் உலகமே தும்மியாகவேண்டிய துர்பாக்கிய நிலையிலிருந்து இந்தியா தன்னைக்காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

    இதில் சீனாவின் பங்குதான் அதிகம். எனவே அவர்களது ஆதிக்கம் இருக்கும், அது தவிர்க்க இயலாதது. ஆனால் எதிர்காலத்தில் உறுப்பு நாடுகள் மேலும் அதிக முதலீடு செய்ய முடிந்தால் அது அனுமதிக்கப்படவேண்டும். (இப்போது அப்படி விதிமுறை உள்ளதா என்று தெரியவில்லை) அப்படி இருந்தால், நமக்கு வசதி இருந்தால் நமது முதலீட்டை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *