தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

வந்தால் உன்னோடு…

வராவிட்டால் தனியாக…

எதிர்த்தால் உன்னையும் மீறி…

லட்சியம் அடையப்படும்

– வீர சாவர்க்கர்.

வழிகாட்டியை வணங்கும் தலைவன்

அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர்.

சறுக்கலும் எள்ளல்களும்:

முதலாவதாக, சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10),  பஞ்சாப் (2),  ம.பி. (3),  கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜக- அகாலிதளம்- லோக்சக்தி கூட்டணி 8 தொகுதிகளிலும், பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதாதளம்- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி 10 தொகுதிகளிலும் வென்றன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பாஜகவின் புதிய நட்சத்திரங்கள்

அடுத்து, காலியான மூன்று லோக்சபா தொகுதிகள், உ.பி. (11),  ராஜஸ்தான் (4),  குஜராத் (9),  மேற்கு வங்கம் (2),  அசாம் (3), சிக்கிம் (1),  திரிபுரா (1),  சத்தீஸ்கர் (1), சீமாந்திரா (1) ஆகிய   8 மாநிலங்களில் மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செப். 13-ல் நடைபெற்றது. இதில் பாஜக சற்றே சறுக்கியது.

பாஜக ஆளும் ராஜஸ்தானில் காங்கிரஸ் 3 இடங்களில் வென்றதும், பாஜகவின் மாபெரும்  லோக்சபா வெற்றிக்கு வழிவகுத்த உ.பி.யில் சமாஜ்வாதி மீண்டெழுந்ததும், மோடியின் மாநிலமான குஜராத்திலேயே காங்கிரஸ் 3 இடங்களில் வென்றதும் பெரிய அளவில் பேசப்பட்டன. மொத்தத்தில் (33) பாஜக தன்னிடமிருந்த 13 தொகுதிகளை இழந்து, 13 இடங்களை தக்கவைத்தது. மேற்கு வங்கத்தில் பாஜக பெற்ற புதிய வெற்றி மட்டுமே அன்று ஆறுதலாக அமைந்தது.

இந்தத் தோல்வியை அடுத்து, மோடியின் மவுசு குறைந்துவிட்டதாகவும், பாஜகவின் வீழ்ச்சி துவங்கிவிட்டதாகவும், காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிக் கட்சிகள் முழங்கிவந்தன. இந்த இடைத்தேர்தல் தோல்விகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால், தமிழகம் போல இடைத்தேர்தலை கௌரவப் பிரச்னையாகக் கருதி காசை இறைத்து வெற்றி பெறும் கலை பாஜகவுக்குத் தெரிந்திருக்கவில்லை.

உண்மையில் இந்த முடிவுகளுக்குக் காரணம், மோடி அரசு மீதான அதிகப்படியான எதிர்பார்ப்பே. தவிர, பாஜகவின் எதிரிகள் சமயோசிதமாகச் செயல்பட்டு வாக்குச் சிதறலைத் தவிர்த்த்தும் அவர்களின் வெற்றிக்கு வழி வகுத்தது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்கு வழிவிட்டது.

இதையடுத்து நாடு முழுவதும் பாஜகவின் எதிரிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மோடி அரசின் தேனிலவு நாட்கள் முடிவடைந்துவிட்டன என்று கொக்கரித்தார், இடைத்தேர்தலில் எள்ளளவும் பங்கு வகிக்காத மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத். BJP cadre

பழைய பகையை மறந்து கைகோர்த்த லாலுவும் நிதிஷும் பாஜகவின் வெற்றிப்பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டதாக கர்ஜித்தனர். மேற்குவங்கத்தில் பாஜக பெற்ற  ‘பிள்ளையார் சுழி’ வெற்றியைக் கண்டும்கூட, அம்மாநில முதல்வர் மம்தா ‘இனி பாஜகவுக்கு இறங்குமுகம் தான்’ என்றார்.

இந்த நிலையில் தான் ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அக். 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில், மஹாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தான் கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுவந்தது. ஹரியானாவில் காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இவ்விரு மாநிலங்களிலும் நிலவிய ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பலன் பாஜகவுக்கு முழுமையாகக் கிடைக்காது என்றே ஊடகங்கள் ஜோதிடம் கூறிவந்தன.

ஹரியானாவில் இமாலய வெற்றி:

ஹரியானாவில் ஜாட் ஜாதியினரின் ஆதிக்கம் காரணமாக பஜன்லால், பன்சிலால், தேவிலால் ஆகிய மூவரின் கைப்பிடிக்குள் கடந்த பல்லாண்டுகளாக ஹரியானா மாநிலம் தவித்து வந்தது. இதற்கு 2004-ல் காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்தது; பூபீந்தர் சிங் ஹூடா முதல்வரானார். ஆனால் அவரும் ஜாட் தான்.

தேவிலால் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) கட்சி காங்கிரஸுக்கு எதிரான கட்சியாக இருந்தது. பஜன்லால் மறைவுக்குப் பிறகு அவரது மகன் குல்தீப் பிஷ்னோய் தலைமையில் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் இயங்குகிறது. பன்சிலால் மறைவுக்குப் பின் அவரது மகன் சௌத்ரி சுரேந்திர சிங் தலைமையில் அவரது ஹரியானா விகாஸ் கட்சி இயங்குகிறது.

இம்மூன்று கட்சிகளுமே பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பின. ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் ஏற்கனவே லோக்சபா தேர்த்லில் தேசிய ஜனநாயக்க் கூட்டணியில் இடம்பெற்றாலும் அதனால் அப்போது வெல்ல முடியவில்லை. இந்நிலையில் பாஜகவின் வெற்றிமுகத்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற இம்மூன்று கட்சிகளும் துவக்கத்தில் முயன்றன. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஓம் பிரகாஷ் சௌதாலா, சுரேந்தர் சிங் ஆகியோருடன் கைகோர்க்க பாஜக விரும்பவில்லை.

தனது லோக்சபா தேர்தல் கூட்டணிக் கட்சியான ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடரவே பாஜக ஆர்வம் காட்டியது. ஆனால், அக்கட்சி ஹரியானாவில் அதிக இடங்களில் போட்டியிட விரும்பியது. அக்கட்சி பாஜகவை மிகக் குறைவாக மதிப்பிட்டதால் வெகுண்ட தேசியத் தலைமை, அதனுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்து களம் கண்டது.

ஆக, ஹரியானாவில் ஐந்துமுனைப்போட்டி உருவானது. ஆளும் காங்கிரஸ், முந்தைய தோழமைக் கட்சிகளான லோக்தளம், ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ், ஹரியானா விகாஸ் கட்சி ஆகியவற்றுடன் பாஜக மோதியது. பாஜகவின் பஞ்சாப் மாநில சகாவான அகாலிதளம், ஓம்பிரகாஷ் சௌதாலாவின் லோக்தளத்தை ஆதரித்து பிரசாரம் செய்ததுடன் கூட்டணியிலும் இடம் பெற்றது. ஐக்கிய ஜனதாதளத் தலைவர் நிதிஷ்குமாரும் கூட, ‘மோடி எதிர்ப்பு’ என்ற கோஷத்துடன் ஹரியானாவில் சௌதாலாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

ஊழல் வழக்கால் சிறைத்தண்டனை பெற்ற ஓம்பிரகாஷ் சௌதாலா, உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீனில் விடுதலையாகி வந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்தார். அவருக்கு ஜாட் ஜாதியினரின் ஆதரவு பெருமளவில் காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூபீந்தர் சிங் ஹூடா அரசு மீதான அதிருப்தியும் அவரது அரசின் ஊழல்களும் மக்களிடையே பரவி இருந்த்தால் சௌதாலா கட்சி வென்றுவிடும் என்றே கணிக்கப்பட்டது.

மனோகர் லால் கட்டார்
மனோகர் லால் கட்டார்

ஆனால், தேர்தல் முடிவுகளில் அனைவரையும் பாஜக ஆச்சரியப்படுத்தியது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வென்றது. இதன்மூலம், ஹரியாணா சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் 15, இந்திய தேசிய லோக்தளம் 19, ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸ் 2, சிரோமணி அகாலிதளம்- 1, பகுஜன் சமாஜ் கட்சி- 1, பிறர் 5 இடங்களில் வென்றனர். இந்த மாபெரும் வெற்றிக்கு பாஜக தலைவர் அமித் ஷாவின் தேர்ந்த வியூகம், மாநிலக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு, பிரதமர் மோடியின் பிரசாரம் ஆகியவையே காரணமாகின.

ஹரியானாவில் பாஜக ஆட்சியை முதல்முறையாகப் பிடிக்கிறது.  மனோகர் லால் கட்டார் (60) தேர்வாகி இருக்கிறார். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்; பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்; இயக்கப் பணிகளில் மிகுந்த அனுபவம் கொண்ட இவரது தலைமையில் ஊழலற்ற ஹரியானா உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

மஹாராஷ்டிராவில் மகத்தான வெற்றி:

மஹாராஷ்டிரா அரசியல் கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ்- சிவசேனை இடையிலானதாகவே இருந்துவந்திருக்கிறது. இங்கு பாஜக நல்லநிலையில் வளர்ந்திருந்தபோதும், ஹிந்துத்துவ சிந்தனையுடன் கூடிய சிவசேனையை அரவணைத்தாக வேண்டிய கட்டாயத்தால் தனது தனித்தன்மையை விட்டுக்கொடுத்தும், தொகுதிப்பங்கீட்டில் சமரசம் செய்தும் கூட்டணியைக் காப்பாற்றி வந்தது. உண்மையில் சிவசேனையின் எழுச்சிக்கு பாஜகவின் தோழமை பெருமளவில் உதவி செய்தது.

காங்கிரஸில் சரத்பவார் பிரிந்துசென்று 1999-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) துவக்கிய பிறகு, மாநிலத்தில் காங்கிரஸின் செல்வாக்கு குறைந்த்து. எனினும், இவ்விரு கட்சிகளும் ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டிய அரசியல் நிர்பந்தத்தால் கட்டுண்டிருந்தன.

மஹாராஷ்டிராவில் வாக்கு பலமும் அரசியல் வலிமையும் கொண்ட சிவசேனை- பாஜக கூட்டணியை முறியடிக்க இவ்விரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டுவந்தன. கடந்த 15 ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளின் கூட்டணி தான் மஹாராஷ்டிராவை ஆண்டது. தவிர, மத்தியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் சரத்பவார் முதன்மை பெற்றிருந்தார். இவ்விரு கட்சிகளிடையே ஊடலும் கூடலுமாக அரசியல் நிலைப்பாடுகள் இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தைப் பகிர்வதில் சளைக்காமல் இருந்தனர்.

எனினும், விதர்ப்பா பகுதி விவசாயிகள் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்துகொண்டது, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் (2011), ரூ. 35,000 கோடி மதிப்புள்ள மஹாராஷ்டிரா நீர்ப்பாசன ஊழல் (2012), ரூ. 120 கோடி மதிப்புள்ள கல்வித்துறை ஊழல், ரூ. 289 கோடி மதிப்புள்ள கால்நடைத்தீவன ஊழல் போன்றவற்றால் காங்கிரஸ்- என்சிபி கூட்டணி ஆட்சி கலகலத்தது.

ஊழல் செய்யவே கூட்டணி கண்ட இவ்விரு கட்சிகளும் மக்கள் அதிருப்தி புயலென மாறியவுடன் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி, தங்களை காத்துக்கொள்ள முயன்றன. இறுதியில் இக்கட்சிகளின் கூட்டணி முறிந்தது. இவர்களின் ஆட்சிக்காலத்தில் பல முதல்வர்கள் மாறினர். ஆனால் ஆட்சி நிர்வாகம் தரம் உயரவே இல்லை. அதன் விளைவையே அண்மைய தேர்தலில் இவ்விரு கட்சிகளும் அடைந்துள்ளன.

மாறாக, சிவசேனை- பாஜக கூட்டணி மாநிலத்தை ஊழலிலிருந்து விடுவிக்க பல ஆண்டுகளாகப் போராடி வந்துள்ளது. எனினும், பால்தாக்கரே மறைவுக்கு (2012) பிறகு, சிவசேனை அவரது மகன் உத்தவ் தாக்கரேயின் தலைமையில் இயங்கும்போது, இவ்விரு கட்சிகளிடையே பிணக்கு ஏற்படத் துவங்கியது. ஏற்கனவே உத்தவுடன் இருக்க முடியாமல் சிவசேனையிலிருந்து வெளியேறிய ராஜ் தாக்கரே தனியே மஹாராஷ்டிர நவநிர்மான் சேனை (எம்என்எஸ்) கட்சியை நடத்தி வருகிறார். சென்ற 2009 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியைத் தடுத்ததே எம்என்எஸ் தான்.

சிவசேனைக்கு தனது பலம் மீது அதீத நம்பிக்கை இருந்ததே தவறாகிப்போனது. அக்கட்சி மஹாராஷ்டிராவில் தானே பெரியண்ணன் என்றது. பாஜகவுக்கு 117 தொகுதிகள் மட்டுமே தர முடியும்; அதிகப்படியான தொகுதிகளில் சிவசேனையே போட்டியிடும் என்றார் உத்தவ் தாக்கரே. பாஜக 130 தொகுதிகளை ஒதுக்குமாறு மன்றாடியது. ஆனால், அதீத கற்பனையில் மிதந்த உத்தவ் தாக்கரே பாஜகவை மட்டம் தட்டினார்.

வேறு வழியின்றி கூட்டணியை முறித்துக்கொண்ட பாஜக தனித்தே அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்தது. இதனால் 25 ஆண்டுகளாக தொடர்ந்த காவிக்கூட்டணி உடைந்தது. இதன் பலன் சிவசேனைக்கே செல்லும் என்று ஆய்வாளர்கள் கூறிக் கொண்டிருந்தனர். காங்கிரஸ், என்சிபி, சிவசேனை, பாஜக, எம்என்எஸ் ஆகிய கட்சிகளின் ஐந்துமுனைப் போட்டியில் பாஜக மூன்றாமிடத்துக்குத் தள்ளப்படும்; பாஜக தவிர்த்த கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் என்றே தேர்தல் வல்லுநர்கள் கணித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் களத்திற்கே அதிர்ச்சியையும் வியப்பையும் அளித்திருக்கின்றன. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 123 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிவசேனா 63, தேசியவாத காங்கிரஸ் 41, காங்கிரஸ் 42, எம்என்எஸ் 1  என இடங்கள் கிடைத்துள்ளன. இப்போது பாஜகவே ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. பெரும்பான்மை பெற 22 இடங்களே தேவை.

தேவேந்திர பட்னவிஸ்
தேவேந்திர பட்னவிஸ்

பாஜக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்துவிட்டது. தவிர, சுயேச்சைகள் 15 பேரின் ஆதரவும் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. எனினும், தனது முந்தைய கூட்டாளியான சிவசேனையின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவே பாஜக தீர்மானித்துள்ளது.  சங்க ஸ்வயம்சேவகரும் பாஜகவின் இளம் தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் (44) முதல்வராகத் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிறார். வரும் 31-ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது சிவசேனையை பாஜக ஒருபோதும் விமர்சிக்கவில்லை. உத்தவ் தாக்கரே பாஜகவை கடுமையாக வசை பாடியபோதும் பாஜக நிதானம் காத்தது.  சிவசேனையும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் 288-க்கு 240 தொகுதிகளில் வென்றிருக்க முடியும். ஆனால், உத்தவின் அனுபவமற்ற முடிவால் அது நடைபெறாமல் போனது. இருப்பினும், சிவசேனையின் தவறுகளை மன்னித்து அக்கட்சி மீண்டும் தன்னுடன் தோழமை தொடரச் செய்யவே பாஜக பெருந்தன்மையுடன் செயல்படுகிறது. எனினும், சிவசேனையின் பேரம் பேசும் சக்தி தற்போது குறைந்துவிட்டது.

பாஜகவின் பயணம் தொடர்கிறது:

இவ்வாறாக, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இரு மாநிலத் தேர்தல் வெற்றியைச் சுவைத்துள்ள பாஜக, தன்மீது வீசப்பட்ட அவதூறுகளைப் பொடியாக்கி இருக்கிறது. இடைக்காலத்தில் சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வென்ற எதிர்க்கட்சிகளின் ஆரவார இரைச்சலுக்கும் பாஜக இத்தேர்தல் முடிவுகளில் சரியான பதில் அளித்துவிட்டது.

வெற்றியின் தளகர்த்தர்கள்

இனிவரும் காலம், பாஜகவின் காலம். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும்  ‘பாஜக- அதன் எதிர்க்கட்சி’ என்ற நிலையே விரைவில் ஏற்படப்போகிறது. இந்நிலை முன்னர் காங்கிரஸ் வகித்துவந்த நிலையாகும். காங்கிரஸின் வீழ்ச்சி பாஜகவின் வளர்ச்சியாக மாற்றம் பெறுவது இந்திய அரசியலுக்கு நல்லது. விரைவில் ஜம்மு காஷ்மீரிலும் ஜார்க்கண்டிலும் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களில் பாஜகவின் வெற்றிப்பயணம் தொரும்போது, ஆட்சி நிர்வாகத்தை அடிப்படையாக்க் கொண்டதாக நமது தேர்தல்கள் மாறும்.

இப்போதே நாட்டின் பெரும் மாநிலங்களில் உ.பி, பிகார், மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா நீங்கலாக பல பகுதிகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி பரவியுள்ளது. மீதமுள்ள நாட்டின் பகுதிகளிலும் தாமரை மலரும்போது, மத்தியில் ஆளும் நரேந்திர மோடியின் நலத்திட்டங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் எளிதாகச் சென்று சேரும்.

மஹாராஷ்டிராவில் பதிவான வாக்குகளில் பாஜக 42.4 சதவீதம் வாக்குகளைப்  பெற்றிருப்பது சாதரணமானதல்ல; முன்னர் 16 சதவீதமாக இருந்த அதன் வாக்குவிகிதம் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஹரியானாவிலும் 4 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்குவிகிதம் இப்போது 52.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது பாஜகவின் முதற்பெரும் கடமை.

ஊழலும் நிர்வாகமின்மையும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களுக்கு விமோசனமாக பாஜக இப்போது உதயமாகி இருக்கிறது. பாஜகவின் அதிவேகப் பாய்ச்சல் அதன் எதிரிகளை ஒருங்கிணைக்கக் கூடும். இதுவரை எதிரிகளாக உள்ள காங்கிரஸ், மூன்றாவது அணிக் கட்சிகள், இடதுசாரிகள் அனைவரும் வரும் நாட்களில் ஒன்றாகச் சேர வாய்ப்புள்ளது. அவர்கள் அனைவரையும் வெல்ல பாஜக தனது ஆட்சித்திறனை நிரூபித்தாக வேண்டும்.

மக்கள் கோஷங்களையல்ல, வழிகாட்டும் தலைமையையே நம்புகிறார்கள். சிறந்த தலைமை, தொண்டர்களின் அர்ப்பணிப்பான செயல்பாடு, அரசியலில் நேர்மை, தெளிவான அரசியல் நிலைப்பாடுகள், நேர்த்தியான பிரசாரம், இவை அனைத்தின் உறுதியான ஒருங்கிணைப்பு – இவையே பாஜகவின் வெற்றிக்குப் பிரதான காரணங்கள். இந்த வெற்றிகள் தொடரட்டும்.

 

33 Replies to “தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!”

  1. இந்தியாவின் பல பகுதிகளில் பிஜேபி வளர்ந்துள்ளது அல்லது வளர்ந்து வருகிறது என்பதில் எள்ளின் முனை அளவும் ஐயப்பாடு இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அக்கட்சி தலை காட்ட மறுக்கிறதே! இதற்கு இங்கே இருக்கும் திராவிட இயக்கத்தினர் “இது பெரியார் பிறந்த மண், இறந்த மண் ” என்று கதை அளக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அக்கட்சி தமிழ்நாட்டில் தலை காட்ட மறுப்பதற்கு காரணங்கள் பல உள்ளன.

    1.சினிமா நடிகர்கள்(குஷ்பு அல்லது ரஜினி) யாராவது வருவார்களா என்று ஏங்கி கிடக்கிறார்கள் (குறிப்பாக அதன் தமிழ்நாட்டு தலைவர்). அவர்களுக்கு அக்கட்சியின் கொள்கையில் நம்பிக்கை அற்று போய் விட்டதா? நடிகர்கள் தப்பி தவறி வந்தாலும் கூட அங்கே ரசிகர்கள் கூட்டம் தான் இருக்கும் (RSS எதிர்பார்க்கும்) ஒழுக்கமுள்ள தொண்டர்கள் கிடைக்க மாட்டார்கள். அப்புறம் விசில் சத்தம்தான் காதை பிளக்கும்.

    2. நடிகர்களை நம்புவதை விட்டுவிட்டு கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க மிகக் கடுமையான முயற்சி எடுக்க வேண்டும். அதிகபடியான அல்லது ஒரு குறிப்பிட்ட target உறுப்பினர்களை சேர்க்கும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பரிசு அளிக்க முன்வரவேண்டும்.

    3. மக்கள் சார்ந்த பிரச்னைக்காக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். (உதாரணமாக பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு அல்லது மதுவிலக்கு ). அப்போதுதான் மக்களிடம் இக்கட்சி மீது ஒரு நாட்டம் ஏற்படும். வெறும் கோவில் கட்டும் பிரச்னைக்கு மட்டும் போராடக்கூடாது. அது மக்களுக்கு ரொம்ப போரடித்துவிட்டது.

    4. அடிக்கடி பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறை அத்தி பூத்தாற்போல ஒரு பொதுகூட்டம் நடத்துகிறார்கள். மற்ற கட்சிகாரர்கள் கூட்டத்தை குறைந்த பட்சம் இரவு 7 மணிக்கு துவங்குவார்கள். ஆனால் பிஜேபி கூட்டம் இரவு 8 1/2 க்கு துவக்கினாலே அது ஒரு பெரிய அதிசயம். ஏனென்றால் அங்கே மேடை ஏறி பேசுவதற்கு ஆளில்லை. ஆகவே நல்ல இலக்கிய தமிழில் பேசக்கூடிய இளம் பேச்சாளர்களை உருவாக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும்.

    5. சொந்தமாக அச்சு ஊடகம் ஏதுமின்றி 2016ல் ஆட்சியை பிஜேபி பிடிக்கும் என்று அவர்கள் சும்மா கபட நாடகம் ஆடிகொன்டிருக்கிறார்கள். மீடியாவின் அசுர பலம் மூலம்தான் மோடி பிரபலம் ஆனார் என்பதை இவர்கள் அறிந்த பின்னும் அந்த மீடியா மீது ஏன் இவர்களுக்கு சபலம் ஏற்படவே மாட்டேங்கிறது.

    6. சன் டிவி, ராஜ் டிவி, புதிய தலைமுறை போன்ற சானெல்களில் விவாதம் நடத்துவதால் மட்டுமே கட்சி வளர்ந்து விடும் என்று தப்பு கணக்கு போடகூடாது. மக்களை நேரில் சந்திக்க வேண்டும். மக்கள் தலைவர் காமராஜர் போல மக்களோடு நெருங்கி பழக வேண்டும். கட்சி தலைவரின் எளிமை கட்சிக்கு வலிமை சேர்க்கும்.

  2. மிகச் சரியாகச் சொல்லியுள்ளார் திரு ஹானஸ்ட் மென்.இவரது கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.தமிழகத்தில் கன்னியாகுமரித் தொகுதியில்தான் முழுக்க வேலை நடந்துள்ளது.கோவை,மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் ஓரளவுக்கு வேலை செய்துள்ளனர்.தமிழகத்தின் மற்ற இடங்களில் பூஜ்யமே.யாராவது பிரபலமான ஆள் வரமாட்டானா என்று பா ஜ க வின் தலைமை அலைகிறது. இது முழுக்க முழுக்கத் தவறானது ஆகும்.கட்சிக்காகவும் இயக்கத்திற்காகவும் தன்னலம் கருதாது உழைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் நமது மாநிலத்தில் உள்ளனர்.அவர்களைச் சரியாக இனம் கண்டு பொறுப்புக்களைக் கொடுக்க வேண்டும்.களத்தில் நின்று உழைப்பவர்களுக்கே பதவியும் மதிப்பும் கொடுக்கப்பட வேண்டும்.இங்குள்ள இயக்க இளைஞர்கள் தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர ஆவலாக உள்ளனர்.இயக்கத்தில் தன்னலம் கருதாமல் உழைத்துக் கொண்டிருக்கும் திறமையும் வசீகரமும் நிறைந்த ஒருவரை முன்னிறுத்தி இப்பொழுதே வேலை செய்யத் துவங்கினால் வெற்றி முடியாதது அல்ல.திருச்சியில் வந்த கூட்டமே மாற்றம் விரும்புவதற்கான பெரிய அறிகுறி.தொண்டர்களின் உழைப்பை வீணாக ஒரு பிரபல நடிகருக்குத் தாரை வார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டு முனைப்புடன் பாடுபடத் தொடங்குங்கள்.வெற்றியும் பதவியும் தமிழகத்தின் எதிர்கால நன்மையையும் இப்பொழுதே தென்படத் தொடங்கிவிட்டன.

  3. பாஜகவிற்கு வெற்றி பெற்ற உடன் மமதை வந்து விடும் என நான் முந்தைய பிற கட்டுரைகளின் பின்னூட்டத்தில் கூறியுள்ளேன்.

    MH தேர்தலில், மோதி பல கூட்டங்களில் பேசினார். அக்கூட்டங்களில் அவர் முன்னிறுத்திப் பேசியது Congress NCP ஆட்சியின் ஊழல்களைப் பற்றித்தான். தேர்தல் முடிவு கூறியது ஊழல் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடு.

    NCP – ஒரு கணக்குடன் – BJPக்கு ஆதரவு தெரிவித்தது. பிஜேபி – சிவ சேனா விற்கு check வைப்பதற்காக – NCP ஆதரவு தேவையில்லை என்று இன்று வரை BJP மறுக்கவில்லை. NCP ஆதரவு ஏற்கப்பட்டால் ஊழல் எதிர்ப்பு கோஷம் என்ன ஆகும் என்று பிறந்த குழந்தை கூட புரிந்து கொள்ளும்.

    வாங்கடே ஸ்டேடியம் – சரத் பவாரின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் உள்ளது. அந்த இடத்தில் பதவிப் பிரமாணம் ஏற்பாடு செய்ததே தவறு.

    MH முதல்வரும், மோதியும் – மூச்சுக்கு மூச்சு தாம் RSS இயக்கத்தில் வளர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள் . RSS கற்றுக் கொடுத்த எளிமை என்ன ஆனது ? ஏன் இந்த ஆடம்பரமான விழா ? ஏன் இந்த மமதை ? ஏன் இந்த வெறி?

    பதவி வரும் போது பணிவு வேண்டும். இல்லையேல் , பதவி வெறி, மமதை, அழித்து விடும்.

  4. திரு “நாக”ராஜன் இங்கே சில விஷ துளிகளை சிந்தியுள்ளார். அந்த “Naturally Corrupt Party ” இடம் பிஜேபி போய் எப்போதாவது ஆதரவு கேட்டதா? அந்த கட்சியே முந்திக்கொண்டு ஆதரவு தர முன்வந்தது.. “சரி உங்கள் ஆதரவை நாங்கள் ஏற்றுகொள்கிறோம்” என்று பிஜேபி சொன்னதா? கடைதெருவில் ஒரு புடவை உங்களை பார்த்து வியாபாரி “வாங்க வாங்க சார் ஒரு புடவை 100 ரூபாய்தான். வாங்க சார் வந்து வாங்குங்க சார். சூப்பர் சாரி சார்” என்று கூறும்போது நீங்கள் பேசாமல் வாங்காமல் உங்கள்பாட்டுக்கு சென்றுகொண்டிருந்தால் “அது தவறு உங்கள் புடவை எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும்” என்பீர்களா? கூவுவன் கூவட்டும். அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியுமா? அதுபோல ஆதரவு தெரிவிப்பவன் தெரிவிக்கட்டும். நாம் அவனை ஆதரவு கேட்டோமா? இப்போது சிவ சேனா உடன்தானே கூட்டு சேர்ந்துள்ளது? திருப்திதானே?

    Stadium அவர் கட்டுபாட்டில் இருந்தால் என்ன? அந்த Stadium அவருக்கே சொந்தமா?

  5. நடிகர்களை நம்பி தமிழ் நாடு பி ஜே பி செயல்படுமாயின் தமது உண்மையான தொண்டர்களை இழக்க நேரிடும். நமது தலைமையினை வலுபடுத்த வேண்டுமாயின் நடிகர்களை கட்சியில் இழுப்பதை தவிர்க்க வேண்டும்.

  6. இளைஞர்களை நம் பக்கம் சேர்க்க வேண்டும். திராவிட காட்சிகளுக்கு மாற்று அரசியல் கட்சியாக நாம் நடை போடவேண்டும்.

  7. ஹானஸ்ட் மேன் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்.

    NCP ஆதரவு அளிப்போம் என்று கூறியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் கூறியது. இதற்குப் பின்புதான், BJP , சிவசேனையுடன் நடத்தியப் பேச்சினை விட்டுவிட்டு இருப்பதற்குள் பெரிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

    எனவே, வெளிப்படையாக எதுவும் கூறாவிட்டாலும், BJP, NCP ஆதரவை ஏற்றுக் கொண்டு விட்டது என்றுதான் அர்த்தம்.

