இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

October 20, 2014
By

மூலம்: பல்பீர் புஞ்ச் எழுதிய கட்டுரை (இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.10.2014)
தமிழில்: எஸ்.ராமன்

இந்தியாவையும், அதன் ஆணி வேரான இந்துத்துவத்தையும், வெகு காலமாகத் தனக்கே உரிய காமாலைக் கண்ணோட்டத்தில் கவனித்துக் கொண்டிருக்கும் மேலை நாடுகளின் ஓரகப் பார்வை மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், அமைதிக்கான இந்த வருடத்தின் நோபல் பரிசுத் தேர்வுகள் அவை பற்றி ஆவலுடன் கேட்க விரும்பும் ஆர்வலர்கள் அனைவரது உள்ளங்களையும் குளிர வைத்திருக்கும்.

விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசுகளை தீர்மானிக்கும் ஒரு குழு தீர்மானிக்காது, அமைதிக்கான பரிசை நார்வே நாட்டின் பாராளுமன்றக் குழு ஒன்று தேர்வு செய்கிறது. அதனால் அந்தத் தேர்வில் அரசியல் சாயமும், உணர்ச்சிகளும் கலப்பது இயற்கை என்பது எழுதாத விதி போலத் தெரிகிறது. கிடைத்தற்கரிய அந்தப் பரிசைப் பெறுவதற்கு, அது கிடைக்கப் பெற்றவர்கள் எல்லா விதத்திலும் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் பரிசுத் தேர்வுக்காக நார்வே குழு அறிவித்துள்ள காரணத்தை ஒத்துக்கொள்வதில் தான் பிரச்சினை இருக்கிறது. “கல்விக்கான ஆதரவையும், வன்முறைக்கான எதிர்ப்பையும் திரட்டுவதில் ஓர் இந்து முஸ்லீம் உடனும், ஓர் இந்தியன் பாகிஸ்தானியனுடனும் சேர்ந்து போராடுவது முக்கியம் என்று இந்தக் குழு கருதுகிறது” என்று அறிவிக்கும் அந்தக் குறிப்புதான் உறுத்துகிறது.

பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகள் தவிர வேறெந்த நாடுகளும் கல்வி விஷயங்களிலோ, குழந்தைகள் நலன் காப்பதிலோ இவ்விரு நாடுகளின் பங்களிப்பை ஒருசேரப் பார்ப்பது கிடையாது. இந்தியாவின் அரசியல் சட்டப்படி கல்வி கற்பதற்கான உரிமை குழந்தைகளுக்கு இருக்கிறது; மேலும் அரசியல் உரிமைச் சட்டப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதிலும் தடை இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண்கள் கல்வி பெறுவது 80 விழுக்காடையும் தாண்டி, சில இடங்களில் 100 விழுக்காடையும் எட்டியிருக்கிறது.

nobel_2014_malala_satyarthi

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதில் நடைமுறையில் பல இடங்களில் குறை இருக்கிறது. அது தவிர, ஒரு குடும்பத்தின் பரிதாபகரமான ஏழ்மை நிலையால் குழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் இருப்பதற்கு பெற்றோர்களாலும் முடிவதில்லை. இதற்கான தீர்வு சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதிலும், குழந்தைகளின் கல்வி உரிமையை நன்கு நிலைநாட்டச் செய்வதிலும் தான் இருக்கின்றன. அவ்வாறு அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதிலும், இரகசியமாகச் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுவதைப் பலரும் அறியும் வண்ணம் வெளியே கொண்டுவருவதிலும் நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

அவருடையது போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சேவையால் இந்திய அரசாங்க நிர்வாகத்தின் வலிமை நன்கு கூடி வருகிறது. தற்போது கிடைத்துள்ள நோபல் பரிசு தரும் வளத்தால் அந்த வலிமை மேலும் கூடி, சட்ட திட்டங்கள் 100 விழுக்காடு அளவும் அமல்படுத்தப்பட்டு, கல்வி உரிமையும் நிலைநாட்டப்பட்டு பெருமளவிற்கு நன்மை விளையும் என்பது நிச்சயம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படியும், இந்தியச் சட்ட அமலாக்க முறைப்படியும் நாம் ஆண்களையும், பெண்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. மேலும் கல்வி பயிலும் விஷயத்தில் பல தலைமுறைகளாகப் பெண்களுக்கு இருந்த அநீதிகளை நீக்கும் பொருட்டு, பல மாநிலங்களில் பெற்றோர்களுக்குப் பல விதமான விசேஷமான வசதிகள் செய்து தரப்பட்டு, அவர்கள் தங்கள் பெண்களைப் படிக்க அனுப்பி வைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிரார்கள்.

அவ்வாறான நிலைமை பாகிஸ்தானில் இல்லை. பதினைந்தே வயதான மாலாலா யூசுப்ஸை பாகிஸ்தானியப் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடிய போது, பெண் கல்வியை முஸ்லிம் மதக் கொள்கை ஏற்காது என்ற காரணத்தால் அவளைக் கொல்வதற்காக முஸ்லீம் தீவிரவாதிகளான தாலிபான் துப்பாக்கியால் சுட்டார்கள். அவள் சாகாமல் உயிர் தப்பிப் பிழைத்ததற்கு, அவள் உடனே பாகிஸ்தானில் இருந்து சிகிச்சைக்காக லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டதே காரணம். அவளைக் கொல்வதற்குத் தாலிபான் பயங்கரவாதிகள் இன்னமும் பாகிஸ்தானில் காத்துக் கொண்டிருப்பதால் அவள் அங்கு செல்ல முடியாது லண்டனிலேயே தங்கி வேலை செய்கிறாள். இஸ்லாமிய சட்டமுறையை முஸ்லீம் மத குருமார்கள் இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளதால் அவர்கள் மாலாலாவின் பெண் கல்வி உரிமைக்கான போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மத குருமார்களின் இந்த எதிர்ப்பு பயங்கரவாதிகளின் எதிர்ப்புக்கு ஆதரவாக இருக்கிறது.

இதற்கு முற்றிலும் நேர் மாறாக, இந்திய அமைப்புச் சட்டம் எந்தவொரு மதத்தையும் வேறுபடுத்தி ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட மதங்களின்படி வந்த வழிமுறைகளும், அதன் சம்பிரதாயங்களும் எதுவானாலும், அனைத்துக்கும் பொதுவான சட்டத்தின்படியே நீதித்துறை செயல்படுகிறது. அதனால் இந்த இரண்டு தேசங்களுக்கும் இடையே உள்ள அடிப்படையான வேற்றுமைகளை நோபல் பரிசுக் குழு அறியாது இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

மேலும் நோபல் பரிசு பெற்ற அந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில் இருந்துகொண்டு போராடுகிறார். மாலாலாவோ தன் தாய் நாட்டில் தங்கியிருக்க முடியாது, பாதுகாப்பு வேண்டி அடைக்கலம் புகுந்து இங்கிலாந்து போன்ற நாட்டில் தங்கிச் சேவை செய்யும் நிலையில் தான் இருக்கிறாள். இது தவிர, இந்தியாவோ பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால் பாகிஸ்தானோ பயங்கரவாதத்தைத் தன் மண்ணில் ஊக்குவித்து வளர்த்து, அதைத் தன் நாட்டில் உள்ள சிறுபான்மையோர் மீதும், அண்டை நாட்டின், முக்கியமாக இந்தியா, மீது கட்டவிழ்த்து விடுவதை ஓர் ஆயுதம் போலப் பயன்படுத்துவதில் அதன் நிர்வாகமே பங்கு வகிக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு வரையறுத்துள்ள “சிறுவர்களைப் பணியில் அமர்த்துவதைத் தடுக்கும்” சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்கிற போது, அதன் வேறோர் கோணத்தை நாம் கவனிக்காது இருந்து விடக் கூடாது. நாம் விவாதிக்கப் போகிற அந்த அம்சம் ஒரு சிறுவனின் மதத்தையோ, குலத்தையோ சம்பந்தப்படுத்திச் சொல்லப்படுவது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வி கேள்விகளுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து படிப்பறிவைப் பரவலாக்கும் நம் முயற்சியில், தச்சு வேலை, இயந்திரத் தொழில், கட்டுமான வேலை, உலோக வார்ப்புத் தொழில், நுணுக்கமான பொற்கொல்லன் வேலை போன்ற பட்டறிவை வளர்க்கும் கைவினைப் பணிகளில் ஒருவன் தேர்ச்சி அடையும் மகிமையை அனைவரும் உணர வேண்டிய பொறுப்பை நாம் மங்கச் செய்துவிட்டோம். அதன் விளைவாக, ஒருவன் படித்திருந்தாலும் அவன் உருப்படியானதொரு வேலை செய்யத் தெரியாத நிலையை உண்டாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி விட்டதோடு, கைவினைப் பணியாளர்களை வளர்க்கவும் தவறி விட்டோம்.

