முகப்பு » ஆன்மிகம், நிகழ்வுகள், விவாதம்

சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 2


மூலம்: ராஜிவ் மல்ஹோத்ரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு

தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண்

முந்தைய பகுதி

தொடர்ச்சி…

சுவாமி நித்யானந்தருக்கான நெருக்கடியைப் பற்றி ஆராய நான் மேற்கொண்ட ஆய்வுமுறையை இப்போது விளக்குகிறேன். அதற்குப் பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகும். எனது நிலைப்பாட்டினை கீழ்கண்ட அளவுகோல்களின் அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டிருக்கின்றேன்.

1. ஹிந்து மதத்தின் மீதான இந்த நெருக்கடியின் தாக்கம்

2. எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு இதனால் விளைய உள்ளப் பயன்கள் மற்றும் ஊறுகளின் ஒப்பீடு

3. வழக்கின் சட்டரீதியான பலம்

4. இந்த விவகாரத்தில் தங்களுக்கே இறுதி வெற்றி என்று ஊடகங்கள் மிதப்பு கொள்ள முடியுமா என்ற கேள்வி.

இவை ஒவ்வொன்றையும் விளக்க முயல்கின்றேன்.

1. ஹிந்துமதத்தின் மீதான இதன் தாக்கம்:

ஹிந்து விரோதிகள் திட்டமிட்டு சதி செய்து ஹிந்துமதத்தின் உதாரண புருஷர், சின்னம், கிரியை(சடங்கு), விழா, குரு, சித்தாந்தம் ஆகியவற்றில் எதையேனும் வீழ்த்தும் ஒவ்வொரு சமயத்திலும் பெரும் நாசம் விளைகிறது என்பதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். இடதுசாரிகள் உள்ளிட்ட மாற்று மதத்தினர் தமக்குள் சிக்கல்கள் வருகின்ற போது அடுத்தவர்கள் உள்ளே நுழைந்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிக்காமல் தாமே தமக்குள்ளே சிக்கல்களை தீர்த்துகொள்கின்றனர். ஹிந்துக்களும் இந்தக்கலையை விரைந்து கற்றுக்கொள்ளவேண்டும். இந்த ஒரே அளவுகோலை மட்டுமே கொண்டு கூட நான் சுவாமி நித்யானந்தரை ஆதரிப்பேன். அவரது எதிரிகள் எல்லோரும் ஹிந்துவிரோத பின்னணியைப் பின்புலத்தினை கொண்டவர்கள். ஆகவே இங்கே ஹிந்துக்கள் தமது ஒற்றுமை செய்தியை உறுதியாக சொல்லவேண்டி இருக்கிறது.

nithyananda_doing_homa_arati

2. எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு விளையும் பயன்கள் மற்றும் ஊறுகளின் ஒப்பீடு:

சுவாமி நித்யானந்தரின் போதனைகளால் பயன்பெற்ற பலரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவரது சீடர்களாக இல்லாதவர்களுக்கு அவரது போதனைகளை பற்றி கருத்து சொல்வதற்கு உரிமை இருந்தாலும் கூட அவற்றை மதிப்பீடு செய்வதற்கு தகுதியோ அருகதையோ கிடையாது. ஏன் என்றால் நம்முடைய ஹிந்து பாரம்பரியமே அனுபவத்தையே (அனுபூதி) சிரமேற்கொண்டு முக்கியம் என்கிறது. சுவாமியால் பயனடைந்தவர்களை இந்த விமர்சகர்கள் ஏமாற்றிவிட முடியாது. தங்கள் பக்கம் இழுத்துவிட முடியாது. இறுதியான ஆதாரம் அவரது ஆன்மிக முறைகளை, நுட்பங்களைப் பயன்படுத்திப் பார்த்தவர்களின் உள்ளார்ந்த கருத்துக்களாகத் தான் இருக்க முடியும். பயன்களை பாதகங்களோடு அளவிடுவது ஒப்பிடுவது அவசியம்தான். ஆனால் இன்றைக்கு ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டுமே நீதிமன்றத்தில் மிச்சம் இருக்கிறது. அதுகூட நம்பத் தகுந்ததாக இல்லை என்பது அடுத்து விளக்கப் படுகிறது. எனவே சுவாமி நித்யானந்தரால் தமது சேவையின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு நற்பயன்களை தரமுடியும். அவர் தீங்கு விளைவித்தார் என்ற வாதம் நிரூபிக்கப்படாமல் தவிடுபொடியாகி விட்டது. அவரிடம் பயன்பெற்ற ஏராளமான மக்கள் அவற்றை சொல்லத்தான் செய்கிறார்கள். ஆனால் ஊடகங்கள் அவர்களது குரலை வெளியிட மறுத்து வருகின்றன. ஒற்றைப் புகாருக்கு மட்டும் ஊடகத்தின் வலுவான ஆதரவு கிடைத்துக்கொண்டிருக்கிறது. இது அபத்தமோ அபத்தம்.

3. வழக்கின் சட்டரீதியான பலம்:

திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தர் பாலுறவு கொண்டதை காட்டுவதாக சொல்லப்பட்ட வீடியோவை நூறு சதவீதம் அடிப்படையாகக் கொண்டு 2010இல் சொல்லப்பட்ட புகாரே நித்யானந்தர் மீதான முதல் தாக்குதலாகும். இந்த வீடியோ ஆயிரக்கணக்கான முறை மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்குவதற்காகவும் வழக்கு பதிவு செய்வதற்காக காவல்துறையின் மீது அழுத்தம் கொடுப்பதற்காகவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் பட்டது. ஆனால் இந்த வழக்கு உடைந்துபோனது. இந்த வீடியோ உருமாற்றம் செய்யப்பட்டது என்று அமெரிக்காவில் உள்ள தடயவியல் ஆய்வகங்கள் அறிவித்துவிட்டன.

இன்றும் ரஞ்சிதா நித்யானந்தரின் ஆசிரமத்திலே பக்தையாக வாழ்ந்துவருகிறார். அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை நிகழ்ச்சிகளை எல்லாம் மறுத்து விட்டார். அவரது வழக்குறைஞர்கள் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பலர்மீது வழக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒரு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் சுவாமி நித்யானந்தருக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது. அவருக்கு எதிராக பொய்யான புகார்கள் அடிப்படையில் அவப்பெயரை உண்டாக்க முனைந்த ஒருவருக்கு அரை மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்தது அந்த நீதிமன்றம்.

ஆகவே, இப்போது ரஞ்சிதாவை குறிப்பிடுவதை ஊடகங்கள் நிறுத்திவிட்டன. ஏன் என்றால் அவர்களது அத்துனை பரபரப்பு செய்திகளும் பொய்யான புகார்கள் என்று நிரூபணமாகி விட்டன. ஊடகங்களே, நீங்கள் குற்றம் சுமத்துவீர்கள் ஆனால் அது பொய்யென்று நிரூபிக்கப்பட்டாலும் கூட செய்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்புகேட்கும் அடிப்படை நாகரீகம் கூட உங்களுக்கு இல்லையே.

ஏன் அவர்கள் ரஞ்சிதாவை தொலைக் காட்சிகளில் காட்ட வேண்டும்? அவரது பாதிக்கப்பட்ட தன்மை இங்கே தீனியாக ஊடகங்களுக்குப் பயன்பட்டது. அதற்கு பரிகாரமாக அவரது மறுப்பு சுதந்திரமானவர்களால் பேட்டி எடுக்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப் பட்டிருக்க வேண்டும். அவரது பக்கத்தின் கருத்தும் முக்கியமானதாகும்.

சுவாமி நித்யானந்தரின் வழக்குறைஞர்கள் உச்ச நீதிமன்றத்தினை அணுகி இந்த வழக்கு நெடுங்காலமாக இழுத்தடிக்கப் படுகிறது என்று முறையிட்டதால் இப்போது காவல்துறையின் ஆங்காரம் கிளர்ந்து எழுந்திருக்கிறது. எந்த உறுதியான ஆதாரங்களும் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் காவல்துறையால் சமர்பிக்கப் படவில்லை. அவர்களது மெத்தனப் போக்கினை சோம்பலை நீதிமன்றம் கண்டித்தது. அதனால் தான் காவல்துறை திடீரென அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. காவல்துறை பழிவாங்கும் போக்கைக் கடைப்பிடிக்கலாமா?