    காங்கிரஸ், NCP, சிவசேனா – இம்மூன்று கட்சிகளின் மொத்த MLA க்கள் 146. இம்மூன்றும் சேர்ந்து எதிர்த்தால் பிஜேபி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோத்து விடும். எனவே, என்சிபி கொடுத்த ஆதரவில்தான் பிஜேபி ஆட்சி அமைக்க உரிமை கோரியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

  8. எதிபார்த்தபடியே நடந்து விட்டது. ஆம். NCP ஆதரவுடன் பிஜேபி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று விட்டது. இனிமேல், மோதி கூறிய NCP ஊழல்கள் எல்லாம் காற்றில் மறைந்து விடும். வாழ்க ஜனநாயகம்.

  9. //எதிபார்த்தபடியே நடந்து விட்டது. ஆம். NCP ஆதரவுடன் பிஜேபி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று விட்டது. இனிமேல், மோதி கூறிய NCP ஊழல்கள் எல்லாம் காற்றில் மறைந்து விடும். வாழ்க ஜனநாயகம்.//

    you should blame shiva sena rather than BJP.

  10. வணக்கம் ஹிந்து நண்பர்களே! சகோதரர்களே!!
    ஹிந்து ஒற்றுமை என்ற அடிப்படையில் நிறைய பேர் எனது நட்பில் இணைந்திருக்கிறார்கள், மகிழ்ச்சி.அதை உருப்படியாக பயன்படுத்த நினைக்கிறேன். நண்பர்கள் பலரிடம் போனிலும் இன்பாக்ஸிலும் பேசிய வகையில் ‘ஹிந்து வாக்கு வங்கி’ உருவாகுதல் அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
    அடுத்து ஹிந்து வாக்கு வங்கியை பயன்படுத்த தகுந்த அரசியல் பலம் வேண்டுமென்கிறார்கள். அதை ‘தேசமே தெய்வம்’ எனும் நோக்கத்துடன் இயங்கும் பா.ஜ.க. நிறைவேற்றும் என நம்புதாகவும் ஆனால் தமிழக பா.ஜ.க.வில் சில மாற்றங்களை எதிர்பார்ப்பதாகவும் சொல்கின்றனர். மேலும் ஒரு தரமான தொலைக்காட்சி மற்றும் செய்திச் சேனல் தேவை என்கிறார்கள்.
    தன் பலமறியா யானை ஒரு சிறு கயிறுக்கும் சங்கிலிக்கும் கட்டுப்படுவது போல தமிழக பா.ஜ.க செயல்படுகிறது எனத் தெரிவிக்கிறார்கள்.
    தமிழக பா.ஜ.க-விடம் நம்மவர்கள் எதிர்பார்ப்பது.
    1. திராவிடக் கட்சிகளை எதிர்த்து ஆண்மையுடன் அரசியல் செய்ய வேண்டும்.
    2. ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
    3. தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும்
    4. வார்டு அளவிலிருந்து உள்ளூர் பிரச்னைகளை அணுகுவதன் மூலம் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்
    5. ஹிந்துக்களின் உரிமையை மீட்டுத்தர வேண்டும்
    6. தமிழகத்தைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்க வேண்டும்
    7. ஹிந்து இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அரவணைக்கப்பட வேண்டும்
    8. சினிமா சார்பற்று இயங்க வேண்டும்
    9. கட்சிப் பொறுப்புக்கு சங்கப் பயிற்சி அவசியம் என்ற நிலை வரவேண்டும்
    10. குடி ஒழிப்பு வாக்குறுதி வேண்டும்
    11. ஜாதிப்பாகுபாடு கோக்ஷ்டி சேர்த்தல் கூடாது
    12. மோடிஜி மற்றும் அமித்க்ஷா ஜி பாணியில் தாஜா செய்யாது நேர்மையான முறையில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற முயற்சிக்க வேண்டும்

    மேலும் கருத்துக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் உங்கள் கருத்துக்கள் இந்தப் பதிவை செம்மைப்படுத்தும் என நம்புகிறேன்
    உயர் பொறுப்பிலிருப்பவர்கள் செம்மைபடுத்தலாம்.
    இதை நான் குறைந்தது 100 பேருக்கு டேக் செய்யப் போகிறேன். தங்கள் பெயரில் பதிவு இருப்பதை விரும்பாதவர்கள் இன் பாக்ஸில் தெரிவித்தால் அவர்கள் பெயர் நீக்கப்படும். ஒவ்வொருவரின் நட்பிலிமுள்ள ஆர்வமுள்ள 50 பேர் கருத்துச் சொன்னால் விவாதித்தால் 5000 பேருடைய எண்ணங்கள் கிடைக்கும். மேலும் இப்பதிவை பகிர்வதன் மூலமும் கட் பேஸ்ட் செய்வதன் மூலமும் கூடுதலாக கருத்துக்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இவை முறையாக தலைமைக்கு தெரிவிக்க முயற்சி எடுக்கப்படும்.
    இப்பதிவில் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.
    தனி நபர் தாக்குதல் மற்றும் நாகரீகமற்ற கருத்துக்கள் நீக்கப்படும்.
    இது ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சி மற்றும் சிதறும் ஹிந்து வாக்குகளால் நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கூட முடக்கப்பட்டிருப்பதை மீட்பதற்கான முயற்சி என்பதை அனைவரும் நன்கு தெரிந்து பதில்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். மாற்று மதத்தை தாக்குவது நமது நோக்கமல்ல. மாற்றுக் கட்சிகளிலும் நமது ஆதரவாளர்கள் இருக்கின்றனர், அவர்களையும் அரவணைக்கும் முயற்சி எனவே யாரையும் தாக்கி எழுத வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
    இது எவ்வகையில் என்னை முன்னிறுத்தும் முயற்சியல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்…………….-ஆலயம்.எஸ்.ராஜா https://www.facebook.com/alayam.sraja/posts/1748363605387817?fref=nf&pnref=story

  11. /////BJP has to have print media as well elecgtronic media//////

    திரு வெங்கடாசலம் சார்! இது உங்களுக்கு தெரியுது. எனக்கும் தெரியுது. ஆனால் தெரிய வேண்டியவர்களுக்கு (அதாவது தமிழக பிஜேபி தலைமைக்கு) தெரிய மாட்டேங்கிறதே! என்ன செய்ய? யார் அவர்களுக்கு எடுத்து சொல்வது? நாம் இந்த இணையத்தில் சொல்வதை படிக்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. அப்படியே படித்தாலும் அதை (யோசனையை) பெரிசாக எடுத்துகொள்வது இல்லை. இந்த இணையத்துகாரர்களுக்கு எங்களது நல்ல யோசனைகளை அவர்களுக்கு “”எப்படியாவது”’ தெரியபடுத்த உதவி செய்யுங்கள் என்று வேண்டிகொன்டாலும் அவர்களே (பிஜேபி) மேல் என்று நினைக்கிறமாதிரி இவர்கள் ழ்(இணையத்தினர்) நடந்து கொள்கின்றனர். இவர்கள் உங்களது கருத்துக்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்று நமது மறுமொழிகளுக்கு மீழே ஒரு ”சின்ன” பதிலை கொடுத்தால் என்ன ஆகிவிடும்? உலகம் அழிந்துவிடுமா?

    தனியார் தொலைகாட்சிகள் பெருகி உள்ள இந்த காலத்தில் தொலைகாட்சி தொடங்குவது குறித்து அவர்கள் யோசிப்பதே இல்லை. (Lotus டிவி பற்றி பேசுவது கொஞ்சமும் அர்த்தமற்றது) திரு வெங்கிடாசலம் அவர்களே! நீங்கள் சொல்வது போல சில பத்திரிக்கைகள் (உண்மை, விடுதலை, முரசொலி போன்றவை) பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் பற்றி தவறான கருத்துக்களை கூறும்போது அதற்கு மறுப்பு கருத்துக்கள் வராததால் ( மறுப்பதற்கு பிஜேபி இடம் தினசரி பத்திரிக்கை இருந்தால்தானே!) அந்த பத்திரிக்கைகள் சொல்வதுதான் உண்மையோ என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆகவெ பிஜேபி மீது மக்களுக்கு ஒரு வெறுப்புணர்வு ஏற்படுகிறது. அதனால்தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பிஜேபி கட்சி தமிழ் நாட்டில் தலை காட்ட மறுக்கிறது. இதை புரிந்துகொள்ள மறுக்கும் பிஜேபி கட்சி காரர்களுக்கு யார் எடுத்து சொல்வது? ஆண்டவனே! அவர்களுக்கு நல்ல புத்தியை கொடு என்று உம்மை இறைஞ்சி கேட்டு கொள்கிறேன். இதை தவிர நான் வேறு என்ன செய்ய?

  12. நல்லாட்சி அமைய

    நல்லாட்சி அமைய தகுதி உடைய அனைவரும் வாக்களிக்க வேண்டும். படித்து, உலக நடப்புகளை அறிந்து, தேசிய அரசியல் வரை விவாதிப்பவர்கள், தேர்தலில் வாக்களிப்பதை கௌரவக் குறைவாக நினைக்கிறார்கள். வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வாக்களிக்காததால், மொத்த வாக்காளரில் ஐந்தில் ஒரு பகுதியினரால் ஆதரிக்கப்படுபவரே ஆட்சியமைக்கின்றனர். பிறகு எப்படி நல்லாட்சி அமையும்.

    முன்பெல்லாம் தேர்தல் என்றவுடன், தொகுதியின் குறைகள் மற்றும் தேவைகளின் பட்டியலோடு மக்கள் வேட்பாளரை எதிர் நோக்குவார்கள். ஆனால் தற்போது ‘என்ன கிடைக்கும்’ என எதிர்பார்ப்பதால் நல்லாட்சி அமைய வாய்ப்பில்லை. இந்நிலை மாற வேண்டும்.

    ‘இந்து வாக்கு வங்கி’ உருவாக வேண்டும் :

    ஏனெனில் நாம் ஒன்றுபட்டு வாக்கு வங்கி உருவாக்கினால், நம்மிடம் குறிப்பிட்ட சதவிகிதம் வாக்குகள் இருக்குமென்றால், நம்மை கெஞ்ச அரசியல்வாதிகள் தயங்கமாட்டார்கள்.

    நாம் எந்தக் கட்சியில் இருந்தாலும், தேச நலன் கருதி, சாதி வேறுபாடுகளைக் கடந்து, ஒரே தலைமைக்குக் கட்டுப்பட்டு, இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்கு வங்கி உருவாக்க வேண்டும். இல்லையென்றால் காஷ்மீர் போல், தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இந்துக்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஆகி, வெளியேற்றப்படலாம் அல்லது சிறுபான்மையினர் ஆக்கப்படலாம்.

    ‘ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்றார் பாரதி. சாதி ஒரு ஏற்பாடே, அடிப்படையில் நாமனைவரும் இந்துக்கள் என்பதை உணர்ந்து ஒன்றிணையாவிட்டால், அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து, குழப்பங்களை விளைவித்து நம்மை துண்டாடி விடுவார்கள்.

    நாம் அனைவரும் இந்து என்பதில் பெருமை கொள்ள வேண்டும். எந்தப் பணி செய்தாலும் மதச் சின்னங்களை அணியத் தவறக் கூடாது. எங்காவது நடக்கும் குற்றச் செயல்களில் இந்துக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் நம்பாமல் மறுத்திடுங்கள். இந்த தேசத்தின் பெரும்பான்மையினரான இந்துக்களுக்கு, சிறுபான்மையினராலும், போலி மதச் சார்பின்மைவாதிகளாலும் அச்சுறுத்தல் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்துக்கள் என்றால் கோவில்களுக்கு செல்வதுடன் நமது கடமை முடிந்து விடவில்லை. R.S.S.திறந்தவெளியில் நடத்தும் ஷாகாக்களிலும், வருடம் ஒரு முறை நடத்தும் குரு பூஜைகளிலும், இந்து அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும். இந்து அமைப்புகள் மூலம் நடத்தப்படும் ‘பண்புப் பயிற்சி முகாமில் குடும்பத்தில் ஒருவராவது கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்து அமைப்புகள் உண்மையில் வன்முறையைத் தூண்டுகின்றனவா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இந்து அமைப்புகள் நடத்தும் ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு கண்டிப்பாக சந்தாதாரர் ஆக வேண்டும், வசதி இருந்தால் நண்பர்களுக்காகவும் சந்தா கட்டலாம். அதே போல் பயிற்சி முகாமிற்கு மற்ற மதத்தினரையும் அழைத்துச் செல்லலாம்.

    இந்து என்பதற்காக யாராவது, எங்காவது தாக்கப்பட்டால், அவமானப்படுத்தப்பட்டால், நாம் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மத நம்பிக்கைகள் எந்த வகையில் கேலி செய்யப்பட்டாலும் உடனே எதிர்க்க வேண்டும்.

    இந்துக் கோயில்களில்தான் கட்டாய கட்டண வசூல் நடக்கிறது. அப்படி வசூல் செய்யும் பணத்தையும் அரசே எடுத்துக் கொண்டு, சிறு கோயில்கள் இயங்கிடக் கொடுத்திடாமல், மற்ற காரியங்களுக்கும், சில நேரங்களில் இந்துக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அர்ச்சகர்களுக்கோ குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. (எனவே கோவில் உண்டியல்களில் காணிக்கை செலுத்தாதீர்கள். கோவில்களுக்கு தேவையான அன்றாட வழிபாட்டுப் பொருட்களோ, நிரந்தர தேவைப் பொருட்களோ வழங்கிடுங்கள்). இந்து அரசு அமைந்தால், இந்துக் கோயில்களின் வருமானம் இந்து நலனுக்குச் செலவிட வழிபிறக்கும்.

    அதே நேரத்தில் சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களின் வருமானத்தையோ, வருமானம் வரும் வழியையோ அரசு கண்டு கொள்வதில்லை. ஏனெனில் தலைமைக்குக் கட்டுப்பட்டு வாக்களிக்கும் ஒற்றுமை வாக்கு வங்கி இருக்கிறதே.

    இந்துக்கள் வாக்கு வங்கி உருவாவது அவசியம் என்பதை நாமனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்துக்கள் பாஜக-விற்கு வாக்களிக்க வேண்டும் :

    “மற்ற மதத்தினர் தாக்கப்படும்போது நாங்களும் குரல் கொடுக்கிறோம், மற்றவர்களும் குரல் கொடுக்கின்றனர். இந்துக்கள் தாக்கப் படும்போது நாங்கள் மட்டுமே குரல் கொடுக்கிறோம். எனவே எங்களை இந்துத்வாவாதிகள் என்கிறார்கள்” திரு.இல.கணேசன் அவர்கள் முன்பொரு முறை தினமணி பத்திரிக்கையின் நடுப்பக்கக் கட்டுரையில் எழுதியிருந்த வரிகள் இவை. இது உண்மையே. உண்மையிலும் உண்மை இந்துக்களுக்காகக் குரல் கொடுப்பது பா.ஜ.க. மட்டுமே.

    பதவி ஆசையால், ஒருவருக்கொருவர் தரக்குறைவாக ஏசிக் கொண்டவர்களும், கொள்ளை முரணுடையவர்களும் கை கோர்த்துக் கொள்ளும் நேரத்தில், கொள்கையில் உறுதியாய், அதனாலேயே தனித்துப் போட்டியிடும் பா.ஜ.க.வே நமது தேர்வாகட்டும்.

    பா.ஜ.க. தொலைநோக்குப் பார்வை கொண்ட, தேசியக் கண்ணோட்டமுடைய நேர்மையான கட்சி. இந்த நேர்மையே பல நிறுவனங்களையும், சில நாடுகளையும் அதற்கு எதிரிகளாக்கிவிட்டன.

    பா.ஜ.க.வைப் பற்றி தவறான பிரச்சாரம் உள்ளது. உண்மை என்னவெனில், சிறுபான்மையினர் தங்கள் நாட்டை விட பாதுகாப்பாக இருப்பது நமது தேசத்தில்தான். பா.ஜ.க. ஆட்சியில் தான். பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியல்ல என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த திரு.ஏ.பி.ஜெ.அப்துல்கலாமை முதல் குடிமகனாக்கி அழகு பார்த்தது பா.ஜ.க.வே.

    பட்டா பெற்ற குடியிருப்பு நிலங்களில் வழிபாட்டுத்தலம் அமைக்க அனுமதிப்போம் என சிறுபான்மையினருக்கு வாக்குக் கொடுக்கின்றனர் சில கட்சியினர். அப்படி அனுமதிக்கப்பட்டால், நம்மைச் சுற்றி அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தான் இருக்கும். வேறு மாதிரி சொல்வதானால், அவர்களின் கூச்சல்களுக்கு நடுவே நாம் நிம்மதி இழந்து வாழ வேண்டியிருக்கும்.

    கழக ஆட்சிகளிலிருந்து விடுபட்டால், தாய்மொழி, தேசியமொழி, விருப்ப மொழி என கற்கலாம். அடிமை மொழியை விலக்க வாய்ப்பிருக்கிறது. பா.ஜ.க. இலவசங்களை ஆதரிப்பதை விட, உழைத்துப் பிழைப்பதை ஏற்கச் சொல்கிறது. பசிப்பவனுக்கு உணவிட்டு பின் உணவு தேடவும் கற்றுக் கொடுப்பது பா.ஜ.க.வின் பண்பு.

    பா.ஜ.க அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியடைத்து, பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சிபுரிந்தால், பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும். அப்போது தான் சட்டத்தின் முன் நாமனைவரும் சமம் என்பது உண்மையாகும்.

    எல்லைப் பிரச்சனை முதல் உள்ளுர் பிரச்சனை வரை எதற்கும் வெளிநாடுகளின் தலையீட்டை ஏற்பதில்லை என்பது பா.ஜ.க.வின் முடிவு என்பதற்கு கார்கில் போரே சாட்சி. உலகாளும் எண்ணத்தில் வலம் வரும் வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவி, பொக்ரானில் குண்டு வெடித்தது பா.ஜ.க.தான். உலக நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளை முறியடித்து அவர்களை பணிய வைத்தது பா.ஜ.க.வே. எங்கள் மீது பொருளாதாரத் தடையா, நாங்கள் உங்களுக்கு எதுவும் தருவதாயில்லை என மிரட்டி, உலக நாயகக் கனவுடன் வலம் வரும் நாடுகளையே கெஞ்ச வைத்தது பா.ஜ.க.தான்.

    ஒரு மாநிலம் எப்படி ஆளப்பட வேண்டும் என்பதற்கு பா.ஜ.க. ஆட்சியின் குஜராத்தே உதாரணம். எப்படி நிர்வகிக்கப்படக்கூடாது என்பதற்கு கழகங்கள் ஆண்ட தமிழகம், கம்யூனிஸ்ட் ஆளும் மேற்கு வங்கம். காங்கிரஸ் ஆளும் வடக்கு மாநிலங்களே உதாரணம்.

    தமிழகம் குஜராத் போல் முன்னேறிட பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். இந்துக்களே! “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே”. நடுநிலையாளர்களே, நேர்மையானவர்களே, சிறுபான்மை இனத்தோரே, உழைப்பால் உயர்ந்தி. தரணி போற்ற வாழ்ந்திட பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள்.

    தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாது, தோற்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? என எண்ணாதீர்கள், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது நாம் தான் என்பதை மறந்து விடாதீர்கள். எல்லாரும், எல்லாமும் பெற்றிட இங்கு இல்லாமை இல்லாத நிலை வந்திட பா.ஜ.க.வுக்கு வாக்களிப்போம்.

    மீண்டும் தரணி போற்ற தமிழகம் உயர்ந்திட, தமிழன் தலை நிமிர்ந்து நடந்திட, ஒளிமயமான எதிர்காலம் உருவாகிட, அண்டை நாடுகளின் ஆட்டம் அடங்கிட, இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வர, தமிழக மீனவர்கள் துயர் துடைக்கப்பட பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள்.

  13. Read
    https://www.jeyamohan.in/?p=65626
    மனுஷ்யபுத்திரன் பதிவு பார்க்கும் போது honest man சொல்லுவது மிக சரி என படுகின்றது

    ஜடாயு சுவாராஜாய்வில் உள்ள கட்டுரை இங்கு என் இல்லை? அட ஜெயமோஹன் மாதிரி லிங்க் ஆவது கொடுக்க வேண்டாமா. ஞாநி போன்றவர்கள் idlyvadai பின்னூட்டத்தில் கூட வயிறு எரிச்சலை காண்பிக்கும் போது வெண்முரசு க்கு இங்கு ஒரு கட்டுரை கூட இல்லை. இதுவே ஹிந்து எதிர்ப்பாளகளுக்கு ஒரு வெறி வந்து விடுகின்றது. இத தளத்தில் வெள்ளையானையை போட்டு தாக்கியவர்கள் நாம் என்பதியும் நீனைவில் கொள்ல வேண்டும்.

  14. சரத் பவார் இன்று தனது கட்சியினருக்கு விரைவில் மாநிலத் தேர்தலுக்கு தயாராகும்படி கூறியிருக்கிறார் . இந்தக் கட்சியின் ஆதரவினை நம்பி பிஜேபி ஆட்சி அமைத்திருக்கிறது . என் சி பியும் ஆதரவை வாபஸ் பெற்று சிவா சேனாவும் ஆதரவு தராவிட்டால் பிஜேபி யின் பாடு திண்டாட்டந்தான் .

  15. It is a big blunder on the part of the BJP to have taken the indirect support of NCP. Also, the way in which they proved their majority (by voice vote) left a bitter taste in the mouth. They have shown that they are no better than the other parties.

    They could have bargained with the shiv sena & accommodated them in the cabinet. Shiv sena is a more reliable ally than NCP.

  16. Raja,

    Your post is well meant. But it is very difficult for the BJP to come to power in tamilnadu. That is bcos there are no good leaders in the BJP TN unit. Ela ganesan, Pon radha, tamizhisai et.c, may be good natured persons but are they good leaders? Do they have the capacity or the charisma?
    Maybe but that is proved so far.

    They must be in constant touch with the people & instruct their cadres to work at the grassroot level. Their leaders must be in forefront of all agitations, rallies, demonstrations for issues which are anti people.

    Just calling a press conference & reading statements is not enough.

    The leaders must be constantly touring the state & get a first hand account of the people’s problems.

    Only such interactions will incur the acceptance from the public & translate into votes.

  17. //////விஜயபாரத’த்தில் எழுதலாமே////// ஆலயம் எஸ் . ராஜா அவர்களே ! விஜயபாரதம் (இதற்கு முன்னால் ‘தியாக பூமி’ என்ற பெயரில் வந்த பத்ரிக்கை) என்ற வார இதழுக்கு ”கேள்வி பதில்” பகுதிக்கு ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு பதிலும் வந்திருந்தது. மேலும் அதற்கு ஒரு(* ) என்று ஒரு குறியீடு போட்டு இந்த கேள்வி கேட்டவருக்கு ஒரு புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்று எழுதபட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இன்னும் அந்த புத்தகம் வருகிறது. எல்லாமே ஏமாற்று வேலை.

    பாராளுமன்ற தேர்தலின்போது ”ஒரே நாடு” என்ற பததிரிக்கைக்கு (அதன் எடிட்டர் இல. கணேசன்) “News and views ” என்ற தலைப்பில் எழுதி அனுப்பி பத்திரிக்கையில் வெளியிடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர்கள் ”நன்றாக இருக்கிறது. தொடர்ந்து அனுப்புங்கள்” என்று பதில் அனுப்பினார்கள். நானும் தொடர்ந்து அனுப்பினேன். ஆனால் அவர்கள் பத்திரிக்கையில் அவை வரவே இல்லை. ரொம்ப மோசமானவர்கள். அதன் பிறகு அவர்களுக்கு எதையும் எழுதி அனுப்புவதில்லை

    //////மதச் சின்னங்களை அணியத் தவறக் கூடாது.///// ஆண்கள் தங்கள் நெற்றிகளில் திருநீறோ அல்லது குங்குமமோ அணியமளிருப்பது கூட பெரிய விஷயமல்ல. இப்போதெல்லாம் இளம்பெண்கள் (குறிப்பாக வேலைக்கு போவோர்) தங்கள் நெற்றியில் போட்டு வைப்பதில்லை. அப்படியே (கட்டாயத்தின் பேரில்) வைத்தாலும் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மிக மிக சிறிய அளவில் கருப்பு போட்டு வைக்கிறார்கள். யார் இவர்களை திருத்துவது?

    ////சாதி வேறுபாடுகளைக் கடந்து, ஒரே தலைமைக்குக் கட்டுப்பட்டு, இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்கு வங்கி உருவாக்க வேண்டும்.///
    ஒரே தலைமை என்றால் யார் அந்த ஒரே தலைமை? சங்கராச்சரியாரா? சாதியை நிலை நிறுத்துகிறவர்களே அவர்கள்தானே! சாதி சண்டை வரும்போது அவர் தன வாழ்நாளில் என்றாவது ஒரே ஒருநாள் அவர்களை அணுகி சமாதனம் பேசியதுண்டா? இந்துக்கள் ஒன்றுபடாமைக்கு சாதிகள்தானே குறுக்கே நிற்கிறது! சாதிகளை அவ்வளவு சுலபத்தில் ஒழிக்க முடியாது. ஆனால் சாதிகளுக்குள் சண்டை வராமல் சுமூகமாக வாழ ஏதாவது அந்த மடத்து நபர்கள் செய்யலாமே ஆனால் அவ்வாறு செய்வதில்லை என்பதுதான் வருத்தமான விஷ்யம். வெறும் பூஜை புனஷ்காரம் செய்தாலே போதும். மற்றவை பற்றி கவலை இல்லை என்று அவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் இந்து மதம் அழிவு பாதை நோக்கி செல்கிறது. நான் சங்கராச்சாரியார் பற்றி சொன்னால் இங்கே சிலருக்கு கோபம் பொத்துகொண்டு வரும். ஆனால் உண்மை கசக்கத்தான் செய்யும்!. என்ன செய்ய?

    //////எனவே கோவில் உண்டியல்களில் காணிக்கை செலுத்தாதீர்கள்///// இதை நான் அப்படியே ஆதரிக்கிறேன். கோவில் கொடியவர்களின் கூடாரமாக ஆவதற்கு உண்டி தான் முழுமுதற் காரணம். மேலும் உண்டியில் பக்தர்களால் நல்ல எண்ணத்தில் போடப்படும் பணமெல்லாம் திருடர்களால் களவாடபடுகிறது.

    ////பா.ஜ.க.வைப் பற்றி தவறான பிரச்சாரம் உள்ளது//// இந்த பிரசாரத்தை செய்தவர்கள் (தமிழ் நாட்டை பொருத்தவரை) திமுக மற்றும் திகவினர் அந்த பொய் பிரச்சாரத்தை களைய தமிழக பிஜேபி என்ன நடவடிக்கை எடுத்தது? துண்டு பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்ததா? இல்லையே! அப்படியானால் மக்கள் அந்த தவறான பிரச்சாரத்தைதானே நம்புவார்கள்! அதனால்தானே தமிழ்நாட்டில் பிஜேபி வளரவில்லை? பிஜேபி க்கு ஒரு தமிழ் தினசரியும் ஒரு டிவி சானலும் இருந்தால் அவர்களின் பொய் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கலாமே! அதை செய்ய பிஜேபி முன்வராதது ஏன்? கட்சியிடம் பணமில்லையா? (சென்ற தேர்தலின்போது “””விஜயகாந்த் பிஜேபி கூட்டணியில் சேர அக்கட்சிக்கு 500 கோடி கொடுத்ததார்கள்””” என்று மக்கள் பரவலாக பேசி கொண்டனர். அது உண்மையோ பொய்யோ நானறியேன்) அப்படி பணம் இல்லை என்றால் கட்சி தொண்டர்களிடம் வசூலியுங்கள். நான் என பங்கிற்கு 1000 ரூபாய் தருகிறேன். (என்னால் முடிந்தது அவ்வளவுதான். நான் பணவசதி படைத்தவனல்ல)

    /////இலங்கைப் பிரச்சனை முடிவுக்கு வர, தமிழக மீனவர்கள் துயர் துடைக்கப்பட பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள்.//// தமிழ் நாட்டில் பிஜேபி வளரவேண்டுமா? (1) சுப்ரமணியசாமியை இலங்கை தமிழர் பிரச்னை குறித்து பேசாமலிருக்க வேண்டும். அவர் தமிழ்நாட்டு பக்கம் தலை வைத்து படுக்காமல் சோனியா லல்லு போன்ற ஊழல்வாதிகள் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு அவரை டெல்லியிலே இருக்க செய்யவேண்டும். (2) மீனவர் துறை அமைச்சர் ஒருவரை அமர்த்தவேண்டும். (3) கட்ச தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (அகண்ட பாரதம் காண்போம் என்று பேசிக்கொண்டு கட்ச தீவு அது ஒரு முடிந்த கதை என்று காங்கிரஸ் கட்சி மாதிரியே பேசினால் எப்படி?) இவைகளை பிஜேபி அரசு செய்தால் தமிழ்நாட்டில் மளமள வென்று கட்சி வளரும். அதை செய்யுமா? (செய்யாது என்பது என திடமான நம்பிக்கை)

    திரு நாகராஜன் மற்றும் சஞ்சய் கூறுவதுபோல பிஜேபி Naturally Corrupt Party யை நம்பாமல் சிவ சேனாவை நம்புவது கட்சியின் future க்கு நல்லது. மேலும் திரு சஞ்சய் கூறுவது போல பிஜேபி காரர்கள் தமிழ்நாடு முழுக்க சூறாவளி சுற்றுபயணம் செய்து மக்களை நேரில் சந்திக்க வேண்டும். பொது கூட்டங்களில் பேச வேண்டும். அதை செய்யாமல் டிவி களில் மட்டும் தலை காட்ட விரூபும்புகிரார்கள். கட்சியின் அடிமட்ட தொண்டர்களை மதிக்க வேண்டும் அவர்களின் கருத்துக்களை கேட்டு அவற்றிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு “”நூதன முறையில்”” (அதாவது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்) போராட்டங்கள் நடத்த வேண்டும். பெட்டி பாம்பு போல பிஜேபி அலுவலகத்திலே அடங்கி ஒடுங்கி இருக்க கூடாது.

    நாம் இங்கே காலையில் நமது பொன்னான நேரத்தை எல்லாம் செலவு செய்து type செய்து கருத்துக்களை தெரிவிக்கிறோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காக அல்லவா உள்ளது. தமிழக பிஜேபி காரர்கள் காந்தியின் கொள்கைகளை விடாபிடியாக (அல்லது குரங்கு பிடியாக) பின்பற்றுகிறார்கள். அதாவது (கட்சி தமிழ்நாட்டில் வளர கூறும்) நல்ல கருத்துக்களை தன கண் கொண்டு (1) பார்க்க மாட்டேன். தன காது கொண்டு (2) கேட்கமாட்டேன். தன வாய் கொண்டு (3) பேசமாட்டேன். என்று காந்தியின் 3 குரங்கு பொம்மைகளை போல பிஜேபி அலுவலகத்திலேயே பொம்மைகளை போல உட்கார்ந்து கொண்டு ”2016 ல் பிஜேபி ஆட்சிதான் தமிழ்நாட்டில்”’ என்றும் ”செங்கோட்டை பிடித்த பிஜேபி ஜார்ஜ் கோட்டையையும் 2016 ல் பிடிக்கும்”’ என்று கற்பனை கோட்டை கட்டிக்கொண்டு இருக்கின்றனர். உருப்படியான காரியங்களை செய்யாவிட்டால் அவர்களின் மனகோட்டை மண் கோட்டை சரிவது போல சரிந்துவிடும். ஜாக்கிரதை.

  18. மேலும் இன்னொரு தகவல். எனது நண்பர் பிஜேபி விவசாய பிரிவு (ஒன்றிய அளவில்) தலைவராக உள்ளார். அவர் (வரப்போகும்) ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் நிற்க எண்ணம் கொண்டுள்ளார். அதற்கு அவர் தீவிர உறுப்பினராக (active member ) இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கான பல தகுதிகளில் (criteria ) ஒன்று ”ஒரே நாடு” இதழுக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர் உடனே பிஜேபி (மாவட்ட) கட்சி நிர்வாகி ஒருவரிடம் ஒரு வருட சந்தா தொகையினை (ரொக்கமாக) கொடுத்தார். பணம் கொடுத்து 6 மாதம் ஆகிறது. ஆனால் இன்னும் அந்த இதழ் அவருக்கு வரவில்லை. பணத்தை அவர் (நிர்வாகி) அபேஸ் பண்ணி விட்டாரா?. அல்லது ”ஒரே நாடு” இதழ்காரர்களின் சோம்பேரித்தனமா? அதேபோல கட்சி உறுப்பினராக 20 பேரிடமிருந்து 5 ரூபாய் வீதம் வசூலித்து 100 ரூபாயை நிர்வாகியிடம் (தலைவர்) கொடுக்கப்பட்டது. ஒன்பது மாதங்கள் ஆகின்றன. இன்னும் உறுப்பினர் அட்டை கிடைக்க வில்லை. அதிமுகவில் சேர்ந்தால் ஜெயலலிதா அந்த நபர்களுக்கு சேரும்போதே உறுப்பினர் அட்டை கொடுப்பதை பத்திரிக்கையில் (படத்துடன்) பார்க்கிறோம். ஆனால் பிஜேபி யில் 9 மாதங்கள் ஆனாலும் அட்டை வந்தபாடில்லை. இதற்கு யார் காரணம்? நிர்வாகியா? அல்லது பிஜேபி தலைமையகமா? தலைமையகத்திற்கு பணம் (ரூ.100) போய் சேரவில்லையா?

  19. //இளம்பெண்கள் (குறிப்பாக வேலைக்கு போவோர்) தங்கள் நெற்றியில் போட்டு வைப்பதில்லை. அப்படியே (கட்டாயத்தின் பேரில்) வைத்தாலும் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மிக மிக சிறிய அளவில் கருப்பு போட்டு வைக்கிறார்கள். யார் இவர்களை திருத்துவது?//

    அதுபட்டுமல்ல, ஹானஸ்ட் மேன் அவர்களே. இப்பொழுது தாலியைக் கழட்டிவைப்பதும் ஒரு ஃபாஷனாகப் போய்விட்டது. கணவன்மாரே அதைக் கண்டுகொள்வதில்லை.

    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த “திருடாதே” என்ற படத்தில் ஒரு பாட்டு: “திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”

    நம் இந்து சமயக் கலாசாரத் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. அந்தத் திருட்டை நமது பெண்டிரே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களேதான் திருந்தி நமது கலாசாரம் திருட்டுப் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கலாசாரக் காவலர்களான பெண்களே மாறினால் — காவலர்களே திருடர்களாவதற்கு ஒப்பாகும்.

  20. திரு.HONEST MAN……………..நன்றி…………..உங்கள் கருத்துக்களுக்கு…………..இதுபோன்ற உருப்படியான கருத்துக்களைத்தான் எதிர்பார்த்தேன்……பா.ஜ.க-பற்றி………….மீண்டும் எனது நன்றிகள்

  21. HONEST MAN…………………//////விஜயபாரத’த்தில் எழுதலாமே////// ஆலயம் எஸ் . ராஜா அவர்களே ! விஜயபாரதம் (இதற்கு முன்னால் ‘தியாக பூமி’ என்ற பெயரில் வந்த பத்ரிக்கை) என்ற வார இதழுக்கு ”கேள்வி பதில்” பகுதிக்கு ஒரு கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு பதிலும் வந்திருந்தது. மேலும் அதற்கு ஒரு(* ) என்று ஒரு குறியீடு போட்டு இந்த கேள்வி கேட்டவருக்கு ஒரு புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்று எழுதபட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு மேலாகிறது. இன்னும் அந்த புத்தகம் வருகிறது. எல்லாமே ஏமாற்று வேலை……………………////// எப்படி இந்தத் தவறு நடந்தது என்று தெரியவில்லை…………நான் பலமுறை பரிசுகள் வாங்கியிருக்கிறேன்………….இதே தவறு மற்ற பத்திரிக்கைகளிலும் நடக்கிறது………….’புதியதலைமுறை’யில் 2 தடவை அறிவிக்கப்பட்ட பரிசுகள் எனக்குக் கிடைக்கவில்லை ஒரு வருடப் போராட்டத்துக்குப் பின் 2ஐயும் வாங்கினேன்……….தாங்கள் எப்போதாவது நினைவுபடுத்தினீர்களா எனத் தெரியவில்லை

  22. HONEST MAN……..//////மதச் சின்னங்களை அணியத் தவறக் கூடாது.///// ஆண்கள் தங்கள் நெற்றிகளில் திருநீறோ அல்லது குங்குமமோ அணியமளிருப்பது கூட பெரிய விஷயமல்ல. இப்போதெல்லாம் இளம்பெண்கள் (குறிப்பாக வேலைக்கு போவோர்) தங்கள் நெற்றியில் போட்டு வைப்பதில்லை. அப்படியே (கட்டாயத்தின் பேரில்) வைத்தாலும் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மிக மிக சிறிய அளவில் கருப்பு போட்டு வைக்கிறார்கள். யார் இவர்களை திருத்துவது?…………../// தற்போது ஹிந்துக்கள் மத சின்னங்களை பணிபுரியும் இடத்திற்கு அணிந்து வரக் கூடாது என கட்டாயப்படுத்தப்படுகின்றனர் எனக்குக் கிடைத்த தகவல் படி முத்தூட்-ல் பனி புரிபவர்களுக்கு இந்தக் கட்டுபாடு உள்ளது………….மேலும் அனைத்து ஹிந்துக்களும் மத சின்னங்களை அணியத் தவறக் கூடாது என்பதே என் கருத்து

  23. HONEST MAN………////சாதி வேறுபாடுகளைக் கடந்து, ஒரே தலைமைக்குக் கட்டுப்பட்டு, இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்கு வங்கி உருவாக்க வேண்டும்.///
    ஒரே தலைமை என்றால் யார் அந்த ஒரே தலைமை? சங்கராச்சரியாரா?…………./// தனிநபர் எவரையும் நான் குறிப்பிடவில்லையே ஒரே தலைமை என்பது ஏன் அமைப்பாக இருக்கக் கூடாது

  24. Mr.sanjay………….//// Your thoughts are also good. We feel, first TN BJP leaders to be learn about TN politics position and meet public without alliance. I think they are not having self confidence. They are waiting for one Prophet like Amithsha and Modi, they belive he will come and hike TN BJP.

  25. திரு.”HONEST MAN” ………..எனது பிந்தைய பின்னூட்டங்களை விமர்சித்திருக்கும் நீங்கள் அதற்கு முந்தைய பின்னூட்டத்திலும் கவனம் செலுத்தியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்

  26. //புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த “திருடாதே” என்ற படத்தில் ஒரு பாட்டு: “திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.”

    நம் இந்து சமயக் கலாசாரத் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது.//

    பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம். அவர் பெயர்தான் குறிப்பிடப்படவேண்டும்.

    திருட்டு என்றால் இன்னொருவர் பொருளை அவருக்குத் தெரியாமல் அபகரிப்பது. அபகரித்த பொருளைத் தான் பயன்படுத்திக்கொள்வது. இந்துக்கலாசாரமான பொட்டணிவதையும் தாலி போடுவதையும் பிறர் அபகரித்துக்கொண்டார்களா? அப்படியே செய்தாலும் அதுதானே இந்துத்வம்? நல்லதுதானே?

    இந்துப்பெண்கள் பொட்டணிவதை விரும்பாதலும் தாலியைக்கழற்றிவைப்பதும் எப்படி கலாச்சாரத் திருட்டாகும். அப்படிப்பட்ட பெண்கள் சென்னை போன்ற பட்டணத்துக்காரகள். மற்றபடி இல்லை.

  27. ////தாங்கள் எப்போதாவது நினைவுபடுத்தினீர்களா எனத் தெரியவில்லை////

    Thiru Raja Sir, Why should I remind them? Won’t they keep their words? If it is not possible for them, they should not make a commitment. Am I right?

    ////// முத்தூட்-ல் பனி புரிபவர்களுக்கு இந்தக் கட்டுபாடு உள்ளது///// முத்தூட்டில் என்ன ஒரு 300 மகளிர் பணி புரிவார்களா? போகட்டும் விட்டு தொலையுங்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் நடத்தும் கான்வெண்டுகளில் படிக்கும் இந்து பெண் குழந்தைகள் ”பொட்டு வைக்க கூடாது. பூ சூடகூடாது” என்று கண்டிஷன் போடுகிறார்கள். அதை நமது இந்துக்கள் லஜ்ஜை இல்லாமல் ஏற்றும்கொள்கிரார்கள். சிறு வயதிலேயே இப்படி பழக்க வழக்கங்களை உண்டாக்கினால் அந்த பெண் குழந்தைகள் பெரிய மனுஷியாக ஆனவுடன் பொட்டு, பூ மீது ஆசை எப்படி வரும்? நம் மதத்தை சேர்ந்த ஜாம்பவான்களுக்கு அதைபற்றியெல்லாம் கவலை இல்லை. உலக அமைதிக்கு யாகம் என்ற பெயரில் பொருட்களை அதில் போட்டு அழிதொழிக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு திருவிழா அல்லது பண்டிகை வருகிறது. பணம் அனாவசியமாக வீணாகிறது. (ஏன்தான் இந்துவாக பிறந்தோமோ? இத்தனை பண்டிகைகளை கொண்டாட வேண்டியுள்ளதே என்று பல இந்துக்கள் வருத்தப்பட்டு சொன்னதை நான் என் காதாற கேட்டிருக்கின்றேன்) அதனால்தான் இந்துக்கள் வறுமையில் வாடுகின்றனர். (பற்றாக்குறைக்கு குடி பழக்கம் வேறு) இப்படி வீணடிக்கும் பணம் சேர்ந்தால் வசதியாக வாழமுடியும் வசதி இருந்தால் இந்துக்கள் அனைவரும் சேர்ந்து இந்து குழந்தைகளுக்கு ‘விவேகனந்தர் பாடசாலை’ போன்ற பெயர்களில் கான்வென்ட் ஆரம்பித்து இந்துமத பழக்க வழக்கங்களை நிலை நிறுத்தலாமே! அவன் (கிறிஸ்தவன்) கல்விக்கூடம் திறக்கிறான். மருத்துவமனை (CMC போன்று) திறக்கிறான். பணம் வசூலித்தாலும் அதை சேவை என்று கூறிகொண்டு மத போதனை வேறு செய்கிறான். எங்கள் ஊரில் எனக்கு தெரிந்து ஒரு கௌண்டர், ஒரு அகமுடியர் இனத்தை சேர்ந்த இருவர் அவர்கள் (கிறிஸ்தவர்கள்) நடத்தும் மருத்துவமனையில் சேர்ந்து நோய் குணமடைந்து இப்போது கிறிஸ்தவர்களாக மாறி சர்ச்க்கு போகிறார்கள். வீட்டில் ”ஆண்டவரே ஆண்டவரே ” என்று கத்தி கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் இப்படி எல்லாம் மருத்துவமனைகளை திறக்கிரார்களா? மாட்டார்கள். ஆனால் ‘யாகம்’ நடத்த சொன்னால் உடனே பணத்தை விரயம் பண்ணி விமரிசையாக செய்வார்கள். அன்றாட பத்திரிக்கைகளை திறந்து பார்த்தால் இன்னார் முஸ்லிமாக மாறினார் என்று தினமும் நிறைய வரி விளம்பரங்கள் வருகின்றன. அதுபற்றியும் நம் ஆட்களுக்கு கவலை இல்லை. என்ன ஜென்மங்களோ?

    இப்போது பிஜேபி விஷயத்திற்கு வருவோம். ”Lotus நியூஸ்” என்று ஒரு டிவி சானல் உள்ளது. அதனால் பிஜேபி க்கு சல்லி காசு பயன் கூட கிடையாது. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் கடிதம் மூலமும் இப்படி இப்படி programme களை மாற்றியமைத்தீர்களேயானால் அது பிஜேபி க்கு அனுகூலமாக இருக்கும். மேலும் உங்களுக்கு வர்த்தக விளம்பரங்களும் பெருகும் என்று பட்டியல் போட்டு சொன்னால் ” டே, கழுதை, உன் கடிதம் வந்தது. நீ சொல்லும் ideas எல்லாம் எங்களுக்கு சரிபடாது” என்று ஒரு எதிர் வார்த்தை சொல்லியிருந்தால் கூட சந்தோஷபட்டிருப்பேன். ஆனால் அமைதியாக இருக்கிறார்கள். அதேபோல பிஜேபி கட்சி தலைமைக்கு கூட ஏதாகிலும் கருத்து மின்னஞ்சல், கடிதம் மூலம் சொன்னால் பதிலே வருவதில்லை. சரி தொலைபேசி மூலம் சொல்லலாம் என்றால் யாரோ ஒரு தமிழ் தெரியாத பெண் போன் எடுத்து பேசுகிறார். நான் என்ன செய்ய? ஒரு மலை மீது நின்று கத்தினால் கூட echo கிடைக்கும். ஒரு குளத்தில் கல்லை எறிந்தால் கூட ripplets கிடைக்கும் . ஆனால் இவர்களுக்கு(பிஜேபி) ஒரு கடிதம் அனுப்பினால் எதுவுமே கிடைக்காது. ரஷியாவைதான் ”’இரும்பு திரை நாடு”’ என்று கூறுவார்கள். பிஜேபி காரர்கள் நடப்பதை பார்த்தால் பிஜேபி ஒரு ”’இரும்பு திரை கட்சி”’ என்று சொன்னால் என்ன தப்பு? நம்ம விஷயங்களும் அவர்களை சென்றடைவதில்லை. அதே போல அவர்களிடமிருந்து எந்தவொரு விஷயமும் நமக்கு வருவதில்லை. அந்த கட்சியின் பொறுப்பிலிருக்கும் ஆட்களுக்கு ‘நாம் மட்டுமே அறிவாளிகள். மற்றவனெல்லாம் முட்டாள்கள். முட்டாள்கள் சொல்வதை நாம் கேட்பதா” என்ற எண்ணம் இருக்கும் போலிருக்கிறது. அவர்கள் நிறைய மாறவேண்டும். நீங்கள் சொன்னதுபோல ஆவர்கள் அமித்ஸா மற்றும் மோடிக்கு காத்திருந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த கதிதான் இவர்களுக்கும் நேரும். டெல்லி பிஜேபி காரர்கள் தமிழ் நாட்டை தொடர்ந்து உதாசீனபடுத்தினால் பின்னாளில் ”தமிழ் மாநில பிஜேபி” என்று ஒன்று உருவானாலும் ஆச்சர்யமில்லை.

  28. தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

    October 29, 2014 To Dec 23rd 2015 .. AND…….

  29. தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

    October 29, 2014 To Dec 23rd 2014 .. AND…….

  30. திரு பாண்டியன் சார் பிஜேபி வெற்றி நடை போடுவது குறித்து மகிழ்ச்சியே! அது தமிழ் நாட்டில்லும் நடைபோட வேண்டும் என்று அவர்கள் உண்மையிலேயே நினைத்தால் உடனடியாக கீழ்கண்டவற்றை செய்தால் அது கண்டிப்பாக நடக்கும்.

    1. மீனவர் துறை அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும். (பொன்.ராவையே கூட நியமிக்கலாம். ஏனென்றால் அவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர். அங்குதானே மீனவர்கள் அதிகம்) (இது ஒரு கஷ்டமான பணியா?)
    2. கட்ச தீவை மீட்க வேண்டும். அல்லது அதை மீட்க பூர்வாங்க நடவடிக்கையாகிலும் எடுக்க முயற்சி எடுக்க வேண்டும் (மனமிருந்தால் மார்கமுண்டு) 3. சுப்ரமணிய சுவாமி (1) தமிழ்நாடு மற்றும் (2) இலங்கை பற்றி வாய் திறக்காமல் இருக்க வேண்டும். (திரு மோடி நினைத்தால் இதை கண்டிப்பாக செய்யமுடியும்)
    4. சேது சமுத்திர திட்டத்தை புதிய தடத்தில் (ராமர் பாலம் பாதிக்காமல்) விரைந்து அமைக்க வேண்டும். (திரு கடகரி இதை ஏற்கனவே சொல்லிவிட்டார். அதை மு.க வும் வரவேற்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிட தக்கது. ஆகவே விரைந்து செய்க)
    5. தமிழ் தினசரி ஒன்றும் வார இதழ் ஒன்றும் பிஜேபி சார்பில் ஒரு டிவி சானெல் ஒன்றும் உடனடியாக துவக்க வேண்டும்.

    மேற்படி 5 ம் நடந்தால் பிஜேபி ஆட்சி தமிழ்நாட்டில் 2016 ல் அமைவது 100 % என்று நான் யார் தலைமீதும் சத்தியம் அடித்து சொல்கிறேன். இதை யாரும் மறுத்து எதிராக கருத்து கூற முடியாது. நான் சொல்வது சரியா திரு பாண்டியன் சார்?

  31. ஹாநேஸ்ட் மேன் அவர்களின் அணுகுமுறை பாராட்டத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *