இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

September 3, 2014
By

லோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு உள்பட்ட 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளன. இத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றாலும், அக்கட்சி 3 மாதங்களுக்கு முன் பெற்ற மக்கள் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் சிறு ஏமாற்றம் ஏற்படவே செய்கிறது.

சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் ஆக. 25-ல் வெளியாகின.

இதில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பாஜக- அகாலிதளம்- லோக்சக்தி கூட்டணி 8 தொகுதிகளிலும், பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதாதளம்- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி 10 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆயினும், இத் தேர்தல் முடிவுகளை மிகச் சாதாரணமாக, ஒற்றைப்பார்வை அடிப்படையில் மதிப்பிட முடியாது. இத்தேர்தல் முடிவுகளில் கட்சிகளின் செல்வாக்கு மட்டுமின்றி, கூட்டணி பலம், மாநில ஆளும் கட்சியின் அதிகார பலம் ஆகியவையும் முக்கிய பங்கு வகித்துள்ளன. மாநிலவாரியாக இத்தேர்தல் முடிவுகளைப் பரிசீலித்தால் தான் உண்மையான நிலவரம் தெரியவரும்.

பிகாரில் புதிய கூட்டணி:

இதில் பிகார் மாநிலத்தில் மட்டுமே 10 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. முந்தைய தேர்தலில் (2010) இத்தொகுதிகளில் பாஜக- 6, ஐக்கிய ஜனதாதளம்- 1, ஆர்.ஜே.டி- 3 இடங்களில் வென்றிருந்தன. அப்போது பாஜக- ஐ.ஜ.தளம் கூட்டணி, காங்கிரஸ்- லோக்சக்தி கூட்டணியையும், ஆர்.ஜே.டி கட்சியையும் வென்று ஆட்சியைப் பிடித்தது.

Lalu and Nitish 2

தேர்தல் வெற்றிக்காக
கட்டியணைக்கும் சந்தர்ப்பவாதிகள்

லோக்சபா தேர்தலின்போது ஐ.ஜ.தளத்துடன் கூட்டணியை முறித்து லோக்சக்தியுடன் கைகோர்த்த பாஜக பிகாரின் 40 தொகுதிகளில் 31-ல் வென்றது. அப்போது எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ், ஆர்.ஜே.டி கட்சிகள், பாஜகவின் செல்வாக்கிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அண்மையில் கூட்டணி சேர்ந்தன. கடந்த பல தேர்தல்களில் நிலவிய பகையை மறந்து, பாஜகவின் வளர்ச்சியால் அஞ்சி ஒன்றுசேர்ந்த இக்கூட்டணி அதற்கான பயனை அறுவடை செய்துள்ளது.

இடைத்தேர்தலில், ஆர்.ஜே.டி- 3, காங்கிரஸ்- 2, ஐ.ஜ.தளம்-1 என இக்கூட்டணி 6 தொகுதிகளில் வென்றது. பாஜக 4 இடங்களில் வென்றது. இந்த முடிவுக்கு, பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் அதிகார துஷ்பிரயோகம், பாஜகவுக்கு எதிரான கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வலிமை ஆகியவையே காரணம். இருந்தபோதும் 4 தொகுதிகளில் வென்று இப்போதும் தனித்த செல்வாக்கில் பாஜக தான் முன்னணியில் உள்ளது. இங்கு பஸ்வானின் லோக்சக்தி கட்சி இடைத்தேர்தலில் தேறவில்லை.

ம.பி., பஞ்சாபில் மாற்றமில்லை:

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் சென்ற சட்டசபை தேர்தலில் (2013) காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் பாஜக ஒரு தொகுதியிலும் வென்றிருந்தன. இடைத் தேர்தலுக்குப் பிறகு, இம்முடிவு தலைகீழாக மாறியுள்ளது.  தற்போது பாஜக- 2, காங்கிரஸ்- 1 தொகுதிகளில் வென்றுள்ளன. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகானின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை என்பதை இத்தேர்தல் காட்டியுள்ளது.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலிதளம் ஆளும் பஞ்சாபில் சென்ற தேர்தலில் (2012) காங்கிரஸ் வென்ற இரு தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடந்தது. இதில் அகாலிதளம்-1, காங்கிரஸ்- 1 தொகுதிகளில் வென்றுள்ளன. மாநிலத்தில் நிலவும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையையும் மீறி ஒரு தொகுதியில் அகாலிதளம் வென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

கர்நாடகாவில் சரிவு:

Siddaramaiah

பாஜகவின் பலவீனம் =
சித்தராமையாவுக்கு பலம்

காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ்- 2, பாஜக- 1 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. இதில் முந்தைய தேர்தலில் காங்கிரஸ்- 1, பாஜக- 1, பிஎஸ்ஆர்.காங்கிரஸ்- 1 கட்சிகள் வென்றிருந்தன. இவற்றில் பிஎஸ்ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஸ்ரீராமுலு கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவுடன் ஐக்கியமானதால் அவர் பெல்லாரி லோக்சபா தொகுதியில் வென்றார். அவர் முன்னர் வென்ற சட்டசபை தொகுதியான பெல்லாரி சட்டசபை தொகுதியில் இப்போது காங்கிரஸ் வென்றுவிட்ட்து. இதுதான் உண்மையில் பாஜகவுக்கு பெரும் பாதிப்பாகும்.

எனினும் எடியூரப்பா வென்ற ஷிகாரிபுரா சட்டசபை தொகுதியில் அவரது மகன் ராகவேந்திரா வென்றிருக்கிறார். மற்றொரு தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்தது, அக்கட்சிக்கே சென்றுள்ளது. பாஜகவின் உள்கட்சிப்பூசலால் காங்கிரஸ் வசம் சென்ற நிலையிலேயே தற்போதும் இம்மாநிலம் உள்ளது.

ஒட்டுமொத்த மதிப்பீடு:

இந்த இடைத்தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் கட்சிகள் வென்ற தொகுதிகளின் நிலவரத்தை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்தால், மிகச் சரியான மதிப்பீடு கிடைக்கும்.

முந்தைய தேர்தலில் பாஜக- 7, லோக்சக்தி- 1, அகாலிதளம்- 0, பிஎஸ்ஆர்.காங்கிரஸ்-1 என 9 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்றிருந்தன. மாறாக, காங்கிரஸ்- 5, ஆர்.ஜே.டி-3, ஐ.ஜ.தளம்- 1 என 9 தொகுதிகளில் காங்கிரஸின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள் வென்றிருந்தன.

இடைத்தேர்தலுக்குப் பிறகு இதில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் 10 தொகுதிகளிலும் (காங்கிரஸ்- 5,  ஆர்.ஜே.டி-3, ஐ.ஜ.தளம்- 2) பாஜக கூட்டணிக் கட்சிகள் 8 தொகுதிகளிலும் (பாஜக- 7, அகாலிதளம்- 1) வென்றுள்ளன. ஒட்டுமொத்தத்தில் பாஜகவுக்கு ஓரிடம் இழப்பு. ஆயினும், தனிப்பட்ட வகையில் இப்போதும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது.

Sivaraj Singh Chouhan

இன்னொரு மோடியாக உருவாகும்
சிவராஜ் சிங் சௌகான்

ஆக, இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் தோல்வியல்ல என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆயினும், ஊடகங்கள் விமர்சிப்பது போலல்லாவிடிலும், பாஜகவுக்கு சிறு எச்சரிக்கையாகவே இத்தேர்தல் முடிவுகளைக் கொள்ளலாம்.

முதலாவதாக, இத்தேர்தல் சட்டசபைக்கு நடைபெற்றது. மக்கள் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தெளிவான வேறுபாடுகளை உணர்ந்துள்ளனர். பெரும்பாலும் மாநிலத்தில் ஆளும் கட்சியே இடைத்தேர்தலில் வெல்வது அதனால் தான். ஆனாலும்கூட, பிகார், கர்நாடகாவில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் வென்றுள்ளது.

ஆட்சி மீதான அதிருப்தியை மீறி பிகாரில் காங்கிரஸ் கூட்டணி வெல்ல அக்கட்சியின் கூட்டணிக் கணக்குகள் சரிவர நிறைவேறியதே காரணம். இந்தக் கூட்டணியை அடுத்துவரும் தேர்தலில் பிகாரில் பாஜக தனித்து வெல்ல வேண்டுமானால், இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது புலப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சித்தராமையாவுக்கும், ம.பியில் சிவராஜ் சிங் சௌகானுக்கும் மக்களிடையே செல்வாக்கு குறையவில்லை என்பதையும் இடைத்தேர்தல் காட்டியுள்ளது. பஞ்சாபில் மக்களின் அதிருப்தியை மீறி, காங்கிரஸ் வசமிருந்து ஒரு தொகுதியை அகாலிதளம் கைப்பற்றியுள்ளது. இதனால் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நிம்மதி அடையலாம்.

மோடி அலை வீசவில்லையா?

லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் வீசிய மோடி அலை இப்போது எங்கு போனது என்று சில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. நடந்தது மாநில சட்டசபை தேர்தல் என்பதால் தான் மோடியின் செல்வாக்கு முழுமையாகப் பயனளிக்கவில்லை என்பதே இதற்கான பதில். இப்போது லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் 315+ தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் வாய்ப்பு இருப்பதாக  ‘இந்தியா டுடே’ வார இதழ் கணிப்பு வெளியிட்டுள்ளதை இங்கு நினைவுகூரலாம்.

Amitshah

பழையன கழிதலும் புதியன புகுதலும்….

தவிர, மோடி மீதான அதீத எதிர்பார்ப்பும் கூட மக்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம் என்பதை பாஜக கருத்தில் கொள்ள வேண்டும். மோடி பிரதமரான பிறகு பல ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், அவரிடம் நாடு இன்னமும் வேகத்தை எதிர்பார்க்கிறது.

குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் முந்தைய அரசின் செயல்முறை போலவே தற்போதும் சில நடைமுறைகள் தொடர்வதை விரும்பவில்லை. உதாரணமாக, ரயில் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகிய விவகாரங்களில் முந்தைய அரசு மீது பழிபோட்டு மோடி அரசு தப்பிவிட முடியாது.

ஊழல் விவகாரங்களில் மோடி அரசு காட்டும் கண்டிப்பு மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் தென்படும் மாற்றமும், அரசு அதிகாரிகளை கையாள்வதில் காட்டும் உறுதியும், பாராட்டிற்குரியதாகவே உள்ளன. எனினும், கருப்புப்பண மீட்பு நடவடிக்கை, இலங்கைத் தமிழர் விவகாரம், ராமர் கோவில் உள்ளிட்ட பிரச்னைகளில் இந்த அரசிடம் தெளிவான, உறுதியான செயல்பாட்டை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Modi with children

மக்கள் தலைவராக மலரும் மோடி

தாங்கள் கொண்டுவந்த மக்கள்நலத் திட்டங்களையே பாஜக அரசு தொடர்வதாக காங்கிரஸ் தலைவி சோனியாவும், தங்கள் அரசின் பொருளாதாரக் கொள்கையையே மோடி அரசு தொடர்வதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கூறி வருகின்றனர். இதற்கு சரியான பதிலை பாஜக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் உணரும் வண்ணம் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க பாஜக அரசு எடுத்த முடிவை, பாஜகவின் சகோதர அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கமும் எதிர்க்கிறது.  பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது வரவேற்கப்படும் அதேநேரத்தில், காப்பீட்டுத் துறையில் இதற்கு எழுந்துள்ள எதிர்ப்பை அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவை அனைத்தையும், விட, ஆட்சிக்கு வந்தபின், பாஜகவின் கட்சிச் செயல்பாடுகள் சற்று முடங்கி இருப்பதாகவே காணப்படுகிறது. கட்சியின் பலமே ஆட்சிக்கு வலுச் சேர்க்கும். இதனை உணர்ந்து தற்போதைய தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடியுடன் இணைந்து தக்க திட்டங்களைத் தீட்டுவது காலத்தின் கட்டாயம்.

விரைவில் நடைபெற உள்ள 4 மாநில சட்டசபை தேர்தல்களில் (ஹரியானா, மகாராஷ்டிரா,  ஜார்கண்ட்,  ஜம்மு காஷ்மீர்)  எதிர்க்கட்சிகள் வசமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவது பாஜகவுக்கு முன்னுள்ள கடும் சோதனை. வரவுள்ள நாட்களில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அணிதிரளும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும், தங்கள் படைகளை வலுப்படுத்துவது அவசியம்.

 

***

பா.ஜ.கட்சிக்குள் அதிவேக மாற்றங்கள்:

பாஜகவின் ஆட்சிமன்றக்குழு (BJP Parliamentary Board) அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் நாடாளுமன்ற பாஜகவிலிருந்து முதுமையைக் காரணம் காட்டி வாஜ்பாய், அத்வானி, ஜோஷி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட வழிகாட்டும் குழுவில் (மார்க்க தர்ஷக் குழு) சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்போதைய பாஜக அணி 70 வயதுக்கு மேற்பட்டோரைத் தவிர்த்து, இளமைத் துடிப்புடன் அணிவகுத்துள்ளது. பாஜகவை இவ்வளவு காலம் வளர்த்த மும்மூர்த்திகளை மோடி ஒதுக்கிவிட்டதாக விமர்சனங்கள் வந்துள்ளன. அவர்கள், பாஜகவின் உள்கட்சி ஜனநாயகத்தைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள்.

பாஜகவின் உள்கட்சி ஜனநாயகம் காரணமாகவே, மோடி போன்ற ஒருவர் நாட்டின் உயர்பதவிக்கு படிப்படியாக முன்னேற முடிந்தது. இந்த நிலையை, பாஜக தவிர்த்த வேறெந்தக் கட்சியிலும் காண முடியாது.  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, தேசிய மாநாட்டுக் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற பல கட்சிகளில் வாரிசுகள் மட்டுமே தலைமையை அடைய முடிகிறது. சரத்பவார், லாலு யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், ஜெயலலிதா போன்ற தனிப்பட்ட ஆளுமையுடைய தலைவர்களின் கட்சிகள், அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னவாகும் என்றே சொல்ல முடியாது.

பாஜக: இளையவர்களுக்கு பெரியவர்கள் வழிவிடுவது இயல்பான காட்சி

இளையவர்களுக்கு பெரியவர்கள் வழிவிடுவது
பாஜகவில் இயல்பான காட்சி

ஆனால் பாஜகவோ, மூன்று தலைமுறைகள் மாறியும் கூட, உழைப்பவர்களை உயர்த்தும் கட்சியாக உள்ளது. இளம் தலைமுறையினர் கட்சியை வழிநடத்தும் நிலைக்கு உயர்வதையும், வாரிசு அடிப்படையோ, தனித்த செல்வாக்கோ இல்லாமலும் கூட கட்சியின் செல்வாக்கான பதவிகளைப் பெறுவதையும் பாஜகவில் மட்டுமே காண முடியும்.

வாஜ்பாய், அத்வானி, ஜோஷி மூவரும் பாஜகவின் வழிகட்டும் குழுவுக்கு மாற்றப்பட்டு இரு நாட்கள் கழித்து, தமிழகத்தில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா 7-வது முறையாக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பாஜகவை இவ்விஷயத்தில் விமர்சிப்பவர்களுக்கு நமது அரசியல் களமே சத்தமின்றி சரியான பதிலை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால், இதனை நமது ஊடகங்கள் ஏனோ கண்டுகொள்ளக் காணோம்.

பாஜகவின் தேசிய, மாநில அளவிலான நிர்வாகிகளின் மாற்றங்கள் முற்றுப் பெறும்போது தான், புதிய வேகத்துடன் கூடிய செயல்பாடுகள் அக்கட்சிக்கு அமையும். அரசின் ஆக்கப்பூர்வமான பணிகளை மக்களிடையே கொண்டுசேர்ப்பதும், அரசுக்கு எதிரான கருத்தாக்கங்களை பிரசாரத்தில் எதிர்கொள்வதும் பாஜக முன்னுள்ள முக்கிய பணிகள். அதற்கு கட்சி விரைவில் தயாராக வேண்டும்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , ,

 

11 மறுமொழிகள் இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

 1. Geetha Sambasivam on September 3, 2014 at 9:28 am

  நல்லதொரு அலசல், கட்சியின் மாற்றங்களும் தேவையானவையே. சரியான நேரத்தில் கொண்டுவரப் பட்டவை. :))))

 2. NAGARAJAN on September 4, 2014 at 6:17 pm

  பீகாரில் வென்று விடலாம் என்ற மிதப்பில் – மமதையில் பாஜக இருந்தது. வாங்கிக் கட்டிகொண்டது.

  RJD + JDU + காங்கிரஸ் கூட்டணி கண்டிப்பாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடரும்.

  பாஜகவிற்கு மிகப் பெரிய சவால் உள்ளது. மமதையை விட்டு விட்டு , மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற திமிறையும் விட்டு விட்டு, கடுமையாக உழைக்க வேண்டும். முதல்வர் வேட்பாளரை இப்போதே அறிவித்து (துணை முதல்வராக இருந்த மோதி) பிரசாரத்தை துவக்க வேண்டும்.

 3. kmv on September 6, 2014 at 5:36 pm

  it will be toughtime for BJP in future elections.

 4. ra.muthugopal on September 6, 2014 at 8:17 pm

  நன்றாகவே எழுதி உள்ளார். நன்கு புரியும்படி உள்ளது. வாழ்த்துக்கள். முன்பு இருந்த ஆட்சி செய்த ப்ரோஜனமில்லாத காரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதை சரிசெய்வதற்கே எத்தனை நாட்கள் ஆகும் என்பது தெரியாத நிலையில் மோடி அவர்களை குறைkooruvadhu niyayamilladha seyal.

 5. R NAGARAJAN on September 8, 2014 at 7:27 pm

  தில்லி சட்ட மன்றத்தில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை. டிசம்பர் மாதத்தில், பெரும்பான்மை இல்லாதலால் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று கூறிய பாஜக, இன்று ஆட்சி அமைக்க துடிப்பது ஏன்?

  குதிரைப் பேரம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.

  காங்கிரசிற்கு ஒரு வார்த்தை. நம்பிக்கையுடன் இருங்கள். பாஜகவே உங்களை ஆட்சியில் அமர்த்தி விடும்.

 6. karan on September 12, 2014 at 11:00 pm

  நம் ஊடகங்களை விட அண்டை நாட்டு நம் ஊடகங்களை விட அண்டை நாட்டு ஊடகங்கள் தேவலாம். http://youtu.be/vl9er5-8tpo தேவலாம். http://youtu.be/vl9er5-8tpo

 7. R NAGARAJAN on September 16, 2014 at 11:54 am

  இன்று வெளியான இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு மிகப் பெரிய பின்னடைவு. உபியில் மிகப் பெரிய சரிவு. குஜராத்திலும் அப்படியே.

  இனி, மகாராஷ்டிரா தேர்தலில், சிவசேனா முறைத்துக் கொள்ளும். சீட்டு பேரம் நடத்த முடியாது.

  சென்ற மாதம் மற்றும் இன்று வெளியான முடிவுகள், யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ – ஒருவர் நிச்சயமாக மிகவும் சந்தோஷப் பட்டிருப்பார். அவர் வேறு யாரும் அல்ல – L K அத்வானிதான்.

  கட்டுரையாசிரியர் இன்று வெளியான முடிவுகள் பற்றி என்ன சமாதானம் சொல்வாரோ?

 8. sanjay on September 17, 2014 at 9:28 am

  The BJP has won only 10 of the 23 seats it had in UP, Gujarat & Rajasthan & a few other states, which is definitely a setback.

  It needs to do a lot of introspection.

  To say that L.K Advani woulbe happy is not correct. He is a party leader of repute & has worked hard to make the party what it is today.

 9. paandiyan on September 17, 2014 at 12:27 pm

  தமிழ்நாட்டில் உள்ஆட்சி தேர்தலில் எப்படியும் BJP தோற்ருவிடும். அதற்க்கும் மோடி அலை இல்லை என்று பெருமை பட்டுக்கொள்ளலாம் நமது சிறுபான்மை சிங்கங்கள், மதசார்பர்ற வீரர்கள். கருணாநிதிய உள்ளாட்சி முடிவு மோடிக்கு கிடைத்த தோல்வி என்று அறிக்கை விடுத்தாலும் (எப்படி ஆம் ஆத்மி இப்பொழுது பெருமை பாட்டுக்கொள்லுகின்றதோ) அதையும் நமது சிறுபான்மை சிங்கங்கள், மதசார்பர்ற வீரர்கள் புகழ்ந்து தள்ளுவார்கள் .

 10. R NAGARAJAN on September 18, 2014 at 6:03 pm

  நாடாளுமன்றத் தேர்தலுக்கு மோதியும் அமித் ஷாவும் (UP mattum) காரணம் என்றால், ஆகஸ்ட், செப்டம்பர் இடைத் தேர்தல் தோல்விகளுக்கு யார் காரணம் ?

  இந்த இடைத் தேர்களுக்கு முக்கிய காரணம் : UP, Gujarat மற்றும் ராஜஸ்தான் மாநில MLA ஆக இருந்தவர்கள் – MP ஆனதினால் ஏற்பட்ட
  வெற்றிடத்திற்கான தேர்தல்களே.

  அதாவது – MLA ஆக இருந்தவர்களால், மீண்டும் மற்ற வேட்பாளர்களை வெல்ல வைக்க முடியவில்லை. மக்கள் செல்வாக்கை இழந்ததினால், இடைத் தேர்ததில், மக்கள் ஆப்பு வைத்து விட்டார்கள்.

  L K அத்வானியின் பங்களிப்பு இல்லாமால், BJP வளர்ந்தே இருக்க முடியாது. யாரும் மறுக்க முடியாது.

  தற்போதைய நிலையில் – L K அத்வானி அவர்களின் மன நிலை எவ்வாறு இருக்கும் என்று மட்டுமே கருத்து தெரிவித்திருந்தேன்.

  கறிவேப்பிலை மாதிரி எல் கே அத்வானியை தூக்கிப் போட்டு விட்டார்கள்.

 11. venkates on September 19, 2014 at 11:45 am

  bjp தோல்விக்கு மமதை ,மூதோர் சொல் கேளாமை ,காங்கிரஸ் மறுமலர்ச்சி ,என்றெல்லாம் ஈர வெங்காய விற்பனை தொடங்கி விட்டது .தோல்விக்கு முழு காரணம்பாஜக வின் வெட்டி பெருமைதான் .25 தொகுதிகளும் பாஜகவின் வீண் சாகசத்தால் காலியானது.20 எம் எல்எ கலீல் 11 பேரை (உ பி )எம் பி களாகி விட்டு ,மீண்டும் மக்களை வாக்களிக்க கூப்பிட்டால் அவர்களுக்கு வேலை இல்லையா? 5 வருடங்களுக்கு எம்எல்எ பதவிக்கு வாக்களித்து பின்னர் 4 பேரை எம் பி(ராஜஸ்தான் ) ஆக்கினால் ,மீண்டு ,மீண்டும் அவர்களை வாக்குசாவடிக்கு இழுத்து வந்தால் விதி வக்கிரமாகி ,சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டார்கள் .உள் தா (ழ்)பா ளிட்டு ஒளிந்து கிடந்தவர்களெல்லாம் ஊளை வசனம் பேசுகிறார்கள்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*