பண்டைய வழக்கப்படி குடும்பத் தொழில் ஒன்று அவரவர் கைவினையால் சந்ததி சந்ததியாக வரும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டதால், இன்று கைவினைப் பணியாளர்களே தங்கள் பிள்ளைகள் தாங்கள் செய்யும் பணிகளைத் தொடராமல் அலுவலகம் சென்று ஆபீசராக வேலை பார்க்கப் போவதையே ஊக்குவிக்கின்றனர். இந்த இமாலயத் தவறை நன்கு உணர்ந்த கல்வியாளர்கள் நடுநிலைப் பள்ளிக் கல்விக்குப் பிறகு தொழில் கல்வி ஒன்றை ஒருவன் தொடரவும், மேல்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்பு அது போன்றவற்றில் சிறப்புத் தகுதி பெறவும் வழி வகுத்திருக்கின்றனர்.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிறுவர்கள் வேலைக்குச் செல்வது தகாது என்னும்போது, அந்தச் சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இருந்து கூடமாட வேலை செய்து பரம்பரைத் தொழிலையும் கற்க முடிவதில்லை; அவர்களது ஏழ்மையால் படிப்பறிவுக் கல்வியையும் கற்க முடியவில்லை. அதைத் தீர்க்கும் முகமாக மேல்நிலைப் பள்ளி வரை ஒருவன் கற்பதற்கு கல்வியை குறைந்த செலவில் அளிக்க அரசு வழி வகை செய்திருந்தாலும், தொழில் கல்வித் திறனைப் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றிச் சரி செய்வதற்கு நாம் இன்னமும் அடியெடுத்து வைக்கவில்லை.

பருவ வாயிலில் இருக்கும் ஒரு சிறுவன் மோட்டார் மெக்கானிக்காக இருக்கும் ஒருவரிடம் சென்று தொழில் செய்யுக் கற்றுக்கொள்ளப் போனால், அவன் வளர்ந்து பெரியவன் ஆகும் சமயம் தன் காலில் தானே நிற்கும் தகுதி அடைவதோடு, வேறோர் இடத்தில் நல்ல வேலை கிடைக்கும் லாபத்தையும் அடைகிறான். ஆனால் அதே கால அளவிற்குப் பள்ளி சென்று படித்து விட்டு வரும் 18-வயதை உடைய ஒருவன் குறிப்பிடத் தக்க தகுதியை அடையாதது மட்டும் இன்றி, தன்னால் என்ன தொழில் செய்ய முடியும் என்றும் தெரியாது இருக்கிறான். அதனால் சிறுவர்களைப் பணியில் அமர்த்துவது நல்லது என்ற கருத்து இங்கே வைக்கப்படவில்லை; மாறாக செய்தொழில் திறனை வளர்ப்பதும், அந்த வழியில் தொடர்ந்து கற்பவர்களும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவர்களைப் போலவே மதிக்கப்பட வேண்டும் என்றுதான் இங்கே வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் நமது கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கியவாறும் இருக்கும்; நம் சமுதாயத்தில் தொழில் தொடர்பாக உணரப்படும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கியவாறும் இருக்கும்.

சிறுவர்கள் பள்ளிக்கும் செல்ல வேண்டும். அதற்கும் மேலாக, தங்களது முந்தைய பணிகளால் நன்கு பெயர் வாங்கி, ஏற்றுமதி மார்க்கெட்டிலும் நல்ல புகழ் பெற்றவர்களிடம் தொழில் செய்து, அவர்களிடம் இயற்கையாகவே படிந்துள்ள பல விதமான திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டும். அத்தகைய சிறுவர்கள் சட்டத்திற்குப் புறம்பாகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள் என்ற கருத்து நீங்கி, மாறாகத் தங்களது கடின உழைப்பால் நுண்ணிய திறன்களை வளர்த்துக்கொண்டு, பொருளாதாரத்திற்கும் தங்களாலான சேவையை அளிக்கிறார்கள் என்ற கருத்து வளர வேண்டும். அவ்வாறான நிலையில் வேலை செய்யும் திறமை கொண்டவர்களும் வளர்வார்கள்; வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும். தொழிற்சாலையில் வேலை செய்தால் தான் தொழிற் பயிற்சி பெறுவதாக அங்கீகரிக்கப்படும் நமது சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு, ஏற்கனவே புகழ் பெற்றுள்ள தொழில் கலைஞர்கள், மற்றும் மூத்தோர்களிடம் எடுத்துக் கொள்ளப்படும் பயிற்சியும் அவ்வாறே அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஒரு போலீஸ் கான்ஸ்டபில் ஆவதற்கும், தகுதி ஏதுமே இல்லாது ஓர் ஆசிரியர் ஆவதற்கும் எவரிடம் கையூட்டு கொடுக்கலாம் என்று அலையும் ஒரு கும்பல் இருக்கும் நாடாக இல்லாமல், இந்தியா பல வகையான திறங்கள் கொண்ட பலதரப்பட்ட மக்கள் இருக்கும் ஒரு பரந்து, விரிந்த தொழில் சந்தையாக மாறவேண்டும். அவ்வாறான ஒரு சீர்திருத்தத்தை, எந்த விதமான இடையூறுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி வந்து, நிறைவேற்றும் அத்தகைய மாமனிதர்களில் ஒருவருக்கு அடுத்த நோபல் பரிசு கிடைக்க வேண்டும்.

Tags: , , , , , , , , , , , , , , , , ,

 

11 மறுமொழிகள் இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

 1. An Unknown Man on October 20, 2014 at 7:34 am

  Here’s what you need to know about Kailash Satyarthi and the politics of the Nobel Prize.

  http://www.niticentral.com/2014/10/12/kailash-satyarthis-nobel-prize-decoded-240562.html

  It’d be great if someone from the Tamil Hindu editorial team could translate and update the Tamil version of this article on this website.

 2. தணிகைநாதன் on October 20, 2014 at 9:16 am

  இது குல்லுக பட்டர் முன்வைத்த குலக்கல்வி திட்டத்தின் 2014 வெர்ஷனா? இந்துத்வா, நோபெல், இந்தியா, பாகிஸ்தான், தாலிபான், முஸ்லிம் பிற்போக்கு, குலக்கல்வி….. என்னங்கய்யா. //மதத்தையோ, குலத்தையோ சம்பந்தப்படுத்திச் சொல்லப்படுவது அல்ல// அப்டின்னு ஒரு டிஸ்க்ளெய்மர் போட்டுட்டா என்ன கருமத்த வேணும்னாலும் எழுதிக்கலாம்…

 3. மயில்வாகனன் on October 20, 2014 at 9:16 am

  பெரும்பான்மையோரின் உள்ள உணர்ச்சிகளை அப்படியே கொட்டி எழுதப்பட்ட கட்டுரை. உங்கள் பணி தொடரட்டும். ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஞானவேலனாம் முருகப்பெருமான் உங்களுக்கு என்றும் அருள்பாலிக்கட்டும்.

 4. raman on October 20, 2014 at 12:37 pm

  ..”இது குல்லுக பட்டர் முன்வைத்த குலக்கல்வி திட்டத்தின் 2014 வெர்ஷனா?”…
  முதலில் “குல்லுக பட்டர்” என்று மூதறிஞர் ராஜாஜியை இழிவுபடுத்தி, இயற்கையாகவே ஒருவருக்கு வரும் திறமையை வளர்ப்பதில் மோசம் செய்தாகி விட்டது. பின்பு அதே மேதாவியுடன் கை கோர்த்துக்கொண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடித்து, ஹிந்தி இங்கு பரவுவதையும் தடுத்து தமிழ் நாட்டையே ஒரு மொழித் தீவாகச் செய்தாகி விட்டது. இன்னும் என்ன வேண்டும் இவர்களுக்கு? சொல்வது புரியவில்லை என்று விளக்கம் கேட்டால் பதில் சொல்லலாம்.கண்ணை மூடிக்கொண்டு, சிந்தனையும் செய்யாது, ” ரூபாய்க்கு மூன்று படி, இல்லையேல் எனக்கு முச்சந்தியில் வைத்து சாட்டையடி” என்று கூவிய கூட்டம் சொன்னதற்குத் தலையாட்டிய பொம்மைகளுக்கு எதைச் சொல்லி எப்படிப் புரிய வைப்பது? படிப்பறிவுக் கல்வியுடன், பட்டறிவுக் கல்வியும் கற்பதில் என்ன குறை வந்து விடும்?

 5. g ranganaathan on October 20, 2014 at 9:36 pm

  “தணிகைநாதன் on October 20, 2014 at 9:16 am
  இது குல்லுக பட்டர் முன்வைத்த குலக்கல்வி திட்டத்தின் 2014 வெர்ஷனா? இந்துத்வா, நோபெல், இந்தியா, பாகிஸ்தான், தாலிபான், முஸ்லிம் பிற்போக்கு, குலக்கல்வி….. என்னங்கய்யா. //மதத்தையோ, குலத்தையோ சம்பந்தப்படுத்திச் சொல்லப்படுவது அல்ல// அப்டின்னு ஒரு டிஸ்க்ளெய்மர் போட்டுட்டா என்ன கருமத்த வேணும்னாலும் எழுதிக்கலாம்…”
  நண்பர் தணிகைநாதன் போன்றோர் திராவிட மாயையில் சிக்கி உழலும் அப்பாவிகள். இதைபோன்ற அழுகிய சிந்தனைகளின் ஊற்றுக்கண் தான் திராவிட இயக்கங்கள். திரு பல்பீர்சிங் அவர்களின் கட்டுரையை தமிழில் அளித்ததற்கு நன்றி. தணிகையை வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு அனுப்பி மலா லாவைபற்றி சொற்பொழிவாற்ற அனுப்பலாம். நயத்தக்க நாகரிகம் மிக்க தலிபான்கள் தணிகைக்கு என்ன பரிசு தருவார்கள் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

 6. பொன்.முத்துக்குமார் on October 20, 2014 at 10:17 pm

  தமிழகம் அரைகுறைகளால் நிரம்பியுள்ளது என்பதற்கு, தணிகைநாதன், நீங்கள் ஒரு முக்கிய சாட்சி.

 7. மயில்வாகனன் on October 20, 2014 at 11:25 pm

  இன்று தமிழக குல்லுக பட்டர் திரு கருணா தான். இந்த குல்லுக பட்டர் ஆட்சிக்கட்டிலில் ஏறி நாட்டை நாசம் செய்ததற்கு அந்த முன்னாள் குல்லுக பட்டர் இராஜாஜி ஒரு சிறு காரணம் தான். உண்மைக் காரணம் எம் ஜி ஆரை 12-1-1967 அன்று சுட்ட தமிழின துரோகி எம் ஆர் இராதா என்ற வில்லன் நடிகர். வெறும் பட்டப் படிப்பு என்பது எதற்கும் உதவாது. அறிவியல் படிப்பில் கூட கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை விட, செயல்படுத்தும் கணிதம்(APPLIED MATHEMATICS ), செயல்படுத்தும் இயற்பியல்(APPLIED PHYSICS), செயல்படுத்தும் வேதியியல்( APPLIED CHEMISTRY) , செயல்படுத்தும் மருத்துவம் ஆகியவை தான் உலகம் எங்கும் மதிக்கப்படுகின்றன. நல்ல பணம் சம்பாதிக்கும் கல்வி அதுதான். இந்த செயல்முறை அனுபவம் பெரும் கல்வியை பெறுவதற்கு அன்றே இராஜாஜி ஒரு வழி ஏற்படுத்திக்கொடுத்தார். அதனை ஜாதிசாயம் பூசி , நாசம் செய்தனர் திராவிட இயக்கங்கள். இன்றோ உலகம் முழுவதும் இராஜாஜி கொண்டுவந்த தொழில்கல்விக்கு தான் பெரு மதிப்பு இருக்கிறது. அரசியல், சரித்திரம், இலக்கியம், ஆகிய படிப்புக்களை படித்தோருக்கு ஓட்டலில் மேசை துடைக்கும் வேலை கூட கிடைக்காது என்பதே உண்மை. பயன்படாத கல்வியை போதிப்பதால் ஒரு உபயோகமும் இல்லை. இன்று தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் போதிக்கப்படும் கல்வி வெறும் ஏட்டு சுரைக்காய். கறிக்கு உதவாது. திராவிட இயக்கங்களால், தமிழன் டாஸ்மாக் அருந்தி, 1-9-1972 முதல் நடைப்பிணம் ஆகி எதற்கும் லாயக்கில்லை என்று ஆகிவிட்டான். இப்போது தமிழன் போதையில் மயங்கி சாலையில் பிணம்போல விழுந்து கிடப்பதால், இங்கு வேலை பார்க்க ஆள் இல்லாமல், பீகார், ஒரிஸ்சா, வங்காளம், நேபாளம் ஆகிய பகுதி மக்கள் ஏராளம் இங்கு வந்து வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழனால் எழுந்திருந்து நிற்க கூட முடியாது. தெளிய பல வருடம் ஆகும். இந்த குடிப்பழக்கத்தை தமிழனுக்கு அறிமுகம் செய்தவன் நாசமாய்ப் போவான். அவனுடைய சந்ததிகளும் நாசமாய்ப் போவார்கள்.

 8. Subramaniam Logan on October 21, 2014 at 1:35 am

  பெரும்பான்மையோரின் உள்ள உணர்ச்சிகளை அப்படியே கொட்டி எழுதப்பட்ட கட்டுரை. உண்மை திரு மயில்வாகனன் ஐயா.

 9. raman on October 21, 2014 at 10:17 am

  “…. செயல்முறை அனுபவம் பெரும் கல்வியை பெறுவதற்கு அன்றே இராஜாஜி ஒரு வழி ஏற்படுத்திக்கொடுத்தார். அதனை ஜாதிசாயம் பூசி , நாசம் செய்தனர் திராவிட இயக்கங்கள். ”

  திராவிட இயக்கங்கள் ஜாதி சாயம் பூசியது உண்மை என்றாலும், ராஜாஜியை அடுத்து வந்த பெருந் தலைவர் காமராஜர், ராஜாஜியின் வழி வந்த C சுப்பிரமணியத்தை மந்திரி சபையில் சேர்க்க மாட்டார் என்று அனைவரும் நினைத்த போது, அவரைச் சேர்த்ததும் அல்லாது கல்வி மந்திரியாகவும் ஆக்கினார். ஆனாலும் பகுதி நேரக் கல்வித் திட்டம் கை விடப்பட்டது. எனக்கு அப்போது 11 வயது இருக்கும். ஓர் ஆனந்த விகடன் கார்ட்டூன் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. “ராஜாஜியின் கல்வித் திட்டம்” என்ற தலைப்பிட்ட கோப்பு ஒன்றை குப்பைக் கூடையில் CS சேர்ப்பதாக அதில் இருக்கும். கல்வி மட்டும் அல்லாது பல விஷயங்களிலும் காமராஜர் நன்மையே புரிந்தார் என்றாலும், இந்தத் திட்டத்தைக் கைவிட்டதில் அவருக்கும் பங்கு உண்டு. ஆனால் அன்றைய அரசியல் நிலை என்னவோ?

  சாதி சாயம் பூசுவது திராவிட இயக்கங்களுக்குக் கைவந்த கலை அல்லவா? ராமரை பிராம்மணர் என்று சொல்லி பிராம்மணரான ராவணனுக்கு “ராவண லீலா” கொண்டாடியவர்கள்தானே? மேலும் சரித்திர காலத்தில் இருந்து ராஜாங்க விஷயங்களிலும், கற்றவர் அவைகளிலும் சம்ஸ்க்ருதம் ஒரு தொடர்பு மொழியாக (lingua franca) இருந்ததை அது பிராமண மொழி என்று சாயம் பூசி வெறுத்தவர்கள்தானே? ஆனாலும் காளிதாசன் போன்ற சம்ஸ்க்ருத கவிகள், மற்றும் பண்டிதர்கள் பலரும் பிராமணர்கள் அல்ல என்பதை அறியாத இவர்களின் வழி வந்தவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்?

 10. S Dhanasekaran on October 21, 2014 at 11:24 am

  செயல்முறை கணிதம் போன்றவற்றை கற்றலும் தந்தையின் தொழிலை மகன் கற்றலும் வெவ்வேறானவை
  .

 11. venkatesh on October 21, 2014 at 8:20 pm

  எதுவானாலும், சிறார்களின் விடுதலைக்கு கிடைத்திருப்பதாக நினைத்து ,நமது குறைகளை களைய சுதந்திரம் இருந்தும், மதம் கட்டுப்பாடு இல்லாவிட்டாலும் , நமது குறையை நாம் சரி செய்வோமே? இல்லையென்றால், நம் குறை நமக்கு தெரியாமல் போய், தடுக்க இயலாமல் போய் விடுமே?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*