இப்போது வேறொரு பெண்மணி குற்றச் சாட்டுகளோடு கிளம்பிவிட்டார். காவல்துறையிடம் புகார் கொடுத்த ஒரே ஒருவர் இவர்தான். இதுபற்றிய சில தகவல்கள் எனக்கு கிடைத்தன. குற்றச்சாட்டுகள் எல்லாமே போலியானவை மோசடியானவை என்பது மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிகின்றது. முதலில் தான் கற்பழிக்கப் பட்டதாக அவர் சொன்னார். பின்னர் அதற்குபிறகு ஏன் நீங்கள் அவரோடு தொடர்ந்து ஏறத்தாழ பத்து ஆண்டுகள் (இந்தக் காலத்தில் தான் கற்பழிப்பு நடந்ததாக சொல்லப்பட்டது) பயணம் செய்தீர்கள் என்று கேட்டபோது அவர் கதையை மாற்றி சொன்னார். அவரது சமீபத்திய கதை நடந்தது கற்பழிப்பு அல்ல, ஒத்துக்கொண்ட உறவே என்பது. அப்படியானால் அதை எப்படி வல்லுறவு குற்றமாக கருத முடியும்.

மிக முக்கியமானது: அமெரிக்க மருத்துவர்களிடமிருந்து அந்த பெண்ணின் மருத்துவ பதிவேடுகள் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவருக்கு தீராத தொற்றும் தன்மையுள்ள பால்வினை நோய் கடந்த பத்து ஆண்டுகளாக இருப்பது இந்த பதிவேடுகளிலிருந்து புலனானது. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் எப்போதாவது இவரோடு உடல் உறவு வைத்திருந்தால் அந்த நோய் அவருக்கும் நிச்சயம் பரவியிருக்கும். ஆனால் சுவாமி நித்யானந்தரின் மீதான மருத்துவ பரிசோதனைகள் அவருக்கு எந்த பால்வினை நோயும் இல்லை என்றே சொல்கின்றன. குற்றம் சாட்டியவருக்கு எள்ளளவும் நம்பகத்தன்மை இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

4. இந்த விவகாரத்தில் தங்களுக்கே இறுதி வெற்றி என்று ஊடகங்கள் மிதப்பு கொள்ள முடியுமா?

ஊடகங்கள் தங்கள் இஷ்டப் படி சில உண்மை தகவல்களையும் பொய்களையும் வெட்டியும் ஒட்டியும், தமது யூகங்களை கலந்தும், எதிர்க் குரல்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தும், பல சிக்கல்களுக்கு தாமே பூதாகாரமான முடிவுகளை அறிவிப்படை வழக்கமாகக் கொண்டுள்ளன. பெரும்பாலான இந்திய ஊடகங்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும் நுண்ணறிவுத் திறனோ நேர்மையோ கிடையாது. இந்த விவகாரத்தில் அவர்களுக்கு தார்மீக வெற்றியை அளிக்க நான் தயாராக இல்லை. மாறாக, இந்த தாக்குதலே ஹிந்து குரு மரபுகளுக்கும் ஊடகங்களுக்குமான ஒரு பெரும் கருத்தியல் போர் என்றே கருதுகிறேன். இப்போது அதிர்ஷ்டவசமாக நமக்கு இந்த ஊடகங்களின் செயல்பாடுகளை மறுப்பதற்கும் நிராகரிப்பதற்கும் இணையமும், சமூக வலைத்தளங்களும் இருக்கின்றன. ஆனால், இந்த ஊடகக் காரர்கள் தம் பழைய அடாவடித் தனத்திலும் ஆடம்பரத்திலும் திமிரிலும் வாழ்கிறார்கள். இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

ராஜீவ் மல்ஹோத்ரா

ராஜீவ் மல்ஹோத்ரா

முடிவுரை:

இந்த விவகாரத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் தீர விசாரித்து பகுப்பாய்வு செய்து முடிவுகளுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய மதிப்பீடு எப்போதும் எளிதானதாக இருப்பதில்லை. பல்வேறு காரணிகளை ஆராய வேண் டும் தான், ஆனால் அவர் இந்த கருத்தியலை போதிக்கிறார், அந்த சம்பிரதாயத்தை பின்பற்றுகிறார் அல்லது பின்பற்றவில்லை என்பதெல்லாம் இங்கே கணக்கில் கொள்ளத் தேவையில்லை. அர்த்தமற்ற அடிப்படைகளில் சிலபேர் அவரை எதிர்க்கிறார்கள். நீங்கள் அவரது சடங்குகளை, தியான முறைகளை, உடை அலங்காரங்கள் போன்றவற்றை எதிர்க்கிறீர்கள் என்றால் அது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம். (அதன் அடிப்படையில் அவர் தீயவர், ஒழித்துக் கட்டப் பட வேண்டியவர் என்றெல்லாம் கருதுவதும் வாதம் செய்வதும் அபத்தம்) நம்முடைய மதச் சின்னங்களையும் கிரியைகளையும் சடங்குகளையும் எல்லாம் நான் மிகவும் நேசிக்கின்றேன். அவற்றையெல்லாம் யக்ஞம் என்றே கருதுவேன். அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் நிகழ்த்தும் அற்புத நாடக மேடை என்றே அவற்றை நான் புரிந்து கொள்கிறேன். நித்யானந்தருக்கு எதிராக இத்தகையவர்கள் முன்வைக்கும் வாதங்களை படிக்கும் போதெல்லாம் அவர்களின் அறியாமையே வெளிப்படுவதை உணர்கின்றேன்.

அன்புடன்
ராஜிவ்

(ராஜிவ் மல்ஹோத்ரா அமெரிக்கா வாழ் இந்தியர்.  கார்ப்பரேட் துறையிலும், தொழிலதிபராகவும் வெற்றிகளை  ஈட்டியபின், கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்துப் பண்பாட்டுப் பாதுகாப்பு, இந்து மத அமைப்புகள் இந்து கலாசார ஆய்வுகள் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  முக்கியமான சமகால இந்து சிந்தனையாளராக  அறியப் படுகிறார். Breaking India (with Aravindan Neelakandan as co author), Being Different, Indra’s Net உள்ளிட்ட முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார்)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

 

34 மறுமொழிகள் சுவாமி நித்யானந்தா வழக்கின் தற்போதைய நிலை – 2

 1. R.sridharan on September 21, 2014 at 11:44 am

  குற்றம் சாட்டும் பெண்மணியின் பின்புலத்தைக் கட்டாயம் ஆராய வேண்டும்.. ஏனெனில் இம்மாதிரி எங்கோ ஒன்று நடந்தால் நாம் கவலைப் பட வேண்டாம். ஆனால் தொடர்ந்து ஹிந்து சாதுக்களைப் பெண்கள்/ பாலியல் சம்பந்தப் பட்ட குற்றங்களில் சம்மந்தப் படுவது அதிகரித்துள்ளது.
  குறிப்பாக இது கடந்த 10 ஆண்டுகளிலேயே அதிகரித்துள்ளது. நம் நாட்டு அரசியலில் இத்தாலியக் கிறிஸ்தவரின் ஆதிக்கம் அதிகரித்த பின்பே இதெல்லாம் நடை பெறுகிறது.
  .

  ஏன் , காஞ்சி சங்கராச்சாரியார் மீதும் பாலியல் குற்றம் சாட்டப் பட்டது.
  ‘காசுக்காக எதுவும் செய்வேன்’ என்று பெருமையாகப் பேசிய, எழுதுகோலை வைத்துப் பிழைப்பு நடத்திய ஒருவர் , ஆசாரியரின் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டதற்கு ஒரு ஆண்டுக்கு முன் மடத்தின் குழந்தைகள் நல மருத்துமனையில் ஒரு விழாவில் பங்கேற்றவர் தன் பங்கிற்கு அவர் மீது சேற்றை
  இறைத்தார்.

  புற்று நோயினால் கொடிய துன்பத்துக்கு ஆளாகியிருந்த ஒரு பெண்ணை ஆசார்யருடன் தொடர்பு படுத்தி சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டது அக்கிரமத்தின் உச்சம்!

  மேலும் சபரிமலை விவகாரத்தில் கோயிலின் புனித்தன்மையைக் கெடுக்கும் வண்ணம் மதம் மாற்றப்பட்ட ஒரு நடிகை ( அவரது கணவர் கிறிஸ்தவர்) குற்றம் சாட்டியதையும் மறக்க முடியாது.

  மேலும் அக்கோயிலின் தந்திரியைக் கடத்தி அவரை
  ஒரு பெண்ணோடு( க்றிஸ்தவர்) புகைப்படம் எடுத்து அவர் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சித்தது நீதிமன்றத்தில் அம்பலமாகியது.

  ஆகவே எனது கருத்து இதெல்லாம் ‘ குருசெடர்களின்’ குள்ளநரித்தனமே என்பது.

 2. C.N.Muthukumaraswamy on September 21, 2014 at 11:59 am

  //ஹிந்து விரோதிகள் திட்டமிட்டு சதி செய்து ஹிந்துமதத்தின் உதாரண புருஷர், சின்னம், கிரியை(சடங்கு), விழா, குரு, சித்தாந்தம் ஆகியவற்றில் எதையேனும் வீழ்த்தும் ஒவ்வொரு சமயத்திலும் பெரும் நாசம் விளைகிறது என்பதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். இடதுசாரிகள் உள்ளிட்ட மாற்று மதத்தினர் தமக்குள் சிக்கல்கள் வருகின்ற போது அடுத்தவர்கள் உள்ளே நுழைந்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிக்காமல் தாமே தமக்குள்ளே சிக்கல்களை தீர்த்துகொள்கின்றனர். ஹிந்துக்களும் இந்தக்கலையை விரைந்து கற்றுக்கொள்ளவேண்டும்// சரியான அறிவுரை

 3. RAVI on September 21, 2014 at 12:50 pm

  நித்தியானந்தாவின் பிரச்சனை அவரது தனிப்பட்ட விஷயம். இது ஏதோ இந்து மதத்திற்கே ஏற்பட்ட நெருக்கடி போல் பேசுவதை முதலில் நிறுத்தங்கள். பல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தழைத்தோங்கும் இந்து மதத்தை ஒரு நித்தி தூக்கி நிறுத்தவும் இல்லை. அல்லது அவரை மோசமான செயல்பாடுகளில் “சிக்கவைத்து” இந்து மதத்தை யாரும் வீழ்த்தவும் கனவு காணவில்லை. இவரை போன்ற தகுதியற்ற போலி குருமார்களை வரலாறு பல கண்டுவிட்டது. இவர் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் அவர் செயலே.

  //பெரும்பாலான இந்திய ஊடகங்களுக்கும், அதன் பணியாளர்களுக்கும் நுண்ணறிவுத் திறனோ நேர்மையோ கிடையாது//

  உண்மைதான். ஆனால் அதற்காக நித்தியின் செயல்கள் எல்லாம் நியாயமானவை என்பது அபத்தம்.

  ஒரு குரு எப்படி தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நம் இந்து மதம் மீண்டும் மீண்டும் பல வழிகளில் தெளிவு படுத்தி வருகிறது.

  ஒரு குரு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஒரு ஆதி சங்கரர். ஒரு ரமணர். ஒரு வள்ளலார்.

  ஒரு குரு எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் நித்தி போன்றவர்கள்.

  நித்தி ஒரு வியாபாரி. அவர் இந்து மதத்தின் பிரதிநிதி அல்ல.

 4. ஒரு அரிசோனன் on September 22, 2014 at 10:01 am

  //நித்தி ஒரு வியாபாரி. //

  சரியாகச் சொன்னீர்கள். அமெரிக்காவில் அவரது வகுப்புகளுக்கு எவ்வளவு பணம் வாங்குகிறார் என்பதைக் கேட்டால் வாயைப் பிளக்க வேண்டி வரும். இந்து சமயத்திற்காக, அதை எதிரிகளின் தாக்குதலிருந்து காக்க என்ன செய்திருக்கிறார்? நான் அறிய விரும்புகிறேன்.

 5. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 22, 2014 at 10:06 am

  சுவாமி நித்யானந்தர் மீது தொடுக்கப்பட்டுள்ளது அபிராஹாமியரின் போர் என்பதற்கு ஆதாரம் வழங்கிய ஸ்ரீதரன் ஜி அவர்களுக்கு நன்றி. ராஜிவ் ஜியின் உள்ளார்ந்தக்கருத்தினை சுட்டிக்காட்டி அதனை சரியன அறிவுறை என்று வரவேற்றிருக்கும் முத்துக்குமாரசுவாம் ஐயா அவர்களுக்கும் நன்றி.
  ஆர்வி எங்கே இருக்கிறார் என்று புரியவில்லை. நாடுமுழுவதும் நித்யானந்தர் மீதான தாக்குதல் எதிரொலித்ததைக்காணவில்லையா? தொலைக்காட்சிபார்த்த ஒவ்வொரு சமய உணர்வுள்ள ஹிந்துவும் திடுக்கிட்டார்களே அது உங்களுக்கு ஏன் புரியவில்லை.
  ஆர்வி
  “இந்து மதத்தை யாரும் வீழ்த்தவும் கனவு காணவில்லை”. இது ஒன்றே போதும் ஆர்வி உங்கள் கண்ணை மறைத்திருக்கும் கண்ணாடி எதுவென்று உணர்வதற்கு. ஐரோப்பிய பேகன் சமயங்கள் எங்கே அமெரிக்க மாயன் பண்பாடு எங்கே. அவை எல்லாம் அழித்தொழிக்கப்படவில்லையா. கோடி கோடி பணம் மதம் மாற்றுவதற்குவருகிறதே அது கூடத்தெரியவில்லைய உங்கள் கண்ணாடி போட்ட கண்களுக்கு. உடையும் இந்தியா இந்த பயங்கர சதிகளின் பின்னல் வலையை வெட்ட வெளிச்சமாக்கிய பின்னரும் உங்களைப்போன்ற அபிராஹாமிய மாயையில் இருப்பவர்கள் இப்படி எழுதுகிறீர்களே.
  ஆர்வி
  “இவரை போன்ற தகுதியற்ற போலி குருமார்களை வரலாறு பல கண்டுவிட்டது. இவர் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் அவர் செயலே”. போலி என்றும் உண்மை என்று முடிவு செய்வது யார் ஐயா? வரலாறுகண்ட போலி குருமார்கள் யார் யார் சொல்லுங்களேன். போடுங்கள் பட்டியலை பலர் இந்த நாட்டில் போலிகள் இருந்தார்கள் என்பதை மெய்பிக்க. இவர் வீழ்ந்ததும் வாழ்ந்ததும் யாருடைய செயலென்று சொல்லுங்களேன் பார்க்கலாம்.
  ஆர்வி
  “ஒரு குரு எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் நித்தி போன்றவர்கள்.
  நித்தி ஒரு வியாபாரி. அவர் இந்து மதத்தின் பிரதிநிதி அல்ல”.
  எங்கே ஆதாரம்? எங்கே அது காட்டுங்கள் நிரூபியுங்கள் பார்க்கலாம் என்பது தானே கேள்வி. இந்து மதத்திற்கு யார்தான் பிரதி நிதி? அதற்கான வரையறை என்ன? நித்யானந்தர் வியாபாரி என்பது அபத்தம். கிறிஸ்தவ இஸ்லாமிய சமய நிறுவனங்கள் தமது மக்களிடையே வசூலிக்கும் பணத்திற்கு ஈடாகுமா அது. ஹிந்து சமய குருமார்கள் எல்லாவற்றையும் இலவசமாகத்தான் கொடுக்கவேண்டுமா? நித்யானந்தரின் நிறுவனங்கள் தமது சேவைகளுக்கு கட்டணம் வசூலித்தது உண்மை.வணிகம் அல்ல அது. வணிகம் என்றால் ஒரு ரூபாய் மதிப்புள்ள பொருளை குறைந்தது ஒரு ரூபாய் ஐந்து பைசா நோக்கில் விற்கவேண்டும். நித்யானந்தர் அப்படி செய்யாமல் எல்லோருக்கும் தாம் கற்ற நுட்பங்களைக்கற்றுக்கொடுத்தார். அவரது ஆசிரமத்திற்கு வருகிறவர்கள் அனைவருக்கும் அன்னம் பாலித்தார்.

 6. Sarav on September 22, 2014 at 10:07 am

  You could have ignored this issue. Need not to support Nithi.. By doing this, really you have downgraded yourself. Please avoid this kind of unnecessary articles which are no way help us.

 7. muthugopal on September 22, 2014 at 2:11 pm

  நித்தியானந்தாவின் பேச்சில் கவரப்பட்டவன் நான். சில விஷயங்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் மனபாங்கு உடையவர். ஆகவே இவர் தவறு செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அய்யா சொல்வதுபோல் ஊடகங்களின் செயல் வருந்தத் தக்கதுதான். வருங்காலம் ஊடகத்தினால் பிரளயம் ஏற்படப்போவது நிஜம். இதனை சின்ன வயதில் இப்படிப்பட்ட அறிவு ஞானம் வேறு யாருக்கும் சாத்தியமில்லை. வாழ்க.

 8. ஆனந்த் சாகர் on September 22, 2014 at 3:27 pm

  //இந்த வீடியோ உருமாற்றம் செய்யப்பட்டது என்று அமெரிக்காவில் உள்ள தடயவியல் ஆய்வகங்கள் அறிவித்துவிட்டன.//

  இது பொய். அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தடயவியல் ஆய்வகங்கள் அப்படி அறிவித்தன என்பதற்கு ஆதாரங்கள் காட்டவும். இந்த வீடியோ நம்பகத்தன்மை வாய்ந்தது, அதில் எந்த உருமாற்றமும் செய்யப்படவில்லை என்றல்லவா கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடயவியல் ஆய்வகங்கள் கர்னாடக உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுத்தன!

 9. ஆனந்த் சாகர் on September 22, 2014 at 4:03 pm

  //எனது நிலைப்பாட்டினை கீழ்க்கண்ட அளவுகோல்களின் அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டிருக்கின்றேன்.

  1. ஹிந்து மதத்தின் மீதான இந்த நெருக்கடியின் தாக்கம்

  2. எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு இதனால் விளைய உள்ள பயன்கள் மற்றும் ஊறுகளின் ஒப்பீடு

  3. வழக்கின் சட்டரீதியான பலம்

  4. இந்த விவகாரத்தில் தங்களுக்கே இறுதி வெற்றி என்று ஊடகங்கள் மிதப்பு கொள்ள முடியுமா என்ற கேள்வி.

  இவை ஒவ்வொன்றையும் விளக்க முயல்கின்றேன்.//

  ராஜீவ் மல்ஹோத்ராவின் அளவுகோல்களே தவறானவை. அதற்கு அவர் தரும் விளக்கங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

  நித்தியானந்தாவின் சந்நியாசி வேடம் அம்பலப்பட்டு அவர்தான் நெருக்கடிக்கு உள்ளானாரே தவிர அதனால் ஹிந்து மதம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை, பாதிக்கப்படாது. நித்தியானந்தாவிற்கு ஏற்பட்ட நெருக்கடியை ஹிந்த் மதத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியாக காட்ட முயல்வது அயோக்கியத்தனம்.

  நித்தியானந்தா போன்ற போலிகள் அம்பலப்பட்டு சந்தி சிரித்ததால் ஆன்மிகம் என்ற போர்வையில் அவர் நடத்தி வரும் வியாபாரத்துக்குத்தான் ஊறு விளைந்ததே தவிர அதனால் உண்மையான் ஆன்மீக பாதைக்கோ ஹிந்து மதத்திற்கோ ஹிந்து சமுதாயத்திற்கோ எந்த ஊறும் ஒருக்காலும் விளையவில்லை, விளையாது.

  அவர் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தன் மீதுள்ள வழக்குகளை நீர்த்துப்போக செய்வதால் அவர் குற்றமற்றவர் ஆகிவிட முடியாது.

  ஊடகங்கள் அவரின் தவறான செயல்பாடுகளை வெளியிட்டன. வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மை இதில் எங்கு வந்தது?

 10. "Honest Man" on September 23, 2014 at 10:16 am

  23-09-2014 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி:

  வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 50 சிவசேனா தொண்டர்கள் கைது.

  எதற்கு ஆர்பாட்டம்? வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் தாலுகாவிலுள்ள மோர்தானா என்ற ஊராட்சி பகுதியில் (இங்கே மோர்தானா அணை என்று ஒரு அணை உள்ளது) அங்கே Salim Gouse என்ற முஸ்லிம் (ஆற்காடு தனியார் கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் விலங்கியியல் பேராசிரியர்) “முக்தி மார்க்க சபா” என்ற பெயரில் ஒரு ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் இங்கே ஹிந்துக்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்வதோடு இந்துக்களின் பணங்களை சுருட்டியும் உள்ளார்.. காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்ததும் பலனில்லை. அதனால் தான் ஆர்ப்பாட்டம்.

  இப்படிப்பட்ட சாமியார் குறித்து வெளியிட இந்துமத இதழ்கள் (ஒரே நாடு, விஜய பாரதம் ஆகியவை இந்த இரண்டுதானே இருக்கின்றன. வேறு என்ன இருக்கிறது?) மோர்தானா சென்று விசாரித்து விவரத்தை விலாவரியாக எழுதலாம் இல்லையா? ஆனால் அதை எல்லாம் செய்ய மாட்டார்கள். அவர்களின் இதழ்களில் பக்திக் கதைகளை போட்டு பழம் பெருமையை பேசி கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நிகழ்காலத்தை பற்றிய எண்ணமே கிஞ்சித்தும் கிடையாது.

  இந்த தமிழ் இந்து இணைய தளத்தினர் கூட உண்மையை அறிய அந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் குபேரன் (பத்ரிகையில் வந்துள்ள செய்தியின் படி) என்பவரையும் அவ்வூர் மக்களையும் விசாரித்து அந்த முஸ்லிம் இன்னும் வேறு என்னென்ன அயோக்கியத்தனங்கள் செய்கிறார் என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதலாமே. அது இந்து மதத்திற்கு அவர்கள் செய்யும் ஒரு மாபெரும் புண்ணியம். ஆனால் அவ்வாறு செய்வார்களா? Never !

 11. தஞ்சை வெ.கோபாலன் on September 23, 2014 at 10:41 am

  Mr.Ravi, I endorse your comment 100%. nothing more to add. Nithi is not the symbol of Hinduism and Hindus are not depending on this man. There were many great Sanyasis and Gurus in our country. Let’s not waste our time talking for and against an individual who has no moral ground to defend.

 12. Ashok kumar on September 23, 2014 at 1:49 pm

  இக்கட்டுரையின் ஆசிரியருக்கு ஹிந்து தர்மத்தின் மீதான அன்பு புரிகிறது,ஆனால் இதற்காக இப்படி ஒரு சாமியாருக்கு பரிந்துகொண்டு எழுத வந்தது புரிந்துகொள்ள முடியவில்லை.தாங்கள் இங்கு வந்து தங்கி அவர் எவ்வாறெல்லாம் மக்களைஏமாற்றி பணம் சம்பாதித்தார் என்று கேளுங்கள்.பாலியல் குற்றம் மட்டும் பார்க்காதீர்.

  அவருடைய பக்தர்கள் மனதளவில் எவ்வாறு துன்பமடைந்தாலும், நடுத்தெருவில் நின்றாலும் கவலை இல்லாமல் பஞ்சு மெத்தையில் புரண்டவர் அவர்.அவரைச் சுற்றி உள்ள கும்பல் பணம் பணம் பணம் என்று அலைந்த கும்பல். பணத்தை வைத்து மக்களின் பக்தியை மதிப்பீடு செய்தவர். தான் நல்லது செய்ததால் தனக்கு விளம்பரம் செய்ய வேண்டும், படோடபமாக வரவேற்பு செய்ய வேண்டும் என்று நினைத்தவர். ஹிந்து மதக் கோட்பாடான எளிமையைஎ துறந்தவர் இவர். இவரைச் சொல்லி ஒன்றும் இல்லை, மக்கள் விழிப்போடு இருக்கும்வரை இத்தகைய ஆன்மீகவாதிகள் நடமாடத் தான் செய்வார்கள்.

 13. kannan on September 25, 2014 at 9:20 am

  Honestman மற்றும் அசோக்குமார் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன். நித்தியானந்தா செய்த கண்றாவி செயல்களுக்கு வக்கலாத்து வாங்கி எழுதப்பட்ட கட்டுரையை பிரசுரித்த ஹிந்து.காம் வலைதலத்தின்மேல் வருத்தம் ஏற்படுகின்றது. அருவருக்கத்தக்க தப்பையும் செய்துவிட்டு, அதனை அறிந்துகொண்ட நித்தியின் கைத்தடியிடம் இவர் மன்றாடிய விதம் கேவலமாக இருந்தது. எல்லாம் ஜோடிக்கப்பட்டதென்றால், நித்தி கும்பல் அவர்கள் மேல் எடுத்த பதில் நடவடிக்கை என்ன? வேற்று மதத்தவன் எப்படியும் இருக்கட்டும். ஆனால் நமக்கு சமயம்தான் வாழ்க்கை, உயிர் நாடி. அதன் மீது அவமதிப்பு, அது எவனால் நடந்தாலும் தாங்கிக்கொள்ள இயலாது.

 14. க்ருஷ்ணகுமார் on September 25, 2014 at 1:44 pm

  குரு மற்றும் சிஷ்யன் இருவரும் செயல்பட ஆதாரமாக இருப்பவை சமய நூற்கள். சமய ஒழுக்கங்கள்.

  நித்யானந்தர் பற்றிய வ்யவஹாரம் முழுதும் சமய ஒழுக்கப்படி நடவாத குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு நபரைப் பற்றி மட்டும் பேசுகிறது. பாதிக்கப்பட்ட சிஷ்யர்கள் ஆனவர்கள் சமய ஒழுக்கத்தை மீறினரா சமயத்தை முறையாக ஒழுக விழைந்தனரா சமய நூற்களில் விதந்தோதப்படும் செயல்பாடுடைய குருவை நாடி தங்கள் ஆன்மீக மேம்பட்டுக்காக செயல் பட்டனரா என்பதும் விசாரத்துக்கு உரிய விஷயம்.

  தாந்த்ரிக பௌத்த சமயாசாரத்தைச் சார்ந்த பத்ரூல் ரின்போசே (Patrul Rinpoche) அவர்கள் எழுதிய “Words of My Perfect Teacher” என்ற பொருளில் அமைந்த வ்யாசம் பத்மகரா ஃபவுண்டேஷன் ஸ்தாபனத்தினரால் ஆங்க்ல மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

  http://www.kamakotimandali.com/blog/index.php?p=1415&more=1&c=1&tb=1&pb=1

  குரு தகுதியான சிஷ்யனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிஷ்யன் தகுதியுள்ள குருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். என்பது வ்யாசத்தின் அடிநாதம்.

  இந்த விஷயத்தில் அக்கறை உள்ள வாசகர்கள் அவச்யம் மேற்கண்ட சுட்டியிலுள்ள வ்யாசத்தை வாசிக்கவும்.

  கருத்தாழம் மிக்க மிக அருமையான பகுதிகள் கீழே பகிரப்பட்டுள்ளன :-

  The Great Master of Oddiyana warns:

  Not to examine the teacher
  Is like drinking poison;
  Not to examine the disciple
  Is like leaping from a precipice.

  By not examining a teacher with great care
  The faithful waste their gathered merit.
  Like taking for the shadow of a tree a vicious snake,
  Beguiled, they lose the freedom they at last had found.

 15. sudalai madan on September 25, 2014 at 4:19 pm

  மாசம் 6000 ரூபாய் சம்பதிகுற என் மாமன் நித்தி காலை தொட்டு கும்பிட ஆளுக்கு 1000 ரூபனு அவருக்கும் வாய் பேச கஷ்டபடுற அவர் பையனுக்கும் 2000 ரூபா கொடுத்து நித்தி கால தொட்டன்கலாம் . இந்த மாதிரி ஆளுங்கதான் இந்து மதத்த காபாதுற ICON னு நினச்சா. இந்துனு சொல்ல எனக்கு அடி வயத்துல இருந்து பொங்கி வருது ( பூரிப்பு ).

 16. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 25, 2014 at 5:02 pm

  அபிராஹாமியர் ஒருவர் இங்கேவந்து
  ஆனந்த சாஹர் என்ற பெயரில்
  ராஜீவ் மல்ஹோத்ராவின் அளவுகோல்களே தவறானவை. அதற்கு அவர் தரும் விளக்கங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.
  என்று மொழிந்திருக்கிறார். அளவுகோல்களை நிராகரிக்க வேண்டுமானால் அவை தவறு என்று நிரூபிக்கவேண்டும். எதுவும் சரியில்லை என்றால் எப்படி பாய்?.
  ஹிந்துமதத்தினைப்பற்றி இஸ்லாமியரான நீவிர் கவலைவேண்டாம். ஆடு நனைகிறதே என்று ஓ நாய் அழுதக்கதை யாம் அறிவோம். இதே தளத்தில் அருமையாக ரூபன் தொடராக இஸ்லாமின் உண்மைசொருபத்தினைப்பற்றி எழுதிவருகிறார். அங்கு போய் நீங்கள் உங்கள் அறிவார்ந்த வாதங்களை வைக்கலாம்.
  ஸ்ரீ ராஜிவ்ஜியின் கட்டுரை முழுக்க முழுக்க ஹிந்துக்களுக்கானது. ஸ்ரீ நித்யானந்தரைப்பற்றிக்கருத்து சொல்ல உமக்கு இங்கே அவசியம் என்ன வந்தது. மகனின் மனைவியை காமுற்று கல்யாணம் செய்தவரை பின்பற்றும் உமக்கெல்லாம் அதற்கு யோக்கியதையும் இல்லை.

 17. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 25, 2014 at 5:10 pm

  சரவ்
  “You could have ignored this issue. Need not to support Nithi.. By doing this, really you have downgraded yourself. Please avoid this kind of unnecessary articles which are no way help us”.
  சரவ் போன்றோருடைய போதனை எமக்கு அவசியம் இல்லை. உங்களுக்கு இந்தக்கட்டுரையால் பயனில்லை எனில் படிக்காமல் போங்கள். எது அவசியம் எது அவசியமில்லை என்ற போதனையும் எமக்குத்தேவையில்லை.
  ஹிந்து பண்பாடு சமயம் ஆகியவற்றை விரோதிகளிடமிருந்தும் துரோகிகளிடமிருந்தும் காப்பாற்றுவது. அறிவார்ந்த முறையில் எதிர்தாக்குதல் தொடுப்பதும் அவசியம்.
  தஞ்சை கோபாலன் போன்ற சிந்தனையாளர்களிடமிருந்து அடியேன் எதிர்பார்ப்பது ஜல்பம் ஆதாரமற்ற விதண்டை அன்று. ஸ்ரீ ராஜிவ் ஜியின் வாதங்களை ஒன்று ஒன்றாக மறுத்து உடைப்பீர்களானால். அது சிறப்பானதாக இருந்திருக்கும். அதாரம் ஏதுமில்லாமல் அனுமானத்தின் அடிப்படையில் வாதாடுவது உங்களுக்கு ஏற்றதன்று.

 18. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 25, 2014 at 5:16 pm

  அசோக் குமார்
  “இக்கட்டுரையின் ஆசிரியருக்கு ஹிந்து தர்மத்தின் மீதான அன்பு புரிகிறது,ஆனால் இதற்காக இப்படி ஒரு சாமியாருக்கு பரிந்துகொண்டு எழுத வந்தது புரிந்துகொள்ள முடியவில்லை.தாங்கள் இங்கு வந்து தங்கி அவர் எவ்வாறெல்லாம் மக்களைஏமாற்றி பணம் சம்பாதித்தார் என்று கேளுங்கள்”.
  எங்கே அவர் பணம் பறித்தார். புகார் எங்கே வழக்கு எங்கே. ஸ்ரீ நித்யானந்தரின் நிறுவனங்கள் மீது வழக்குப்போடலாமே. சும்மா சும்மா ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. சும்மா கதைவிடக்கூடாது. ஆதாரத்தோடு விவாதிப்பது நல்லது. நித்யானந்தர் பணம் வாங்கிக்கொண்டுதான் பயிற்சி முகாம்கள் நடத்தினார். இன்று இருக்கிற அனைத்துமடங்களும் பணம் இல்லாமல் நடக்காது. அவர் மடாதிபதி அன்றி காட்டில் திரியும் சன்யாசி அல்ல.

 19. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 25, 2014 at 5:28 pm

  ஒரு அரிசோனன்
  “சரியாகச் சொன்னீர்கள். அமெரிக்காவில் அவரது வகுப்புகளுக்கு எவ்வளவு பணம் வாங்குகிறார் என்பதைக் கேட்டால் வாயைப் பிளக்க வேண்டி வரும்”.
  ஏன் பணம் வாங்கக்கூடாது. அவர் அமெரிக்காவில் முகாம் நடத்த ஆகும் செலவை யார் ஏற்பது. சமய நிறுவனத்தினை நடத்துவதற்கு நிதியை திரட்டுவதற்கு முகாம் நடத்துவதை ஒரு முறையாக அவர் கையாண்டார். இன்று உள்ள அனைத்து நவீன ஹிந்து சமய நிறுவனங்களும் த்யான மையங்களும் அதைத்தான் கையாளுகின்றன.அவர்களை இங்கே சொல்லி இழிவு படுத்தவேண்டாம். பல்வேறு நவீன ஹிந்து சமய அமைப்புகளை தேடிப்பார்த்ததில் ஒரே அமைப்பு காயத்ரி பரிவார் மட்டுமே கட்டணம் என்று எதையும் நிர்ணயிக்காது எல்லாசேவைகளையும் வழங்குகிறது. காணிக்கை விருப்பம் போல என்பது அவர்கள் கொள்கை. அப்படி எல்லாரையும் எதிர்பார்க்கமுடியாது. நிதியே அமைப்பின் ரத்தமாக உள்ளது.
  அரிசோனன்
  அவர் என்ன செய்தார் ஹிந்துமதத்திற்கு என்று நீங்கள் நேரே அவரது ஆசிரமத்திற்கு சென்று காணுங்கள். அவரது பக்தர்களை சந்தித்துப்பேசுங்கள். அதற்கென்று ஒரு தனிக்கட்டுரை எழுதலாம். உலகில் பல நாடுகளில் பரவியது அவரது அமைப்பு. எங்கும் கோயில். எல்லோரும் உள்ளே சென்று சாமியைத்தொட்டு வணங்கலாம். சாதி ஆண்பெண் பேதமின்றி சமஸ்கிருதத்தில் பூஜை வேள்வி நடத்தவைத்தவர் அவரே.அதனால் அபிராஹாமிய நரிகள் மட்டுமல்ல சில மேட்டிமைவாதிகளும் சமயம் கிடைத்ததே என்று அவரைத்தாக்குகிறார்கள். சத்தியம் நிலைக்கும்.

 20. க்ருஷ்ணகுமார் on September 26, 2014 at 1:47 pm

  அன்பின் சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய,

  தவறான வாதங்கள்

  \\\\\ அபிராஹாமியர் ஒருவர் இங்கேவந்து ஆனந்த சாஹர் என்ற பெயரில் ராஜீவ் மல்ஹோத்ராவின் அளவுகோல்களே தவறானவை. அதற்கு அவர் தரும் விளக்கங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை. \\ இதே தளத்தில் அருமையாக ரூபன் தொடராக இஸ்லாமின் உண்மைசொருபத்தினைப்பற்றி எழுதிவருகிறார். அங்கு போய் நீங்கள் உங்கள் அறிவார்ந்த வாதங்களை வைக்கலாம். \\\

  மாற்றுக்கருத்துள்ளவர்கள் எல்லோரும் ஆப்ரஹாமிய வாதிகள் என்று சொல்வது தவறு. ஸ்ரீமான் ஆனந்த்சாகர் அவர்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள தொடரில் ஜெனாப் சுவனப்ரியன் அவர்களுடைய அல் தக்கியா வாதங்களுக்கு அழுத்தம் திருத்தமான ப்ரதிவாதங்களை முன்வைத்திருக்கிறார்.

  \\\ நித்யானந்தரைப்பற்றிக்கருத்து சொல்ல உமக்கு இங்கே அவசியம் என்ன வந்தது. மகனின் மனைவியை காமுற்று கல்யாணம் செய்தவரை பின்பற்றும் உமக்கெல்லாம் அதற்கு யோக்கியதையும் இல்லை. \\

  ஆனந்த் சாகர் அவர்களது வாதங்களை ஸ்ரீ ரூபன் அவர்களது வ்யாசத்தில் வைத்துள்ளதை http://www.tamilhindu.com/2014/08/violence28/ இங்கு பாருங்கள்.

 21. mani on September 26, 2014 at 10:31 pm

  @shivashri vibhushanji

  I knew very well abt Ananda sagar He well known in iriyalla islam and padu blogspot. His previous name is ariya sagar. donot portray him as abhramic religionist . He is dealy against abharmic religions. Even, he translated all alisina who is the saviour of all non -islams . Because of Ali sina only we all here like Sivaji maharaj saved Hindusiam from religious fantatic Aurengzeb.
  Be always not emotional think something postively. Ananda sagar(Ariya sagar) is asset for Hindus.

 22. ஆனந்த் சாகர் on September 27, 2014 at 3:04 pm

  திரு. சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய என்பவர் நித்தியானந்தாவின் அடிமை சீடர்களில் ஒருவர் என்பது தெரிகிறது. முஹம்மது செய்த அக்கிரமங்களை தோலுரித்து காட்டுபவரை ஹிந்துதுவாவாதி என்று முஸ்லிம்கள் கூறுவர். அதேவகையில் நித்தியானந்தாவின் குற்றங்களை காட்டி அவரை விமர்சிப்பவரை இவரை போன்றவர்கள் ஆப்ரஹாமிய மதத்தவர் என்று இரைச்சல் போடுவார்கள். நான் ஆப்ரஹாமிய மதத்தவர் இல்லை என்ற உண்மையை எடுத்து கூறிய திரு.க்ருஷ்ணகுமார் அவர்களுக்கும் திரு.மணி அவர்களுக்கும் நன்றி.

  (edited and published)

 23. ஒரு அரிசோனன் on September 28, 2014 at 10:14 am

  //காயத்ரி பரிவார் மட்டுமே கட்டணம் என்று எதையும் நிர்ணயிக்காது எல்லாசேவைகளையும் வழங்குகிறது. காணிக்கை விருப்பம் போல என்பது அவர்கள் கொள்கை. அப்படி எல்லாரையும் எதிர்பார்க்கமுடியாது. நிதியே அமைப்பின் ரத்தமாக உள்ளது.//

  காயத்ரி பரிவார் போன்ற சமய நிறுவனங்கள்தான் இந்து சமயத்திற்குத் தேவை. காஞ்சி மடம் உபதேசங்களைக் கேட்கவோ, வேதம் கற்கவோ பணம் வாங்குகிறதா, இல்லை எனக்குக் கற்றுக்கொடுக்கப்படுபவை காப்பிரைட், நான் யாருக்கும் அதை அனுமதி இன்றி கற்றுக்கொடுக்கமாட்டேன் என்று உறுதிமொழி வாங்குகிறதா?

  சமய நெறிகளைக் கற்றுக்கொடுக்கக் காசு வாங்குபவர்கள் வியாபாரிகள்தான், என்னைப்பொறுத்தவரை.

  காசு கொடுத்துதான் சமய நெறிமுறைகளை அறிய யாரும் வரமாட்டார்கள் என்று, stress reduction, self improvement, self-realization என்று பெயர்களைச் சூட்டி பணம் பறிப்பது இந்து சமயத்தை வளர்ப்பதா?

  நன்னெறி பெற வருக என்று அழைத்து, யார் யார் அவரவர் வசதிக்குத் தகுந்த அளவு தரும் நன்கொடைப் பணத்தை மக்களை நன்னெறிப் படுத்த முனைபவனே ஆச்சார்யர். அவரே வணங்கத் தக்கவர். நீ காசு கொடுத்தால் மட்டுமே உனக்கு எதையும் செய்வேன் என்பவன் வியாபாரியே — அவன் எந்த சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி.

  எம்பெருமான் நஞ்சுண்ட கண்டனை வணங்கும் சிவனடியாரான பெருந்தகை நீங்கள் ஒரு வியாபாரிக்குப் பரிந்து வருவதும் அவனது திருவுள்ளமே, திருவிளையாடலே!

 24. ஒரு அரிசோனன் on September 28, 2014 at 10:17 am

  இங்கு அமெரிக்காவில் என் நண்பர்கள் பலர் சாதி வேறுபாடின்றி, ஒரு சென்ட்கூட வாங்காமல் வேதம் கற்பித்து வருகிறார்கள். மேலும் கீதை வகுப்புகள், நன்னெறி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. அவர்களே இந்து சமயத்தின் உண்மையான ஆச்சாரியர்கள். உண்மையான தொண்டர்கள்.

  அவர்களுக்கு நான் என்றுமே தலைவணங்கி நிற்பேன்.

 25. ஒரு அரிசோனன் on September 29, 2014 at 7:59 am

  /தாந்த்ரிக பௌத்த சமயாசாரத்தைச் சார்ந்த பத்ரூல் ரின்போசே (Patrul Rinpoche) அவர்கள் எழுதிய “Words of My Perfect Teacher” என்ற பொருளில் அமைந்த வ்யாசம் பத்மகரா ஃபவுண்டேஷன் ஸ்தாபனத்தினரால் ஆங்க்ல மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

  http://www.kamakotimandali.com/blog/index.php?p=1415&more=1&c=1&tb=1&pb=1

  குரு தகுதியான சிஷ்யனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிஷ்யன் தகுதியுள்ள குருவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். என்பது வ்யாசத்தின் அடிநாதம்.//

  இணையத்திற்குச் சென்று பார்த்தேன். அருமையான பதிவு, அன்பின் கிருஷ்ணகுமார்! நன்றி!

 26. R.sridharan on September 29, 2014 at 8:27 am

  ஒரு நிகழ்ச்சியை ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ, சில நிமிடங்களோ செய்தியாகக் காண்பித்தால் அது செய்தி. ஆனால் தொடர்ந்து காண்பிப்பது, வெறும் செய்தியாக இல்லாமல் தங்களது சொந்தக் கருத்தை அதில் ஏற்றிக் கூறுவது, மக்கள் மனதில் அதற்கேற்றாற்போல் ஒரு கருத்தை உருவாக்க முயல்வது என்று இருந்தால் அதில் எதோ சதி உள்ளது.

  அதுவும் அதைச் செய்வதுயார்?
  ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களது நிறுவனத்துக்கு நூற்றுக் கணக்கான தொலைபேசி
  இணைப்புகளை அமைத்துக் கொள்வது, மிரட்டல் மூலம் ஒரு நிறுவனத்தைத் தங்களுக்கு வேண்டியவருக்கு விற்கச் சொல்வது, தொழிலில் தங்களுடன் போட்டி போடுபவர்களை மிரட்டுவது,
  அவர்களது கட்டமைப்புகளை ஆட்களை வைத்து சேதப் படுத்துவது – இம்மாதிரி குற்றச் சாட்டுகளுக்கு ஆளானவர்கள்தான் நித்யானந்தரைப் பற்றித் தொடர்ந்து செய்திகளை ஒளிபரப்பிய வண்ணம் இருந்தனர் .

  மேலும் நித்யானந்தர் மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் ஒரு ‘ குருசெடர்’ .நித்யானந்தர் ஆசிரமத்தில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் சிறு நீர் கலக்கப் படுகிறது என்றெல்லாம் அபத்தமாக, அபாண்டமாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

  (சுவாமி ராம்தேவ் கொடுக்கும் ஆயுர்வேத மருந்துகளில் எலும்புப் பொடி கலந்திருக்கிறது என்று முன்பு குற்றம் சாட்டப் பட்டது, பின்பு அண்டப் புளுகு என்று நிரூபிக்கப் பட்டது நினைவிருக்கலாம்)
  ஆகவேதான் இதையெல்லாம் எதிர்க்க வேண்டியுள்ளது

  ஒரு ஹிந்து சாது தவறு செய்வதாகச் செய்தி வந்தால் அதை ஹிந்து சாதுக்கள், சான்றோர்கள் ஆராய வேண்டுமே தவிர இது போன்றவர்கள் அல்ல.

 27. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 29, 2014 at 12:55 pm

  ஸ்ரீ க்ருஷ்ணகுமார் மஹாசயர் அவர்களுக்கு
  ஆனந்த சாகர் அபிராஹாமியர் இல்லை என்பது மகிழ்ச்சிக்குறியது. தவறுக்கு வருந்துகிறேன். ஆனால் சன் தொலைக்காட்சியின் பரப்புரைக்கு மயங்கி சாகர் போன்று ஸ்ரீ நித்யானந்த சுவாமியைக்கண்டிப்பவர்கள் ஹிந்து விரோதிகளுக்கும் துரோகிகளுக்கும் துணைபோகிறார்கள் என்ற அடியேனின் கருத்தில் மாற்றம் இல்லை. ஹிந்துப்பாரம்பரியம் பண்பாடு காலம் காலமாக விவாதத்தினையும் விமர்சனத்தினை அடிப்படை வழிமுறையாகக்கொண்டது ஆதலால் விமர்சனம் கூடாது என்பதல்ல அடியேனின் நிலை. மாறாக விமர்சனம் ஆதாரப்பூர்வமாக இருக்கவேண்டும்.
  ஆனந்த சாகர்
  “திரு. சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசய என்பவர் நித்தியானந்தாவின் அடிமை சீடர்களில் ஒருவர் என்பது தெரிகிறது”.
  இந்தக்கட்டுரையில் அடியேனின் கருத்தக்கள் இல்லை. மாறாக ஸ்ரீ ராஜிவ் மல்ஹோத்ரா ஜி அவர்களுடைய கருத்துக்களை மொழிபெயர்த்தது மட்டுமே எனது பணி. நான் சுவாமி நித்யானந்தரிடம் ஒரு சில த்யானமுறைகளைக்கற்றவன் என்றாலும் அதற்காக அடிமை என்பது அபவாதமாகும். சிவபெருமான் ஒருவருக்கே அவருக்கு மட்டுமே நான் அடிமை.
  ஹிந்து தர்மம், பண்பாடு சமயங்கள் ஆகியவை அன்னியர்களாலும் உள்ளிருந்தே கொல்லும் த்ரோகிகளாலும் தாக்கப்படும்போது அதை எதிர்ப்பது எனது தலையாய கடமை என்பதாலேயே நிகழ்காலத்தில் ஹிந்து தர்மத்திற்கு எதிரான அபிராஹாமிய கருத்துக்களை மறுத்து அற்புதமாக நிராகரணக்கட்டுரைகளை எழுதிவரும் ஸ்ரீ ராஜிவ் ஜியின் கட்டுரையை மொழிபெயர்த்தேன்.
  ஹிந்துக்கள் அவசரப்பட்டு த்ரோகிகள் விரோதிகளின் பரப்புரையைக்கேட்டு முடிவுக்கு வரக்கூடாது ஹிந்துதர்மத்தினை அழிக்க முனையும் அவர்கள் கூட்டணியை ஆதரிக்ககூடாது என்பதே எனது வேண்டுகோள்.
  துரதிர்ஷ்டவசமாக இங்கே கட்டுரையை முழுமையாக படிக்காமல் புரிந்துகொள்ளாமல் பலர் தமது கருத்துக்களை எழுதுகின்றனர். கட்டுரையைப்படித்து ராஜிவ் ஜியின் வாதங்களை மறுத்தால் நலமாக இருக்கும்.

 28. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 30, 2014 at 12:04 pm

  ஒரு அரிசோனன்
  “காசு கொடுத்துதான் சமய நெறிமுறைகளை அறிய யாரும் வரமாட்டார்கள் என்று, stress reduction, self improvement, self-realization என்று பெயர்களைச் சூட்டி பணம் பறிப்பது இந்து சமயத்தை வளர்ப்பதா?”
  இன்று ஆன்மிகத்தினை வளர்க்கும் நவீன ஹிந்து குருமார்களும் அவர்களும் அமைப்புகளும் பயிற்சி முகாம்களுக்கு கட்டணம் வாங்குபவையே. பயிற்சி முகாம் களுக்கு கட்டணம் வாங்காமல் அவற்றை நடத்த முடியாது. ஹிந்து சமய ஆன்மிக கருத்துக்களை யோக முறைகளை பரப்புவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உகந்தது இந்த சோஷல் எண்டெர் ப்ரைசிங் முறை. தன்னார்வ இலவசத்தொண்டு நிறுவனங்களைக்காட்டிலும் social enterprise முறைதான் இப்போது வளர்ந்துவருகின்றது. கட்டணம் வாங்கிக்கொண்டு பயிற்சி முகாம்கள் நடத்துவது தவறு அல்ல. அதுவியாபாரமும் அல்ல.அதன் மூலம் திரட்டப்படும் நிதி அமைப்பின் வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் முதலீடு செய்யப்படுகிறது. பயிற்சி முகாம் களுக்கு கட்டணம் வாங்கும் அதே நிறுவனங்கள் அவர்களது தினசரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு கட்டணம் வசூலிப்பதில்லை. ஆகவே நித்யானந்தர் அமைப்பு கட்டணம் வசூலிக்கிறது. அது வியாபாரம் செய்கிறது என்பது அபத்தம். கட்டணம் வசூலிப்பதை தவறு என்றால் அரிசோனன் போன்றவர்கள் கட்டணம் வசூலிக்கும் மற்ற ஆன்மிக சமய் அமைப்புகளையும் ஏன் குறைசொல்வதில்லை. நித்யானந்த சுவாமியை மட்டுமே ஏன் கண்டிக்கவேண்டும்.

 29. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on September 30, 2014 at 12:13 pm

  அரிசோனன்
  “காஞ்சி மடம் உபதேசங்களைக் கேட்கவோ, வேதம் கற்கவோ பணம் வாங்குகிறதா, இல்லை எனக்குக் கற்றுக்கொடுக்கப்படுபவை காப்பிரைட், நான் யாருக்கும் அதை அனுமதி இன்றி கற்றுக்கொடுக்கமாட்டேன் என்று உறுதிமொழி வாங்குகிறதா?”
  அரிசோனன் காஞ்சி மடத்தினை இங்கே தேவையின்றி இழுக்கவேண்டாம். அது எல்லோருக்கும் உரியதா? என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.
  வேதம் வேத மந்திரங்கள் வேதாந்தம் எல்லோருக்கும் உரியது என்று காஞ்சி மடம் சொல்லும் வரை அதை ஒரு சிலருக்கே உரியதாக அடியேன் கருதுவேன். ஸ்ரீ நித்யானந்த சுவாமி எல்லோருக்கும் சாதி, பால் பேதமின்றி அனைவருக்கும் ஆன்மிக வித்தைகளை வேதாந்தத்தினை யோகத்தினை போதித்தவர். அத்வைத வேதாந்தியாயினும் சிவபரத்துவத்தினை பறைசாற்றியவர். இளைஞர்களுக்கும் ஆன்மிகத்தினை சேர்க்க முனைந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் உலகம் வலம் வந்தவர். ஆகவே அவரை வீழ்த்த நினைக்கும் வீணரை எதிர்க்கிறேன். குற்றம் சார் செய்தாலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம்.

 30. ஒரு அரிசோனன் on October 3, 2014 at 10:55 am

  //அரிசோனன் போன்றவர்கள் கட்டணம் வசூலிக்கும் மற்ற ஆன்மிக சமய் அமைப்புகளையும் ஏன் குறைசொல்வதில்லை. நித்யானந்த சுவாமியை மட்டுமே ஏன் கண்டிக்கவேண்டும்.//

  கட்டணம் வசூலிக்கும் எல்லா சமய அமைப்புகளையும் நான் கண்டனம் செய்கிறேன். இங்கு பேசப்பட்டது ஒருவரைப் பற்றி. எனவே, அதற்கான என் கருத்தைச் சொன்னேன்.
  //நன்னெறி பெற வருக என்று அழைத்து, யார் யார் அவரவர் வசதிக்குத் தகுந்த அளவு தரும் நன்கொடைப் பணத்தை மக்களை நன்னெறிப் படுத்த முனைபவனே ஆச்சார்யர். அவரே வணங்கத் தக்கவர். நீ காசு கொடுத்தால் மட்டுமே உனக்கு எதையும் செய்வேன் என்பவன் வியாபாரியே — அவன் எந்த சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி.// என்று பகிர்ந்திருந்தேனே, அதிலேயே உங்கள் கேள்விக்கான விடையும் இருக்கிறதே! தங்கள் கவனத்திற்கு அது எப்படித் தப்பியது? நான் காசு வாங்குபவர்கள் அனைவரையும்தானே வியாபாரி என்று சொல்லி இருக்கிறேன்! மனமுவந்து தரும் நன்கொடையைப் பெறக்கூடாது என்று நான் சொல்லவில்லையே!

  தாங்கள் அது நித்யானந்தாவுக்கு மட்டும் அது சொல்லப்பட்டது என்று ஏன் நினைத்தீர்கள்?

 31. ஒரு அரிசோனன் on October 3, 2014 at 11:02 am

  //கட்டணம் வாங்கிக்கொண்டு பயிற்சி முகாம்கள் நடத்துவது தவறு அல்ல. அதுவியாபாரமும் அல்ல.அதன் மூலம் திரட்டப்படும் நிதி அமைப்பின் வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் முதலீடு செய்யப்படுகிறது. //

  இது உங்கள் கருத்து ஐயா! பயிற்சி முகாம் நடத்துவது வியாபாரம்தான்! சமூக வளர்ச்சிக்கு நன்கொடை கேட்டுப் பெறலாம். சமய வளர்ச்சிக்கு ஏன் வியாபாரம் செய்ய வேண்டும்?

  எதுவும் கேட்காமல் கர்பிப்பாவன் ஆசார்யன்! நானாகக் கொடுப்பது குருதட்சிணை!
  கேட்டுப் பெற்றால் அது இரத்தல்! அப்பொழுது நான் கொடுப்பது ஈகை (தானம்)!
  நீ கொடுத்தால் நான் செய்வேன் என்றால் அது வணிகம். அப்பொழுது நான் கொடுப்பது கூலி!

 32. ஒரு அரிசோனன் on October 4, 2014 at 6:19 am

  //அரிசோனன் காஞ்சி மடத்தினை இங்கே தேவையின்றி இழுக்கவேண்டாம். அது எல்லோருக்கும் உரியதா? என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.//

  ஒரு கருத்தைச் சொல்வதற்கு உவமை கூறுவது வழக்கம். கருத்தை விட்டுவிட்டு உவமையைப் பிடித்துக்கொள்வது கருத்தைப்புரிந்துகொள்ளவிள்ளல்லை என்ற எண்ணத்தையே எழுப்புகிறது.

  தாங்கள் தங்களுடைய பதிவில் //காயத்ரி பரிவார் மட்டுமே கட்டணம் என்று எதையும் நிர்ணயிக்காது எல்லாசேவைகளையும் வழங்குகிறது// என்று சுட்டி உள்ளீர்கள். நான் தங்களை, “சைவர்கள் பலர் “கீதை”யைக் கொலைநூல் என்று கூறுவர். ஏன் காயத்திரி பரிவார் நிறுவனத்தை மேற்கோள் காட்டுகிறீர்கள்?” என்று வினவினேனா?

  காஞ்சி மடத்தை நான் மேற்கோள் கட்டியதும் காயத்திரி பரிவாருக்கு இணையே. நீங்கள் ஏற்றுக்கொள்ளவிட்டால் அவர்களது நற்பணி இல்லை என்று ஆகிவிடாது. கட்டணம் வாங்காது யார் எப்பணி (நற்பணி) செய்தாலும் (மாற்றுச் சமயத்தார் உட்பட), அதற்குத் தலை வணங்குவதே முறை.

  உங்களிடம் நூறு ரூபாய் இலாபம் சம்பாதித்து விட்டு, அதில் இருபது ரூபாயை நற்பணிக்கு நான் செலவிட்டாலும், நான் நற்பணி செய்யும் வியாபாரிதானே! வியாபாரி என்று ஒப்புக்கொள்வதில் என்ன குறைவு?

  இங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒருவர் வியாபாரியா இல்லையா என்பதுதான். அதற்கு உங்களிடமிருந்து தெளிவான விடை இன்னும் வரவில்லை என்பதே உண்மை.

 33. சிவஸ்ரீ. விபூதிபூஷண் on October 5, 2014 at 8:47 am

  ஒரு அரிசோனன்
  “இங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒருவர் வியாபாரியா இல்லையா என்பதுதான்”.
  வணிகம் என்பது நியாயமான முறையில் நடத்தப்பட்டால் அதுவும் சரிதான். கொள்ளை லாபம் அடிப்பது, கலப்படம் செய்வது இவைகள்தான் தவறு. வேளாண்மை, தொழில், சேவை(வியாபாரம்) எல்லாமும் நியாயமான முறையில் செய்யப்படவேண்டும். இன்றைக்கு இந்திய அதாவது ஹிந்து ஆன்மிகம் ஒரு பெரும் சேவைத்துறையாக உருவெடுத்துள்ளது. யோகம் த்யானம், இவையெல்லாம் இந்திய நாட்டிற்கு அன்னிய செலாவணியைக் கொண்டுவரும் துறையாக உருவெடுத்துள்ளன. நமது பாரம்பரியத்தில் புதியதாக தோன்றியுள்ள பல்வேறு குருமார்கள் பண்டைய ஆன்மிக சமய நுட்பங்களையெல்லாம் அருமையான முறையில் அமைப்புகளை உருவாக்கி அனைவருக்கும் உலகெங்கும் நம் நாடெங்கும் அளித்துவருகின்றனர். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை, பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி அறக்கட்டளை, அருள்தந்தை வேதாத்ரி மகரிசி அவர்களின் மனவளக்கலை, ஸ்ரீ ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஈசா யோகமையம் ஆகியவை ஆன்மிகத்தினை அந்த வகையில் அனைவருக்கும் அளித்துவருகின்றன. சாதி பாலின பேதமின்றி ஆன்மிகம் அனைவரையும் சென்றடைகின்றது. ஸ்ரீ நித்யானந்தரின் அமைப்பும் அத்தகையதே. சமய ஆன்மிக சமூக நிறுவனம் என்றே இவற்றைக்காணவேண்டும். Social Enterprise socio-cultural religious spiritual enterprise என்றே கருதவேண்டும். கட்டணம் வாங்கிக்கொண்டு பயிற்சி அரங்குகள் நடத்தினாலும் இவை தன்னார்வத்தொண்டர்களையும் நிதி ஆதாரங்களையும் திரட்டி நம்முடைய பாரம்பரிய கலைகள், மக்கள் நலம் முன்னேற்றம் ஆகியவற்றில் அரும் பங்காற்றி வருகின்றன. ஆகவே இவை எல்லாம் அவசியமே. மேலை உலகில் ஏற்பட்டுள்ள ஆன்மிக பஞ்சத்திற்கு உணவளிக்கும் அற்புத முயற்சிகள் இவை என்றால் மிகை அன்று. சட்டபூர்வமாக இவை எல்லாம் சேவை நிறுவனங்கள். சொசைடி அல்லது டிரஸ்ட். ஒரு வாதத்திற்கு இவையெல்லாம் வணிக நிறுவனங்கள் என்பதை ஏற்றாலும் அதில் தவறோ பாவமோ இல்லை. ஆன்மிகத்தினை சும்மாதான் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று யார் சொன்னார்கள். ஏற்கனவே இருக்கிற மடங்கள் பெரும்பாலும் தேக்க நிலையில் தான் உள்ளன. அவை செய்யததை இவை செய்கின்றன. எனவே எல்லா நவீன ஹிந்து ஆன்மிக அமைப்புகளையும் வரவேற்கிறேன். சிரமேற்கொண்டு பாராட்டுகின்றேன். வேத நெறி தழைத்தோங்கட்டும். தென்னாடுடைய சிவனே போற்றி

 34. Subramaniam Logan on October 5, 2014 at 6:38 pm

  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
  இம்மொழிபெயர்ப்பு கட்டுரைக்கான கருத்துக்களம் சற்று தெவிட்ட ஆரம்பித்துவிட்டது. எனவே அணைத்து கருத்துக்களிலும் அதனை இட்டவர்களினது அறிவு புலமை நேர்மை என்பவற்றிலிருந்தும் ஏதேனையும் தேர்ந்து எமது நிலைப்பாடு சரியா என்று மீள்பரிசோதனை செய்வதே ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்பது வெறும் வாசகனாக அடியவனின் கருத்து.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey