இந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை

”டாக்டர் அம்பேத்கர். நீங்கள் இந்த நாட்டின் முக்கிய தலைவர். உங்களிடம்தான் எங்கள் கோரிக்கையை முன்வைக்க முடியும்.”

“சொல்லுங்கள் பாபா சாகேப்ஜி” என்றார் டாக்டர் அம்பேத்கர்.

டாக்டர் அம்பேத்கரால் பாபா சாகேப் என அழைக்கப்பட்ட அந்த தலைப்பாகை கட்டிய முதிய கம்பீரமான தலைவர் சொன்னார், “இந்த தேசத்தின் கொடியாக காவிக்கொடித்தான் இருக்க வேண்டும். அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.” டாக்டர். அம்பேத்கர் ஒரு நிமிடம் சிந்தனையில் ஆழ்ந்தார். morning_hindutvaபின்னர் கூறினார்: “ஆக, பகவா கொடியை செங்கோட்டையில் பறக்க விட ஒரு மகரிடம் வந்திருக்கிறீர்கள். சரிதான். இதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். காவிக்கொடியை தேசிய கொடியாக்க கோரும் அந்த மக்கள் இயக்கத்தை நான் ஆதரிப்பேன்.”

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் பம்பாய் விமானநிலையம். ஜூன் 1947.

இதற்கு பல ஆண்டுகள் முன்னர்….

மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க தோழர் ஹென்றி போலக். அவர் பாரதம் வந்திருந்தார். அப்போது பாரதத்தில் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்தது.  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து பாரதம் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்  சமூக விடுதலைக்கான போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன.  ஹென்றி போலக் மும்பையில் மில் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து கேள்விப்பட்டிருந்தார். ’போராட்டங்களை மட்டும் பார்த்தால் போதாது. எங்கள் தொழிலாளர்கள் வாழும் நிலை எப்படிப்பட்டது என்பதையும் நீங்கள் நேரடியாக பார்த்தால் மட்டுமே எங்கள் நியாயம் உங்களுக்குப் புரியும்.’ என அவரிடம் கூறியவரும் அதே தலைவர்தான். அது மட்டுமல்ல அவரையும் ராம்ஸே மெக்டொனால்டையும் (இவர் பின்னாட்களில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஆனார்) தொழிலாளர்களின் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று அவர்களின் நிலையைக் காட்டினார்.

யார் அந்த தலைவர்? பாபா சாகேப் போலே என மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்படும் அவரது முழுப் பெயர் சீதாராம் கேசவ் போலே என்பது.

சிறுவயதிலேயே போலேயின் முதல் ஆதர்சமாக அமைந்தவர் அவரது ஆசிரியர் கிருஷ்ணராவ் அர்ஜுன் கேலூஸ்கர்.  வெள்ளைகாரர் ஒருவர் நடத்த உத்தேசித்த மராட்டிய பத்திரிகைக்கு ஆசிரியராக ரூபாய் 100 சம்பளத்தில் அழைக்கப்பட்ட போதும் சுதந்திரம் இல்லாத இடத்தில் தாம் பணி புரிய முடியாது என உதறித்தள்ளியவர் கேலூஸ்கர்.babasaheb_bole  இவரது வழிகாட்டுதலில் உருவானவர் போலே. தமது இளவயதிலேயே இந்து அமைப்பு ஒன்றை உருவாக்கினார் போலே. இந்த அமைப்பு முதலில் போலேயின் சமுதாயமான பண்டாரிகள் மத்தியில் செயல்பட்டாலும் அதன் குறிக்கோள் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த இந்துக்களின் சமுதாய விடுதலை என்பதாக இருந்தது. போலே இரவு பள்ளிகளை ஆரம்பித்தார். பிளேக் நோய் வந்த போது  ஆரோக்கியமான நோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல அவர் முன்வந்தார். ஆனால்  பிரிட்டிஷ் அரசாங்கம் பிளேக்கை பயன்படுத்தி மக்களை துன்பப்படுத்துவதை அவர் எதிர்த்தார்.  ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக நீதி பெற கல்வியே முக்கியமான ஆயுதம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார் பாபா சாகேப் போலே. எனவே மகாராஷ்டிரத்தில் ஒரு மகர் இளைஞன் முதன் முதலாக SSC தேர்வில் வெற்றி பெற்றதும் அவரை பாராட்டும் நிகழ்ச்சியை தானே தலைமையேற்று நடத்தினார். அந்த இளைஞனின் பெயர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர்.

1909 களில் பல ஆலைகள் மூடப்பட்டு வந்தன. அப்போது வேலையிழந்த தொழிலாளர்கள் பட்ட இன்னல்களை போக்க போலே தொழிலாளர்கள் நல அமைப்பை உருவாக்கினார். அவர்களுக்காக இரவு பள்ளிகள் தொடங்கி கீர்த்தனைகள். அவர்களை போதைகளிலிருந்து விடுவித்தல் என ஒரு பக்கமும் அவர்களுக்காக போராடி வாதாடி அவர்கள் உரிமைகளை பெறுவது என மறுபக்கமுமாக ஒரு முழுமையான தொழிலாளர் இயக்கத்தை போலே கட்டி எழுப்பினார். இக்காலகட்டத்தில்தான் அவர் மெக்டொனால்டையும் போலக்கையும் அவர்கள் வாழும் பகுதிகலுக்கே அழைத்து சென்று அவர்கள் நிலையை குறித்த விழிப்புணர்வை ஆளும் வர்க்கக்த்திடமும் உருவாக்கினார். ஹோலி பண்டிகையை தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக்கு அவர் பயன்படுத்தினார்.

ஆரிய சமாஜத்தின் ஆரிய சகோதரத்துவ அமைப்பு அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது. தலித்துகள் பெருமளவில் கலந்து கொண்ட முதல் சமபந்தி போஜனம் அதுவே என வரலாற்றறிஞர்கள் கருதுவதுண்டு. babasaheb_suddhiஆனால் கடைசி நேரத்தில் அதில் கலந்து கொண்டிருக்க வேண்டிய பெருந்தலைகள் பலர் பல காரணங்களைச் சொல்லி வரமுடியாது என கூறிவிட்டனர். முன்வைத்த காலை பின்வைக்காமல் அதில் கலந்து கொண்ட வெகுசில தலைவர்களில் பாபா சாகேப் போலேயும் ஒருவர். இதனைத் தொடர்ந்து அவரை அவர் பிறந்த பண்டாரி சாதியிலிருந்து விலக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வி அடைந்தன. இந்துக்கள் சாதி வேறுபாடுகளை களைந்து தம்மை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு உடல் பயிற்சி மல்யுத்த சாலைகள் வேண்டுமென்பது போலே அவர்களின் சிந்தனை.  ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு முன்னோடியாக அமைந்தவை இத்தகைய உடற்பயிற்சி மல்யுத்த சாலைகளே. அவைகளுக்கு பெரும் பண உதவி செய்ததுடன் ’ஹனுமான் வியாயம் சாலை’ எனும் அமைப்பின் போட்டிகளுக்கு தலைமையேற்று நடத்தினார்.  கல்விசாலைகளில் தம்மை பிராம்மணர்கள் என கருதியவர்களால் பிராம்மணரல்லாத ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் அநீதிகள் இவற்றால் அவர் அபிராம்மண ஆசிரியர்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கினார்.  பெண் ஆலைத் தொழிலாளர்களுக்கு பேறுகால வசதிகளுக்காக போலே அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் முக்கியமானது ஆகும்.

1923 இல் மும்பை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது பாபா சாகேப் போலே அவர்களால் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் எல்லா தெருக்களும் எல்லா நீர்நிலைகளும் எல்லா பள்ளிகளும் எல்லா வசதிகளும் தலித்துகளுக்கு திறந்து விடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த தீர்மானமே ஒரு சாதனை என்றாலும் அந்த தீர்மானத்துடன் நின்றுவிடுகிறவரல்ல போலே.  baba_Sahebs1928 இல் அடுத்து ஒரு முக்கிய வலிமை இந்த தீர்மானத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை மதிக்காத நகராட்சிகள் ஊராட்சிகளுக்கு அனைத்து அரசு உதவிகளும் நிறுத்தப்படும் என்கிற விதிதான் அது. இதுவும் போலே அவர்களின் கைவண்ணமே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானம் தலித் போராளிகளால் ‘போலே தீர்மானம்’ என அழைக்கப்பட்டது. இதன் அமுலாக்கம் தலித் விடுதலை போர்களின் ஒரு முக்கிய குரலாக விளங்கியது. இதே காலகட்டங்களில் இந்து மகாசபையிலும் இணைந்து தீவிரமாக இயங்கினார் பாபா சாகேப் போலே அவர்கள். குறிப்பாக வரலாற்றுக் காரணங்களுக்காக அன்னிய மதங்களுக்கு வழி தவறி சென்ற நம் சமய சகோதரர்களை தாய்மதம் திருப்பும் சுத்தி இயக்கத்தில் பாபா சாகேப் போலே அவர்களின் பங்கு முக்கியமானது.  1938-1945 பிராந்திய இந்து மகாசபையின் தலைவர் பதவியில் அவர் இருந்தார். 1947 இல் இந்து  மகாசபை தொண்டர்களுடன் பாபா சாகேப் அம்பேத்கரை சந்தித்து இந்த தேசத்தின் தேசிய கொடியாக பரம பவித்திர பகவத் துவஜம் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை, தொழிலாளர் உரிமை, மகளிர் உரிமை ஆகியவற்றின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள், இருள் மிகுந்து சமுதாய தேக்கநிலை திகழ்ந்த காலகட்டத்தில் ஒளிவிளக்காக விளங்கியவர்கள் இந்துத்துவர்கள்.  பாபா சாகேப் சீதாராம் கேசவ போலே போன்ற ஒப்பற்ற சமுதாய சீர்திருத்த வாதிகளால் உருவாக்கப்பட்ட இந்த மண்ணின் விடுதலை இயக்கம் இந்துத்துவம். எனவே அடுத்த முறை உங்களிடம் ‘இந்துத்துவம் மேல்சாதி பார்ப்பனீய பெண்ணடிமை சித்தாந்தம்…’ என கூறும் வரலாற்று அறிவிலியிடம் கேளுங்கள் … பாபா சாகேப் போலேயைத் தெரியுமா என்று.

 ஒரு அறிவிப்பு 

இன்று ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய கூடுகையில் வெளியிடப்படுகிறது.

இடம்:  திருவான்மியூரில் நடைபெறும் இந்து சேவை ஆன்மிக கண்காட்சி. தமிழ்ஹிந்து.காம் ஸ்டால் எண்: E1

நேரம்: 5:30 மணி மாலை

எழுத்தாளர்கள்  திரு.ஜோ டி குரூஸ், திரு.பா.ராகவன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.எஸ்.ராமச்சந்திரன், தத்துவ பேராசிரியர் அறிவழகன், சமூக சேவகர்கள் திரு.கணபதி, திரு.மணிகண்டன்,  தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் ம.வெங்கடேசன், ஜடாயு, ஓகை நடராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

2 Replies to “இந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை”

  1. மதிப்பிற்குரிய அனவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு,

    //அடுத்த முறை உங்களிடம் ‘இந்துத்துவம் மேல்சாதி பார்ப்பனீய பெண்ணடிமை சித்தாந்தம்…’ என கூறும் வரலாற்று அறிவிலியிடம் கேளுங்கள் … பாபா சாகேப் போலேயைத் தெரியுமா என்று.//

    அருமை, அருமை! இதைவிட அழகாகச் சொல்ல முடியாது.

  2. திண்ணை இதழில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை திரு தரம்பால் அவர்களின் நூல் பற்றியது. வெள்ளையர்கள் காலத்துக்கு முன்னரே , அதாவது ஆங்கிலேய ஆட்சிக்கு முன்னரே , நம் தமிழகத்தில் நால் வருணத்தாரும் , பெண்கள் உட்பட ஒரே வகுப்பில் கல்விபயின்றனர் என்பதையும் , கல்வி உரிமை யாருக்கும் மறுக்கப்படவில்லை என்பதையும் அழகாக வெளிப்படுத்தும் இந்த கட்டுரையை நாம் முடிந்தவரை பலரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும்.

    https://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401011&edition_id=20040101&format=html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *