மோதி சர்க்கார்: முஸ்லீம் சஹோதரர்களது அச்சங்கள், அபிலாஷைகள் – 3

மதசார்பின்மை மாயையில் இருந்து வெளிவந்த முஸ்லீம் சஹோதரர்கள் மற்றும் அதிலிருந்து இன்னமும் வெளிவராத முஸ்லீம் சஹோதரர்கள்……. பாஜக மற்றும் மோதி பற்றி கொண்டுள்ள அச்சங்கள் யாவை மற்றும் மோதி சர்க்காரிடமிருந்து இவர்களது அபிலாஷைகள் யாவை என்ற விஷயங்கள்………. இண்டியா டிவி தொலைக்காட்சியினர் நிகழ்த்திய *ஆப் கீ அதாலத்* (உங்கள் ந்யாயாலயம்) என்ற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. மேற்கண்ட விவாதம் ஹிந்தி / உர்தூ / ஹிந்துஸ்தானி என்ற பலபாஷைகள் கலந்த ஒரு மொழிநடையில் நடத்தப்பட்டது. இந்த பாஷைகளில் பரிச்சயம் இல்லாத அன்பர்களுக்காக இந்த நிகழ்ச்சியின் சாராம்சம் மூன்று பாகங்களில் ஆன இந்த வ்யாசத்தில் பகிரப்படுகிறது.

முந்தைய பகுதிகள்:  1  |   2 

தொடர்ச்சி…

குற்றச்சாட்டு எண் – 3

மோதி அவர்கள் ப்ரதம மந்த்ரியாகப் பொறுப்பேற்றதால் செக்யுலர் சக்திகள் பெரும் பின்னடைவை சந்திக்கும்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

ஜாஃபர் சாஹேப், மோதி அவர்கள் ப்ரதம மந்த்ரியாகப் பொறுப்பேற்ற பின்னர் செக்யுலர் சக்திகளான முலாயம் சிங்க் யாதவ், மாயாவதி போன்றோர் செல்லாக்காசுகளாக ஆகி விட்டனர். காங்க்ரஸைப் பற்றிப் பேசுதவதற்கே ஒன்றும் இல்லை.

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-

யாரையாவது செக்யுலர் என்று சொல்லிவிடுவதால் மட்டிலும் செக்யுலர் ஆகிவிடுவார்களா? யாரையாவது கம்யுனல் என்று சொல்லிவிடுவதால் மட்டிலும் கம்யுனல் ஆகிவிடுவார்களா?

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

முஸல்மாணியரது ஓட்டுக்களல்லாமால் எந்த ஒரு அரசியல் கட்சியும் பெரு வெற்றியைப் பெற முடியாது. காங்க்ரஸ் ஒரு செக்யுலர் கட்சியாக இருந்தது. மிக அதிக காலம் ஆட்சியில் இருந்தது. ஆனால் எங்கள் சமூஹத்தை பெரும் அளவில் ஏமாற்றியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை இக்கட்சி விஷம் கலந்த உணவாக ஆகிவிட்டது (food poison). நாங்கள் கிட்டத்தட்ட பெரும் கருத்துக்குருடர்களாக இந்தக் கட்சியின் பின்னர் சென்றோம். நான் நரேந்த்ரபாய் மோதி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் காணொலியில் காண்பித்த படி முஸ்லீம் குழந்தைகளின் ஒரு கையில் குரான்-ஏ-கரீம் மற்றும் மற்றொரு கையில் கம்ப்யூட்டர் என்ற நிலை வரவேண்டும் என்று மோதி அவர்கள் சொன்னது எப்போது அமல் செய்யப்படும்?

முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் (Mufti Ehsaz Ahmed) :- (All India Muslim Personal Law Board)

சமூஹத்தில் பொறுப்புள்ள ஒரு வ்யக்தி ஒரு வாக்குறுதியை பொதுதளத்தில் அளிக்கிறார் என்றால் அது நிறைவேற்றப்படும் என்று நம்பலாம். எப்போது தான் ஒரு கார்யத்தை செய்வேன் என்று உறுதி பூண்டுள்ளாரோ அதை அவ்வண்ணம் செய்ய மாட்டார் என்று துவக்கத்திலேயே நாம் ஏன் நினைக்க வேண்டும்? தகுந்த காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும் என்றே நினைப்போமாக.

muslims-in-aap-ki-adalat

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

ஜாஃபர் சாஹேப் நான் புள்ளி விபரங்களில் ஆழ்ந்து செல்லவில்லை. முஸல்மாணிய சஹோதரர்களில் நல்ல வருவாய் ஈட்டுபவர்கள் குறைவே. கல்வியில் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள். ஐஏஸ் பணியில் 3 சதமானம். ஐஃஎப் எஸ் பணியில் 1 சதமானம். இப்படி ஒரு நிலை இருப்பதால் தான் இங்கு இருக்கும் சஹோதரர்களின் மனதில் நமக்கு முன்னேற வாய்ப்புகள் கிட்டுமா என்று பெரும் சம்சயம் எழுகிறது.

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-

இப்போது ஐ ஏ எஸ் பற்றி ஸ்ரீ ரஜத் ஷர்மா அவர்கள் கருத்துப்பகிர்ந்தார் இல்லை? இப்போது இதை முன் வைத்து யார் செக்யுலர் யார் கம்யூனல் என்ற பரிச்சயத்தை உங்கள் முன் வைக்கிறேன். உங்களில் பல பலபேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. UPA சர்க்கார் பதவியிலிருந்து விலகிச்செல்லும் போது UPSC தேர்வுகள் சம்பந்தமாக ஒரு முடிவு எடுத்தது.

UPSC தேர்வுகளில் அரபி மற்றும் ஃபார்ஸி மொழிகள் விருப்பப்பாடமாக பல்லாண்டு காலமாக இருந்து வந்தது பலரும் அறிந்த விஷயம். இதனால் அங்கொன்று இங்கொன்றாக பல முஸல்மாணிய இளைஞர்களும் இத்தேர்வில் பங்கெடுத்து வெற்றி பெற்றுள்ளனர். UPA சர்க்கார் அரபி மற்றும் ஃபார்ஸி மொழிகளை UPSC தேர்வுகளின் விருப்பப் பாடமாக இருந்ததை சமீபத்தில் ஆட்சியில் இருந்து விலகும் தருணத்தில் ரத்து செய்தது. சர்க்காரில் மந்த்ரியாக இருந்த ஸ்ரீ நாராயணசாமி அவர்களிடம் நாங்கள் இது விஷயமாக விவாதிக்க சென்றோம். இங்கு அமர்ந்திருக்கும் மௌலானா சாஹேபும் எங்களுடன் இருந்தார். 50 வருஷங்களுக்கு மேலாக அமலில் இருந்து சமீபத்தில் ரத்தான மொழி பற்றிய இந்த விஷயம் சார்ந்து அவர் என்ன சொன்னார் தெரியுமா? நான் பொது தளத்தில் தொலைக்காட்சியில் இதைப் பகிருகிறேன்.

அரே வா!!! எங்களுடைய மந்த்ரி சபையில் இந்த விஷயம் சம்பந்தமாக நிர்ணயம் செய்த போது மூன்று முஸ்லீம் மந்த்ரிகளும் உடனிருந்தனர். அவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு என்ன பெரிதாக வந்து விட்டது? எங்களுடைய மூன்று முஸ்லீம் மந்த்ரிகளுக்கு தவறாக இல்லாத ஒரு விஷயம் உங்களுக்கு என்ன பெரிய தவறாகத் தெரிகிறது?

இவ்வளவு மட்டிலும் இல்லை. இதே குழு இந்த விஷயம் சம்பந்தமாக ஸ்ரீ நரேந்த்ரபாய் மோதி அவர்களையும் சந்திக்க விழைந்தது. அவருடைய அணுகுமுறையையும் தெரிந்துகொள்ளுங்கள். நானும் அப்போது உடனிருந்தேன். இவர் வெகு தூரம் ஓடக்கூடிய பந்தயக்குதிரை என சொல்வேன்.

நம்முடைய தேசத்தின் வணிகத்தில் 60 சதமான வெளிநாட்டு வர்த்தகம் அரபி மற்றும் ஃபார்ஸி மொழி பேசும் தேசங்களுடன் நிகழ்கிறது. சர்க்காரில் பொறுப்பில் இருப்பவர்கள் நமது செழிப்பான வெளிநாட்டு வர்த்தகத்தை கணக்கில் கொண்டு அரபி மற்றும் ஃபார்ஸி மொழி பயின்றவர்களை ஊக்குவிக்க அல்லவோ வேண்டும்? இது எப்படிப்பட்ட சர்க்கார்? இலக்கில்லாமல் செயல்படுகிறதே என்று குறைப்பட்டுக்கொண்டார். இது அவருடைய தீர்க்கமான தொலைநோக்குப்பார்வையை பறைசாற்றுகிறது.

Modi_kite_1

முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் (Mufti Ehsaz Ahmed) :- (All India Muslim Personal Law Board)

மோதி அவர்கள் இந்த மொழிகளை UPSC தேர்வுகளில் திரும்பவும் விருப்பப்பாடங்களாக சர்க்கார் கொணரும் என்று வாக்குறுதி அளித்தாரே அதையும் பகிருங்கள்.

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-

ஆம் இந்த மொழிகளை நான் ஆட்சிக்கு வந்தால் திரும்பக்கொணருவேன் என்று வாக்குறுதியும் அளித்தார்.இவருடைய தொலைநோக்குப்பார்வைக்கு இன்னொரு உதாரணத்தையும் முன் வைக்கிறேன். இரண்டு வருஷங்கள் முன்னர் அஹ்மதாபாத்தில் ஒரு உலகளாவிய சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்றது. அதில் பாக்கி ஸ்தானிலிருந்தும் வ்யாபாரிகள் வந்திருந்தனர். மோதி அவர்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சமூஹத்தின் பலதரப்பு மக்களையும் முனைந்து சந்தித்து அவர்களுடைய கருத்துக்கள் மற்றும் நிறை குறைகளை அறிவதில் நாட்டமுடன் இருப்பார். அதற்கேற்ற படிக்கு பாக்கி ஸ்தானிய வ்யாபாரிகள் மோதி அவர்களை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக அவருக்கு செய்தி அனுப்பினார்கள். உடன் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார் மோதி அவர்கள். பாக்கி ஸ்தானிய வ்யாபாரிகளுடன் மத்ய சார்க்காருடைய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் செயலாளரும் உடனிருந்தார்.

அவர்கள், ஐயா நாங்கள் அஜ்மேர் செல்ல விரும்புகிறோம். அதற்கு உங்கள் உதவி தேவை என்று இறைஞ்சினார்கள். மோதி அவர்களும் ஒரு வேளை இவர்களுக்கு அஜ்மேர் வரை செல்ல கார் அல்லது ஜீப் போன்ற வாஹன வசதி தேவையாக இருக்கும் என்று எண்ணி, உங்களுக்குத் தேவையான வாஹன வசதியை உடனே செய்து தருகிறேன் என்று சொன்னார்.

ஆனால் அவர்களோ, இல்லை ஐயா, இது எங்கள் ப்ரச்சினை இல்லை. அஜ்மேர் வரை செல்வதற்கு எங்களுக்கு விசா கிடைக்கவில்லை என்றனர். மோதி வருத்தப்பட்டு சுற்றுலாத்துறை செயலாளரைப் பார்த்து, ஐயா இது என்ன விநோதமான செயல்பாடு? பாக்கி ஸ்தானிலிருந்து ஹிந்துஸ்தானம் வரும் யாத்ரிகர்களுக்கு அஜ்மேர் செல்வதற்கு அனுமதி இல்லையென்றால் நமது சுற்றுலா சம்பந்தமான அரசுக்கொள்கையில் குறைபாடு இல்லை? வெளிநாட்டிலிருந்து ஹிந்துஸ்தானத்திற்கு வருகை தரும் ஹிந்து யாத்ரிகர்களுக்கு காசி மாநகரம் செல்ல அனுமதி இல்லை என்றால் எப்படிப்பட்ட மதிஹீனமான சுற்றுலாக்கொள்கையாக அது பார்க்கப்படும்? என்று கருத்துப்பகிர்ந்தார். அவருடைய கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் பரந்த நோக்குடையவை என்பதற்கும் அனைத்து மக்களையும் வேறுபாடு இல்லாமல் அரவணைத்துச் செல்ல விரும்பும் நோக்கிற்கும் இவை உதாரணங்கள்.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

மோதி அவர்கள் முஸ்லீம்களுக்கு என்னென்ன செய்வார்? மான்யவர் ஸ்ரீ முலாயம் சிங்க் யாதவ் அவர்கள் முஸ்லீம்களுக்காக வேண்டி லக்னவ் நகரத்தில் நிர்மாணம் செய்த படி பெரிய கட்டிடங்களை நிர்மாணம் செய்வாரா? எங்களுடைய ப்ரச்சினைகளை நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டுமானால் யாருடன் பேச வேண்டும்? முஸ்லீம் எம்பிக்கள் இல்லையே. எங்களது தொகுதி எம்பியான டாக்டர் மஹேஷ் ஷர்மா அவர்களை அணுகுவதா? அல்லது வேறு யாராவது முஸல்மாணிய சஹோதரரை அணுகுவதா? யாரை நாங்கள் அணுக வேண்டும்?

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

இதற்கு யார் பதிலளிக்க வேண்டும். நானே பதில் சொல்கிறேன் ஐயா. முஸ்லீம் என்றும் ஹிந்து என்றும் எதற்கு வேறுபாடு? நீங்கள் உங்கள் தொகுதி எம்பியான டாக்டர் மஹேஷ் ஷர்மா அவர்களை அணுகுவதில் எதற்குத் தயக்கம் வேண்டும். அவ்வளவு ஏன்? உங்களுக்கு வேறு யாரும் கிட்டவில்லை என்றால் என்னிடம் கூட உங்கள் குறைகளைப் பகிரலாம். நான் அதை சர்க்காரிடம் நிச்சயமாகச் சேர்ப்பேன் என்று இந்த பொது தளத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு முஸல்மாணிய சஹோதரர் :-

ஒரு ஹிந்து மோசமானவர் இல்லை. ஒரு முஸல்மான் மோசமானவர் இல்லை. ஒரு க்றைஸ்தவர் மோசமானவர் இல்லை. ஒரு சீக்கியர் மோசமானவர் இல்லை. மனிதரை மனிதராகப் பார்க்க இயலாதவர்கள் மோசமானவர்கள்.

குற்றச்சாட்டு எண் 4 :-

மோதி அவர்கள் ப்ரதமராகப் பொறுப்பேற்றதால் முஸலீம்கள் பெருமளவு பொருளாதரப்பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

மோதியின் குஜராத்தில் வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் பேச்சு என்று சொல்கிறார்களே? இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா :-

கடந்த 12 வருஷங்களாக குஜராத் மாகாணத்தில் சண்டை சச்சரவுகள் மதக்கலஹங்கள் இவையெதுவும் இல்லாமல் அமைதி நிலவுகிறதே. அதனுடைய மிகப்பெரும் பயனை அடைந்து வருபவர்கள் முஸ்லீம்கள். அதுவும் அடிமட்டத்தில் இருக்கும் முஸ்லீம் சஹோதரர்கள். ரிக்ஷாகாரர்கள் போன்று சமூஹத்தின் கடை நிலையில் இருப்பவர்கள் அடைந்த நிம்மதி மற்றும் பொருளாதார வளர்ச்சி மிகவும் உகக்கத் தக்கது. முன்னெல்லாம் பாக் (Bhag) என்ற ஹிந்துப்பெரும்பான்மைப்பகுதிக்கு முஸ்லீம் ரிக்ஷாகாரர்கள் செல்லவே மாட்டார்கள். கலஹம் என்று ஏதும் இல்லை. ஆனால் மனதில் அச்சம் இருந்து வந்தது. முன்பெல்லாம் பயத்தின் காரணமாக நகரத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் ரிக்ஷா இழுத்து தினம் 200-250 ரூபாய் சம்பாதித்த சஹோதரர்கள் அச்சமில்லாது அமைதி நிலவும் மாகாணத்தின் எந்தப்பகுதிக்கும் தைரியமாகச் சென்று தொழில் செய்வதில் தினம் 700-750 ரூபாய் வரை செழிப்பாக சம்பாதிக்கிறார்கள்.

muslims-felicitate-modi

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

குஜராத்தில் நிலவும் அமைதி ஹிந்துஸ்தானம் முழுதும் நிலவும் என்று உறுதி அளிக்க முடியுமா?

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-

இது ஹிந்துஸ்தானத்தில் முதல் முறையாக ஒரு மாகாணத்தின் ஆட்சி முறையை முன்னிறுத்தி அதன் மூலம் வெற்றியைப் பெற்ற தேர்தல் என்பதை நாம் நினைவுறுத்த வேண்டும். இந்த ஆட்சி முறை சரி அல்லது தவறு என்று பலபேருக்கு பல அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் இந்த முறை முன்னிறுத்தப்பட்டு இது வெற்றி பெற்றது என்பது மறுக்க முடியாது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனல் அஹ்மதாபாத் நகரத்தை ஹிந்துஸ்தானத்தில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்று விருதளித்தது. ராத்ரி இரண்டு மணிக்கு புர்க்கா அணிந்த பெண்ணும் அவரது கணவரும் நகரத்தில் பயமின்றி செல்வதை எங்காவது காணமுடியும் என்றால் அது அஹ்மதாபாத்தில் தான். ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் வாஹனங்களில் பெண்கள் பயமின்றி செல்ல முடியும். பாக் (Bhag) என்ற பகுதி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. ஒருகாலத்தில் நாங்கள் கூட அங்கு சென்றதில்லை. அது போலவே முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு ஹிந்துக்கள் செல்ல மாட்டார்கள். ஆனால் இன்றைய திகதியில் உங்களில் யாரையாவது பாராசூட்டில் அஹ்மதாபாத்தின் நகரத்தில் எங்காவது இறக்கி விட்டால் இது போன்ற வித்யாசங்களை உணர மாட்டீர்கள். எல்லா பகுதிகளிலும் எல்லா மதத்தைச் சார்ந்த மக்களும் அச்சமில்லாமல் புழங்குவதைக் காணலாம். ராத்ரி நேரங்களில் ஹிந்துப்பகுதிகளில் புர்க்கா அணிந்த பெண்கள் தங்கள் குடும்பத்தாருடன் பார்க் மற்றும் தோட்டங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

மணிநகர் என்பது ஸ்ரீ மோதி அவர்கள் வெற்றி பெற்ற சட்ட சபைத் தொகுதி. ஹிந்துப்பெரும்பான்மைத் தொகுதி. காலை நமாஸ் முடிந்ததும் அங்குள்ள பார்க்குகளில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்கள் நடைப்பயிற்சி செய்வதை சர்வ சாதாரணமாகக் காணலாம். வணிக வளாகங்களிலும் அனைத்து மக்களும் பெருமளவு புழங்குவதைக் காணலாம். இப்படி முன்பு இருந்ததில்லை.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

இப்படி ஒரு அமைதி ஹிந்துஸ்தானம் முழுதும் நிலவுமா?

ஜெனாப் ஜாஃபர் ஸரேஷ்வாலா (Zafar Sareshwala) :-

நிச்சயமாக. மோதி அவர்களுடைய செயல்திட்டங்கள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை. வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சர்க்காரின் செயல்திட்டங்கள் அமைதியான சூழலில் மட்டுமே முடியும். ஆகவே தன்னுடைய இலக்கான வளர்ச்சியை அடைவதற்கு ஹேதுவாக தேசம் முழுதும் அமைதியான சூழலுக்கு மோதி அவர்கள் வித்திடுவார் என்பதும் வளர்சிக்காக வேண்டி சாலை நிர்மாணப்பணிகள், மின் திட்டங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அபிவ்ருத்தி போன்ற திட்டங்களை முனைந்து அமல் செய்வார் என்பதையும் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். குஜராத் மாகாணம் இப்படித் தான் வளர்ச்சி பெற்றது.

இதற்குப் பின் சில முஸல்மாணிய சஹோதரர்கள் மோதி அவர்களுக்கு தங்கள் ஆதரவை நல்க விரும்பவதாகவும் வளர்ச்சியில் பெரும் நம்பிக்கை உள்ளதாகவும் கருத்துப் பகிர்ந்தார்கள்.

பல சஹோதரர்கள் மிகவும் இனிமையான மற்றும் சுத்தமான உர்தூ ஷையில் கரவொலிகளுக்கு மத்தியில் உர்தூ கவிதைகள் பகிர்ந்தார்கள். உத்தர பாரதத்து முஸ்லீம் சஹோதரர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கவிஞர்கள் என்றால் அது நிச்சயமாக மிகையாகாது. மிகவும் நாசூக்கான மொழியான உர்தூவில் காதல், இன்பம், துன்பம் மற்றும் இறைவனைப் பற்றி வாயைத்திறந்து பேசினாலேயே கவிதை மொழியிலேயே பேசும் சாமர்த்யம் படைத்தவர்கள் உத்தர பாரதத்து முஸல்மாணிய சஹோதரர்கள். மிகவும் நளினமான மற்றும் சுத்தமான உர்தூ மொழியில் பகிரப்பட்ட கவிதைகள் ஆதலால் அதன் முழு தாத்பர்யத்தை உள்வாங்க முடியவில்லை. ஆனால் மிகுந்த கரவொலிகளாலும் ஓரளவுக்குப் புரிந்த படிக்கும் சஹோதரத்துவத்தைக் கொண்டாடும் உன்னத பொருள் பொதிந்த கவிதைகள் என்று மேம்போக்காகப் புரிந்து கொண்டேன்.

இதையடுத்து முழுதும் காவி உடையணிந்து காவித் தலைப்பாகை அணிந்த அஜ்மேர் தர்க்கா ஷெரீஃபின் உத்தராதிகாரியான ஹாஜி சையத் மொய்னுத்தீன் சிஷ்டி சாஹேப் அவர்கள் இந்த ந்யாயாலயத்தின் ந்யாயாதிபதி என்ற படிக்கு தன் தீர்ப்பைப் பகிர்ந்தார்.

இங்கு கேழ்க்கப்பட்ட கேழ்விகள் அனைத்திற்கும் விவாதத்தில் பங்கு பெற்ற ஐந்து முஸல்மாணிய பெருந்தகைகளும் தெளிவான நேரடியான பதில்களை அளித்தார்கள் என்பது போற்றத் தக்கது. ப்ரதமராகப் பதிவி ஏற்க இருக்கும் மோதி அவர்கள் ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்பது சரியான எதிர்பார்ப்பு. இந்த தேசத்தின் அரசியல் சாஸனம் மிகவும் வலிமை வாய்ந்தது. ப்ரதமராகப் பதிவி ஏற்கும் எந்த ஒரு நபரும் யாருக்கும் பாரபக்ஷம் காண்பிக்க இயலும் என்ற படிக்கு வலுவற்றது அல்ல நமது அரசியல் சாஸனம். மோதி அவர்களிடமிருந்து இந்த தேசத்தின் முஸ்லீம்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் உண்டு. இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக வேண்டி இந்த தேசத்தைச் சார்ந்த அனைத்து மதங்களின் படி ஒழுகும் மக்களையும் அரவணைத்து மோதி அவர்கள் நமது வளர்ச்சிப் பயணத்தை துவக்கட்டும். நன்றி.

இங்கு பகிரப்பட்ட பல விஷயங்களில் நமது தமிழகத்து முஸல்மாணிய சஹோதரர்களுக்கும் உடன்பாடிருக்கும் என நம்புகிறேன். ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்களில் சிலருக்கு சில கருத்துக்களில் மாறுபாடுகளும் இருக்கலாம். கருத்து வேறுபாடுகளில் ஆழ்ந்து வேற்றுமைகளை வளர்த்தெடுக்காது கருத்தொற்றுமைகளின் பலம் கொண்டு ……….. ஹிந்துக்களும் முஸல்மாணியரும் கரம் கோர்த்து தேச வளர்ச்சியில் பங்களித்தால் தேசம் விரைவாக முன்னேறும். தேசத்தின் அனைத்து மக்களும் சுபிக்ஷமாக வாழ்வர்.

நமது முஸல்மாணிய சஹோதரர்கள் மாதம் முழுதும் நோன்பிருந்து இறைவனைத் தொழும் இந்த மாதத்தில்…….. இறையருளால் அனைத்து நலன் களையும் பெறவும் ஹிந்து சஹோதரர்களுடன் இணக்கமாக வாழ்வதற்கும் எனது மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

பாரதத் தாயை பணிந்து வணங்கும்
வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே தூய நினைவுடனே.

(முற்றும்)

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *