பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய அரசு இந்த ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. மக்கள் இந்த கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர்த்தும் பொழுது காங்கிரஸிடம் அதிருப்தியும் பாஜகவிடம் நம்பிக்கையும் கொண்டிருந்தனர். b_id_392218_narendra_modiஎனவே பட்ஜெட்டில் தமக்கு உகந்த அறிவிப்புகள் ஏராளமாக இருக்கும் என்கிற நம்பிக்கையும் கொண்டிருந்தனர். ஆனால் 2014 பட்ஜெட் வந்த போது ஒரு சராசரி நடுத்தர வர்க்க இந்தியனுக்கு அது ஆனந்தத்தை ஏற்படுத்தியது என சொல்லிவிட முடியாது. மோசமான பட்ஜெட் அல்லதான். ஆனால் மோதி மீது ஒரு நம்பிக்கை இருந்ததே, அவர் வந்தவுடன் எல்லாம் அசுரவேகத்தில் சரியாகிவிடும் மாயாஜாலம் போல சரியாகிவிடும் என ஒரு பிரமை இருந்ததே… அது ஆட்டம் கண்டது. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது மோதி ஏதோ தான் வந்தது எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சியின் கொடுமையில் மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பட்ஜெட் அந்த ஏக்கத்தை முற்றிலுமாக போக்க முடியவில்லை.

பட்ஜெட்டில் மக்களுக்கு வருமான வரிச்சலுகைகள் மிகச்சிறிய அளவில் உள்ளன. ஆனால் தேசத்தின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புகளுக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இந்த சூழலில் அன்னிய நேரடி முதலீட்டையும் இந்தியாவிலிருந்து கிடைக்கும் வருமான வரியையுமே நிதி ஆதாரமாக கொண்டு இயங்க வேண்டிய கட்டாயத்தில் மோதி அரசாங்கம் உள்ளது. இந்த நிதிகளை ஊழலில்லாமல் திறமையாக மக்கள் நலனுக்காக செயல்படுத்துவதுதான் மோதி அரசினால் இப்போது செய்ய முடிந்தது. இல்லையென்றால் மக்களை குஷிப்படுத்த வரிச்சுமைகளை budget1கணிசமாக குறைத்துவிட்டு ஒரேயடியாக அன்னிய நிதி முதலீட்டை நம்பி இயங்கலாம். அது அத்தனை உசிதமானது அல்ல. நேர்முக மற்றும் மறைமுக வரிகள் விதிக்கப்படுவதன் மூலம் நாட்டு மக்களின் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரச் சுமை ஏறிக் கொண்டுதானிருக்கும். மக்கள் மீது வரி விதிக்காமல் வேறு வழிகளிலும் நிதி ஆதாரத்தை பெருக்காமலும் அந்நிய முதலீடுகளை மட்டுமே சார்ந்திருப்பது சுதேசி கோட்பாட்டுக்கு எதிரானது மட்டுமல்ல தொலை நோக்கில் நாட்டுக்கு அபாயம் விளைவிக்கும் ஒரு விஷயமும் ஆகும்.

நாட்டை முன்னேற்ற உள்கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும். உள்கட்டமைப்பை சீரமைக்க நிதி வேண்டும். அரசுக்கான தேசிய நிதி வருமானத்தை பெருக்க உள்கட்டமைப்புகள் நன்றாக இருக்க வேண்டும். இது ஒரு விடாச்சுழல். இந்த சுழலுக்குள் சிக்காமல் தப்ப வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஆக முக்கியமான விஷயம் நம் சொந்த நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வதுதான். எப்படி செய்வது இதை? என்ன நிதி ஆதாரம் உள்ளது நம்மிடம்? அப்படி ஒரு நிதி ஆதாரம் இருக்கும் பட்சத்தில் தற்போது வரிவிதிப்பையும் அந்நிய முதலீட்டையும் பட்ஜெட்டின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்துவதென்பது கையில் வெண்ணெயை வைத்து கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக அல்லவா ஆகிவிடும்! அப்படி ஒரு நிதி ஆதாரம் உள்ளதா என்றால் கண்டிப்பாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் கருப்பு பணம். கருப்பு பணமும் சட்ட ரீதியில் ஈட்டப்பட்டதென கணக்கு சொல்லமுடியாத பணமும் ஏராளமாக ஒரு சிலரால் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இவையே அந்த நிதி ஆதாரங்கள்.

சரி  இந்த பணத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது எவ்வாறு? ஆனால் ஒன்று அப்படி மட்டும் கொண்டு வர முடியும் என்றால் பிறகு பணப்பற்றாக்குறைக்கே இடமிருக்காது என்பது மட்டும் நிச்சயமான ஒன்று. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு கருப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் மீட்பதற்காக Infographic_tamilசிறப்பு புல்னாய்வுக் குழுவை (SIT) நியமித்துள்ளது. ஆனால் இது செயல்பட்டு கருப்புப் பணத்தை கொண்டு வருவதென்பது காலதாமதமாக்கு வழிவகுக்கும். ஏற்கனவே அயல்நாட்டு விதிமுறைகளுடன் நாம் முட்டி மோதி அந்த அரசுகளின் ஒத்துழைப்பை பலவிதங்களில் பெற்று இதை செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு செயல்பாட்டிலும் பலவித தடங்கல்கள் ஏற்படும். வளரும் நாடுகளின் கருப்பு பண பதுக்கலையே தன் வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டிருக்கும் சுவிஸ் வங்கிகள் போன்ற அமைப்புகள் இதில் எத்தனை முட்டுக்கட்டைகளை போடமுடியுமோ அத்தனை முட்டுக்கட்டைகளை போடும் என்பதை சொல்லவேண்டியதில்லை. எனவே அயல்நாடுகளில் பதுக்கி வைக்கப்படும் பாரத கருப்பு பணத்தை மீட்பதென்பதே கேள்விக்குறியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனவே கருப்புப் பணம் மற்றும் ஊழல் பணம் ஆகியவற்றை மீட்க அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு வழி இருக்குமானால் அதன் மூலம் பதுக்கல் பணத்தை மீட்டால் நிதி நிலை நாட்டையே ஒரு வல்லரசாகிவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய ஒரு தீர்வை -அதற்கான வழிமுறையை சற்றே சிந்திக்கலாம்.

நேர்வழியோ நேர்மையற்ற வழியோ எவ்வழியில் பொருள் ஈட்டப்பட்டாலும் தமது பொருள் விரயமாவதை அல்லது தொலைந்து போவதையோ ஒருவரும் விரும்புவதில்லை. கருப்புப்பணமும் லஞ்சப்பணமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. எனவே அரசின் சட்டத்திட்டங்க மூலம் அவற்றை பறிக்க முயன்றால் பதுக்கல்காரர்கள் தங்கள் பணபலத்தால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலம் தப்பித்துவிடுவார்கள். அரசின் பணமும் விரயமாகும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகி அதன் அறிவுறுத்தலின் பேரில் SIT அமைப்பை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை அதிகாரபூர்வமாக கலைத்துவிட வேண்டும். ஆனால் அதிகாரபூர்வமற்ற விதத்தில் கருப்பு பணம் குறித்த முழுமையான தரவுகளை அதிவேகமாக திரட்டலாம். அதே காலகட்டத்தில் Black_money1ஒரு சட்டம் இயற்றப்படலாம். அதன் மூலம் பணப்பதுக்கல்காரர்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பை – safe passage- அளிக்கலாம். ஒரு அவசர இடைக்கால சட்டம் மூலம் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்ளாக கருப்பு பணத்தையும் ஊழல் பணத்தையும் வைப்பு நிதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அரசில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க வேண்டும். அப்படி முதலீடு செய்யப்படுகிற பணம் அனைத்தும் வெள்ளைப்பணம் என கருதப்படும். அத்தகைய நிதியை வளர்ச்சி திட்டங்களில் அரசு முதலீடு செய்துவிட்டு அதில் கிடைக்கும் வருவாயில் வட்டியும் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு செய்தால் அந்த பணத்தின் ‘உரிமையாளர்’களுக்கு தங்கள் பணத்தின் நிலை குறித்தும் கவலை இராது. அதே நேரத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு உடனடியாக நிதி கிடைப்பதுடன் பதுக்கல்காரர்களுக்கு தேச வளர்ச்சியில் தாமும் பங்கு பெற்றதாக ஒரு நல்நினைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மட்டுமே இது செயல்படுத்தப்படும் என அறிவித்து அந்த காலக்கெடு முடிந்தவுடன் அதிகாரபூர்வமற்ற விதத்தில் அதுவரை தரவுகளை சேகரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக முடுக்கிவிடப்பட வேண்டும். அதன் நடவடிக்கையில் பிடிபடுவோருக்கு கடுமையான குடி உரிமை பறிப்பு போன்ற தண்டனைகள் சிறப்பு விரைவு நீதி மன்றங்கள் மூலம் கொடுக்கப்பட வேண்டும். மீண்டும் மறு வருடம் பட்ஜெட் முடிந்தவுடன் இதே சுழலை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த ஆலோசனையை அரசு பரிசீலிக்குமா?

 

 

4 Replies to “பட்ஜெட் மெய்ப்பட பதுக்கல் பணம் வேண்டும்”

  1. இந்த யோசனை நெருக்கடி நிலை இருந்த 1975-76 ல் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் எவ்வளவு சதம் அரசு வெற்றி பெற்றது என்று தெரியவில்லை. மறுபடியும் முயற்சிக்கலாம். தவறில்லை.

  2. அருமையான யோசனை. சிம்பிள் அண்ணே, ஆனா பவர்புல்ல்னே.

  3. ஆமாம் திரு மணி அவர்களே ரூ 1000 கோடி எதிர்பார்த்தார்கள் ஆnaal அதற்கு குறைவாகவே கிடைத்தது அதற்கு பறேர் பாண்ட்ஸ் என்று பெயர் இட்டார்கள்

  4. அரசின் முயற்சிக்கு முட்டுகட்டை போடுவதற்கு அயல்நாடுகள் தேவையில்லை, நம் நாட்டின் எதிர்கட்சிகளே போதும். அந்நிய நாட்டின் அங்கீகாரத்துடன் கூடிய பதுக்கல்காரர்களின் பெயர்கள்தான் நீதிமன்றங்களில் செல்லுபடியாகும். ஸ்னோடன் போன்றவர்களின் பேருதவியும் பயனற்றுப் போகும். பதுக்கல் பணம் கொண்டுவரப்பட்டால் அதற்கான வரியைச் செலுத்தாமல் வைப்புநிதியில் வைக்க வழியில்லை. வரிச்சலுகை நேர்மையானவர்களை கிளர்ச்சி செய்யத் தூண்டும். அப்படியே பணம் வெளிநாட்டிலிருந்து வந்தாலும், அனைத்தும் கொண்டுவரப்படும் என்றோ, நாட்டின் உள்கட்டமைப்பிற்குத் தேவையானது வருமென்றொ உத்தரவாதம் இல்லை. இனி எதிர்காலத்தில் இப்படி திருட்டுப் பணம் பதுக்கவழியில்லாமல் போக வழிவகுக்கத் தவறினால், பன்முறை இம்முயற்சியைத் தொடருதல் நல்லவழியல்ல.. மொத்தத்தில் திருடர்களாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. கடுமையான சட்டம் மட்டும் இருந்து பலனில்லை. அதை நடைமுறைப்படுத்தும் அரசு இயந்திரம் தேவை. கூறப்பட்டக் கருத்துக்கள் எதிர்மறையானதாகத் தோன்றினாலும், இக்கருத்துகளையும் சீர்த்தூக்கி தக்க சட்டவழிவகை செய்யவேண்டும் என்பதே நோக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *