ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3

ஆங்கில மூலம்: பேராசிரியர் T. P. ராமச்சந்திரன்

தமிழாக்கம்: எஸ். ராமன்

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம். 

தொடர்ச்சி.. 

அவர்கள் வேண்டியது அவர்களுக்குக் கிடைத்து விட்டதால், ராவணனின் அட்டகாசம் தொடங்கத் துவங்கியது. தாத்தா சுமாலி தனது திட்டப்படி, குபேரனை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு இலங்கையை அரக்கர்களது ஆளுகையின் கீழே கொண்டுவருவதற்கு ராவணனைத் தூண்டினான். அதனால் ராவணன் குபேரனுக்கு ஆட்சி மாற்றம் தொடர்பாக ஓர் எச்சரிக்கை கொடுத்தான். அவர்கள் இருவருக்குமே தந்தையான விஸ்ரவனின் அறிவுரைப்படி குபேரன் இலங்கையை விடுத்து கைலாயத்திற்குக் குடி பெயர்ந்தான். ஆட்சி கிடைத்ததும், இலங்கையின் அதிபதியான ராவணன் தேவர்கள், யக்ஷர்கள், மற்றும் ரிஷிகளைத் துன்புறுத்தத் தொடங்கினான். ராவணனின் செய்கைகளைக் கண்டித்து அவனைக் கட்டுப்படுத்துவதற்காக குபேரன் அவனுக்குத் தூது அனுப்பினான். ஆனால் ராவணனோ அவ்வாறு வந்த தூதுவனையே கொன்றுவிட்டு, மூவுலகையும் தான் வென்று ஆளப்போவதாக மார் தட்டி நின்றான்.

குபேரனின் தூதுவனைக் கொன்று சவால் விட்ட ராவணன், முதல் அடியாக கைலாயத்தில் இருந்த குபேரனின் சொத்துக்கள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு, பல யக்ஷர்களையும் கொன்று குவித்தான். குபேரனின் வான்வழி ரதமான புஷ்பக விமானத்தையும் அபகரித்தான். அடுத்ததாக சிவபெருமான் உறையும் கைலாயத்திற்குச் சென்றான். அவ்வாறு அவன் செல்லும்போது, சிவன் அந்த புஷ்பக விமானத்தைச் செயலிழக்க வைத்ததால், கோபம் அடைந்த அவன் தனது கைகளால் கைலாய மலையையே பிடுங்கி எறிவதற்கு முயன்றான். ஆனால் அவனது செயலைத் தடுக்கும் வகையில் சிவபெருமான் தனது பாதத்தால் மலையை அழுத்தி, ராவணனின் செயலாமையை வெளிப்படுத்தினார். அப்போது மலையின் அடியில் மாட்டிக்கொண்ட அவனது கைகள் பல ஆண்டுகளுக்கு அந்த நிலையிலேயே முடங்கிக் கிடந்தது. அந்த இக்கட்டில் இருந்து மீள வழி தெரியாத அவன் வலியினால் அழுது கதறி அதிலிருந்து விடுபடுவதற்கு சிவபெருமானிடமே வேண்டிக்கொண்டான். இறுதியில் அவனிடம் கருணை கொண்ட சிவன் அவனது கைகளை விடுவித்தார். சம்ஸ்க்ருதத்தில் “ராவஹ” என்றால் கதறல் என்று அர்த்தம் வருவதால், கைகள் மாட்டிக்கொண்ட நிலையில் அவனுடைய கதறுதலால்  ராவணன் என்ற பெயர் அவனுக்கு வந்தது (ராமாயணம்: III, 56, 26). அப்புறமாக அவன் வேறு பலரை கதறடித்து அழவைத்ததும் நாம் அறிந்ததே. அதற்கு முன் அவனுக்கு வேறு பல பெயர்களும் இருந்தன.

இமயமலைச் சாரலில் உலவிக்கொண்டிருந்த ராவணன் ஒரு பிரும்ம ரிஷியின் மகளும், தன்னளவிலேயே சிறந்ததொரு தபஸ்வினியுமான வேதவதியைச் சந்தித்தான். அவளே வேதத்தைப் பேணிக் காக்கும் அதிகாரியாக இருந்தது மட்டும் அல்லாமல் மகாலக்ஷ்மியின் மறுபிறவியாகவும் உதித்திருந்தாள். அவள் மேல் மையல் கொண்ட ராவணன் அவளைத் தூக்கிச் செல்வதற்காக அவளது கூந்தலைப் பற்றி இழுத்தான். அந்தத் தகாத செயலிற்கான பரிசுத்த முயற்சியில் அவள் தீக்குளிக்கும்போது, ராவணனை அழிப்பதற்கென்றே தான் இன்னுமொரு பிறவி எடுத்து வருவதாகச் சபதம் செய்துவிட்டு உயிர் துறந்தாள். அவளே பின்பு சீதையாக பிறவியெடுத்து வந்தவள். இராவணன் சவால் விடும்போதெல்லாம் அவனை எதிர்க்கும் துணிவின்றி பல மன்னர்களும் தங்களது இயலாமையை ஒப்புக்கொண்டு பணிந்து போனாலும், ராமர் உதித்த இஷ்வாகு குல மன்னரான அனரண்யன் என்பவர் ராவணனுடன் போரிட்டு உயிர் துறந்திருக்கிறார். அவ்வாறு அவர் இறக்கும்போது தன் குலத்தில் உதிக்கவிருக்கின்ற ஸ்ரீ ராமரின் கையால் ராவணன் மாள்வான் என்று சபித்திருக்கிறார். அதைக் கேட்ட அனைத்துக் கடவுள்களும் அகமகிழ்ந்தனர். இவ்வாறாக ராவணனின் அழிவிற்கு ஓர் அடித்தளம் அமைக்கப்பட்டது.

ravana

ஒருமுறை நாரதர் ராவணனைப் பார்த்து அவன் பல பாமரர்களைத் துன்புறுத்துவதைக் கேலி செய்து, அவனுக்கு யமனைத் துன்புறுத்தும் வல்லமையும், ஆண்மையும் இருக்கிறதா என்று கிண்டலாக வினவினார். அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு ராவணன் யமனுடன் நடத்திய போரில், யமன் தனது தோல்வியே கண்டிராத கால தண்டாயுதத்தைப்  பிரயோகித்து ராவணனைக் கொன்றிருக்க முடியும். ஆனால் தான் யமனுக்கு அளித்திருந்த சாகாவரம் செல்லாக்காசாக ஆகிவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தினால் பிரம்மன் யமனை வேண்டிக்கொள்ளவே ராவணனது உயிர் அப்போது தப்பிப் பிழைத்தது. அவனது பாதாள லோகப் பயணங்களில் தன்னைத் தாக்க வந்த தன் சொந்த சகோதரியின் கணவனான வித்யுத்ஜீவனையே ராவணன் கொன்றுவிட்டான். பின்னர் அவளுக்கு ஆறுதல் தரும் வகையில் அவளுடைய பாதுகாப்பிற்காக என்று, தன் உறவினர்களான காரன் மற்றும் தூஷணன் தலைமையில், பதினான்காயிரம் அரக்கர்கள் கொண்ட படையினை ராவணனது ஆளுகையின் வட எல்லையில் இருந்த ஜனஸ்தானம் காட்டை நிர்வகிக்கப் பணித்தான். பரந்து விரிந்து இருந்த தண்டகாரண்ய வனப் பகுதியின் தெற்குப் பகுதியில்தான் ஜனஸ்தானக் காடு இருந்தது.

தேவர்களில் தொடங்கி அசுரர்கள்,  மனிதர்கள் வரையிலான பல நூற்றுக்கணக்கானவர்களின் மனைவிகளை ராவணன் அபகரித்துச் சென்றதே அவன் செய்த பாவங்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பாவமாகக் கருதப்பட்டது. அவர்கள் அனைவரின் சாபமும், கண்ணீரும் காலத்தால் வீணாகப் போகவில்லை. இறுதியில் சீதை என்னும் பெண் வடிவில் அவனது முடிவிற்கான காரணம் வந்தது. ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களின் மேல் கடவுளர்கள் அனைவரும் பரிதாபம் கொண்டிருந்தாலும், அவனுக்கு சீதையின் மூலம் வரப்போகும் அழிவைப் பற்றியும் அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இறுதிவரை ராவணன் தன் வழிகளைத் திருத்திக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடுத்த சாபத்தினால் அவன் தன் சக்தியைப் படிப்படியாக இழந்துகொண்டே வந்தான். ஒரு முறை குபேரனின் மகன் நலக்கூபரனின் மனைவி ரம்பையை ராவணன் பலாத்காரம் செய்தபோது அவள் இட்ட கொடுமையான சாபத்தினால், அவன் நிலைகுலைந்து போனான்.

இவ்வாறாக அவனது பாவச் செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தபோதும், ராவணனின் அழிவைத் துரிதப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் இறைவனின் நியதியில் ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அளவு உண்டு. ஒரு பெரும் சேனையுடன் ராவணன் தேவலோகத்தையே முற்றுகை இட்டபோது இந்திரனால் ஒன்றும் செய்ய முடியாது, மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டு அவன் தஞ்சம் அடைந்தான். ராவணன் தன்னால் நிச்சயம் கொல்லப்படுவான் என்றும் அதற்கு உண்டான காலம் வரவேண்டும் என்றும் அப்போது அவனிடம் விஷ்ணு கூறினார் (VII. 27, 19). தேவர்களுடன் நடத்திய அந்தப் போரில், அரக்கர்களின் கொட்டங்கள் அனைத்திற்கும் முழுமுதற் காரணமாக இருந்த அவர்களது மூத்த தலைவனான சுமாலியை ராவணன் இழந்தான்.

பிரம்மனிடமிருந்து வரம் பெறும் ராவணன் (பர்மிய ஓவியம்)
பிரம்மனிடமிருந்து வரம் பெறும் ராவணன் (பர்மிய ஓவியம்)

அவன் நடத்திய போர்கள் எல்லாவற்றிலுமே ராவணனுக்கு வெற்றி கிட்டவில்லை. அவனுக்குச் சில தோல்விகளும், ஏமாற்றங்களும் அவ்வப்போது ஏற்பட்டன. எப்போதெல்லாம் ராவணனது எதிரிகள் வென்றாலும் அவன் கொல்லப்படாது உயிர் தப்புகிறானோ, அப்போது கூட அவனுக்கு  வெட்கமும் வந்ததில்லை; அவனிடம் நன்றியுணர்வும் தெரிந்ததில்லை. ஒரு சமயம் ராவணன் மாஹிஸ்மதி அரசனான அர்ஜுனனோடு போரிடச் சென்று தோற்றுப்போய், கைதியாகவும் பிடிபட்டான். ஆனால் ராவணனது தந்தை வழிப் பாட்டனான புலஸ்தியனின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்போது அவன் விடுவிக்கப்பட்டான். இன்னொரு சமயம் சுக்ரீவனின் அண்ணனான வாலியால் ராவணன் தோற்கடிக்கப்பட்டான். எப்போதும் போல வாலி கடலைப் பார்த்துக்கொண்டு தனது நித்யகர்மாவான சந்தியாவந்தன ஜபத்தைச் செய்து கொண்டிருந்தபோது, ராவணன் அவனுக்குப் பின்புறமாக வந்து வாலி மேல் பாய்ந்தான். ராவணனை விட சக்தி வாய்ந்த வாலியோ அவனைத் தனது கக்கத்தில் அழுத்திப் பிடித்துக்கொண்டு, தொடர்ந்து கடலைப் பார்த்து தான் அப்போது செய்துகொண்டிருந்த பிரார்த்தனையை முடித்துவிட்டு, ராவணன் தொங்கிக்கொண்டே இருக்க கடலை ஒரே தாவில் தாண்டிவிட்டு, அந்தப்பக்கமும் தான் செய்யும் ஜபத்தை செய்துவிட்டு, கிஷ்கிந்தாவிற்குத் திரும்பினான். திரும்பியதும் அவனை ஏளனமாகப் பார்த்து சிரித்துக்கொண்டே ராவணனை அங்கு விடுவித்தான். அப்போது வாலி ராவணனைக் கொன்றிருக்க முடியும். ஆனால் ராவணன் வாலியின் நட்புக்காகக் கெஞ்சியதால் கருணையினாலும், அவனால் தனக்கும் பயன் இருக்கும் என்றெண்ணியும் ராவணனை மன்னித்து அனுப்பிவிட்டான். (வாலியின் இந்தச் செய்கையும் ராமரைப் பொருத்தவரை ஓர் அடாத செயலாகக் கருதப்பட்டது.)

ராவணனுக்கு அதீத பலம் இருந்ததென்றால், அதையும் மிஞ்சும் அளவிற்கு மாயமாய் தாக்கும் போர்முறைகள் பலவும் அவனது மகனான மேகநாதனுக்குத் தெரிந்திருந்தன. தேவர்களுடனான போரில் அவன் அவர்களது தலைவனான இந்திரனை மாய வித்தைகள் மூலம் கட்டிப்போட்டு இலங்கைக்கு இழுத்துச் சென்றான். (முன்பு கௌதம மகரிஷியின் மனைவி அகல்யை மேல் இந்திரன் கொண்ட மோகத்தால் அவரிட்ட சாபத்தின்படி இந்திரனுக்கு இந்த அவமானம் ஏற்பட்டது என்று பிரம்மன் கூறினார் – VII, 30, 30-35). பிரம்மனின் சமாதானத் தலையீட்டால், இந்திரனை வென்றவன் என்று குறிக்கும் இந்திரஜித் என்ற பட்டம் உட்பட பல சலுகைகளைப் பெற்ற பின்பே அவன் இந்திரனை விடுவித்தான். மேலும் இந்திரஜித்தின் யாகக் குண்டத்தில் இருந்தே பிரம்மனால் வரவழைத்துப் பெற்ற தெய்வீக ரதத்தைப் பெற்றுக்கொண்டு, தினமும் அவன் செய்யவேண்டிய நிகும்பிலை யாகத்தை முடித்தபின், அந்த ரதம் ஏறி போருக்குச் சென்றால் இந்திரஜித்தை எவரும் வெல்ல முடியாது என்ற வரத்தையும் அவன் பிரம்மனிடமிருந்து பெற்றான். அதனால் ராம-ராவண யுத்தத்தின் போது, இந்திரஜித் அந்த யாகத்தை முடிக்கும் முன்பாகவே அவன் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று லக்ஷ்மணன் அவனை வீழ்த்தினான்.

இராமாவதார லீலை

1. இராமரின் பிறப்பு

    ( I, 1-18; VII, 35-36)

dasaratha_boon_from_agni_ramayanaதசரத மஹாராஜா பிள்ளைப்பேறு இல்லாதிருந்தார். அத்துடன் அவருக்கு வயது அதிகமாகி விட்டதால் வாரிசு பற்றிய கவலையும் அவருக்கு வந்துவிட்டது. அவரது குடும்ப ஆலோசகர் மற்றும் பல அந்தணர்களையும் கலந்தாலோசித்த அவர், அசுவமேத யாகம் செய்வதற்குத் தீர்மானித்தார். அதை நடத்திக்கொடுப்பதற்காக அங்கதேசத்தில் இருந்து தவச்சீலரான ரிஷ்யச்ருங்கர் அங்க  விசேஷமாக வரவழைக்கப்பட்டார். மழை இல்லாது அங்கதேசம் வறண்டு இருந்தபோது, அதன் மன்னரான ரோமபாதரின் அழைப்பில் அங்கு வந்து மழையை நன்கு பொழிய வைத்தவர்தான் ரிஷ்யச்ருங்கர். அசுவமேத யக்ஞத்தைத் தொடங்கி வைக்கும் முன்னரே தசரதருக்கு நான்கு மகன்கள் பிறப்பார்கள் என்று அவர் கூறினார்.

அந்த யாகம் தொடங்கப்போகிறது என்பதை அறிந்த தேவர்கள் அனைவரும் பிரம்மனுடன் கலந்தாலோசனை செய்வதற்கு இந்திரனின் தலைமையில் சென்றார்கள். ராவணன் பிரம்மாவிடம் பெற்ற தனது இறவாவரம் வேண்டுகோளில் மனிதர்கள் மற்றும் மிருகங்களைச் சேர்க்காததனால், அவனை அழிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அனைவரும் தீர்மானித்தார்கள். பின்னர் பிரம்மாவின் தலைமையில் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று அவர் ஒரு மனிதனாக தசரதரின் மகனாய் அவதரிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு விஷ்ணு தானே தசரதரின் நான்கு மகன்களாகவும் பிறப்பதாக வாக்களித்தார்.

யாகம் முடியும் தருவாயில் அந்த அக்னிக் குண்டத்தில் இருந்து கண்ணைப் பறிக்கும் அழகுடன் கூடிய ஓர் உருவம் கிளம்பி பாயசம் நிறைந்த ஒரு குடத்தைக் கொடுத்து, அது இறைவனின் பிரசாதம் என்றும், அது தசரதரின் மூன்று மனைவிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லி மறைந்தது. தசரதர் அதை மிக்க மரியாதையுடன் பெற்றுக்கொண்டார். ஏதோ தெய்வாதீனமாக நிகழ்ந்தது போல, குடத்தில் இருந்த பாயசத்தை அவர் தனது மூன்று மனைவிகளுக்கும் வெவ்வேறு அளவில் பிரித்துக் கொடுத்தார். அரைக் குடம் பாயசத்தை அவர் கௌசல்யைக்கும், கால் குடம் அளவை சுமித்திரைக்கும், அரைக்கால் குடம் அளவை கைகேயிக்குமாகக் கொடுத்த அவர், மீதமிருந்த அரைக்கால் குடம் அளவு பாயசத்தை மீண்டும் சுமித்திரைக்குக் கொடுத்தார். அவ்வாறு வெவ்வேறான அளவில் பாயசம் கொடுக்கப்பட்டது கௌசல்யையின் மகனாகப் பிறக்கும் ராமன் விஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்றும், மற்றைய மூன்று மகன்களும் அவரது அம்சாவதாரங்கள் என்றும் நாம் புரிந்துகொள்வதற்காகவும் இருந்திருக்கலாம். லக்ஷ்மணன், சத்ருக்னன் இருவரும் சுமித்திரைக்கும், பரதன் கைகேயிக்குமாகப் பிறந்தார்கள். அவர்கள் நால்வரும் பிறந்த நேரத்தில் வேறுபாடுகள் பெரிதாக இல்லாவிட்டாலும், ராமர் அவர்கள் அனைவர்க்கும் மூத்தவராகப் பிறந்தார்.

இவ்வாறாக மகாவிஷ்ணு நான்கு மனித வடிவங்களில் அவதரித்துள்ளதை அறிந்ததும், மேலுலகத்தில் உள்ள தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், அப்சரஸ்கள், சாரணர்கள் போன்றோர் அனைவரும் ராமர் தனது பூவுலக வாழ்வின் குறிக்கோளை எய்துவதற்குத் தங்களால் ஆன உதவியை அளிப்பதற்கான வெவ்வேறு பொறுப்புக்களை எடுத்துக்கொண்டனர். அவர்கள் தங்களுக்கு இருக்கும் சக்தியை குரங்குகள், கரடிகள் போன்ற மிருகங்களிடம் புலப்படுமாறு செய்துகொண்டனர். குரங்குகளில் அவ்வாறான பெருமை அடைந்தவர்களில் வாலி, சுக்ரீவன், அனுமன், நளன் மற்றும் நீலன் போன்றவர்கள் என்றால், கரடியில் முதன்மையானவர் ஜாம்பவான் ஆவார். அவர்கள் தவிர ராமரது பணியில் தங்கள் தலைவர்களுக்கு உதவ ஒரு பெரிய வானர சேனையே காத்துக்கொண்டிருந்தது.

Hanuman finding Sita

அனுமனுக்கு ராமாயணத்தில் சிறப்பான இடம் ஒன்று உண்டு. ராமரையும் சீதையையும் விட்டுப் பிரியாத தாஸனாகவும், எப்போதும் அவர்களையே மனத்தில் நிறுத்தி வழிபடும் பக்தனாகவும் அவர் விளங்குகிறார். அவருடைய பக்தியின் ஆழம் எவ்வளவு என்றால், இப்போதும் ஏதேனும் வேண்டுவதற்கு ராமரை அணுகவேண்டுமானால் அதற்கு முன்னர் அனுமனை வணங்காமல் எவரும் செல்ல முடியாது. அதனால் அனுமன் யார் என்பதையும் அவரது சக்தி என்ன என்பதையும் அறிந்துகொள்ளுதல் அவசியம். அந்த விவரங்கள் எல்லாவற்றையும் உத்தர காண்டம் 35-36 சருக்கங்களில் நாம் காணலாம்.

அனுமனின் தந்தை, தாயின் பெயர்கள் கேசரி மற்றும் அஞ்சனை என்பதாகும். தங்க நிறத்தில் அனுமன் பிறப்பான் என்று கேசரிக்கு வாயு பகவான் ஆசி வழங்கியிருந்தார். குழந்தையாக இருக்கும்போதே அனுமனுடைய அதீத சக்திகள் நன்கு வெளிப்பட்டன. அனுமனுக்கு நன்கு தேர்ந்த பழங்களைக் கொடுப்பதற்காக ஒருமுறை அஞ்சனை வெளியே சென்றிருந்தாள். அப்போது கிழக்கில் இளஞ்சிவப்பு நிறத்தில் உதித்துக்கொண்டிருந்த சூரியனை அனுமன் பார்த்து அதை ஒரு பழம் என்று தவறாக நினைத்துக்கொண்டு அதைப் பறிப்பதற்காக அதைப் பார்த்துத் தாவினான். அவனை சூரியனின் வெப்பம் எதுவும் செய்துவிடக் கூடாதே என்ற கவலையில் வாயு பகவானும் அனுமனுடன் பறந்தான். ராமரின் பணியில் அனுமன் ஆற்றவேண்டிய தலையாய கடமையை நினைவில் கொண்டே அப்போது சூரியனும் அனுமனைச் சுட்டெரிக்கவில்லை.

(தொடரும்)

2 Replies to “ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3”

  1. அற்புதம். திரு ராமன் அவர்களுக்கு நமது நன்றிகள். தமிழ் இந்துவுக்கும் நமது நன்றிகள்.

  2. செய்த வினைகளுக்கு தண்டனை உண்டு எப்போது ஏற்படும் என்று கூறமுடியாது காத்திருக்க வேண்டும் பகவன் விஷ்ணு காதிருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *