பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்:

பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

 

உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை

 

BRICS modi4
புதிய உலகத் தலைமை உருவாகிறது!

ல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உலகின் அறிவிக்கப்படாத காவல்காரனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு சர்வதேச அரசியலில் முதன்மைப்படுத்திக்கொண்டு வருகிறது.

இதற்கு எதிராக  கம்யூனிஸ நாடுகள் மேற்கொண்ட உலகளாவிய முயற்சி வெற்றி பெறவில்லை. தவிர, 1990களில் நிகழ்ந்த கம்யூனிஸத்தின் தோல்வி முதலாளித்துவத்தை அடைப்படையாகக் கொண்ட அமெரிக்காவின் எழுச்சியாக அமைந்தது. ஆனால், அமெரிக்காவின் தொடர் சரிவும், புதிய உலகத் தலைமையின் எழுச்சியும் தற்போது தொலைவானக் கருக்கல் போலத் தென்படுகின்றன. இந்த மாற்றத்தின் வித்தாக பாரதம் இருக்கப்போகிறது என்பதுதான் புதிதான, அதேசமயம் புதிரான செய்தி.

.

ஆமை புகுந்த வீடு:

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம், அந்நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் உறவுகளைத் தீர்மானிப்பதே. இதற்காக உலக அரசியலை அந்நாடு மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும். முன்னாள் அதிபர்கள் ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ்,  பில் கிளின்டன், தற்போதைய அதிபர் பரேக் ஒபாமா யாராயினும், அமெரிக்காவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருப்பினும், அவர்களுடைய முக்கியமான குறிக்கோள், அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கு உதவிகரமாக இருப்பதே. அதற்கு உலகின் காவல்காரன் என்ற மாயத் தோற்றம் அவர்களுக்கு உதவும்.

இராக்கின் வீழ்ச்சியான சாதாமின் வீழ்ச்சி!
இராக்கின் வீழ்ச்சியான சதாமின் வீழ்ச்சி!

வியட்நாம், கொரியா, இராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், உக்ரைன் என, எங்கெல்லாம் சர்வதேச அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளனவோ அங்கெல்லாம் அமெரிக்காவின் கை நீண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆயுத வர்த்தகமும், எண்ணெய் வளம் மீதான ஆதிக்கமும் தான் அமெரிக்காவின் ஒரே சிந்தனை.  இருவேறு நாடுகளிடையிலான மோதலோ, அணுஆயுதப் பதுக்கல் குறித்த எச்சரிக்கையோ, மனித உரிமைப் பிரகடனமோ போதும், அமெரிக்கா எந்த நாட்டிலும் கேள்வியின்றி நுழைய.

ஆமை புகுந்த வீடு போலத் தான் அமெரிக்கா புகுந்த நாடும். இராக்கில் பயங்கரப் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாகக் கூறி இராக் மீது போர் தொடுத்து அந்நாட்டு அதிபராக இருந்த சதாம் உசேன் ஆட்சியை வீழ்த்தி, அவரையும் தூக்கிலிட்ட அமெரிக்கா சாதித்தது என்ன?

கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக ஐரோப்பிய நாணயத்தைப் பயன்படுத்துவோம் என்ற அறிவிப்பே, சதாமின் வீழ்ச்சிக்கு காரணமானது என்பதை விவரம் அறிந்தவர்கள் அறிவார்கள். சதாம் வீழ்ச்சியால் இப்போது அங்கு நிலையற்ற அரசியல் ஏற்பட்டு தினந்தோறும் நூற்றுக் கணக்கில் மக்கள் ஒருவருடன் ஒருவர் போரிட்டு மடிகின்றனர். இதுதான் அமெரிக்காவின் சாதனை.

இராக் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானிலும் இப்போது தலிபான்களின் கொடுங்கரத்தை மட்டுப்படுத்த முடியாமல் அங்கு மக்களாட்சி மலர முடியாமல் தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கொரியா, வியட்நாம் நாடுகளில் அமெரிக்காவின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியான மக்கள் இன்னமும் இணைய முடியாமல் தவிக்கிறார்கள். பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உறுதுணை புரியும் அமெரிக்கா, அரேபிய தீபகற்பத்தில் தனது எண்ணெய் வயல்களைக் காப்பாற்றவும், தனக்கு சாதகமாக எண்ணெய்ப் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் பல அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறது.

.

இந்தியா மீதும் கண்:

ஆசிய நாடுகளில் சீனா அமெரிக்காவின் பொருளாதாரத்தைச் சார்ந்திருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த பல திரைமறைவு வேலைகளில் அமெரிக்கா ஈடுபடுகிறது. இந்தியாவின் பகைநாடாக தன்னைக் கருதிக்கொள்ளும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியுதவிகளையும் போர்த்தளவாட உதவிகளையும் அமெரிக்கா தொடர்ந்து அளித்து வருகிறது.

தெரிந்தே தீயுடன் விளையாடும் அமெரிக்கா...
தெரிந்தே நெருப்புடன் விளையாடும் அமெரிக்கா…

தலிபான்களைக் கட்டுப்படுத்த இந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானின் நட்புறவு தேவை என்ற பொய்க் காரணத்துடன் இந்த உதவிகளைச் செய்துவரும் அமெரிக்காவுக்கு, தலிபான்களை ஊக்குவிப்பதே பாகிஸ்தானில் உள்ள மதவெறி அமைப்புகளும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் தான் என்று தெரியாமல் இருக்காது. அல்-குவைதா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததை அறிந்து அவரை சுட்டுக் கொன்ற அமெரிக்காவுக்கு, இது தெரியவில்லை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனாலும், பாரதத்தின் வளர்ச்சிக்கு வேகத்தடையாக பாகிஸ்தானை முன்னிறுத்த முடியும் என்று அமெரிக்க அதிபர்கள் தொடர்ந்து நம்பி வருகிறார்கள்.

இந்தியாவில் யார் அரசியலில் வெல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் அமெரிக்கா முயன்றதுண்டு. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அமெரிக்க நேசர் என்பது, அமெரிக்க – இந்திய அணு ஒப்பந்தத்தின் போது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டது. அதனால் தான், காங்கிரஸுக்கு உதவும் வகையில், இந்தியாவில் புதிதாக உருவான அரசியல் தலைமையான நரேந்திர மோடிக்கு பலவகைகளில் இக்கட்டை ஏற்படுத்தி வந்தது. அவர் அமெரிக்காவுக்கு விசா கோராமலேயே, அவருக்கு அதனை மறுத்து பெரும் பரப்புரை செய்த அமெரிக்காவின் உத்தி, ஓர் அரசியல் சதியாகும். நமது நல்லூழ், அமெரிக்காவின் சதியை நாட்டு மக்கள் முறியடித்து, அசுர வல்லமையுடன் மோடி அரசை பாரதத்தில் ஏற்படுத்தினார்கள்.

இப்போது, நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவால் உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ள மோடியுடன் கைகுலுக்கிக்கொண்டு தனது முந்தைய கறைகளைக் கழுவிக்கொள்ள அமெரிக்கா முயல்கிறது. முன்னர் விசா மறுப்பை மாதம் ஒருமுறை சர்வதேசச் செய்தியாக்கிய அமெரிக்கா, இப்போது, நாட்டின் அதிபர் என்ற முறையில் மோடிக்கு ஏ1 (முதன்மையானது) விசா அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. தவிர, மோடி அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்று ஒபாமாவே அழைத்திருக்கிறார். இதனை மோடியும் எந்தப் பகை உணர்ச்சியும் இன்றி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

.

அமெரிக்காவின் அழைப்புமடல்:

அமெரிக்காவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களுள் பலர் அமெரிக்காவின் மோடி எதிர்ப்பைக் கண்டித்து வந்துள்ளனர். அவர்கள் இப்போது மோடிக்கு ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். சர்வதேச அரசியலில் பாரதம் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை அமெரிக்காவும் உணர்ந்துள்ளது. தனது அதிதீவிர மோடி எதிர்ப்பு அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளுடன் இந்தியா அணிதிரளக் காரணமாகிவிடும் என்பதை ஒபாமா புரிந்துகொண்டிருக்கிறார். இப்போதும்கூட, அமெரிக்கா தனது நலனுக்காக மோடியுடன் கைகுலுக்குகிறதே ஒழிய, உண்மையான நட்புறவு அந்நாட்டிடம் இல்லை.

அமெரிக்கா வருமாறு மோடிக்கு அதிகார்ப்பூர்வ அழைப்பு....
அமெரிக்கா வருமாறு மோடிக்கு அதிகார்ப்பூர்வ அழைப்பு….

கடந்த ஜூலை 11-இல் அமெரிக்க அதிபரின் சிறப்புப் பிரதிநிதியாக தில்லி வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செயலாளர் வில்லியம் பர்ன்ஸ், மோடிக்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு மடலை அளித்திருக்கிறார்.

வரும் செப். 26-இல் ஐ.நா. சபைக்கு இந்தியப் பிரதமர் மோடி செல்ல உள்ளார். அப்போது அமெரிக்காவுக்கும் அரசுமுறைப் பயணமாக செல்ல உள்ளார். செப். 28-இல் அமெரிக்க அதிபர் ஒபாமாவை மோடி சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் மோடி பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்ற குரல் இப்போது அங்கு மிக வலுவாக எழுந்துள்ளது.

மோடியின் அமெரிக்க விஜயம் அங்குள்ள அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையிலும் இந்திய வம்சாவளியினரிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடிக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு மாபெரும் வரவேற்பு அளிக்க அவர்கள் திட்டமிட்டனர். ஆனால், அந்த அளவிற்கு மக்கள் கூடும் பெரிய திடல்கள் இல்லாததால், நியூயார்க் நகரின் மேடிசன் சதுக்கத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் நிகழ்வை நடத்த அங்குள்ள இந்தியர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதுவரை எந்த பாரதப் பிரதமருக்கும் கிட்டாத வரவேற்பு இது. தவிர, இந்த நிகழ்வை காணொலி முறையில் அமெரிக்காவின் அனைத்து நகரங்களிலும் உள்ள இந்தியர்களிடையே பரப்பவும், அதன்மூலமாக பாரதத்தின் சக்தியை அமெரிக்காவுக்கு உணர்த்தவும் இந்திய ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

பிரேசிலில் நடைபெற்ற ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடிக்கு கிடைத்த வரவேற்பும், மோடியின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலித்த உரையும் அமெரிக்க ராஜ தந்திரிகளை யோசிக்கச் செய்துள்ளது. குறிப்பாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் உதயமும், தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்களுடன் இந்தியப் பிரதமரின் சந்திப்பும், சீன, ரஷ்ய அதிபர்களுடனான மோடியும் நட்புறவும் சர்வதேச அரசியலில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது.

இந்திய அரசியலில் குழப்பமற்ற, விலைக்கு வாங்க முடியாத அரசு இருப்பது அமெரிக்காவுக்கு சிக்கல். மேலும், உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா தொடர் சரிவைக் கண்டுவரும் சூழலில், இந்தியப் பொருளாதாரம் மேற்கத்திய நாடுகளைச் சாராமல் தனித்து இயங்கிவருவதும், புத்தெழுச்சி பெற்றுவருவதும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கைகளே.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் பகையை சம்பாதித்துள்ள ரஷ்யாவின் விளாடிமிர் புடினுடன் மோடி கைகோர்ப்பதைத் தடுக்க அமெரிக்காவால் முடியாது. “இந்தியாவின் சிறுகுழந்தைக்கும் கூட இந்தியாவின் நட்புநாடு ரஷ்யா என்று தெரியும்” என்று பிரிக்ஸ் மாநாட்டின்போது மோடி கூறியிருப்பது சாதாரணமானதல்ல. ஜப்பானும் இந்தியாவுடன் நெருங்கிவருவது அமெரிக்காவுக்கு உதறலை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக வர்த்தகத்தில் பாரதத்தின் தேவையை உணர்ந்துள்ள சீனாவும், கொள்கை (பெயரளவிலேனும் சீனா கம்யூனிஸ நாடு!) அடிப்படையில் அமெரிக்காவுடன் இணைய இயலாது. எனவே, இந்தியா, சீனா, ரஷ்யா- இந்த மூன்று நாடுகளின் உறவே வருங்காலத்தில் சர்வதேச அரசியலைத் தீர்மானிப்பதாக இருக்கும். அதற்கு பக்கபலமாக சார்க், பிரிக்ஸ், ஆசியான், தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு போன்ற உலக அரசியல் அமைப்புகள் இருக்கும்.

.

2 Replies to “பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!”

  1. The observations and views are exemplary;this analysis is par excellence amongst the so called political analysts who write/argue in Indian English newspapers/channels. kudos to Mr.Sekkizhar! The right thinking people of our country will welcome this move in toto!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  2. All these are ok… why the govt wants to stop/reduce ii sleeper services in railways… ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *